ஒரு பிரஜையின் துப்பாக்கி
அன்று காலையில் கண் விழித்ததும் முதலில் பீரோவைத் திறந்து அதன் ரகசிய அறையில் வைத்திருந்த துப்பாக்கியைப் போய் பார்த்தார். அடங்காத குதிரை ஒன்று கால் தூக்கி நின்ற வாகில் கிடந்ததை கையில் எடுத்துக் கொண்டார். புழுக்கத்திலிருந்த வெக்கையான நெடியடித்தது. உலோக ஸ்பரிசத்தில் லேசாய் நடுக்கம் வந்தது.
படாத பாடு பட்டு லைசென்சு வாங்கிய ஆரம்ப காலங்களில் அடிக்கடி எடுத்துப் பார்த்திருக்கிறார். அப்போதெல்லாம் ‘உங்களுக்கு எதுக்கு இந்த ஆசை. பைத்தியமா பிடிச்சிருக்கு’ என அவரது மனைவி முணுமுணுத்திருக்கிறார். அதற்குப் பிறகு யாராவது பிரபல அரசியல் தலைவர்கள் வருகையையொட்டி உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் செய்ய வேண்டியிருந்ததை விட்டால் எத்தனை முறை இந்த துப்பாக்கியை கையில் எடுத்திருப்பார் என்று யோசித்துச் சொல்லி விடலாம்.
இந்த விடுமுறைக்கு வந்திருந்த பேரக்குழந்தைகளின் கண்ணில் படாமல் வைப்பது போதும் போதுமென்றாகி விட்டது. இத்தனை நாளும் தானே இதனை பாதுகாத்து வருவதாகவும் உணர்ந்தார். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக வைத்திருந்த துப்பாக்கியை அன்றைக்கு மொத்தமாக சரண்டர் செய்யத் திடுமெனத் தோன்றியது.
கலெக்டர் அலுவலகத்தில், அந்த அரசு அதிகாரி மேஜையில் அவர் வைத்த துப்பாக்கியை எடுத்துப் பார்த்தார். ரவைகளை அத்தனையும் அப்படியே இருக்கிறதாவென எண்ணிப் பார்த்தார். நிமிர்ந்து, “ம்... எதற்கு சரண்டர் செய்கிறீர்கள்” என்றார்.
”போதும்... இருக்கட்டும்” என இவர் சொன்னார்
.
“இல்ல. அப்படியெல்லாம் சரண்டர் செய்ய முடியாது. சரியான காரணங்கள் வேண்டும்” என்றார் அதிகாரி.
அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
”இந்தாங்க” என்று சிரித்தவாறே அந்த அதிகாரி துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி நீட்டினார்.
”எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. போதுமா” என்று அவர் துப்பாக்கியை வாங்காமல் எழுந்தார்.
“அதற்கு டாக்டரிடம் ஒரு சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என அதிகாரி துப்பாக்கியை அவரிடம் நீட்டிக் கொண்டு இருந்தார் அப்போதும்.
நான் ஒரு தேசத்துரோகி!
மரத்தின் பழங்களை பறவைகள் தின்றுவிடுமென அவர்கள் பயந்தார்கள். பறவைகளை வேட்டையாடினார்கள். காய்களைப் பறித்து தடியால் கனிய வைத்தார்கள்.
“இது அநியாயம்” என்றேன்.
“நீ பறவைகளுக்காகவும் பழங்களுக்காகவுமே பரிந்து பேசுகிறாய்” குற்றம் சுமத்தினார்கள் அவர்கள்.
“நான் மரங்களுக்காகவும்தான் பேசினேன்” என்றேன்.
“நமக்காக ஏன் பேசவில்லை நீ?” விசாரித்தார்கள் அவர்கள்.
“இவன் ஒரு கவிஞன்” என்றன பறவைகளும், பழங்களும், மரங்களும்!
“இல்லை. இவன் ஒரு தேசத்துரோகி” என அறிவித்தார்கள் அவர்கள்.
அனேகமாக நாளை நான் கைது செய்யப்படலாம்.
பெண்ணுலகம்: ஒரு கொலையும், நான்கு தற்கொலைகளும்
பலவித மரணங்களைச் சுமந்தபடி தினசரிகள் நம் வீடுகளுக்குள் வந்து விழுகின்றன. தொடர்ந்து அவைகளை வாசிக்க நேர்ந்து, டீயைக் குடித்தபடி அடுத்த பக்கத்தைத் திருப்புகிறோம். அருகில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அதுகுறித்து சில தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். எங்கோ, யாருக்கோ நேர்ந்த துயரங்கள் நம்மை அழுத்துவதில்லை. ஒவ்வொரு மரணத்திலிருந்தும் எழும் அழுகைகள் நம்மை எளிதில் தீண்டுவதில்லை. ஆகப்பெரும் ஜனசமுத்திரத்தில் இதுவே துயரங்களின் விதியாக இருக்கிறது.
இந்தப் பத்திரிகைகளும் மரணங்களை வியாபாரமாக்கும் முயற்சியில், மரணங்களிலிருக்கிற ஜீவனைக் கொன்று விடுகின்றன. பெரும்பாலான மரணங்களின் தலைப்புச் செய்திகளில் ‘காதலோ’, ‘கள்ளக்காதலோ’ இடம்பெறுகின்றன. அந்த சோக நிகழ்வுகளை உள்வாங்குவதிலும், அசை போடுவதிலும் ஒருவிதமான சுவாரசியம் ஏற்படுகிறது. சமூகம் குறித்த கவலையோ, கருத்தோ இன்றி ஒரு துப்பறியும் கதையின் விறுவிறுப்பில் மனிதர்கள் மாய்ந்து போகின்றனர். நேற்றைய செய்தியின் எந்த தாக்கமும் இன்றி ஒரு புதிய மரணத்தை நாளை அவர்கள் வாசித்துக்கொண்டு இருப்பார்கள்.
அப்படித் தாண்டிவிட முடியாமல் சில மரணச்செய்திகள் நினைவோட்டங்களின் கூடவே வந்து அவஸ்தை தருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் திருமணமான ஒரு பெண்ணை, திருமணத்திற்கு முன்பே விரும்பிய இளைஞன் ஒருவன் கொன்றதும், நேற்று பழனியில் ஒரு பெண் தான் காதலித்தவனோடு வாழச் சென்றதைத் தாங்க முடியாமல் அந்தக் குடும்பத்தில் உள்ள தாய், தந்தை, சகோதரன், சகோதரி என நான்கு பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும் சமூகத்தின் முக்கியமான நோய்களை அடையாளம் காட்டுவதாய் இருக்கின்றன.
முந்தையது, ‘இன்னொருவனுடன் தான் விரும்பியவளை நினைத்துப் பார்க்க முடியாத’ வெறிகொண்ட மனநிலை என்றால் பிந்தையது, “தங்கள் குடும்ப கௌரவம், மானம் எல்லாம் அவளால் பறிபோய் விட்டதே” என்னும் விரக்தியின் உச்சநிலை. இங்கே கொலை செய்தவனும், தற்கொலை செய்தவர்களும் ‘வாழ்வில் மீளவே முடியாத தோல்வியை’ தாங்கள் சந்தித்து விட்டதாக முடிவுக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் மீதெல்லாம் பரிதாபப்படுவதற்கு என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை.
இரண்டு கொடூரங்களும் பெண்ணுலகத்தின் மீது இழைக்கப்பட்ட பெரும் காயங்களாகவே அறிய முடிகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். கனவும், ஆசையும் ததும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்குள் கழுத்தறுபட்டு கொலை செய்யப்படுகிறாள் ஒரு பெண். எவனோ ஒருவனுக்காக தன் குடும்பத்தையே சாகக்கொடுத்தவள் எனும் விஷம் தொண்டையடைக்க இனி வாழ்க்கை முழுவதும் சாக வேண்டும் இன்னொரு பெண்.
காதல் குறித்து இச்சமூகத்தில் நிலவும் தவறான கற்பிதங்களின் வெளிப்பாடே இந்த பைத்தியக்காரத்தனங்கள். காதலை உடல்ரீதியாக பார்க்கும் சமூக மனோபாவமே இகொடூரங்களுக்கு காரணமாகிறது. தான் விரும்பிய பெண்ணுடல் அல்லது தாங்கள் வளர்த்த மகளின் உடல் மீது ஏற்படும் கறைகளாகவே அப்பெண்களின் எதிர்காலம் பார்க்கப்பட்டிருக்கிறது.
பெண் என்பவள் தசையினால் மட்டும் ஆனவள் அல்ல. அன்பு, பரிவு, சினேகம், ஆதரவு என்னும் அற்புதங்களால் ஆனவள் என்பதை அறியாத வரை இந்த மரணச்செய்திகளை நாம் வாசித்துத் தொலைக்க வேண்டியதுதான் போலும்.
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 4
ரசவாதத்தால் மண்ணைப் பொன்னாக்கும் மாயவித்தையை கைக்குள் கொண்டிருக்கும் நிலமிது என வந்திறங்கிய கடலோடிகளும், பயணிகளும் இம்மண்ணில் நிறைந்திருந்த சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அவர்களை அதிர்ச்சியுறச் செய்ததால்தான் தொகை நூல்களாக அவற்றை உருவாக்கினர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எல்லாம் இந்தியாவின் வாழ்வியல் அடையாளமாக வீற்றிருக்கும் இத்தொகுப்பு நூல்களுக்கு வெளியே எண்ணற்ற வாழ்வியல் ஒழுங்குகள் நிறைந்திருப்பதை கண்டறியத் தொடங்கி கதையாடலாக்கிட வேண்டிய அவசியத்தை காலம் எழுத்தாளர்களுக்கு நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திலும்கூட தொல்சடங்குகளும், பழக்க வழக்கங்களும் அதிகாரத்தை தன் கைக்குள் வைத்திருக்க விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் கருவிகளாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடவுள்களுக்கும், மதநிறுவனங்களுக்கும் ஐதீகங்களையும், குலமரபு வழக்கங்களையும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையே அதிகாரவர்க்கம் அளித்திருக்கிறது. நிறுவனமயமான பெருந்தெய்வ கோவில்களுக்கு மட்டும் அல்ல, இந்திய நிலத்தின் சாதிய வரைபடமான கிராமக்குலத்தெய்வ வழிபாட்டிலும் கூட இதன் அடையாளத்தைக் காணமுடிகிறது.
தஞ்சைப் பெரியகோயிலின் கலாச்சார நீட்சி அதன் சுற்றளவில் பல நூறு மைல்களுக்குள்ளும் கடந்து ஊடுருவும் வல்லமை கொண்டிருந்தது. இசை வேளாளர் குலத்தில் பிறந்த பெண்களை பெருங்கோயில்களுக்கு பொட்டுக் கட்டி தேவதாசிகளாக்கிடும் வழக்கம் நீண்ட காலம் தமிழகத்தில் இருந்து வந்தது. அதைப் போலவே தாங்களும் செய்துபார்க்கும் வழக்கம் கிராமங்களிலும் இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமே செடல் எனும் நாவல். நகரங்களில் நட்டுவனார் குலத்தில் பிறந்த பெண்கள் என்றால், கிராமங்களில் கூத்தாடும் சாதியில் பிறந்த பெண்கள் என அதிகாரம் தன்னை எழுதிப் பார்த்திடும் விரிந்த புத்தகமாக பெண் உடலே இருந்திருக்கிறது.
பஞ்சமும், பசியும், மழையின்மையும், வறட்சியால் பிளவுண்டுகிடக்கிற நிலங்களும் மனித மனங்களுக்குள் நிகழ்த்துகிற கொடுஞ்செயலை புரிந்து கொள்வது ஒன்றும் எளிதான விஷயமில்லை. “வேறு எதுக்குய்யா இப்பிடிச் செய்யிறோம்? எல்லாம் இந்த உசுர புடிச்சு வைக்கிறதுக்காகத்தான. உசுரப் புடிச்சு வைக்கனும்னா எதையாவது திங்கனும்ல” என்கிற மனிதநியாயமே நாவலைப் புரட்டி, புரட்டி அடுத்தடுத்த பக்கங்களுக்கும் கொண்டு செல்கிறது.
செல்லியம்மனுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த ராஜம்மாள் இறந்து போனபிறகு பெரும் வறட்சிக்கு உள்ளாகிறது கிராமம். அவரவர் தரப்பில் நின்று இதற்கான காரணத்தை தேடிக் கண்டடைகிறார்கள். புராணங்களும், இதிகாசங்களும் சொல்லியே உருவேற்றப்பட்டிருக்கிறது கிராமத்தின் நம்பிக்கைகள். யாவற்றிற்கும் சாமிக்குத்தம் என்பதைத் தாண்டி வேறு எதையும் இவர்கள் கண்டடைவதில்லை. எனவேதான் செடலை செல்லியம்மனுக்கு பொட்டுக் கட்டி விடுகிறார்கள். கிராமத்தின் கடைக் கோடியில் இருக்கும் பறத்தெருவில் கடைசிவீடாக ஐந்தாறு குடிசைகள் கூத்தாடிகளுக்குச் சொந்தம். அந்த கூத்தாடிக் குடும்பத்தின் பிள்ளையே செடல்.
