இங்கிருந்துதான் வந்தான் - 3ம் அத்தியாயம்

 

”முத்தையாண்ணன் பொண்ணு கண்மணி அந்த ஆட்டோக்காரனோட போய்ட்டாளாம்” சண்முகம் வந்து படுத்திருந்த சுப்புத்தாயிடம் சொன்னான்.

”அடப் பாவமே” என்று எழுந்து தலையை முடிந்து கொண்டவர் வேறு எதுவும் பேசாமல் கிழக்கு திசை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். சண்முகமும் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தான்.  

”இப்ப எங்கே இருக்காங்களாம்?” மெல்ல வாயில் வழிந்த எச்சலை துடைத்துக்கொண்டு கேட்டார்.  

“அதெல்லாம் யாருக்குத் தெரியும்? கேள்விப்பட்டேன். வந்து சொன்னேன்.” என்றான். குரலில் கவலையோ, கோபமோ காணவில்லை. ஒரு மாதிரி சலிப்புத்தான் தெரிந்தது.  

“முத்தையாவுக்குத் தெரியுமா?”  

“அண்ணந்தான் சொல்லிச்சு…” என்றான்.  

”இப்ப அவன் எங்க இருக்கான்?”  

“செல்விய நாமக்கல் ஸ்கூல்ல சேக்க பஸ்ஸில் போகும்போது பேசினான்” என்றவன் “சரி நா வர்றேன்.” எழுந்து சென்றான். அதற்கு மேல் அவனுக்கு பேசப் பிடிக்கவில்லை என நினைத்துக் கொண்டார். அந்த ஓட்டு வீட்டின் அறைக்குள்ளேயே மேலும் அடைந்து கிடக்க விரும்பாமல் வெளியே வந்து நின்றார். சண்முகம் தெற்குரத வீதியில் திரும்பிக் கொண்டிருந்தான்.  

முச்சந்தி முனை அது. அங்கிருந்து தெற்கு பக்கம் தெற்கு ரத வீதியையும், வடக்குப் பக்கம் மார்க்கெட்டையும், நேர் எதிரே மேற்கு பக்கம் செல்லும் சந்தின் வழியாக மெயின் ரோட்டையும் பார்க்க முடியும். மார்க்கெட்டை ஒட்டி தனலட்சுமி தியேட்டர் இருந்தது. எதிரே சுவரோடு சுவராக சின்னஞ்சிறிய இடத்தில் வடக்குப் பக்கம் பார்த்த வண்ணம் இருந்த வடக்கத்தியம்மன்னால் சந்துக்கு வடக்கத்தியம்மன் கோவில் தெருவென்றும் பேர்.  பங்குனி மாசத்தின் குறித்த நாளில் ’மாரியாத்தா’ வந்து சுப்புத்தாய்க்குள் இறங்கிவிடுவாள். ஓங்காரக் குரலெடுத்து வெண்கலத் தீச்சட்டியெடுத்து சாமியாடுவார். “ஏ, மாரியாத்தா” பயபக்தியோடு சொல்லிக்கொண்டே குனிந்து முட்டியில் கைவைத்து வாசலுக்கு வெளியே திண்டில் சுப்புத்தாய் உட்கார்ந்து கொண்டார்.  

ஊருக்குள் இங்கு வந்த பிறகு டிரைவருக்கு ஆளே கிடைக்காவிட்டால் யாராவது எப்போதாவது செல்லச்சாமியை விசாரித்து கூப்பிட வருவார்கள். மற்றபடி காலையில் கஞ்சி குடித்தாரென்றால் வெள்ளக்கரை ரோட்டில் வைப்பாற்று ஓரம் அடர்ந்திருக்கும் புளியமரம், வேப்ப மரத்தடிகளில் உட்கார்ந்து தாயம் விளையாடவோ, படுத்துக் கிடக்கவோ போய் விடுவார். சுப்புத்தாயோ வீட்டின் வெளியே சுவற்றில் சாய்ந்து, கால்களை நீட்டி, கண்களை வடக்கத்தியம்மன் கோவில் தெரு தாண்டி மெயின் ரோட்டில் போகிற வருகிற மனிதர்கள், வாகனங்கள் மீது வைத்துக்கொண்டு கடந்த காலங்களை அசை போட்டுக் கொண்டிருப்பார். வைப்பாற்றிலிருந்து வண்டிகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டில் அசைந்து அசைந்து செல்லும் மாடுகள் வாழ்வின் துயரங்களை வழியெல்லாம் சொல்லிக்கொண்டே போவது போலிருக்கும்.  

