காத்திருப்பு – ஒரு தொடர் பதிவு

waiting-room

 

இன்று காலை படித்ததிலிருந்து எஸ்.வி.வேணுகோபாலின் இந்த பகிர்வு, சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. இதுகுறித்து நாமும் சொல்வதற்கு நிறைய இருப்பதாய்ப் படுகிறது. அவருடைய எழுத்து நடையும், தொனியும் ரசனக்குரியவை.

------------------------------------------------------------

ஞ்சல் அலுவலகம் ஒன்றிற்கு ஏதோ ஒரு வேலை நிமித்தம் சென்றவன், சமயத்திற்கு உதவக் கூடிய பேனா கைவசம் இல்லாததை அங்கு சென்றதும்தான் பார்த்தேன். அடையாறு தபால் நிலையத்தின் உள்ளேயே எழுதுபொருள் விற்பனைக் கடை ஒன்று இருக்கவும் எனது தேவைக்கு ஏற்ற பொருளை வாங்கிவிட்டேன். எழுதி முடித்து நிமிரும்போது ஓர் அன்பர் என்னருகே வந்து "சார், கொஞ்சம் பேனா கொடுங்களேன், எழுதிவிட்டு இப்போதே கொடுத்துவிடுகிறேன்.." என்றார். பெரிய தியாக தோரணையோடு (மூடியெல்லாம்  கழற்றி வைத்துக் கொள்ளாமல்!) கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். அவர் நிதானமாக ஏதோ படிவத்தை நிரப்பவும், ஏதோ யோசிக்கவும், ஓடி ஓடிப் போய்க் கவுண்டரில் ஏதோ கேட்டு வந்து திருத்துவதுமாக சாவகாசமாகத் தமது கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தார். வேக வேகமாக வந்து எனது வேலையை முடித்துக் கொண்ட பிறகும் நான் புறப்பட இயலாமல் கிடந்தேன். எனது நேரம் இப்போது எனது பேனா வழி அவரது நேரத்தோடு பிணைக்கப் பட்டிருந்தது.  ஒரே ஒரு ஸாரி சொல்லிவிட்டு அவர் திரும்பத் தரப் போகும் பேனாவிற்காக  நான் காத்திருக்கத் தொடங்கினேன்.

 

இப்படி பல சமயம் நேர்கிறது. திருமணம் ஒன்றிற்கோ, ஏதாவது நிகழ்ச்சிக்கோ உரிய நேரத்தில் போய்ச் சேரும் திட்டத்தோடு நாம் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று ஓர் அழைப்பு வரும். நண்பர் ஒருவர் தானும் நம்மோடு சேர்ந்து போகலாம், வழியில் எங்காவது சேர்ந்து கொள்ளலாம் என்று நமது முழு திட்டத்திலும் கை வைப்பார். இதில் கொடுமை என்னவெனில் அவர் சொல்லும் இடத்தில் காத்திருந்த பிறகு, நேரம் ஓடிக் கொண்டிருக்க சம்பந்தப்பட்ட நல்ல மனிதர்  மேற்கொண்டு எந்த ஒரு செய்தியும் அனுப்பாமல் இருந்து கொண்டு, நாமாக அவரைத் தேடித் பிடிக்கும்போது, "அடடா, எனக்காகவா இன்னும் காத்துட்டு இருக்கீங்க, நான் தான் அரை மணியில் வருவேன்னு சொல்லியிருந்தேனே, இல்லன்னா டாண்ணு கிளம்பிப் போய்கிட்டே இருந்திருக்க வேண்டியதுதானே...நான் நேரே புறப்பட்டு  வந்துட்டேனே, ஐயோ என்ன சொல்றது உங்களை" என்று வெந்த புண்ணில் வேல் வேறு பாய்ச்சுவார்கள்.

 

விருந்தாளிக்காக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பது பற்றி நாவல் எழுதலாம். திரும்ப அனுப்பும்போது செல்ல வேண்டிய ரயில் தாமதமானால் அந்தக் காத்திருத்தல் வரமாகவும் அமையும், சாபமாகவும் கூடும். பொதுவாகவே காத்திருத்தலின் இரண்டு பரிமாணங்களாக இதைக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

 

கல்லூரிப் படிப்புக்காகத் தாய்மாமன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த காலங்களில் சென்னையில் காப்பிக் கொட்டைக்குத் தட்டுப்பாடு இருந்த காலம். அதற்கு கார்டு போடுவதற்கு முதல் நாள் இரவே வரிசையில் போய் நின்று கொஞ்சம் நேரம் கடந்ததும் அங்கேயே உட்கார்ந்து ஒரு கட்டத்தில் படுத்து, விடியற்காலை வேறு ஆள் வந்து மாற்றிவிட்டதும் பத்து மணிக்கு இன்றைக்கு கார்டு தருவதில்லை என்று இந்தியா காபி ஹவுஸ் ஆட்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

 

ஆனாலும், காப்பிப் பொடிக் கடையில் காப்பிக் கொட்டையைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வறுத்து அரைத்துக் கொடுக்கும் வரை காத்திருப்பது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். பேசும்படம், பொம்மை, ஃபிலிமாலயா போன்ற இதழ்களை ஒரு கஷ்ட ஜீவன காலத்தில் வேறு எங்கே ஓசியில் படிக்க முடியும்? வார, மாத இதழ்களை எத்தனை வேகமாகப் படிக்க முடியுமோ அத்தனை வேகத்தோடு படித்துக் கொண்டே இருக்க, நமது டப்பாவை எடுத்திராம மெதுவாகவே எடுத்து வறுத்து அரைத்தாலும் சம்மதம் என்றே மனது சொல்லிக் கொண்டிருக்கும்.   வாசிப்பு நோக்கத்தோடு தலை கனத்து (அதாவது, அதிக முடியினால்!) சலூனுக்குச் செல்வோருக்கும் இது பொருந்தும்....விவரமான முடி திருத்துவோர், சார் வந்திருக்காரு, பாரு என்று தேடி எடுத்துப் பழைய இலவச இணைப்பு இதழ்களை எல்லாம் எடுத்துப் போட்டு விட்டு தகராறு கிராக்கிகளை முதலில் முடித்து அனுப்புவதில் கவனம் செலுத்தப் போவார்கள். 

