பேசுவது தமிழா...

சர்வர் சுந்தரம் திரைப்படம். படத்துக்குள் ஒரு படப்பிடிப்புக் காட்சி. அறிமுக நடிகராக நாகேஷின் பாத்திரம். ரங்காராவ் இயக்குனர். மனோரமா அனாயாசமாக நுழைவார். அத்தனை அலட்சியமாக பேசத் துவங்குவார். நவரசம் என்பதை நாராசம் என்பார். வசனத்தைத் தனக்கு சாத்தியமான அளவிற்குக்  கொல்வார். ரங்காராவ் துடிதுடித்துப் போவார். 'மத்தவங்க படத்துல எப்படி வேணுமானா பேசும்மா, இது தமிழ்ப்படம், தமிழில் பேசு' என்பார்.  'போங்க சார் எனக்கு இப்படித் தான் தமிழ் பேச வரும்', என்பார் மனோரமா. அப்போது நாகேஷ் அசத்தலாக, " டைரெக்டர்  சார், எனக்கு ஒரு சந்தேகம்.  இந்தம்மா தமிழ் பேசுறதே போதுமே, நான் வேற எதுக்கு தனியா காமெடி பண்ண..." என்பார்.

எஸ் வி வேணுகோபாலன்

இப்படி 'காமெடி' நிலையில் கிண்டலடிக்கிற கதியில் காட்சி ஊடகத்தில் தமிழ் புழங்குவதைப் பார்த்துப் புழுங்கத் தான் வேண்டியிருக்கிறது. திரைப்படங்களானாலும் சரி, மக்கள் இன்று அதிகம் கண்ணுற்றுவரும் தொலைக்காட்சி ஊடகமானாலும் சரி தமிழ் கையாளப்படும் விதம் வேதனைக்குரியதாக இருக்கிறது. 

ஒரு காலத்தில் வேற்று மொழி, வேற்று மாநில அல்லது வேற்று நாட்டுக்காரராகக் காட்டப்படும் பாத்திரத்தை மக்கள் புரிந்து கொள்ள ஒரே இலகுவான வழி அந்த நடிகர் பேசும் தமிழ் வசனம் தான் என்று யாரோ ஒரு கற்பனை வளமிக்க நல்லவர் உருவாக்கிக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.  அதனால் தான் தமிழ் சினிமாவில் வெள்ளைக்காரரும்,   வடக்கிந்தியரும், மார்வாரியும் ஒரே 'டமில்' பேசுவதைக் காண வேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது.  சென்னை  சவுகார்ப் பேட்டைக்குச் செல்பவர்களுக்குப் புரியும், எந்த சேட்டும் சினிமாவில் உசிலைமணி பேசுவது மாதிரியெல்லாம் தமிழ் பேசுவதில்லை என்று. 

காலப்போக்கில் தமிழைக் கொச்சை செய்து பேசுவதுதான் நாகரீகம் என்று ஆக்கி இருக்கிற நிலையில் நாம் செம்மொழியைக் கொண்டு வைத்திருக்கிறோம்.  அதன் இன்னொரு பரிணாமம் தமிழைச் சும்மா தொட்டுக் கொண்டு ஆங்கில விளாசல்களாகவே தாக்குவது.  இது சகிக்க முடியாத எல்லைகளை எட்டியிருப்பது தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து அன்றாடம் நிரம்பி வழிகிறது. 

நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் தொடங்கி, உரையாடல் நடத்துபவர்கள் வரை, தொலைக்காட்சியில் நல்ல தமிழில் பேசுவது ஏதோ தெய்வக்குத்தம் போலவும், செய்யத் தகாத செய்கை போலவுமாக நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது.  இவர்கள் இழுக்கிற இழுப்பில் இவர்களிடம் வந்து மாட்டிக் கொள்கிற பிரபலங்களும், பிரமுகர்களும்  இந்த மாயச் சுழலில் வந்து சிக்கிக் கொள்கின்றனர்.  அவர்களும் பெரும்பாலும் தொலைக்காட்சி தமிழில் பேசத் தொடங்கிவிடுகின்றனர். 

