மிகச் சாதாரணமாக ஆரம்பித்த படம் அடுத்தடுத்த காட்சிகளில் மிரட்ட ஆரம்பித்தது. அவ்வளவு சந்தடி மிக்க பஜாரில் சத்தமில்லாமல் நடக்கும் கொலை பதற வைக்கிறது. எதோ விளையாட்டுப் பையன்கள் போலிருந்தவர்கள்தான் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாய் உருவெடுத்து நின்றார்கள். அந்த முதல் அரை மணி நேரம் இருந்த பிடிமானம் எல்லாம் போகப் போக இழந்து, தர்க்கங்கள் வடிந்து போய், கடைசியில் வழக்கமான சினிமாவாகி முடிகிறது.
மொத்த ஊரையும் ஆட்டிப் படைக்கும் தாதாக்களின் குடும்பம், அவர்கள் எழுப்பி வைத்திருக்கும் ராஜ்ஜியம், அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க நாதியற்ற நிலைமை எல்லாவற்றிலும் பலத்த அடி விழுகிறது. எதற்கும் துணிந்த இரண்டு பொடிப் பையன்கள் அவர்கள் அனைவரையும் நடுங்க வைக்கிறார்கள். ஊர் அதை உள்ளுக்குள் ரசிக்கிறது. இதை மட்டிலும் கதையாக எடுத்துக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருந்தால் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும்.
லும்பன்களாய் இருந்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் வசதிகளாலும் அவர்கள் ரசனை மிக்கவர்களாக இருக்கிறார்கள். தெருவில் பசியோடு அலையும் லும்பனிடம் என்ன ரசனை இருக்கும்? இந்த முரண்பாட்டை பெண்ணோடு உறவு கொள்வதில்தான் காட்சிப்படுத்த வேண்டுமா?
பகைமையையும், பழிவாங்கும் வேகத்தையும் வேறு புள்ளியிலிருந்து தொடர்ந்திருந்தால் பார்வையாளர்கள் இந்த சினிமாவை சரியான கோணத்தில் பார்த்திருக்கக் கூடும்.
அந்த இரண்டு இளைஞர்களின் கொட்டங்களை ஊர் உள்ளுக்குள் ரசிக்கிறது. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ் பக்கம் இல்லை. ஆனால் பார்வையாளர்களால் அந்த இளைஞர்களை ரசிக்க முடியவில்லை. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ் பக்கம் இருக்கிறார்கள். அந்த இரண்டு பேரும் அவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்படுவதை நியாயம் என உணர்கிறார்கள். இந்த சினிமா தோல்வி அடைந்த இடம் அதுதான்.
Pani மலையாளப்படம். சோனி லைவில் இருக்கிறது.
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்