காற்றடைத்த பலூன் ஒரே நாளில் உடைந்துவிட்டது.
ராம்தேவிடம் கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த மன்மோகன் அரசு நேற்று இரவில் மிஞ்சிவிட்டது. ஜாலியாக களைகட்டியிருந்த உண்ணாவிரதப் பந்தலில், ராம்தேவை கைதுசெய்ய டெல்லி போலீஸின் முஸ்தீபுகள் தெரிந்தன. மேடையிலிருந்து துள்ளி பக்தகோடிகள் மத்தியில் குதித்து, வீராவேசமாகப் பேசினார் யோக குரு. சினந்த பக்த கோடிகள் போலீஸின் மீது கற்களை வீசினர். டெல்லி போலீஸ் அதன் முகத்தை லேசாய்த்தான் காட்டியது. சில கண்ணீர்ப் புகைகுண்டுளும், சில லத்திகளும் போதுமானதாய் இருந்தன. அவ்வளவுதான். “ஊழலை ஓழிக்காமல் உஜ்ஜய்னி திரும்ப மாட்டேன்”, என்றும், “என் கடைசி மூச்சு வரை கறுப்புப் பணத்தை எதிர்த்து போராட்டத்தைத் தொடருவேன்” என்றும் சூளுரைத்த யோக குருவை காணாமல் ஆக்கிவிட்டனர் போலீஸார். திசை தெரியாமல் பக்தகோடிகள் தெறித்து ஓட, ராம்லீலா மைதானம் காலியாகிப் போனது.
போராடுகிற தொழிலாளர்களை, இதே டெல்லியில், இதே போலீஸ் எத்தனையோ முறை கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறது. ஈவிரக்கமின்றி அடக்குமுறைகளை ஏவியிருக்கிறது. அப்போதெல்லாம் நடிக நடிகையரின் உடல்களிலும், அந்தரங்கங்களிலும் மோப்பம் பிடித்துக் கிடந்த தொலைக் காட்சிகள் மூச்சுவிடாமல் இன்று காலையிலிருந்து ஒரே ராம்தேவ் பஜனை செய்துகொண்டு இருக்கின்றன. அதிலும் இந்த என்.டி.டிவி, டைம்ஸ்நவ் போன்ற இந்தியாவின் பிரதான ஆங்கிலச் செய்தி தொலைக் காட்சிகள் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை. எதோ வானமே இடிந்துவிட்டது போல “ஐயோ, ஐயோ” என பெரும் கூப்பாடு போட்டு தொலைக்கின்றன.
“காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை” என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். "எமர்ஜென்ஸி காலத்து இந்தியா போலிருக்கிறது” என்று பதறுகிறார் அத்வானி . “ஜனநாயகம் செத்துவிட்டது” என்கிறார் சமூக ஆர்வலர்களின் கொம்பாக முளைத்திருக்கும் அன்னா ஹசாரே. “மன்மோகன் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும்” வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள் வலதுசாரி அறிவுஜீவிகள். எல்லோரையும் தேடித் தேடி குரல்களை சேகரித்துக் கொண்டு இருக்கின்றன ஊடகங்கள்.
ஒரு சாதாரணமான போராட்டத்தை ஊதி ஊதிப் பெருக்க வைத்த ஊடகங்களுக்கும், வலதுசாரிக் கும்பல்களுக்கும் கண்முன்னால் அந்தப் போராட்டம் மிகச் சாதாரணமாக முடிந்து போனதை தாங்கிக்கொள்ளமுடியாத பொருமல்கள் தெரிகின்றன. அவர்கள் கட்டியிருந்த மனக்கோட்டைகள் எல்லாம் மண்கோட்டையாகித் தரைமட்டமானப் பார்க்க முடியாத பதற்றம் இது. எதாவது செய்து, போராட்டத்தை உசுப்பி விட முடியுமா என பார்க்கிறார்கள். இங்குதான் புலிகளைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொண்ட கதை வருகிறது. அதுவும் காவிப்பூனைகள்!
