ராச லீலா!
நேற்றிரவு கனவில் விறைத்துப்போய் நீ வந்தாய். நாக்கினை நீட்டியபடி கண்கள் செருக, உடல் வெட்டி நின்ற உன்னைப் பார்க்க ஒரு காக்கா வலிப்புக்காரனைப் போலவே முதலில் இருந்தது. உடல் மட்டுமே கொண்டவர்களாய் பெண்களை நிறுவிய உனது வெளியில், நீ நடத்திய ராசலீலாக்களின் கதைகளைச் சொல்லி, ‘மானே, தேனே’ என என்னையும் அழைத்தாய். நான் விலகினேன். மக்கிப்போன பழங்குப்பைகளை முடைநாற்றமெடுக்க கிளறி, அதிலிருந்து நுலை எடுத்து நீ வைத்துக்கொண்டு, ஊசியை என்னிடம் கொடுத்து அர்த்தத்தோடு சிரித்தாய். நான் ஊசியைத் திருப்பி உன்னைக் குத்தினேன். “ச்சீ... நீ பெண்ணேயல்ல..” என்று கத்தி ஒரு காசநோய்க்காரனைப்போல இருமினாய். தெறித்த உனது சளியில் நீயே வழுக்கி விழுந்தாய். அறை முழுக்க எனது சிரிப்பு எதிரொலிக்க, நான் எழுந்துகொண்டேன்.
(pic:Woman Tormented by Demons)
மாதவராஜ் பக்கங்கள் - 35
’என்ன மாதவராஜ், இரண்டு வாரங்களாக ஒன்றுமே எழுதவில்லை. நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். எழுதுங்கள்.” என்று ஒருவர் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். போனில், “ஒரு இரண்டு வரி எதையாவது எழுதுங்கள் தோழர்” என்றார் ஒருவர். மெயிலிலும் ஒன்றிருவர் கேட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி. எழுதிக்கொண்டு இருந்தால்தான், நலமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள வேண்டி வரும் போல. அம்மாதிரிதான் தொடர்ந்து எதையாவது எழுதி வந்திருக்கிறேன் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
இரண்டு வாரங்களுக்கு மேல் ‘தீராத பக்கங்களில்’ எழுதவில்லை. இணையப் பக்கம் சரியாக வரமுடியவில்லை. அப்படித்தான் நாட்கள் ஒடுகின்றன. எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர், தோழர்.சோலைமாணிக்கத்திற்கு ஒரு ஐந்தாறு மாதங்கள் ஓய்வு தேவை என மருத்துவர் சொல்லியிருக்கிறார். விருதுநகரிலிருந்து அவரது சொந்த ஊருக்கு மாறுதல் பெறப்பட்டு இருக்கிறது. எனவே சங்க நடவடிக்கைகளில் கூடுதல் பொறுப்பு இப்போது வாய்த்திருக்கிறது. தொடர்ந்து பயணங்களும், கூட்டங்களும், சந்திப்புகளுமாய் நேரம் செல்கிறது.
முன்பெல்லாம் இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று எப்போது வந்தாலும் ஒரு குளியல் போட்டுவிட்டு கம்ப்யூட்டர் முன்பு கொஞ்சநேரம் உட்காருவேன். இப்போது அப்படியெல்லாம் முடியவில்லை. அக்கடா என்று உடலை சாய்க்கத்தான் சொல்கிறது. கிடைத்த நேரத்தில் மெயில் மட்டும் பார்த்து ‘எஸ்கேப்’ ஆகிக்கொண்டு இருந்தேன்.
நேற்று சாயங்காலம்தான் நிதானமாக உட்கார்ந்து மேய்ந்தேன்.அனுஜன்யா மீண்டு வலைப்பக்கம் எழுத வந்திருக்கிறார். சந்தோஷமாக இருந்தது. இணையத்தில். சாரு நிவேதிதா விவகாரங்கள் குறித்து கூகிள் பஸ் மூலமாக லேசாக அறிய நேர்ந்தாலும், நேற்றுதான் ஒவ்வொன்றாக படித்தேன். தமிழச்சி அவர்களுக்கும், வினவுத்தோழர்களுக்கும் எனது வணக்கங்களும், ஆதரவும். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உயர்வுக்கான நாடு தழுவிய போராட்டங்களில் ஆரம்பித்து பின்னோக்கி செல்லும் இந்த நாட்களில் எவ்வளவோ சுற்றிலும் நடந்து கொண்டேயிருந்திருக்கின்றன. எழுத வேண்டியவையும், வாசிக்க வேண்டியவையும் நிறைய இருக்கின்றன.
கல்லூரியில் என்னோடு பி.பி.ஏ படித்த நண்பர்கள் யாருடனும் இப்போது தொடர்பில்லை என்பது அவ்வப்போது நினைவுக்கு வந்து செல்வதுண்டு. ஒரு வாரத்துக்கு முன்பு அது தீர்ந்தது. இணையத்தில் என்னைப் பார்த்துவிட்டு நண்பன் பாலு மெயிலில் தொடர்பு கொண்டான். சிட்னியில் இருக்கிறான் இப்போது. கல்லூரி நாட்களில் அவனுடன் செஸ், டேபிள் டென்னிஸ் விளையாடியதிலிருந்து எல்லாம் ஞாபகம் வருகிறது. திருச்செந்தூரில் கோவிலுக்குச் செல்கிற வழியில், பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிற இடம் அருகே அவன் வீடு அப்போது. அங்கு சென்றுவிட்டு, அப்படியே கடற்கரை சென்று பலநாட்கள் பேசியிருந்திருக்கிறோம். எஸ்.பி.பி குரலில் அற்புதமாய் பாடுவான். புருஸ்லீ மாதிரி, ‘ஆ’, ‘வூ’ என்பான். நினைக்க நினைக்க சுகமாக இருக்கிறது. ‘வா, இரண்டாவது இன்னிங்ஸ்’ ஆரம்பிபோம் என்று இப்போது செய்தி அனுப்பியிருக்கிறான்.
காத்திருத்தல் என்பது போராட்டம் (தொடர் பதிவு)

திறக்கப்படும் கதவுகளுக்காக காத்திருக்கிறோம். தாயின் கருவறையில் துவங்குகிற உயிரின் இயக்கமே காத்திருப்பது போலத்தான் தெரிகிறது. ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு மூடிய கதவுகளை எதிர்கொள்கின்றன. புல் பூண்டிலிருந்து, உலகம், பிரபஞ்ச வெளி வரை சகலமும் எதற்காகவோ காத்திருப்பதாகவே இருக்கிறது. எங்கோ செல்வதற்கோ, யாருடைய வருகையை எதிர்பார்த்தோ காத்திருக்கிறார்கள். மழைக்காக காத்திருக்கும் நிலம் பிறகு வெயிலுக்காகவும் காத்திருக்கிறது. காத்திருந்ததன் சுருக்கங்களே வாழ்வின் ரேகைகள் போலும்.
காத்திருப்பது நம்பிக்கையையும் தருகிறது. ஏமாற்றத்தையும் தருகிறது. காத்திருப்பது பக்குவத்தையும் தருகிறது. பொறுமையற்றுப் போகவும் செய்கிறது. இதைத்தான் வாழ்க்கை மனிதருக்கு விதிக்கும் சோதனையாகப் பார்க்கிறார்கள். காத்திருப்பதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது அறியாத ஒன்றாக இருப்பது சுவாரசியம். அறிந்த ஒன்றாக இருப்பது சுகம். அறிய முடியாமல் போவது வலி.
‘அம்மா’ என அழைத்து வாசலில் காத்திருக்கும் ஒரு மனிதன் எதிர்பார்ப்பது இரக்கத்தைத்தான். அதுதான் அவனுக்குச் சோறு அல்லது காசு. திறக்கப்படாத கதவுகளின் மீது அவனது சாபங்கள் படிந்தே போகின்றன. காத்திருக்கும் ஒரு மனிதன் முன் கதவாக இருப்பது இன்னொரு மனிதன். உலகின் இயக்கமே இதுவாக இருக்கிறது. மாற்றம் வரும் என ஒருவன் காத்திருக்கிறான். மாற்றம் வரக்கூடாது என இன்னொருவன் காத்திருக்கிறான்.
வீட்டில், அலுவலகத்தில், ஆஸ்பத்திரியில் நீதிமன்றத்தில், சாலையில், என எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காத்திருக்கும் நமக்கு அவையெல்லாமும் நினைவில் இருப்பதில்லை. சருகுகளாக உதிர்ந்துகொண்டே இருக்கின்றன. சில மறப்பதேயில்லை.
காத்திருப்பது குறித்து சொந்த அனுபவங்களாகச் சொல்ல எவ்வளவு எவ்வளவோ இருக்கின்றன. காத்திருப்பது என்பது சிலருக்குத் தத்துவம். சிலருக்குத் தவம். சிலருக்கு போராட்டம். காத்திருத்தல் என்றதும் இந்த நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. ஒரு எளிய மனிதர் எனக்குத் தந்து சென்ற செய்தி இது.