செல்லியம்மனுக்குச் செல்லப்பிள்ளை பாட, ஊர்த்திருவிழாவில் பாட்டுப்பாட, சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கெல்லாம் சென்று கோவில் திருவிழாவில் பாடி ஆடும் சாமி புள்ளையாகிறாள் செடல் - தனக்கு என்ன நேர்கிறது என்பது கூட அறியாமல். நாவல் காலத்தின் கண்ணாடி என்று நம்புகிற வாசகன் புரிந்து கொள்கிறான் நாவலுக்குள் இயங்குகிற காலத்தை, பஞ்சமும், பசியும், வாட்டி வதைக்கும் நாளில் மலையகத்து தொழிலாளிகளாக சமதளத்திலிருந்து கண்டிக்கும், மூணாறுக்கும் பிழைத்திடக் கிளம்பிய குடும்பங்களின் கதையிது. சொந்த மகளை விருப்பமின்றி ஊரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு சாமி புள்ளையாக்கிய செடலின் பெற்றோர்களின் மலையகத்து மனநிலையை இமையம் இனிமேல்தான் எழுத வேண்டும்.
தலித் அழகியல், தலித்கோட்பாடு போன்றவை மிகக் காத்திரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் இமையம் தன்னுடைய கோவேறு கழுதைகள் எனும் முதல் நாவலின் மூலம் சிற்றிதழ் சார் வாசகர்களின் பெரும் கவனிப்பை பெற்றவர். செடல் இவருடைய மூன்றாவது நாவல். தமிழ் நாவல்களுக்கென உருவாகி நிலைபெற்றிருக்கிற மரபான கதைசொல்லலை மீறாதவர் இமையம். பிரதாப முதலியார் சரித்திரத்தில் துவங்கி வாசக கவனம் பெற்ற நாவல்கள் யாவும் மையக் கதாபாத்திரங்களின் வழியாகத்தான் கதைத்தளத்தை கட்டமைத்துக் கடந்திருக்கின்றன. இமையத்தின் மூன்று நாவல்களும் மூன்று கதாபாத்திரங்களின் கதைதான்.
| புதிய பதிவர்கள் காதல்காரா என்னும் இந்த வலைப்பக்கத்தில் காதலும் காதல் சார்ந்த உளறல்களும் என கவிதைகள் எழுதி வருகிறார் அழகன். உருக உருகக் காதலிக்கத் தயாராயிருக்கும் இவர், ஆகஸ்டு 2010லிருந்து 12 பதிவுகள் எழுதியிருக்கிறார். அழகனை வாழ்த்தி வரவேற்போம். |
செடலின் கதை செல்லியம்மன் கோவிலிக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்ட கூத்தாடிச் சாதியில் பிறந்த பெண்ணின் கதையா? அவளின் கதைச் சரடைப் பிடித்தபடி அந்நாட்களில் தென்னாற்காடு மாவட்டத்துக் கிராமத் தின் சமூகவியலை எழுதிப் பார்த்திருக்கிறார் இமையம் என்று எடுத்துக் கொள்ளலாமா?. ஊரின் கதை என்றால், இந்த ஊர் யாருடைய ஊராக இருக்கிறது. நாவலுக்குள் இயங்கும் சமூக அடையாளங்களும், நாவலின் எதார்த்த மான மக்கள் மொழியும் நாவலை வாசகனுக்கு மனநெருக்கமாக்குகிறது.
செடலோடு பயணப்படும் சில பக்கங்களில் மட்டுமே வந்து செல்லும் பொட்டுக்கட்டி விடப்பட்ட லட்சுமியும், கொலை சிந்து அருணாச்சலமும், செடலின் பிள்ளைப்பிராயத்தில் அவளோடு கோவில் வீட்டுக்குள் கிடக்கிற கிழவியும், கூத்தாட்டக் கலைஞரான பாஞ்சாலியும் வாசகனுக்கு மிக முக்கியமானவர்கள். லட்சுமி செடலுக்கு வாத்தியாரா, சிநேகிதியா அல்லது யாவற்றையும் எளிதாக்கிட வந்த சிறுதெய்வமா என அறியாது செடல் பிரமிக்கிறாள். லட்சுமியின் வழியாகத்தான் தனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற சாமிபுள்ள எனும் வாழ்வை எளிதாக்கி கடக்கும் நம்பிக்கையையும் பெறுகிறாள். இந்த நம்பிக்கைதான் செடலை ஊர் முழுக்க புறக்கணித்துத் துப்பிய மழை நாளில் வழியில் தென்பட்ட கூத்தாட்டக் கலைஞருடன் உடன்போகச் செய்கிறது. கூத்துக் கலைஞன் பொன்னன் இறந்த பிறகு மிகத்தைரியமாக பிறந்த ஊருக்கு வந்து ஊராரிடம் நியாயம் கேட்கச் செய்ததும் கூட லட்சுமி வாழ்க்கையை கொண்டாட்டமாக நிகழ்த்த வேண்டும் என அவளுக்குச் சொல்லிச் சென்ற பாலபாடம் தான்.
பள்ளுப் பாடப் போற எடத்திலெ சிரிச்ச மொகமா இருக்கணும். கோவக் குறியே மொகத்தில இருக்கக் கூடாது, இடிச்சாலும், கிள்ளுனாலும் சிரிக்கணும். ஆம்பளக்கிட்டதான் பேசணும், சிரிக்கணும், சிரிச்சுப்பேசியே சரக்க எறக்கணும். ஓரக்கண்ணால பார்க்கணும், ஒதட்டக் கடிக்கணும், சடயத் தூக்கி முன்னால போட்டுக்கணும்..... இவையே லட்சுமி தன் வாழ்வின் நியாயமாக செடலுக்குள் கடத்தியவை. இவற்றைப் புரிந்து கொண்ட செடல் நாவலுக்குள் தன் உடலைப் புனிதமானதாக அதுவும் சாமிக்குரியதாக மட்டுமே நம்புகிறாள். செடல் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்பவள், எதிர்க்கதையாடல் நிகழ்த்துபவள் அல்ல.
கூத்தாடிப் பெண்தானே என நாவலெங்கும் அவளை யாவரும் பாலியல் இச்சையுடன் அணுகுகிறார்கள். எல்லோரையும் புறக்கணிக்கிறாள். சக கூத்தாட்டக் கலைஞர்களிடமிருந்து தன்னை வெகுவாக விலக்கி வைத்துக் கொள்கிறாள். எட்டுத்திசையெங்கும் செடல் செட்டு எனப் பெயர் பெற்றிருப்பதற்கு அவளின் வேஷத்தோடும், ஆட்டத்தோடும் கூட அவளின் உடலின் மீதான மயக்கமும் காரணம் என்று அறிந்துதான் வைத்திருக்கிறாள். ஆனாலும் தன்னை நெருங்கும் ஆண்களைப் புறக்கணிப்பதற்கு தனக்குள் அவள் வரித்துக் கொள்ளும் காரணம் சாமிபுள்ள நானு; என் உடலும், மனமும் சுத்தமாக இருக்கணும் என்பது தான். தன்னை இச்சையுடன் நெருங்கும் உடையாருடன் அவள் நிகழ்த்தும் உரையாடலே இதற்கு சாட்சியாக நாவலில் பதிவு பெற்றுள்ளது.
நான் முன் சென்மாந்தரத்துல என்னா பாவம் செஞ்சியிருந்தா, இந்தப் பொறவியில இந்தக் கெதிக்கு ஆளாயிருப்பன்? எனக்கு இன்னமா வேணும்? ஒங்க வூட்டு மாட்டுச் சாணிய வாரி வவுறு வளர்க்கிற சாதி நான். பறச்சிய விட மட்டி ஒங்களத் தொட்டு தீட்டாக்கி நான் இன்னுமா பாவத்தச் சேத்துக்கணும்? ஒங்க சாதிக்கேத்தத் தொயிலா இது? ...... எல்லாத்தயுங்காட்டியும் நான் பொட்டுக்கட்டி வுட்டவ. எனக்கு அந்த மாரியான கொடுப்பன எல்லாம் கெடயாது. வேற ஏதாச்சும் சொல் லுங்க....” அட எங் கடவுள, என்னால ஒங்க சாதி மானம் கெடணுமா? சாதி கலப்பு வாண்டாம் சாமி, மாடு திங்கிற பொலச்சியத் தேடி வரலாமா?..... என இதுபோன்று நாவலின் பல பக்கங்களில் செடலின் சொற்கள் இருப்பதை நியாயப்படுத்தும் குரலாகத்தான் பதிவாகியுள்ளது.
இமையம் ஒரு வேளை என்னுடைய செடல் இப்படித்தான் வாழ்ந்தாள் என்று சொல்லக்கூடும். இருப்பதை அப்படி அப்படியே பதிவு செய்வது எழுத்தாளனின் வேலை அல்ல. நான் உண்மையைத்தான் எழுதுகிறேன் என்று சொல்வதால் யாதொரு பயனும் இல்லை. உண்மை என்றால் அது யாருக்கான உண்மை, எவரின் அதிகாரத்தை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் உண்மை என்பதை யெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. நிகழ்ந்தவற்றை அழித்து எழுதி வேறு ஒன்றாக ஆக்கிப் பார்த்திடும் வல்லமை பெற்றவர்கள் புனை கதையாளர்கள். அப்படி எழுதிப்பார்த்த புனைகதைகளையும் கூட மொழி எனும் கூட்டிற்குள் நின்று செம்மொழி மாநாட்டில் இமையம் புறக்கணித் திருந்ததையும் நாம் கவனப்படுத்த வேண்டியுள்ளது.
எப்போதும் தன்னையும், தன் உடலையும் ஞாபகமூட்டிக் கொண்டி ருக்கும் தலைவாசல் கிராமத்துச் சம்பவம் குறித்த பெருத்த இடைவெளி நாவலில் வாசகனுக்காக உருவாக்கி விடப்பட்டிருக்கிறது. நாவல் முழுவதும் செடலின் வழியாக வாசகனுக்கு ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்த சம்பவத்தை நினைத்ததுமே அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. இதுவரை அவளுடைய உடலைக் கொண்டாளவும் கொண்டாடவும் வெளிச்சத்தில் எவன் வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்கிறாள். அவளின் உடலும், மனமும் தவிக்கும் இந்தக் காட்சியும் கூட நாவலில் பதிவாகியுள்ளது.
நாவலுக்குள் பாஞ்சாலியும், செடலும் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் நடைபெறும் உரையாடலின் வழி இது மதுர மீனாட்சியோட சாபம் என காலம், காலமாக தேவதாசிகளின் மீதான வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் ஆதிக்க சாதிகளின் முயற்சி குறித்த புனைகதையும் பதிவாகியுள்ளது. இக்கதையின் நடுவிலான உரையாடலில் அவ என்னா பண்ணுவா, சாதியோட புத்தியாச்சே, ஆதியிலிருந்து வந்தது பாதியில போவுமா? எனும் பதம் உரைப்பது சாதியின் நியமங்களை நியாயப்படுத்தும் குரலாகவும் வாசகனுக்கு தென்படவும் வழியுண்டு.
நாவலின் துவக்கத்தில் நடராஜ பிள்ளையின் உத்தரவுக்கு கீழ்ப்படிகிறவராக ராமலிங்க ஐயரை காட்டுவதும், அதிலும் அவர் கட்டளையிட்ட மறுநொடியில் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி மிகவிரைவாக ஊர்க்கூட்டத்தில் பறையக் கூட்டத்திற்கும் பின்னால் போய் பவ்யமாக அமர்ந்தார் என கட்டமைப்பது பொருத்தமானதில்லை. அதைவிட அடுத்தபடி மேலே போய் ராமலிங்க ஐயரின் மகன் பெயர் கருப்பசாமி ஐயர். தமிழகத்தின் எந்த அக்ரகாரத்திற்குள்ளும் கருப்பசாமி அய்யர் இருக்க யாதொரு சாத்தியமும் இல்லை என்பதையும் பெயர்களுக்குள்ளும் சாதி இருக்கிறது என்கிற உண்மையையும் நாம் மறந்து விடலாகாது.
இவை எல்லாவற்றையும் கடந்து செடலை கடந்த பத்தாண்டு கால நாவல்களில் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய புத்தகமாக்கியிருப்பது நாவலின் மையப் பகுதிக்குள் விரவியிருக்கும் கூத்துக்கலை குறித்த தகவல்களும், விவரணைகளும்தான். தமிழகத்தின் வடமாவட்டத்தின் தொன்மையான கலையான கூத்தின் நுட்பங்கள், அடவுகள், அவர்களின் துயர்மிகு வாழ்வு, தன் கண் எதிரே தான் விரும்பி வளர்த்தெடுத்த கலையின் சிதைவை காணச் சகிக்காத அவர்களின் மனம் என யாவும் பதிவு பெற்றுள்ளதால் தான் செடல் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாகியுள்ளது.
-ம.மணிமாறன்
மக்களை நோக்கி நகரும் திரைப்பட இயக்கம்
சனிக்கிழமை இரவு ஒரு மணிக்கு குற்றாலம் போய்ச் சேர்ந்து, தூங்கிக்கொண்டு இருந்த கருணாவை எழுப்பினோம். கதவைத் திறந்து “ஆஹா... வாங்கய்யா..” என என்னையும், பிரியா கார்த்தியையும் வரவேற்றார். இரண்டு நாட்களாய் மாறி மாறி கூட்டமும், அமர்வுகளும், விவாதங்களும் அவரை அழுத்தியிருக்கும். அதையெல்லாம் உதறி பயிற்சி முகாம் அனுபவங்களை உற்சாகமாய் பேசிக்கொண்டு இருந்தார். எழுந்து நின்று “வாங்க. இப்ப அருவியில யாரும் இருக்க மாட்டாங்க. குளிக்கப் போவம்” என்றார். வெளியில் வருடிக்கொண்டு இருந்த குளிர்ந்த காற்றும், அவரது பேச்சும் புத்துணர்வைத் தந்தன. அதுதான் இப்போது அனைவருக்கும் தேவை. இந்த நேரத்துக்கும் தேவை.
