ஒரு மாவீரனின் கதை

 run ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான். ஊருக்குள் சிம்ம சொப்பனமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவர் அவர். பண்டாரவிளை வைத்தியத்தில் குணமானாலும் இன்றும் லேசாக தெத்தி தெத்தித்தான் நடக்க முடிகிறது. அப்புறம் தேரியில் முந்திரி மரம் ஏலம் எடுக்கும் தகராறில் சண்டியன் குருசாமியை மந்தையில் வைத்து அரிவாளால் லேசாய் தோள்பட்டையில் வெட்டி விட்டான். இப்படித் தொடங்கிய அவனது பராக்கிரமங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நீண்டு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு ரெகார்டுகளில் பதிந்து பதிந்து ‘ரவுடிப்பய’ என்று பேரெடுத்தான்.

யாராவது தாக்கிவிடக் கூடும் என்று சதாநேரமும் சில வெட்டிப் பயல்களோடு திரியப் போய் அவர்கள் அன்போடு “அண்ணே” என்றனர். அந்தக் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏவை வரவேற்க அடித்த போஸ்டரில் அச்சடித்திருந்த அம்பத்தாறு பேரில் இவன் பேர் மாவீரன் சுடலைமுத்து என்று இருந்தது. ஊருக்குள் அதைப் பார்த்து முதலில் சிரிக்கத்தான் செய்தார்கள். கொஞ்சநாளில் நடந்த ஊர்த் திருவிழாவுக்கு ‘மாவீரன் சுடலைமுத்து மோர்ப் பந்தல்’ என்று கொட்டகை போட்டு, தனது இருபத்தொன்பது வயதிலேயே மாவீரனாய் பேரெடுக்க ஆரம்பித்தான்.

எட்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்று ஒன்றிரண்டு பெரியவர்களைத் தவிர ஊருக்குள் யாரும் சுடலை முத்து என்று அவனை கூப்பிடுவது இல்லை. கூப்பிடவும் முடியாது. மாவீரன் சுடலைமுத்துதான். அடர்ந்து முறுக்கிய மீசையும், செவ்வரி ஒடிய கண்களும், மடிப்புக் கலையாத வெள்ளைச் சட்டையும், வேட்டியும் என ஆளே ஒரு தினுசாகி விட்டிருந்தான். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் அவனுக்கு பிரத்யேக மரியாதையும், அழைப்பும். இதுதான் சுடலைமுத்து, மாவீரனான வரலாறு.

சரி விஷயத்துக்கு வருவோம். சம்பவத்தன்று மாவீரன் காலையில் எழுந்ததும் லுங்கியோடு தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான். நேற்றிரவு அடித்த ஓ.சி.ஆரும், அது அடங்க நடு இரவில் களக், களக்கென குடித்த செம்புத் தண்ணீரும் முட்டிக்கொண்டு வந்திருக்கிறது. என்றுமில்லாமல் அந்த நேரம் பார்த்து  அங்கு முருங்கை இலை பறிக்க சக்திக்கனியக்காவும், கோமதியும் நின்றிருந்திருக்கிறார்கள். ஒதுக்குப்புறமாய் கொஞ்சம் தள்ளிப் போவோம் என்று படலையை விலக்கி, பக்கத்தில் இருந்து முடுக்குப் பக்கம் சென்றிருக்கிறான். அங்கேதான் விதி தனது விளையாட்டை ஆரம்பித்தது. பெட்டிக்கடை அருணாச்சலத்தின் கோழி தனது குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருக்கிறது. தரையை தாய்க்கோழி கால்களால் கீறிக் கீறி விட, குஞ்சுகள் அந்த இடத்தில் பாய்ந்து பாய்ந்து கொத்திக் கொண்டிருந்தன.

மாவீரன் வாகாக லுங்கியை உயர்த்தி மடித்துக் கட்டி, லேசாய் செருமிக் கொண்டு கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த தாய்க்கோழி என்ன நினைத்ததோ தெரியவில்லை. இறக்கைகள் எல்லாம் சிலிர்த்து ஆவேசமாய் அவன் மீது பாய்ந்திருக்கிறது. எதிர்பாராத மாவீரன் “ஏ..அம்மா” என்று நிலை தடுமாறி சரிந்திருக்கிறான். விலகிப்போன கோழி திரும்பவும் ஆக்ரோஷமாய் அவன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மாவீரன் எழுந்து, அவிழ்ந்த லுங்கியை ஒரு கையில் பிடித்தபடி படலையத் தாண்டியிருக்கிறான். லுங்கி படலையில் சிக்கிக் கொண்டது. வேறு வழியில்லாமல் லுங்கியை அங்கேயே விட்டுவிட்டு ஒடியிருக்கிறான். கொக் கொக்கென கோழியும் விடாமல் துரத்தியிருக்கிறது.