நேயர்களைத் தொலைபேசியில் அழைத்து அளாவளாவும் நிகழ்சிகளின்போது ஒற்றைத் தமிழ்ச் சொல்லாவது தட்டுப் படுகிறதா என்று கண்டறிய புதிய கருவியைத் தேடவேண்டும். எத்தனை சேஷ்டைகளைச் செய்து, எத்தனை விரசமான சைகைகளைக் காட்டிக் கொண்டு பேசவேண்டுமோ அப்படிப் பேச வலிய உருவாக்கப்படும் இத்தகைய நிகழ்ச்சிக்கான சூழலில் பேசும் மொழியும் அத்தனை திருகலோடே வந்து விழுகிறது.
ஏதோ மிகவும் அரிதான சொல்லைத் தவிர்க்கவோ, வெகு மக்கள் புரிதலுக்காகவோ அப்படி ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. மிகச் சாதாரணமாக மக்களது பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சொல்லைக் கூட வேண்டுமென்றே தவிர்த்துப் பேசிக் கொண்டிருக்கும் புது பேச்சு வழக்கை தொலைக்காட்சி பரப்பி வருகிறது.

கொச்சைத் தமிழ், கோணல் தமிழ், கலப்புத் தமிழ் என்று புதுப்புது வடிவம் எடுத்தது ஒரு கட்டத்தில் பண்ணித் தமிழாகவும் ஒழித்துக் கொண்டிருக்கிற கொடுமையை நகைச்சுவையாளர்கள் சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டனர்.  அதென்ன பண்ணித் தமிழ்....மொத்த பேச்சில் 'பண்ணி' என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு ஒரு தமிழ்ச் சொல் தப்பித் தவறிக் கூட இடம்பெறாது.   " ஸோ அண்ட் ஸோ அவைலபிளா?  காண்டாக்ட் பண்ணி,   இன்பார்ம் பண்ணி, புரோகிராம் கன்பார்ம் பண்ணி, கோ ஆர்டினேட் பண்ணி, இன்விடேஷன் பிரின்ட் பண்ணி, கலெக்ட் பண்ணி,  ரீச் பண்ணி, அப்ரிஷியேட்  பண்ணி ...."என்று நடக்கிற  இந்தத் தூரத்தில் தமிழின் கொடி எங்கும் பறக்கக் காணோம். செய்தி நேரங்களில் மட்டும் பெருமளவு தமிழ் உலகத்திற்குள் நின்று பேச முடிகிற போது, பிற நிகழ்ச்சிகளின் போது ஏன் இனிய உளவாக என்னென்னவோ கூறல்? 

இலக்கண சுத்தமாகவும், யாரும் புரிந்து கொள்ள இயலாத கடுந்தமிழ்ச்  சொற்களாகவும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  துணிக்கடை என்று பலகை மாட்டி வைத்துவிட்டு உள்ளே புரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருக்கக் கூடாது அல்லவா...தமிழ் சானல் என்று அறிவித்துவிட்டுத் தமிழைத் தேடவைத்தால் என்ன செய்வது...

சமூகத்தின் போக்கைத் தாங்கள் பிரதிபலிப்பதாக அவர்கள் சொல்ல முற்படலாம்.  இந்தப் புள்ளியில் தான் இந்த விவாதத்தின் முடிச்சே இருக்கிறது. சமூகம் என்று எதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  எந்தப் பகுதியை அல்லது எந்தத் திரளை?  அதிகமான நேயர்களைச் சார்ந்து இவர்களால் இந்தக் கருத்துருவாக்கத்தை  முன்வைக்க முடியுமா என்றால் வாய்ப்பே இல்லை.  வாசிப்பின் தளத்திற்கோ, கல்வியின் உயர் நிலைக்கோ எட்ட இயலாத, குடும்ப ரீதியாகவும், சமூக-பொருளாதார  பின்புலம் காரணமாகவும் அதற்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மனிதர்களே தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும்   நேயர்களில் அதிகப் பங்கு வகிக்கிறார்கள் என்பதே உண்மை. அடுத்த வாதம் என்ன வைப்பார்கள்? மொழி என்பது என்ன, பேசுவது புரிவதற்கு மட்டும் தானே, அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?