அன்று காலை வேலைக்குச் சென்றபோது, மெயின்ரோடே வழக்கத்துக்கு விரோதமானதாயிருந்தது. மனித நடமாட்டங்கள் அவ்வளவாக இல்லை. வாகனப் போக்குவரத்து சுத்தம். தூரத்தில் இருந்து பார்க்கும்போதே பஸ் நிறுத்தம் அருகேத் தெரிந்த கூட்டமும், எழும்பிய சத்தங்களும் பதற்றம் கொண்டதாக இருந்தன. திரும்பவும் எதாவது ஜாதிக்கலவரமோ என்றுதான் முதலில் ஓடியது. பக்கத்தில் செல்ல செல்ல, எதோ யுத்தக்களம் போலக் காட்சியளித்தது. சைக்கிள் ரிக்ஷாக்கள் அங்குமிங்கும் தலையறுபட்ட கோழிகள் போலக் கிடந்தன. குறுக்கும் நெடுக்குமாக வேன்களும், மினி லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. காக்கிச்சட்டைகளாய்த் தெரிந்தன. இன்னொரு பக்கம் கோபத்தோடும், வேகத்தோடும் சி.ஐ.டி.யூ தோழர்கள் நின்றிருந்தனர். ரிக்ஷாத் தொழிலாளர்கள், வேன் மற்றும் மினி லாரி ஒட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள் எல்லோரும். நடுவில் சி.பி.எம் நகரச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் இருந்தார். தெரிந்த முகங்கள்தாம். என்னைப் பார்த்ததும் ரிக்ஷா ஓட்டும் முனியன் அருகில் வந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வுப் போராட்டம் இரண்டு நாளாய் நடந்துகொண்டிருந்தது. தோழர் பாலசுப்பிரமணியம் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இன்று காலையில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை என தோழர்கள் போயிருக்கிறார்கள். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் முறைப்பாக பேசியதோடு இல்லாமல் வெளியே வந்தபிறகு தோழர்.பாலசுப்பிரமணியத்தை சட்டையைப் பிடித்து அடிக்கப் போயிருக்கிறான். விஷயம் கேள்விப்பட்டதும், பஸ் ஸ்டாண்டில் இருந்த தங்கள் ரிக்ஷாக்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் செய்திருக்கின்றனர் தோழர்கள். போலீஸ்காரர்கள் வந்து ரிக்ஷாக்களை அப்புறப்படுத்துகிறோம் என தாறுமாறாய் தூக்கி எறிந்திருக்கின்றனர். ஆத்திரமடைந்த வேன் ஒட்டுனர்த் தோழர்கள் தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்ட் வழியாகச் செல்ல முடியாமல் அடைத்து நிறுத்திவிட்டனர். இதுதான் நடந்திருந்தது.
“வாங்க போலிஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்க போய் முற்றுகையிடுவோம். கலெக்டர் வரட்டும். சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேக்கணும். ரிக்ஷாக்களுக்கு இழப்பீடு தரணும்” என்று கூட்டமாக அவர்கள் செல்ல ஆரம்பித்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகேதான் எங்கள் வங்கி அலுவலகம். கேஷ் கீ என்னிடம் இருந்தது. டீக் குடித்துவிட்டு வேலைக்குச் செல்வோம் என கடைக்குச் சென்றேன். ஜே ஜே என்று வழக்கமாய் இருக்கும் கூட்டம் அங்கு இல்லை.
“திமிரு பிடிச்சவங்க. உடனே வண்டிய வந்து நிப்பாட்டிறானுங்க. ரோடு இவங்க அப்பனுக்காச் சொந்தம். இப்ப பாருங்க பஸ்ஸெல்லாம் பைபாஸ் சுத்திப் போ வேண்டியிருக்கு. இவனுங்களால எவ்வளவு பேருக்குக் கஷ்டம்” என்று கத்திக்கொண்டு இருந்தார் டீக்கடைக்காரர். சிகரெட் குடித்துக் கொண்டிருந்த ஒரு டீசண்ட் பேர்வழி “இந்த ரிக்ஷாக்காரங்க பண்ற அநியாயம் தாங்க முடியல. பஸ் ஸ்டாண்டச் சுத்தி எந்நேரமும் கஞ்சா அடிச்சுக்கிட்டு, வம்பளந்துக்கிட்டு..” என்று கோபங்களை நீட்டிக்கொண்டு இருந்தார். வேர்க்க விறுவிறுக்க சாலைகளிலும், தெருக்களிலும் ரிக்ஷா அழுத்திச் செல்லும் இவர்களின் வாழ்க்கை பற்றி அவனுக்கு என்ன தெரியும். காலையில் எங்களது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரும் முனியன் அந்தக் குழந்தைகளுக்கு ஷூ ஷாக்ஸ் அணிந்து ரிக்ஷாவில் தூக்கி வைப்பதையும், மூக்குச் சளி பிடித்து தன் லுங்கியில் துடைத்துக் கொள்வதையும் இவன் பார்த்திருப்பானா? கஷ்டமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. யோசித்தபடியே வங்கிக்கு சென்றேன்.
வேலையில் இருந்தாலும் அவ்வப்போது வங்கியில் இருந்து வெளியே வந்து, என்ன நடந்தது என்று விசாரித்துக்கொண்டு இருந்தேன். எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிய வந்தது. முதலில் கலெக்டர் வருவார் என்றார்கள். பிறகு வரவில்லை என்றார்கள். சிதறிக்கிடந்த ரிக்ஷாக்களும், வேன்களும் அப்படி அப்படியேக் கிடந்தன. நேரம் ஆகிக்கொண்டிருந்தது.
மதியம் பனிரெண்டு மணி போல இருக்கும். முனியன் மட்டும் அந்த டீக்கடை முன்பு அவருடைய ரிக்ஷாவை தூக்கி நிறுத்தி சரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். பக்கத்தில் இரண்டு மூன்று தோழர்கள் அவரிடம் எதோ வாக்கு வாதம் செய்துகொண்டிருந்தனர். அருகில் சென்றேன். “தோழர், கொஞ்சம் பொறுங்க. பேசிக்கிட்டு இருக்கோம். அதுவரைக்கும் ரிக்ஷாவை எடுக்காதீங்க” என்றனர். முனியன் ஒன்றும் பேசாமல் அவர் காரியத்தில் கவனமாயிருந்தார். “இப்படி ஆள் ஆளுக்கு வண்டியெடுத்தா, நம்ம போராட்டம் என்னாவது? சங்கத்தோட முடிவை நீங்களே மீறலாமா?” என்று ஒருவர் முனியனின் கைகளைப் பிடித்தார். சட்டென்று அவரது கையை சுண்டிக்கொண்டு, “தோழர், காலைல பிள்ளைங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வந்திருக்கேன். மத்தியானம் சாப்பாட்டுக்கு அதுங்க காத்திட்டிருக்கும். நாம் போகலன்னா என்ன செய்யும். பாவம் அந்தக் குழந்தைங்க. நா வேண்ணா ஒரு நா இல்ல ரெண்டு நா இல்ல எத்தன நாள்னாலும் இந்தப் பாழாப்போன வயித்தோட உங்க கூட காத்துக்கிட்டு இருந்துருவேன்” என்று தன் வயிற்றில் சடாரென ஓங்கி அடித்துக்கொண்டார். சுற்றியிருந்த தோழர்கள் பேசமுடியாமல் அமைதியானார்கள். “குழந்தைங்க ஒருநாளும் பசியோட காத்துட்டு இருக்கக் கூடாது” என்று கண்ணெல்லாம் பொங்க குரல் உடைந்து போனார்.
கழன்ற சைக்கிள் செயினை மாட்டி புறப்படப் போனவர் நின்றார். ஹாண்ட் பாரில் வளைந்து நெளிந்திருந்த இரும்புத்தகடாலான, சிவப்பு வண்ண அரிவாள் சுத்தியல் சின்னத்தை சரி செய்து, ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார். ஆற்ற முடியாத எதுவோ ஒன்று என்னை அழுத்தியது. பார்த்துக்கொண்டிருந்த அந்த டீக்கடைக்காரரின் முகத்திலும் வலி தெரிந்தது. நீண்ட சாலையில் சென்று கொண்டிருந்தார் முனியன். எந்தக் கதவுகள் திறக்க அவர் காத்திருக்கிறார்?
மனித வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தின் முன் காத்திருக்கும் நம் ஒவ்வொருவரையும் இதுபோல நீர்த்துளிகள் நனைத்தே இருக்கும். அதில் ஒரு துளியை பகிர்ந்திருக்கிறேன். அது போராட்டமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக இந்த தொடர் பதிவு. இப்போது நான் அழைப்பது:
2.க. பாலாசி
4.கயல்விழி சண்முகம்
5.mayoo mano
(இதையும் வாசிக்கவும்: காத்திருப்பு- எஸ்.வி.வேணுகோபால்)
காத்திருப்பு – ஒரு தொடர் பதிவு
இன்று காலை படித்ததிலிருந்து எஸ்.வி.வேணுகோபாலின் இந்த பகிர்வு, சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. இதுகுறித்து நாமும் சொல்வதற்கு நிறைய இருப்பதாய்ப் படுகிறது. அவருடைய எழுத்து நடையும், தொனியும் ரசனக்குரியவை.
------------------------------------------------------------
அஞ்சல் அலுவலகம் ஒன்றிற்கு ஏதோ ஒரு வேலை நிமித்தம் சென்றவன், சமயத்திற்கு உதவக் கூடிய பேனா கைவசம் இல்லாததை அங்கு சென்றதும்தான் பார்த்தேன். அடையாறு தபால் நிலையத்தின் உள்ளேயே எழுதுபொருள் விற்பனைக் கடை ஒன்று இருக்கவும் எனது தேவைக்கு ஏற்ற பொருளை வாங்கிவிட்டேன். எழுதி முடித்து நிமிரும்போது ஓர் அன்பர் என்னருகே வந்து "சார், கொஞ்சம் பேனா கொடுங்களேன், எழுதிவிட்டு இப்போதே கொடுத்துவிடுகிறேன்.." என்றார். பெரிய தியாக தோரணையோடு (மூடியெல்லாம் கழற்றி வைத்துக் கொள்ளாமல்!) கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். அவர் நிதானமாக ஏதோ படிவத்தை நிரப்பவும், ஏதோ யோசிக்கவும், ஓடி ஓடிப் போய்க் கவுண்டரில் ஏதோ கேட்டு வந்து திருத்துவதுமாக சாவகாசமாகத் தமது கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தார். வேக வேகமாக வந்து எனது வேலையை முடித்துக் கொண்ட பிறகும் நான் புறப்பட இயலாமல் கிடந்தேன். எனது நேரம் இப்போது எனது பேனா வழி அவரது நேரத்தோடு பிணைக்கப் பட்டிருந்தது. ஒரே ஒரு ஸாரி சொல்லிவிட்டு அவர் திரும்பத் தரப் போகும் பேனாவிற்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன்.