முன்னைப் போல தீப்பெட்டி வேலைகள் இல்லை. பெரிய முதலாளிகள் மெஷின்களை கம்பெனிக்குள் இறக்கி விட்டார்கள். கட்டை அடுக்குவது, மருந்தில் முக்குவது, தீப்பெட்டி ஒட்டுவது, அதற்குள் குச்சிகளை அடுக்குவது என எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கின்றன. மெஷின் வாங்க முடியாதவர்களும் தங்கள் சக்திக்கு சாத்தூரில் தீப்பெட்டி பண்டல்கள் பண்ணிக் கொண்டுதான் இருந்தார்கள். சுப்புத்தாய் போன்றவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள் வேலை கிடைப்பதே சிரமமாய் இருந்தது. தெரு முழுக்க   வரிசையாக வீட்டு வாசல்களில் ஜனங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் கட்டையடுக்கியது, தீப்பெட்டி ஒட்டியது  எல்லாம் காட்டு புதுத்தெருவில் இருந்த காலத்தோடு முடிந்து விட்டது.  

எழுபத்து நான்கு வயதுக்குள் சுப்புத்தாய் நிறைய ’ஓடிப்போனவர்களை’ பார்த்திருந்தார். கிளுகிளுப்பாகவும், சுவாரசியமாகவும் சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருந்த பேச்சுக்கள் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டிருந்தன. தீப்பெட்டி ஆபிஸில், தெருவில், சொந்தங்களில் என்று விதம் விதமாக கதைகளை பார்த்தும் கேட்டும் இருந்தார்.  நினைவுகளில் இருந்து நிறைய உதிர்ந்தும் கூட போய் விட்டிருந்தன. தன் வீட்டில் அவை நிகழ்ந்தபோது கொஞ்ச நாள் முறுக்கிக் கொண்டு நின்ற மனிதர்கள் மீண்டும் பழையபடி ஆனதையும் பார்த்திருந்தார்.  

காலேஜ் முடித்ததும் மூத்தவன் முருகனுக்கு சொந்தக்காரர் ஒருவர் மூலம் சாத்தூர் தொலைபேசித் துறையில் அத்தக் கூலிக்கு வாட்டர்பாய் வேலை கிடைத்தது, ஆபிஸை பெருக்கி சுத்தம் செய்து குடிக்க தண்ணீர் எடுத்து வைக்க வேண்டும். டிகிரி படித்துவிட்டு இந்த வேலையா பார்க்க வேண்டும் என்று உள்ளுக்குள் குமைந்தாலும் வேறு வழி எதுவும் தெரியவில்லை. கவர்ன்மெண்ட் உத்தியோகம் என்று வெளியில் சொல்லிக்கொள்ள முடிந்தது. அப்போது சாயங்காலங்களில் டைப்ரைட்டிங் படிக்கப் போன இடத்தில் முருகனுக்கும் ஈஸ்வரிக்கும் லவ்வாகி விட்டது.  அந்த பெண் தங்கள் ஜாதிதான் என்பதிலும் தங்களை விட வசதியான குடும்பம் என்பதிலும் சுப்புத்தாய்க்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். ஈஸ்வரியின் அம்மா சாத்தூர் அண்ணா திமுக மளிரணித் தலைவராயிருந்தார், முடியவே முடியாது என கல்யாணத்துக்கு மறுத்தார். ‘கவர்ன்மெண்ட் உத்தியோகந்தான். கொஞ்ச நாளில் பர்மெனெண்ட் ஆகிரும்’ என்று ஜாதியில் முக்கியமானவர்கள் எடுத்துச் சொன்ன பிறகு மனமேயில்லாமல் சம்மதித்தார்.  தன் பங்குக்கு செல்லச்சாமிதான் குடித்துவிட்டு கொஞ்சநாள் அனத்திக் கொண்டிருந்தார். ஈ காக்காய் கூட அவரை சமாதானம் செய்ய முன்வரவில்லை. இந்திரா காந்தி இறந்த நான்காம் நாள் நடந்த கல்யாணத்தில் செல்லச்சாமி மட்டும்தான் இல்லை. அந்த கல்யாணம் நடக்கவில்லையென்றால் அன்றைக்கு முருகனும் ஈஸ்வரியும் ஓடிப் போயிருப்பார்கள்.  

அதிலிருந்து மூன்றாவது வருடம் இளைய மகள் லட்சுமியை சிவகாசியில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்கள். ஒரு வாரத்தில் பக்கத்து வீட்டில் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த குமாரோடு லட்சுமி ஓடிப் போய்விட்டாள். சிவகாசியிலிருந்து பத்து இருபது பேர் வந்து, இன்ன பேச்சுதான் என்றில்லை, வாய்க்கு வந்தபடி பேசிச் சென்றார்கள். சுப்புத்தாய்க்கு திருப்பி பேசுவதற்கு வாய் இல்லாமல் போனது. மாரியாத்தாவின் பேரைத்தான் மனசுக்குள் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நாள் வெளியே தலை காட்ட முடியவில்லை. காட்டு புதுத்தெருவில் இருந்து இங்கு குடி பெயர்ந்தார்கள். ஓடிப் போனவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து அடுத்த வருசம் குழந்தையும் கையுமாய் வந்து நின்றபோது வடக்கத்தியம்மன் கோவில் திருநீற்றையும், குங்குமத்தையும் அவர்கள் நெற்றியில் வைத்து சுப்புத்தாய் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டார்.  

எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் போயிருந்த அப்போதெல்லாம் முத்தையா சென்னையில் மளிகைக் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். “ஏ… மாரியாத்தா” என்னும் பெருமூச்சோடு சுப்புத்தாயால் அந்தக் கல்யாணங்களை ஜீரணிக்க முடிந்தது. கண்மணி விஷயம் முள்ளாய் உறுத்தியது. அந்த கிறுக்குப் பயல் முத்தையா எப்படித் தாங்கிக் கொள்வான் என மருகினார்.  ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் அப்போதுதான் வயதுக்கு வந்தவர்களிடம் இருக்கும் பிடித்தம் பேய்த்தனமாத்தான் இருக்கிறது. ’எந்த ஆத்தா அப்படி பொம்பளைக்குள்ள எறங்கிர்றாளோ’ என நாடியில் கைவைத்து  முன்னெல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறார். அதிலும் கண்மணி இருக்காளே! எவ்வளவு பாசக்காரியோ அதை விட அதிகமாய் பிடிவாதக்காரியுங்கூட. நடக்க ஆரம்பித்த நாட்களிலேயே ஒன்றைச் செய்யாதே என்றால் அதைத்தான் உடனே செய்வாள். தடுத்தால் கையை காலை உதைத்து தரையில் விழுந்து அழுவாள்.  

வெளியிலும் கவனம் தங்கவில்லை. செல்லச்சாமி வந்ததும் விருதுநகருக்கு போக வேண்டும் என்றிருந்தது. தன் பிள்ளைகளை எல்லாம் படிக்க வைத்துவிட வேண்டும் என கிறுக்குப்பயலுக்குள் இருந்த ஆசையைப் பார்த்திருந்தார்.  ஒருமுறை விருதுநகரில் அவன் வீட்டில் தங்கியிருந்தபோது கண்மணி, செந்தில், செல்வி மூன்று பேரும் யூனிபார்ம் போட்டு பைக்கட்டுகளை சுமந்து சென்ற காலையில் முத்தையாவின் கண்களில் பூரிப்பு அப்படித்தான் மின்னிக் கிடந்தது. அவனது நெஞ்சு விம்மிக் கொண்டிருந்தது. பெற்ற தாய் அதற்கு முன்பு  தன் மகனை அப்படி கண்டது இல்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாள் கண்மணி என்பதை எவ்வளவு ஆசையாய் கருப்பட்டி மிட்டாயும், மிளகுச் சேவும் வாங்கி வந்து இதோ இந்த வீட்டில் வைத்து தன்னிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தானே என கலங்கினார். இப்போது கூட விருதுநகருக்குத் திரும்பாமல் செல்வியை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறதுதானே முக்கியமானதாய் இருக்கிறது அவனுக்கு.  

அவருக்கோ, செல்லச்சாமிக்கோ முருகன், லட்சுமி, முத்தையா, சண்முகத்தையெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்று அப்படியெல்லாம்  ஆசை இருந்ததில்லை. அவர்கள் என்ன படித்தார்கள் என்று கூட தெரியாது. காலை ஆறரை மணிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு முருகன் கிளம்புவான். பாண்டியன் சோடாக் கம்பெனியில் இரண்டு பிளாஸ்டிக் பெட்டிகளில்  சோடா பாட்டில்களை எடுத்துக்கொண்டு மூச்சிரைக்க பெடலை மிதித்து வரிசையாய் கடைகளில் போட்டபடி ஏழாயிரம்பண்ணை வரைக்கும் போவான். திரும்பும் வழியில் தண்ணி கண்ட இடத்தில் குளித்து, சைக்கிளில் சுருட்டி வைத்திருக்கும் பேண்ட் சட்டையை போட்டுக்கொண்டு காலேஜ்க்கு போவான். அவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமா என்றுதான் அப்போது தோன்றியது. அவனை விட எட்டு வயதுக் குறைவான முத்தையா ராஜாமணி நாடார் நினைவு துவக்கப்பள்ளியில் ஐந்து வரை படித்துவிட்டு ஆரிய வைஸ்ய பள்ளியில் ஆறாவது படிக்கும் போது ஒருநாள் “நான் இனி படிக்கப் போகவில்லை” என்று  காட்டுப் புதுத்தெருவில் பழனிச்சாமித்தேவர் ரொட்டிக்கடைக்கு வேலைக்குப் போனான். அந்த முத்தையாவுக்கு படிப்பின் மீது இவ்வளவு ஆசை எங்கிருந்து வந்தது என்பதை சுப்புத்தாய் பிறகு போகப் போகத்தான் அறிந்திருந்தார்.   

