காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 3

kaaval-kottam

 

காவல் கோட்டம் என்னும் நாவல் குறித்த விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. அதுவே இங்கு பெரும் சர்ச்சைகளாய் ஊதப்படுகின்றன. சிலர் படிக்க ஆரம்பித்து நூறு பக்கங்களைத் தாண்ட முடியாமல் கைவிட்ட கதைகளை  அறிவேன். நாவல் வெளிவந்தவுடன் வாங்கி, முக்கி முக்கிப் படித்துப் பார்த்து நானும் அப்படியே வைத்திருந்தேன். எழுத்தாளர் தமிழ்ச்செல்வனிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது,  “இருநூறு பக்கங்களை அப்படியேத் தாண்டி படிக்க ஆரம்பியுங்கள். அப்புறம் பிரமாதமா இருக்கும்” என்றார்.  மனம் வராமல் நாவல் பத்திரமாக இருக்கட்டும் என விட்டுவிட்டேன். இப்போது காவல் கோட்டம் விருது குறித்த என் கருத்துக்களை தீராத பக்கங்களில் தெரிவிக்க நினைத்ததும்,  முதல் வேலையாக நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பெத்தானியாபுரம் முருகானந்தத்திற்கு நன்றி.

 

மதுரையை மையமாக வைத்து முகம்மதியர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என மூன்று ஆட்சிமுறைகளின் ஊடே கள்ளர்களின் கதை நிகழ்கிறது. அதிகாரங்கள் ஒவ்வொன்றின் எழுச்சியிலும், சிதைவிலும் அவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறது என்பதைச் சொல்கிறது. தொடங்கும் இடமும், முடியும் இடமும் அப்படியொரு முடிச்சைப் போட்டு வைத்திருக்கிறது.  வேப்பங்குளத்தின் அழிவாக முதல் அத்தியாயமும், தாதனூரின் அழிவாக கடைசி அத்தியாயமும் இருக்கின்றன. பிள்ளைத்தாய்ச்சியாய் வேப்பங்குளத்திலிருந்து தன்னந்தனியாய் கிளம்பிச்சென்ற சடச்சி அமணமலை அடிவாரத்தில் தாதனூரின் குலமாக விரிகிறாள். விஜயநகரப் பேரரசு, மதுரையில் அவர்களது ராஜ்ஜியம், கோட்டை கட்டப்படுவது, தென்பகுதியில் பாளையங்கள் உருவாதல், அவர்களுக்கிடையேயான முரண்பாடுகள், கும்பினியாரின் தலையீடுகள், படையெடுப்புகள்,  கட்டபொம்மு, ஊமைத்துரை முதலானோர் அழிவில் பாளையங்கள் சிதைவு என மாறும் பக்கங்களில் தாதனூர் அவ்வப்போது வந்து  செல்கிறது. சடச்சியின் பேரக்குழந்தைகளுக்கு கைவளையல்களைத் தருகிறாள் விஜயநகர மன்னன் குமார கம்பணின் அரசி கங்கா தேவி. சில தலைமுறைகளுக்குப் பிறகு விஸ்வநாதர் காலத்தில் மதுரையில் கோட்டை கட்டும்போது தாதனூர்க்காரர்கள்  அதில் ஈடுபடுகிறார்கள். பிறகு அரியலூர் ஜல்லிக்கட்டில் காளையடக்கும் அவர்தம் வீரமும், மானமும் காட்டப்படுகிறது. திருமலையப்ப நாயக்கர் காலத்தில் அவர்களது களவு அதிசயம்போல போற்றப்பட்டு காவல் உரிமை பெறுகிறார்கள். சொக்கநாதர் காலத்தில் படையின்  போர்க்களத்தில் தாதனூரைச் சேர்ந்தவர்கள் வளரி வீசுகிறார்கள்.  ஒருநாள் மன்னன் முத்து வீரப்பன் தாதனூர் வந்து ஆச்சரியம் தந்து அந்த எளிய மக்களின் வாழ்வுக்காக வாக்குறுதிகள் தந்து சிலகாலத்தில் இறந்து போகிறான். ராணி மங்கம்மா காலத்திலும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாவிட்டாலும், காவல் உரிமை மட்டும் பெறுகிறார்கள். ஏறத்தாழ நானூறு ஆண்டுகால வரலாறாக இவையாவும் முதல் இருநூறு முன்னூறு பக்கங்களுக்குள் முடிந்துவிடுகின்றன.

 

வெள்ளைக்காரன் ராஜ்ஜியத்தில் பெரியாம்பிள மாயாண்டி சொல்லும் பேய்க்காலம் தாதனூருக்கு ஒவ்வொன்றாக ஆரம்பிக்கிறது. கோட்டை இடிக்கப்படுகிறது. கள்ளர்கள் முக்கியத்துவம் இழக்க ஆரம்பிக்கின்றனர். கச்சேரியில் காவல்நிலையம் அமைக்கப்படுகிறது. மதுரை நகரக் காவல் பறி போகிறது. தாதனூருக்கு கிராமக்காவலும், களவும் வழிகளாகின்றன. தாது வருஷப்பஞ்சம் வாழ்வை நிலைகுலைய வைக்கிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்படுகிறது. மிஷினரிகள், சீர்திருத்தப்பள்ளிகளின் வருகை வாழ்விற்கு வேறு அர்த்தம் கற்பிக்கின்றன.  இந்த கால ஓட்டங்களுக்குள் நிகழ்த்தப்படும் களவுகள் வண்டி வண்டியாய் சொல்லப்படுகின்றன. கன்னம் வைப்பது, கருது கசக்குவது, மாடு ஒட்டுவது, ஆடு பிடிப்பது, சரக்கு ரயிலில்  மூடை இறக்குவது என வகை வகையான களவுகளில்  ஒருமுறை வரும் நகைக் களவு அவர்களின் வாழ்வையே பதம் பார்க்கிறது. ரோடுகள், சிறைச்சாலை  என ஒவ்வொன்றாகத் தோன்றி தாதனூரின் குரல்வளையை நெறிக்கிறது. மலைக்குள் போய் ஓளிந்து கொள்கிறார்கள். குற்றப்பரம்பரைச் சட்டம் ஒருவர் விடாமல்  ரேகை புரட்ட வைக்கிறது. வலி தாங்காமல் எழும் எதிர்ப்பை அரசு  மூர்க்கத்தோடு துப்பாக்கிச்சூடு நடத்தி துடைத்தெறிகிறது. தாதனூர் நினைவுகளுக்குள்ளிருந்து வாழ்வை மீட்டெடுத்துக் கொண்டு இருக்கிறது. நாவல் இப்படியாக முடிகிறது. தாதனூரே முழுக்க நிறையும் எழுநூறுக்கும் மேலான பக்கங்களுக்கிடையே அவ்வப்போது பிரிட்டிஷ் அரசின் காரியங்கள் குறிப்பிடப்படுகின்றன.

