அற்ப விஷயங்களில் ஈடுபாடு கொள்ளும், பிரச்சினைகளைக் கண்டு மிரளும் சாதாரண மனுஷியல்ல. நிதானம், நிதானம், அதன் பேர்தான் ஞானமோ என நினைக்கத் தோன்றுகிறது.
என் சிறு வயதில் மற்ற பெண்களின் உரையாடல்களை கேட்கும்போது மிக இயல்பாகவும், எளிமையாகவும் குறிப்பாக சுவாரசியம் மிக்கதாகவும் இருப்பதாக எண்ணுவேன். அப்போதெல்லாம் நம் அம்மா ஏன் இது போன்ற உரையாடலை கையாளாமல் உளவியல் பூர்வமாகவும், காரண காரியங்களை ஆராய்ந்தும் பேசுகிறார் என ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. ஏன் அதில் ஒரு ஏக்கம் கூட உண்டு என்பேன். எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடாமல், எவராக இருந்தாலும் தன் மனதில் பட்டதை சொல்வதும், எதிர்வாதம் செய்வதும் அவரது இயல்பு. அம்மாவின் மேல் அப்பாவுக்கு ஈர்ப்பு ஏற்பட அம்மாவின் குணமே காரணமாக இருந்திருக்கும் என பின்னாளில் உணர்ந்தேன்.
நான் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அம்மா பணியாற்றிய புரசைவாக்கம் - தற்போதைய அழகப்பா - ஸ்கூலில் படித்தேன். வீட்டுப்பாடம் எழுத வைக்க அம்மா என்னுடன் ஒரே போராட்டம்தான். வாய் மட்டும் நல்லா பேசுவேன். அம்மாவுக்கு திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் கழித்துதான் நான் பிறந்தேன். வடிவேலு டயலாக் மாதிரி ”அம்மா நான் குழந்தையாக உருவாவதற்கு எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா, அதனால் எனக்கு எதுவும் மெதுவாகத்தான் வரும்” என்றேன். எதையும் நகைச்சுவையாக எடுக்கத் தெரியாத அம்மா அதை மிகவும் ரசித்துவிட்டார்கள் போலும். நான் மறந்து போனாலும் சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தார்கள்.
அம்மா ஒரு செகண்ட் கிரேட் டீச்சர் என்பதால் நான் பி.எட் முடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார்கள் பி எட் முடிக்கவில்லை என்றால் நானே உனது திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று ஒரே போடாய் போட்டார்கள். வீட்டு அருகில் ஸ்டெல்லா மேரிஸில் சீட் கிடைத்தது. படித்து முடித்த பின்னரே திருமணம் நடந்தது.
சில ஆண்டுகள் கழித்து அம்மா கண்டிப்பாக கரஸ்பாண்டன்ஸில் எம்.ஏ படிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்கள் ஒரு வழியாய் எம்.ஏ முதலாம் ஆண்டு முடித்து விட்டேன். எனக்கு குழந்தை உண்டானதால் இரண்டாம் வருட தேர்வு எழுதாமல் விட்டுவிட்டேன். ”தற்காலத்தில் பெண்கள் பரிட்சை ஹாலின் வெளியே குழந்தையை படுக்க வைத்து விட்டு தேர்வு எழுத செல்கிறார்கள் நீ இதற்கு போய் எழுதாமல் விடுவாயா” என்று அம்மா கடிந்து கொண்டார்கள். எனக்கும் ரோசம் வந்து எம்.ஏ முடித்தேன். அதன் பயனை விரைவில் உணர்ந்தேன். சாத்தூர் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1997லிருந்து 1999வரை இரண்டு வருடங்கள் முதுகலை பட்டதாரி லீவு போஸ்ட்டுக்கு வேலை கிடைத்தது.
அதே பள்ளியில் 2009ல் காலி இடம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு வேலை கிடைக்க அதுவே உதவியாய் இருந்தது. இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை வழிநடத்தியது அம்மா!
இன்று நான் யாருக்காவது அறிவுரை வழங்கும்போது என் அம்மா உள்ளிருந்து பேசுவதை உணர்கிறேன் படிப்பின் வாசனையை அறியாத, கல்வியின் பின்புலம் இல்லாத மாணவிகளின் தாயாய் என்னை ஆக்கிய பெருமை என் அம்மாவையேச் சேரும். அம்மாவை போன்ற ஒரு ஆளுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. மனதளவில் ஊறு விளைவிக்காத, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். மனதில் பட்டதை போட்டு உடைப்பார்கள். தான் ஒரு வளைக்க முடியாத இரும்பு என்று எல்லோருக்கும் உணர்த்தியவர்கள்.