முத்தையா வேலைக்குப் போனதும் சின்ன வயதிலேயே எம்மகனுக்கு பொறுப்பு வந்துவிட்டது என்று அக்கம் பக்கத்தில் பெருமையாய் சொல்லிக்கொண்டார். சென்னையில் மளிகைக் கடைக்கு வேலைக்குச் சென்ற பிறகு அவன் இல்லாத வீடு பாடாய் படுத்தியது.  எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முருகனும், சண்முகமும் வீட்டில் தன் கையால் சாப்பிடுகிறார்கள், முத்தையாவோ எங்கேயோக் கிடந்து, யாரையோ எதிர்பார்த்து கஷ்டப்படுகிறானே என்று புலம்புவார். இரவில் சோடியம் விளக்கின் மஞ்சள் வெளிச்சம் நிறைந்த மெயின் ரோட்டில் வந்து அசையாமல் அப்படியே நிற்கும் கழுதைகள் போல வாழ்க்கை நினைவுகளைக் கொண்டிருந்தன.  

சுப்புத்தாய் கல்யாணமாகி வேறு ஊருக்குப் போய்விடக் கூடாதே என்று பெற்றவர்களும், கூடப் பிறந்தவர்களும் வருச நாட்டிலிருந்து செல்லச்சாமியைக் கல்யாணம் செய்து சாத்தூரிலேயே வைத்துக்  கொண்டார்கள். அம்மா சிறு வயசிலேயே இறந்து விட, இன்னொரு அம்மாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுக்கத்தில் வளர்ந்த செல்லச்சாமிக்கு சாத்தூருக்குப் போவது கஷ்டமாய் இல்லை. மனைவி, குழந்தைகள் என தனக்கென்று குடும்பமாய் இருந்தாலும் தனித்து விடப்பட்ட மனநிலையில், எதையோ இழந்தவராய்த்தான் செல்லச்சாமி இருந்தார். குடித்து விட்டு சரியாய் வேலைக்கு வருவதில்லையென்று அவரை  டிவிஎல்லெஸ் கம்பெனியில் டிரைவர் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். மார்க்கெட்டை ஒட்டிய தனலட்சுமி தியேட்டர் பக்கம் இருந்த வீடும், படந்தாலில் இருந்த கொஞ்ச நிலமும் கைவிட்டுப் போன பிறகுதான் முத்தையா பிறந்தான். தரையில் பரப்பப்பட்ட தீக்குச்சிகளாகவும், தீப்பெட்டிகளாகவும்தான் நாட்கள் காய்ந்து கொண்டிருந்தன. நாள் கணக்கில் லாரி ஒட்டிவிட்டு, வீடு வந்து குடித்துக் கிடக்கும் செல்லச்சாமியின் உடல் அனலாக கொதித்தது. வேர்க்க விறுவிறுக்க மகன்கள் எல்லாம் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தனர். நாளை என்பது மட்டுமே நினைவில் தகித்துக் கொண்டிருந்தது. சுப்புத்தாய் சாத்தூரிலேயே இருக்க, அவரது குழந்தைகள் ஒவ்வொருவராய் சாத்தூரை விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.  

கல்யாணமான கொஞ்ச நாளில் முருகன் வாட்டர் பாயிலிருந்து மஸ்தூர் ஆனான். நிரந்தர வேலை இல்லை என்றாலும், நிரந்தர ஊழியருக்கான ஊதியம் கிடைத்தது. விருதுநகருக்கு மாற்றலாகிப் போய்விட்டான். அங்கு யூனியனில் சேர்ந்து கொடி பிடித்து ரோட்டில் நின்று கோஷம் போடுவதாக  முருகனைப் பற்றி பேச்சுக்கள் வந்தன. கறிக்கடை மாயாண்டி மெனக்கெட்டு வீட்டுக்கு வந்து “சித்தி, நீங்க சொன்னீங்கன்னுதான் முருகனை டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல எங்கப்பா சேத்து விட்டாங்க. இப்ப பாருங்க.  கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க கூட சேந்துட்டு திரிறான். இதெல்லாம் உருப்படுறதுக்கா?” கேட்டான். சுப்புத்தாய்க்கு திகைப்பாய் இருந்தது. ’கஷ்டப்பட்டு படிச்சதுக்கு இப்பத்தான் ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதயும் தொலைச்சிட்டு நிப்பானோ’ என திகைத்தார்.    

