சார்ஜ் ஷீட் 42/2021- 6ம் அத்தியாயம்


கொரோனாத் தொற்று ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலும் வெளியே அலைந்து கொண்டுதான் இருந்தேன். வாரா வாரம் சாத்தூரிலிருந்து சேலத்திற்கு, அங்கிருந்து தினமும் மின்னம்பள்ளி கிளைக்கு, அப்புறம் சேலத்தில் கடைவீதிகளில் என  பயணங்களும் நடமாட்டங்களுமாய்த்தான் இருந்தன. மாதத்திற்கு ஒருமுறையாவது இருபது பேருக்கு மேல் தோழர்கள் சங்க அலுவலகத்தில் கூடி விவாதித்தோம்.  அப்போதெல்லாம் எட்டிப் பார்க்காத வைரஸ், பணி  ஓய்வு பெற்று வீட்டில் இருந்த இரண்டு வாரங்களுக்குள் நுழைந்து விட்டது. சுறுசுறுப்பாய் தன்னை மறந்து வேலைகளில் கவனம் செலுத்தும்போது கிருமிகள் நெருங்குவதில்லை. சும்மா இருக்கும்போதுதான் அவைகளுக்கு தொக்காகி விடுகிறோம்.  

அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் அப்படியொரு அசதி. கணகணவென்றிருந்தது. இட்லியைக் கூட சாப்பிட முடியவில்லை. ஒரு வேகத்தோடு  திமிறி உட்கார்ந்து அட்வகேட் கீதா கேட்டிருந்த ஆவணங்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.  

1.3.2021 தர்ணாவுக்கு நான் அனுப்பிய லீவு லெட்டர், 10.3.2021 அன்று பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பிய கடிதம், 16.3.2021 அன்று நான் விளக்கம் அளித்து அனுப்பிய பதில் கடிதம், 30.3.2021 அன்று ’எனது பதில் திருப்திகரமாக இல்ல என்று நிர்வாகம் அனுப்பிய சார்ஜ் ஷீட், 12.4.2021 அன்று நான் அனுப்பிய சார்ஜ் ஷீட்டிற்கான பதில், 30.4.2021 அன்று மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் மாலை 5 மணிக்கு “ஓய்வு பெறுவதாக’ நான் கொடுத்த  கடிதம், 30.4.2021 அன்று அதே நாள் மாலை 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயில், 3.5.2021 அன்று ஓய்வுகாலச் சலுகைகள் கேட்டு பொது மேலாளருக்கு நான் எழுதிய கடிதம், 15.5.2021 அன்று செஷேஷன் செல்லும் என்றும் விரைவில் என்கொயரி நடக்கும் என்றும் பொது மேலாளரிடம் இருந்து வந்த கடிதம், தமிழ்நாடு கிராம வங்கி ஸ்டாஃப் ரெகுலேஷன்ஸ் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

நிர்வாகத்தின் பொய்களும், பித்தலாட்டமும் அந்த ஆவணங்களில் இருந்து கீழே உதிர்ந்து கொண்டிருந்தன.  

9.3.2021 அன்று நாமக்கல் ரீஜினல் மேனேஜர் சந்திரன் மின்னம்பள்ளி கிளை மேலாளருக்கு  ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ‘1.3.2021 அன்று ஓய்வு பெற்றோர் சங்கம் நடத்திய தர்ணாவில் நான் கலந்து கொண்டதாகவும் அதனால் ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ (No work, No Pay)  என்னும் விதியின் அடிப்படையில் 1.3.2021 அன்று என் லீவு மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். சார்ஜ் ஷீட் அனுப்பப்பட்ட ஆறு தோழர்களுக்கும்  இதுபோல தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாத ஊதியத்தில் பிடிக்கவும் செய்திருந்தார்கள். அப்படிச் செய்தது முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் முதல் கோணல் அதுதான்.  

ஒரு ஊழியருக்கு ஊதிய வெட்டு அல்லது சம்பளப்பிடித்தம் செய்ய வேண்டுமென்றால், முதலில் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் எழுத்து பூர்வமாக  தகுதி வாய்ந்த அதிகாரி (competent authority) விளக்கம் கேட்க வேண்டும். அவர் பதில் அளித்த பின்பு, தகுந்த காரணங்களோடு அதை மறுத்து, ஊதிய வெட்டு செய்யப்போவதை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.   நிர்வாகம் அப்படிச் செய்யவில்லை. செய்தது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது.  