மொழி என்பது பேச்சுக் கருவி அல்லது கருத்துப் பரிமாற்ற சாதனம்  (Means of Communication) என்பது மட்டுமா,  அதற்கும் மேலாக ஒரு சமூகப் பயன்பாடு அதில் உண்டா என்ற விவாதம் நீண்ட காலமாகவே உண்டு.  இப்படியான கருத்துப் போராட்டங்களில் ஒருவர் எந்த நிலைபாட்டை எடுக்கிறார் என்பது அவரது சார்புத் தன்மையையும் சேர்த்து பிரதிபலிக்கும்.

தமிழ் வாசிப்பு உலகில் வார, மாத இதழ்களில் பல்லாண்டுகளாகக் கதை மாந்தர்களாக யார் அதிகம் இருந்தனர், யாரது வாழ்க்கை அதிகம் பேசப்பட்டது என்று கவனித்துவிட்டு, கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலான காலத்தில் அதில் ஏற்பட்டிருக்கும் பளீர் மாற்றம் என்ன என்று சிந்தித்தால் ஏராளமான செய்திகள் கிடைக்கும்.  ஆனாலும், ஒற்றை அடையாளமாக மேல்தட்டுப் பண்பாட்டைப் பொதுவில் திணிக்கும் அல்லது நிலை நிறுவும் சாதுரியமான போக்கை  இயல், இசை, நாடக வெளிகளில் நுட்பமாகக் காண முடியும். 

மொழியின் செயல்பாடு இதில் முக்கிய இடம் வகிக்கிறது.  அறுபதுகள், எழுபதுகள் வரையிலும் கூட குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டிக் கொண்டிருந்த சாதாரண மக்களிடையே கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வடமொழிப் பெயர் வைக்கும் ஆசை ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டும்.  அது உண்மையில் ஆசையா,  உளவியல்  நெருக்கடியா, சமூக அவஸ்தையா என்று கண்டறிய வேண்டும்.  அடையாளம் காணப்பட்டுத் தங்களது சந்ததியர் அவமதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஊறிக் கொண்டிருக்கிறதா என்று தேட வேண்டும்.
இதன் கூறுகளில் இருந்து பேச்சு மொழியையும் கவனித்தால் விடைகளும், புதிய கேள்விகளும் பிறக்கும்.  திட்டமிடாதது போலவே அப்பாவித்தனமாகவே, இயல்பாகவே நமது நடை, உடை, பாவனைகள் பொருந்தாத தளங்களில் உலவிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் காட்சி ஊடகங்களிலும் திமிறிக் கொண்டிருப்பது.

புதிய தாராளமயக் கோட்பாடுகள் அமலாக்கப் பட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் நிறைய தனியார் தொலைக்காட்சிகள் முளைத்தன.  சந்தையின் அடிப்படையாகப் பேசப்பட்ட விஷயம் போட்டி என்பது.  நடைமுறையில் என்ன நடக்கிறது ?  ஆதிக்க சக்தியுள்ள வர்த்தகர் என்ன சொல்கிறாரோ அதைப் போட்டியின்றி மற்றவர்கள் பின் தொடரவேண்டிய உலகம் தான் படைக்கப்பட்டிருக்கிறது.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இப்படியான முன் மாதிரி படைக்கப்படுகிறது. 

மனிதர்களது வாழ்வாதாரங்களில் மட்டுமல்ல, உலகமயத்தின் நெரிக்கும் கரங்கள் அவர்களது பண்பாட்டுத் தளத்திலும் புகுந்து விளையாடுகிறது.  பயிர்களின் தன்மையை, நிலங்களின் பசுமையை நாசப் படுத்துபவர்கள் உடல் நலக் கூறுகளில் செய்யும் அத்து மீறல்களை, உளவியல் தளங்களிலும் உணரவியலாத வண்ணம் செய்து கொண்டிருப்பது விவாதத்தில் இருக்கும் விஷயம்.  நுகர்வுத் தன்மை, கேளிக்கை அம்சம், ஓய்வு நேரப் பயன்பாடு......என விரியும் அம்சங்கள் பலவற்றிலும் மனிதர்களை தாராளமயப் போக்கு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.  மொழி இதில் முக்கிய தாக்குதலுக்கு இரையாகிறது.