 

கைகளில் எடுத்து வைத்துப் படிக்க முடியாதபடி தண்டியாக இருக்கும் காவல் கோட்டத்தின் பாரமும் பருமனும் மட்டும் இந்தச் சிரமங்களுக்கு காரணமாக இருக்க முடியாது. நாவல் எழுதப்பட்ட விதமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. சரித்திர நாவல் படிப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். நமக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் கதைகளை அறிவதில் யாருக்கும் ஒரு அலாதியான விருப்பம் உண்டு. சுற்றி இருப்பவை மறைந்து, வாசிப்பவர்களுக்கு பக்கங்களில் தங்களைக் கரைத்துக் கொள்ளும் மாயம் நிகழும். புதையுண்ட காலங்கள் மெல்ல மெல்ல புலப்பட, அந்த வெளிகளில் உயிர்கொண்டு திரியும் அற்புதம் கைகூடும். காவல் கோட்டத்தில் அது நேரவில்லை. நாவலின் உருவம் மற்றும் உள்ளடக்கம் இரண்டுமே அரைகுறையாய் இருக்கிறது. முதலில் உருவம் குறித்து பேசலாம்.

 

காவிரிக்கரையோரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் செல்வதில் இருந்து விரிகிற ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் காட்சிகள் முப்பது வருடங்களுக்குப் பின்னரும் மறையவில்லை.  ’‘சிவகாமியின் சபதத்’தை நினைத்த மாத்திரத்தில் மாமல்லபுரத்தின் சிற்பக்கூடங்களில் இருந்து உளியின் சத்தம் கேட்க ஆரம்பித்து விடுகிறது. கதை சொல்கிறவர்கள், தங்கள் வார்த்தைகளின் மூலம் எல்லாவற்றுக்கும் உயிரூட்டி விடுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் ‘கன்னிநிலத்தின்’ கஸாக்குகள் ஸ்தெப்பி புல்வெளிகளுக்குள்ளிருந்து எதிரே வருகிறார்கள். படித்து முடிக்கும்போது ‘ஏழு தலைமுறை’யைச் சொல்லிக்கொண்டு வந்தவனும், ஆப்பிரிக்கக் கிராமத்தின் அந்த கறுப்பு மனிதனும் மட்டுமா ஒரேயாளாகிப்போகிறார்கள்? வாசிக்கிறவர்களும்தானே.  ஆனால் பார்த்துப் பழகிய மதுரையை மையமாகக் கொண்ட காவல்கோட்டம் இதுபோன்ற அனுபவத்தை ஏற்படுத்தவில்லை. நாவலில் அடிக்கடி வரும் ராமாயணச்சாவடி, காவல்காரர்கள் கூடும் புதுமண்டபம், மந்தை, அந்த ஆல மரத்தடி, அமணமலை என எதுவும் ஒரு சித்திரமாய் நிலைக்கவில்ல. இது விநோதம்தான்.

 

முழு இருளுக்குள் நடந்து செல்கிறவருக்கு முன்னும் பின்னும் இருளே அடைந்துகிடக்கும். கடக்கும் இடத்தில் தெரிவது கடந்தபின் தப்பிவிடும். அப்படித்தான் இருக்கிறது நாவல் குறித்த வாசிப்பனுபவமும். எவ்வளவோ சம்பவங்கள், பாத்திரங்கள்  என நிறைந்திருந்தும் நினைவில் இருட்டு மட்டுமே நிலைத்த மாதிரியிருக்கிறது. ஆழ்ந்து பார்க்கிறபோது, நாவலின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் நமக்குள் அப்படியே தங்கிவிடுகின்றன. மற்றபடி, களவுக்கு இறங்கிய வீட்டில் தூக்கில் தொங்கிய பெண்ணின் பாதம் காணும் சின்னான், முதன் முதலாக போலீஸ் உடை உடுத்தி சங்கடப்படும் கோபால் ஐயர், குஸ்தி பயில்வான் வீட்டில் கன்னம் வைக்கிற விட்டிப் பெரியாம்பிள, குரங்குகளைப் பிடித்து வரும் களவு, பிளாக்பெர்ன் மதுரையைவிட்டு விடைபெறும் தருணம், அமணமலையில் உட்கார்ந்து சுடச்சுட ஆட்டுக்கறி சாப்பிடுவது என அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு ஒழுங்கில்லாமல் வந்து போகின்றன. நாவலின் பெரும்பகுதி வரும் மாயாண்டிப் பெரியாம்பிள  என்னும் பேர் மட்டுமே நினைவில் இருக்கிறது. அவர் காணாமல் போய்விடுகிறார். இப்படி செதில் செதிலாக நாவலின் பக்கங்கள் முழு உருவமற்று பிய்ந்து கிடக்கின்றன.

 

நாவல் எழுதும் கலை சு.வெங்கடேசனுக்கு  கைவரவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ‘அது வந்து வெங்கடேசா.....” என மக்கள் சொன்ன கதைகளை காலநேரமில்லாமல் கேட்டு அலைந்தவர்,  அவைகளை செரித்து, திரும்ப மக்களிடம் சொல்ல சிரமப்பட்டு இருக்கிறார். மிஷனரியின் ஆவணங்கள், ஆவணக்காப்பகங்களின் தரவுகள், மக்களின் நினைவுகளில் கொட்டிக்கிடந்ததை எல்லாம் சேகரித்து அவைகளுக்குள்ளிருந்து ஒரு பெருங்கதையைச் சொல்ல வருகிறபோது திணறியிருக்கிறார். சு.வெங்கடேசன் சொல்கிற பத்து ஆண்டு உழைப்பின் சோதனையான இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அதற்கென்ற மொழியும், தெளிவும் ஒன்றுபோல் அவருக்கு காவல் கோட்டத்தின் கடைசிப்பக்கம் வரை  கிடைக்கவில்லை. அங்கங்கு கிடைக்கிற மாதிரி இருக்கிறது. சட்டென்று தொலைத்து விடுகிறார்.  கதை சொல்கிறவருக்கு என்று தனித்த  ஒரு குரலும், தொனியும் இருப்பதை வாசிக்கிறவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அவைதாம் கதைகளின் ருசியறிய வைக்கிறது. அதனைத் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். காவல்கோட்டத்தில் அது அறுந்து அறுந்து ஒலிக்கிறது. சரித்திர நிகழ்வுகள் ஒன்றாகவும், ஆவணங்கள் ஒன்றாகவும், புனைவுகள் ஒன்றாகவும், உரையாடல்கள் ஒன்றாகவும் துருத்திக்கொண்டு இருக்கின்றன. வாசிக்கிறவனை அவை தடுத்து நிறுத்தி நிறுத்தி உள்ளே அனுப்புகிறது. எனவே நாவலுக்குள் ஒரே மூச்சில் பயணம் செய்ய முடியவில்லை.

 

ஏனென்றால் நாவல் ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து எழுதப்பட்டதாக இருக்கவில்லை. அவ்வப்போது தோன்றியவைகளை, முக்கியமானவை எனக் கருதியவற்றை, நினைவில் நிழலாடியவைகளை, புனைவாக உள்ளுக்குள் ஊறியவைகளை எழுதி வைத்து அவைகளோடு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணக்குறிப்புகளை சேர்த்து  அங்கங்கு சொருகியது போலிருக்கிறது.  அடுத்து,  தனக்குத் தெரிந்த அனைத்தையும்  சொல்லித் தீர்த்து விடவேண்டும் என்கிற வேகம் கதையின் அடர்த்தியை சிதைக்கிறது. ஆவணங்களின் அடிப்படையிலான வரலாற்று நாவலை எழுதும்போது,  நிகழ்வுகளை வசப்படுத்தி, ஒழுங்கமைத்துச் சொல்கிற செறிவான மொழியொன்றை எழுத்தாளன் கொண்டு இருக்க வேண்டும். சு.வெங்கடேசன் மிக மோசமாக தோற்றுப்போன இடம் இதுதான் என்று தோன்றுகிறது.

