சினிமா : இரண்டு அஞ்சலிகளும், ஒரு ஆராவாரமும்

murali ழகித் தெரிந்த ஒருவர் பிரிந்துவிட்டதாய் இருக்கின்றன நடிகர் முரளியின் மரணத்தையொட்டி வரும் நினைவுகள். இதுதான் சினிமாவில் அவர் வந்து போனதன் அடையாளம் போல. சிரிப்பு, கோபம், சோகம் எல்லாம் அவருடைய குழந்தைத்தனமான முகத்தில் சட்சட்டென்று வந்து செல்லும். தனது சாதாரணத் தோற்றத்தினால், இயல்பான நடிப்பினால் நம்மை, நமக்கு மிகத் தெரிந்தவர்களை அவர் இனம் காட்டிக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.

‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ என போகிற வருகிற வழியெல்லாம் பாட்டு ஒலித்துக் கிடந்தாலும், பகல்நிலவு படத்திலிருந்துதான் அவரை கவனிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்த சில படங்களில் நெருக்கமானவராகத் தெரிந்தார். போஸ்டரில், பத்திரிகைகளில் பார்க்க நேரிடும்போது முரளி படமென்றால் பார்க்க வேண்டும் என நினைப்பு வரும். எத்தனை பார்த்தேன் என்று ஞாபகமில்லை. வண்ணக் கனவுகள், வெற்றி கொடி கட்டு, புது வசந்தம், ஊட்டி, இரணியன் என யோசிக்க யோசிக்க ஒன்றொன்றாக வருகிறது. அவரது முக்கியப் படங்களில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதனாக, வாழ்வுக்குப் போராடும் இளைஞனாக, கையில் கிடைத்த அற்புதத்தை தொலைத்தவனாக, தோற்றுப்போனவனாக நிழலாடிக் கொண்டிருக்கிறார். அபத்தமான படங்களென்றாலும் அவர் தனித்து தெரிந்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் பூவிலங்கு படத்தின் விமர்சனம் வந்திருந்தது. ‘ரஜினிகாந்த், விஜய்காந்த் மாதிரி ஆண்மையோடு காதலிக்கவும், வீரத்தோடு சண்டை போடவும், வருங்காலத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு பூவிலங்கு முரளி நல்ல ஆறுதல்!’ என அதில் சொல்லியிருந்தார்கள். அப்படி ஒரு பிம்பம் அவரைச் சுற்றி எழாமல் இருந்ததே முரளியின் வெற்றியாகத் தெரிகிறது.

 

swarnalathaதினெட்டு வருடங்களுக்கு முன்பு, சங்க உறுப்பினர்களை நேரில் சந்திக்க  எங்கள் வங்கிக் கிளைகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்துகொண்டு இருந்தோம். ராமு என்னும் தோழர் கையோடு ஒரு கேசட் கொண்டு வந்து, காரில் ஒரு பாடலையேத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு வந்தார். “போவோமா” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலில் இருந்த உற்சாகத்தில், இயற்கையை ரசிக்கும் பரவசத்தில் நானும் நுழைந்து திளைத்துப் போனேன். “யாருங்க பாடியது” என்று கேட்க அந்தத் தோழர்தான் “சொர்ணலதா” எனச் சொல்லி அப்போது வந்திருந்த சின்னத் தம்பி படம் பற்றியும் சொன்னார். அன்றிரவு அந்தப் பாட்டுக்காகவே காரைக்குடியில் படம் பார்த்தோம். அன்றிலிருந்துதான் சொர்ணலதாவின் குரலை கண்டுகொள்ளப் பழகினேன்.

அவரது குரலில் ஒரு ஏக்கமும், தனிமையும் மிக மெல்லிய அடிநாதமாய் ஓடிக்கொண்டு இருக்கும். “நாளை இந்த நேரம் பார்த்து ஓடிவா நிலா” பாடலுக்குப் பிறகு, அப்படியொரு வெளியில் என்னை மெல்லிய சிறகாக்கி மிதக்கவிட்டது ‘மாலையில் யாரோ’தான். வள்ளியின் ‘என்னுள்ளே என்னுள்ளே’வும், அலைபாயுதேவில் வரும் ‘எவனோ ஒருவனு’ம் இந்த ஜென்மத்தில் நினைவில் இருந்து அகலாது. காலத்தை ராகத்திற்குள் இழைத்து ஓடச்செய்கிற அபூர்வமான குரல் அவருடையது. காற்றில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