இப்படி பல சமயம் நேர்கிறது. திருமணம் ஒன்றிற்கோ, ஏதாவது நிகழ்ச்சிக்கோ உரிய நேரத்தில் போய்ச் சேரும் திட்டத்தோடு நாம் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று ஓர் அழைப்பு வரும். நண்பர் ஒருவர் தானும் நம்மோடு சேர்ந்து போகலாம், வழியில் எங்காவது சேர்ந்து கொள்ளலாம் என்று நமது முழு திட்டத்திலும் கை வைப்பார். இதில் கொடுமை என்னவெனில் அவர் சொல்லும் இடத்தில் காத்திருந்த பிறகு, நேரம் ஓடிக் கொண்டிருக்க சம்பந்தப்பட்ட நல்ல மனிதர் மேற்கொண்டு எந்த ஒரு செய்தியும் அனுப்பாமல் இருந்து கொண்டு, நாமாக அவரைத் தேடித் பிடிக்கும்போது, "அடடா, எனக்காகவா இன்னும் காத்துட்டு இருக்கீங்க, நான் தான் அரை மணியில் வருவேன்னு சொல்லியிருந்தேனே, இல்லன்னா டாண்ணு கிளம்பிப் போய்கிட்டே இருந்திருக்க வேண்டியதுதானே...நான் நேரே புறப்பட்டு வந்துட்டேனே, ஐயோ என்ன சொல்றது உங்களை" என்று வெந்த புண்ணில் வேல் வேறு பாய்ச்சுவார்கள்.
விருந்தாளிக்காக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பது பற்றி நாவல் எழுதலாம். திரும்ப அனுப்பும்போது செல்ல வேண்டிய ரயில் தாமதமானால் அந்தக் காத்திருத்தல் வரமாகவும் அமையும், சாபமாகவும் கூடும். பொதுவாகவே காத்திருத்தலின் இரண்டு பரிமாணங்களாக இதைக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
கல்லூரிப் படிப்புக்காகத் தாய்மாமன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த காலங்களில் சென்னையில் காப்பிக் கொட்டைக்குத் தட்டுப்பாடு இருந்த காலம். அதற்கு கார்டு போடுவதற்கு முதல் நாள் இரவே வரிசையில் போய் நின்று கொஞ்சம் நேரம் கடந்ததும் அங்கேயே உட்கார்ந்து ஒரு கட்டத்தில் படுத்து, விடியற்காலை வேறு ஆள் வந்து மாற்றிவிட்டதும் பத்து மணிக்கு இன்றைக்கு கார்டு தருவதில்லை என்று இந்தியா காபி ஹவுஸ் ஆட்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
ஆனாலும், காப்பிப் பொடிக் கடையில் காப்பிக் கொட்டையைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வறுத்து அரைத்துக் கொடுக்கும் வரை காத்திருப்பது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். பேசும்படம், பொம்மை, ஃபிலிமாலயா போன்ற இதழ்களை ஒரு கஷ்ட ஜீவன காலத்தில் வேறு எங்கே ஓசியில் படிக்க முடியும்? வார, மாத இதழ்களை எத்தனை வேகமாகப் படிக்க முடியுமோ அத்தனை வேகத்தோடு படித்துக் கொண்டே இருக்க, நமது டப்பாவை எடுத்திராம மெதுவாகவே எடுத்து வறுத்து அரைத்தாலும் சம்மதம் என்றே மனது சொல்லிக் கொண்டிருக்கும். வாசிப்பு நோக்கத்தோடு தலை கனத்து (அதாவது, அதிக முடியினால்!) சலூனுக்குச் செல்வோருக்கும் இது பொருந்தும்....விவரமான முடி திருத்துவோர், சார் வந்திருக்காரு, பாரு என்று தேடி எடுத்துப் பழைய இலவச இணைப்பு இதழ்களை எல்லாம் எடுத்துப் போட்டு விட்டு தகராறு கிராக்கிகளை முதலில் முடித்து அனுப்புவதில் கவனம் செலுத்தப் போவார்கள்.
காத்திருத்தலின் வேதனையைப் பாடும் கவிஞர்களின் உள்மனத்தில் நுழைந்து பார்த்தால், அது வலியல்ல, விரும்பி மேற்கொண்ட தவம் என்று புலப்படும். கவிதைக்காகக் காத்திருப்பதை விடவும், காதலுக்காகக் காத்திருப்பது மோசமானது அல்ல. காத்துக் காத்துப் பெறுகிற பொருளின் மதிப்பு கூடிப் போய்விடுகிறது. காத்திருத்தல் பரஸ்பரம் வைத்திருக்கும் அன்பு, எதிர்பார்ப்பு, மரியாதை.... இவற்றுக்கு ஏற்பப் பேசப்படும். சில இடங்களில் காத்திருக்க மறுக்கும் மனிதர்கள், வேறு இடங்களில் மானசீகமாக கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு உட்கார்ந்திருப்பதையும் காண முடியும். காத்திருத்தல் இப்படியாக சில நிபந்தனைகளுக்கும், சூழல் விதிகளுக்கும் உட்பட்டதாகிறது.
இரண்டு வேலைகளின் இடையே நேர்கிற காத்திருத்தலின் கணங்களைக் கூடப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிற மனிதர்களையும் காண முடியும். மருத்துவரைச் சந்திக்கக் காத்திருக்கும்போதே அலுவலகக் குறிப்புகளை ஒரு முறை சரிபார்க்கிறவர்கள், கணக்கு எழுதுபவர்கள், வாசிக்க எடுத்து வந்திருக்கும் புத்தகத்தில் விட்ட இடத்திலிருந்து மேலும் சில பக்கங்களுக்குக் கடக்கிறவர்கள், ஏதாவது எழுதுபவர்கள்.....என பல ரகம் உண்டு.
எந்திரத்தின் தயவில், கணினியின் கருணையில், மின்சாரத்தின் அருளில் இயங்குவோர் அதன் வரம் மறுக்கப்பட்ட சில வேளைகளில் காத்திருக்க நேரும்போது அன்னாரது எதிரே போய் நிற்காமல் இருப்பது நல்லது.
தேவையில்லாமல் எதுக்கு நிக்கணும், ஏன் காத்திருக்கணும் என்ற முனையிலிருந்து நோக்கும் போது, மூக்குக்கு மேல் கோபம் வருகிறது. ஓரிடத்தில் எதிர்பாராமல் காத்திருப்பது அடுத்தடுத்த வேலைகளையும் ஒத்திப் போட்டுக் கொண்டே போகிற போது எரிச்சல் எல்லை கடக்கிறது.
காத்திருத்தலின் அடுத்த நுனியில் தம்மால் பாதிக்கப்பட்டவர்களைப் பொதுவாக மனிதர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. 'நான் என்ன பண்ண, வேண்டும்னா நடந்தது...' என்ற பதில் எப்போதும் கைவசம் உண்டு. இது உளவியல் ரீதியாக ஆராய சிறந்த கருப்பொருள்.
கணையாழியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு சின்னஞ்சிறு கதையில், மருத்துவர் ஒருவர் வங்கியில் பணம் எடுக்க, காலையிலேயே போய் வரிசையில் முதல் ஆளாய் வெகு நேரம் காத்திருக்கிறார். காசாளர் வருவதே இல்லை. காசாளரோ வருகிற வழியில் பிரச்சனை செய்த ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு மெக்கானிக் கடையில் காத்திருக்கிறார். மெக்கானிக் எங்கே இருக்கிறார் தெரியுமோ, மேற்படி கதையின் முதல் காட்சியில் சந்தித்த மருத்துவரின் கிளினிக்கில் முதல் டோக்கன் வைத்துக் கொண்டு டாக்டர் எப்போது வருவார் என்று காத்திருக்கிறார்...இது எப்படி இருக்கு?
-எஸ்.வி.வேணுகோபால்
------------------------------------------------------------
காத்திருத்தல் என்பது நம் லௌகீக வாழ்வில் முக்கியமான அங்கமாகவும், அனுபவமாகவும் இருக்கிறது. எஸ்.வி.வேணுகோபால் இதனை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நானும் எழுதலாம், உங்களையும் அழைக்கலாம் என்று தோன்றுகிறது. நமக்குள் தொடர் பதிவு வலம் வந்து ரொம்ப நாளாயிற்றே! இன்று மாலையே ஆரம்பித்து விடுவோம்.
ஒரு தென்னம் பூவுக்கு
பகலெல்லாம் எங்கிருக்குமோ தெரியவில்லை. இரவானதும் சிறியதும், பெரிதுமாய் தோட்டமெல்லாம் தவளைகள் வந்து விடுகின்றன. விரிந்து சுருங்கும் வயிறுகளோடு தென்னை மரத்தடியில் உட்கார்ந்து கண்களை உருட்டியபடி ‘கொரக் கொரக்கென்று’ அவைகளில் சில பேசிக்கொண்டு இருந்தன.
வானம் கிழிந்து மின்னல் வெட்டி பெருஞ்சத்தத்தோடு இடி ஒன்று விழுந்தது. தவளைகள் கலங்கவுமில்லை. கொஞ்சங்கூட அசையவுமில்லை.
வெடித்த பாளையிலிருந்து, உதிர்ந்த தென்னம்பூ தவளையொன்றின் மீது விழுந்தது. ‘ஐயோ செத்தேன்’ என அரண்டு குதித்து திசையற்று பாய்ந்தது அது. அவ்வளவுதான் என்னமோ எதுவோவென்று மற்ற தவளைகளும் அங்கங்கு தாவிப் பதுங்கின.
தென்னை சிரித்தது.
இந்தியாவின் பிக்காஸோ
“எப்பேர்ப்பட்ட ஓவியர் அவர்” என்றன அவரது தூரிகையிலிருந்து வெளிப்பட்ட கோடுகளும், வண்ணங்களும்.
“இல்லை. அவர் எம்.எஃப்.உசேன்” என்றனர் அவர்கள்.
“இந்த மண்ணின் துகள்களிருந்து வேர் பிடித்து வந்த நான், இந்த தேசத்தின் புதல்வன்” என்று மன்றாடினார் அவர்.
“இல்லை. நீ எம்.எஃப் உசேன் மட்டுமே” என்று கல்லெறிந்தார்கள், நாடு கடத்தினார்கள் அவர்கள்.
“இந்தியாவின் பிகாஸோ அவர்” என்கிறது உலகம் இன்று.
வாயடைத்து நிற்கிறார்கள் அவர்கள்.
விழுந்து கிடக்கும் அவரது தூரிகையை எடுத்து, தன் எலும்பாகவோ, இறகாகவோ வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு தரையிறங்குகிறது ஒரு வண்ணப்பறவை.