 

மதுரை, கம்பம், நத்தம், இராமநாதபுரம், திருமங்கலம் என விரியும் இடங்கலெல்லாம் நிறைந்திருக்கும் பரப்பினை ஒட்டுமொத்தமாக விரித்துவைத்து அதில் மனிதர்களை நடமாடவிட முடியவில்லை. மதுரை வீதிகள், வைகையாறு, காடுகள், மலைகள் என கதை அற்புதமான வெளிகளில் கொண்டு போய் நிறுத்த முடியவில்லை. மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது நாவல் முழுக்கவும் உணர்வற்று கடக்க வைக்கும் ஒரு எழுத்தாக இருக்கிறது. ஆந்தையின் கண்களை வாசகனுக்கும் கொடுத்து விடுகிறார் சு.வெங்கடேசன். சோகம், வலி, சிரிப்பு, கோபம் என எதுவும் நமக்குள் பரவவில்லை. அதற்கான தருணங்கள் எவ்வளவோ இருந்தும் எல்லாவற்றையும் வீணடித்திருக்கிறது சு.வெங்கடேசனின் எழுத்து நடை. 

 

கதை எழுதுகிறவனுக்கு மாக்ஸிம் கார்க்கியினுடைய இந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை: “சொற்களினுடைய சாரம், தெளிவு கம்பீரம் ஆகியவற்றின் மூலம் மொழியுடைய உண்மையான அழகு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு புத்தகத்தினுடைய காட்சிகளையும், குணங்களையும் மற்றும் கருத்துக்களையும் வடிவுறச் செய்கிறது. எழுத்தாளர் ஒரு உண்மையான கலைஞராக இருக்கிறார். அவர் தம்முடைய மொழி ஞானத்தின் அகராதி ரீதியான ஆதாரங்கள் பற்றிய விரிவான அறிவை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மிகவும் திட்டமான, தெளிவான, சக்தி பொருந்திய சொற்களை தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் அவருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு சேமாண்டிக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், அத்தகைய சொற்களின் கலவைகளாக மட்டுமே, மற்றும் சொற்றொடர்களில் அவற்றினுடைய சரியான விநியோகமாகவும் அது இருக்கிறது. ஆசிரியருடைய கருத்துக்களுக்கு ஒரு உயர்ந்த ரீதியிலான வடிவத்தை அது வழங்க முடியும். மிகவும் தத்ரூபமான முறையிலான காட்சிகளை அது உருவாக்க முடியும். மேலும் ஆசிரியர் எதைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை வாசகர் தனக்குள் கற்பனை செய்து கண்டறிவதற்கு, மிகவும் திருப்திகரமான நினைவில் நிற்கக்கூடிய சொல்லாரங்களை அது வடித்தெடுக்க முடியும் வெறுமனே அவருடைய பேனாவை காகிதத்தில் செலுத்தவில்லை என்பதை எழுத்தாளர் கண்டிப்பாக உணர வேண்டும்”. சு.வெங்கடேசன் உணரவில்லை போலும்.

 

இருள், களவு, கோட்டை இடிப்பு, துயரங்கள், வெயில், கதைகள், எல்லாம் நாவலின் அடிநாதமெனக் கருதி அவைகளைக்  கவித்துவமான மொழியில் சொல்ல எழுத்தாளர் கடும் பிரயத்தனம் செய்திருப்பது தெரிகிறது. வலிந்து வலிந்து  எழுதியிருக்கிறார். சில இடங்களில் அற்புதமாகவும் வெளிப்பட்டு இருக்கிறது. ‘திரியிலிருந்து சிறுத்துச் சிந்திய ஒளி வாசனையைப் போல கண்ணுக்குத் தெரியாமல் அந்த அறையின் இருளுக்குள் மிதந்தது’, ‘பெண்கள் வீட்டின் சிறுவிளக்கை ஏற்றியபின் ஆண்கள் தீச்சுடரின் கரும்புகை போல் இருட்டுக்குள் ஊர்ந்து சென்றனர்’, ‘விடைத்த நாசிக்கு மிக அருகில் வேட்டை இருந்தும் அது பிடிபடாதபோது வெறி உச்சத்தில் ஏறிவிடுகிறது’, ‘பொழுது மறைவதற்கு முன்பு கடைசி வெளிச்சம் மஞ்சள் பொடி போல காட்டின் மீது பரவிக்கொண்டு இருந்தது’, ‘ஊரின் நாக்கு கிணற்றுக்குள்தான் இருக்கிறது’ ‘ஒவ்வொரு அதிகாலையிலும் சூரியனின் ஓளி கோட்டை அகற்றப்பட்ட இடத்தை ஆர்வத்தோடு பார்த்தது’ போன்றவற்றை ரசிப்பதற்கும், உள்வாங்கி காட்சிப்படுத்துவதற்கும் முடிகிறது. மாடங்களைப் பற்றிச் சொல்லும் இடமும், மாயாண்டியின் உடல் காயத்தை பூரானின் வடிவத்திற்கு ஒப்பிடுவதும், ‘காத்தாயி தாதனூர்க்காரியானாள்’ என்னும் இரண்டு வார்த்தைக்குள் விரியும் அர்த்தங்களும் சொற்களின் வசியமாக இருக்கின்றன.

 

இதுபோன்ற சில அழகுகளுக்காக  ஏராளமான அபத்தங்களை நாவல் முழுக்க தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.  ‘ஐயோ’ என யாருக்கும் தெரியாமல் தலையில் அடித்துக்கொள்ள நேர்கிறது.வெயிலை ‘உஷ்ணக்குஞ்சுகள்’ என அவர் ஒரு பத்தி முழுக்க விவரிப்பதை வாசிப்பது அந்த வெயிலை விடக்  கடும் அவஸ்தையாய் இருக்கிறது.  அது பரவாயில்லை. இரவுகளை சு.வெங்கடேசன் விவரிக்க ஆரம்பித்துவிட்டால், புத்தகத்தைத் தள்ளி வைத்து கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. விவரணைகளும், காட்சிப்படுத்துதல்களும் அவ்வளவு எரிச்சலாக இருக்கின்றன. சு.வெங்கடேசனை எந்த லிஸ்ட்டில் வைக்க? எழுத்தாளர் கோணங்கியின் மொழியில் சம்பந்தமில்லாமல்  சிலாவரிசை போட்டு ‘இரவுகள் ஆலமரத்து விழுதுகளின் வழியாக இறங்கின’ என்றும், ‘இரவு சொக்கநாதரின் தேர்சிற்பங்களில் இருந்து வருகிறது’, ‘இரவு பாம்புப் புற்றுக்குள் இருந்து வருகிறது’,  ‘இரவுகளை பாயாய் சுருட்டிக்கொண்டு தாதனூர்க்காரர்கள் சென்றார்கள்’ என பக்கத்துக்கு பக்கம் எழுதும்போது  ‘கவிதை’, ‘கவிதை’ எனவா ஆர்ப்பரிக்க முடியும்? இதுபோல ஆயிரம் இரவுகளையாவது இந்த நாவலை வாசிக்கிறவன் சந்தித்தே ஆக வேண்டும்.


