லவ் டுடே போல டிராகனும் 2கே கிட்ஸுக்கான படம் என்று வகைப்படுத்துவதும், டிரெண்ட் செய்வதும் ஒரு விளம்பர யுத்தியாக மட்டும் தெரியவில்லை. ஆபத்தின் அறிகுறியாகவும் படுகிறது.
ஒருவேளை தற்கொலை செய்ய முனையும் அந்த மாணவனைப் பற்றி ராகவன் அறிய நேராமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும்.? அப்படி என்ன தவறு செய்துவிட்டதாய் ராகவனின் கல்லூரிக் காதலிக்கு குற்ற உணர்ச்சி வருகிறது? என நியாயமான கேள்விகளாய் கேட்க ஆரம்பித்தால் – பிரின்ஸ்பாலாய் வரும் மிஸ்கின் சொல்வது போல அஸ்திவாரம் இல்லாமல் அடுக்கப்பட்ட கதை என்பது புலனாகும்.
படிப்புதான் வாழ்க்கை என ப்ளஸ் டூ வரைக்கும் இருந்தவன் ஒரு பெண்ணால் பாதை மாறுகிறான். எல்லா பாடங்களிலும் அரியர்ஸாய் குவித்து கெத்தாய் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்து காலேஜை விட்டு வெளியேறுகிறான். வேலைக்குப் போவதாய் வீட்டை ஏமாற்றி சிகரெட், மது, காதல் என மிதந்து கொண்டு இருந்தவனை தரையில் இறக்கிவிட்டு காதலி பிரிகிறாள். காதலி முன்பு வாழ்ந்து காட்ட மோசடி செய்து டிகிரி வாங்கி ஐ.டி கம்பெனியில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கிறான். பெரும் தொழிலதிபரின் மகளுக்கு நிச்சயம் ஆகிறது. போலி டிகிரியை தெரிந்து கொண்ட காலேஜ் பிரின்ஸ்பால் அவனை மீண்டும் காலேஜில் சேர்ந்து முந்தைய அரியர்ஸை கிளியர் செய்யுமாறு, செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய வழி சொல்கிறார். காதலியே அவனுக்கு லெக்சரராக வந்து காதலனை ஏமாற்றிய தனது முந்தைய பாவத்தை கிளியர் செய்ய அவனுக்கு உதவுகிறாள். அப்படியும் அவனால் முடியாமல் மீண்டும் மோசடி செய்கிறான். பரீட்சை பேப்பர் மாற்றப்பட்டு அவனால் ஒருவன் தற்கொலைக்குத் துணிகிறான். குற்றவுணர்ச்சி வாட்ட எல்லோர் முன்பும் தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்கிறான். ’முன்னேற ஆசைப்பட்டது உண்மை. இன்னொருவன் வாழ்க்கையை கெடுத்து விட்டு அல்ல” என்ற பஞ்ச் வசனம் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது.
இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் குப்பையாய் கொட்டிவிட்டு, கடைசி 15 நிமிடங்கள் அந்த குப்பைகளை ஒதுக்கி அல்லது ஒளித்து வைத்து ’சுத்தமே சுகம்’ என நீதி சொல்லி முடித்திருக்கிறார்கள்.
அறமற்ற, தார்மீக நெறியற்ற, மனிதாபிமானமற்ற, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது அன்பும் மரியாதையுமற்ற அருவருப்பான அலட்சியமான ஒருவனது நடவடிக்கைகளை எந்நேரமும் காட்டி இயல்பாக்கி விட்டு, திடீரென உதயமாகும் ஞானத்தை அற்புதம் போலக் காட்டுகிறார்கள். குப்பையை கொட்டியதற்கும் மக்கள் குதூகலிக்கிறார்கள். சுத்தம் செய்வதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ராகவனைப் பற்றிய உண்மை வெளியே தெரிந்துவிடக் கூடாது என பார்வையாளர்களின் மனநிலை உருவாக்கப்படுவதில் ’டிராகனின்’ ஆபத்து இருக்கிறது.
சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு குட்டி டிராகன்.
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்