அபசகுனமான மொழியில் பேசக்கூடாது என்பதில் அம்மா எப்போதும் கறாராக இருப்பார்கள். அம்மா வேலைக்குச் சென்று தன் காலில் நின்றாலும் தன் தேவைக்கு அதிகமாக வாங்கி குவித்ததில்லை. கஞ்சத்தனமாக இருந்ததும் இல்லை. வீட்டில் வேலை செய்பவருக்கு அம்மாவின் மேல் அவ்வளவு பிரியம். எப்படி பிறரை கஷ்டப்படுத்தாமல் வேலை வாங்குவது என்பதை அம்மாவிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.
எந்த வேலையையும் அலுப்புடனும் சலிப்புடனும் அம்மா செய்து நான் பார்த்ததில்லை. வீட்டில் அவ்வளவு பேருக்குமான சமையலை சுவையாகவும் நேர்த்தியாகவும் செய்ததை தினமும் எண்ணிப் பார்க்கிறேன். தன் உடல் வலிகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் எந்தவொரு வேலையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
அம்மாவுக்கு கவிதை எழுதுவதிலும், வரலாற்று நாடகங்கள் எழுதுவதிலும் தனி ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய சில பாடல்களுக்கு அவரே மெட்டமைத்து பாடிக் காட்டுவார்கள். மிகவும் உயிரோட்டமாக இருக்கும். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாடகம் நடத்தினார்கள். அலெக்சாண்டருக்கும் போரசுக்கும் இடையே நடைபெறும் உரையாடல். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், ஜாக்சன் துரைக்கும் இடையே உள்ள அனல் பறக்கும் காட்சி போன்று அமைத்திருந்தார்கள். அதே போல் கொலம்பசின் கடற்பயணம் குறித்த நாடகம். அதில் பெரிய கப்பல் ஒன்றினை செய்து மேடையில் வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது.
சுயமரியாதையின் சொரூபம் எனலாம் அம்மாவை. பல பெரிய தலைவர்கள் மற்றும் அவர்களின் சுயசரிதைகளை படித்தவர்கள். கதைகளை விட அறிவியல் சார்ந்த, உணர்வு பூர்வமான கட்டுரைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். படிப்பது, அது குறித்து பேசுவது என்றுதான் அம்மாவின் உரையாடல் அமைந்திருக்கும். தனது நேரத்தை அவ்வளவு பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டவர்கள்.
சுய
பச்சாதாபம் அல்லது தற்பெருமை பேசும் பெண்களுக்கிடையில் அவர் ஒரு சித்தி பெற்ற ஞானச்
சுடர்.
( மணிவிழா மலரில் தன் அம்மாவைப் பற்றி இணையர் காதம்பரி எழுதியது )
அருமை...
ReplyDeleteஉனக்கு எங்கள் அன்பு பொன்ராஜ்!
Deleteஅற்புதம்
ReplyDeleteஅன்பின் மொழி
அன்பின் ருசி
அன்பின் குரலினிமை
அன்பின் பூங்காற்று
தாங்கள் யாரென்று தெரியவில்லை. எல்லாம் அன்பு மயம்!
Deleteஆஹா எவ்வளவு அருமையான வரிகள்! அம்மா அம்மா தான். முற்போக்கான அம்மாவைப் பெற்ற சொந்தத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். இதில் ஆகச்சிறந்த பதிவுகள் எல்லாம் இடம்பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இப்படித்தான் அம்மாக்கள் அனைவருக்கும் அமைய வேண்டும். ஆகச்சிறந்த அம்மாவை வணங்குகிறேன். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழர்!
ReplyDeleteஅம்மு தொடர்ந்து எழுத உத்வேகம் தரும் வார்த்தைகள். தோழர் Shanmugasamy Ramasamy, தங்களுக்கு எங்கள் அன்பும் வணக்கமும்.
Deleteஅருமையாக பதிவு. தனது மகள் சுயசார்புடன் திகழ வழிவகை செய்த அந்த தாயாரின் எண்ணம் போற்றுதலுக்கு உரியது.
ReplyDeleteஆம் தோழரே. மிக உறுதியான, தெளிவான, பிரியமான பெண்மணி அவர்.
Deleteஅம்மா வை பற்றி அம்மா அன்பு பாராட்டி உள்ளார்கள்
ReplyDeleteதாங்கள் யார் என தெரிந்து கொள்ளலாமா?
Deleteஅம்மாவின் குரலில் அறிவுரை... அற்புதம்
ReplyDeleteஅன்புத் தோழரே! வணக்கம். உங்கள் கடிதமும் சரி, கோவில்பட்டி கருப்பட்டி கடலை மிட்டாயும் சரி, அவ்வளவு ருசி. திகட்டாதவை. தங்களுக்கு எங்கள் அன்பும், வணக்கமும்.
Delete