சமீப காலங்களில் எகிப்தில் ஆரம்பித்து சில வளைகுடா நாடுகளில் ஆளும் அரசுக்கெதிராக மாபெரும் மக்கள் திரள் அந்நாட்டின் தலைநகர்களில் சங்கமித்து பெரும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது. அந்த நிகழ்வுகளை விவாதித்த ‘டைம்ஸ்நவ்’ தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர், “இந்தியாவில் இதுபோன்ற மக்கள் எழுச்சிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?” எனக் கேட்டார். அது விளையாட்டான கேள்வி அல்ல. அதிலிருந்துதான் அன்னா ஹசாரேவும், ராம்தேவும் புறப்பட்டு வந்தார்கள்.
கடுமையான விலைவாசி உயர்வும், பெரும் ஊழல்களும் மலிந்த காங்கிரஸ் ஆட்சி மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதுதான் தருணம் என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற வலதுசாரிக்கும்பல்கள் தங்கள் திட்டத்தை வகுக்கின்றனர். தாங்கள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்தால் மக்களின் ஆதரவு பெரிதாகக் கிடைக்காது என்று, அரசியலுக்கு அப்பாற்பட்டு புனிதர்கள் போன்றிருக்கும் அன்னா ஹசாரே, ராம்தேவின் பின்னால் நின்று ஊழலுக்கு எதிரான போர்களை நடத்த முன்வருகிறது. அப்போதும் மக்களை வாட்டும் விலைவாசி உயர்வை அவர்கள் கையிலெடுக்கவில்லை. நாடு, நாட்டின் பெருமை, அதற்கு களங்கம் சேர்க்கும் ஊழலை மட்டுமே பேசினார்கள். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை முன்வைக்காமல் நாட்டை முன்வைத்துத்தான் வலதுசாரிகள் எப்போதும் மக்களைத் திரட்டுவார்கள். அதுதான் நடந்தது.
இரண்டு போராட்டங்களையும் அவர்கள் இந்தியத் தலைநகரை குறிவைத்தே நடத்தினார்கள். இணையம், தொலைக்காட்சிகளில் பெருமளவுக்கு செய்திகள் பரிமாறப்பட்டன. மக்களின் ஆதரவை திரட்டினார்கள். இதன் அரசியல் அறிந்த/அறியாத மக்கள் “தேவன் வந்துவிட்டான்’ என ஆரவாரம் செய்தனர். அன்னா ஹசாரேவுக்கு திரண்ட ஆதரவு உற்சாகம் தந்தது. அடுத்து ராம்தேவை உசுப்பி விட்டனர். ஊடகங்கள் மூலம் அலப்பறை செய்தனர். ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பியினரையும், ராம்தேவின் பக்தகோடியினரையும் மெல்ல மெல்ல டெல்லியில் திரட்டி, மக்கள் வெள்ளத்தைக் காட்டி, ‘மாபெரும் கிளர்ச்சி’யாக்கிட நினைத்தனர். இதைத்தான் முந்தைய பதிவில் அரசியல் விபரீதம் என குறிப்பிட்டு இருந்தேன். எல்லாம் பொசுக்கென்று போனது. வஞ்சக மூளை கொண்ட அரசு முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டது. அதைத் தாங்க முடியாத வேகத்தைத்தான் இன்றைய கூச்சல்களில் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் அரசு மக்களுக்கும், தேசத்துக்கும் விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் துயரங்களிலும், வலியிலும் தோய்ந்து எழுந்த போராட்டங்களுக்குத்தான் கிளர்ச்சிகள் என்று பெயர். இதுபோன்ற ஜிகினாப் போராட்டங்களுக்கும் புறவாசல் முயற்சிகளுக்கும் அல்ல.
குதர்க்கமும், எக்காளமும் கொப்பளிக்கும் ஒரு பதிவு!
பதிலளிநீக்குஇதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.
என்னை ஏமாற்றவில்லை.
வெட்கப்பட வேண்டும் நீங்கள் இதற்காக!