திரைப்படங்கள் குறித்து விமர்சித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது அடுத்த அடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கின்றனர். வியாபாரம், பொழுதுபோக்குத்தான் சினிமா என்று ஒரு பக்கம் பெரும்பாலோர் கருத்துக்கு ஆட்பட்டு இருக்கும் சமூகத்தில், ‘சினிமா ஒரு அற்புதமான கலைச்சாதனம், உண்மைகளுக்கு மிக நெருக்கமான வடிவம்’ என்னும் புரிதலோடு அதனை தோளில் தூக்கிவைத்து மக்களை நோக்கிச் செல்வது என்று முடிவு செய்து முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் (தமுஎகச) அதற்கான திட்டமிடுதலோடு களம் இறங்கி வருகின்றனர்.
குப்பைகளாய் கொட்டிக் கொண்டு இருக்கும் தமிழ்த்திரைப்படங்களில் அபூர்வமாக வரும் நல்ல திரைப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது கொடுத்து வந்து கொண்டு இருந்தது தமுஎகச. தங்கள் மேடைகளில் சினிமா குறித்த ரசனையை உயர்த்துவதற்கான உரையாடலைத் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அதன் கலைஞர்கள் ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுப்பதிலும் இறங்கி இருக்கின்றனர். இப்போது நல்ல உலக சினிமாக்களையும், தங்கள் படைப்புகளையும் சேர்த்து மக்களிடம் கொண்டு செல்கிற காரியத்தை துவக்கி இருக்கின்றனர்.
தமுஎகசவுக்கு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்தக் கிளைகள் ஒவ்வொன்றும் திரைப்படக் கழகங்களை பதிவு செய்து வருகின்றனர். தமுஎகசவிற்கென்று இப்போது சொந்தமாக பல புரொஜக்டர்கள் இருக்கின்றன. நல்ல திரைப்படங்களை சேகரித்து ‘திரைப்பட வங்கி’ ஒன்று உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது. பல மாவட்டங்களை உள்ளடக்கி பகுதி பகுதியாக ‘திரைப்பட இயக்கத்தை’ அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமுஎகசவின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், நாடகக்கலைஞரும், குறும்பட இயக்குனருமான தோழர் கருணா அவர்கள் இதனை ஒருங்கிணத்து நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்த மாதம் 22, 23, 24 தேதிகளில் குற்றாலத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான முகாம் நடைபெற்றது. நிகழ்வின் இறுதிநாளன்று நிறைவுரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தேன்.
காலையில் பயிற்சி முகாமிற்கு வந்தவர்களை சந்திக்க முடிந்தது. எண்பது பேர் போல வந்திருந்தனர். பாதிக்குப் பாதி வயதானவர்களே இருந்தனர். அதில் எனக்கு வருத்தமே. “என்ன தோழர் இது” என்றேன் கருணாவிடம். “இப்போது பரவாயில்லை” என்றார். ‘மூழ்கும் நதி’ ஆவணப்பட இயக்குனரும், ‘அவள் பேர் தமிழரசி’ இயக்குனர் மீரா கதிரவனும் வந்திருந்தனர். மீரா கதிரவன் முந்தைய நாளின் அமர்வில் உரையாற்றி இருந்திருக்கிறார். ஆர்வத்தினால் திரும்பவும் வந்திருந்தார்.
விவாதங்களில், பலர் பங்கெடுத்துக் கொண்டனர். திரைப்படங்கள் எடுப்பது குறித்து சிலர் பேசும்போது கருணா குறுக்கிட்டு, “இந்த முகாம் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிடுவது குறித்து மட்டுமே” எனறார். திரைப்பட இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்த போதிலும், அவற்றை ஒரு சம்பிரதாயமாகவே உணர்ந்திருந்தது போல எனக்குப் பட்டது. அதுகுறித்துப் பேசுவதென தீர்மானித்துக் கொண்டேன்.
மிகுந்த அவஸ்தைகளோடு எடுக்கப்படும் ஆவணப்படங்களைச் சொல்லி, அவை மக்களைச் சென்றடையாமல் எங்கோ தூசியடைந்து போவது, நாம் உண்மைக்கும், சமூகத்துக்கும் செய்கிற மாபெரும் துரோகம் என்றேன். இயக்குனர் கதிர் எடுத்த ‘மூழ்கும் நதி’ ஆவணப்படத்திற்காக அவர் மூன்று நாட்கள் குடும்பத்தோடு போலீஸ் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு தொந்தரவுக்குள்ளானதைச் சுட்டிக்காட்டி, இந்த சிரமங்கள் கேட்பாரற்று போவது யாருக்கு சம்மதம் என்றேன். அற்புதமான உலக சினிமாக்களை நம் தலைமுறை மக்கள் பார்க்காமலேயே ரசனை கெட்டுப் போய் எந்திரனுக்காக பால் குடம் எடுப்பது குறித்து எந்த வருத்தமும் உங்களுக்கில்லையா எனக் கேட்டேன். இப்போது தேவை நமக்கு கோபம். அசிஙகமான, அருவருப்பான, குப்பையான சினிமாவுக்கு எதிரான பெரும் கோபம். பிரம்மாண்டங்களை எதிப்பதும் பிரம்மாண்டமானதே, நாம் பிரம்மாண்டமானவர்கள் என்பதை உணருங்கள் என்றேன். நமக்கென்று மீடியா கிடையாது, நமக்கென்று தியேட்டர்கள் கிடையாது, நமக்கென்று ஆடியன்ஸ் இருக்கிறார்கள், மக்கள்தான் அவர்கள், தெருக்களே நமது தியேட்டர்கள் எனச் சொல்லி, சாத்தூர்த் தெருவில் children of heaven திரையிட்ட அனுபவத்தைச் சொன்னேன். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஆயிரக்கணக்கில் மக்கள் அந்த ஈரானிய மொழித் திரைப்படத்தை மெய்மறந்து ரசித்தது ஒரு அபூர்வமான அனுபவம். அந்த அனுபவத்தை நிச்சயம் மக்கள் நமக்குத் தருவார்கள், நாம் தான் தயாராக வேண்டும் என முடித்தேன்.
இயக்குனர் மீரா கதிரவன் எழுந்து, “மாதவராஜ் சொல்வதைக் கேட்ட பிறகு எனக்கும் ஒரு ஆவணப்படம் தயாரிக்க வேண்டும்” எனத் தோன்றுகிறது என்றார். “தமிழ்நாட்டில்தான் இது நடைபெறவில்லை. அடூரிலிருந்து எத்தனையோ புகழ்வாய்ந்த இயக்குனர்கள் ஆவணப்படங்களும் இயக்கியிருப்பதை நான் சொன்னேன். “எந்திரன் போன்ற சுனாமிகள் வரத்தான் செய்யும். நாம்தான் இந்த குற்றாலக் காற்றை மருந்தாக மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என இயக்குனர் மீரா கதிரவன் சொன்னபோது அனைவரும் ஆரவாரித்தனர். பயிற்சி முகாமுக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் எழுத்த்தாளர் தமிழ்ச்செல்வனின் ‘வாளின் தனிமை’ சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தனர். ஒரு இளைஞர் அருகில் வந்து அதில் கையொப்பம் இட்டுத்தர கேட்டார். ‘ஒன்றே வாளின் சட்டம். கூராயிருந்தால் வெட்டும்’ என எழுதிக் கொடுத்தேன்.
சாயங்காலம் திரும்பி வரும்போது இந்தத் திரைப்பட இயக்கம், அதன் உண்மையான அர்த்தத்தில் நகருமானால் எப்படி இருக்கும் என கனவு காணத் துவங்கினேன். மலைகள் என் கூடவே வந்து கொண்டு இருந்தன.
நமது பா.ராவின் மகள் திருமணம்!
“சைக்கிள் ஹேண்டில் பாரில் கூடை சேரை மாட்டி, அதில் இருத்தி, மதர் தெரசா பள்ளிக்கு அழைத்துப் போன மகாதான் நினைவில் நிற்கிறாள். எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது.” தன் மகள் மகாலட்சுமியின் திருமணத்திற்கான அழைப்பை நம் பதிவர் பா.ரா சொல்ல ஆரம்பித்திருந்த இந்த வரிகளில் காலம், அன்பு, உறவு, வாழ்க்கை என்னும் பெரும் வார்த்தைகளெல்லாம் அலைவீசிக் கிடந்தன. எங்கோ இருக்கிற ஒரு முகம் காணா மனிதன் எப்படி இத்தனை எளிய முறையில் தன்னை அறிய வைக்கவும், அறிந்து தோளில் கை போடவும் கூடுகிறது! ‘பதிவர்’, ‘பா.ராஜாராம்’ என்று உச்சரிப்புகளெல்லாம் கூட மிகுந்த சம்பிரதாயமானவையாக உணர வைப்பதொன்றும் அத்தனை எளிதல்ல. எழுத்துக்களின் வழியே தன் அன்பையும், இதயத்தின் துடிப்பையும் காட்டிவிட பிரயத்தனப்படுபவர்களுக்கு சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது.
அதுதான் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு சிறுகிராமத்தில் நடந்த அவரது மகளின் திருமணத்திற்கு சென்னையிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும், கிருஷ்ணகிரியிலிருந்தும், மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும், சாத்தூரிலிருந்தும் பதிவுலக நண்பர்களை வரவழைத்திருக்கிறது.
“மாது மக்கா, மகா கல்யாணம். கண்டிப்பா வந்துரணும்” என்று உரிமையோடு போனிலும் அழைத்திருந்தார் பா.ரா. “அண்ணா, முதல் நாளே வந்துருங்க. சிவகங்கையில் ரூம் போட்டு வச்சிருக்கோம்” என இரண்டு நாட்களுக்கு முன்பே சிவகங்கை சென்று பா.ராவுடன் கூடமாட இருந்த பதிவர் சரவணக்குமார் அறிவித்து விட்டார். “தோழர்! பா.ரா மகள் திருமணத்திற்கு வரூவீங்கதானே” என கும்க்கி முந்தின நாள் பேசினார். போகவேண்டும் எனற ஆசையும், ஆவலும் இருந்த போதும் சில சிரமங்களும் இருந்தன. அதே செப்டம்பர் 21ம் தேதிதான் தேவகோட்டையில் எங்கள் சங்கத் தோழர் ஒருவர், அவரது புதுவீட்டில் பால் காய்ப்பதாக அழைத்திருந்தார். அதேநாளில்தான் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் மகளின் திருமணம் ராஜபாளையத்தில். வீட்டிற்கு வந்து பத்திரிகை வைத்திருந்தார். கல்லூரியிலிருந்து நான்கைந்து நாட்கள் லீவில் செப்டம்பர் 20ம்தேதி வந்திருந்த என் மகள் “என்னப்பா, இன்றுதான் வந்திருக்கிறேன். அதுக்குள்ளே கிளம்பணுமா” என்று செல்லமாய் சிணுங்கினாள். மௌனங்களாலும், சிறு புன்னகையாலும் கடந்தபடி கிளம்பினேன். முதல்நாள் காரைக்குடியில் தங்கி, விடிகாலையில் தேவகோட்டையில் சங்கத்தோழரின் புதுவீட்டிற்குச் சென்று, அப்படியே சிவகங்கை போய் பா.ராவின் மகள் திருமணத்தில் செல்வதென வரைபடம் வைத்திருந்தேன். மேலாண்மை பொன்னுச்சாமியை பிறகு பார்க்கும்போது சொல்லிக்கொள்ளலாம். மகளொன்றும் வருத்தப்பட மாட்டாள். பா.ராவின் முகம் பார்க்க வேண்டும் முதலில்.
சிவகங்கையிலிருந்து, திருப்பத்தூர் செல்லும் வழியில் இருந்த சோழபுரம் எனும் அந்த சிறிய ஊரில் மணமகன் வீட்டில் திருமணம். மெயின் ரோட்டை ஓட்டியிருந்த கல்யாணப்பந்தலும், மணமகள் பேரில் ‘மகாலட்சுமி’ என்றிருந்ததும் ‘இங்குதான்’ என உறுதிகொள்ள வைத்தது. கும்க்கி என்னை அடையாளம் கண்டு வாசலுக்கு வந்து வரவேற்கவும், அகநாழிகை பொன்.வாசுதேவன், மணிஜி, ஜெரி ஈசானந்தா, சிவாஜி சங்கர், அக்பர் என ஒவ்வொருவராய் அருகில் வந்து பிரியத்தோடு அறிமுகம் செய்து கொண்டார்கள். பத்மா அவர்கள் வந்திருப்பதாய்ச் சொன்னார்கள். அவர்களிடம் சில வார்த்தைகள் பேசுவதற்குள் ராஜசுந்தரராஜன் அவர்களைப் பார்த்தேன். அருகில் போய் அறிமுகம் செய்துகொண்டேன். இன்னும் சில நண்பர்கள் வந்து பேசினார்கள். கல்யாணப்பந்தலில் இருக்கும் இயல்பான சத்தங்களில் சரியாகக் கேட்க முடியவில்லை. திருமணம் முடிந்து, மணமக்கள் மேடையில் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு இருந்தனர். மதுரையிலிருந்து கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர், மதுரை சரவணன் ஆகியோர் வந்துவிட்டுச் சென்றதாய் சொன்னார்கள். கலகலப்புக்கும் பரபரப்புக்கும் மத்தியிலும் எனக்குத் தோன்றியது இதுதான். ‘இவர்களுக்கும் என்னைப் போலவே, அவரவர்க்கென்ற பணிகளும், சிரமங்களும் இருக்கத்தானே செய்திருக்கும். அவைகளையெல்லாம் விட்டுத்தானே இங்கு வந்து கூடி நிற்கின்றனர்’. இதற்கெல்லாம் ஆதாரசுருதியான முகம் காண ஆவலாயிருந்தேன்.