 
சில வார்த்தைகளை கவிஞரான சு.வெங்கடேசன்  தன் கைவசம் வைத்திருக்கிறார். அவைகளையே உருட்டி  உருட்டி விதவிதமாய் ஆயிரம் பக்கங்களிலும் தந்துகொண்டே இருக்கிறார் . அவை யாவன: 1. வழியே. 2. குடித்து  3.ரகசியம்  4.சுருட்டி 5.உள்ளங்கை 6.தொப்புள்கொடி இன்னும் சில. ‘இரவுகளின் வழியே’, ‘வார்த்தைகளின் வழியே’, ‘ஆந்தைகளின் வழியே’. ‘கால்களின் வழியே’, ‘ஓசைகளின் வழியே’, ‘வேர்களின் வழியே’,  ‘மூச்சுக்காற்றின் வழியே’, ‘மதுக்கோப்பைகளின் வழியே’, ‘ஓம்பெர்ட்டின் ரத்தத்தின் வழியே’ என வழிய வழிய வார்த்தைகளை ஒட விடுகிறார்.  ‘காற்றைக் குடித்து’, ‘ரத்தத்தைக் குடித்து’, ‘கதைகளைக் குடித்து’, ‘வெயிலைக் குடித்து’, ‘இருளைக் குடித்து’ என அதையும் இதையும் குடிக்கத் தந்துகொண்டே இருக்கிறார். இப்படி சில வார்த்தைகளைக் கொண்டு பல பக்கங்களை நிரப்பும்போது, வாசிக்கிறவனுக்கு அலுப்பும், அயற்சியும் ஏற்படுகிறது. எழுத்துக்களிலிருந்து கதைகள் வெளியேறி வெங்கடேசனே புரண்டு கொண்டு இருக்கிறார்.

 

மதுரைக் கோட்டை இடிக்கப்படுவதை சித்தரிக்க சு.வெங்கடேசன் கையாளும் புனைவு மொழி அதிர அதிர ஒலித்து  கற்களை விழ வைத்து, புழுதியை வெளியெங்கும் நிரப்பி விடுகிறது.  அந்த வீரியம் நாவலிலிருந்து தனித்தே ஒலிக்கிறது. புறாக்கள் மூலமும், பச்சை குத்துவது மூலமும் அதைச் சொல்லும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. நாவலோடு சேர்ந்தே காட்சிப்படுத்துகின்றன. அதுதான் முக்கியம் என எனக்குத் தோன்றுகிறது.

 

நாவலின் உயிர்ப்புள்ள இடங்களென்றால், பிற்பகுதியில் வரும் உரையாடல்களே. அவ்வளவு இயல்பாக அந்த மண்ணையும் வாழ்வையும் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சிந்துகிற பழமொழிகளும், சொலவடைகளும் இந்த நாவலின் வசீகரமான பகுதிகள். எழுத்தாளனால் மனிதர்களுக்குள் இறங்கி அறிய முடிந்திருக்கிறது. பெண்கள் நம்முன் நடமாட ஆரம்பிக்கிறார்கள். அதிலும் உரலை இடித்துக்கொண்டு அவர்கள் பேசும் உரையாடல்கள்... அடேயப்பா! சு.வெங்கடேசனை மனமாரப் பாராட்டத் தோன்றியது இந்த இடங்களில்தான். நாவலில் மனிதர்கள் அவர்களது மொழியால்தான் அறியப்படுகிறார்கள், எழுத்தாளனின் மொழியால் அல்ல என்பதை உணர்த்துவதும் இந்த இடங்கள்தாம்.

 

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தூத்துக்குடியில் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்ற வந்திருந்தார். அன்று கவிதைகள் குறித்த அனுபவங்களை கவிஞர்.சு.வெங்கடேசன் பேசினார். நான் ஜெயகாந்தன் அருகில் உட்கார்ந்து எங்கள் இயக்கத்தின் கவிஞன் இவன் எனும் இறுமாப்பில் ரசித்துக்கொண்டு இருந்தேன். உணர்ச்சிகரமாக கவிதையின் வரிகளை விவரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் காதல் கவிதைகளுக்குள் நுழைந்தார். கூட்டம் முழுவதும் அவரது விவரிப்பில் தன்னை மறந்து கைதட்டி பாராட்டிக்கொண்டு இருந்தது. ஒரு தருணத்தில்,  ‘தாஜ்மஹால் பற்றி  கவிதைகளை எழுதாத இந்தியக் கவிஞன் யார்?’ எனக்  கடும் வேகத்தில் கேள்வியெழுப்பி, தாஜ்மஹால் கவிதைகள் ஒவ்வொன்றாக சு.வெங்கடேசன் சொல்லச் சொல்ல  எங்கும் ஆரவாரம் எழுந்தபடி இருந்தது. நானும் கைதட்டிக்கொண்டு இருந்தேன். ஜெயகாந்தன் எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். கொட்டித் தீர்த்து பெருமிதமாக இறங்கியவரை, “வெங்கடேசன்!” என ஜெயகாந்தன்  அழைத்தார். இயக்கத் தோழர்களின் பாராட்டுக்களிலும், கைகுலுக்கல்களிலும் பூரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் மெத்தப் பணிவோடு ஜெயகாந்தனின் அருகில் வந்தார். “வெங்கடேசன்! தாஜ்மஹாலைப் பற்றி பாரதி எழுதவில்லைத் தெரியுமா?” என்றார் அவர்.  சட்டென்று வலியையும், குற்ற உணர்வையும் சுமந்த சு.வெங்கடேசனின் முகத்தைப் பார்த்தேன். அவரைவிட நான் சிறுத்துப் போனேன். கைதட்டி மகிழ்ந்த என்னையும் ஜெயகாந்தன் பார்த்திருப்பார். யாராயிருந்தாலும் உண்மைகளை முழுவதும் அறியாமல் பாராட்டுவது அல்லது ஆமோதிப்பது சரியல்ல என்பது எனக்கான பாடம். எல்லாம் தெரிந்த மாதிரி அளந்துவிடுவது சரியல்ல என்பது சு.வெங்கடேசனுக்கான பாடம்.  ஆனால் அவர் அதை கற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரது எழுத்துக்கள் சொல்கின்றன.

 

இனி நாவலின் உள்ளடக்கம் குறித்து.....

 

(இன்னும் சொல்வேன்)

 

காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் – 1

காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 2

கருத்துகள்

27 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான், நான் பல விழாக்களில் கல்ந்து கொண்டேன், எல்லாவற்றிலும் வாசித்தவர்களை கான்பது அறிதாகவே இருந்தது.

    நீதிபதி சந்துரு, பாலச்சந்தர், பாலு மகேந்திரா முதல் எல்லாரும் நாவலை கையில் சில பக்கங்கள் புரட்டி விட்டு ஒரு சடங்காக பாராட்டி பேசுவதை காண முடிந்தது. தோழர்கள் பலரும் படிக்கவில்லை என்பது இன்னும் வருத்தமாக இருந்தது, பலரிடம் விசாரித்தால் வாங்கி 3-4 வருஷம் ஆச்சு ஆனா படிக்க நேரம் கிடைக்கவில்லை என்கிறார்கள், நேரம் அல்ல பிரச்சனை என்பதை உங்கள் பதிவு தெளிவு படுத்தியுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா.. அருமையான பதிவு. அடுத்த பதிவு எப்போசார் போடுவீங்க ஆர்வத்துடன் வெயிட்டீஸ்