நீங்க யார் எவர் எந்த பின்னணியைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதியிருக்கிற எழுதிய கட்டுரைகள் ஒருவகையில் சமுகத்தின் மாற்றத்தை தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய முதலாளித்துவம் இனிமேல் பெரும்பான்மை மக்களுக்கு எதுவும் செய்ய லாயக்கற்றதான நிலைமைக்கு போய்விட்டது. இனிமேல் அதனிடத்தில் இருப்பவை சர்வாதிகார நடவடிக்கைகளும், தொழிலாள வர்க்கத்தை அடிமைகளாக சுரண்ட வைக்கும் திட்டங்கள் மட்டுமே உள்ளன. அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி அல்லது பி.ஜே.பி ஆக இருந்தாலும் சரி அல்லது எந்த முதலாளித்துவ கட்சி மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆட்சிக்கு வந்தாலும் நிர்வாகத்தை நடத்த திறனற்று இருக்கும்படியான நிலை இருக்கிறது. எகிப்திலும் அதைப்போன்ற மற்ற நாடுகளிலும் மக்களின் எழுச்சி தன்னெழுச்சியாக புரட்சியாக மாறியது ஆனால் இந்தியாவில் இருக்கின்ற நிலை அங்கிருப்பதைக் காட்டிலும் மிக வேகமாக எழக்கூடிய ஒரு தன்மையுள்ளது. அதை இந்த ராம்தேவ்களும், அன்னாக்களும் முதலாளித்துவத்தால் பரிசோதிக்கபடுகின்ற நபர்களாகவும் இந்திய ஒட்டுமொத்த மக்களையும் இணைக்க விடாமல் பிரிவினையை ஏற்படுத்தகூடியவர்களாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மிரட்டலை அறிவிப்பதற்கே இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
பதிலளிநீக்கு@ மாதவராஜ்,
பதிலளிநீக்குநல்ல பதிவு.
//"எமர்ஜென்ஸி காலத்து இந்தியா போலிருக்கிறது” என்று பதறுகிறார் அத்வானி . “ஜனநாயகம் செத்துவிட்டது” என்கிறார் சமூக ஆர்வலர்களின் கொம்பாக முளைத்திருக்கும் அன்னா ஹசாரே.//
நரேந்திர மோடியின் குஜராத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை ஒன்று நடந்ததே.அப்போதெல்லாம் எங்கே இருந்தார்கள் இந்த அத்வானியும் அன்னா ஹசாரேவும் மற்றும் நம் கிரிக்கெட் தேசபக்தர்களும் ?
@
இதில் என்ன குதர்க்கமிருக்கிறது புரியவில்லை.
ஜந்தர் மந்திரில் ஏர்கூலரில் திரை மறைவில் சப்பாத்தி சாப்பிட்டு உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவு தெரிவிப்பதாக இங்கிருந்து பிஸ்ஸா ஹட் வர்க்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நடை நடந்தால் அது தான் புரட்சியா ?
ஆலமரத்தை வீழ்த்த குண்டூசி போதாது. எகிப்து,லிபியா போன்று கூர்மையான ரம்பங்கள் வேண்டும்.
அகத்தின் அழகு முகத்தில்.இந்த கருமம் புடிச்சவன் சேர்த்து வெச்சுருக்கற சொத்துக்கு
பதிலளிநீக்குஏதேனும் கணக்கு உண்டா? தனி தீவே சொந்தமா இருக்கு இவனுக்கு.
இந்த மூஞ்சிக்கு ஊழலை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கு?
VSK வகையறாக்கள் ஒன்று அப்பாவி தேச பக்தர்களாக இருக்க வேண்டும் அல்லது
RSS காக்கி டவுசர் பாண்டிகளாக இருக்க வேண்டும்.
யாரிவன் இத்தனை நாள் இவனுக்கு இல்லாத அக்கறை இப்போது எங்கிருந்து வந்ததது.அன்னா ஹாசாரே தான் இதன் காரணம். நீங்கள் ஒரு விஷயத்தை உற்று கவனிக்க வேண்டும். இந்தியாவில் பல பேர் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நமக்கு தெரியா விட்டாலும் உண்மை அது தான். இவ்வளவு பேர் இருக்கு, அன்னா ஹாசாரேவுக்கு ஆதரவு குவிய என்ன காரணம்?