முதலில் ரீஜினல் மேனேஜர் அந்த ‘தகுதி வாய்ந்த அதிகாரி’ இல்லை. ஹெச்.ஆர் துறையின்  முதன்மை மேலாளர் மிஸ்டர் ஜெயக்குமார்தான் ‘தகுதி வாய்ந்த அதிகாரி’.  

இரண்டாவது சம்பந்தப்பட்ட ஊழியருக்கு தெரிவிக்கவே இல்லை. கிளை மேலாளருக்குத்தான் தெரிவிக்கப்பட்டிருந்தது.    

மூன்றாவது, ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்னும் விதியின் கீழ் ஊதிய வெட்டு அமல்படுத்துவதாய் இருந்தால், ’1.3.2021 தர்ணா சட்டவிரோதமானது, அதில் ஊழியர்கள் கலந்து கொண்டால் ஊதிய வெட்டு அமல்படுத்தப்படும் ‘ என தொழில் தகராறு சட்டத்தின்படி முன்கூட்டியே நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தர்ணாவை அப்படி வகைப்படுத்தவும் முடியாது.  

செய்ததையெல்லாம் குளறுபடியாகவும், தான்தோன்றித்தனமாகவும் செய்து விட்டு சார்ஜ் ஷீட்டில் முழுப் பூசணிக்காயை நிர்வாகம் மறைத்திருந்தது.  

’1.3.2021 அன்றைய லீவு என்பதை ‘தகுதி வாய்ந்த அதிகாரியிடம்’ முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, முறைப்படி அவரிடம் அனுமதி பெறவில்லை. அதிகார பூர்வமற்ற முறையில் தர்ணாவில் கலந்து கொண்டீர்கள்’ என்றுதான் முதல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது!  

No work No Pay,  மண்டல மேலாளரின் கடிதம், ஊதிய வெட்டு என்று நடந்த நிகழ்வுகளுக்கு முற்றிலும் மாறாக வேறு ஒரு கதையை ஜோடித்திருந்தது. அதாவது சொல்லாமல் கொள்ளாமல் சங்கத் தலைவர்கள் 1.3.2021 தர்ணாவில் கலந்து கொண்டார்களாம்.  

’No work No Pay’ என்று தாங்கள் முதலில் ஜோடித்த கதையைச் சொன்னால், தங்கள் செவிட்டிலேயே ஹைகோர்ட் ஓங்கி அடிக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சேர்மன் ரூமில் உட்கார்ந்து ’திட்டம் இரண்டை’ கையிலெடுத்திருக்க வேண்டும். முதன்மை மேலாளர்  ( Chief Manager)  ஜெயக்குமாரின் மூளை அபாரமான ஆற்றல் கொண்டது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அவர்.  

அந்த பித்தலாட்டமும் செல்லாமல் போயிருந்ததுதான் சுவாரசியம்.  

தர்ணா நடந்த 1.3.2021 அன்றைக்கு மட்டும் ஒருநாள் லீவு என நான் கேட்டிருக்கவில்லை. அடுத்தநாள் 2.3.2021க்கும் சேர்த்து இரண்டுநாள் கேஷுவல் லீவு கேட்டிருந்தேன். 2.3.2021 அன்று சென்னையில் ரீஜினல் லேபர் கமிஷனர் முன்பு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை  இருந்தது.  

ஆனால் 1.3.2021க்கு மட்டும்தான் மார்ச் மாதத்தில் எனக்கு சம்பளவெட்டு செய்யப்பட்டு இருந்தது. 2.3.2021க்கு ஊதியம் கொடுக்கப்பட்டு விட்டது. சார்ஜ் ஷீட்டில் கூறியுள்ளபடி முன்கூட்டி லீவு தெரிவிக்கப்படவில்லை, உரிய அனுமதி பெறவில்லை என்றால், நான் அனுப்பிய ஒரே கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும்  இரண்டு நாட்களுக்கும்  லீவு மறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் ஒருநாளுக்கு ஊதிய வெட்டும், இன்னொரு நாளுக்கு ஊதியமும் எப்படி கொடுக்க முடியும்? ஒரே கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் லீவில் ஒருநாள் அதிகாரபூர்வமற்றதாகவும் அடுத்தநாள் அதிகாரபூர்வமானதாகவும் எப்படி கருத முடியும்?  