பட்டு வேட்டிச் சட்டையில் அங்குமிங்குமாய் இருந்த மனிதரிடம் சென்று கும்க்கி பேசினார். சட்டென்று திரும்பியவர், “மாது மக்கா” எனக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “ரொம்ப சந்தோஷம் மக்கா” என சிரித்தார். வாழ்வின் மெல்லிய இழைகளை, புதிர்களின் அழகை, கடந்த காலத்தின் வெளியை எல்லாம் எழுதி எழுதித் தந்திருந்த அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். லௌகீக வாழ்வை சுமந்த பறவையாய் படபடத்துக்கொண்டிருந்தார். தன் துணைவியாரை அறிமுகப்படுத்தினார். “வாங்க மக்கா” என மணமேடைக்கு அழைத்துச் சென்றார். மகாவிடம் “மாதவராஜ்” என கைகாட்டினார். முகமெல்லாம் மலர்ந்து “வாங்க” என சிரித்தாள். தன் உலகத்தை இந்த மனிதர் தன் குழந்தைக்கு எப்படி ஊட்டியிருக்கிறார் என்பதை அறிய அந்தச் சிறுகணமே போதும். மணமக்களை வாழ்த்தி இறங்கிய போது பெரும் நிறைவிலும் சந்தோஷத்திலும் திளைத்திருந்தேன்.
மண்டபங்களில் திருமணங்களைப் பார்த்து பார்த்து பழகிப்போயிருந்த இந்த நாளில், அந்தப் பந்தலும், “கல்யாண வளையோசை கேட்டு” என்னும் பழைய பாடலும், சூழ்ந்திருந்த கிராமத்து மக்களும் ஆசுவாசமாயிருந்தனர். சரவணக்குமார் வாசலில் உட்கார்ந்து மொய் எழுதிக்கொண்டு இருந்தார். மணிஜி, கும்க்கி, அக்பர், சிவாஜி சங்கர், பொன்.வாசுதேவன், ராஜசுந்தரராஜன் ஆகியோருடன் வெளியே சென்று பேசிக்கொண்டு இருந்தோம். கேலி, கிண்டல், சிரிப்பு என கடந்த பேச்சுக்களின் ஊடே பா.ரா வந்து போய்க்கொண்டே இருந்தார். பா.ராவின் கவிதைகள் ஆனந்தவிகடனில் வரத் துவங்கியது, அவரது முதல் கவிதைத் தொகுதி வந்தது குறித்தெல்லாம் பொன்.வாசுதேவன் பகிர்ந்து கொண்டிருந்தார். ஜெரி ஈசானந்தாவின் விருந்தோமபலை வியந்தும், உற்சாகப்படுத்தியும் பேசினார். காமராஜும் சாத்த்தூரிலிருந்து வந்துவிட்டிருந்தான். நேரம் போவதே தெரியாமல் இருந்தவர்களுக்கு மதிய உணவுக்கான அழைப்பு வந்தது. எனக்குப் பாயாசம் ரொம்பப் பிடித்திருந்தது. மனநிலையை உணவும் பிரதிபலிக்கத்தானே செய்கிறது.
பா.ராவும், மகாவும் உறவினர்களோடு பேசிக்கொண்டு இருந்தனர். பந்தலுக்கு வெளியே, ரோட்டுக்கு எதிர்புறம் விரிந்து கிடந்த புல்வெளியில் உட்கர்ந்து மறுபடியும் பேசிக்கொண்டு இருந்தோம். வெயில் இல்லை. சிறிது நேரத்தில் வேன் ஒன்றில் சிவகங்கை வந்து, நண்பர்கள் ஏற்கனவே தங்கியிருந்த ரூம்களுக்கு வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட அனைவரும் தூங்கிப் போயிருக்க, நானும் கும்க்கியும் பேசிக்கொண்டு இருந்தோம். இடையிடையே சரவணமாரும், சிவாஜி சங்கரும் வந்து பேசினர். அக்பர் விடைபெற்றுக்கொண்டார். பின் ஒவ்வொருவராக எழுந்து வந்து, ஊர் செல்லத் தயாராகினர். மணமகள் வீட்டிலிருந்து திரும்பவும், மணமகன் வீட்டிற்கு மகாவை அனுப்பி வைத்துவிட்டு பா.ரா வந்தார். சென்னை மக்கள் பொன்.வாசுதேவன், ராஜசுந்தரராஜன், மணிஜீ கிளம்பினர். அவர்களோடு லீவு முடிந்து சவுதிக்குச் செல்லத் தயாராக நின்றார் சரவணக்குமார். “அண்ணா, சந்திப்போம்” என அவர் சொன்னபோது வலித்தது. இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு சனிக்கிழமை சாத்தூருக்கு அவர் வந்து ஐந்தாறு மணி நேரத்துக்கும் மேலே என்னோடு பேசியிருந்ததெல்லாம் நிழலாடியது. அன்று நானும் அவரும் மழையில் நன்றாக நனைந்து போயிருந்தோம். “இனும எப்ப பாக்கலாம் தம்பி,” என்றேன். “அடுத்த வருஷம்ணே” எனச் சொல்லி நடந்துகொண்டிருந்தார். தொலை தேசங்களில் பணிபுரியும் இம்மனிதர்கள் எவற்றையெல்லாம் இங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள்...
இறுதியாக கும்க்கியும், காமராஜூம், நானும் கிளம்பத் தயாரானோம். “மக்கா, இருங்க மக்கா, பேசிக்கொண்டு இருப்போம் மக்கா” என பா.ரா விடமாட்டேன் என்றார். அவர்களிருவரும் தாங்கள் கண்டிப்பாய் போக வேண்டியிருப்பதைச் சொல்ல, நான் “இருக்கேன் மக்கா” என்றேன். கையைப் பிடித்துக்கொண்டார். அவரது கை அப்படி ஒரு மிருதுவாக இருந்தது. சொன்னேன். காமராஜையும், கும்க்கியையும் அனுப்பிவிட்டு, சில வேலைகள் இருப்பதாகவும், முடித்துவிட்டு வருவதாகவும் சென்றார் பா.ரா. தனியாகவும், அமைதியாகவும் போன அந்த அறையின் மூச்சை நான் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன். அன்றைய நாளின் ஒவ்வொரு கணமும் அசைந்தாடிக்கொண்டு இருந்தது. யார் இவர்கள், எங்கு சந்தித்தோம், என்ன உறவு, குரல் என்பது என்ன, எழுத்து என்பது என்ன, முகம் என்பது என்ன என்றெல்லாம் தோன்றிக்கொண்டு இருந்தது.
“என்ன மக்கா” என்று பா.ரா வந்தார். “நா கற்பன செஞ்சு வச்ச மக்கா நீங்க இல்ல, உங்க எழுத்தில் நான் வேறொருத்தரை வச்சிருந்தேன்” என்றார். இதேயேதான் எனக்கும் சொல்லத் தோன்றியது. நான் கறபனை செய்து வைத்த உருவம் அவரும் இல்லைதான். பேசிக்கொண்டே இருந்தோம். மகாவின் திருமணம், குடும்பச் சிரமங்கள், மகாவின் அன்பு என அவர் பேசப் பேச ஒரு கணத்தில் உணர்ந்தேன், நான் மனதில் வைத்திருந்த பா.ராவும் இவரும் ஒன்றுதான் என்பதை. எழுத்து, முகம் குறித்த மர்மங்கள் உடைந்து போயிருந்தது. நான்கைந்து நாட்களான வேலையும், தூக்கமும் அவர் கண்களில் தெரிந்தது. என் மீது வைத்திருந்த அன்பில் தன் களைப்பைத் துடைக்க சிரமப்பட்டார். “மக்கா, கடைசி பஸ்ஸில் கிளம்புறேன்” என சட்டென்று விடைபெற்றேன். “என்ன மக்கா” என்றார். “நல்லா ரெஸ்ட் எடுங்க. சந்திப்போம்.” என்றேன். பஸ் ஏற்றி அனுப்பி வைத்து டாடா சொல்லும் போது அந்த இருளில் பா.ராவின் உருவம் தெளிவாகத் தெரிந்தது.
வீட்டிற்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தேன். தூங்கிக்கொண்டு இருந்த என் மகளைப் பார்த்தேன். காலம் எவ்வளவு வேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது. மகா நினைவுக்கு வந்தாள். பா.ரா நினைவுக்கு வந்தார். முகம் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார். “ரொம்ப நிறைவா இருக்கேன் மக்கா இன்றைக்கு, இனி மகாவின் வாழ்க்கைதான். அவ நல்லாயிருக்கணும். சந்தோஷமாயிருக்கணும்” என்று அவர் என்னோடு பேசிக்கொண்டு இருந்தார்.
சந்தோஷமாயிருப்பாள் மகா! நம் அனைவரின் அன்பிலும், வாழ்த்திலும் நிறைவாயிருப்பாள்.
*
திருமண நிகழ்வின் போட்டோக்களை கும்க்கியும், சிவாஜி சங்கரும் அனுப்பி வைத்திருந்தனர். அவர்களுக்கு நன்றி. கும்க்கி அந்த மெயிலில் இப்படிக் குறிப்பிட்டு இருந்தார்:
“எழுத்துக்கும், பேச்சுக்கும்,செயலுக்கும் எந்தவொரு துளி வித்தியாசமும் காணக்கிடைக்காத பா.ரா வின் அன்பிற்கு நன்றி சொல்வதில் உடன்பாடில்லை...ஈடாக என்ன செய்துவிட முடியும் என மலைப்பாக இருக்கிறது.
“வாடா மாப்ள., மகா கல்யாணத்துக்கு நேரத்தோட வந்துருடா. சாபிட்டியாடா., சரக்கு ஏதாச்சும் போடுறியா மாப்ள” என்று அவசரமாக பர்சை எடுக்கும் பாராவின் குரலும், “நீங்க சொல்லனுமா மாமா, விடியகாலையில மொத ஆளா நிப்பேன் மாமா எல்லாம் சாப்டாச்சு மாமா நீங்க ஆகவேண்டியத பாருங்க” என்று பதிலிருக்கும் சொந்தங்களின் குரலும் இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
அவசர நொடிகளில் தத்தமது காரியங்களுக்காக எதைக்குறித்தும் சிந்திக்க திராணியற்று ரிலே ரேஸ் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களையே பார்த்து பார்த்து அலுத்துப்போன என்னைப்போன்ற நபர்களுக்கு பார்க்கிற இடத்திலெல்லாம் அன்பால் நனைக்கிற பா.ரா போன்ற மனிதர்களால் நிரம்பியிருக்கிற ஊரில் ஏதேனுமொரு சொந்தமாக பிறக்காமல் போய்விட்டோமோ என ஏக்கமாகத்தான் இருக்கிறது.”
ஆம் கும்க்கி, பா.ரா போன்ற மனிதர்களால்தான் இப்படியான ஏக்கங்களைத் தரமுடியும்!
*
தமிழகம்: சொர்க்கமா, நரகமா?
“எங்கள் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எங்கள் வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. அதோ மழைநீரை சுமந்து கொண்டு மேகங்கள் திசைமாறிப் போகின்றன. விடாதே. மேகத்தைத் துரத்திப்பிடி. மழை பொழியச் செய்” இந்தக் கவிதை வரிகளின் வேகம் இப்போது, அந்நிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் நமது தொழிலாளர்களுக்கு வரத் துவங்கியிருக்கிறது. முதலாளிகளின் விசுவாசமிக்க வேட்டை நாய்கள் அவர்கள் மீது பாய்ந்து குதறுகின்றன. கோரப்பல் காட்டும் அந்த மிருகங்களை உற்றுப்பார்த்தால் ‘வாய்மையே வெல்லும்’ என அதன் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறது. அப்புறம் ஒரு மெடலும் அதன் நெஞ்சில் குத்தப்பட்டு இருக்கிறது.