பதிலளிநீக்குவிடை மிக எளிது.மற்ற எல்லோருடைய போராட்டங்களிலும் சிறிதாவது சுய நலம் வெளிப்படையாகவே இருக்கும். உதாரணத்திற்கு நம் குழாயடில் தண்ணீர் வரவில்லை என்றோ, நம் உற்வினரை லாக்கப்-டெத் என்றோ தான் போராடிக் கொண்டு இருப்போம்.இந்த போராட்டங்கள் தற்போதைய கார்ப்பரேட் செய்தி சேனல்கள் அல்லது பத்திரிக்கைகளில் வர இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று நாம் ஃபேமஸ் ஆக இருக்க வேண்டும் அல்லது நாம் யாரை எதிர்க்கிறோமோ அவராவது அப்படி இருக்க வேண்டும்.(உதாரணம் : நம்ம வனிதா)
அன்னா ஹசாரேவுக்கு லோக்பால் மூலம் கிடைக்க போவது ஒன்றும் இல்லை. அவர் ஒண்டிக்கட்டை,தன் கிராமத்தை சமூக சேவை மூலம் மாதிரி கிராமமாக மாற்றியவர் , ராணுவத்தில் வேலை பார்த்தவர் போன்றவை தான் அவரை கார்ப்பரேட் செய்தி நிறுவனகங்கள் தேர்ந்தேடுக்க காரணம்! இவரை பற்றி கருத்து வேறுபாடுகள் அதிகமாய் எழ வாய்ப்பு இல்லை. இந்த தாடி வெச்ச பெருச்சாளி இந்த நேரத்துல தான் உள்ள நுழஞ்சான். நல்ல வாயன் சம்பாதிச்சு நாற வாயன் தின்ன கதையா, அன்னா பண்ண உண்ணாவிரத்தத்த சார் பலன அனுபவிச்சாரு. இங்கே நம்ம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், சாமியாருங்களோட ப்ளஸ்ஸே பேரு தான். பேரு கெட்டு போச்சுன்னா எல்லாம் போச்சு! இவனுங்க சாய்பாபா முதல் இந்த பனங்கொட்ட தலையன் ராம்தேவ் வரை எல்லோரும் சமூக சேவை முகமூடிய போட்டுக்கறது அதுக்குத்தான். பல சாமியாருங்க பெருகிக்கிட்ட போட்டி கார்ப்பரேட் யுகத்துக்ல இவனுங்க பப்பு வேகனும்ன்னா நான் இந்த சமூகத்தை தாங்குறேன்ன்னு ஒரு இமேஜ் உருவாக்கனும்.
--
http://erumbhu.blogspot.com/
அதாவது கருப்பு பணத்தை எதிர்த்து ஒருவர் செய்த போராட்டத்தை அரசு ஒடுக்கியதற்க்கு நீங்கள் மகிழ்கிறீர்கள்! அதாவது போராட்டம் முக்யமில்லை. யார் செய்தார்கள் என்பது தான் முக்கியம்.
பதிலளிநீக்குஏர் கூலர் இருந்ததா என்று தெரியாது. இருந்தால் என்ன தவறு? ஏழைகள் தான் நல்லவர்கள் என்ற மிக பிற்போக்கான பார்வை உங்களது.
பதிவை படித்ததற்கு வெட்கப்படுகிறேன்!
65 லட்சம் கோடி ரூபாய் இந்தியப் பணம், அதை என்ன செய்தாள் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும் என்று மாற்று யோசனை நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும். இந்த சாமியாராவது 60000 பேரைக் கூட்டி, தைரியமானாக அரசைப் பார்த்து, நீ ஊழல் வாதி என்று சொன்னார். நம்மால் ஆறு பேரைக் கூட கூட்ட முடியுமா என்றே தெரியவில்லை. ஊழலுக்கு எதிராக ஒருத்தர் இரண்டு பேர் குரல் கொடுத்து பிரயோஜனமில்லை, எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இந்தப் போராட்டத்தால் உடனடி விளைவு இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நிச்சயம் ஏற்ப்பட்டுள்ளது, எல்லோரும் ஒரு நாள் தங்கள் குரளை உயர்த்தி கேள்வி கேட்பார்கள் என்று நம்புவோமாக.
பதிலளிநீக்குhttp://tamizyan.blogspot.com/2011/06/blog-post_7468.html
பதிலளிநீக்குநல்ல போஸ்டு, படிக்கவும்.
