காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 4


பிறமலைக் கள்ளர்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது 1914ம் ஆண்டு. பெருங்காம நல்லூரில் கள்ளர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திகொடூரமாக தாக்கியது 1920 ஆண்டு. காவல்கோட்டம் இந்த இடத்தில்தான் முடிவுறுகிறது. 600 ஆண்டு கால வரலாறு சொல்லும் நாவலில் இந்த 6 ஆண்டுகள்தாம் கள்ளர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கும்,சொல்லமுடியாத துயரங்களுக்கும் ஆளாகிய காலமாக இருக்கிறது. கடைசி சில அத்தியாயங்கள் மட்டுமே இந்தப் பகுதிகளைப் பேசுகிறது. இந்தச் சட்டம் கொண்டு வருவதற்கான சூழல் எப்படி மதுரையில் உருவாகியது என்பதை நாவல் அதற்கு முந்தைய சில பகுதிகளில் பேசுகிறது. ஆங்கிலேய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மதுரை நகரக்காவலில் ஈடுபட்டிருந்த கள்ளர்களை விலக்கிவைக்க செய்யும் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறுகின்றன. சிவகாசிக் கொள்ளையும் பண்டு கலகமும் நிகழ்ந்தபிறகு அவை தீவிரமாகின்றன. காவல் கூலி கள்ளர்களுக்கு கிடைக்கவில்லையென்றாலும், களவுகள் நடக்கின்றன. துப்புக்கூலி கிடைக்கிறது. இறுதியாக யாவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அரசு இரக்கமற்று முடிவெடுக்கிறது.

 


இதைச் சொல்வதற்கு, ஏன் நாயக்கர் காலத்திலிருந்து கதையை ஆரம்பிக்கவேண்டும் என நிச்சயம் தோன்றும். “எங்களுக்கு திருமல நாக்கரு கொடுத்த காவடா.... அத என்னடா நீங்க வரக்கூடாதுன்னு சொல்ரது” என போலீஸை நோக்கி தாதனூர் பெரியாம்பிள ஒச்சு சீறுவதன்மூலமாக நியாயம் கற்பிக்கிறார் நாவலாசிரியர். சரி, அந்த நாயக்கர் வரலாற்று நிகழ்வுகளிலும் மிகக் கொஞ்சமாகவே தாதனூரும், கள்ளர்களும் காட்டப்படுகின்றனர். விஜயநகரப் பேரரசு, அதன்எல்லைகளும், தஞ்சாவூர், கர்நாடகம், ஆந்திரா என அதன் மொத்த அரசியல் களங்களும், நிகழ்வுகளும் ஏன் இவ்வளவு விரிவாக சொல்லப்படுகின்றன என்பது கடைசிவரை விளங்கவேயில்லை. இந்த இருநூறு முன்னூறு பக்கங்களைத் தாண்டி படித்தாலும் வாசகனுக்குஎந்த பங்கமும் வந்துவிடப் போவதில்லை. மதுரையை ஆண்ட நாயக்கர் எப்படி தங்கள் அதிகாரத்தை இழந்தனர் என்பதும், மதுரையைக் காவல் செய்த கள்ளர்கள் எப்படி தங்கள் உரிமையை இழந்தனர் என்பதுமாக இரு குறிப்பிட்ட சமூகத்தை முன்னிறுத்தி மதுரையின் வரலாற்றைப் பேசுவதுதான் நாவலின் நோக்கமா? அதற்காகத்தான் முடி அரசு,குடி மக்கள் என இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு இருக்கிறதா? யாவும் நாவலைப் படைத்த சு.வெங்கடேசனுக்கே வெளிச்சம்.

 