    பதிலளிநீக்கு
  3. மிக நன்றாக அழகாக விரிவாக ஆழமாக எழுதியிருக்கிறீர்கள் மாதவராஜ். எந்த ஒரு படைப்பிற்கும் இன்றியமையாதது எழுத்து நடை. அது அவ்வளவாகக் கைவரப்பெறுவதற்கு முன்னரே நிறையப்பேர் எழுத ஆரம்பித்து விடுகின்றனர். கடைசிவரையிலும் அது அவர்களுக்குக் கைவராமலேயே போய்விடுவதுதான் பரிதாபம். கல்கி காலத்துக்கும் அவருக்குப் பின்னும் வந்த எழுத்தாளர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தவர்கள். அதனால்தான் இன்னமும் அவர்கள் நினைக்கப்படவும் கொண்டாடப்படவும் செய்கிறார்கள்.
    நீங்கள் சொல்லியிருக்கிறமாதிரி வந்தியத்தேவனின் குதிரைப்பயணமெல்லாம் இத்தனை ஆண்டுகாலமானாலும் இன்னமும் நம் நினைவுத்திரையில் தங்கியிருப்பதற்கெல்லாம் என்ன காரணம்?
    சில நாட்கள் முன்பு நானும் கவிஞர் அறிவுமதியும் சேந்தியாத்தோப்பு சென்றிருந்தோம். குறிப்பிட்ட இடத்தில் வீராணம் ஏரியின் ஒரு கரையில் நின்று இதோ இந்த இடத்திலிருந்துதான் வந்தியத்தேவனின் பயணம் ஆரம்பிக்கும் என்று சொன்னார்.

    ஒருகணம் கல்கியுடன் அந்தக்காலகட்டத்திற்கே சென்றுவந்த உணர்வில் உடம்பு சிலிர்த்தது.

    கதை சொல்லும் திறன் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது. கல்கி அகிலன் நாபா திஜா எல்லாரையும் கருத்துக்களுக்காக கொண்டாடலாம் கைவிடலாம் அது வேறு விஷயம். ஆனால் நடையை அவர்களிடமிருந்தெல்லாம் கற்றாக வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனின் கம்பீர நடையும் கண்ணதாசனின் தென்றல் நடையும் தமிழின் சீதனங்கள்.

    இன்றைய முக்கால்சதவிகித சிறுபத்திரிகை எழுத்தாளர்களுக்குக் கைவராத ஒரு விஷயம் இந்த நடைதான். அவர்கள் என்னமோ பெரிதாக நினைத்துக்கொண்டு அவர்கள் பாட்டுக்கு எழுதித்தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மீள்வாசிப்பு கிடையாது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இது பலரையும் சென்றடையாது என்பதும் இதனால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. அந்தப் பத்திரிகைகளும் இந்த நடையை எப்பாடு பட்டாவது ஸ்தாபித்துவிடுவது என்பதில் மிகப்பிடிவாதமாகவே இருக்கின்றன. போகட்டும்.

    திரு சு.வெங்கடேசனின் நாவலை இன்னமும் வாசிக்கவில்லை. அதனால் அவரது எழுத்துக்கள் பற்றி இங்கே எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் இவ்வளவு சிறிய வயதில் நிறைய உழைத்து அந்த நாவலை எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். சிறு வயதிலேயே சாகித்திய அகடெமி வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. காவிரிக்கரையோரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் செல்வதில் இருந்து விரிகிற ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் காட்சிகள் முப்பது வருடங்களுக்குப் பின்னரும் மறையவில்லை. ’‘சிவகாமியின் சபதத்’தை நினைத்த மாத்திரத்தில் மாமல்லபுரத்தின் சிற்பக்கூடங்களில் இருந்து உளியின் சத்தம் கேட்க ஆரம்பித்து விடுகிறது. கதை சொல்கிறவர்கள், தங்கள் வார்த்தைகளின் மூலம் எல்லாவற்றுக்கும் உயிரூட்டி விடுகிறார்கள்

    அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சரித்திர புதினங்களுக்கு நாபாவையும் ஜெகசிற்பியனின் ஆலவாயழகனையும் திருச்சிற்றம்பலத்தையும் படிக்கவேண்டும்.
    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
  6. தொடக்கம் முதலே உங்கள் நோக்கம் சந்தேகம் கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.
    1 நாவல் குறித்த விமர்சனத்தை முதலில் வைக்காமல் சர்ச்சைகள் குறித்து ஒரு பீடத்தில் அமர்ந்து வாதத்தை தொடங்கியது ஒரு திசை திருப்பும் நிகழ்வாகவே தோன்றியது.
    2 தாகூர் விருது பெற்றதற்காக எசராவிற்கு தென் சென்னை மாவட்ட விழாவின் பொது பாராட்டு நடத்த பட்டது. ரஜினியும் மற்ற வியாபாரிகளும் நிறைந்த சபையை சிறப்பிக்கும் அவருக்கு இன்னும் தமுஎகச மேடை தேவைப்படுமா?
    3 தனி நபர் தாக்குதல் என்னை போன்ற சராசரி வாசகனுக்கு எழுத்தாளரை பற்றிய பிம்பத்தை உடைத்து விடுகிறது. எஸ்ரா காவல் கோட்டம் பற்றி எழுதிய விமர்சனம் மற்றும் மொழி, சந்தேகத்திற்கு உகந்ததே. அதை தவிர்த்து விட்டு என்னால் இப்போது அவரையோ அல்லது படைப்புகளையோ பார்க்க முடிவதில்லை. அறம் பற்றி பல நூலில் எழுதி விட்டு அதை விட்டு விலகும் போது, அந்த அறம் வாசகனுக்கு மட்டுமா ?

    4 'அது என்னன்னா ராமகிருஷ்ணா' என்று மற்றவர் கூறிய அனுபவத்தை வைத்து வியாபாரம் செய்த எஸ்ராவிற்கு விருது தரப்படவில்லை என்று நீங்கள் வருத்ததுடன் கூறியது சாத்தூர் நியாயமா ? JK கூறியது அவருக்கும் பொருந்தும் என்று என்றாவது கூறியது உண்டா? சமீபத்தில் கூட காந்தி பற்றி கதை விட்டு மாட்டினரே, அப்பொழுது எங்கே போனது இந்த உவமை ? இதை நான் கூறுவதற்கு காரணம், உங்கள் நடையும் போக்கும், எஸ்ராவிற்கு வக்காலத்து வாங்கும் போக்கில் உங்களை அறியாமலே இருபதினால்.



    கல்கி நாவலை ஒரு மார்க்சிய பார்வையில் அலசி வரலாற்று நாவல்கள் எப்படி எழுத பட வேண்டும் என்று நீங்கள் கூறும் போதே, உங்கள் விமர்சனம் தகுதி இழக்கிறது. இருந்தும் காத்திருக்கிறோம் அடுத்த பாகத்திற்கு....

    பதிலளிநீக்கு
  7. @Nellai Xavier!
    நன்றி.

    @அதிஷா!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. @அமுதவன்!

    உண்மைதான்! எழுத்து நடைதான் ஒரு கதைக்கான வாசலாகவும், ஜன்னலாகவும் இருக்கிறது. வெளிச்சத்தைத் தருகிறது. அவை சரியில்லை என்றால் உள்ளே இருட்டாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. ரத்னவேல் நடராஜன்!

    நன்றி.

    பண்டியன் ஜீ!
    ஜெகசிற்பியன் நவல்களை படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. @PK!

    சந்தேகப்படுங்கள். அனைத்தையும் சந்தேகப்படுங்கள். அதுதான் ஆரோக்கியமானது தோழரே!

    இங்கு நான் எஸ்.ராவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவரிலிருந்து காவல் கோட்டம் மீதான விர்மர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்தன. அதற்கு என்ன காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறேன். அதில் தங்கள் கருத்து என்ன தெரிவிக்கலாமே.