மொழியின் வாழ்க்கை, மொழியின் வளர்ச்சி, மொழியின் வீழ்ச்சி என்பது மொழியுடையதானது மட்டுமல்ல என்பதே மொழியியலாளர்கள் சுட்டிக் காட்டி எச்சரிப்பது.  மொழியின் ஆதிக்கம் பற்றி நாம் புரிந்து கொள்கிற போதே, மொழியின் அடிமைத் தனத்தையும் உணர முடியும்.

ஜனநாயகத்தின் வேர், தனி மனிதர்கள் சுதந்திர சிந்தனையோடும், சுய மரியாதையோடும் வாழ இடம் பெற்றுத் தந்திருப்பது.   தற்காப்புக்கான தேடலில் சொந்த மொழி பேசவே கூச்சமுறும் அவலம்,  தவிர்த்துவிடத் துடிக்கும் கொடூரம், நழுவிப் போய்க் கொண்டிருக்கும் கேவலம் போன்றவை பாதிப்பது மொழியை மட்டுமல்ல.  அது கொடையாக  வழங்கியிருக்கும்  பரந்து விரிந்த ஒரு பண்பாட்டை, இன்னொரு முறை  உருவாக்க  சாத்தியப்படாத இலக்கிய வளத்தை!  இந்த பாதிப்புகள் சிதைப்பது ஊடும் பாவுமாக உள்ள ஜனநாயகத் தன்மையை!

சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் தவறாகத் தமிழைப் பேசுவதை வைத்து நகைச்சுவை செய்திருந்தனர்.  சம காலத்திலோ, நல்ல தமிழைப் பேசுபவரைத் தான் நையாண்டிப் பாத்திரமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.  தமிழை வைத்து வாழப் பழகிக் கொள்பவர்கள், தமிழை மட்டும் வாழ விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் போலும். 

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நாம எவ்வளவு புலம்பினாலும் இங்கே கேட்பதற்கு ஆள் இல்லையே அண்ணே..:-(((

    //மொத்த பேச்சில் 'பண்ணி' என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு ஒரு தமிழ்ச் சொல் தப்பித் தவறிக் கூட இடம்பெறாது. " ஸோ அண்ட் ஸோ அவைலபிளா? காண்டாக்ட் பண்ணி, இன்பார்ம் பண்ணி, புரோகிராம் கன்பார்ம் பண்ணி, கோ ஆர்டினேட் பண்ணி, இன்விடேஷன் பிரின்ட் பண்ணி, கலெக்ட் பண்ணி, ரீச் பண்ணி, அப்ரிஷியேட் பண்ணி//

    சிரிக்குறதா இல்லை அழுகுறதான்னு தெரியல..

    பதிலளிநீக்கு
  2. பேசுவது தமிழா என்பதைவிட
    பேசுவது தமிழனா என்று
    கேட்டாலும் தகும்.

    பதிலளிநீக்கு
  3. ஏனோ வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.....

    வாழ்த்துக்கள்......

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  4. சமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா வந்திருந்தார். அவர் தொகுப்பாளினியிடம், தமிழ்ல பேசலாமேம்மா. என்றது அவர் பதில்.. கண்டிப்பாப் பேச ட்ரை பண்றேன் சார். இப்போ, “தட்ஸ் யுவர் ஸ்பெஷல் சீட். நீங்க அதுல உக்காருங்க..”

    சில தொகுப்பாளர்கள் அவர்களுக்கு எழுதிக் கொடுக்கிறதைத்தான் மனனம் செஞ்சிப் பேசறாங்கன்னு நினைக்கிறேன். அவங்களை மட்டும் குற்றம் சொல்லவும் முடியாது.

    பதிலளிநீக்கு
  5. சரி, தமிழை விட்டு ஆங்கிலம் பேசுகிற போதாவது ஒழுங்காய்ப் பேசுகிறார்களா? ‘நீங்க நம்ம ஜட்ஜுகளோட கொமெண்ட்சை இம்ப்ரவைஸ் பண்ணி அடுத்த முறை நல்லா பண்ணுங்க’... இந்தத் தொகுப்பாளர் என்ன சொல்கிறார் என்று ஒரு மயிரும் புரியவில்லை. comments ஐ எப்படி improvise பண்ணுவது???