நாவலின் தலைப்பு ‘காவல் கோட்டம்’ என வைத்திருப்பதால் ‘நாயக்கர்களை மறந்து’ காவல் தொழில் செய்த கள்ளர்களின் வாழ்வையே பிரதானமாகப் பேசும் நாவலாகவே அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் அதையும் முழுமையாகவும், நேர்மையாகவும் இந்தநாவல் பேசவில்லை. கள்ளர்களின் பூர்வீகம் குறித்து பல தரவுகள் இருக்க, அவர்கள் களப்பிரர்களின் போர் வீரர்கள் பிரிவாக இருக்கலாம் என போதகர் சாம்ராஜ் மூலம் போகிற போக்கில் ஒரு ஆய்வுத்தகவலாக சொல்லப்படுகிறது. முதலில் சமணமதத்தைச் சார்ந்தவர்களாயிருந்திருக்க வேண்டும் என கருத்தை முன்வைப்பதிலிருந்து, அமணமலை எதன் குறியீடாக நிற்கிறது என்பது புலப்படுகிறது. பின்னர் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் இவர்கள் தண்டிக்கப்படும்போது சமணர்களை கழுவேற்றிய காட்சிகளை நினைவுபடுத்துவதன்மூலம் வரலாற்றில் அவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட மனிதர்களென ஒரு சித்திரத்தை நாவல்நிறுவ முயல்கிறது. ஆனால் நாவலின் ஆயிரம் பக்கங்களில், கடைசி சில பக்கங்களைத் தவிர வேறெங்குமே கள்ளர்களுக்கென்ற தனித்த துயரமான வாழ்க்கை மனதை அழுத்தவே இல்லை. சாகச வீரர்களாகவே இரவெல்லாம் வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்.

 


‘படைவீரர்களான இவர்கள் தொழில் அற்று நத்தம் மற்றும் அதற்குவடக்கிருந்த பிறமலைகளில் ஒதுங்கி வாழ நேர்ந்தது. பின்னர் பிறசமூகத்தினர் இவர்களுக்குச்சூட்டிய கள்ளர் என்பதே காலத்தில் நிலைத்துவிட்டது’ என்பவை நாவலில் வரும் வரிகள். அவர்கள்களவுத் தொழில் செய்ததால் கள்ளர் என்று அழைக்கப்பட்டனர் என்று சொல்வதற்குப் பதிலாக,அவர்களை அப்படி அழைத்தது பிறசமூகத்தினரே எனபழி கட்டுகிறது நாவல். களவை நியாயப்படுத்தும் விதமாக எழுத்துக்கள் மிகக் கவனமாக கையாளப்பட்டு இருக்கின்றன. கன்னம் வைத்து களவுக்கு நுழையும் வீட்டில் சுற்றி நடப்பது அறியாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருப்பவர்கள்தான் தனது வாசகர்கள் என எழுத்தாளர் நினைத்துவிட்டார் போலும். நாயக்கர் காலத்தில் பெரும்பாலும் போர்வீரர்களாயிருந்தவர் கொல்லவாருகள். ‘இது தவறு, கம்மவாருகள்தாம் போர்வீரர்களாயிருந்தனர்’ எனவும் நாவலைப் படித்த சிலர் சொல்கிறார்கள். எந்த வாருகளோ, ஆனால் அவர்கள் களவுத்தொழிலில் ஈடுபடவில்லை. சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழவும் இல்லை. இந்த முரண்பாட்டை ஆராய்ந்திருந்தால் நாவலின் திசை வழியும், களவு குறித்த பார்வைகளும், வரலாற்றுத் தெளிவும் சாத்தியமாகி இருக்கலாம்.

 


களவுக்கும், காவலுக்குமாகவே இரவுகள் வருகின்றன என்பதன் மூலம்களவுத் தொழிலை மிக இயல்பானதாகவே நாவல் முன்வைக்கிறது. கள்ளர்கள் குறித்து பிற சமூகங்கள்என்ன கருத்து கொண்டு இருந்தனர் என்பது நாவலில் தெளிவாகச் சொல்லப்படவேயில்லை. களவு செய்யும்பொருட்களை யார் வாங்குகிறார்கள், அவர்கள் கள்ளர்களை எப்படி பயன்படுத்தினார்கள், அவர்களுக்கும் கள்ளர்களுக்குமான உறவு எப்படி இருந்தது போன்ற விவரிப்புகள்  இல்லை. மொட்டு போல் இருந்த மதுரையை ஆங்கிலேயன் விரித்துவைத்தாகச் சொல்கிற எழுத்தாளர், அங்கு அய்யர், பிள்ளைமார், நெசவாளர், செட்டியார்,கோனார், நாடார் என பிற சமூகங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதை அங்கங்கு சிறு சிறுகுறிப்புகளாய்த் தருகிறார். ஆனால் கள்ளர்கள் நகருக்குள் இருப்பிடங்கள் கொண்டதாகச் சொல்லப்படவில்லை. அது ஏன் என நாவல் ஆராயவுமில்லை. அடுத்தது, கள்ளர்களில் அனைவருமே களவுத்தொழிலில் ஈடுபட்டு  இருக்கவுமில்லை. அவர்களிலும் சம்சாரிகள் இருக்கிறார்கள். வேறு தொழில் செய்கிறவர்களும்இருக்கிறார்கள். அதுகுறித்தெல்லாம் நாவல் பெரிதாய் கவலைப்படவுமில்ல. பக்கங்களை ஒதுக்கிகவனம் செலுத்தவுமில்லை. கள்ளர் சமூகங்களுக்கும், பிற சமூகங்களுக்கும் உள்ள உறவுகளைமிகக் கவனமாக தவிர்த்து, அல்லது முக்கியத்துவம் அளிக்காமல் நகர்கிறது நாவல். சிவகாசிக் கலவரம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற சமூகங்கள் சேர்ந்து கள்ளர்களுக்கு எதிராக நடத்திய பண்டு கலவரம் குறித்து நாவல் குறிப்பிட்டாலும்,அதன் பௌதீக காரணங்களை வேண்டுமென்றே தாண்டிச் செல்கிறது.

