புன்னகை என்ன விலை?

mockingsmile

 

பெட்டிக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த பத்திரிகையொன்றை வாங்கும்போது அருகில் நின்றிருந்த அவன் என்னைப் பார்த்து புன்னகைப்பது போலிருந்தது. பார்த்தேன். “வணக்கம் சார்” என்று நட்புடன் சொல்லி திரும்பவும் புன்னகைத்தான். அவனை அதற்கு முன் பார்த்திருந்தேனா என்று தெரியவில்லை. நானும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு, யாராயிருக்கும் என அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அதைப் பார்க்காதது போல  சென்று விட்டான்.

 

இன்னொரு நாள் வண்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டுத் திரும்பிய போது பக்கத்தில் வந்து பைக்குடன் நின்று  “வணக்கம் சார்” என்று புன்னகைத்தான். நானும் “வணக்கம்” என்று அவனைப் பற்றி யோசித்தபடியே புறப்பட்டேன். அப்புறம் ஒரு தடவை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த போதும்  இதுபோலவே நிகழ்ந்தது. இப்படியே அங்கங்கு பார்க்க ஆரம்பித்தேன் . எப்போதும் முதலில் புன்னகைப்பது அவனாகவே இருந்தான்.  முகம் பரிச்சயமாகி விட்டாலும்  யாரென்றே தெரியவில்லை. கேட்டுக்கொண்டதும் இல்லை. சொன்னதும் இல்லை.

 

வங்கியில் கேஷ் பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள் அவன் குரல் “வணக்கம் சார்” என்று அருகே  கேட்டது. வரிசைப்படி டோக்கன் நம்பரைச் சொல்லி அழைத்து பணம் கொடுத்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். புன்னகைத்தபடியே, “நீங்கதான் கேஷியரா” என்று கேட்டு தனது டோக்கனைத் தந்தான். “ஆமாம்” என்று புன்னகைத்து அவனுக்குரிய பணத்தைக் கொடுத்தேன். நான் அழைக்காமல் அவர்களாகவே வந்து பணம் கேட்டு இப்படி மற்றவர்கள் அவசரப்படுத்தியிருந்தால், “கூப்பிடும்போது வந்தாப் போதும். போய் உட்காருங்க” என்று எரிந்து விழுந்திருப்பேன். அவன் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்போது அடுத்த டோக்கனை அழைக்காமல்.

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல பதிவு.
    உங்களுக்கு மறதி அதிகம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு மனிதனுக்கு இரண்டு மூன்று வணக்கங்களே போதும் என்று ஆன பிறகு நீரா ராடியா என்ன டாடா என்ன, கனிமொழி என்ன,அம்பானி என்ன, நாடார் இனத்தைச்சார்ந்த ஆலடி அருணாவின் மகள்தான் என்ன, கருணா நிதிதான் என்ன அதற்கும் மேல் ராசாத்திதான் என்ன எல்லாம் கம்பபிக்குள் அடக்கம்தானே

    பதிலளிநீக்கு
  3. மிக அழகு மாது.சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.இங்கே லஞ்சம் எங்கே ஆரம்பிக்கிறது? என்று.
    எனக்கு முன்னால் இருக்கும் ஒருவனை பின்தள்ளிவிட்டு நான் முன்னுரிமை பெறும்போது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!