கண்ணகிகளும், எரியும் காஷ்மீரும்!

kashmir-2 காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதக் கலவரம் போலவும், மதரீதியான பதற்றமாகவுமே, காஷ்மீர் அல்லாத இந்தியப் பகுதிகளில் தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படித்தான் என்பதாகவும் பெரும்பான்மையோர் நினைக்கின்றனர். “தொடர்ச்சியான கடையடைப்புகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அரசு நிர்வாகம் அறிவிக்கும் ஊரடங்கு உத்தரவுகளை மக்கள் மறுத்து வெளியே வருகிறார்கள் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்கள். பெண்களும், குழந்தைகளும் தெருவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?” என கேட்கிறார் முகமது யூசுப் தாரிகாமி (சி.பி.எம் மாநிலச் செயலாளர்). குமுறி, கொந்தளித்துப் போயிருக்கின்றனர் அங்குள்ள மக்கள் என்பதை இந்த தேசத்தின் அரசும், அனைத்து மக்களும் இப்போதாவது புரிந்துகொண்டாக வேண்டும். ‘தூண்டுதல்கள்’ என வசதியான ஒரு சொல்லாடலுக்குள் ஒளிந்துகொண்டு அரசு ‘திருவிளையாடல்களை’ செய்துகொண்டு இனியும் காலத்தைத் தள்ள முடியாது. ‘எப்போதும் போல’ இப்பிரச்சினையை குரங்கின் அப்பமாகக்  கையாண்டால் நிலைமைகள் மேலும் மோசமடையவேச் செய்யும்.

காஷ்மீரின் வரலாறு குறித்துப் பேசும்போது, அந்த மண்ணின் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களே முக்கிய அத்தியாயங்களாய் இடம்பெறும். மாறி, மாறி வந்த ஆட்சிகளால், அந்த மக்கள் வஞ்சிக்கப்பட்ட கதைகளை வெளியே பெரிதாய் இங்கு பேசுவதில்லை. இந்தியா, பாகிஸ்தானின் அரசியலுக்குள் அந்த காஷ்மீர் மக்களின் வாழ்க்கை சிதைந்து போனதைக் காட்டுவதில்லை.  ஒரு சில சம்பவங்களை பெரிது பெரிதாய் காட்டி, அங்கிருக்கும் முஸ்லீம்கள் அனைவருமே தீவீரவாதிகள் போலவும், பயங்கரவாதிகள் போலவும் இந்திய ஊடகங்களால் வெற்றிகரமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய பாதுகாப்புப் படையின் வரம்பற்ற அதிகாரத்தின் கீழ் அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருமே சந்தேகத்துக்குரிய பிரஜைகளாகி இருக்கின்றனர். அந்த சாதாரண மக்களின் உணர்வுகளும், உரிமைகளும் ‘மதம்’, ’பயங்கரவாதம்’, ‘தேசப் பாதுகாப்பு’ என்று சொல்லிச் சொல்லியே தட்டிக் கழிக்கப்பட்டன. அவைகள்தாம் இன்று பெருங்கோபமாய் கிளர்ந்து நிற்கிறது.

மூன்று அப்பாவி இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று  கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்த வன்முறை வெடித்தது. கொதிப்பின் கடைசிப் புள்ளி இது. இத்தனை நாளும் அவர்கள் எப்படி உள்ளுக்குள் பொங்கிப் போயிருந்தார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியை அறிய, இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள்.

காஷ்மீரில் சந்தேகத்தின் பேரில், விசாரணைக்கு என்று இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் பல மூஸ்லீம் ஆண்கள் பிறகு வீடு திரும்புவதே இல்லை. பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலம் திசையற்றுப் போகிறது அவர்களுக்கு. ‘ஒருவன் கிடைத்திருக்கிறான். அவன் உன் கணவனா என்று வந்து பார்த்துச் சொல்” இப்படி நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்கள் இராணுவ முகாம்களில் என்ன ஆவார்கள் என்பதை சிந்திக்கவே முடியாது. அப்பெண்களுக்கு குடும்பங்களில், சமூகத்தில் நேரும் அவலங்கள் உயிரோடு கொல்வதாய் இருக்கின்றன. “அப்பா எங்கேம்மா” என கேட்கும் குழந்தைகளுக்கு “வருவாங்க கண்ணே” எனச் சொல்லி அந்தப் பெண்கள் காத்திருக்கிறார்கள். இதுதான் அடுல் குப்தா இயக்கிய 'waiting'  என்னும் ஆவணப்படம். 2006ம் வருடம் திருவனந்தபுரத்தில் இந்தப் படத்தை முதன்முதலாய் பார்த்தபோது நிலைகுலைந்து போனேன். முட்டிக்கொண்டு வந்த கேவலை அடக்கிக்கொள்ள பிரயத்தனம் செய்தேன். காஷ்மீரின் துயரம் படம் முழுவதும் நம்மீது கொடும்பனியாய்ப் பரவி உறைய வைக்கிறது.