அந்த மெடலில் “தமிழ்நாடு வெளிநாட்டு முதலீடுகளின் சொர்க்கம்” என அமெரிக்க பங்குச்சந்தைச் சூதாடிகள் நடத்துகிற ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகையின் வாசகங்கள் இருக்கின்றன. ஹூண்டாய், நோக்கியா, ஃபாக்ஸ்கான், ஃபோர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றிற்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு ஆற்றி வரும் ’அளப்பரிய’ சேவையில் பரம திருப்தி கொண்டு வழங்கப்பட்ட சான்றிதழ் இது. தஞ்சையில் முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சட்டதுறை அமைச்சர் துரைமுருகன் இதனைச் சொல்லிச் சொல்லி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். சும்மாவா! எத்தனை இந்திய விலா எலும்புகளை உடைத்து, எத்தனை இந்தியக் குரல்வளைகளை நெறித்து பெறப்பட்ட அந்நியப் பரிசு அது.
| புதிய பதிவர்கள் சுஜா கவிதைகள் என்னும் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை 58 சிறு சிறு கவிதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த சுஜாதா என்னும் இந்தப் பதிவர் தன் கவிதைகளைப் பற்றி ‘என்னை சுற்றி நடக்கும் சில விஷயங்களை சிறிது கற்பனையோடு கலந்து கவிதையாக்கும் என் முயற்சி’ என்கிறார். விநாயகர் என்னும் தலைப்பில் எழுதிய கவிதை இது: பட்டும் பீதம்பரமுமாய் சுஜாதா அவர்களை வாழ்த்தி வரவேற்போம். |
எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் இந்த நிறுவனங்கள் கொண்டிருந்தாலும் தொழிலாளர்களை நடத்துவதில், சுரண்டுவதில் கடந்த நூற்றாண்டுகளின் அடக்குமுறைப் புத்தியோடுதான் இருக்கின்றன. தொழிலாளர்களின் பணிநிலைமை, பணிப்பாதுகாப்பு பற்றி எந்தக் கவலைகளும் அந்த லாப வெறி பிடித்தவர்களுக்கு இல்லை. ரூபாய் ஐயாயிரத்துக்கும் குறைவான ஊதியத்திற்கு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிற குடும்பங்களிலிருந்து வாகனங்களில் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு கடும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். நச்சுவாயு கசிவு, பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாவது போன்றவையும் வாழ்வின் இயல்பான நிகழ்வுகளாய் விதிக்கப்படுகிறது. எதிர்க்குரல் எழுப்பி, தங்கள் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்ட அங்குள்ள தொழிலாளர்கள் போராடத் துவங்கியிருக்கின்றனர். ஹூண்டாய், நோக்கியா என ஒவ்வொன்றின் வாசலிலும் அடுத்தடுத்து கோஷங்கள் எழும்புகின்றன. தமிழக காவல்துறை அந்நிய நிறுவனங்களின் பக்கம் நின்று, தொழிலாளர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கிறது. இருந்தாலும், அடுத்த அலையாக இன்னொரு போராட்டம் பெருக்கெடுக்கிறது. அங்கே பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர்கள் திரண்டு நிற்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கிவரும், செல்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் பாக்ஸ்கான். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். நிர்வாகம் எச்சரிக்கிறது. ஒற்றுமையை நிலைகுலைக்க காவல்துறை குவிக்கப்படுகிறது. நிர்வாகத்தின் ஆதரவு சங்கமும் தி.மு.கவின் அங்கமுமான தொ.மு.எ.சவினரோடு பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு குறைவான ஊதிய உயர்வு அறிவிக்கப்படுகிறது. ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூவில் இணைந்து சங்க அங்கீகாரம் கேட்கின்றனர். அப்படி இணைந்த 23 தொழிலாளர்களை நிர்வாகம் வேலைநீக்கம் செய்கிறது. தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்கின்றனர். சி.ஐ.டி.யூவின் தலைமையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக சி.ஐ.டி.யூ மாநிலச் செயலாளர் சவுந்திரராஜன் உட்பட 320 தோழர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின் நீதிமன்ற அனுமதியோடு அனைவரும் விடுதலையாகின்றனர். ஜாமீனில் வெளிவர முடியாதபடிக்கு மீண்டும் பொய் வழக்கு சுமத்தி தோழர் சவுந்திரராஜன் உட்பட 13 பேரை வேலூர் சிறையிலடைக்கிறது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, தோழர் சவுந்திரராஜன் உட்பட அனைவரையும் கைவிலங்கிட்டு கிரிமினல் குற்றவாளிகள் போல அழைத்து வந்திருக்கிறது தமிழக காவல்துறை. யாருக்காக யார் சதைகள் எப்படியெல்லாம் ஆடுகின்றன?
கைவிலங்கிட்டு அழைத்து வந்ததால் இந்த அரசு ஒன்றும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அசிங்கப்படுத்திவிட முடியாது. ஆங்கிலேயரை எதிர்த்து, தூத்துக்குடி கோரல் மில்லில் நடந்த முதல் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சிதம்பரனார் கைவிலங்கிடப்படவில்லையா? இந்த தேசத்தின் அருந்தவப்புதல்வன் பகத்சிங் கைவிலங்கிடப்படவில்லையா? அந்தத் தியாகங்களின் முன்பு இவை மிகச் சாதாரணமானவையானாலும் மகத்தானவை. மென்மேலும் தியாக வெளிச்சம் பரவுவதற்கான திரிகள் இவை. சிறைக்கூடங்கள் இப்படியாவது தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளட்டும். அசிங்கமானதும், அருவருப்பானதும் ஒன்றுதான். அன்றைக்கு அவர்களை கைது செய்தது ஆங்கிலேயர். இன்றைக்கு இவர்களை அதே காரணங்களுக்காக கைது செய்வது ‘தமிழனத்தலைவர்!’
அடக்குமுறைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. வெயிலுக்கும், வெண்பனிக்கும் மலைகள் அஞ்சுவதில்லை. அதோ, இன்னொரு பக்கம் என்.எல்.சியில் முழக்கங்கள் எழும்புகின்றன. கேட்க மறுத்து தமிழக அரசு காதுகளைப் பொத்திக்கொள்ளும் வார்த்தைகள் அவற்றில் ஒலிக்கின்றன. “தமிழகம் உள்ளூர்த் தொழிலாளிகளுக்கு நரகம்!”.
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 3
வீரப்பன் காடான சோளகர் நிலம்
காலம் விசித்திரங்களால் வடிவமைக்கப்பட்டது. தற்செயலான நிகழ்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் திரும்பத் திரும்ப நிகழும் போது அவை மனித மனங்களால் தன்னுடைய நம்பிக்கையாக பின்னாளில் அவையே குலங்களின், குடிகளின் தொன்மமாக, சடங்கியலாக வடிவமைக்கப்படுகிறது. தொல்குடிகளின், பழங்குடிமக்களின் இனவரைவியல், சடங்குகள், வாழ்வியல் கூறுகள், வழக்காறுகள் இவையாவும் மானுடவியலாளர்களால் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை காலமும், காடும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
பழங்குடிமக்கள், வனம், கனிமவளம், அந்நியக்கம்பெனிகள், வாழ்வியல் ஆதாரம், அரசுத்துரோகம், நிலத் தைவிட்டு வெளியேற்றல், மாவோயிஸ்ட் கொலைவெறித் தாக்குதல் போன்ற சொற்குறிகள் அறிவுத்தளத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலமிது. எனவே இந்த உரையாடலையும், விவாதத்தையும் தர்க்கித்து தொடர உதவிடும் கூறுகளைக் கொண்டதான சோளகர் தொட்டி எனும் நாவலுடன் வாசகன் உரையாடிப் பார்ப்பது அவசியம் என்று படுகிறது.
ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி எனும் நாவல் தமிழ் வாசகப் பரப்பிற்குள் வந்து சேர வேண்டியதன் அவசியத்தையும் படைப்பாளிக்கு காலமே உணர்த்தியது. அரசியல் அதிகாரத்தை தக்க வைத்திடும் துருப்புச் சீட்டென வீரப்பன் வேட்டையை அரசதிகாரவர்க்கம் பயன்படுத்தத் துடித்ததை நாம் அறிவோம். தமிழக புலனாய்வு வார இதழ்கள் தன்னுடைய ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான பணியையும் தாண்டி அதிகார வர்க்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரகராக உருமாறிப் போனதையும் காலம் தன்னுள் கணித்தே வைத்திருக்கிறது.
உலக நிகழ்வுகள் யாவும் வெகு மக்களால் நேர்எதிரான இரட்டை எதிர்வுகளாகத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என சகல அதிகாரம் கொண்ட மின்னணு ஊடகங்கள் விரும்புகின்றன. அப்படித்தான் காட்சிகளை கட்டமைக்கின்றன. முந்நாட்களில் அமெரிக்கா-சோவியத் ரஷ்யா என்றிருந்த இரட்டை எதிர்வு இப்போது அமெரிக்கா-இஸ்லாமிய பயங்கரவாதம் என மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பின்லேடன் எதிர்நிலை கதாநாயகனாக குழந்தைகளின் மனதிலும் குடியேற்றப்பட்டுள்ளான். வீரப்பன் தமிழ் நிலத்தின் அதீத வீரன் என நம்பப்படுகிறான். வீரப்பன் உயிருடன் இருந்தவரை ஒகேனக்கல் பிரச்சனை எழவேயில்லை என தமிழ்த்தேசிய வாதிகள் என தம்மை அழைத்துக் கொள்பவர்களும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இரட்டை நேர் எதிர்வுகளைக் கட்டமைத்து அவற்றிற்கு இடையிலான மோதலின் வழி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அதன் மீது வாசகனுக்கு ருசி ஏற்படுவதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தமிழ்மொழியின் பெரும்பாலான கதைப் பிரதிகள் யாவும் நல்லது/கெட்டது, தூய்மை/அசுத்தம், கதாநாயகன்/வில்லன் என்பவற்றிற்கு இடையேயான மோதலின் வழியே புரிந்துணரப்படுகிறது. இப்படியே தேவாரம்/வீரப்பன் என்ற இரட்டை எதிர்வுகளாக்கப்பட்ட தமிழ் நிலத்தின் பெரும் நிகழ்வொன்றின் காட்சிப்படுத்தப்படாத பகுதியே சோளகர் தொட்டியெனும் நாவலாக விரிகிறது.
பின் நவீனத்துவம் இலக்கிய வெளிகளில் அறிதலுக்குட்பட்ட பிறகே படைப்பாளிகளின் கவனத்திற்குரியவரானார்கள் unsung heroes (பாடப் படாத கதாநாயகர்கள்) எனப்படும் வெகுமக்கள். அப்போது பெரும் கதையாடலுக்கு மாற்றாக குறுங்கதையாடல்கள். மையத்திற்கு மாற்றாக விளிம்பு நிலைக் கதையாடல்கள் என கதைகள் மாற்றம் பெறத் துவங்கிய நாட்களில் வெளிவந்ததே சோளகர் தொட்டி.
வனமே தன் வாழ்விடம் என வரித்துக் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வினை எளிய மரபான அழகியலோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சோளகர் எனும் பழங்குடி இனமக்களின் வாழ்வில் வீசிய சூறைக்காற்று நாட்களைப் பதிவுசெய்து தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் பாலமுருகனின் நோக்கம். மனித உரிமைக்குழுக்களில் பணிசெய்ததன் மூலமாக பழங்குடிமக்களின் துயருறு நாட்களை உரியதகவலோடு கட்டுரையாக எழுதியிருக்க முடியும். கட்டுரைகள், எழுதப்பட்ட நாட்களின் செய்தியாக தேங்கி விடுகின்றன. வாசக மனதினுள் ஊடாடும் வல்லமை புனைவிற்கே உண்டு என்பதால் படைப்பாளி நாவல் எனும் விஸ்தாரன புனைவுப்பரப்பை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
வாழ்வின் முழுமையைச் சொல்வதுதான் நாவல். சோளகர்களின் வாழ்க்கை அதிரடிப்படையினராலும் வீரப்பனாலும் நிர்மூலமாக்கப்பட்ட அந்த வலிமிகு நாட்களை நாவல் எனும் புனைவே சுமக்கும் வல்லமை பெற்றது என படைப்பாளி நம்புகிறார்.
சோளகர் தொட்டியில் இருவிதமாக கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்பகுதியில் சோளக இனக்குழுவின் வாழ்விடமான சோளகர் தொட்டி குறித்த காட்சிப்படம். பழங்குடி மக்களின் தொன்மங்கள், அவர்களுக்கு மட்டுமேயான தனித்த வாழ்வியல் கூறுகள், சடங்குகள், குலதெய்வ வழிபாடு, திருமணம், மண முறிவு என சகலமும் மிக எளிமையான சொற்களால் வலிமையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வனத்தோடு வாழ்வதென்றான பிறகு வேட்டை அவர்களின் அடையாளமாகி விடுகிறது. அப்படியான வேட்டைநாள் ஒன்றில் பெருநரியிடம் (புலி) இருந்து தன்னைக் காப்பாற்றிய சோளகனிடம் வெள்ளைக்காரன் காட்டில் எவ்வளவு இடம் வேண்டுமானாலும் கேள், எழுதித் தருகிறேன் என செம்புப் பட்டயம் எடுக்கிறான். பதிலாக எங்களுக்கு காடே சொந்தந்தானுங்க, பட்டயம் எதற்கு? என்கிறான் சோளகன். காடு தன்னுடையது என நம்பிக்கிடக்கிறார்கள் வனமக்கள். எல்லோமே அவர்களுக்கு காடுதான். அதிலும் குறிப்பாக பாங்காட்டிலேயே தனித்திருந்து தன் குழந்தைகளைத் தானே பெற்றுத்திரும்பும் சோளகத்தின் தமிழ் வாசகன் அறிந்திடாத பகுதி. நாவலில் ஆதித்தாயென அடையாளப்படுத்தப்படுகிற ஜேக்கம்மாவும், வாழ்வின் சிக்கல்களை அசாத்தியமாக எதிர்கொள்ளும் மாதியும் காவியத் தன்மையிலான படைப்புகள். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வாசகன் நாவலில் வாசித்துக் கடந்திட முடியாது நிலைகுலைவான். எத்தனை கடினமானது வாழ்வு என அவர்களும் கூட சமதளத்தில் அதிரடிப்படையால் அச்சுறுத்தப்படும் போதே உணர்கிறார்கள்.