சாத்தூரில் வீட்டு நிலைமையும் மோசமாகிக் கொண்டிருந்தது. தெற்குரத வீதியில் இருந்த பாபு பிரதர்ஸ் ஆபிஸில் சண்முகம் காலையில் போய் பெருக்கி தண்ணீர் எடுத்து வைத்து விட்டு ஏவிஎஸ் ஸ்கூலில் படிக்கச் சென்றான். மார்க்கெட்டிலும், மெயின் ரோட்டுக் கடைகளிலும் சில்லறையாய் வாங்கும் எண்ணெய்க்கும், காய்கறிகளுக்கும்  ’மாரியாத்தாவிடம்’ துட்டு வாங்க மாட்டார்கள். அதுவே பெரிய உபகாரமாக இருந்தது.  

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பனிரெண்டு வருடங்கள் கழித்து மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்த சமயத்தில் முத்தையா சென்னையிலிருந்து வந்து தன் அண்ணன் முருகன் ஏற்கனவே பார்த்த வேலையை எடுத்துக் கொண்டான். பாண்டியன் சோடா கம்பெனிக்கு காலையில் சைக்கிள் பெடலை அழுத்திப் புறப்பட்டான். சத்திரப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, சூரங்குடி, லஷ்மியாபுரம், சங்குரெட்டியாபட்டி, ஏழாயிரம்பண்ணை சென்று திரும்புவான். கிறுக்குப்பயல் மீண்டும் தன் அருகிலேயே வந்தது சுப்புத்தாய்க்கு ஆறுதலாய் இருந்தது. முத்தையா சென்னைக்குப் போனதற்கும், எட்டு வருசம் கழித்து திரும்பி வந்ததுக்கும் இருந்த காரணம் ஒன்றுதான் என்பதை பெத்த வயிறு அறிந்து கொண்டது. வீடு தடுமாறிய போதெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு தாங்கிக் கொள்ள அவனாகவே முன்வந்தவன். அவனைப் பற்றி அவருக்குத்தான்  தெரியும். சின்னப் பெண் கண்மணிக்கு என்ன தெரியும்?  

திரும்பி வந்த முத்தையாவிடம் புதுசாய் ஒரு பழக்கத்தை சுப்புத்தாய் கண்டார். கையில் புத்தகங்களைக் கொண்டு வருவதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவைகளைப் படிப்பதும் ஆச்சரியமாய் இருந்தது. கேட்டதற்கு கதைப்புத்தகம் என்றான். மேற்கு ரத வீதியில் மார்க்கெட்டுக்கு அருகில் இருந்த சிவந்தி சைக்கிள் கடையில் வேலை பார்த்த கண்ணன், அப்புறம் ஆதி, இன்னும் சில பையன்கள் வடக்கத்தியம்மன் தெருவில் ராத்திரியில் மணிக்கணக்கில்  உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். ’ராஜேஷ்குமார் பேரவை’ என்று அவர்கள் ஆரம்பித்தபோது சுப்புத்தாய்க்கு வேடிக்கையாய் இருந்தது.  ஒருநாள்  சாயங்காலம் சுப்புத்தாயை வந்து பார்த்த முருகன் “நீ சொல்ற மாதிரி முத்தையா சரியான கிறுக்குப்பயதான் போலுக்கு” நக்கலாகச் சொன்னான். அவரோ புத்தகங்களை இப்படி கூடவே வைத்திருக்கிற ஒருவன் எப்படி படிப்பை விட்டு வேலைக்குப் போனான் என்று யோசிக்க ஆரம்பித்தார்.  

சுப்புத்தாய்க்கு வாழ்க்கை கொஞ்சம் நிதானமானது அந்த நாட்களில்தான். முத்தையாவுக்கு ஒரு பெண் பார்த்து கல்யாணம் முடித்து விட்டால், பிறகு சண்முகம் மட்டும்தான், தங்கள் கடன் முடிந்தது என்னும் நினைப்பே நிம்மதி தந்தது.  சாயங்காலங்களில் தெருவிளக்குகள் போட்டதும் மனம் ஆசுவாசமடைந்தது.  

