”காலச் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் ஆடுகிறார்கள்” என்று நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தோழர் ரவீந்தரன் அந்த நேரத்தில் விமர்சித்து பதிவு செய்திருந்தார். அப்போதைய புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அவர். அந்த வார்த்தைகளின் பின்னணியில் ஒரு வரலாறே இருந்தது.
பாண்டியன் கிராம வங்கியில் 1988ம் ஆண்டு நடத்திய 44 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை ஒரு இதிகாசம் போல சென்ற தலைமுறைத் தோழர்கள் கிளைகளில் இன்றைய தலைமுறைக்கு கடத்தி இருந்தனர்.
2009ல் தோழர்கள் அண்டோவையும், காமராஜையும் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த போது பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் தலைமையலுவலகத்தில் திரண்டு சேர்மனை முற்றுகையிட்டனர். ஆறு மணி நேரத்துக்கு சேர்மன் எங்கும் செல்ல முடியாத, சேர்மனை யாரும் சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறை வந்து சங்கத் தலைவர்களிடம் சமாதானம் பேசிய பிறகே சேர்மன் வீட்டுக்குச் செல்ல முடிந்தது.
2010ம் ஆண்டில் நிர்வாகத்தின் புகாரின் பேரில் சங்கத் தலைவர்கள் சோலைமாணிக்கத்தையும், செல்வகுமார் திலகராஜையும் காவல்துறை கைது செய்தபோது அதை எதிர்த்து அடுத்தநாளே மின்னல் வேகத்தில் (Lightning Strike) வேலைநிறுத்தம் நடந்தது.
அந்தப் போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலும் படர ஆரம்பித்திருந்தது. அதே தலைமையலுவலக வளாகத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு, நடத்திய தர்ணாப் போராட்டம் அவ்வளவு எழுச்சியோடும், பெரும் திரளோடு நடந்திருந்தது.
எங்கே தலைமையலுவலகம் இருக்கிறதோ அங்கே சங்கத்தின் தலைவர்கள் இருந்து சங்கப் பணி ஆற்றுவதுதான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்து வந்தது. பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் இணைந்து தமிழ்நாடு கிராம வங்கியாக உருவெடுத்தவுடனே, நமது இரண்டு சங்கங்களிலிருந்தும் பொதுச்செயலாளர்களுக்கு சேலத்துக்கு டிரான்ஸ்பர்கள் கேட்கப்பட்டன. டிரான்ஸ்பர்கள் போடாமல் நிர்வாகம் இழுத்தடித்தது. முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து 2019 ஆகஸ்ட் 8ம் தேதி தர்ணாப் போராட்டத்தை அறிவித்தது. தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலிருந்து தர்ணாவுக்கு தோழர்கள் தயாராக ஆரம்பித்தனர். தர்ணாப் போராட்டத்திற்கு கலந்து கொள்ள லீவு மறுக்கப்பட்டது. மண்டல மேலாளர்கள் மூலம் ஊழியர்கள் பயமுறுத்தப்பட்டனர். தர்ணாவுக்கு முந்தைய நாள் அங்கங்கு கிளைகளிலேயே உடல்நலம் சரியில்லை என சில தோழர்கள் சுருண்டு கொண்டனர். அதுவே ஒரு போராட்ட வடிவமாக மாறியது. பின்னர் அந்தத் தோழர்கள் மெடிக்கல் லீவில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அடுத்தநாள் அறுநூறுக்கும் மேலான தோழர்களின் உரத்த கோஷங்கள் தலைமையலுவலகத்தை அதிரச் செய்தன. நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றியது ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்சயலாளராக நானும் ஆபிஸர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராக அறிவுடைநம்பியும் அப்படித்தான் சேலத்திற்கு சென்றிருந்தோம்.