    பதிலளிநீக்கு
  6. நல்ல அருமையான கட்டுரை. நியாயமான கேள்விகள். கடந்த 25 வருஷமா பார்ப்பது, அதுவும் சென்னைக்கு படிக்க வந்தபோது பார்க்க மாணவனா தெரிஞ்சா உடனே ஆங்கிலத்தில் பேச்சை மாற்றிவிடுவார்கள். இங்கிலீஷ் தெரியாத காலம் வேற.

    இது 25 வருடத்திற்குப் பிறகும் மாறவில்லை. தமிழ் சங்கம்னு போய்ப் பார்த்தாலும் அங்கயும் பிற மொழி கலந்த தமிழ் தான். வேற்று மொழிகள் நம்மோடு இரண்டற கலந்துவிட்டது. இது பிழைப்புக்காக கூட இருக்கலாம். நம்ம initial இல் கூட தவிர்க்கமுடியாமல் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

    எனக்கு நண்பர் காமராஜின் கிராம்மியத் தமிழ் ரொம்பப் பிடிக்கும். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் நன்கு ரசிக்க, ஒன்றிப் போக முடியும்.

    சில சமயம் சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது அந்த அந்த காலத்தில் வாழும் மனிதர்களின் மனம், இடம், சூழல் பொறுத்து அமையலாம். யாரிடமும் திணிக்க முடியாது. பிறகு அது ஒரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மாதிரி ஆகி விடும்.

    மேலும் நீங்கள் கூறியவற்றில் எனக்கு மாற்றுக் கருத்து அல்ல. நல்ல படி மாறினால் நல்லது தான். நன்கு தமிழ் தெரிந்தவர்கள் அந்த நல்ல தமிழில் மாற்றம் செய்யாமல் உரையாடும்போது, மற்றவர்கள் மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு.
    எனக்கும், இந்த அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் பேசும்போது இதேப் போன்ற எரிச்சல் வரும்.எந்தவொரு வேலைக்கும் அடிப்படை தகுதிகள் கேட்பது போல் இவர்களுக்கு, நல்ல தமிழ் பேச வேண்டும் என்பதை மட்டும் அடிப்படை தகுதியாக வைக்க முடியாதா? இதையெல்லாம் செய்யாமல் செம்மொழி மாநாட்டினால் மட்டும் தமிழை வளர்த்து விட முடியுமா/

    பதிலளிநீக்கு
  8. அடிமை மனோபாவம் கொண்ட எந்த ஒரு இனத்தின் மொழியும் தலை நிமிர முடியாது. தமிழால் சிலர் அதிகாரம் பெற்றதும், செல்வந்தர் ஆனதும் தான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  9. உணர்ச்சிக் கவிஞர் எழுதிய எழுதிய பேசுவது தமிழா - தமிழா நீ
    பேசுவது தமிழா என்ற கவிதை ஈழத்திலிருந்த போது உறைக்கவில்லை. உயிரைக் காப்பாற்ற தமிழ் நாடு வந்தபின் நிறையவே உறைத்தது. தமிழ் வாசிக்கத் தெரியாத தமிழ் பிள்ளைகளை தமிழ் நாட்டில் சந்தித்த போது முதலில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தவறு பிள்ளைகள் மேல் அல்ல. தமிழ் நாட்டில் நான் படித்த பாடசலையில் கல்வித்திட்டம் தமிழ் மொழியில் இருக்கவில்லை பெரும்பாலான பள்ளிகளில். கூடவே இந்தி படித்தால் அரச உத்தியோகம் கிட்டுவது இலகு என்ற விதியாக இருந்த நிலையில் இரண்டாம் மொழியாக இந்தி பாடம் எடுத்த என்னுடைய சக மாணவிகளை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. இதே நிலை தானே மற்றப் பாடசாலைகளிலும்..??
    ஒரு குழந்தை பெற்றோருடன் செலவிடும் நேரத்தைப் பார்க்கிலும் பள்ளியிலும், தொலைக்காட்சியிலும் கழிக்கும் நேரம் தான் அதிகம். அந்த அதிகமான நேரம் அந்தக் குழந்தை எந்த மொழியுடன் பரிச்சயமாகிறதோ , புழங்குகிறதோ அந்த மொழிக்கு பழக்கப்பட்டு விடும் போது தாய் மொழி இரண்டாம் பட்சமாகவும், மூன்றம் பட்சமாகவும் தள்ளிப் போகிறது. அந்த நிலை தான் இப்போது தமிழகத்தில் படித்தவர்களுக்கும், ஊடகங்களில் புழங்குபவர்களுக்கும்... !

