மூன்றாம் பிறை – மம்மூட்டியின் சுயசரிதை

mamootty moondram pirai

 

மிக மிக தற்செயலாக அந்தப் புத்தகம் எனது கைக்கு வந்தது.  முதல் நாள் அதன் உரிமையாளர் (காஞ்சி தோழர் மோகன்) என்னிடம் அப்படி பரவசமாய் பேசப் பேச எனக்குள் அது குறித்து வளர்ந்து கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப அடுத்த நாள் அந்த வாசகர் இருக்கும் ஊருக்கு வேறு ஒரு பணி நிமித்தம் செல்ல நேர்ந்ததும், அவர் என்னை வழியனுப்ப வந்தபோது வேறு வழியின்றி அந்தப் புத்தகத்தை கைமாற்ற வேண்டி வந்ததும் இலக்கிய நிகழ்வு போல அமைந்துவிட்டது.  அவர் அகன்றதும், அல்லது அவரை விட்டு நான் அமர்ந்திருந்த ரயில் அவரை விட்டுவிட்டு அகன்று செல்லவும் என்னை அந்தப் புத்தகத்திடம் குடியமர்த்திவிட்டுச் சென்றுவிட்டார் அவர் என்பது பிறகே புரிந்தது.

 

மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல.  யாரிடமாவது அதைப் பற்றி இந்த மூன்று நாட்களாக பேசாமல் இருப்பத்தில்லை என்று ஆக்கிவைத்துவிட்ட அந்த பிரதியைப் பற்றி என்ன சொல்ல ....அல்லது சொல்லாது எப்படி இருக்க?

 

மலையாள நடிகர் மம்மூட்டி (பிரபல என்ற அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதை பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி வெளியீடு. விலை ரூ.80.

 

மம்மூட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று.  அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழி பெயர்ப்பே இத்தனை கவிதையாய் ஒலிக்குமானால், மலையாளத்தில் அது எப்படி வசீகரிக்கும் என்று அறிந்து கொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.

 

வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே கொள்ள வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அவற்றைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்து மீறலை, போலித் தனத்தை, கூசாது பொய்யுரைப்பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது  பிரதிபலிக்கிற மம்மூட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து.  'தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற பாரதியார் கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில். 

 

தான் என்னவாய் இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.

 

தனது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவு கூரலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக் கொண்டு செல்கிறது.  நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது. ரத்தம் தோய்ந்த முகத்துடனான முதல் ரசிகனும், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், ஆக்ஷன் பாபுவும், ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்துவைக்கப்பட்டிருந்து,  பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் அந்த மூத்த தம்பதியினரும், இன்ன பிறரும் என்றென்றும் எனதருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது.  அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.

 

தன்னை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில்தான் மிகப் புகழுடன் தான் உலா வருகிறோம் என்பது அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை....எல்லாவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.

 

ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.

மம்மூட்டி அருகே உட்கார்ந்தபடி தனது வேட்டியின் நுனி காற்றில் பறக்க தனது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.

 

கே வி ஷைலஜாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: மம்மூட்டி இதைத் தமிழில் தாமே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தனது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் என்று கொள்ளலாம் போலிருக்கிறது.  மிகச் சில இடங்களில் வேண்டாமே என்று அப்படியே மலையாளம் நனைந்த தமிழில் விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம் ! ) குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...

 

பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் வாசிப்பு இன்பத்தை வழங்கும் நூலாக்கம் செய்திருக்கும் ஷைலஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

- எஸ்.வி.வேணுகோபாலன்

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.//

  ஒரு விமர்சனம் கவிதையாகும் ரசவாதம் இந்தப் பத்தியில் நிகழ்ந்திருக்கிறது எஸ்விவி.

  மம்முட்டியைப் பற்றி நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியைத் தாமதமாகப் பார்க்க நேரிட்டதற்கு வருத்தமாய் இருந்தது.

  உங்களுக்கு மொழிபெயர்ப்புகளின் மீதுள்ள காதலை நான் மொழிபெயர்த்த பைஜூயியின் மேலான சிலாகிப்பிலேயே உணர்ந்திருக்கிறேன்.

  இதிலும் அதைக் காண்கிறேன்.