 

rajini-milk ந்திரனில் போய் கால்வைத்துத் திரும்பிய ஆம்ஸ்ட்ராங்கைவிட எந்திரனில் நடித்த ரஜினிதான் பெரிய சாதனை செய்திருக்கிறாராம். அண்டசராசரங்களும் ஆரவாரித்துப் பொங்குவதைப் போன்ற பிரமையை இந்த சன் குழுமம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. எந்திரன் பட டிரெய்லருக்கு அவர்கள் படுத்தியிருக்கிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 150 கோடி ருபாயை கொட்டி, அதைவிட பன்மடங்கு திரும்பி எடுக்க பெரும் கரைச்சல் செய்கிறார்கள். திருச்சியில், கோவையில், நெல்லையில், சேலத்தில், மதுரையில், சென்னையில் என்று எந்திரன் பட டிரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புகள் எப்பேர்ப்பட்டவை! கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் என்ன, அர்ச்சனை என்ன, மேளம் என்ன, தாளம் என்ன?  அகில உலகமும் தமிழ் மக்களை அண்ணாந்து பார்க்கிறார்களாம். தமிழர்களது இத்தகு பெருமைகளைத்தான் வாய் ஓயாமல் பேசிக்கொள்கிறார்களாம்.

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியென்றால் மூத்த குடிதான்.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //தமிழ் மக்களை அண்ணாந்து பார்க்கிறார்களாம்//

    கட்அவுட் உயரம் அதிகமா இருந்து இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. முரளியிடம் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் ஒரு சோக இழையோடும் முகம் அகலாதிருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
    பூமணி என்று ஞாபகம், மிக வித்தியாசமான கதை...பிரகாஷ் ராஜ் முரளியின் சகோதரன், ஆனால் வில்லன். தந்தையை ஈவிரக்கமின்றிக் கிணற்றில் தள்ளிக் கொன்று விடும் சகோதரனை, வேறு வழியின்றி இறுதிக் காட்சியில் தானே தண்டிக்க வேண்டிய பாத்திரம் முரளிக்கு. பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு, பட்டணத்து மனைவியாய் அருவருத்துக் கொண்டே உடன் வாழும் தேவயானி - இந்தப் படம் அதிகம் பேசப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், முரளி அவ்வளவு எதார்த்தமாக நடித்திருந்தார்.
    மிகச் சிறந்த நடிகர் வரிசைக்கெல்லாம் அவரை யோசிக்க முடியாது. ஆனால், கருப்பு வைரமாக அவர் மின்னிய சில படங்களை மறக்க முடியாது. அவரது படங்களின் பாடல்கள் எல்லாமே சிறப்பாக அமைந்திருப்பவை என்று எனது கிளையில் பணியாற்றும் ஒரு பெண் தோழர் குறிப்பிட்டார்.

    "போறாளே பொன்னுத் தாயி..." ஒன்று போதும், சொர்ணலதா நினைவிற்கு! சுத்தமான தென் தமிழ்நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளும், சொற்கோலமும் உள்ளடக்கிய - சிரமமான பல இடங்களைக் கொண்ட ஓர் உருக்கமான அந்தப் பாடலைக் கேட்பவர் கரைந்துருகும்படி என்னாமாய் அவர் இழைத்து உருவாக்கிக் கொடையாக அளித்துவிட்டுப் போயிருக்கிறார்.

    பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பல பெண்மணிகள் தமிழ்த் திரையுலகிற்கு வழங்கியிருக்கும் அற்புதப் பாடல்களைப் பற்றி எழுத இடம் காணாது.

    உள்ளிருந்து சாதாரணமாகக் காற்றை விடுவித்துக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கானவர்கள் மத்தியில், அதை இசையாகப் பொழிந்து தள்ள வரம் பெற்று வந்திருக்கும் அரிய சிலரில் ஒருவராக உயர்ந்த சொர்ணலதா நுரையீரல் பிரச்சனையாலே உயிர் நீத்தது துயரம் அளிப்பது.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  3. // ‘ரஜினிகாந்த், விஜய்காந்த் மாதிரி ஆண்மையோடு காதலிக்கவும், வீரத்தோடு சண்டை போடவும், வருங்காலத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு பூவிலங்கு முரளி நல்ல ஆறுதல்!’ என அதில் சொல்லியிருந்தார்கள். அப்படி ஒரு பிம்பம் அவரைச் சுற்றி எழாமல் இருந்ததே முரளியின் வெற்றியாகத் தெரிகிறது. //

    உண்மை. மிகவும் எளிமையான நடிகர்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு மிகவும் பிடித்தப் பாடகி ஸ்வர்ணலதா. அவரின் மறைவு என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு.