சமதளமக்கள் கணவனை இழந்தவளை விதவையென புனிதச்சடங்குகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கிறார்கள். ஆனால் பழங்குடி இனமோ வேட்டையில் கிடைத்த பொருட்களை பங்கிட்டு தொட்டியில் (ஊர்) உள்ள விதவைக்கு முதல் பங்கைத் தருகிறார்கள். இந்த நாவலில் பதிவாகியுள்ள கொத்தல்லி எனும் பழங்குடியின் வார்த்தைகள் தெறித்து விழுகின்றன அதிகார வர்க்கத்தின் முகத்தில் திருடனைப் போலவா நாம் வேட்டையாடனும்? ஒரு சமயம் நாம ஆண்ட பூமியடா இந்தக் காடு. இந்தக் காட்டுத் தாயின் குழந்தைகள் நாம் இன்றைக்கு திருடனாட்டம். இதுக்கு உளவாளி வேறு. கொத்தல்லி, கோல்காரன், சிவண்ணா, சென்நெஞ்சான் என தனித்த அடையாளத்துடன் இனத்தின் வாழ்வியல் கூறுகளை பதிவுறுத்தியிருக்கும் பாத்திரங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு எங்கும் பார்த்திட இயலாதது. மணிராசன் கோயில் திருவிழாவும் அங்கு நிகழ்த்தப்படும் சாமியாட்டத்தில் தன் மூதாதையர் விரும்பி வந்து பலிகேட்பதும், அருள் தருவதுமென நிகழும் அவர்களின் நம்பிக்கை வாழ்வது குறித்த அச்சத்துடன் தன்நாட்களை நகர்த்திடும் சமதளமக்களின் வாழ்விய லுக்கு நேர் எதிரானது.
நாவலின் பின் பகுதியில் வீரப்பனின் தேடுதல் வேட்டைக்காக வனம் புகுந்த தமிழக கர்நாடக அதிரடிப்படையும், காவல்துறையும் நிகழ்த்தியுள்ள வன்முறையும், கொடூரமும் ரத்தமும், சதையுமாக பதிவாகி உள்ளது. அதிரடிப் படையினர் எந்தவிதமான சட்ட ஒழுங்குகளையோ, ஜனநாயக நடைமுறைகளையோ காட்டில் பின்பற்றவில்லை என்பதும், அவர்கள் நிகழ்த்திய மனிதப்படுகொலைகளும், மனிதாபிமானமற்ற தண்டனை முறைகளும் வாசித்துக் கடக்க முடியாதவை. தந்தையும், மகனும் பிடிக்கப்பட்டு முகாமிற்கு கொண்டு வரப்பட்டால் தந்தை மகனை செருப்பால் அடிக்க வேண்டும். மகன் தந்தையை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிற குரூரதண்டனை காவல் துறைக்குள் நிரவியிருக்கும் சேடிசத்தை அடையாளப்படுகிறது. தாயின் முன் மகளை, மகளின் கண் எதிரே தாயை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது தண்டனை முறைகளில் ஒன்றாக பின்பற்றப்படுகிறது. அதுவும் எங்கே? வனத்தின் மக்கள் புனித இடமாக கருதும் கோயிலின் அருகில். பண்ணாரி கோயிலுக்கு அருகில் வடிவமைக்கப்பட்ட முகாம் ஒரு வன்முறைக் கூடாரமென நம்முள் இறங்குகிறது சோளகர் தொட்டியின் வழியாக.
வெகுமக்களின் பார்வைக்கு எட்டியிராத வாழ்வியல் பகுதிகளை தொட்டுச் செல்கிறது சோளகர் தொட்டி. வீரப்பன் காடென நாம் அறிந்து வைத்திருக்கும் நிலப்பகுதியின் பூர்வ குடிகளான சோளகர்களின் வாழ்வியல் கூறுகளைப் பதிவுறுத்தியிருக்கிறார் பாலமுருகன். வீரப்பன் வேட்டை எனும் பெயரில் அதிரடிப்படையாலும் காவல் நாய்களாலும் நிகழ்த்தப்படுகிற வன்முறைகளும், பெண் உடலின் மீது அவர்கள் எழுதிச் சென்ற வக்கிர குரோதங்களையும் எந்த வாசகனும் வாசித்துக் கடக்க முடியாது. நாவலை முதன் முதலில் வாசித்த நட்களில் வாளி நிறைந்த தண்ணீரைப் பார்க்கிற போதெல்லாம் ரத்தமும், நிணமுமாக அவை கொப்பளித்ததையும் கண்டு சகிக்க முடியாமல் கிடந்தேன். மனதை ஊடறுத்து யாவரையும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிற பெரும்படைப்பு சோளகர் தொட்டி. அதை வாசித்து மட்டுமே உணர முடியும்.
-ம.மணிமாறன்
(இன்னும் கேட்போம்…..)
‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’
“எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”
என்னும் கவிதையோடு முடிகிறது நம் பதிவர் சி.சரவணக்கார்த்திகேயனின் ‘பரத்தை கூற்று’. எவற்றையெல்லாம் இங்கே பாடலுடன் கவிஞர் வரிசைப்படுத்திப் பார்க்கத் துணிந்திருக்கிறார் என்பதில் இக்கவிதைத் தொகுப்பின் குரலையும், சுருதியையும் புரிந்திட முடியும். அதுவொன்றும் சட்டென்று யாரும் பிரக்ஞையோடு கடந்திடக்கூடிய புள்ளியல்ல. மயங்கி, முயங்கி, மருகி, உருகி ரசித்துக் கிடந்த ஒரு பாடலை சற்றே நினைவுபடுத்திவிட்டு, இந்த வரிகளை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன். நாம் முணுமுணுத்த வரிகளை எத்தனை பேர் முணுமுணுத்திருப்பர்கள். நாம் கரைந்த இசையில் எத்தனை பேர் மூழ்கி இருப்பார்கள். இப்போது புரிகிறதா, இக்கவிஞர் எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறார், எங்கே நம்மை கடத்திச் செல்ல இருக்கிறார் என்பது? ’தேவடியா’ என நம் சமூகக் கட்டமைப்பு பொத்தி வைத்திருக்கிற போர்வையை வெட்ட வெளியில் அவிழ்த்து, உதறி எறிகிறது ‘பரத்தைக் கூற்று’.
எப்போதோ பார்த்த ஒரு ஆங்கிலப்படம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. படம் பேர், கதை நினைவில் இல்லை. அவள் ஒரு ‘கால் கேர்ளாக’ சொல்லப்படுவாள். அவன் அவளோடு நெருக்கமாக இருப்பான். பிறகு அவள் இன்னொருவனுடன் பழகி உறவு கொள்வாள். சகித்துக்கொள்ள முடியாத முதாலாமவன், அவளை சந்தித்து, உலுக்கி, பணக்கட்டுக்களை எடுத்து அவள் தொடைகளை விரித்து அங்கே சொருகிவிட்டுப் போவான். ஆண்களின் விசில் தியேட்டரில் பறக்கும். இதுதான் நம் புத்தியாக இருக்கிறது. பொருளியல் விஷயமாக பார்க்கும் இவர்களை விசாரிக்கின்றன சரவணக்கார்த்திகேயனின் இவ்வரிகள்:
“அகவிலைப்படி
ஓய்வூதியம்
சம்பளக் கமிஷன்
எதுவுமில்லை
பாலியல் நோயும்
சில வலிகளும் தவிர ”“எந்நிறுவனமாவது
எம் யோனிக்குத்
தருமா காப்பீடு?”
பரத்தை, வேசி, தாசி, தேவடியாள் என காலம் தோறும் வெவ்வேறு அடைமொழிகளால் அறியப்பட்டு, செக்ஸ் தொழிலாளர்களாய் இன்று முத்திரை குத்தப்பட்டு நிற்கும் பெண்கள் இங்கே வெடிப்புறப் பேசுகிறார்கள்.
“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை”“களைத்துறங்குமென்னை
எழுப்பிப் புணர விழையும்
நீயென்ன ஆம்பிளை?”“காந்தியின்
நான்காம் குரங்கு
குறி பொத்தி
அமர்ந்திருக்கும் ”“புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ”“எந்த ஆண்மகனும் இதுவரை
நேருக்கு நேர் சந்தித்ததில்லை
என் கண்களின் அலட்சியத்தை”
| புதிய பதிவர்கள் ஊழியனின் குரல் என்னும் இந்த வலைப்பக்கத்தின் சொந்தக்காரர் வேலூரைச் சேர்ந்த S.ராமன். எல்.ஐ.சியில் பணிபுரியும் இவர் இதுவரை 38 பதிவுகள் எழுதி இருக்கிறார். சமூகம், அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதும் இவரது நடை எளிமையாகவும், அழுத்தமாகவும் இருக்கிறது. தொழிற்சங்க இயக்கம் சார்ந்த பதிவுகள் முக்கியமானவையாக எனக்குப் படுகிறது. பதிவர் ராமனை வாழ்த்தி வரவேற்போம். |
புணர்ந்து அடங்கிய குறிகளாய் ஆண்களின் உலகம் பேச்சு மூச்சற்றுப் போகும் இடங்கள் இப்படி இந்தக் கவிதைத் தொகுப்பு முழுவதும் விரிந்துகொண்டே இருக்கின்றன. பரத்தையரின் கூற்றுக்கள் அடங்காமல் அலையடித்துக் கிடக்கின்றன. பெண்ணுடலின் மர்மங்களை அதிசயமாகவும், அருவருப்பாகவும் பார்க்கிற ஆண்களை “போங்கடா மயிருகளா” என்கிறது இக்கவிதைத் தொகுப்பு. யுகங்களின் மீதான கேள்விகளை மிக எளிமையாக எழுப்பினாலும், அதிர்வுகள் சாதாரணமானவையல்ல.
பரத்தையென்றாலே, உடலை வைத்தே யோசிக்கவும், பேசவும் வேண்டும் என்கிற மரபை இக்கவிதைத் தொகுப்பும் மீறாமலேயே இருக்கிறது. எல்லா வரிகளிலும் பெண்ணுடல் வாசமும், வீச்சும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் ‘பரத்தையின் கூற்றை’ ஒரு ஆண் எழுதியிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
பத்தினி, பரத்தை பேதமின்றி சித்தர்களின் பாடல்களில் பெண்ணுடல் குறித்த எச்சரிக்கையும், பெண்ணுறவு குறித்த எள்ளல்களும் உண்டு. குலமகள், விலைமகள் எனும் பேதம் கண்டு பொருள் சொல்வோர் இருப்பினும் பரத்தையருக்கென்று தனி இடமும், பார்வையும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. பணத்திற்காகவும் பொருளுக்காகவும் என்றில்லாமல் தந்தைவழிச் சமூக ஒழுக்கத்தை மீறிய தாய்வழிச் சமூக எச்சங்களாய் அவைகளை பார்த்தவர்களும் இருக்கின்றனர். இப்பெண்களின் உலகத்திற்குள் சென்று வந்த அல்லது எட்டிப் பார்த்த ஆண்களின் உலகமே அவர்களைப் பற்றி காலம் காலமாய் பேசிக் கொண்டிருக்கிறது. சிலரே அவர்களை கருணையோடும், அவர்கள் பக்கமிருக்கிற நியாயங்களோடும் பார்த்தார்கள். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பும், புதுமைப்பித்தனின் பொன்னகரமும், ஜீ.நாகராஜனின் குறத்தி முடுக்கும் அப்படியானவையே. சரவணக்கார்த்திகேயன் அவர்களைத் தாண்டிச் செல்ல/சொல்ல முனைந்திருக்கிற இன்னொரு ஆண்.
“சளி கபம் கோழை
பித்தம் எச்சில் ஊளை
ரத்தம் எலும்பு நரம்பு
தூமை மலம் மூத்திரம்
இவற்றாலதென் தேகம்
இதில் காதலெங்கே
காமமெங்கே சொல்”
இங்கே ஒரு மனுஷி தெரிகிறாளா? பரத்தை தெரிகிறாளா?. அவரது கவிதைத் தொகுப்பின் மையமாகவும், கூர்முனையாகவும் கோபம் இருக்கிறது. அது முக்கியமானது.
பெண்களுக்கு எதிராக பெண்களை நிறுத்தும் தொனியில் இக்கவிதைத் தொகுப்பு வேறு சில பகுதிகளையும் தொட முயல்கிறது. இச்சமூகம், இவ்வொழுக்கம், அதன் வழியில் குடும்பம், அதன் நியதிகளுக்குள் இயங்கும் பெண்களோடு உரையாடுவதற்குப் பதிலாக கேலி போல், சில கேள்விகளை எழுப்புகிறது.
“கதவு ஜன்னலடைத்து
ஒளிர் விளக்கணைத்து
விழிசொக்கிப் புணரும்
பத்தினித்தாலி கட்டிய
வீட்டுப் பிராணியல்ல -
நான் காட்டு ராணி”“எல்லோருடனான புணர்ச்சியிலும்
ஒருவனையே புணர்கிறேன் நான்
ஒருவனுடனான புணர்ச்சியில்
எல்லோரையும் புணர்கிறாய் நீ”
பெண்களை புனிதமாக்கிக் கொண்டாடும் சடங்குகளும், பெண்களை பண்டமாக்கும் சந்தைகளும் காலந்தோறும் வெவ்வெறு வடிவங்களில் உருமாறி வந்துகொண்டே இருக்கின்றன. அவை வடிக்கும் பிம்பங்களில் சிதைந்து போகின்றன ஆண் பெண் உறவுகள். மிக விரிவாக பேச வேண்டிய இடத்தில் ஒன்றிரண்டு வரிகளால் தாவிச்செல்ல முனைகிறது இக்கவிதைத் தொகுப்பு. பத்தினியானாலும், பரத்தையானாலும் பெண்கள், ஆண்களால் நுகரப்படுவோரே. ஒருவனால் புணரப்பட்டாலும், பலரால் புணரப்பட்டாலும் வலி பெண்ணுக்கு மட்டுமே. இப்படி பரத்தையின் கூற்றுக்களில் தன்வயப்பட்ட சில குழப்பங்கள் இருப்பினும் உண்மையும் இருக்கிறது. கவிதைத் தொகுப்பின் ஆரம்பத்தில் இதனை நுட்பமாகவும், தெளிவாகவும் சொல்ல முடிந்திருக்கிறது சரவணக்கார்த்திகேயனால்.