(இன்று காலமாகியிருக்கும் உலகப்புகழ் பெற்ற அந்த இந்திய ஓவியருக்கு தீராத பக்கங்களின் அஞ்சலி!)
மேலும் படிக்க:
1. அப்படி என்ன வரைந்துவிட்டார் ஓவியர் உசேன்?
2. ஓவியர் உசேன்: இந்துமத வெறியாட்டமும் ஒத்து ஊதும் காங்கிரஸும்
இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!
சமூகத்தின் நாடித்துடிப்புகளை கச்சிதமாக அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தும் முதலாளித்துவத்தின் இப்போதைய அழுகுணி ஆட்டத்தில் அவர்தான் மதிப்பிற்குரிய ராஜா. ஊழலில் ஊறித் திளைத்த அதிகார வர்க்கத்தின் மீது சாதாரண மனிதனுக்கு கோபமும், வெறுப்பும் மண்டிக்கிடந்த வேளையில் அவரது வருகையை முதலாளித்துவ ஊடகங்கள் அறிவித்தன. தங்களது ஆக்டோபஸ் சக்தியால் ஒரே நாளில் அவர்தான் தேசத்தின் தலைவர் என்று அடையாளம் காட்டின. விடாமல் எந்நேரமும் அவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டாம் சுதந்திரப் போரை அவர் துவக்கி விட்டதாக கணிக்கின்றன.
இந்த நாடகத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஊழல் இருந்தது. சட்டங்களை வரையறை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றம் இருக்கும்போது அதன் எல்லையை மீறினார் அன்னா ஹசாரே. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது லோக்பால் மசோதாவை வரைவு செய்கிற குழுவில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தார். அப்படியொரு அதிகாரபூர்வமற்ற அதிகாரத்தை அவரே எடுத்துக்கொண்டார். உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று நேரான வழிகளில் போராடுவதாய் சொல்லிக்கொண்ட அன்னா ஹசாரேவின் குரல் புறவாசல் வழியாக தான் இப்படி நுழையக் கதவை திறக்கும்படி அரசிடம் அடாவடியாக எழுப்பியது. பாராளுமன்றம், அதன் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது அவருக்கு நம்பிக்கையில்லையென்றால் முதலில் அவரது போராட்டம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக இருந்து தேர்தலை சந்தித்து, வென்று, பாராளுமன்றம் சென்று, சட்டத்தை தாங்கள் நினத்தது போல இறுதி செய்து, அமல் படுத்த முனைந்திருக்க வேண்டும். அப்படியெல்லையென்றால், இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானதாக இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய மாட்டார். இந்த முதலாளித்துவ ஊடகங்கள் அவரை ஒரே நாளில் குப்பையில் தூக்கி எறிந்துவிடும். அரசோ ‘தேசத் துரோகி’ என குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.
அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் குறுக்கு வழியில், முதலாளித்துவத்தின் தேரோட்டவே அன்னா ஹசாரே விரும்புகிறார். லோக்பால் மசோதாவை இவரெல்லாம் சேர்ந்து வரைவு செய்வார்களாம். அதை பாராளுமன்றம் இறுதிப்படுத்துமாம். விளக்கெண்ணய்த்தனமாக இல்லை இது? இதற்குத்தான் இத்தனை செய்திகளும், ஆரவாரங்களும் பேரிரைச்சலாய் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
எல்லாம் இந்திய முதலாளிகளின் திட்டப்படியே வெற்றிகரமாக அரங்கேற்றப்படுகிறது. இந்த சிவில் சமூகத்தின் மத்திய தர வர்க்கத்தில் ஒரு பகுதி எப்போதும் போல், எதையும் யோசிக்காமல், ‘தங்கள் தேவ தூதன் வந்துவிட்டார்’ என சட்டென தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொள்கின்றனர். இருண்ட இந்தியாவின் ஓளிவிளக்கு அவர்தான் என வாய் கிழிய பேசுகின்றனர். அவர் குறித்து கேள்விகள் எழுப்பினால் ‘யாருமே பூனைக்கு மணி கட்டவில்லை, இவராவது முன் வந்திருக்கிறாரே” என வியாக்கியானம் வேறு. ஐயா, இந்த லோக்பால் மசோதா என்றால் என்ன, யார் யாரெல்லாம் இதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் என்று இருபது வருட வரலாற்றை கொஞ்சமேனும் அறிந்துகொண்டு பேசுங்கள் என்றுதான் அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. அவை எல்லாவற்றையும் நேற்று வரை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் இன்று இவர் ஒருத்தர் முகத்தின் மீது மட்டும் வெளிச்சம் காட்டியதும் ஏன் இப்படி ‘கண்டுகொண்டேன்’ என துள்ளிக் குதிக்கிறார்கள்.
முதலாளித்துவ ஊடகங்கள் இவ்வளவு மெனக்கெட்டு இவர்தான் இந்தியாவில் ஊழல் எதிர்ப்புக்கென்றே பிறந்தவராக ஏன் இப்படி ஜோடனை செய்கின்றன என்று யோசிக்க வேண்டாமா? இதோ, மணிப்பூரில் ஷர்மிளா என்னும் பெண் ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, பத்து வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார் என்னும் செய்தி எத்தனை பேருக்குத் தெரியும். அவரை சிறையிலடைத்தும், வலுக்கட்டாயமாக குழல் மூலமாக உணவை அவருக்குள் திணித்தும், ஏற்றுக்கொள்ளாத அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அலைக்கழித்தாலும், விடாமல் இராணுவத்திற்கும், இந்திய அரசுக்கும் எதிராக தன் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார் அவர். இந்த ஊடகங்கள் அவரை ஏன் நமக்குத் தொடர்ந்து காட்டுவதில்லை. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு தெரிவிக்கும் ஆதரவை ஷர்மிளாவுக்கு ஏன் நாம் தெரிவிக்க முடியவில்லை?
இதே ஊழல் எதிர்ப்புக்காக, நாளை பெரும் மக்கள் போராட்டம் வெடித்தால் இதே முதலாளித்துவ ஊடகங்கள் தங்கள் முகங்களை வேறு திசையில் திருப்பிக் கொள்ளும். அப்படி எதுவும் விபரீதமாக நடந்துவிடக் கூடாது என்று அனுப்பப்பட்ட தூதரே அன்னா ஹசாரே. தெளிவான பார்வை, தீர்க்கமான செயல்திட்டம் இல்லாமல் விளக்கெண்ணய்த்தனமான குழப்பங்களுக்குள் மக்களின் கோபத்தையும், வேகத்தையும் நீர்த்துப் போகவைக்கவே இந்த ஏற்பாடுகள். பெரும் ஆதரவைத் திரட்டி, மிகப் பிரம்மாண்டமானதாய் அவர்களே காட்டி, கடைசியில் அன்னா ஹசாரேவால் கூட முடியவில்லை என அவநம்பிக்கையையும் விதைத்து, ஒரு தலைமுறையை காயடைக்கும் வேலையே இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே, ஊழலை ஒழிக்க வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்கிறார். அவர் சமீபத்தில் சொன்னதைக் கேளுங்கள் “மன்மோகன் சிங் நல்ல மனிதர். நம்பிக்கையானவர். சோனியா காந்திதான் அவரை கட்டுப்படுத்துகிறார்”. அதாவது இந்திய முதலாளிகளுக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட மன்மோகன்சிங் மீது எந்தத் தவறும் இல்லையாம். மொத்தப் பழியையும் சோனியா காந்தி மீது சுமத்தி, மன்மோகன்சிங்கை பாதுகாப்பதில் இந்திய முதலாளிகளுக்கு இருக்கும் அக்கறையே அன்னா ஹசாரேவிடமிருந்து இப்படி வெளிப்படுகிறது.
இவரை காந்தியென சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ஒத்துழையாமை இயக்கமும், வெள்ளையனே வெளியேறு இயக்கமும், மக்களின் போராட்டமாக பரிணாமம் கொண்டபோது காந்தி தனது அஹிம்சைக்கு எதிரான போராட்டங்களென அவற்றை நிறுத்திக்கொண்டார். அப்போது ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா தங்கள் வசம் வரவேண்டும் எனும் அபிலாஷை கொண்ட இந்திய முதலாளிகளின் ஆதரவு காந்திக்கு இருந்தது. அதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவே இப்போது அதே முதலாளிகள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
ஆனால், காந்தியின் கை மீறி போராட்டங்கள் மக்களின் கைகளுக்கு வந்த பிறகே, வெள்ளையன் இந்தியாவை விட்டு புறப்படும் காலம் தனக்கு நெருங்கியதை உணர்ந்தான். அதுதான் வரலாறு இந்தியாவுக்கு. ஊழலுக்கும்தான்.
பொறுமையற்றவன்
அந்தச் சிறுவனிடம் அவனது பாட்டி ஒரு வெங்காயத்தைக் கொடுத்து, “புதைத்து வைத்து, தினமும் தண்ணீர் ஊற்று. செடியாகும். வேரிலெல்லாம் வெங்காயம் முளைக்கும்” என்றார்கள். அப்படியே செய்தான். ஒவ்வொரு நாள் காலையிலும், மண்ணைத் தோண்டி வெங்காயம் முளைத்திருக்கிறதா என பார்த்து, ஏமாந்து போனான். திரும்பவும் மண்ணில் புதைத்து, தண்ணீர் ஊற்றினான். அடுத்தநாள் திரும்பவும் தோண்டி பார்த்தான். வெங்காயம் முளைக்காமலேயே போனது. “பொறுமையற்றவன்” என்றாள் பாட்டி.
அதே அவனிடம் பக்கத்து வீட்டுச் சிறுமி ஒரு ரோஜாக் கன்றைக் கொடுத்தாள். பத்திரமாக மண்ணில் பதித்து தினமும் தண்ணீர் ஊற்றி வந்தான். ஒருநாள் அது முதல் பூ பூத்திருந்தது. அவனது முகமும் சேர்ந்து பூக்க அன்று முழுவதும் வீட்டுக்குள் வருவதும், வெளியே சென்று ரோஜாவைப் பார்ப்பதுமாயிருந்தான் அந்தப் பொறுமையற்றவன்..
ராம்தேவ் உண்ணாவிரதம்: எகிப்து புலிகளும், இந்தியப் பூனைகளும்!