அன்பு மாதவ்
பதிலளிநீக்குபாபா ராம்தேவ் குறித்த இரண்டு பதிவுகளையும் வாசித்தேன். தினமணி இதழின் தலையங்கத்தையும், டெக்கான் கிரானிக்கல் ஏட்டின் குரலையும் பார்த்தேன், கேட்டேன். அரசின் நடவடிக்கையைக் கண்டித்தாலும், இரண்டு பத்திரிகைகளுமே ராம் தேவ் குறித்து எந்தச் சான்றிதழும் தரவில்லை,அவரது சந்தர்ப்பவாத நுழைவைச் சாடவும் செய்துள்ளன. உங்களது குரலும் முக்கிய செய்திகளைச் சொல்கிறது....
ஊழல் சேற்றில் திமிரோடு புதைந்து புதைந்து களியாட்டத்தில் இருக்கும் அரசை எந்த விஷயத்தில் மடக்கலாம் என்று காத்திருக்கும் வலதுசாரி அரசியல் சக்திகளின் ஓர் ஏவுகணை தான் ராம்தேவ். அவர் அடித்த ஒரு பல்டியைத் தான் ஊடகங்கள் காட்டின. அது உடலால் செய்து காட்டியது. பெரிய வீர சூர பிரதாபம் பேசிவிட்டு ஓசைப் படாமல் பெண்ணுடைக்குள் மாறி அங்கிருந்து ஓட யத்தனித்தது தமது பக்த கோடிகளுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கை. அவர்களைக் காவல் துறையிடம் காட்டிக் கொடுத்துவிட்டுத் தமது பொன்னுடலை மட்டும் பாதுகாத்துக் கொள்ளத் தலைப்பட்ட இந்த மகா யோக்கிய சிகாமணி, உண்ணாவிரதத்திற்கே இறங்கி இருக்கக் கூடாது. நட்டாற்றில் விடத் தயங்காத இவரது உன்னத மேதா விலாசத்தை இரக்கத்தைத் தூண்டும் விதமாகப் பரப்பும் ஊடகங்களின் உள் நோக்கம் அசிங்கமாயிருக்கிறது.
அரசோ, எந்த வெட்கமும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு லட்சம் விவசாயிகளின் தற்கொலை பற்றி எந்தச் சிறு அதிர்வும் இவர்களது உடலில் ஏற்படுவதில்லை. தொழிலாளி வர்க்கம் போராடும் போது லத்திகளைச் சுழற்ற யோசிப்பதில்லை. பாபாவைப் பேரம் பேசி வாயடக்கப் பார்த்தது. அவர் இவர்களைத் தூக்கிச் சாப்பிடும் பெரிய திட்டத்தோடு ராம் லீலா மைத்தனத்தில் கடை விரிக்கவும், தந்து அதிகாரப் பிரம்பை மிக இலேசாக வீசியே அவரை ஹரித் துவாரம் வரை விரட்டியடித்துவிட்டது.
ஊழல் இவர்களுக்குப் பொருட்டல்ல. அது ஏன் அம்பலம் ஆனது என்பது தான் புகைச்சல். அப்புறம் இந்த அமைப்பின் மீதே சந்தேகம் வந்துவிட்டால்...? மக்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டால்...? எனவே, இதற்குள்ளேயே இதற்கு மருந்து இருக்கிறது, தீர்வு இருக்கிறது என்று காட்டும் முதலாளித்துவ உள் சாகச நடவடிக்கையின் சின்ன பிரதிபலிப்பு தான் இந்த ஊழல் எதிர்ப்பு கோஷங்களின் உட்கரு.
ராம்தேவ் அத்தியாயம் முடியாது. அது ஹசாரே வகையாறாக்களின் முனையிலிருந்தும் தொடரும். தாராளமயக் கொள்கைகளின் அராஜக பக்க விளைவு தான் பெருகும் ஊழல் என்பதை மேற்படி நாடகக் காட்சிகளின் எந்தப் பாத்திரமும் பேசாது. பேசவே பேசாது. அது மட்டுமல்ல, உண்மையான போர்க்களத்தில் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் பக்கம் கவனம் செல்லக் கூடாது என்று எழுப்பப்படும் விசேஷ மேடைகள், பந்தல்கள், ஆர்ப்பாட்டக் காட்சிகளில் ஒன்று தான் காமிரா முன் தோன்றி மறைந்திருப்பது. ஆட்களைத் தான் விரட்டி அடிக்கிறது ஆளும் கூட்டணி. அதுவும் தமது விதிகளை மீறிய ஆட்டம் ஆடியதற்காக..