இசக்கியம்மன் கோவில் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், அவன் வந்த கோலத்தைக் கண்டு என்னமோ எதோ என்று அலறி மிரண்டு, பின்னால் துரத்தி வந்த கோழியைப் பார்த்ததும் பெருங்கூச்சலாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். மாவீரன் ‘ச்சீ..’ என்று அவர்களைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்து தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்தான். வாய்க்காங்கரைமுத்து வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த சொர்ணத்தாயம்மாள் “சின்ன வயசுல இப்படி மணியாட்டிக்கிட்டு இவன் ஒடிப் பாத்தது” என்று பொக்கை வாய் திறந்து சிரித்தார்கள்.

தன் வீட்டுச் சந்து வந்ததும் திரும்பிப் பார்த்தான். கோழியை காணோம். அவமானம் மொத்தமாய் பிடுங்கித் தின்றது. பக்கத்தில் கொடியில் காயப்போட்டிருந்த யாருடைய சேலையையோ இழுத்துப் போர்த்திக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். முதலில் பதறி, பிறகு சிரித்த அவளது மனைவியை ஓங்கி கன்னத்தில் அறைந்து ஒரு ஒரமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டான். அதற்குள் தெரு, மந்தை, வயல்வெளி எல்லாம் தாண்டி தேரிக்காட்டிற்குள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த பெண்கள் வரை யாவரும் சிரித்துக் கிடந்தனர். மாவீரன் வெளியே தலை காட்டவில்லை. எங்கு பார்த்தாலும் சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரியே இருந்தது.

அவனது பரிவாரங்களும் தங்கள் அண்ணனைப் போய்ப் பார்த்து துக்கம் விசாரிக்கத் தயங்கினார்கள். தப்பித் தவறி அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்று யோசித்தார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அவனருகில் உட்கார்ந்திருந்து வந்தார்கள். மாவீரன் குன்னிப் போயிருந்தான். தலை நிமிரவேயில்லை. பள்ளிக்கூடத்திலும் கிண்டல்களும் கேலிகளுமாய்க் கிடந்தது. மாவீரனின் குழந்தைகளுக்கு வெட்கமாய்ப் போனது. தங்கள் தாயிடம் முணுமுணுத்துத் தள்ளினர்.

சில நாட்கள் கழித்து ஒருநாள் சுடலைமுத்து மந்தைக்கு போய்  ஒரு டீ குடித்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், எல்லோரும் அதையேதான் சிந்தித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. சிரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. அவனது எதிரிகளும் அவனைப் பரிதாபம் கொண்டு பார்த்தனர். பொது நிகழ்வுகளில் முகம் காட்டாமல் வீடு, தோட்டம் என்று அடைந்து கிடந்தான். யாராவது மாவீரன் என்று அழைத்தால் கொலைவெறி வந்து அடக்கிக் கொண்டான்.

எதுவும் அறியாத அந்தக் கோழியோ, மாவீரனை வெறும் சுடலைமுத்துவாக்கிய கதையை எழுதுவது போல தரையில் அதுபாட்டுக்கு கிளறிக்கொண்டிருந்தது.

(மீள் பதிவு)

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அண்ணா....

    காலையில் எழுந்து கணிப்பொறியை ஆன் செய்து முதல் பதிவாய் உங்கள் பதிவை படித்தால்...

    மீள் பதிவு என்பது கடைசியில்தான் தெரியும்... இருந்தும் நான் வாசித்தது முதல்முறையா...

    மாவீரன் என்னை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிட்டான்.

    கோழிக்கு ஜெ போடுவோம்.

    பதிலளிநீக்கு
  2. மனதை கிளறிக்கொண்டு இருக்கிறது... அருமையான படைப்பு

    பதிலளிநீக்கு
  3. அருமையிலும் அருமை.

    வாய் விட்டு சிரித்தேன்.

    இப்படித்தான் ஊருக்குள்ளே

    நிறைய மாவீரன்கள் இருக்கிறார்கள்.

    ஆனால் கோழிதான் இல்லையே?!!!!!!!!!!!!!!!!!???????????///

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் ங்க. சிரிச்சு மாளல. உங்க ஒவ்வொரு மீள்பதிவும் என்ன அருமையா இருக்கு. பழையபடி எப்போது எழுதப் போகறீர்கள்.

    பண்டாரவிளை என்றல் நாட்டு வைத்தியமா? எங்க ஊரில் மாவு கட்டு என்பார்கள். அதுவா.

    தேரி என்றல் என்ன? ஊர் பெயரா அல்லது சந்தையா?

    அர்த்தம் கேட்பாதால் உங்கள் வட்டார வழக்கிலுருந்து விலகி வேறு மாதிரி எழுத வேண்டாம். வட்டார வழக்கின் அழகை ரசிக்க முடியாமல் போய்விடும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சுடலைமுத்து மாவீரன் ஆன பிறகு எம்.எல். ஏ . ஆகப் போகிறார் என்று பார்த்தால் இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து விட்டீர்கள் .அருமையாய் இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் வலைப்பதிவில் தலைப்புகளை மட்டும் காட்ட நீங்கள் கீழ்காணும் linkஐ உபயோகித்தீர்களா?

    http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

    பதிலளிநீக்கு
  7. மின்அஞ்சல் செய்ய என்ற வார்த்தையை சேர்க்க‌

    http://ramasamydemo.blogspot.com/2010/09/add-words-email-this-to-friends-near.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!