 

 
நாவல் என்பது விரிந்த எல்லைகளைக் கொண்டது. ஒரு பொருளின் பரிணாமங்களையும், சகல பரிமாணங்களையும் காட்டுவதற்கானவெளி கொண்டது. ஆனால் இந்த நாவல் முழுக்க முழுக்க களவுத் தொழில் செய்கிற கள்ளர்களின் வயப்பட்டு ஒற்றை நோக்கில் தட்டையாக இயங்குகிறது. களவை மொத்த சமூகம் சார்ந்த ஒரு பிரச்சினையாக பார்க்க வேண்டிய ஒரு பொறுப்புள்ள எழுத்தாளர் அதனையே பாடுபொருளாக்கி, மெய்மறந்து சிலாகித்துக்கொண்டு இருக்கிறார். அதற்காக பத்தாண்டுகளாக கடும்தவமும், உழைப்பும் செலுத்தியிருக்கிறார். அச்சமூகத்தின்மீது எந்தவித விமர்சனமுமின்றி ஒரு காவியத்தன்மையை பூசிக்கொண்டு இருக்கிறார். களவுகொண்ட ஒரு சமூகம் எப்படி உருவானது, அதற்கான புறக்காரணங்கள் என்ன , களவில் ஈடுபட்ட மனிதர்கள் மீட்க என்ன அரசு காரியங்கள் செய்தது, அதில் என்ன தவறுகள் இருந்தன,களவில் ஈடுபட்டவர்களை பொது சமூகத்தில் கலக்கவிடாமல் தடுத்தது எது என வரலாற்றை எந்தவித மீள்வாசிப்பும் செய்யாமல் இப்படியெல்லாம் கதைகள் அளப்பது வருங்காலத்துக்கு செய்கிற துரோகம். குருபூஜைகளுக்குச் செய்யும் ஒரு இலக்கியத்தொண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் தூக்கிப் பிடிக்கிற சோஷலிச யதார்த்தவாதம் இந்த நாவலின் இருளில் புதையூண்டு போன எத்தனையோ விஷயங்களில் ஒன்று.

 


மதுரையைச் சுற்றி பிறமலைக்கள்ளர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி,நாட்டார்மங்கலம் போன்ற கிராமங்கள் இருக்கின்றன. பத்தாண்டுகளாக ஜனநாயக நெறிகளை மதிக்காமல், ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் தங்கள் பஞ்சாயத்துகளுக்குத் தலைவராவதா என கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தேர்தலே நடத்தவிடாமல் செய்த பராக்கிரமங்களை உலகம்அறியும். மேலவளவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட முருகேசனோடு இன்னும்பலரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் வெளியில் தெரிந்தவை. இன்னும் சுற்றியுள்ள கிராமங்களில் தாழ்த்தப்பட்ட பகுதியினர் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் என ஆய்வுகள்சொல்கின்றன. இவை குறித்து ‘இதுவேறு இதிகாசம்’ என நாங்கள் தயாரித்த ஆவணப்படத்திற்காக,அந்தப் பகுதிகளுக்கு எங்கள் குழுவினர் சென்றிருக்கிறோம். சு.வெங்கடேசன்தான் முதலில் அழைத்துச் சென்றார். அதுபற்றி தீராதபக்கங்களில் எழுதியுமிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆழமாய் எழுந்த கேள்வி ஒன்றுண்டு. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, சமூகத்தின் பெருங்குற்றவாளிகள் போல சித்தரிக்கப்பட்ட மனிதர்களுக்குள் எப்படி இந்த ஜாதீய பெருமிதமும்,இறுக்கமும் அடர்ந்திருக்கிறது, இவர்கள் எப்படிசகமனிதர்களை சமமாக மதிக்காமல் இப்படி வெறி கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் அது.