இப்படி விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு, தொலைந்து போன ஆண்களின் மனைவிகளை அங்கே ‘half widows' என்று சொல்கிறார்கள். தகிக்கும் பெருமூச்சோடு, ஆராய்ச்சி மணி அடித்த நம் கண்ணகியே நினைவில் வருகிறாள். அதுதான் காஷ்மீர் இப்படி பற்றி எரிகிறது போலும்.

தேரா மன்னர்களே, செப்புவது உடையது.

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //குமுறி, கொந்தளித்துப் போயிருக்கின்றனர் அங்குள்ள மக்கள் என்பதை இந்த தேசத்தின் அரசும், அனைத்து மக்களும் இப்போதாவது புரிந்துகொண்டாக வேண்டும்//
  அண்ணா... மக்களின் நிலையை புரிந்து கொள்ளும் அரசு இன்னும் வரவில்லை... இனிமேலும் வரப்போவதில்லை.

  பதிலளிநீக்கு
 2. அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறேன்.
  என்ன கொடுமை இது?

  இது நாள் வ‌ரை இந்தியர்க‌ளாக‌ இருந்தோம். இனி இருக்க‌ மாட்டோம் என்று அந்த‌ ம‌க்க‌ள் க‌த‌றுவ‌த‌ன் பின்ன‌ணியில் எத்த‌கைய‌ சோக‌ங்க‌ள் நிறைந்திருக்கின்ற‌ன‌?

  பதிலளிநீக்கு
 3. //‘தூண்டுதல்கள்’ என வசதியான ஒரு சொல்லாடலுக்குள் ஒளிந்துகொண்டு அரசு ‘திருவிளையாடல்களை’ செய்துகொண்டு இனியும் காலத்தைத் தள்ள முடியாது. ‘எப்போதும் போல’ இப்பிரச்சினையை குரங்கின் அப்பமாகக் கையாண்டால் நிலைமைகள் மேலும் மோசமடையவேச் செய்யும்.// இத்தனையும் நடந்தாலும் காசுமீர் காசுமீரிகளுக்கே என்று மார்க்சிய கட்சி சொல்லாது. இது மட்டுமல்லாமல் மாவோயினரை ஒடுக்க ஒரிசாவிலும் மேற்கு வங்கத்திலும் இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வேறு சொல்லும்... உங்களுக்குத் தேவைப்பட்டால் மக்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும்; இல்லை என்றால் இப்படிச் சொல்கிறீர்கள் என்று தான் தோன்றுகிறது...

  பதிலளிநீக்கு
 4. சே.குமார்!
  அவநம்பிக்கை தேவையில்லை தம்பி.


  தீபா!
  மனிதாபிமானம் உள்ள யாரையும் அந்தப் படம் அதிர்ச்சியடையவே வைக்கும். அதுதான் உண்மை.


  ஆதி!
  மக்களுக்கு எதிராக இராணுவத்தை நிறுத்துவதை சி.பி.எம் எப்போதுமே எதிர்க்கவேச் செய்கிறது. மாவோயிஸ்டுகளையும் கூட அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் அதன் நிலைபாடு.

  பதிலளிநீக்கு
 5. கண்ணகிகளின் கதை உண்மையென்றாலும், நம்மையும், தாய்த்திருநாட்டையும் காக்கும் ராணுவவீரர்கள் ஈரமற்றவர்கள் என நம்ப மனம் மறுக்கிறது. அவன் அங்கே தீவிரவாதத்திற்கு எதிராக தன் உயிரையும் பணயம் வைத்து காவல் புரிவதால் தான் நீங்கள் சுகமாக தீராத பக்கம் எழுதவும் நான் பதில் எழுதவும் முடிகிறது தோழரே. அரசும் அரசு சார்ந்த துறையினரும் மக்களை துன்புறுத்துவதற்காகவே பிறவி எடுத்து வந்தவர்கள் போல சித்தரிப்பதை ஒப்ப மறுக்கிறது என்னைப் போன்ற சாமானியனின் மனம்!!!