அந்தப் போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலிருந்து புதுவை கிராம வங்கிக்கும் பரவ ஆரம்பித்தது. சேலத்தில் தர்ணா நடந்த இரண்டு வாரங்களுக்குள் 2019 ஆகஸ்ட் 23ம் தேதி புதுவையில் கிராம வங்கித் தலைமையலுவலகம் முன்பு ஆவேசத்துடன் அடுத்த போராட்டம் நடைபெற்றது. எந்த வங்கியிலும் நடைபெறாத கொடுமை அங்கு நடந்து கொண்டிருந்தது. கிளைகளில் உள்ள பணம் , நகைகள் வைத்திருக்கும் பெட்டகத்தின் சாவிகளில் ஒன்றை ஆபிஸரும் இன்னொன்றை கேஷியரும் வைத்திருப்பதுதான் நடைமுறை. தேவையான ஆட்களை பணிக்கு எடுக்காததால், ஐந்து கிளைகளில் ஆபிஸர்களே கிளர்க்குகளின் வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. ஒரே ஆபிஸரே பெட்டகத்தின் இரண்டு சாவிகளையும் கையாள வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல, இல்லாத கேஷியருக்கு பொய்யாக ஒரு பாஸ்வேர்டு உருவாக்கி அதை ஆபிஸர்களே கம்ப்யூட்டரில் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் செய்ய நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுத்தது. மிக மோசமான, ஆபத்தான பணிச்சூழல் அங்கு இருந்தது. அதனை எதிர்த்து புதுவை பாரதியார் கிராம வங்கி சங்கத் தோழர்களுடன் தமிழ்நாடு கிராம வங்கி சங்கத் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடியாக கிளர்க்குகளுக்குரிய சாவியையும் பாஸ்வேர்டையும் கிளர்க்குகளே வைத்திருக்கும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும், இல்லையென்றால் கிளர்க்குகளின் சாவிகளைக் கொண்டு வந்து தலைமையலுலகத்தில் சேர்மனிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் என அந்த தர்ணாவில் அறைகூவல் விடுக்கப்பட்டது. இரண்டே நாட்களில் சங்கத்தின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றியது.
தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி இரண்டிற்கும் ஸ்பான்ஸர் வங்கியாக இருந்த இந்தியன் வங்கி நிர்வாகத்திற்கும் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தின் மீது வன்மம் இருந்திருக்க வேண்டும். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் ரவீந்திரன் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.
உண்மைதான். போக்குவரத்து தடைசெய்யப்பட்ட, சமூக இடைவெளி என்பது விதியாக்கப்பட்ட கொரோனா காலத்தில் தோழர்களைத் திரட்டி நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஜனநாயகச் சூழல் இல்லை. வீரம் செறிந்த போராட்டங்களே வரலாறாகவும், போர்க்குணமே இயல்பாகவும் கொண்டிருந்த மகத்தான தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சோதனையான காலச்சூழல்தான் அது.
தேசம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் 2020 மார்ச் 23ம் தேதி இரவு 6 மணிக்கு தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள முன்னணித் தோழர்களுக்கு மட்டும் கீழ்கண்ட எச்சரிக்கையை வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்திருந்தேன்.
“வரும் நாட்கள் நம் வாழ்நாளில் மிகவும் நிதானத்துடனும், உறுதியுடனும் கடக்க வேண்டியவை என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். சாதாரண காலங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்வதைப் போல இப்போது முடியாது, கூடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு குழப்பமான சூழல் இது. முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்களும், ஸ்தம்பிப்புகளும் ஏற்படலாம். அவரவர் நிலைகளில் கொந்தளிப்புதான் நிலவும். அதே மனநிலையோடு நாம் பிரச்சினைகளை அணுக முடியாது.
நாம் சமூகத்தில் பொறுப்பு மிக்கவர்களாக சிந்திக்கவும், செயல்படவும் பக்குவம் பெற்றாக வேண்டும்.
சங்கத்தின் முன்னணித் தோழரான உங்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். சொல்லலாம்தானே?”
பொறுப்பு மிக்க ஒரு சங்கத்திற்கு இருந்த இந்த பிரக்ஞையும், நிதானமும் துளி கூட நிர்வாகத்திடம் இல்லை. தொழிற்சங்க இயக்கத்தை ஒடுக்குவதற்கும், முடக்குவதற்கும் உற்ற நேரம் அதுவென வெறி கொண்டிருந்தது.
3.5.2021 அன்று ஓய்வுகாலச் சலுகைகள் கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு நிர்வாகத்திடம் இருந்து பதில் ஒரு வாரத்திற்கு மேலாகியும் வரவில்லை. சங்கத் தோழர்கள் தொடர்ந்து என்னிடம் தகவல் வந்ததா என கேட்டுக் கொண்டு இருந்தனர்.
2020 நவம்பரில் கொஞ்சம் குறைந்திருந்த கொரோனா தொற்று 2021 மே மாதத்தில் மீண்டும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அம்முவுக்கு மீண்டும் பள்ளி விடுமுறை விட்டிருந்தார்கள். டி.வி செய்திகள் பதற்றத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தன. தெரிந்தவர்களின் உயிரிழப்புகளும், யாருமற்று அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதும் தாங்க முடியாததாய் நினைவுகளில் பாரமாகி கனத்தது. ஒரு கொடுங்காலத்தின் வெறுமையும், வேதனையும் எங்கும் சூழ்ந்திருந்தது.