அந்த காய்ச்சல் நேரத்திலும் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. ஒருவேளை என்கொயரி நடந்தால் நம் கேள்விகளுக்கு எங்கு போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள் என நினைத்துப் பார்த்தேன். அட்வகேட் கீதா அவர்களிடம் என் லீவு லெட்டர் பற்றி குறிப்பிட்டேன். அவர்களும் சிரித்துக் கொண்டே, “சட்டத்தைப் பத்தியெல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல மாது. எதாவது செஞ்சு உங்களை தண்டிக்கணும், உங்களுக்கு வலிக்கணும். ஆனா நீங்க இப்படி சிரிக்கிறீங்க. என்றார். அந்த லீவு லெட்டர் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அனுப்பி வைக்கச் சொன்னார். எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து மெயில் பண்ணிவிட்டுத்தான் எழுந்தேன்.  

டாக்டரைப் போய் பார்க்கச் சொன்னாள் அம்மு. பிரியா கார்த்தியிடம் போனில்  சொன்னேன். அப்போதுதான் கொரோனாவில் அவதிப்பட்டு அவனும் சரியாகி இருந்தான். ஆனாலும் வீட்டுக்கு வந்து விட்டான்.  ”இரண்டு வேள பாரசிட்டாமல் மாத்திரயப் போட்டு பாருங்க, அப்படியும் காய்ச்சல் இறங்கலன்னா,  டாக்டரைப் பாத்துருங்க” என்று மாத்திரைகளை வாங்கித் தந்து விட்டுப் போனான். மாடியில் இருந்த அறையில் போய் படுத்துக் கொண்டேன். அந்த இரவே கடும் பாடு பட்டேன்.  

அடுத்த நாள் காலையில் அம்முவுக்கும் காய்ச்சல் வந்திருந்தது. மறைந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் மகன் டாக்டர் அறத்தை பார்க்க இருவரும் சென்றோம். ஆஸ்பத்திரியில் மனிதர்கள் கசங்கிப் போய் நிறைந்திருந்தார்கள். எல்லோரும் முகக் கவசம் மாட்டிக் கொண்டு இருந்தார்கள். மனிதர்களின் கண்கள் கதிகலங்கிப் போயிருந்தன. நர்ஸ்களும், டாக்டர்களும் உடல் முழுக்க பிளாஸ்டிக் கவுன் மாதிரி ஒன்று மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்கள். யாரிடமும் புன்னகையைக் காண முடியவில்லை.  

சோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு, ‘கொரோனாதான்’ என்பதை டாக்டர் உறுதி செய்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா எனக் கேட்டார். நான் போடவில்லை. அம்மு போட்டிருந்தாள். ’அண்ணே, நீங்களும் போட்டிருக்கலாமே” என்ற வார்த்தையில் அக்கறையும், ‘ஏன் இந்த அலட்சியம்’ என்ற தொனியும் இருந்தது. மாத்திரைகள் எழுதித் தந்தார். எதையெல்லாம் சாப்பிடலாம் என அறிவுறுத்தினார்.  

வீட்டின் கதவைத் திறந்த போது, இந்த வீட்டை இனி மனிதர்கள் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். நானும் அம்முவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டோம். அத்திப்பழம், பிஸ்கட், வால் நட் போன்றவற்றை வாங்கித் தருமாறு தோழர் சங்கரிடம் போனில் சொன்னேன். சங்கத்தின் உதவித் தலைவராயிருந்தான். பக்கத்தில் படந்தால் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தான்.  வாங்கி வந்து பூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே இருந்து போன் செய்தான். சுவற்றில் வைத்து விட்டு போகுமாறு சொன்னேன். ’சும்மா வெளியே வாங்கண்ணா’ என்றான்.  எப்போது பார்த்தாலும் அவனை ’வாப்பா’ ஆரத்தழுவிக் கொள்வேன். அன்று தள்ளி நின்று அவனை வைத்து விட்டு போகச் சொன்னேன். அவன் என்னைப் பார்த்த விதம் கலங்க வைத்தது.  