  பதிலளிநீக்கு
 6. இளம்வழுதி!

  அந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  இராணுவம் குறித்து நீங்கள் எவ்வளவு உயரிய அபிப்பிராயங்கள் கொண்டு இருந்தாலும், இதுதான் உண்மை.

  இராணுவம், அரசு எல்லாம் அதிகாரவர்க்கத்தின் கருவிகளே. அதிகார வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதுதான் அதன் நோக்கமே. சாதாரண மக்களை, அதிகார வர்க்கத்தின் விதிகளுக்கு ’ஒழுங்காக’கட்டுப்பட்டு நடப்பதை கண்கானிப்பதற்கும், மீறினால் தண்டனையளிப்பதற்குமே அவைகளின் பிறவி இலட்சியம் இருக்கிறது.

  மேலும், இராணுவம் என்பது மிருகபலம் கொண்டது. அதற்கு கருணை, இரக்கம், மனிதாபிமானம் என எதுவும் கிடையாது. நமது நாட்டை பாதுகாக்கிறவர்கள் என்று அதன் மீது புனிதமான பிம்பம் ஏற்படுத்துவதெல்லாம் இந்த அதிகார வர்க்கம் நம் பொதுபுத்தியில் ஏற்றி வைத்திருக்கும் மூட நம்பிக்கையே.

  வெள்ளம், விபத்துக்கள் போன்ற காலங்களில் மட்டுமே இராணுவத்தை பயன்படுத்தும் காலம் ஒன்று வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. கருணை, இரக்கம், மனிதாபிமானம் இல்லாத ராணுவத்தை வெள்ளம், விபத்துக்கள் போன்ற காலங்களில் மட்டுமே பயன்படுத்தும் உங்கள் யோசனையில் முரண்பாடு தெரிகிறதே.
  ஒன்று மட்டும் உண்மை. சாதாரண ராணுவ சிப்பாய் எங்கோ அதிகார வர்க்கத்தில் இருந்தோ அல்லது நகரங்களின் வசதி படைத்த மேட்டுக்குடிக் கூட்டத்திலிருந்தோ தோன்றுவதில்லை. சாத்தூரிலிருந்தோ அல்லது அதனினும் சிறிய கிராமங்களிலிருந்தோ பிழைப்புக்காக உயிரைப் பணயம் வைக்கும் ஏழைக்கூட்டங்களில் இருந்தே பெரும்பான்மை வீரர்கள் எழும்பி எல்லையில் காவல் காக்கின்றனர். என்னதான் மேலதிகாரிகளுக்கு கட்டுப்படுபவராக இருந்தாலும், சொந்த மக்களை வேட்டையாட பணிக்கப்பட்டால் அதனை கிஞ்சித்தும் மதியாமல் மனசாட்சியின் படி நடக்கும் கிராமிய ஈரம் இல்லாமல் போகாது என்பது என் கருத்து. ஒரு விதத்தில் அவர்களும் தொழிலாளி வர்க்கம் தான் ;-)

  பதிலளிநீக்கு
 8. சில ராணுவத்தினர் செய்யும் தவறுகளால் ஒட்டு மொத்த ராணுவத்தையே தவறாக சித்தரிப்பது சரியா என்று தெரியவில்லை. ஒரு ராணுவத்தின் பணி அந்தந்த நாடுகளில் நடைபெறும் அரசியலமைப்பை கட்டிக் காப்பதே. அந்தந்தந்த நாட்டில் எத்தகைய அரசு அமைகிறது என்பதை அந்த நாட்டு மக்கள் தான் தீர்மானிகின்றனர். ராணுவம் அல்ல. இதற்கு விதிவிலக்காக சில நாடுகளில் ராணுவம் இருக்கலாம். உதாரணம் பாகிஸ்தானில் ராணுவம் பெரு பங்கு வகிக்கிறது. ராணுவத்தின் உதவியில்லாமல் எந்த ஒரு அரசியல் மாற்றமும் எளிதில் அடைவது சுலபமில்லை. அது ராணுவத்தைப் பகைத்துக் கொல்லாதிருக்கும் போது தான் சாத்தியம்.