“சுதந்திரம் என்பது
புணர்தல் அல்ல
புணர மறுத்தல்”
இந்த சுதந்திரம் எந்தப் பெண்ணுக்கு இருக்கிறது?
இப்புத்தகம் குறித்து சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. படித்து அதிர்வுகளுக்குள்ளாகிற வரிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவசியம் படித்து நாம் உரையாட வேண்டிய தொகுப்பு ‘பரத்தை கூற்று’.
(முன்பே எழுதியிருக்க வேண்டிய நூல் அறிமுகம் இது. இடையில் சில நாட்கள் உடல்நலமின்றி இருந்ததால் முடியாமற் போய்விட்டது. இன்று, மாலை 5 மணிக்கு சென்னை டிஸ்கவரி பேலஸில் இப்புத்தகம் வெளியாகிறது. கவிஞர் சரவணக்கார்த்திகேயனுக்கும், பதிப்பித்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்)
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 2
பசியின் நிறம்
யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்திளைத்த காட்சிகளால் வடிவமைக்கப்பட்டவைதான். பகிர்ந்து கொள்வதற்கான பெரும் கதைகளோடுதான் உலகமே நம்முன் சுழன்று கொண்டிருக்கிறது. தேனி சீருடையானின் ஞாபகப்பரப்பிலிருந்து விரிவு கொண்ட பெரும் கதையே ‘நிறங்களின் உலகம்’. ‘கடை’ என்கிற தன்னுடைய முதல் நாவலில் காட்சிப்படுத்தப்பட்ட யதார்த்த வாழ்விற்காக வாசக கவனம் பெற்றிருந்த சீருடையானின் பேனாவிலிருந்து பசியெனும் மைநிரப்பி எழுதப்பட்டிருக்கும் பாண்டியின் வாழ்க்கைப்பாடே நிறங்களின் உலகம்! வாழ்வின் நிஜத்தையும் அதன் நிறத்தையும் மர்ம முடிச்சுகளையும், அது நிகழ்த்திப்பார்க்கும் வன்மத்தையும் யதார்த்தமான தனித்த மொழியில் பதிவுறுத்துகிற மிகச்சிறந்த நாவல் `நிறங்களின் உலகம்’.
விழியிழந்தோர்க்கு கட்புலனாகாத புறத்தோற்றத்தை நிறங்களின் வழியாக மட்டுமே உணரமுடிகிறது. திறந்தே கிடக்கும் விழிக்கோளங்களுக்குள் கரும் இருட்டே காட்சியாகும் கண்தெரியாதவர்க்கு என்கிற எளிய புரிதலோடு இருப்பவர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைவர். இந்த நாவலை வாசித்துக் கடக்கும் கணங்களில். கண்சுருக்கி அவர்கள் காணும் காட்சிகள் யாவும் அவர்களுக்கு தனித்தனி நிறங்களாகவே தோன்றுகின்றன. கருமையின் ருசி, இளஞ்சிவப்பின் வாசம், பச்சையின் மணம் எதுவென அறிந்தபடியே கடக்கிறார்கள் தினந்தோறும், நாவலை நான் வாசித்திருந்த நாளின் இரவில் நிறவெளிகளை தன் கைத்தடிகளால் தட்டிக்கடக்கும் விழியிழந்தோர் பெரும்படை என்னை விழித்திருக்கச் செய்துகொண்டிருந்ததை இப்போதும் என்னால் உணரமுடிகிறது. பொருளிற்கும், அதன் குணத்திற்கும் தனித்தனியே நிறங்களை தன் அக மனதிற்குள் உருவாக்கிக் கடக்கிறார்கள் வாழ்வினை.
நிறங்களின் உலகின் பாண்டி 6 வயது வரை தீர்க்கமான பார்வையுடன் வாழ்ந்தவன். அவனிலிருந்து காணும் திறன் நழுவிச் செல்கிறது. நாவலில் மிக நுட்பமாக தன்னிலிருந்து பார்வை நழுவிடும் கணங்கள் பதிவுறுத்தப்பட்டுள்ளன. பரம்பரையாக இப்படி நிகழ்வதற்கான தொன்மக் கதையொன்றும் பழக்கத்தில் உள்ளது. அறிவியல் நிஜத்தை உணர்த்த பார்வையற்றோர் பள்ளி மாணவன் ஆகிறான் பாண்டி. அங்கு பாண்டிக்குள் நிகழும் அரசியல், சமூக விஷயங்களும், சூழலைக் கடந்திட துடித்தலும் மனித மனதின் துயருமே நாவலாகியுள்ளது.
எவருக்கும் நாவலை வாசித்த பிறகான நாட்களில் மனதில் அலைவுறும் காட்சிகள் விசித்திரமானவை. ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியை வாசித்திருந்த நாட்களில் ஜப்பானும், கப்பலும், போரும், பாண்டியன் எனும் சாகஸக்காரனும் எனக்குள் நீண்ட நாட்கள் தங்கியிருந்தார்கள். இப்படித் தான் தி.ஜானகிராமனின் மோக முள்ளை வாசித்து லயித்த நாட்களில் யமுனாவும், தஞ்சை நிலவெளியும், இசைச்சுரங்களும் யாவருக்குள்ளும் நீடித்திருந்திருக்கும். இது எல்லா நாவல்களுக்கும் நிகழுமா எனத் தெரியவில்லை. நிச்சயமாக மிகச்சிறந்த நாவல்களை வாசிக்கும் கணம் தோறும் அது நம் உள்மனதினுள் உருவாக்கிடும் உணர்வலைகள் விதவிதமாகத்தான் ரூபம் கொள்கின்றன. நிறங்களின் உலகத்தை வாசிக்கிற எவரும் நாவலுக்குள் பசியெனும் மாயம் நிகழ்த்திப்பார்க்கும் குரூர விளையாட்டை கண்டுணர்வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. பசி யால் கண் பூஞ்சையடைந்து வாசகன் தடுமாறித்தான் போவான். இவ்வளவு அழுத்தமாக பசியின் குரூரம் நிறங்களின் உலகத்தைத் தவிர வேறு எந்த தமிழ்நாவலிலும் பதிவாகவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
பாண்டியின் பொழுதுகள் பசியால்தான் நிறைந்திருக்கிறது. தங்கமணியின் அரிசிச்சாப்பாடு எனும் சொற்பதம் வெறும் வார்த்தைக்கூட்டமல்ல. அடிப்பிடித்த சோற்றையும், சனம்புக் கீரையையும் தின்று பசியெனும் அரக்கனை தன்னில் இருந்து வெளியேற்றத் துடிக்கும் குடும்பத்தின் கதை யிது. தென்னங்குருத்திற்கு பசியாற்றும் வல்லமை உண்டு என்பதை நிறங்களின் உலகிற்கு முன் நான் அறிந்திருக்கவில்லை.
பச்சைக்கும்மாச்சி மலைகள், வயல்பட்டி எனும் பெயரால் ஆன வயல்கள், சலசலத்து ஒடும் நீரோடைகள். இவைகளுக்கு நடுவில்தான் பெரும்பசி கொண்ட மக்கள்திரள் வாழ்வைக் கடத்தியிருக்கிறது என்பது அதிர்ச்சி யளிக்கத்தான் செய்கிறது. பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் நம்பிக்கைகளை சிதைக்கும் வல்லமை கொண்டவை நாவல் இலக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்து கொண்ட இடங்கள் இவை.
வாழ்க்கையில் பல தற்செயல் நிகழ்வுகளும், விசித்திரங்களும் மனித மனங்களால்தான் வடிவம் பெறுகிறது. பசியால் வாடிக்கிடக்கும் மொத்தக் குடும்பத்தையும் சாராயம் குடித்து விட்டு வந்து அடித்துத் துவைத்து துவம்சம் செய்யும் கணவனுடன் இரவில் கூடிக்கிடப்பது சாத்தியமா? உடலும், மனமும் உள்நிறைத்து வைத்திருக்கும் மர்மங்களை அறிந்திட இயலுமோ தெரியவில்லை. எல்லோரும்தான் உடனிருக்கிறார்கள். பாண்டிக்கு பத்மநாபனுடன் மட்டும் மனநெருக்கம் கூடுகிறது. எது இவர்களை ஒன்றாக்கியது. ஊர்ப்பாசமா? இருக்கலாம். எல்லோருக்குள்ளும் இயங்கிக்கொண்டிருக்கும் குருவாகத் துடிக்கும் மன நிலையா? யார் அறிவார்கள்? ஒரு வேளை பாண்டியும், பத்மநாபனும் கூட அறிந்திருப்பார்களா தெரியவில்லை. தற்செயல் நிகழ்வுகளே யாவரின் வாழ்வையும் வடிவமைக்கிறது.
நாவலின் சிலபக்கங்களில் மட்டும் காட்சிப்படுகிற ஜேம்ஸ்தெரு கன்னியம்மா மிகவும் முக்கியமானவள். தெலுங்குப் பிரதேசத்தில் இருந்து வந்து வாழ்வின் முடிச்சிற்குள் சிக்கி தன்னையே பணயமாக வைத்த சக்குபாயின் மகள் கன்னியம்மா. தாத்தா அழைத்து வந்த முதல்நாளில் வெற்று நிலமாக இருந்த ஜேம்ஸ்தெரு கன்னியம்மாவுடன் மனம் நெருக்கமான பிறகு பாண்டிக்கு ஞானபூமியாகத் தெரிகிறது. அவள்தான் அவனுக்குள் இலக்கியக் கதவினை தன்குரல் வழியே திறந்தாள். பாண்டிக்கு இலக்கியம் யாவும் புரசைவாக்கத்தின் ஜேம்ஸ்தெரு சாக்கடைக் கொசுக்களின் ரீங்காரத்தோடு சேர்ந்தே தான் அறியப்பட்டிருந்தது.
பெருமழை நாள் ஒன்றில் சுவர் இடிந்து விழுந்திட தாயும், மகளும் மரித்துப் போனார்கள் எனும் குரல் கேட்ட நொடியில் பாண்டியுடன் நாமும் தான் விக்கித்துப் போகிறோம். அதன் பின் நாவலின் எழுதப்படாத பக்கங்கள் வாசக மனதிற்குள் கடந்து செல்கிறது. நாவல் கச்சிதமான வடிவமா? வாசகன் தனக்குள் பயணப்பட இடமேற்படுத்தி தரும் நாவல்களே வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படியான முக்கியமான இடமிது. இனி வாசகர்கள் பாண்டி, கன்னியம்மா, சக்குபாய், ஜேம்ஸ் தெரு, பார்வையற்றோர் பள்ளி இவற்றின் ஊடாக வேறு ஒன்றான கதைகளுக்குள் பயணப்பட சாத்தியம் உண்டு. வாசகனுக்கான திறப்புகளையும், நுட்பமான இடைவெளிகளையும் நாவலின் பக்கங்களை வாசித்தறியும் போது உணர்கிறோம். இதுவே நிறங் களின் உலகத்தை தமிழின் மிக முக்கியமான நாவலாக்குகிறது.
நாவலின் பின்பகுதி நிகழும் காலம் தமிழகத்தின் கல்விப்புலத்தில் கொந்தளிப்பான அரசியல் சூழல் நிகழ்த்திய வரலாற்றால் ஆனது. பார்வையற்றோர் பள்ளி மாணவர்களும் பேருந்தின் மீது கல்வீசி தாக்கி தங்களின் இந்தி திணிப்பின் மீதான எதிரியை உலகறியச் செய்கிறார்கள். பள்ளிவிடுதியில் தங்கிப் பணிசெய்யும் பாண்டு அக்காலத்தின் குறியீடு. அண்ணாதுரை, கருணாநிதி, சிற்றரசு, நெடுஞ்செழியன் போன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தாரின் உணர்ச்சி மிகு சொல்லாடல்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்படை தமிழின் மீதான ஈர்ப்புடன் இயங்கியது. பாண்டுவிற்கும், பாண்டியான சீருடையானுக்கும் நடக்கும் தர்க்கமும், விவாதமும் எழுத் தாளரின் இப்போதைய மனநிலையே. 70, 80களில் இப்படி விவாதிப்பதற்கான மனநிலை இருக்கச் சாத்தியம் குறைவுதான்.
இங்குதான் எழுத்தாளன் தன்னை எழுதிப்பார்த்திடும் தன்மை வெளிப்படுகிறது. நாவல் என்றாலே தர்க்கித்து தொடர்வது தானே. வெற்று நம்பிக்கை களாலும், ஆரவார உணர்ச்சிகளா லும் கட்டி வைக்கப்பட்டிருந்த காலத்தின் மீது எழுதப்பட்டிருக்கும் பிரதியை தன் புதிய எழுத்தால் கலைத்துப் பார்ப்பதும், எழுதபடாதவற்றின் மீது வாசக கவனத்தை ஈர்ப்பதுமே கலைஞனின் பணியாகும். சீருடையான் கலைஞன் என்பதால் அவர் எழுதியே இருக்காத காட்சிகள் நாவலை வாசிக்கும் தருணங்களில் நமக்குள் கடக்கிறது.
பாண்டுவின் வழியே திமுகவினரின் மொழிக் கொள்கையெனும் விசித்திரத்தை நாம் புரிகிறோம். நிகழ்காலத்தில் தன்பேரனுக்கு இந்திதெரியும் என்பதே அவர் மத்தியமந்திரியாக அவருக்கு இருக்கும் ஒரே தகுதி என்று கூறிய மூத்த தமிழறிஞரின் குரூர முகமும், அவரின் சக்கையான வசனங்களால் ஈர்க்கப்பட்டு தன் உடலெங்கும் தீபரவச் செய்திட்ட மாணவர்களின் துயருற்ற முகங்களும் நம்மைக் கடக்கிறது. வெற்று உணர்ச்சிகளால் உந்தப்பட்டு தன்னை மாய்த்துக் கொண்ட மதிப்பிடமுடியாத மனித உயிர்களின் தற்கொலைகள் குறித்த பதிவுகள் தமிழில் இனிமேல்தான் எழுதப்படவேண்டும்.