காற்றடைத்த பலூன் ஒரே நாளில் உடைந்துவிட்டது.
ராம்தேவிடம் கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த மன்மோகன் அரசு நேற்று இரவில் மிஞ்சிவிட்டது. ஜாலியாக களைகட்டியிருந்த உண்ணாவிரதப் பந்தலில், ராம்தேவை கைதுசெய்ய டெல்லி போலீஸின் முஸ்தீபுகள் தெரிந்தன. மேடையிலிருந்து துள்ளி பக்தகோடிகள் மத்தியில் குதித்து, வீராவேசமாகப் பேசினார் யோக குரு. சினந்த பக்த கோடிகள் போலீஸின் மீது கற்களை வீசினர். டெல்லி போலீஸ் அதன் முகத்தை லேசாய்த்தான் காட்டியது. சில கண்ணீர்ப் புகைகுண்டுளும், சில லத்திகளும் போதுமானதாய் இருந்தன. அவ்வளவுதான். “ஊழலை ஓழிக்காமல் உஜ்ஜய்னி திரும்ப மாட்டேன்”, என்றும், “என் கடைசி மூச்சு வரை கறுப்புப் பணத்தை எதிர்த்து போராட்டத்தைத் தொடருவேன்” என்றும் சூளுரைத்த யோக குருவை காணாமல் ஆக்கிவிட்டனர் போலீஸார். திசை தெரியாமல் பக்தகோடிகள் தெறித்து ஓட, ராம்லீலா மைதானம் காலியாகிப் போனது.
போராடுகிற தொழிலாளர்களை, இதே டெல்லியில், இதே போலீஸ் எத்தனையோ முறை கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறது. ஈவிரக்கமின்றி அடக்குமுறைகளை ஏவியிருக்கிறது. அப்போதெல்லாம் நடிக நடிகையரின் உடல்களிலும், அந்தரங்கங்களிலும் மோப்பம் பிடித்துக் கிடந்த தொலைக் காட்சிகள் மூச்சுவிடாமல் இன்று காலையிலிருந்து ஒரே ராம்தேவ் பஜனை செய்துகொண்டு இருக்கின்றன. அதிலும் இந்த என்.டி.டிவி, டைம்ஸ்நவ் போன்ற இந்தியாவின் பிரதான ஆங்கிலச் செய்தி தொலைக் காட்சிகள் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை. எதோ வானமே இடிந்துவிட்டது போல “ஐயோ, ஐயோ” என பெரும் கூப்பாடு போட்டு தொலைக்கின்றன.
“காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை” என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். "எமர்ஜென்ஸி காலத்து இந்தியா போலிருக்கிறது” என்று பதறுகிறார் அத்வானி . “ஜனநாயகம் செத்துவிட்டது” என்கிறார் சமூக ஆர்வலர்களின் கொம்பாக முளைத்திருக்கும் அன்னா ஹசாரே. “மன்மோகன் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும்” வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள் வலதுசாரி அறிவுஜீவிகள். எல்லோரையும் தேடித் தேடி குரல்களை சேகரித்துக் கொண்டு இருக்கின்றன ஊடகங்கள்.
ஒரு சாதாரணமான போராட்டத்தை ஊதி ஊதிப் பெருக்க வைத்த ஊடகங்களுக்கும், வலதுசாரிக் கும்பல்களுக்கும் கண்முன்னால் அந்தப் போராட்டம் மிகச் சாதாரணமாக முடிந்து போனதை தாங்கிக்கொள்ளமுடியாத பொருமல்கள் தெரிகின்றன. அவர்கள் கட்டியிருந்த மனக்கோட்டைகள் எல்லாம் மண்கோட்டையாகித் தரைமட்டமானப் பார்க்க முடியாத பதற்றம் இது. எதாவது செய்து, போராட்டத்தை உசுப்பி விட முடியுமா என பார்க்கிறார்கள். இங்குதான் புலிகளைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொண்ட கதை வருகிறது. அதுவும் காவிப்பூனைகள்!
சமீப காலங்களில் எகிப்தில் ஆரம்பித்து சில வளைகுடா நாடுகளில் ஆளும் அரசுக்கெதிராக மாபெரும் மக்கள் திரள் அந்நாட்டின் தலைநகர்களில் சங்கமித்து பெரும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது. அந்த நிகழ்வுகளை விவாதித்த ‘டைம்ஸ்நவ்’ தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர், “இந்தியாவில் இதுபோன்ற மக்கள் எழுச்சிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?” எனக் கேட்டார். அது விளையாட்டான கேள்வி அல்ல. அதிலிருந்துதான் அன்னா ஹசாரேவும், ராம்தேவும் புறப்பட்டு வந்தார்கள்.
கடுமையான விலைவாசி உயர்வும், பெரும் ஊழல்களும் மலிந்த காங்கிரஸ் ஆட்சி மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதுதான் தருணம் என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற வலதுசாரிக்கும்பல்கள் தங்கள் திட்டத்தை வகுக்கின்றனர். தாங்கள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்தால் மக்களின் ஆதரவு பெரிதாகக் கிடைக்காது என்று, அரசியலுக்கு அப்பாற்பட்டு புனிதர்கள் போன்றிருக்கும் அன்னா ஹசாரே, ராம்தேவின் பின்னால் நின்று ஊழலுக்கு எதிரான போர்களை நடத்த முன்வருகிறது. அப்போதும் மக்களை வாட்டும் விலைவாசி உயர்வை அவர்கள் கையிலெடுக்கவில்லை. நாடு, நாட்டின் பெருமை, அதற்கு களங்கம் சேர்க்கும் ஊழலை மட்டுமே பேசினார்கள். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை முன்வைக்காமல் நாட்டை முன்வைத்துத்தான் வலதுசாரிகள் எப்போதும் மக்களைத் திரட்டுவார்கள். அதுதான் நடந்தது.
இரண்டு போராட்டங்களையும் அவர்கள் இந்தியத் தலைநகரை குறிவைத்தே நடத்தினார்கள். இணையம், தொலைக்காட்சிகளில் பெருமளவுக்கு செய்திகள் பரிமாறப்பட்டன. மக்களின் ஆதரவை திரட்டினார்கள். இதன் அரசியல் அறிந்த/அறியாத மக்கள் “தேவன் வந்துவிட்டான்’ என ஆரவாரம் செய்தனர். அன்னா ஹசாரேவுக்கு திரண்ட ஆதரவு உற்சாகம் தந்தது. அடுத்து ராம்தேவை உசுப்பி விட்டனர். ஊடகங்கள் மூலம் அலப்பறை செய்தனர். ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பியினரையும், ராம்தேவின் பக்தகோடியினரையும் மெல்ல மெல்ல டெல்லியில் திரட்டி, மக்கள் வெள்ளத்தைக் காட்டி, ‘மாபெரும் கிளர்ச்சி’யாக்கிட நினைத்தனர். இதைத்தான் முந்தைய பதிவில் அரசியல் விபரீதம் என குறிப்பிட்டு இருந்தேன். எல்லாம் பொசுக்கென்று போனது. வஞ்சக மூளை கொண்ட அரசு முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டது. அதைத் தாங்க முடியாத வேகத்தைத்தான் இன்றைய கூச்சல்களில் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் அரசு மக்களுக்கும், தேசத்துக்கும் விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் துயரங்களிலும், வலியிலும் தோய்ந்து எழுந்த போராட்டங்களுக்குத்தான் கிளர்ச்சிகள் என்று பெயர். இதுபோன்ற ஜிகினாப் போராட்டங்களுக்கும் புறவாசல் முயற்சிகளுக்கும் அல்ல.
ராம்தேவ் உண்ணாவிரதம்: விசித்திரங்களும், விபரீதங்களும்!
ஊழலை ஒழித்து, சமூகத்தை சுத்தப்படுத்தும் படங்களை எடுக்கிற இயக்குனர் ஷங்கருக்கு இன்னொரு கதாநாயகர் கிடைத்துவிட்டார். அவரைப் பார்த்து, எல்லாம் வல்ல அரசே நடுநடுங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரைச் சுற்றி காமிராக்களைத் தூக்கியவாறு முண்டியடித்துக் கிடக்கின்றன ஊடகங்கள். இந்த தேசத்தின் 99 சதவீதம் மக்களுக்கு அவர் யார், அவர் என்ன செய்கிறார், அவரது கொள்கைகள் என்ன என்று தெரியாமல் இருக்கிறபோது, தேசத்தின் பிரதமர் முதற்கொண்டு இந்த யோகா குரு ராம்தேவைப் பார்த்து பதறுவது விசித்திரமாயிருக்கிறது.
இரண்டு நாள் யோகா பயிற்சி ஒன்றிற்காக மதுரைக்கு சென்று வந்தார் நண்பர் ராமு. பார்க்கிறவர்களிடமெல்லாம், அந்த அனுபவங்களை ‘ஆஹா, ஓஹோவென’ பேசிக்கொண்டேயிருந்தார். என்னிடமும் சொன்னார். நான் வழக்கம்போல் முதலில் ஆர்வம் காட்டவில்லை. நடத்திய குருவின் பெயர் எதோ ‘சத்குரு’ என்று சொன்னதாக ஞாபகம். ஆயிரம் ருபாய் கட்டணம் என்றபோது, அதிகமாகத் தெரிந்தது. கேட்டேன். “இதச் சொல்றீங்க. ஆயிரம் ருபாய் கொடுத்தாலும் நமக்கு பின்னால்தான் வரிசை. பத்தாயிரம் கொடுக்கிறவர்களுக்கு முன் வரிசை. எப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் வருவார்கள் தெரியுமா? ஒரே கார்களாய்த்தான் வெளியே நிற்கும்.” என்று நிறுத்தினார். பெரிய பெரிய போஸ்ட்ல இருக்குறவங்க, பிஸினஸ்மேன் எல்லாம் வருவார்கள். ஆனாலும் அவர்களுக்கு எந்த தனிப்பட்ட சலுகையும் கிடையாது. அவர்களும் எல்லோர் போலவும் தரையில்தான் உட்கார வேண்டும். தாமதமாக வந்தால் மொத்த மைதானத்தையும் இருமுறை சுற்றி வர வேண்டும். அங்கு டிஸிப்ளின்தான் முக்கியம். ...” இப்படி தனக்கே புல்லரித்துக்கொண்டு சொல்லிக்கொண்டேயிருந்தார்.