    ஏன் இப்படி சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன எனப் பர்க்கும்போது நாவல் குறித்து சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்லியிருக்கிறேன். அதுகுறித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாமே.

    நியாயங்கள் எப்போதுமே பொதுவானவை.ஜெயகாந்தன் மூலமாகச் சொன்னது எல்லோருக்கும் பொருந்தும்.அந்த இடத்தில் நான் சு.வெங்கடேசனுக்கு பொருத்திப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். இதை அவருக்குச் சொல்லவில்லை, இவருக்குச் சொல்லவில்லை என்று அங்கலாய்த்தால் நான் என செய்யட்டும்?

    பொதுவாக இலக்கியத்தை, எழுத்தை அதற்கு சம்பந்தமில்லாத பிரபல நடிகர்கள் முலம் கொண்டு செல்ல நினைப்பது எனக்கு சம்மதமில்லைதான்.ஆனல், எஸ்.ராவிடம், ஏன் ரஜினியையும், கமலஹாசனையும் அழைத்தீர்கள் எனக்கேட்டால், உங்கள் அமைப்பு மட்டும் என்னவாம் என திருப்பிக் கேட்கக்கூடும்.

    எஸ்.ரா என் நண்பர். சு.வெங்கடேசன் என் தோழன்.புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

    அப்புறம், கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குதிரையில் வருவதை மட்டும்தானே குறிப்பிட்டு இருந்தேன். அதற்கும் மார்க்சீயப் பார்வை உண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  11. அடிப்படையில் இது உழைப்பு திருட்டு என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது, அதன் பின் மலிவான நோக்கங்களுக்காக இரண்டு ஜாதிகளை ROMANTICISE செய்து அவர்களின் வாக்குகளை பெறும் முயற்சிதான் இந்த நூல் என்பதும் சு.வெயின் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். சு.வெ யுடன் இன்று பக்கபலமாக நின்று அவருக்காக வாதாடுபவர்களே தனி பேச்சில் அனைவரிடமும் கிளித்து தொங்கவிடுகிறார்கள் என்பது தான் உண்மை.

    சினிமா தயாரிப்பாளர்களுக்கு இந்த விருதை வாங்கியதில் தொடர்பு இருந்தது என்பதும் சென்னை சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, அதனை அரவான் பட விளம்பரங்களும் உறுதிபடுத்துகின்றன. இதே சினிமா வியாபாரிகள் சூழ்ந்திருக்க தான் விருது அறிவிக்கபட்ட அடுத்த நாளே சு.வெ சென்னையில் ஒரு லட்சம் பெற்று வந்தார். எஸ்.ரா விற்கு வந்த சினிமா கூட்டம் அவருக்கும் ஒரு நயா பைசா கொடுக்கவில்லை.

    சு.வெ யின் அறத்தை பற்றி யாரும் இனி இங்கு எழுத ஆரம்பிக்க வில்லை, அதை வெளிப்படையாக எழுதினால் அவரை அமைப்பை விட்டே விரட்ட வேண்டியது வரும். ஒரு இடதுசாரி அமைப்பில் இருப்பவர் இப்படி எல்லாம் செய்யலாமா என்பது தான் இன்று எழுப்ப படும் கேள்விகளின் அடிநாதம்.

    பதிலளிநீக்கு
  12. @PK
    எங்கள் நிலத்தில் நுரையீரல் பொங்க கதை சொல்லி திரிந்த பெரியவர்களின் கதைகளை ஒருவர் தன் பெயரில் நாவலாக வெளியிடலாம், அந்த கதையை தன் பெயரிலே திரைப்படம் எடுக்கலாம், இதன் பெயர் என்ன?

    வியாபாரம் என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  13. "காவல்கோட்டம்" நாவலை வாசித்து முடித்த அன்றைக்கு, இது கம்யூனிஸ எழுத்துக் கோட்பாடுகளால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் எழுதியது போல் இருக்கிறதே என்று எனக்குள் வியந்துகொண்டிருந்தேன். காரணம்: கதை, நாயகன் நாயகி என்னும் சரடுமையம் கொண்டு ஒருமுகப் படாமல் பெரும்பாலும் கள்ளர் இன மக்களோடு பட்டுப் பரந்து கிடந்தது.

    எஸ்.ரா. "ஆயிரம் பக்க அபத்தம்" எழுதிய பிறகுதான், சு. வெங்கடேசன் CPM அமைப்பில் ஒரு முக்கியப் புள்ளி என்பதும் அவர் இன்ன ஜாதி என்பதும் கூட அம்பலப்பட்டது (அதாவது என் அறிவுக்கு). ஆனால் அவற்றை யாரிடமும் கேட்டறிந்து சரிபார்த்துக் கொள்ளவில்லை இன்று வரை. (அவரது எழுத்தில் இருந்து அவர் எப்படிப்பட்ட ஆளாக என்னோடு உறவு பெறுகிறார் என்கிற அளவில், ஒரு வாசகனாக எல்கை கொள்கிறேன். எடுத்துக்காட்டாக, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் வளர்க்கப்பட்டவர் என்றெல்லாம் தகவற்படாமல், காந்திஜியை ஏத்திப் பேசுவதோடு அமையாமல் அம்பேத்கரை இழித்துப் பேசுவதில், அல்லது காவுந்தி அடிகளை நீலியாக்குவதில், இளங்கோ அடிகளை அய்யப்பன் ஆக்குவதில் அவர் எப்படிப்பட்ட ஆளாக உருக்கொள்கிறார் எனத் தேர்ந்து அவரை நேர்கொள்கிறேன்.)

    பெத்தானியாபுரம் முருகானந்தம் அம்பலப்படுத்திய 'கரசேவைச் செங்கல்', abstract-ஆன நாவலாசிரியருக்கு வெளியே உள்ள concrete-ஆன சு.வெங்கடேசன் சம்பந்தப் பட்டது. சினிமாக்காரர்கள் சேர்ந்து சாகித்ய அகாடெமி அவார்ட் பெற்றுத் தந்ததுக்கு ஒப்பான வெளி அரசியல் அது. அவை எல்லாம் உண்மையா பொய்யா என்றறிவதற்கும் நாவல் வாசிப்புக்கும் சம்பந்தமில்லை என்பது என் கருத்து. அப்படியே, உங்கள் விமர்சனமும் உங்கள் வாசிப்பின் அடிப்படையில் அமைந்திருப்பதின் நேர்மை கண்டு மகிழ்ச்சி!

    //நாவலில் அடிக்கடி வரும் ராமாயணச்சாவடி, காவல்காரர்கள் கூடும் புதுமண்டபம், மந்தை, அந்த ஆல மரத்தடி, அமணமலை என எதுவும் ஒரு சித்திரமாய் நிலைக்கவில்ல. இது விநோதம்தான். முழு இருளுக்குள் நடந்து செல்கிறவருக்கு முன்னும் பின்னும் இருளே அடைந்துகிடக்கும். கடக்கும் இடத்தில் தெரிவது கடந்தபின் தப்பிவிடும். அப்படித்தான் இருக்கிறது நாவல் குறித்த வாசிப்பனுபவமும். எவ்வளவோ சம்பவங்கள், பாத்திரங்கள் என நிறைந்திருந்தும் நினைவில் இருட்டு மட்டுமே நிலைத்த மாதிரியிருக்கிறது.//

    இது வழி, நீங்கள் நாவலின் எழுத்துநடையைப் பாராட்டுகிறீர்கள் - உங்கள் நோக்கம் அதுவல்ல என்றாலும். (இருட்டு, தடயமற்ற களவுத்தொழில் இதுகளைப் பற்றிய எழுத்துநடை அப்படியொரு தன்மைபெற்று அமைந்ததாகச் சொல்வது பாராட்டுதல்தானே?)