 


பேரா.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன் ஆகியோர் இதற்கான கருத்தியல் விளக்கங்கள் கொடுத்திருப்பார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் மிக முக்கியமான ஒரு தகவலைச் சொன்னார். பிரிட்டிஷ்காரன் செய்த தந்திரம் இதில் உண்டு என்றும் ரேகைச் சட்டத்தால் பிடிக்கப்பட்ட கள்ளர்களின் முதுகு மீது மீது தாழ்த்தப்பட்ட மக்களை உட்கார வைப்பது போன்ற தண்டனைகள்கொடுத்து பகைமையை வளர்த்தான் என்றும் சொன்னார். சு.வெங்கடேசனின் ஆயிரம் பக்க நாவலில்இவையெல்லாம் எங்கும் காணோம். தாழ்த்தப்பட்ட மனிதர்களே காணோம். நாயக்கர் காலத்தில் முதலில் கள்ளர்களை ஒடுக்கிய சக்கிலியரான மதுரைவீரன்,பிறகு மன்னனால் குற்றம்சுத்தப்பட்டு மாறுகால் மாறு கை வாங்கப்பட்ட கதையைச் சொல்ல நமது எழுத்தாளரை எது தடுத்தது என்று தெரியவில்லை. நிச்சயம் தற்செயலானதாக இருக்க முடியாது.நாவலின் முக்கியமான அரசியல் இது. ‘தடித்த உங்கள் இதிகாசங்களில் எந்த பக்கம் எங்கள் வாழ்க்கை’ என கவிஞர்.ஆதவன் தீட்சண்யா பத்து வருடங்களுக்குமுன்னரே கவிதை எழுதி வைத்து விட்டார்.


முடித்துக்கொள்கிறேன்.

காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1


கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஆயிரம் பக்கம் ஏண்டா படிச்சோம்ன்னு ஆயிட்டதா? # just teasing you. :-)

  பதிலளிநீக்கு
 2. அவ்வளவுதானா, முடிச்சிக்கிட்டீங்களா? இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே?

  சாகித்ய அகடமித் தகுதிக் கூப்பாட்டுக்குள் போகாமல், நாவலின் கதைக்களத்துக்குள் நின்று அக்கறை கொண்டு விமர்சித்திருப்பதைப் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இதை தான் தமிழினி எழுத்தாளரா என்று நான் கேட்டேன்...

  இதே சாகிதய அகாதமி மற்றும் பல விருதுகள் குறித்து ஜெயமோகன் கேள்விகள் எழுப்பியபோது உங்களுக்கு எல்லாம் அது சங்கீதமாக ஒலித்து, ஆனால் அது இப்பொழுது கூப்பாடா ஒலிக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. ‘தடித்த உங்கள் இதிகாசங்களில் எந்த பக்கம் எங்கள் வாழ்க்கை’

  இந்த இதிகாசம் இடதுசாரிகளின் தடித்த ஜாதிய நூல்களிலும் இடம் பெறாது என்கிற கசப்பான உண்மையை கவிஞர் ஆதவன் இன்னும் விரிவாக எழுத வேண்டும்.

  ஆதவன் அவர்களின் எந்த நூலில் இந்த கட்டுரை உள்ளது, எனக்கு அறிமுகம் செய்யவும்

  பதிலளிநீக்கு
 5. தமிழ் அய்யனார்,

  அருள்கூர்ந்து என் மீது இரக்கமாயிருக்க வேண்டுகிறேன்.

  /இதே சாகிதய அகாதமி மற்றும் பல விருதுகள் குறித்து ஜெயமோகன் கேள்விகள் எழுப்பியபோது உங்களுக்கு எல்லாம் அது சங்கீதமாக ஒலித்தது,/

  இதற்கு என்னுடைய எழுத்தில் இருந்து மேற்கோள் காட்டினால் நான் உங்கள் கால்களை முத்தமிடுவேன்.