    தனித் தமிழில் மிளிர வேண்டுமானால் அடிப்படையில் ஆங்கிலவழிக் கல்வி என்பது முற்றாக புறக்கணிக்கப்பட்டு தமிழ் வழிக் கல்வி நடைமுறையில் வரவேண்டும்.

    1956ல் இனக்கலவர ஆரம்பத்திலிர்ந்து தமிழீழப் பகுதியில் எத்தனை இன்னல்கள் இருந்த போதும், சிங்கள மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்ட கல்வித்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும் கூட ஒட்டு மொத்தமாக தமிழ் மாணவர்கள் பகிஷ்கரித்து சிங்களப் பாடத்தை எங்கள் பள்ளிக் கூடங்களுக்குள் நுழையவிடாமல் பார்த்துக் கொண்டோம். ஆங்கில வழிக் கல்வியையும் தவிர்த்து தமிழ் வழிக் கல்வியையே நடைமுறையிலிருந்தது. அப்படி காட்டுமிராண்டிகளின் கைகளில் இருந்த போது கூட எம்மால் தாய்மொழியில் படிக்க முடிந்தது. ஆனால் சுதந்திரமான நாட்டிலிருக்கும் மாணவர்கள் தாய் மொழியில் படிக்க எந்தத் தடையும் இல்லாத போது வெவ்வேறு காரணங்களுக்காக தாய் மொழியை புறக்கணிப்பது கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழலை யார் மாற்ற வேண்டுமோ அவர்கள் மௌனித்தோ அல்லது அலட்சியமாயோ இருக்கும் போது எங்கள் கவலையை இப்படி எழுதிக் கொண்டிருப்பதில் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும்.

    இங்கே மேலை நாடுகளில் புலம் பெயர்ந்திருக்கும் தமிழ் மக்களின் நிலையும் அப்படி தான் பெரும்பாலும். கடந்த வருடம் ஈழத்தில் நடந்த கொடூரங்களால் இக்ன்கு பிறந்த தமிழ்பிள்ளைகள் கூட உணர்வளவில் தம்மை ஈழத்துக் குழந்தைகளாக உணரத் தலைப்பட்டாலும் அவர்கள் பழக்கப்பட்ட மொழிக்கு சரளமாக புரளும் நா , தமிழ் உச்சரிப்பில் இழுத்துக் கொள்வதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கத் தான் முடிகிறது. என்னுடைய இரண்டு மகன்களையுமே எடுத்துக் கொண்டால் மூன்று வயதில் மிகத் தெளிவாக அவர்கள் பேசிய மழலைத் தமிழ் இப்போது 6 வயதில் பாடசாலை போகத் தொடங்கிய பின் மோசமான உச்சரிப்பாயும், தடுமாற்றமாயும் துப்பலாய் வரும் போது குற்ற உணர்ச்சியில் மிகவும் குறுகிப் போவது பெற்றோராகிய நாம் தான். என்ன தான் வீட்டில் அவர்களுடன் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் லாவகம் தமிழில் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இவர்களை இப்படியே வளரவிட்டால் ஆங்கிலம் மட்டும் பேசும் தமிழராக இருந்துவிடுவார்களே என்ற கவலை மேலோங்கி வருகிறது. அரிச்சுவடியிலிருந்து அத்தனையும் முயன்று கொண்டிருக்கிறேன். தேசியத் தலைவரின் படத்தைக் காட்டினால் our leader என்கிறார்கள். தியாகி திலீபன் படத்தை காட்டினால் அவருடைய கதையை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்..என்ன செய்ய?? :(:(

    பதிலளிநீக்கு
  10. தமிழில் பேசுவது குறைந்து விட்டது சரிதான் அனால் விகடன் போன்ற பத்திரிகைகள் ..கிட்டத்தட்ட ஆங்கில பத்திரிகையாகவே மாறிவிட்டது வருந்தகூடிய ஒன்று ..உதாரணதிற்கு..அவள் விகடனில் வரும் தலைப்புகளை பாருங்களேன் !
    இது தலைப்பு மட்டுமே உள்ளே படித்தால் 75% ஆங்கிலமே ..இவர்களை தடுப்பார் யாரும் இல்லையா ?