10.5.2021 தேதியிட்ட நிர்வாகத்தின் கடிதம் 14.5.2021 அன்றுதான் வந்தது. முழுக்க முழுக்க செஷேஷனை (பணி ஓய்வு நிறுத்தம் ) உறுதி செய்து வந்த கடிதம்.
நான் பணி ஓய்வு பெற்ற 30.4.2021 அன்று நாமக்கல் மண்டல் மேலாளர் மூலம் செஷேஷன் குறித்த தகவலைப் பெற்று மின்னம்பள்ளி கிளை மேலாளர் என்னிடம் அதை தெரிவித்து விட்டதாக கடிதத்தின் முதல் பாரா. நாமக்கல் மண்டல மேலாளர் மின்னம்பள்ளி கிளை மேலாரிடம் செஷேஷன் பற்றி கூறியதும் வாய்மொழிதான் போல. மிகப் பெரிய வேடிக்கை இது. செஷேஷன் பற்றி முடிவெடுத்து அறிவிக்க வேண்டியவர் அதற்கென அதிகாரத் தகுதி (competent authority) பெற்றவர்தான். கிளர்க்குகளுக்கு அந்த தகுதி படைத்தவர் பொதுமேலாளர் (General Manager). எதுக்கு குறுக்கே நாமக்கல் மண்டல் மேலாளரை சைக்கிள் ஓட்ட விட்டிருக்கிறார்கள் என்று சிரிப்புத்தான் வந்தது.
வங்கியிலிருந்து முறையான கடிதம் பெற்ற பிறகுதான் நான் பணி ஓய்வு பெற முடியும் என இரண்டாவது இரண்டாவது பாரா. நிர்வாகம் முறையான கடிதம் கொடுக்காததுதானே மொத்தப் பிரச்சினையும்!
தமிழ்நாடு கிராம வங்கி ஸ்டாஃப் சர்வீஸ் ரெகுலேஷன்ஸ் பிரகாரம் – ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டால், அவரது பணி ஓய்வு நாளன்று அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்படும் என மூன்றாவது பாரா. யார் இல்லையென்றது? சார்ஜ் ஷீட்டிற்கு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை, எனவே உங்களது பணி ஓய்வை நிறுத்தி வைத்து ஒழுங்கு நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட இருக்கிறது என முறையான கடிதம் நிர்வாகம் கொடுக்காத போது எப்படி ஓய்வு நிறுத்தம் செல்லும் என்பதுதானே நமது கேள்வி?
எனவே, என் மீது விரைவில் தொடங்க இருக்கும் என்கொயரியில் பங்கு கொள்ள வேண்டும் என கடைசி பாரா. எவ்வளவு தெனாவெட்டு. அதிகாரத் திமிர்!
சங்கத் தோழர்களுக்கும், பெஃபி தலைவர்களுக்கும், அட்வகேட் கீதா அவர்களுக்கும் தகவல் தெரிவித்தேன். கூகுள் மீட்டில் கலந்தாலோசித்தோம்.
நிர்வாகம் எப்படியாவது என்கொயரி நடத்தி, காலத்தை இழுத்தடிக்க துடிப்பதை எல்லோரும் அறிந்திருந்தோம். சட்டத்திற்கு புறம்பாக 5 மணிக்குப் பிறகு செசேஷன் கொடுத்தது தவறு என சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு கேட்பது என முடிவு செய்தோம்.
அதற்கான பேப்பர்கள் தயார் செய்து அட்வகேட் கீதா அனுப்பச் சொன்னார்கள். நான் அந்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.
சரியாக அடுத்த இரண்டாவது நாள், மே 16ம் தேதி மதியம் அசதியும் காய்ச்சலும் என்னை படுத்த ஆரம்பித்து. வைரஸ் என்னையும் கவ்விக் கொண்டு விட்டது என்பதை அன்று இரவு உணர்ந்து கொண்டேன்.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
மிகவும் சுவாரசியமாக விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது..
ReplyDeleteநல்லது தோழர் லூர்து. உங்களுக்கும் அந்த நேரத்தில் கொரோனா வந்தது அல்லவா?
Deleteஉங்கள் எழுத்துகள் அப்படியே பயணம் செய்கிறது தோழா
ReplyDelete//உங்கள் எழுத்துகள் அப்படியே பயணம் செய்கிறது தோழா// ஆஹா, நல்லது தோழர். தாங்கள் யாரென்று அறிய முடியவில்லையே!
Delete