  Jeyamohan is a great writer,(technically), ஆனால் அவருடைய கொள்கைகள் எனக்கு எப்போதுமே ஏற்புடையதில்லை. "ரப்பர்" நாவலில் நாடார்களைத் திட்டினார்; "விஷ்ணுபுரம்" நாவலில் பார்ப்பனர்களைத் திட்டினார்; "பின்தொடரும் நிழலில்" கம்யூனிஸ்டுகளைத் திட்டி, இயேசுவின் போதனைகளைத் தீர்வாக்கினார்; "காடு" நாவலில் கிறிஸ்துவர்களைத் திட்டினார்; "கொற்றவை" நாவலில் 'முலையறுத்தல்' என்னும் ஒரு மரபு வைராக்கியத்தை - அதுவும் உலக இலக்கிய வரலாற்றில் "சிலப்பதிகாரம்" மட்டுமே உச்சப்படுத்தும் அக் குறியீட்டுச் செயல்பாட்டை, கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களைப் பின்பற்றி, மக்கள் புரட்சியாக்கினார்.

  தயவு செய்து, "காவல்கோட்டம்" வெளிவந்த அந்த ஆண்டின் எந்த நாவலாவது அதன் தரத்திற்கு/ பரிமாணத்திற்கு நெருங்கி வந்திருக்கிறதா என்று எடுத்துச் சொல்லுங்கள். நான் ஒன்றும் எல்லாம் அறிந்தவன் இல்லை. என் முடிபுகளை மாற்றிக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. //தாழ்த்தப்பட்ட மனிதர்களே காணோம். நாயக்கர் காலத்தில் முதலில் கள்ளர்களை ஒடுக்கிய சக்கிலியரான மதுரைவீரன்,பிறகு மன்னனால் குற்றம்சுத்தப்பட்டு மாறுகால் மாறு கை வாங்கப்பட்ட கதையைச் சொல்ல நமது எழுத்தாளரை எது தடுத்தது என்று தெரியவில்லை. நிச்சயம் தற்செயலானதாக இருக்க முடியாது.நாவலின் முக்கியமான அரசியல் இது. ‘தடித்த உங்கள் இதிகாசங்களில் எந்த பக்கம் எங்கள் வாழ்க்கை’ என கவிஞர்.ஆதவன் தீட்சண்யா பத்து வருடங்களுக்குமுன்னரே கவிதை எழுதி வைத்து விட்டார்// காவல் கோட்டம் குறித்து நான் தமிழ் அவர்களிடம் விசாரித்தேன். அவர் கொல்லவாரு சில்லவாரு என்ற நாயக்கமார் பற்றியும் கள்ளர்களைப்பற்றியும் கதை களம் கண்டிருப்பதாக சொன்னார். அருந்ததிய மாவீரனான மதுரைவீரனைப்பற்றியும் அந்த மக்களைக்கொன்று குழியில் இட்ட திருமலை நாயக்கரையும் சமமான பதிவு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்- உங்கள் நான்கு விம்ர்சனக்கட்டுரையின் முத்தாய்ப்பு சக்கிலியனைத்தொட்டதில் ஜொலிக்கிறது.
  பேரன்புடன்,
  திலிப் நாராயணன்

  பதிலளிநீக்கு
 7. நான் சமீபத்தில் படிக்க நேர்ந்த மிக நேர்மையான பொறுப்பான நடுநிலையான ஆழ்ந்த விமர்சனம்.

  சாஹித்ய அகாதமியின் விருது குறித்த சர்ச்சைகளை ஒதுக்கிவிட்டு நாவலின் வடிவம் குறித்தும் அதன் மொழி குறித்தும் அதன் உருவாக்கம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் மிகுந்த அக்கறையுடன் வந்திருக்கும் இந்த விமர்சனத்துக்கு நீங்கள் செலவிட்டிருக்கும் உழைப்பு அபாரமானதும் பாராட்டுக்குரியதும்.

  தவிர நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தைச் சார்ந்த்த ஒரு தோழரை பாரபட்சமின்றி நாகரீகமான முறையில் விமர்சித்திருக்கும் தன்மை தமிழ் இலக்கிய உலகத்துக்குப் புதுமையானதும் முன்னோடியானதும் கூட.

  மனமார்ந்த பாராட்டுக்கள் மாதவ்.

  பதிலளிநீக்கு
 8. @ஓலை!