 

காத்திருத்தலின் வேதனையைப் பாடும் கவிஞர்களின் உள்மனத்தில் நுழைந்து பார்த்தால், அது வலியல்ல, விரும்பி மேற்கொண்ட தவம் என்று புலப்படும். கவிதைக்காகக் காத்திருப்பதை விடவும், காதலுக்காகக் காத்திருப்பது மோசமானது அல்ல. காத்துக் காத்துப் பெறுகிற பொருளின் மதிப்பு கூடிப் போய்விடுகிறது. காத்திருத்தல் பரஸ்பரம் வைத்திருக்கும் அன்பு, எதிர்பார்ப்பு, மரியாதை.... இவற்றுக்கு ஏற்பப் பேசப்படும்.  சில இடங்களில் காத்திருக்க மறுக்கும் மனிதர்கள், வேறு இடங்களில் மானசீகமாக கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு உட்கார்ந்திருப்பதையும் காண முடியும். காத்திருத்தல் இப்படியாக சில நிபந்தனைகளுக்கும், சூழல் விதிகளுக்கும் உட்பட்டதாகிறது.

 

இரண்டு வேலைகளின் இடையே நேர்கிற காத்திருத்தலின் கணங்களைக் கூடப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிற மனிதர்களையும் காண முடியும். மருத்துவரைச் சந்திக்கக் காத்திருக்கும்போதே அலுவலகக் குறிப்புகளை ஒரு முறை சரிபார்க்கிறவர்கள், கணக்கு எழுதுபவர்கள், வாசிக்க எடுத்து வந்திருக்கும் புத்தகத்தில் விட்ட  இடத்திலிருந்து மேலும் சில பக்கங்களுக்குக் கடக்கிறவர்கள், ஏதாவது எழுதுபவர்கள்.....என பல ரகம் உண்டு.

 

எந்திரத்தின் தயவில், கணினியின் கருணையில், மின்சாரத்தின் அருளில் இயங்குவோர் அதன் வரம் மறுக்கப்பட்ட சில வேளைகளில் காத்திருக்க நேரும்போது அன்னாரது எதிரே போய் நிற்காமல் இருப்பது நல்லது.

 

தேவையில்லாமல்  எதுக்கு நிக்கணும், ஏன் காத்திருக்கணும் என்ற முனையிலிருந்து நோக்கும் போது, மூக்குக்கு மேல் கோபம் வருகிறது.  ஓரிடத்தில் எதிர்பாராமல் காத்திருப்பது அடுத்தடுத்த வேலைகளையும் ஒத்திப் போட்டுக் கொண்டே போகிற போது எரிச்சல் எல்லை கடக்கிறது.

 

காத்திருத்தலின் அடுத்த நுனியில் தம்மால் பாதிக்கப்பட்டவர்களைப் பொதுவாக மனிதர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. 'நான் என்ன பண்ண, வேண்டும்னா நடந்தது...' என்ற பதில் எப்போதும் கைவசம் உண்டு. இது உளவியல் ரீதியாக ஆராய சிறந்த கருப்பொருள்.

 

கணையாழியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு சின்னஞ்சிறு கதையில், மருத்துவர் ஒருவர் வங்கியில் பணம் எடுக்க, காலையிலேயே போய் வரிசையில் முதல் ஆளாய்  வெகு நேரம் காத்திருக்கிறார். காசாளர் வருவதே இல்லை.  காசாளரோ  வருகிற வழியில் பிரச்சனை செய்த ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு மெக்கானிக் கடையில் காத்திருக்கிறார். மெக்கானிக் எங்கே இருக்கிறார் தெரியுமோ, மேற்படி கதையின் முதல் காட்சியில் சந்தித்த மருத்துவரின் கிளினிக்கில் முதல் டோக்கன் வைத்துக் கொண்டு டாக்டர் எப்போது வருவார் என்று காத்திருக்கிறார்...இது எப்படி இருக்கு?

-எஸ்.வி.வேணுகோபால்

------------------------------------------------------------

காத்திருத்தல் என்பது நம் லௌகீக வாழ்வில் முக்கியமான அங்கமாகவும், அனுபவமாகவும் இருக்கிறது. எஸ்.வி.வேணுகோபால் இதனை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நானும் எழுதலாம், உங்களையும் அழைக்கலாம் என்று தோன்றுகிறது. நமக்குள் தொடர் பதிவு வலம் வந்து ரொம்ப நாளாயிற்றே! இன்று மாலையே ஆரம்பித்து விடுவோம்.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Excellent Venu. Expecting more on the captioned subject from Mathavaraj and others.
    - J.Gurumurthy

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சுவையாக எழுதியிருக்கிறார்.

    கனையாழியில் வந்த அந்த கதையை முடிந்தால் பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்லவொரு அருமையான பகிர்வு.. வேணு ரொம்ப நல்லா எழுதியிருக்கார்.. படிக்கப்படிக்க நானும் காத்துக்கிடந்த எடமெல்லாம் ஞாபகம் வருது.. ஆனாலும் இதுபோலப் பகிர விரல் வித்தை வேணுமே..

    நீங்க எழுதுங்களேன்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!