பந்தல்களைப் பராமரிப்பது அவர்களது வர்க்கக் கடமை.
எஸ் வி வேணுகோபாலன்
எகிப்து புரட்சியையும்,ராம் தேவ் பாபாவின் போரட்டத்தை ஒப்பிடுவதே தவறு.எகிப்தியர்கள் இந்தியாவின் 1948ம் வருடத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்தியா அதனையெல்லாம் கடந்து 2011ல் பயணிக்கிறது.
பதிலளிநீக்குமேலும் எகிப்து,லிபியா புரட்சிகளின் பின்னால் உங்களுக்கு ஒவ்வாத முதலாளித்துவத்தின் ஆதரவினால் மாத்திரமே சாத்தியமான,சாத்தியமாகும் ஒன்று.
போராடுகிற தொழிலாளர்களை, இதே டெல்லியில், இதே போலீஸ் எத்தனையோ முறை கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறது. ஈவிரக்கமின்றி அடக்குமுறைகளை ஏவியிருக்கிறது. அப்போதெல்லாம் நடிக நடிகையரின் உடல்களிலும், அந்தரங்கங்களிலும் மோப்பம் பிடித்துக் கிடந்த தொலைக் காட்சிகள் மூச்சுவிடாமல் இன்று காலையிலிருந்து ஒரே ராம்தேவ் பஜனை செய்துகொண்டு இருக்கின்றன. அதிலும் இந்த என்.டி.டிவி, டைம்ஸ்நவ் போன்ற இந்தியாவின் பிரதான ஆங்கிலச் செய்தி தொலைக் காட்சிகள் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை. எதோ வானமே இடிந்துவிட்டது போல “ஐயோ, ஐயோ” என பெரும் கூப்பாடு போட்டு தொலைக்கின்றன.-- மிடியாக்களின் நடுநிலை வேஷம் கலைந்தது.
பதிலளிநீக்குகாவி உடையிலிருப்பவர்கள் முற்றும் துறந்தவர்கள், அவர்களால் ஊழலை எதிர்க்க முடியும், மக்களை திரட்ட முடியும், அரசியலில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என்று இறை பற்று கொண்ட மக்களிடம் முழு சோற்றில் பூசணிக்காய் மறைக்கும் வேலை செய்கின்றனர். மத நம்பிக்கை உள்ள நாட்டில் இவர்கள் பின்னாலும் கூடப் போகும் கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஏமாற்றப் படப் போவது ஏமாறப் போவது நிதர்சனம்.
பதிலளிநீக்குஆனால் அடிப்படை நோக்கத்தைப் பார்த்தால் மக்கள் ஊழலுக்கு எதிராகப் போராட தயாராகின்றனர் என்று தெரிய வருகிறது. யார் சரிவர மக்களை திரட்டுகிறார்களோ அவர்களே வெற்றியடைவர்.
மற்றெல்லாவற்றையும் விட மிக முக்கியமானது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மீதான அரசின் அக்கறை.
பதிலளிநீக்குநள்ளிரவில் அவரவர்களின் திட்டங்களோடு தொலைதூரத்திலிருந்து தங்கும் ஏற்பாடுகள் குறித்த திட்டமிடல் வேறேதுமின்றி வந்த மக்களின் மீது முன்னறிவிப்பு ஏதுமின்றி மைதானத்தை முரட்டுத் தனமாக ஆக்ரமித்தது கேவலமான செயல்.
ஊடகங்களும் அரசியல்கட்சிகளும் இதைப் பற்றிய கவலை ஏதுமின்றிக் குளிர் காய்கின்றன.
நள்ளிரவில் காவல்துறையின் அடக்குமுறை யாருக்கு எதிராய் இருந்தாலும்-விவசாயிகளோ-தொழிலாளிகளோ-ஏழை வர்க்கமோ-பாட்டளியோ-விமர்சிக்கப்படவேண்டியதும் கண்டிக்கப் படவேண்டியதும்.
உங்கள் பார்வை ஒருபுறம் மட்டுமே பார்த்திருக்கிறதாய் உணர்கிறேன் மாதவராஜ்.