அப்படி என்ன சொல்லிக்கொடுப்பார்கள் என்று கேட்கிறபோது, பயிற்சிதான் என்றார். என்ன பயிற்சி என்றபோது, “அடுத்தமுறை நீங்களும் வாங்க. நேரில் பாருங்க. உடம்பும், மனசும் புதுசான மாதிரி இருக்கும். தொடர்ந்து அந்த பயிற்சிகளை விடாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் பலன் இருக்கும். எனக்கு இந்த முட்டு வலித்துக்கொண்டே இருந்தது ரொம்ப நாளாய். இப்போது ஒரு பிரச்சினையுமில்லை.” என்றார்.
“நீங்க நினைக்கிறது மாதிரி இல்லை” என்று நான் நினைத்துக்கொள்ளாததையெல்லாம் அவரே தத்து எடுத்துக்கொண்டு ராமு தொடர்ந்தார். “அவருக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிகிறது! உலகத்தில் நடக்கிற விஷயங்களையெல்லாம், மனிதர் அந்தந்த இடத்துக்குப் பொருத்தமா வகுப்பில் பேசுகிறார். சிரிக்கவே மாட்டார். நம்மையெல்லாம் சிரிக்க வைக்கிறார். இந்த அரசியல்வாதிகளைக் கடுமையா பிடித்துச் சாடுகிறார். நம்மைப் பிடித்த பிசாசுகள் என்று சொல்கிறார். எல்லா அநியாயங்களுக்கும் அவர்களே காரணமாயிருக்கின்றனர் என்கிறார். அவர்கள் திருந்தினால் நாடே திருந்தும் என்கிறார். சாமியார் மாதிரி இருக்கிறார், ஆனால் இவ்வளவு நாட்டு நடப்புகளைப் பேசுகிறாரே என ஆச்சரியமாக இருந்தது” என்றார். நான் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
இதுபோன்று பல நகரங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டு இருப்பதையும், அங்கங்கு இதுபோன்ற ‘சத்குரு’க்கள் கிளம்பியிருப்பதையும் சாதாரண மக்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கு பெரும்பாடாய் இருக்கிறது. நோய் நொடி என்று வந்தால், அருகிலிருக்கிற ஒரு டாக்டரைப் பார்த்து, ஊசி மருந்துகளை வாங்கிப் போட்டுக்கொண்டு, படுத்து எழுந்திரிக்கின்றனர். டீக்கடைகளில் பேப்பர் படித்து அரசியல் பேசி, போய்க்கொண்டு இருக்கின்றனர். நின்று நிதானமாய் இதையெல்லாம் அறிவதற்கு நேரமுமில்லை. வாழ்க்கையுமில்லை. அவர்களை அப்புறப்படுத்திய மைதானங்களில், ஆரோக்கியத்திற்காகவும், தனிமனித ஒழுக்கத்திற்காகவும் தாடிவாலாக்களான இந்த ரிஷிகளும், சத்குருக்களும் , ஆனந்தாக்களும் அவதரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராமுக்கள் வசியம் செய்யப்படுகின்றனர்.
இந்த ராமுக்கள் யார்? பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் அப்படியே கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் தெரு வழியே ஒடுகிறவர்கள். தனக்கு எல்லாம் தெரியும் என நம்புகிறவர்கள். அவரை விட ஒருத்தருக்கு ஒன்று தெரியும் என ஏற்றுக்கொண்டால், அவரை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடுகிறவர்கள். தனிமனிதர்கள் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என பகுத்தறியும் சிந்தனையற்று உறுதியாய் இருப்பவர்கள். எந்நேரமும் தன்னைப் பற்றியும், தன் வாழ்க்கைப் பற்றியும் நினைப்பவர்கள். அடுத்தவர்களின் குற்றங்களைக் கண்டு பொருமும் இவர்கள், தங்களிடமும் அதே கோளாறுகள் இருப்பதை அறியாதவர்கள். அதற்கான காரணங்களையும் ஆராயதவர்கள். மேல்தட்டு வாழ்வின் மீது மோகமும், ஏக்கமும் கொண்டவர்கள். கீழ்த்தட்டு மக்களின் மீது வலிய ஒரு இரக்கத்தைக் காட்டி பெருமிதமும், திருப்தியும் அடைவார்கள். இவர்களே சத்குருக்களின் பக்த கோடிகளாகி பரவசமாகின்றனர். ஆயிரம் ருபாய் கொடுத்து கடைகோடியில் இருக்க வேறு யார் கிடைப்பார்கள்?
அமைப்பின் மீது மக்களின் கவனமும் கோபமும் திரும்பாமல், தனிமனிதர்களின் மீது மட்டும் வைத்திருக்க உதவும் இதுபோன்ற சத்குருக்களை அரசும், ஊடகங்களும் பேணி வளர்க்கின்றன. பொதுவாழ்வில் குற்றங்களும், கறைகளும் படிந்து போயிருக்கும் பெரும்புள்ளிகள் தங்கள் முகங்களை மென்மையானதாய் காட்டிக்கொள்ள சத்குருக்களை அண்டுகிறார்கள். இவர் போன்றவர்களை பின்பற்றுவதாலேயே தாங்களும் தனிமனித ஒழுக்க ஸ்நானம் பெற்றுவிட்டதாய்க் கருதும் ராமு போன்ற பக்தகோடிகள் அவருக்காக கையுயர்த்தி நிற்கிறார்கள். சத்குருக்களின் பிம்பங்களை மெல்ல மெல்ல இந்த பெரும்புள்ளிகளும், ஊடகங்களும், ராமு போன்ற நண்பர்களும் சமூகத்திற்குள் செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். சத்குருக்கள் உயரத்திற்குச் செல்கிறார்கள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு புனிதர்களாகின்றனர்.‘தன் நாடு, தன் மக்கள்’ என்று இந்த சத்குருக்கள் ஒரு வட்டம், ஒரு மாவட்டம், ஒரு மாநிலம், ஒரு தேசம் என தங்கள் ஆளுகைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அங்கங்கு அவர்களது ஆசிரமங்களும், மடங்களும் ஏற்படுத்தப்பட்டு தொழில் அபிவிருத்தியடைந்து, அமோகமாய் நடக்கிறது. அதற்குத்தானே எல்லாக் கூத்துக்களும்!
அப்படியொரு ஒரு குருதான் ராம்தேவ் என்னும் யோகா குருவும். பெரிய பெரிய ஸ்டேடியங்களில் நடக்கும் அவரது பயிற்சிகளின் குறைந்த பட்சக் கட்டணம் ஐநூறு ருபாய் என்கிறார்கள். முதல் வரிசையில் பெரும்புள்ளிகளான கோடீஸ்வரர்களும், அமைச்சர்களும், ஊடக அதிபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்துகிற ஷோவைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம். டெல்லியில் இன்று ஆரம்பித்திருக்கும் அவரது உண்ணாவிரதத்திற்கு, இந்த பெரும்புள்ளிகள் எல்லாம் சேர்ந்து 18 கோடிக்கும் மேல் செலவழித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். வெறும் பணம். எப்படியும் ஊழலையொழித்து சாதாரண மக்களுக்கு சுகவாழ்வைக் கொண்டுவந்து விடுவது என இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இது ‘ஊழல் ஒழிப்பு சீசன்’ போலும். ஏற்கனவே அன்னா ஹசாரே என்பவர் உண்ணாவிரதம் இருந்து தேசத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுப் போயிருக்கிறார். மக்களிடம் இந்த கோஷம் எடுபடுகிறது என்பதையறிந்து அடுத்து ஒருவர் கிளம்பி வந்திருக்கிறார். கடந்த நான்கைந்து நாட்களாக ராம்தேவ்தான் முதற்பக்கச் செய்தி. ஊழலை ஒழிக்கப் போகிறேன், கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறேன்’ என்று உஜ்ஜையினிலிருந்து அந்த யோகா குரு தனி விமானத்தில் டெல்லி வந்ததிலிருந்து பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அவர் ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் மாறி மாறி அவர் கன்னத்தில் அறைந்தபோதெல்லாம் கூட அசையாமல் இருந்த கல்லுளிமங்கரான மன்மோகன் சிங்கிற்கே பதற்றம் பற்றிக்கொண்டது. அமைச்சர்களை உடனே அனுப்பி அவரிடம் பேசச் சொல்கிறார். ராம்தேவ் பிடிவாதம் பிடிக்கிறார். அரசுக்கு நெருக்கடி என்று சொல்லப்படுகிறது. என்னய்யா நெருக்கடி? அதுதான் புரியவில்லை.
சென்ற பிப்ரவரி மாதத்தில் விலைவாசி உயர்வினை எதிர்த்து இலட்சக்கணக்கில் இடதுசாரிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தினர். பெரும் மனிதத் திரளாகக் காட்சியளித்த அந்த கோலத்தை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் அமைச்சரவையை அவசரம் அவசரமாகக் கூட்டவில்லை. போலீஸ்களைக் குவித்து அடக்குமுறைதான் செய்தது அரசு. இப்போது அதே அரசு கையைப் பிசைகிறது. இந்திய முதலாளித்துவ அரசியல் இங்குதான் இருக்கிறது.
யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி நிபுணராக கருதப்படும் இந்த ராம்தேவ் ஹரித்துவாரில் நடத்தி வந்த திவ்ய யோகா பார்மஸியில் 2006ம் வருடம் ஒரு பிரச்சினை எழுந்தது நினைவிருக்கலாம். பனிரெண்டு மணி நேரத்துக்கும் மேலே வேலை பார்த்தும் ரூ.1200/- மட்டுமே ஊதியம் கொடுத்து வந்ததால், அங்குள்ள ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினர். அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டது பார்மஸி. அப்போது அந்த ஊழியர்கள் பல உண்மைகளை தெரிவித்தனர். தனது மருந்துகளை தயாரிப்பதற்கு மனிதக் கபாலங்களையும், மிருகங்களின் உடல் பாகங்களையும் ராம்தேவ் பயன்படுத்துகிறார் என்பது அதில் பிரதானமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான பிருந்தாகாரத் இதனை வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவித்தார். ராம்தேவின் பக்தகோடிகளும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும், வி.ஹெச்.பியினரும் பிருந்தாகாரத்தின் உருவ பொம்மைகளுக்கு தீவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிருந்தா காரத்தின் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தாமல் மன்மோகன் அரசு ராம்தேவிடம் அப்போதும் குழைவாகவே நடந்துகொண்டது.