ராஜா எலக்டிரிக்கல்ஸில் நடந்த அந்தக் கொலை எல்லாவற்றையும் சிதைத்துப் போட்டது. அடுத்து அடுத்து என சில நாட்களில் பரவிய செய்திகளில் மனித ரத்தத்தின் வாடையடித்தன. சாத்தூரில் தொடங்கிய ஜாதிக் கலவரம் அங்கங்கு தொட்டு சுற்றிலும் பரவியது. பகல் மட்டுமே மனிதர்கள் நடமாட்டங்களுடன் இருந்தது. மாலையிலேயே வைப்பாற்றங்கரை இருளடைந்தது. இரவு யாருமற்று நின்றது. மனிதர்களோடு ஜொலித்துக் கொண்டிருந்த முக்கனாந்தல் வெட்ட வெளியாகிப் போனது. ஊரின் கனத்த அமைதியைக் கிழிக்க முடியாமல் நடுநிசியில் திருவள்ளுவர் பஸ்கள் மெயின் ரோட்டில் தடதடத்து ஓடி மறைந்தன. . வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என்று ஜாதி சங்கத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சுப்புத்தாய்க்கு பதறியது. விருதுநகர் ஆனைக்குட்டத்தில் மூத்த மகள் சொர்ணத்தின் வீட்டுக்கு முத்தையா அனுப்பி வைக்கப்பட்டான்.  

தாய்மாமா குருசாமி புண்ணியத்தில் ரேஷன் கடையில் அவன் வேலைக்குச் சேர்ந்ததும்  இருக்கன்குடிக்கு நடந்தே சென்று மாரியாத்தாவை பார்த்து வந்தார். ரேஷன் கடையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் அதுகுறித்து  முத்தையாவிடம் ஒருநாளும் சுப்புத்தாய் கேட்டதில்லை.  வீட்டில் அரிசிக்கும், சீனிக்கும், மண்ணென்ணெய்க்கும் குறைவில்லாமல் போனது. விருதுநகரில் முருகன் வீட்டுக்கும் ரேஷன் கடையிலிருந்து முத்தையா கொடுத்து அனுப்புவான். பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்த சண்முகத்திற்கு அவ்வப்போது செலவுக்கு கொடுத்து உதவினான். அதிமுக வென்று ஜெயலலிதா அப்போது முதல் முறையாய் முதலமைச்சராகியிருந்தார்.  

முத்தையாவின் போக்கும் நடவடிக்கைகளும்தான் பயமுறுத்த ஆரம்பித்தன. தினமும் தண்ணியடிக்கிறான், சமாதியில் போய் உட்கார்ந்து குறி சொல்கிறான் என்பது வதைத்தது. இன்னொரு செல்லச்சாமியாகி விடுவானோ என்றிருந்தது. தூக்கம் வராமல் தனலட்சுமி தியேட்டரின் ஓடும் சினிமாச் சத்தத்தோடு  புரண்டு புரண்டு படுத்தார். வடக்கத்தியம்மன் கோவில் திருநீற்றை எடுத்து தனது நெற்றியெல்லாம் பூசிக்கொண்டார். பெரிய கொல்லப்பட்டியில் சீனியம்மாவைக் கண்டு அவசரம் அவசரமாக முத்தையாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார். வருசம் ஒரு குழந்தை என வரிசையாக பெற்றாலும், குடியும் சீனியம்மாவுக்கு அடியும் குறைந்த பாடில்லை. மூன்று பிள்ளைகளோடு சீனியம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா? சாத்தூரிலிருந்து பதைபதைப்போடு டவுண்பஸ்ஸில் விருதுநகர் சென்று முத்தையாவை சத்தம் போட்டு சீனியம்மாவுக்கு ஆறுதலாய் இருப்பார். தனலட்சுமி தியேட்டரில் சின்னக்கவுண்டர் படம் பார்த்த அன்று வழியில் தன் கண்ணில் படாமல் சீனியம்மா இருந்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்திருக்கிறார். “உலகந் தெரியாம பாவம் போல இருந்த ஒரு பொண்ணோட  வாழ்க்கைய அநியாயமா நீதான்  நாசமாக்கிட்ட.” முருகன் பல தடவை குத்திக்காட்டியிருக்கிறான்.  

டிப்ளமோ படித்து முடித்த சண்முகம் மஸ்கட்டில் வேலை கிடைத்து சென்றான்.  சுப்புத்தாய்க்கு மாதா மாதம் இருநூறு ருபாய் முருகனின் பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தான். முருகனும், சண்முகமும் எப்படியோ படித்து எதோ ஒரு வேலையில் சேர்ந்து தங்கள் காலத்தை நல்லபடியாய் தள்ளி விடுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது. முத்தையா மட்டும் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என கவலைப்பட்டார்.  