    நாயக நாயகி வாசக ருசி முனைப்பின் "பொன்னியின் செல்வன்" இன்ன நாவல்களை விட, நாயக நாயகி முனைப்பமற்ற "One Hundred Years of Solitude" இன்ன நாவல்களை ஒப்பிட்டு எழுதுவீர்களேயானால் "காவல் கோட்டம்" தமிழ்க் கலைஎழுத்து வரிசையில் எங்கு நிற்கிறது என்றும், பரிசு கிட்டிய இந் நாவல் வெளிவந்த ஆண்டின் ஏனைய நாவல்களோடு ஒப்பிட்டு எழுதுவீர்களேயானால் இந் நாவலின் தரமென்ன என்பதும், உங்களைத் தொடர்ந்து வாசிக்கிற எங்களுக்கும் தெளியக் கிட்டும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. காவல் கோட்டம் நாவல் பற்றிய விவாதம் தொடரட்டும்.
    நல்லதுதான்.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணத்தில் தொடங்கும் பொன்னியின் செல்வனில் அது மட்டுமல்ல, பிறிதோரிடத்தில் அவன் கடலில் மூழ்கும் போது பு’ங்குழலி காப்பற்ற வந்து அவன் அவளை இறுகப் பிடித்துக்கொள்ள இருவரும் சேர்ந்து முழுகிவிடும் நிலையில் அவள் விடுவாளே ஒரு குத்து (அவனைக் காப்பாற்றத்தான்!) அப்போது அவனது தலை சுக்கு நூறாக வெடித்து, ஒவ்வொரு தூளிலும் அவள் உறா உறா என்று பேயாய்ச் சிரிப்பாளே!
    பேய் என்றதும் இன்னொன்றும் நினைவிலிருக்கிறது...
    அவளே “கொள்ளிவாய்ப் பிசாசு”களைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது வந்து பார்த்த வந்தியத் தேவனின் சிறுகுடல் மேலெழும்பி வயிற்றை அடைத்து பிறகு வாயையும் அடைத்தது எனும் கல்கியின் வர்ணனை அடே அப்பா 40ஆண்டுக்கு முன் (9ஆம் வகுப்பின் போது)படித்தது

    ஆனால், மாது, அந்த நடையை அப்போது ரசித்ததும் உண்மை, பின்னர் வெறும் சுவைஊட்டி நம்மை இழுத்துக் கொண்டு போய்விட்டார் என்று உணர்ந்ததும் உண்மைதானே?

    அதோடு நான் -நீங்கள் சொன்ன - தூத்துக்குடி தமுஎச பேச்சைக் கேட்டதில்லை. அண்மையில் விருதுநகரில் நடந்த தமுஎகச மாநில மாநாட்டில் சு.வெங்கடேசனின் வெறிகொண்ட பேச்சில் பார்வையாளர்கள் மயங்கிப்போனதையும் பார்த்தேன்.

    பேச்சில் பெரியார்-வள்ளலார்-முதலான சீர்திருத்த வாதிகளை எல்லாம் எதிர் அணியில் சேர்த்துவிட்ட லாவகத்தையும் பார்த்து அதிர்ந்தேன். அதுபற்றி யாரும் -மாநாட்டை நடத்திய நீங்கள் உள்பட -எந்த விமர்சனமும் வைத்ததாகத் தெரியவில்லையே!
    -நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.
    http//valarumkavithai.blogspot.in

    பதிலளிநீக்கு
  15. //பேச்சில் பெரியார்-வள்ளலார்-முதலான சீர்திருத்த வாதிகளை எல்லாம் எதிர் அணியில் சேர்த்துவிட்ட லாவகத்தையும் பார்த்து அதிர்ந்தேன். அதுபற்றி யாரும் -மாநாட்டை நடத்திய நீங்கள் உள்பட -எந்த விமர்சனமும் வைத்ததாகத் தெரியவில்லையே!
    //

    அது சரி சார் நீங்கள் ஏன் இது வரை அது பற்றி பேச வில்லை,நடந்தது மாநில மாநாடு தானே, நடத்தியவர்களுக்கு அன்று ஆயிரம் வேலைகள் இருந்திருக்கும், பார்வையாளர்களாக அமர்ந்திருந்தவர்கள் தானே அதை கிளப்ப வேண்டியவர்கள். நீங்கள் உங்கள் அடுத்த மாவட்ட குழுவின் இதனை கண்டித்திருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  16. //"காவல் கோட்டம்" தமிழ்க் கலைஎழுத்து வரிசையில் எங்கு நிற்கிறது என்றும், பரிசு கிட்டிய இந் நாவல் வெளிவந்த ஆண்டின் ஏனைய நாவல்களோடு ஒப்பிட்டு எழுதுவீர்களேயானால் இந் நாவலின் தரமென்ன என்பதும், உங்களைத் தொடர்ந்து வாசிக்கிற எங்களுக்கும் தெளியக் கிட்டும்.
    //

    இதனை தான் சார் நாங்களும் காலம் காலமாக கேட்கிறோம், இந்த பட்டியலில் எந்த எந்த எழுத்தாளர்கள் இருந்தனர், அது எப்படி எல்லாம் Short List செய்யபட்டது, இறுதி பட்டியல் என்ன, இது வெளிப்படையாக தெரிந்தாலே பல சர்ச்சைகள் முடிவுக்கு வரும். எல்லோருக்கும் தெளியக் கிட்டும்.

    பதிலளிநீக்கு
  17. Nellai Xavier!

    இது உழைப்புத் திருட்டு என்பதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். இந்த மண்ணின் கதைகளை, மண்ணின் மைந்தர்களிடம் கேட்டு ஒருவர் தொகுப்பது எப்படி திருட்டு ஆகும்? பின்னிணைப்பில் சம்பந்தப்பட்ட ஆதார நுல்களையும், கதைகளைச் சொன்னவர்களின் பெயர்களையும் குறிப்பிடாமல் விட்டது தவறு என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.ஆனால் உழைப்புத் திருட்டு என்பது பொருத்தமாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  18. @Madasamy Kombai!

    இதற்கு சு.வெங்கடேசன் தான் பதில் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  19. @rajasundararajan!

    சார் எப்படியிருக்கீங்க.

    //"காவல்கோட்டம்" நாவலை வாசித்து முடித்த அன்றைக்கு, இது கம்யூனிஸ எழுத்துக் கோட்பாடுகளால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் எழுதியது போல் இருக்கிறதே என்று எனக்குள் வியந்துகொண்டிருந்தேன். காரணம்: கதை, நாயகன் நாயகி என்னும் சரடுமையம் கொண்டு ஒருமுகப் படாமல் பெரும்பாலும் கள்ளர் இன மக்களோடு பட்டுப் பரந்து கிடந்தது.//

    இதுதான் கம்யுனிஸ கோட்பாடுகளுக்கான சூத்திரமா? நல்ல விளக்கம். நாயக நாயகி எனும் சரடுமையம் இல்லாமல் கம்யுனிஸ கோட்பாடுகளுக்கு எதிரான நாவல் வந்ததில்லையா? இது இந்த விவாதத்தைத் தாண்டி, நான் தெரிந்துகொள்வதற்காகவே கேட்கிறேன். அப்புறம் தாய் நாவல் கம்யுனிஸ கோட்படுகளுடையதா இல்லையா?