  இந்தியாவைப் பொறுத்தவரையில் நமக்கு எல்லாப் பக்கங்களிலும் எல்லைப் பிரச்சனை. இதைத் தவிர உள்நாட்டுப் பிரச்னையும் கூட. இத்தகைய கால கட்டத்தில் அரசு மட்டுமல்ல ஒரு பொறுப்புள்ள ராணுவத்தின் பணி நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது. இந்த நிலையில் இந்திய அரசு அதிக இளம் வயதினரை ராணுவத்தில் சேர்ப்பது தவிர்க்கமுடியாது. பெரும்பாலோர் 18 லிருந் 35 வயதிற்குட்பட்டவர். பயிற்சி முடிவதற்குள்ளேயே ஏதாவது ஒரு எல்லையில் அல்லது உள்நாட்டுப் பிரச்சனையில் உடன் பணியமர்த்தம் செய்யபடுகிறார்கள். இவர்களுக்கு கட்டுபட்டிற்கும் தலைமைக்கு அடிபணிதளுக்கும் மட்டுமே பிரதானமாக பயிற்சி அளித்திருப்பார்கள். அற நெறி ஒழுக்கங்களுக்கு பயிற்சியளிக்க நேரம் கிடைத்திருக்குமாவென்று தெரியவில்லை. இதில் தவறவிடப்பட்டு இருந்தால் இவர்கள் செய்யம் தவறுகள் பிரதானமாக் வெளிவரும். இதை தடுக்க வேண்டிய கடமை ராணுவத்திடம் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. காஸ்மீர் பற்றிய உங்கள் பதிவு பார்க்கும்போதும், பத்திரிகை செய்தியும் மிக கவலைக்குரியதாக இருக்கிறது. அங்கு அரசியல் தீர்வே சரியானதாக இருக்கும். மக்களுக்கு முன் சட்டமும் ராணுவமும் பின்னோக்கி தான் செல்லும் அங்கே.

  பதிலளிநீக்கு
 10. படிக்கும் போதே சங்கடமா இருக்கு. போராட்டம், ராணுவ கட்டுப்பாடு என்று இருக்கும் இடங்களில் ் உலகெங்கும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாவது பெண்களே.
  கீதையிலே போரை மறுக்கும் காரணத்தில் முக்கிய காரணமாக அர்ச்சுனன் முன் வைப்பது பெண்கள் மேலான வன்முறையையும் அதைத் தொடர்ந்து ஏற்படும் சந்ததிகளின் நிலையையும்.

  இரானில் தன் குழந்தைகளைக் காக்க தன் கணவர்களைக் கொன்ற ராணுவ வீர்களுக்கே தன்னை விற்கும் அவலத்தில் அந்த தாய்மார்கள் இருப்பதாக செய்தி படித்த போது பெரும் அதிர்ச்சி

  பதிலளிநீக்கு
 11. இரு பிரிவு இருக்கிறதா?

  http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_2300.html

  பதிலளிநீக்கு
 12. இளம்வழுதி!

  நான் ஒரு இராணுவ வீரனை தனிப்பட்ட முறையில் இங்கு குறிப்பிடவில்லை.அவனும் நம்மைப் போல சாதாரணமானவனே. இராணுவம் என்னும் மிருகபலத்திற்குள் இருக்கும் இயல்புகளால் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. சேது அவர்களுக்கு

  வணக்கம்.

  இந்தியாவின் பிரச்சினைகள் வைத்தோ, பாகிஸ்தானின் பிரச்சினைகள் வைத்தோ இராணுவத்தின் தன்மைகளையும், தேவைகளையும் அளவிடவில்லை.

  தொன்றுதோட்டு தங்கள் நிலம், உடைமைகளை காப்பதற்கான ஆயுதங்கள் தாங்கிய கருவியாகவே இராணுவம் இருந்து வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் வேட்டை நாயாகவே இருந்து வந்திருக்கிறது. மக்களுக்கானது அல்ல.

  இந்த அர்த்தத்தில்தான் நான் சொல்லி இருக்கிறேன். அதன் மீது எந்தப் புனித பிம்பங்களும் தேவையில்லை என்றுதான் கூறி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. விருட்சம்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க.

  டி!
  நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!