    வருத்தம் நிறைய இருக்கிறது.

    http://akilawrites.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. ரஜினிக்கு பாலாபிஷேகம் செய்யும் போஸ்டரைப் பார்த்தாலே எரிச்சலாத்தான் இருக்கு. படத்தில்தானே நடித்தார். ஏதோ புது அவதாரம் எடுத்த மாதிரி..நாடு உருப்பட்டுடும்.

    கதைக்காக நடித்த ரஜினி காணாமல் போய், இப்போது ரஜினிக்காக கதை என்றாகி விட்டது. பாலாபிஷேகம் பண்ணி, கொஞ்சம் சூடம் ஏத்தி.. அப்பப்பா!!

    படம் வெளிவந்து கொஞ்சம் நன்றாக ஓடிவிட்டால் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தி விடுவார்கள் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  6. முரளியின் மென்மையான சில படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.ஒரு படம் வெற்றி பெற்றால் உடனே தாங்கள் அக்ஷன் படத்தில் நூறு பேரை நொறுக்கி அடித்து தள்ளுகிற ஹீரோவாக வேண்டும் என்று இளம் தமிழ் பட ஹீரோக்கள் நினைக்கிறார்கள்.
    ஆனால் முரளி போன்றோருக்கும் தமிழ் படவுலகில் ஒரு இடம் உண்டு.எம் ஜி ஆர் காலத்தில் முத்துராமனுக்கும் ஜெமினிக்கும் இடம் இருந்தது.ரஜினிகாந்த் காலத்தில் சிவகுமாருக்கும் மோகனுக்கும் முரளிக்கும் இடம் இருந்தது விஜய் அஜித் மாதிரித்தான் வரவேண்டும் என்று நினைக்காமல் வித்தியாசமாக நடித்தால் பரத் ஆர்யா தனுஷ் ஆர்யா போன்றோர் தங்களுக்கென்று இடம் தமிழ் சினிமாவில் தக்க வைக்கலாம்.விஜய் அஜித் படங்கள் எல்லாம் அடுத்தடுத்து தோல்வி என்பது வேறு விஷயம் .கோடிகளைக் கொட்டி எடுக்கும் மசாலா படங்களில் நடிக்காமலே ரசிகர்களின் மனத்தில் இடம் பெறலாம் என்பதற்கு முரளி ஒரு உதாரணம்.

    --வானதி

    பதிலளிநீக்கு
  7. முரளி, சுவர்ணலதா இருவரும் மறைந்தும் மற்றவர்களின் நினைவுகளில் நிற்பது அவர்கள் வாழ்ந்ததற்கு சாட்சி.

    எந்திரன் மிகச்சிறந்த வியாபார தந்திரம்.

    பதிலளிநீக்கு
  8. முரளியும் சொர்ணலதாவும் என்ன சாதித்து விட்டார்கள்? இறந்துவிட்டார்கள் என்னும் ஒரே காரணத்தைத் தவிர அவர்களிடம் இருந்த சமூகச் சிந்தனையோ செயல்பாடோ பற்றி நம்மால் பேச முடியுமா? உலகை நிமிர்த்தும் நெம்புகோலைக் கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களால் என்ன பெரிய பயன் கிடைத்துவிட்டது? எத்தனையோ பிற துறைகளில் இருந்து கொண்டு மக்களுக்கு உழைக்கும் மக்களைச் சிந்திக்கும் மனிதர்களைப் பற்றி நீங்கள் எழுதலாமே! சென்னை போன்ற பெருநகரங்களில் தொழில் நடத்திப் பணத்தின் பின் அலையாமல் உங்களுடைய ஊரில் இருந்து கொண்டு படக்கடை மூலம் ஓரளவு சம்பாதித்துக் கொண்டு உங்களுடைய குறும்படங்களுக்கும் உதவி வரும் பிரியா கார்த்தியைப் போன்றவர்களுடன் ஒப்பிட முரளிக்கும் சொர்ணலதாவுக்கும் சிறிதளவாயினும் சமூகச் சிந்தனை உண்டா? இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இருவரும் இறந்துபோகவில்லை எனில் தீராத பக்கங்களுக்கு வந்திருக்கவே மாட்டார்கள் தாமே!

    பதிலளிநீக்கு
  9. எந்திரன் உருவாக்க விரும்புவது மனிதர்களை அல்ல. எந்திரங்களையும் சில எருமை மாடுகளையும் தான். பண்பாட்டுப் புரட்சியை அல்ல. பணத்தின் திரட்சியை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!