இப்படி ஒரு காலம் வரும் என ஒரு வருடத்திற்கு முன்னால் அறிந்திருக்கவே இல்லை. இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் இடைவெளிகளை மனிதர்களிடையே இருந்து அகற்றுவது, அவர்களை ஒன்றுபடுத்துவது , போர்க்குணத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பது என்று இயங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் சமூக இடைவெளியே அப்போது ஒரு ஒழுங்காகி விட்டிருந்தது.  

டிவி, ஃபேஸ்புக் எங்கு சென்றாலும் தொற்று குறித்தும், நோய்கள் குறித்துமே செய்திகளாய் இருந்தன. வெறுமையும், அவநம்பிக்கையும்  சூழ்ந்த நாட்கள்.  தெருக்களில் அமானுஷ்ய அமைதி நிறைந்திருந்தது. பறவைகள், நாய்களின் சத்தங்கள் கூட விநோதமாய் கேட்டன. எதுவும் பிடிக்காமல் போயிருந்தது.  

இரண்டு மூன்று நாட்களில் அம்முவுக்கு தொற்று குறைந்து, உடல்நலம் திரும்ப ஆரம்பித்திருந்தது. ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. “நீங்களும் தடுப்பூசி போட்டிருக்கலாம்” என்று சொன்னாள்.  

அடுத்தமுறை ஆஸ்பத்திரி சென்றபோதும் தொற்று குறையவில்லை என்றே ரிப்போர்ட்டும் டெஸ்ட்டும் காட்டின. சங்கரையும், அவன் மனைவியையும்  அங்கே பார்த்தேன். சங்கர் பேசும்போது மூச்சிறைத்தது. டாக்டரிடம் அவனைப் பற்றி விசாரித்தேன். தொற்று அதிகமாய் இருக்கிறது. அட்மிட் ஆக வேண்டும் என்றார். சங்கரிடம் சொன்னபோது மறுத்தான். ‘இரண்டு நாள்ள சரியாயிரும்’ என்றான். சத்தம் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது தலையெல்லாம் விண் என்று இருந்தது.  

அட்வகேட் கீதா போன் செய்தார்கள். அஃபிடவேட் தயார் செய்து விட்டதாகவும், மெயிலில் அனுப்புவதாகவும் சொன்னார்கள். நாம் எப்போது ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வோம் என கேட்டேன். ”கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டும்.  இந்த நிலமையில் கோர்ட் நடக்குமா எனத் தெரியவில்லை. ஒருவேளை ஆன்லைனில் ஹியரிங் நடக்கலாம்” என்றார்கள்.  

உடல் மீதான பிரக்ஞை, நோய் குறித்த பதற்றம், சுற்றிலும் செய்திகள் தந்த துயரம் எல்லாவற்றையும் மீறி, நிர்வாகம் தோற்று நிற்கும் காட்சியை எப்படியும்  காண வேண்டும் என்பது மட்டும் அந்த நேரத்தில் வைராக்கியமாய் இருந்தது.  

(தொடரும்)

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்    

4ம் அத்தியாயம்    5ம் அத்தியாயம்    


Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. வைராக்கியம் என்பது ஒரு வைரம் பாய்ந்த வரி.... வைரஸ் தாக்கிய நிலையிலும்!

    சிறப்பாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள் தோழா, ஓர் அராஜக கோஷ்டியின் அபசுர கச்சேரி பற்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழா. அது போன்ற வைராக்கியங்கள்தானே நம்மை இயங்க வைக்கின்றன. சட்ட விரோதங்களை சாதாரணமாகச் செய்யும் அதிகார பீடங்களின் இயல்புகளைச் அனுபவங்களோடுச் சொல்ல இது ஒரு வாய்ப்பும் களமும் என எண்ணுகிறேன் தோழா.

      Delete
  2. அருமை தோழர்

    ReplyDelete
    Replies
    1. //அருமை தோழர்//. நன்றி தோழர். தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?

      Delete

You can comment here