  மம்மூட்டியைக் குறித்த ஆளுமை கிட்டத்தட்ட நாம் யூகிப்பதைப் போலவே இருப்பதைத் தற்செயல் என்று சொல்லமுடியாது.அப்படியெனில் உள்ளிருக்கும் ஆன்மாவின் ப்ரதிபலிப்பு அவரின் ஆளுமை என்று சொல்வதானால் அது எத்தனை உயர்வானதும் அபூர்வமானதும்?

  உள்ளும் புறமும் சொல்லும் செயலும் ஒன்றாய் நேர்கோட்டில் இணைபவர்களுக்கே வலி மிக்க இந்த வாழ்க்கை சாத்தியம்.

  உங்கள் வார்த்தைகளில் ஷைலஜாவின் மொழியாக்கம் ஒரு கவிதை என்றால் என் வார்த்தைகளில் உங்கள் விமர்சனம் வானவில்லைத் தூரிகை தொட்டு வரைந்த வண்ண ஓவியம்.

  நிறைவான வாசிப்பைத் தந்த உங்களுக்கும் பகிர்ந்த மாதவராஜுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 2. Given a open heart appreciations..Only few people have the courage to express appreciations and criticism without any fear and favour..your views instigate to read the book..that is your strength SVV.. MADHAV gave large space in his blog..nice..

  பதிலளிநீக்கு
 3. நன்றி...மாதவ்

  இந்தப் புத்தகத்தை வாசித்ததும் எனக்குள் கிளர்ந்த எண்ணங்களை உடனே பதிவு செய்ததை நீங்கள் உங்களது வலைப்பூவில் இடம்பெறச் செய்தது ஒரு ரசனையை கௌரவித்ததானது. உங்களுக்கு அடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு.

  கே வி ஷைலஜா அவர்களுக்கு நான் உடனடியாக அனுப்பிய அஞ்சலின் சற்றே செதுக்கப்பட்ட வடிவம் தான் அடுத்து உங்களுக்கு அனுப்பி நீங்கள் பதிவு செய்திருப்பது.

  மூன்றாம் பிறை இரவலாகப் பெற்று வாசித்து உடனே காஞ்சி நண்பர் மோகனுக்கு அனுப்பப்பட்டது என்பதையும் சேர்த்து ஷைலஜா அவர்களோடு பகிர்ந்து கொண்ட பிறகு, நான் சிதம்பர நினைவுகள் நூலை வாசித்ததுண்டா என்று கேட்டார் அவர். இல்லை என்றதும், அந்த நூலின் பிரதி ஒன்றையும், மூன்றாம் பிறை நூலையும் சேர்த்து எனக்கு அனுப்பி விட்டார்....

  மூன்றாம் பிறை நூலின் முதல் பக்கத்தில் இப்படி ஒரு குறிப்பு எழுதப் பட்டிருந்தது: "சித்திரை மாத மத்தியான வெயிலில் ஒரே நொடியில் மனசுக்குள் மஞ்சள் கொன்றைப் பூக்களைப் பூக்க வைத்த நண்பருக்கு, எளிமையான அன்போடு,...."

  அதன் பிறகு, சிதம்பர நினைவுகளை அடுத்த நாளே வாசித்த போது, நான் இன்னும் அதிர்ந்து போனேன். அது இன்னோர் உலகம். இன்னோர் ஆழ சமுத்திரம். இன்னோர் அதிர்ச்சி மையம். இன்னோர் அழகு மொழிபெயர்ப்பு. அதைப் பற்றிப் பிறகு.....

  சுந்தர்ஜி ரசனை மிக்க கவிஞர். அவரது சொற்கோலம், ஒரே பின்னூட்டமாக நிறைவைத் தந்து நிற்கிறது - மற்ற வாசகர்களுக்கு என்ன உணர்வுகள் மேலிட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத ஏக்கம் மிஞ்சுகிறது, என்றாலும்...ஓ...இன்று விமலாவித்யா எழுதி இருக்கிறாரோ, அவரும் ஓர் அன்பு கொண்டாடி.

  சுந்தர்ஜி அவர்களுக்கும், விமலா வித்யா அவர்களுக்கும், ஏற்கெனவே வாசித்தவர்களுக்கும், இனி கடக்க இருப்போர்க்கும், கருத்து சொல்ல விழைவோர்க்கும், வழக்கம் போலவே எனது எழுத்துக்களுக்கு ஓரிடம் வைத்திருக்கும் உங்களது பரந்து விரிந்த உள்ளத்திற்கும் எனது நன்றி மாதவ்.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!