”ஓங் கிறுக்குப்பய இப்ப ரவுடிப்பய ஆய்ட்டாம் போலுக்கு” வெறுத்துப் போய் முருகன் சுப்புத்தாயிடம் சொன்னான். குடிப்பவர்களைக் கண்டால் அவனுக்கு ஆகவே ஆகாது. செல்லச்சாமியைப் பார்த்து வளர்ந்த வெறுப்பு அது. அப்போது முருகன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு சாயங்காலம் நடராஜா தியேட்டரில் படம் பார்க்க அப்போதுதான் கல்யாணமாகியிருந்த மூத்த அக்கா சொர்ணமும் அவளது மாப்பிள்ளையும் புறப்பட்டு வெளியே சென்றார்கள். அந்தத் தெருவில் இருந்த கவர்ன்மெண்ட் டாக்டர் சொர்ணத்தை பார்த்த பார்வை சரியில்லையென்று தண்ணியில் இருந்த செல்லச்சாமி சண்டைக்குப் போய் அசிங்கமாய் பேசி விட்டார்.  குடித்துவிட்டு ரகளை செய்கிறார் என்று டாக்டர் புகார் அளித்ததும், செல்லச்சாமியை போலீஸார் பிடித்து சென்று விட்டார்கள். பக்கத்தில் தங்கள் ஜாதியில் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரை அழைத்துக் கொண்டு பதிமூன்று வயது முருகன் ஸ்டேஷனுக்குச் சென்றான். ஸ்டேஷனில் கூனிக் குறுகி நின்ற செல்லச்சாமியையும், கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசிய போலீஸையும் பார்த்து அவமானத்தில் உறைந்து போனான். அன்றிலிருந்து அப்பாவிடம் அவன் பேசுவதே இல்லை. முத்தையாவிடம் பேசுவதையும் இப்போது குறைத்துக் கொண்டான்.  

தாமாகாவோடு இணைந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முத்தையாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிகழ்வும் அப்போதுதான் நடந்தது. ரேஷன் கடைக்கு வழக்கமாய் வந்து அரிசியும், சீனியும் வாங்கிச் சென்று கொண்டிருந்த பால்ராஜ் ஒருநாள் “ஏன் தம்பி, நீங்க எட்டாம் வகுப்பு டைரக்டா எழுதக் கூடாது?” என்று கேட்டார். விருதுநகர் கலெக்டர் ஆபிஸில் கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் அவர். சிரித்துக் கொண்டு, “நா எப்படி இனும..” என தயங்கியவனை, “நானுந்தான் பாக்குறேன். புத்தகங்கள் படிக்கிறீங்க. சின்ஸியரா இருக்கீங்க. ஒங்களால முடியும். எழுதிப் பாருங்க..” என்று மேலும் சொல்லவும் யோசிக்க ஆரம்பித்தான். அடுத்த நாள் ஆபிஸிலிருந்து வரும்போது எட்டாம் வகுப்பு பரிட்சை நேரடியாக எழுதுவதற்குரிய விண்ணப்பங்களை கொடுத்து அதை நிரப்புவதற்கு உதவி செய்தார்.  

படிக்கிற காலத்தில் படிக்காமல், கல்யாணம் பண்ணி, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு எட்டாம் வகுப்பு எழுதுவதை அறிந்தவர்கள் பலரும் முதலில் கிண்டல் செய்தார்கள். ‘அட கிறுக்குப் பயலே, இது என்ன கூத்து’ என்றுதான் சுப்புத்தாய்க்கும் இருந்தது. சரியாக அந்த நேரத்தில்தான் ‘ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சாலைப் பணியாளர்கள் வேலை’ என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். விருதுநகர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராயிருந்த பாட்சா ஆறுமுகம், வேலைக்கு நான் கேரண்டி என்று சொல்லி முத்தையாவை விண்ணப்பிக்கச் சொன்னார். ரேஷன் கடையில் தினமும் முன்னூறு நானூறு வரும்படி கிடைத்தது. சாலைப் பணியாளார்களுக்கு ஒரு மாசத்துக்கே அறுநூறு ருபாய் போலத்தான். முத்தையா யோசித்தாலும், ‘கவர்ன்மெண்ட் வேலை’ என்பதே பெரிதாய் தெரிந்தது. முன்பணம் கட்டுவதற்கு மஸ்கட்டிலிருந்து சண்முகம் இருபதாயிரம் ருபாய் அனுப்பினான்.  

ஃபேனுக்கடியில் உட்கார்ந்து ரேஷன் கடையில் வேலை பார்த்த தன் மகன் திரும்பவும் ரோட்டில் வெயிலில் கிடந்து கஷ்டப்படுகிறானே என சுப்புத்தாய் தவித்தார். ஒரு வகையில் அதுவும் நல்லதாகவேப் பட்டது. பணம் கையில் புரளாததால் குடியும் அவனிடம் குறைந்து போயிருந்தது. இரண்டு முறை பெயிலானாலும் தக்கி முக்கி முத்தையா எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணிய நேரத்தில்தான் கண்மணியும் ஸ்கூலுக்கு போக ஆரம்பித்திருந்தாள்.  