ஊழல் செய்யும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் ராம்தேவ். இதுதான் பாசிச சிந்தனையின் ஊற்றுக்கண். தனிமனிதர்கள் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என்பது ஒரு தத்துவ ஹம்பக். ஹிட்லரும் இதுபோலவே பேசியிருக்கிறான். ஆர்.எஸ்.எஸ் மற்றும், வி.ஹெச்.பியினர் ராம்தேவை ஆதரிக்கும் காரணம் இங்கு தெளிவாகிறது. ஊழல் பற்றி வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு நாறிப் போன பா.ஜ.க இப்போது ராம்தேவின் பின்னால் அடைக்கலம் கொள்கிறது. தங்கள் கோஷங்கள், புனித வேஷங்கள் எல்லாம் காணாமல் போய் அரசியல் செல்வாக்கு இழந்து போன இவர்கள்தான் ராம்தேவ் என்னும் புறவாசல் வழியாக மீண்டும் பிரவேசிக்க எத்தனிக்கின்றனர். ஆனால் ஊழல்களில் எந்த மாற்றங்களும் ஏற்படாது. இது வலதுசாரி வியூகம்.
தூக்கிலிடவேண்டியது மனிதர்களை அல்ல. ஊழல் செய்வதற்கென்றே சகல அதிகாரமும், எல்லா வழிகளும், வழிவழியாய் முன்னுதாரணங்களும் கொண்டிருக்கிற இந்த அமைப்பைத்தான் முதலில் தூக்கியெறிய வேண்டும். மாற்றங்கள் படிப்படியாக உருவாகும். இது இடதுசாரி வியூகம்.
இடதுசாரிகளும், இடதுசாரி தொழிற்சங்கங்களும் ஊழலுக்கு எதிரான தீவிரமானப் பிரச்சாரத்தையும், தொடர்ச்சியானப் போராட்டங்களையும் முன்னெடுக்காத சமூகத்தில் இப்படித்தான் குருக்களும், ரிஷிகளும், ஆனந்தாக்களும் அலப்பறை செய்வார்கள் போலும்! அதோ உண்ணாவிரதப் பந்தல் ஆட்டமும் பாட்டமுமாய் இருக்கிறது, ஒரு அரசியல் விபரீதத்தை முன்வைத்து.
வம்பரங்கம் 16 : கருணாநிதியின் மௌனம்
தங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது ஆளுக்கு முதலில் அதை மறுத்து அறிக்கை விடுத்தார் கருணாநிதி. தி.மு.கவுக்கு எதிராக சதி என்று கேடயத்தைத் தூக்கிப் பார்த்தார்.
அடுத்து தனது மகள் கனிமொழி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த போது தன் குடும்பத்துக்கு எதிரான சதி என்று பொங்கி எழுந்தார். உயர்நிலைக்குழுவை அவசரமாகக் கூட்டி வியூகம் வகுத்தார்.
இதோ... தயாநிதி மாறன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சன் டிவியின் தகிடுதத்தங்களும் ஊரெல்லாம் பேசப்படுகிறது.
மாறன் மத்திய அமைச்சர் மட்டுமல்ல. பேரனும் கூட. ஆனால் இப்போது மட்டும் கருணாநிதி ஏன் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்?
சீட்டுக்கட்டு - இரண்டாம் அத்தியாயம்
பரவாயில்லை, உங்களிடம் ஒரு நிதானம் இருக்கிறது. இது ஒரு ஆட்டக்காரனுக்குத் தேவை. தருமதுரை இப்படியல்ல. சீட்டுகள் போட்டுக்கொண்டு இருக்கும்போதே எடுக்க ஆரம்பித்து விடுவார். அப்படியே தொடர்ந்து அடுக்கவும் மாட்டார். சீட்டுகள் சரியில்லையென்றதும் போடப்பட்டுக் கொண்டு இருக்கும் தனக்கான சீட்டுகளின் மீது வெறுப்புடன் வைத்துவிட்டு ஒரு தவிப்போடு காத்திருப்பார். திரும்ப மொத்தமாக எடுத்து அடுக்கிப் பார்ப்பார், எதாவது வந்திருக்காதாவென.
சீட்டுகளை எடுத்து விரிக்கிற அந்தக் கணத்தில் ஏற்படுகிற உந்துதல் அலாதியானது. உங்களுக்கு மட்டுமேயான ரகசியத்தை மெல்ல அவிழ்க்கிறீர்கள். ஒன்றிலிருந்து ஒன்றாய் விலக்கி முழுசாய் விரித்து மௌனமாய் ஆராய்கிறீர்கள். அடுத்து என்ன செய்வது என பெருமூச்சோடு அல்லது புன்னகையோடு கீழே பார்க்கிறீர்கள். எதிரே இருப்பவனை அளக்கிறீர்கள்.
என் சீட்டுகளை விரிக்கிறேன். ஒன்றில், கிரிக்கெட் பந்தைத் துரத்திக் கொண்டு ராஜேஷ் அவனது பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறான். இன்னொன்றில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானம் ஒன்று மோதி புகையாய் இருக்கிறது. இடையில் உள்ள ஒரு சீட்டில் தருமதுரை எஸ்.டி.டி பூத்தில் உட்கார்ந்திருக்கிறார். தனியாக ஒரு ஓரத்தில் ‘என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே’ என்று கண்கள் தெரியாத விக்ரம் பாடிக்கொண்டு இருந்தார்.
ஒரு தேர்ந்த ஆட்டக்காரன் தனக்கு போடப்பட்டு இருக்கும் சீட்டுகளை அதே வரிசையோடு விரித்துப் பார்ப்பான். அங்குமிங்கும் இருக்கிற சீட்டுகளை ரம்மிக்காகவும், ஜோடிக்காகவும் பக்கத்தில் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளாமல், அப்படியே ஒவ்வொன்றின் பூர்வீகத்தை அறிய முற்படுவான். ஏற்கனவே ஆடிய எந்த ஆட்டத்தின் சீட்டுகள் அவை என தனது ஞாபகங்களைக் கிளறித் தேடுவான். அதன் மூலம் எதிராளியின் கைகளில் இருக்கும் சீட்டுகளை ஓரளவுக்கு அவனால் புரிந்துகொள்ள முயற்சிப்பான். ஆந்திராவில் கேசவ்பூரிலிருந்து வந்த பிறகு தருமதுரை கடைசியாக ஆடியதன் சொச்சங்கள் இந்த சீட்டுகள் என்பதை கண்டுகொள்ள ரொம்ப நேரம் ஆகவில்லை எனக்கு.
கீழே மலர்த்தி போட்டிருக்கும் முதல் சீட்டில், தனக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்குகிறார் ஜெயலலிதா. அதையெடுத்து வைத்துக்கொண்டு, திருச்செந்தூர் கோவிலில் பெண்கள் வரிசையில் பெரியநாயகி விளக்கு பூஜையில் உட்கார்ந்திருப்பதாக இருக்கும் சீட்டை நீங்கள் கீழே போடுகிறீர்கள். எடுத்து தருமதுரையின் பக்கத்தில் சேர்க்கிறேன். பெரியநாயகியின் முகத்தில் ரொம்ப காலம் கழித்து ஒரு நிம்மதி தெரிகிறது. மூத்தவன் பொன்பாண்டி சென்னையிலும், இளையவன் ஜெயபாண்டி மதுரையிலும், மகள் மங்களம் ஆறுமுகநேரியிலும் ஆளுக்கொரு வீடு கட்டிக்கொண்டு விட்டார்கள். தான் பிறந்து வளர்ந்த ஆறுமுகநேரியிலேயே பார்த்த முகங்கள், பழகிய உறவுகளுடன் மிச்ச காலம் திரும்பியிருக்கிறது.
பூத்தில் உட்கார்ந்து தருமதுரை சாலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரது வாழ்வின் பெரும்பகுதி இப்படி சாலைகளை ஒட்டியே இருக்கிறது. கட்டைதொட்டி வைத்திருந்த அம்டன்வாராதியில் டிராம் வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிய காலம் இப்போது கற்பனைகளுக்கு அப்பால் சென்றிருக்கிறது. முக்காணி ரைஸ்மில்லுக்கு எதிரே இருந்த சாலை, அவர் நாலாம் பாரம் படித்த காலத்து சென்னையின் மௌபரிஸ் சாலை போல மரங்களடர்ந்து இருந்தாலும், அதைவிட அதிகமான புழக்கம் கொண்டதாய் இருந்தது. அவரது சொந்த ஊர் மன்னன்விளை மந்தையில் சாராயக்கடைக்கு எதிரே இருந்த சாலையில் மாட்டு வண்டிகளோடு டவுண்பஸ்களும் ஓடிக்கொண்டு இருந்தன. எல்லா சாலைகளிலும் மக்களின் கூட்டம் தாங்க முடியாமல் இருக்கிறது. எங்கோ போய்க்கொண்டும், வந்துகொண்டும் மக்கள் இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கூட சைக்கிள்களும், சில ஸ்கூட்டர்களும் தென்பட்ட இந்த சாலைகளில் பைக்குகளும், கார்களும், பஸ்களும், லாரிகளுமாய் தென்படுகின்றன. நடந்தும், சைக்கிளிலும் செல்கிறவர்களும் எப்போதும் போல இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை யார் கவனிக்கிறார்கள். தருமதுரை இப்போதும் ஒரு இற்றுப்போன சைக்கிள் வைத்திருக்கிறார்.