    //பெத்தானியாபுரம் முருகானந்தம் அம்பலப்படுத்திய 'கரசேவைச் செங்கல்', abstract-ஆன நாவலாசிரியருக்கு வெளியே உள்ள concrete-ஆன சு.வெங்கடேசன் சம்பந்தப் பட்டது. சினிமாக்காரர்கள் சேர்ந்து சாகித்ய அகாடெமி அவார்ட் பெற்றுத் தந்ததுக்கு ஒப்பான வெளி அரசியல் அது. அவை எல்லாம் உண்மையா பொய்யா என்றறிவதற்கும் நாவல் வாசிப்புக்கும் சம்பந்தமில்லை என்பது என் கருத்து. அப்படியே, உங்கள் விமர்சனமும் உங்கள் வாசிப்பின் அடிப்படையில் அமைந்திருப்பதின் நேர்மை கண்டு மகிழ்ச்சி!//

    நன்றி.


    /இது வழி, நீங்கள் நாவலின் எழுத்துநடையைப் பாராட்டுகிறீர்கள் - உங்கள் நோக்கம் அதுவல்ல என்றாலும். (இருட்டு, தடயமற்ற களவுத்தொழில் இதுகளைப் பற்றிய எழுத்துநடை அப்படியொரு தன்மைபெற்று அமைந்ததாகச் சொல்வது பாராட்டுதல்தானே?)//

    இதனை நீங்கள் சீரியஸாகச் சொல்லவில்லையென்றே நினைக்கிறேன்.


    /நாயக நாயகி முனைப்பமற்ற "One Hundred Years of Solitude" இன்ன நாவல்களை ஒப்பிட்டு எழுதுவீர்களேயானால் "காவல் கோட்டம்" தமிழ்க் கலைஎழுத்து வரிசையில் எங்கு நிற்கிறது என்றும், பரிசு கிட்டிய இந் நாவல் வெளிவந்த ஆண்டின் ஏனைய நாவல்களோடு ஒப்பிட்டு எழுதுவீர்களேயானால் இந் நாவலின் தரமென்ன என்பதும், உங்களைத் தொடர்ந்து வாசிக்கிற எங்களுக்கும் தெளியக் கிட்டும்.//

    என்ன இது. நுற்றாண்டுத் தனிமை நாவலோடு ஒப்பிடுவதா.... அடுத்த பதிவு படித்துவிட்டு இது பற்றிப் பேசுவோமே.

    பதிலளிநீக்கு
  20. @நா.முத்து நிலவன் !

    //பேச்சில் பெரியார்-வள்ளலார்-முதலான சீர்திருத்த வாதிகளை எல்லாம் எதிர் அணியில் சேர்த்துவிட்ட லாவகத்தையும் பார்த்து அதிர்ந்தேன். அதுபற்றி யாரும் -மாநாட்டை நடத்திய நீங்கள் உள்பட -எந்த விமர்சனமும் வைத்ததாகத் தெரியவில்லையே!//

    எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது.

    பதிலளிநீக்கு
  21. மாது அண்ணா,

    ஒருவர் சிலரிடம் 5000 பக்கங்களை அல்ல 50 பக்கங்கள் மொழியாக்கம் செய்து வாங்கி அதை தன் பெயரில் வெளியிட்டால், அல்லது அதில் உள்ளதை அடிப்படையாக வைத்து ஒரு பிரதியை உருவாக்குகிறார் என்றால் இதனை என்ன வகையாக நீங்கள் பகுப்பீர்கள்....

    காவல் கோட்டம் விஷயத்தில் பெத்தாணியாபுரம் முருகானந்தத்தைி
    தொடர்ந்து பலரும் மதுரையில் இதனையே வழிமொழிகிறார்கள். அமைப்பில் உள்ள பலர் அவருக்கு ஆங்கிலம் அரவே தெரியாது என்பதையும் அவர் பலரிடம் மொழிபெயர்த்து வாங்கியதையும் உறுதி செய்கிறார்கள், பாவம் எல்லாருமே இயக்கத்தின் இரும்பு கரத்தை கண்டு பேச அஞ்சுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  22. ராஜசுந்தர் ராஜன் சார் நீங்கள் தமிழினி எழுத்தாளர் தானே

    பதிலளிநீக்கு
  23. எனக்கு காவல் கோட்டம் வெளிவந்தது முதல் புரியாத ஒன்று எப்படி இந்த தலிததிய கருத்தாக்கம் சார்ந்த அறிவுஜீவிகள் வாய் பேசாமல் மெளனம் காக்கிறார்கள். ஆதவன் அவர்கள் ஒரு சிறுகதை எழுதியதற்காக சுந்தர் ராமசாமி அவர்களை PCR சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்றார். அதே அவரது அமைப்பை சேர்ந்தவர் 600 ஆண்டுகள் வரலாற்றில் தலித்களை பினாயில் ஊற்றி கழுவி வெளியேற்றியிருக்கிறார், எந்த சத்தத்தையும் காங்கலயே... Blood is thicker than Water எனப்தை இயக்கவாதிகளும் நிறுவுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  24. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் மாது.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VARALAATRU PATHIVU VIVAATHATHTHIRKKU UTPADUTHTHAPPATTAPOTHUM
      VINJI NIRPATHU MANNIN PERUMAI MATTUME...

      ZHAKARAN

      நீக்கு
  25. மாது,

    நாயகத்துவம் சார்ந்து (hero/heroine oriented) இல்லாமல் சமூகம் சார்ந்து எழுதப்படுதல் என்கிற அர்த்தத்தில் சொன்னேன். "தாய்" நாவல் கம்யூனிஸக் கோட்பாட்டு நாவல்தான்.

    tamilayyanar,

    "தமிழினி" பத்திரிக்கையில் நான் எழுதியிருக்கிறேன். ("காலச்சுவடு" பத்திரிக்கையில் கூட எழுதி இருக்கிறேன்.) என் நூலகள் 'தமிழினி' வெளியீடாக வந்திருக்கின்றன. ('அன்னம்' வெளியீடாகவும் வந்திருக்கிறது.) ஆனால் இதொன்றும் பதிப்பக அரசியல் என்று நான் எண்ணவில்லை. என்றால், மாதவராஜ் எந்தப் பதிப்பகத்துக்காகக் கட்சியாடுகிறார்?

    "காவல்கோட்டம்" வெளிவந்த ஆண்டில், வேறு என்னென்ன நாவல்கள் வெளிவந்தன என்று எல்லாருக்கும் தெரியும்தானே? என்றாலும் சாகித்ய அகடமியிடம் லிஸ்ட் கேட்டு நழுவுகிறோம். "காவல்கோட்டம்" x "துயில்" x "தேகம்" x "இரவு" x etc. etc. ஒப்பிட்டு எழுதலாமே? காவல்கோட்டத்தைவிட நல்ல நாவல்கள் வந்திருக்கின்றன என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் அவை எவை என்று சொல்லமாட்டேன் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  26. தமிழ்செல்வன் சார் இப்படி ஒரு பதிவுக்கும் உரையாடலுக்கும் பெத்தாணியாபுரம் முருகானந்தத்தின் கடிதம் தான் வழி வகுத்தது என்பது மறந்துவிட வேண்டாம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!