சின்னவன் சண்முகத்திற்கு தன் மூத்த மகள் சொர்ணத்தின் மகள் கனகத்தை திருமணம் செய்து வைத்து, தனக்கு இருந்த எல்லாக் கடன்களையும் அடைத்த நிம்மதி கொஞ்ச நாள் கூட சுப்புத்தாய்க்கு நிலைக்கவில்லை. இரண்டாவது தடவையாக முதலமைச்சராக வந்த ஜெயலலிதா ஒரே நாளில் சாலைப் பணியாளர்கள் அனைவரையும் வேலையை விட்டு வெளியே அனுப்பினார். பத்தாயிரம் குடும்பங்கள் செய்வதறியாமல் நிலைகுலைந்து போயின. சாலைப் பணியாளர்கள் தெருவில் இறங்கிப் போராடினர். அந்த சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவன் முத்தையா என்றும் அவன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டதாகவும் கேள்விப்பட்டார். தண்ணியடிப்பதை முழுசாக நிறுத்திவிட்டு ஊர் ஊராகச் சென்று கொடி பிடித்து  போராட்டங்களில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தான். பேப்பர்களிலும், டிவிகளிலும் வரும் செய்திகளைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள்.  கிறுக்குப் பயலை பார்ப்பதே சுப்புத்தாய்க்கு அபூர்வமானது.  

மூன்றரை வருட போராட்டங்களின் முடிவில் சாலைப் பணியாளர்களை ஜெயலலிதா மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டதாக அறிவித்தார். அத்தனைக்கும் மத்தியிலும் முத்தையா பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியிருந்தான்.  தொடர்ந்து ப்ளஸ் டூ, பி.காம், எம்.காம், என்சீனியரிங் டிப்ளமா என வாயில் நுழையாத படிப்பையெல்லாம் முத்தையா படித்து முடித்ததும் மகனுக்கு என்ன கிறுக்கு என்பது தெரிந்தது. உள்ளுக்குள் இத்தனை ஆசையை வைத்துக்கொண்டுதான் அந்த சின்ன வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றானா என குற்ற உணர்வு வந்தது. ரோடு இன்ஸ்பெக்டராகி இன்று ஜூனியர் எஞ்சீனியராக பேண்ட் சட்டை போட்டு, சட்டைப்பையில் பேனா குத்தி நடந்து வரும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஏங்கிறுக்குப் பயலே, கிறுக்குப்பயலே’ என கட்டிப் பிடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. படிப்பு ஒரு மனிதனை எப்படி உயர்த்துகிறது என்பதை அவருக்கு முத்தையா காட்டி விட்டான்.  

முருகன் தன் தம்பியைப் பற்றி என்ன சொல்வான் என்று அறிய ஆசையாய் இருந்தது. சண்முகம் கல்யாணத்தோடு இந்த குடும்பத்திலிருந்து ஒதுங்கி விட்டான். சென்னைக்குச் சென்று ஆறு வருடங்களாகிவிட்டன. அம்மா என்று ஒருத்தி இருப்பதையே அவன் மறந்து விட்டான் போல. தான் படிக்கவில்லை, தன் அண்ணன் முருகனைப் போல ஒரு மரியாதையுடன் தன்னை யாரும் பார்க்கவில்லை என்ற புழுக்கத்தில்தான் முத்தையா அப்படி குடித்துத் திரிந்தானோ என்றெல்லாம் கூட தனலட்சுமி தியேட்டரின் சினிமா சத்தத்தோடு படுக்கையில் கிடந்து யோசித்திருந்தார். ஒரு இரவில் எழுந்து “ஏ மாரியாத்தா” என பெரிதாய் குரலெடுத்து அழுதார். பதறி எழுந்த செல்லச்சாமிக்கு அவரது அழுகை வித்தியாசமாயிருந்தது. இப்போதும் சுப்புத்தாய்க்கு அப்படி அழத்தான் தோன்றியது.  

சட்டென்று கோபத்தில் கை நீட்டுகிற முத்தையா இப்போது எவ்வளவு பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்கிறான். ஒருநாளும் கண்மணியைக் கடிந்து கூட பேசவில்லையே. ”நீ மொதல்ல படிச்சு முடிம்மா. அப்பாவே உனக்கு அந்தப் பையன கல்யாணம் பண்ணி வைக்கேன்” என்றுதானே சொன்னான்.  

“ஏஞ்செல்லம் கண்மணி! ஏம்மா இப்படி பண்ணிட்டே..”  

செல்லச்சாமி தெற்குரத வீதியில் இருந்து திரும்பி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.  

(தொடரும்)  

1ம் அத்தியாயம்      2ம் அத்தியாயம்



Comments

3 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. எளிய மனிதனின் வாழ்வியல் பாறையே கலை படைப்பாக செதுக்கி வரும் தோழர்க்கு என் தாய் மீது உள்ள அன்பை அப்படியே தருகிறேன்

    ReplyDelete

You can comment here