சரியாக இந்த நேரத்தில் சன்னாசிமுத்துவை யாரோவென்று கீழே போடுகிறீர்கள். அவரை உங்களுக்குத் தெரியாது. இந்த ஆட்டத்தில் அவரும் ஒரு முக்கிய சீட்டுதான். எடுத்துக் கொள்கிறேன். தருமதுரை கசப்போடு முகத்தைத் திருப்பிக்கொள்கிறார். அவரைவிட பத்துப் பதினைந்து வருடம் சிறியவர்தான் சன்னாசிமுத்து. பம்பாயில் இருக்கிறார். முப்பது வருசங்களுக்கு முன்னால் எதோ கடலைமிட்டாய்க் கடையில் வேலை என்று போனவர். அப்புறம் அவரேச் சின்னதாய் ஒரு கடை வைத்து, அவரது தம்பி தவசிமுத்துவையும் அழைத்துக்கொண்டு போனார். கீழத் தெருவில் இருந்த அவர்களது குடிசை வீடுகளை காரை வீடுகளாய்க் கட்டிக் கொண்டனார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் ஊரில் நிலங்களை வாங்கத் துவங்கினார்கள். ஊர்த்திருவிழாவுக்கு வரும்போதெல்லாம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்தார்கள். மேலத்தெருவில் தருமதுரை, செல்லத்துரை வீடுகளின் ஓடுகள் எல்லாம் கரும்பழுப்பு நிறத்தில் பழமை கொண்டு விட்டிருந்தன. தருமதுரை சின்னப்பையனாய் இருந்தபோது சன்னாசிமுத்துவின் குடும்பத்தார் தேரிக்காட்டுக்குள் சென்று சுள்ளி பொறுக்குவார்கள். அவர்களது அம்மா மத்தியானங்களில் தவறாமல் வேல்துரையின் வீட்டுக்கு ஊர்க்கதைகள் பேசி குழந்தைகளுக்கு வடிதண்ணீர் வாங்கிக் செல்வார். சன்னாசிமுத்துவின் அப்பா இன்னாசிமுத்து கூலிவிளைத் திரட்டில் இருந்த வேல்துரையின் பனைமரங்களில் ஏறி பாளைச்சீவி, பதனீர் இறக்குவார். அவர் இறந்து நாளாகிவிட்டது. பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ‘இன்னாசி முத்து கலையரங்கம்’ என்று அவரது புதல்வர்கள் கட்டிக் கொடுத்து இருக்கின்றனர்.
ஊரில் இப்போது இல்லாததால், தனது ஓட்டு வீட்டைப் பராமரிக்கக் கூட தருமதுரையால் முடியாமல் இருக்கிறது. ஊர்த்திருவிழா, சொந்தக்காரர்கள் கல்யாணம், சடங்கு என்றால் கூட ஊரில் சென்று தங்குவதற்கு ஒரு நல்ல வீடு வேண்டாமா என்று கவலை கொண்டிருக்கிறார். ஓஹோவென ஒரு காலத்தில் இருந்த தெருவும், வீடும் அடையாளமற்றுப் போய்விடுமோ என கலக்கமடைகிறார். சென்னையிலும், மதுரையிலும் இருக்கிற பையன்களிடம் அதுபற்றிப் பேசினால், பெரிதாய் அக்கறை காட்ட மாட்டேன்கிறார்கள். ஊரில் என்ன இருக்கிறது, அப்பா அம்மாவுக்குப் பிறகு அங்கு யார் சென்று இருக்கப் போகிறார்கள் என்பதே அவர்களுக்குள் ஒடிக்கொண்டு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் கேசவ்பூரில் உள்ள கிரானைட் குவாரியை மேற்பார்வை பார்க்கச் சென்ற போது தருமதுரைக்கு அந்தக் கனவு இருந்தது. திரும்பி வந்ததும் ஊரில் ஒரு காரை வீடு கட்டிவிட வேண்டும் என்கிற வேகமே அந்த வயதில் குடும்பத்தைவிட்டு தொலைதூரத்துக்குச் செல்ல வைத்தது. அவமானப்பட்டு திரும்பியபோது, கிடைத்த பணத்தில் ஆறுமுகனேரியில் இந்த எஸ்.டி.டி பூத்தை வைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. இதன் வருமானத்திலேயே நாலு பேர் மதிக்கும்படியாக எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் ஊரில் வீடு கட்டிவிட முடியும் என்று நம்பிக்கொண்டு இருந்தார். கூட்டாம்புளியில் இருக்கும் தங்கை அழகுரதியின் பேத்தியின் சடங்குக்கு முந்தாநாள் சென்றவர், வந்திருந்த சொந்தக்காரர்களிடம் பெரிய ஜம்பமாக இதை அறிவிக்கவும் செய்தார். “ஆகுறக் கதைய ஒருநாளும் பேச மாட்டாவ” என பெரியநாயகி அங்கேயே பொசுக்கென்று சொல்ல இவருக்கு கோபம் வந்தது. “நடக்குதா இல்லையா பார்” என கறுவிக்கொண்டார்.
அதுவரை சாபம் பெற்றவையாய் சீட்டுக்கட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் ஒவ்வொரு சீட்டும், ஆட்டக்காரனின் தீண்டலில் உயிர்பெறுகின்றன. நினைவுகளை மீட்டியபடி கிளைத்துச் செல்கின்றன. அவைகளின் வண்ணங்கள் மாறி ஒவ்வொரு ஆட்டக்காரனுக்கும், ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வேறு வேறாய்த் தெரிகின்றன. சன்னாசிமுத்துவை இன்னொரு தடவை பார்க்கும்போது எனக்கு வேறு நினைவுகள் வரக்கூடும்.
நீங்கள் போடும் சீட்டுகள் எனக்கும், நான் போடும் சீட்டுகள் உங்களுக்கும் தேவையில்லாதவையாய் இருக்கின்றன. அவைகளை நாம் தொடாமல், உள்ளிருந்து சீட்டுகள் வந்து சேரும் என்று ஒவ்வொருமுறையும் ஆசையோடு எடுக்கிறோம். உதட்டைப் பிதுக்கிக் கொள்கிறோம். தருமதுரைக்கும் இப்படித்தான் ஒவ்வொரு நாட்களும் கீழே விழ ஆரம்பித்தன. ஆரம்பத்தில் நன்றாக இருந்த வியாபாரம் போகப் போக டல்லடித்தது. பஜாரில் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சடசடவென்று ஆறு எஸ்.டி.டி பூத்கள் முளைத்துவிட்டன. நேர் எதிரே சைக்கிள் கடை இருந்த இடத்தில், மஞ்சள் கலர் பெயிண்டாய் அடித்து கறுப்பு எழுத்துக்களோடு பன்னீர்செல்வம் புதுசாய் ஒரு எஸ்.டி.டி பூத் திறந்து அதில் ஒரு வயசுப் பெண்ணையும் சம்பளத்திற்கு உட்கார வைத்த போது தருமதுரை மிகவும் எரிச்சலடைந்தார்.
இந்தியா ஓளிர்கிறது என்னும் சீட்டை உள்ளிருந்து எடுத்து கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, கீழே போடுகிறீர்கள் நீங்கள்.
(இந்த ஆட்டம் இன்னும் இருக்கிறது...)
பி.கு: அத்தியாயத்தின் நீளம் கருதி, பகுதிகளாக பதிவிடுகிறேன்.
மூன்றாம் பிறை – மம்மூட்டியின் சுயசரிதை
மிக மிக தற்செயலாக அந்தப் புத்தகம் எனது கைக்கு வந்தது. முதல் நாள் அதன் உரிமையாளர் (காஞ்சி தோழர் மோகன்) என்னிடம் அப்படி பரவசமாய் பேசப் பேச எனக்குள் அது குறித்து வளர்ந்து கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப அடுத்த நாள் அந்த வாசகர் இருக்கும் ஊருக்கு வேறு ஒரு பணி நிமித்தம் செல்ல நேர்ந்ததும், அவர் என்னை வழியனுப்ப வந்தபோது வேறு வழியின்றி அந்தப் புத்தகத்தை கைமாற்ற வேண்டி வந்ததும் இலக்கிய நிகழ்வு போல அமைந்துவிட்டது. அவர் அகன்றதும், அல்லது அவரை விட்டு நான் அமர்ந்திருந்த ரயில் அவரை விட்டுவிட்டு அகன்று செல்லவும் என்னை அந்தப் புத்தகத்திடம் குடியமர்த்திவிட்டுச் சென்றுவிட்டார் அவர் என்பது பிறகே புரிந்தது.
மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றி இந்த மூன்று நாட்களாக பேசாமல் இருப்பத்தில்லை என்று ஆக்கிவைத்துவிட்ட அந்த பிரதியைப் பற்றி என்ன சொல்ல ....அல்லது சொல்லாது எப்படி இருக்க?
மலையாள நடிகர் மம்மூட்டி (பிரபல என்ற அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதை பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி வெளியீடு. விலை ரூ.80.
மம்மூட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழி பெயர்ப்பே இத்தனை கவிதையாய் ஒலிக்குமானால், மலையாளத்தில் அது எப்படி வசீகரிக்கும் என்று அறிந்து கொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.
வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே கொள்ள வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அவற்றைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்து மீறலை, போலித் தனத்தை, கூசாது பொய்யுரைப்பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது பிரதிபலிக்கிற மம்மூட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து. 'தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற பாரதியார் கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில்.
தான் என்னவாய் இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.
தனது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவு கூரலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக் கொண்டு செல்கிறது. நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது. ரத்தம் தோய்ந்த முகத்துடனான முதல் ரசிகனும், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், ஆக்ஷன் பாபுவும், ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்துவைக்கப்பட்டிருந்து, பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் அந்த மூத்த தம்பதியினரும், இன்ன பிறரும் என்றென்றும் எனதருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது. அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.
தன்னை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில்தான் மிகப் புகழுடன் தான் உலா வருகிறோம் என்பது அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை....எல்லாவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.
ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.
மம்மூட்டி அருகே உட்கார்ந்தபடி தனது வேட்டியின் நுனி காற்றில் பறக்க தனது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.
கே வி ஷைலஜாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: மம்மூட்டி இதைத் தமிழில் தாமே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தனது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் என்று கொள்ளலாம் போலிருக்கிறது. மிகச் சில இடங்களில் வேண்டாமே என்று அப்படியே மலையாளம் நனைந்த தமிழில் விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம் ! ) குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...
பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் வாசிப்பு இன்பத்தை வழங்கும் நூலாக்கம் செய்திருக்கும் ஷைலஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
- எஸ்.வி.வேணுகோபாலன்