    வாசல்
    ...................
    டிப்ஸ்
    ...................
    ரெகுலர்
    ...................
    ரெசிப்பிஸ்
    ...................
    ஸ்பெஷல்
    ...................
    காலேஜ் கேம்பஸ்
    ...................

    பதிலளிநீக்கு
  11. நல்லவேள இந்த கன்றாவியல்லாம் பாக்குறதுக்கு எனக்கு வாய்ப்பு இல்ல...

    வெட்கப்படவேண்டிதுதான்... வேறென்ன செய்யறது...

    பதிலளிநீக்கு
  12. //பேசுவது தமிழா என்பதைவிட
    பேசுவது தமிழனா என்று
    கேட்டாலும் தகும்.//
    ... அதே ...

    பதிலளிநீக்கு
  13. மொழி என்பது புற உலகத்துடன் தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு புறப்பொருள் அல்ல. மொழி என்பது நமது வாழ்க்கை.நமது பண்பாட்டுக் கூறு.மொழி பணம் ஈட்ட பயன்படும் ஒரு கருவியாகவே இன்று பார்க்கப்படுகிறது. அதன் விளைவாகத்தான் இன்று தமிழன் தன் இன உணர்வற்று, இழி நிலையை அடைந்திருக்கிறான்."தமிழனுக்கு மொழியானதைத் தவிற தமிழ் செய்த தவறு எதுவும் இல்லை" என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  14. தமிழ் அழிப்பை ஊடகங்கள் திட்டமிட்டே செய்து வருகின்றன் என்றே தோன்றுகிறது. ஒருவன் தன் தாய் மொழியைப் படிக்கும் போது, அதன் சிறப்பையும், வரலாற்றுப் பெருமையும் அறிய முடியும். தன் இன வரலாறையும், பண்பாட்டுச் சிறப்புகளையும் அறிந்து கொள்ள முடியும்.அப்போதுதான் தமிழர்களுக்கு தன்மானம் என்ற ஒன்று வரும்.

    பதிலளிநீக்கு
  15. அன்பு மாதவ்

    வருகை புரிந்தோர் அனைவருக்கும் நன்றி. கருத்துக்களைப் பகிர்ந்தோர்க்குக் கூடுதல் நன்றி.

    மொழி என்பது வாழ்வியலோடு கலந்திருப்பதை - பண்பாட்டின் கூறாக உள்ளதை, அதைப் புறக்கணிப்பவர்களைவிட ,
    சிதைக்கிறவர்களைவிட, அதன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களும், அதன் மூலம் வர்த்தகம் செய்பவர்களும் அதிகமாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

    உலகமயமாக்கலின் பரந்த மேடையில், ஏகாதிபத்தியச் சுரண்டலை நிகழ்த்துபவர்கள் மொழிகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடவேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர்.

    "எனது மகன் எனது பெயரைச் சொல்லட்டும்" என்று நாராயணனிடம் போராட வேண்டிய நிலையில் இருந்த இரணியனைவிடவும் கேவலமான நிலையில் மொழித் தாய் பதறுகிறாள், தனது மக்கள் தனது மொழியில் பேசக் கூடாதா என்று...

    ஈழத்துத் தோழரின் உருக்கமான மனக் கசிவில் அது எதிரொலிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

    விவாதங்கள் தொடரட்டும்.

    தீக்கதிர் நாளேட்டின் செம்மொழி மலரில் வெளியாகி இருந்த இந்த எளிய பிரதியை இங்கே இடுகை செய்திருக்கும் மாதவிற்கு எனது வந்தனங்கள்.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!