  அப்படியெல்லாம் இல்லை. எல்லாம் ஒரு அனுபவம்தானே :-))))

  @rajasundararajan!

  நன்றி.

  இன்னும் சொல்வதற்கு இருக்கத்தான் செய்கின்றன. முக்கியமானவற்றை சொல்லியாகிவிட்டது என நினைக்கிறேன்.

  அப்புறம், சாகித்திய அகாதமி விருதுக்கு கடந்த மூன்றாண்டில் (ஓராண்டில் அல்ல) வந்த நாவல்களை பரிசீலிக்கிறார்கள்.காவல்கோட்டம் வந்தது 2008 பிற்பகுதியென நினைக்கிறேன்.

  @Tamil Ayyanar!
  விட மாட்டீங்களா....!

  பதிலளிநீக்கு
 9. @Nellai Xavier!

  இடதுசாரிகளென்று சொல்வதில் உங்களுக்கு கூடுதல் சந்தோஷம் கிடைப்பதாக உணர்கிறேன். தலித் மக்களுக்காக களத்தில் நின்று போராடுகிறவர்கள் இடதுசாரிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது! பல ஆழமான இலக்கிய படைப்புகளையும் இடதுசரிகள் தந்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 10. @ திலிப் நாராயணன்!

  இதுபோல் இன்னும் நிறையச் சொல்லலாம். ம்துரை யருகே வாடிப்பட்டி கிராமத்தில் பெத்தாண்டியம்மன் என்னும் நாட்டார் தெய்வ உருவாக்கத்தின் பின்னணியில் ஆதிக்க சாதியான கள்ளர் சமூகத்து மக்களுக்கும், பறையர் சமூகத்து மக்களுக்கும் இடையே நடந்த போராட்டம் ஒரு கதையாடலாக சொல்லப்படுகிறது. ஆதிக்க சாதியினரின் பெண்ணை, பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் காதல் செய்ய,ஆத்திரம் கொண்ட ஆதிக்க சாதியினர், அந்த பறையர் சமூகத்து இளஞரின் சகோதரியை மானபங்கம் செய்ய முயல,அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கலாம் என ஆய்வாளர் சி.முத்து என்பவர் கருதுகிறார்(ref:கலகக்காரர்களும், எதிர்க்கதையாடல்களும்) இப்படி துயரங்கள் மிக்க பல கதையாடல்களாலும் நிரம்பப்பெற்றதுதான் மதுரையைச் சூழ்ந்த பூமி. ஆயிரமாயிரம் கதையாடல்களால் நெய்யப்பட்ட காவல்கோட்டத்திற்கு இப்படியான கதைகள் எப்படி கிடைக்காமல் போயின என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 11. அமைப்புக்குள் இருப்பவர் என்பதாலேயே மெளனம் காத்திடாமல், ஜால்ராக்கள் போடாமல், மனதில் பட்டதை நேர்பட பேசியது பாராட்ட வேண்டிய செயல்.

  எனக்கும் இந்த நாவல் 350 பக்கங்கள் தவிர்த்து படித்தும் ஏமாற்றத்தையே தந்தது, வழிந்து எழுதப்பட்டதாகவே பட்டது.

  பதிலளிநீக்கு
 12. சென்னை புத்தக விழாவில் காவல் கோட்டம் புத்தகம் வாங்க சென்றபோது தோழரே, காசு கொடுத்து வாங்க வேண்டாம். நான் வைத்திருக்கிறேன். படித்த பின்பு உங்கள் வாசிப்புக்கு தருகிறேன் என்று சொன்ன தோழர் இப்போது "நூறு பக்கம் தாண்ட முடியவில்லை, நீங்கள் தீராத பக்கங்களில் உள்ள விமர்சன்களைப் படியுங்கள் என்று சொன்னதால் உங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன். பொதுவாக கம்யுனிச தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவருக்கு ஒரு அறிவியல் ஆய்வாளருக்கு இருக்ககூடிய நேர்மை கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் என்ற நம்பிக்கை தோழர்கள் மத்தியிலேயே குறைந்து வருவது நான் அறிந்த அனுபவித்த விஷயம். உங்கள் விமர்சனங்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதிகார கட்டாயங்களுக்குகளுக்கு நீங்கள் தலை வணங்காமல் நிற்பதில்தான் இடதுசாரிகளை தலை நிமிர வைக்கப் போகிறிர்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!