பார்வையற்றோர் பள்ளியில் கற்றுக் கொள்வதற்காக பதட்டமான மன நிலையுடன் ரயில் ஏறிய பாண்டியின் ஞாபகங்களில் திரண்டு வந்த ஊரும், பசியும், வறுமையும், துயருறு மன நிலையும், பின் அந்த பள்ளியின் சூழலும் கற்றுத் தந்த வாழ்க்கைப்பாடுகளையும் நாவல் நமக்குள் உக்கிரமாக கடத்திச் செல்கிறது. போன காரியம் முடிந்துவிட்டது, இனி புறப்படவேண்டியதுதான் என்கிற மனநிலையை அடையும் போதெல்லாம் நாம் தடுமாறிப் போவதைப் போல பாண்டியும் தடுமாறித்தான் போகிறான். படிப்பு முடிந்து விட்டது, இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான் என்கிற பாண்டியின் மனத்தவிப்போடு நிறைவடைகிறது நாவல்.
நாவலை வாசித்து முடித்தபிறகும் பல நாட்கள் எனக்குள் நல்ல சாப்பாட்டை பிசைந்தபடியே பசியோடு வாடித் துயருறும் தன்குடும்பத்தை நினைத்துக் கண்ணீர் விடும் பாண்டியின் காட்சிச் சித்திரம் கடக்க மறுத்துக் கொண்டிருந்தது. வண்ணமயமானது மட்டுமில்லை வாழ்க்கை.
-ம.மணிமாறன்
(இன்னும் கேட்போம்)
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 1
பார்க்கிறபோதெல்லாம் அப்போது படித்த ஒரு நாவலுக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறவராக என் தோழன் மணிமாறன் இருப்பார். தமிழ் இலக்கியப் பரப்பின் கதைகளை தொடர்ந்து வாசித்து வந்தாலும், அது குறித்த கருத்துக்களையும், உரையாடல்களையும் காற்றிலே கரைத்துக் கொண்டு இருந்த மனிதன் அவர். என்னமோ நேர்ந்து, அவை குறித்த தனது குறிப்புகளை இப்போது தீக்கதிர் பத்திரிகையின் இலக்கியச்சோலையில் எழுத ஆரம்பித்திருக்கிறார். சந்தோஷமாயிருக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் வெளிவந்து, அவர் வாசித்த நாவல்கள் குறித்து பகிர்ந்துகொள்ளத் துணிந்திருக்கிறார். கேட்போம்.....
1. நாவலெனும் விசித்திரம்!
ம.மணிமாறன்
புத்தக வாசிப்பு குறித்து பேசுவது என்கிற நினைப்பே எனக்குள் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகிறது. எப்போதிருந்து இது துவங்கியிருக்கும் என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் எங்கள் ஊர் பொட்டலில் சோவியத் புத்தகக் கண்காட்சி நடக்கும். புத்தகம் வாங்க கையில் காசு இருக்காது. மெருகு குலையாத அதன் தோற்றத்தைக் காண்பதற்கும், பொங்கிப் பெருகும் புத்தக வாசத்தை நுகர்ந்திடவெனவே நான் அங்கு போவேன். அந்த நொடியிலிருந்தே புத்தகங்களின் மீதான பெரும் விருப்பம் எனக்குள் முளைவிடத் தொடங்கியிருக்கும் என்று தோன்றுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை உடலின் ஒரு பாகத்தைப் போல புத்தகம் என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. நவீன வாசகன் தனக்கும், புத்தகத்துக்குமான உறவினைக் குறித்து எழுதிப் பார்த்தால் சுவாரஸ்யமான நாவல் கூட உருவாகலாம்.
புத்தகங்கள் விதவிதமான வடிவிலானவை. தன் கல்குதிரையை எழுத்தாளர் கோணங்கி பலவடிவில் விதவிதமாக உருவாக்கிப் பார்க்கிறார். ஒரே தன்மை நம்முள் ஏற்படுத்தும் அயர்ச்சியில் இருந்து மீளவேண்டும் என்கிற எண்ணமே இதற்கு காரணம். நமக்குக் கிடைக்கும் மின் புத்தகம் வட்டவடிவம். கணினித் திரையில் அது செவ்வக வடிவில் காணக் கிடைக்கிறது. ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புத்தகம் உண்டு என்பதைப்போல ஒவ்வொரு புத்தகமும் தன் வாசகனை கண்டடைவதைத் தவிர வாசகனுக்கும், புத்தகங்களுக்கும் வேறு மார்க்கம் இனியில்லை.
அக்கறையான கருத்தியல் தளத்தில் இயங்குபவர்களின் தனித்த ஆயுதம் புத்தகம் மட்டுமே. உலகம் முழுமையும் இடதுசாரிகள், வலதுசாரிகள், முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் ஆத்திகம், நாத்திகம், மூடநம்பிக்கை, விழிப்புணர்வு என வகைப்படுத்தப்பட்ட நேரெதிரான கோட்பாடுகளுக்கும் கூட தன் கருத்தைப் பிரபலப்படுத்த புத்தகங்களைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
அழகியல், மன அழுக்குகளை அகற்றும் அருமருந்து என விதவிதமான காரணங்களை தன் எழுத்திற்கான காரணம் என்று எழுத்தாளர்கள் அடுக்கினாலும் நிச்சயம் எழுத்து என்பது, குறித்த நோக்கத்துடன் தான் செய்யப்படுகிறது. கட்டுரையாக இருந்தாலும், புனைகதையாக இருந்தாலும் யாவற்றிற்கும் அவற்றிற்கேயான தனித்த குணங்களோடு உரிய நோக்கமும் உண்டு என்பதை அதனைக் கற்றுணர்கிற வாசகனால் எளிதில் உணரமுடியும். ஏன் புத்தகங்கள் படிக்கப்படுகின்றன என்கிற கேள்விக்கு நிச்சயம் நமக்கு ஒற்றைப் பதில் கிடைக்கப்போவதில்லை. இதுகாறும் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒற்றைத் தன்மையை அழித்து எழுதி பன்மைத்துவத்தை முன் வைக்கும் கூர்மையான ஆயுதம் புத்தகம். இப்படிப்பட்ட புத்தகங்களுக்குள் உறைந்து கிடப்பவற்றுள் நாவல் எனும் இலக்கிய வகைமைக்கும் தனித்த குணம் உண்டு.
நாவல் என்றால் என்ன? நாவல் ஏன் எல்லா மொழியிலும் வியந்தோதப்படுகிறது. நாவலின் வடிவம் எப்படியிருக்கலாம். இவை குறித்து எல்லாம் இந்த அறிமுகக் கட்டுரையில் விளக்கிட முடியுமா? என்று தெரியவில்லை. தொடர்ந்து வர இருக்கிற இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் நாவல்கள் சிலவற்றைப் பற்றிய என்னுடைய அபிப்ராயத்திற்கு பிறகு வாசகர், அவரளவில் ஒருவிதமான முடிவிற்கு வர வாய்ப்புண்டு என்று மட்டும் தோன்றுகிறது.
தமிழின் தலைநாவலான பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு முன்பே தமிழ்மக்களுக்கு கதைகளோடும், புத்தகங்களோடும் பெரும் தொடர்புண்டு. கூட்டாக அமர்ந்து ஒருவர் பாராயணம் வாசிக்க, மற்றவர் கேட்பது இன்றைக்கும் தென்தமிழகத்தின் கிராமங்களில் ஒரு சடங்கைப்போல நிகழ்த்தப்படுகிறது. அச்சு இயந்திரங்களுக்குப் பின்னான நாட்களில் எல்லா இலக்கிய வகைமைகளைப் போலத்தான் நாவலும் தமிழ்ப் புலத்திற்கு அறிமுகமானது.
தமிழில் மொத்த இலக்கிய செயல்பாட்டின் விவாதப் பொருளாக எழுத்துகளில் கவிதை இருந்ததைப் போல தொண்ணூறுகளில் இருந்து சற்றேறக்குறைய இன்று வரை நாவலே இருந்துவருகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை தன் நாவலின் வழியாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறான். இப்போது சிறுகதை எழுதிக் கொண்டிருக்கும் நவீன எழுத்தாளன் தான் அடையவேண்டிய உயர்ந்த பீடமென நாவலாசிரியன் எனும் பதத்தையே தனக்குள் கனவாக காண்கிறான். எனவே இலக்கியத்திற்குள் தன்னை சட்டாம் பிள்ளையாகப் பாவித்துக் கொண்ட எழுத்தாளர்கள் இருவர் தொண்ணூறுகளின் துவக்கத்தில் தமிழில் நாவலே இல்லை என தமிழ் நிலமெங்கும் அரற்றிக் கொண்டிருந்தனர். அதுவரை தான் வாசித்துப் பிரமித்திருந்த மோகமுள்ளும், பஞ்சும் பசியும், கோபல்ல கிராமமும் நாவல் இல்லையா என என்னைப் போன்ற வாசகர்களை அதிர்ச்சியுறச் செய்வது மட்டும் அவர்களின் நோக்கமல்ல. அவர்கள் அடுத்த வருடத்தில் எழுதப்போகும் நாவலுக்கான வாசக மனதைத் தயாரிப்பதற்கான திட்டமிடலே என்பதை யாவரும் அறிந்தனர். விஷ்ணுபுரமும், உபபாண்டவமும் வாசகக் கவனம் பெற்றதற்கு பிரதியின் வல்லமையைத் தாண்டி அரசியலும் இருந்தது என்பதே நேர்மையான வாசக மதிப்பீடாகும். அதற்கு முன் உருவாக்கப்பட்ட நாவல்கள் எல்லாம் நாவலுக்கான முயற்சிகளே என்றால், நாவல் என்பது என்ன? என்ற கேள்வி நம்முள் எழத்தான் செய்கிறது.
இந்த நூற்றாண்டின் மிக உயர்ந்த இலக்கிய வடிவமே நாவல். காவியங்களின் போதாமையைச் சரி செய்யத் தோன்றிய இலக்கிய வடிவம் இது. காவியங்களின் கச்சிதமான கதையாடல் நல்லதுக்கும் கெட்டதுக்குமான யுத்தம். முடிவில் நல்லது வெற்றி பெறும் என்கிற நேர்கோட்டு வடிவிலானது. இக் கதையாடலைக் கலைத்துப் பார்த்த அ-நேர்கோட்டு எழுத்தியலே நாவலைக் கட்டமைத்தது. காவியத்தில் வாசகனுக்கு பார்வையாளன் என்பதைத் தாண்டி வேறு எந்த இடமும் இல்லை. ஆனால் பின் நவீனத்துவ நாவல்கள் வாசகனின் பங்கேற்பைக் கோருகின்றன. எனவேதான் காவியங்களால் எட்டமுடியாத மாபெரும் உயரத்தையும் எட்டுகிற இலக்கிய வகைமை நாவல் என்கிற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்தடைந்தனர்.
நாவலின் கலைவடிவம் தத்துவம். சகல நாவல்களுக்குள்ளும் கலை ரீதியிலான விவாதம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்துவமின்றி நாவல் இல்லை. ஒரு சமூகத்தின் கூட்டுவிவாதத்தின் கலைரீதியான மாபெரும் வெளிப்பாடே நாவல். எல்லாவற்றையும் வரலாற்றின் முன் நிறுத்தி விசாரிக்கும் விஸ்தாரமான வெளிப்பாட்டு வடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது.
ருஷ்யப் பேரிலக்கியங்களின் வாசம் நுகராத வாசகர் தமிழில் எவரும் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். இது தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல. உலகின் எந்த மொழியிலும் நாவல் எழுதிட முயற்சிக்கும் எழுத்தாளனுக்கு இலக்கியப் பேராசான்கள் டால்ஸ்டாயும், தஸ்தா வெஸ்கியுமே ஆதர்சங்கள். கார்க்கியின் ‘தாய்’, சோவியத் பேரிலக்கியங்களான ‘வீரம் விளைந்தது’, ‘முதல் ஆசிரியன்’, ‘கண்தெரியாத இசைஞன்’, ‘மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது’ என ஏதோ ஒரு ருஷ்ய இலக்கியமே நம்மில் பலரும் படித்த முதல் நாவலாக இருந்திருக்கும். எழுத்தாளர்கள், வாசகர்களின் நாவல் குறித்த பார்வையை வடிவமைத்ததில் ‘போரும் அமைதியும்’, ‘புத்துயிர்ப்பு’, ‘குற்றமும் தண்ட னையும்’, ‘இடியட்’, ‘கரம்சோவ் சகோதரர்கள்’ போன்ற நாவல்களுக்கு பெரும் பங்கு உண்டு.
நாவலுக்கு எவரையும் வசீகரிக்கும் பேராற்றல் உண்டு என உறுதியாக நம்புகிறேன். விதவிதமான வடிவங்களில் என்னிடம் ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யின் பிரதிகள் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் அதை வாங்கிடும் பழக்கம் இன்று வரை எனக்குள் இருக்கிறது. ‘நீலகண்ட பறவையைத் தேடி’ எனும் வங்க நாவலைப் படித்த நிமிடங்களின் பரவசத்தின் ரேகை இன்றுவரை என்னில் பத்திரமாயிருக்கிறது. ஷெல்மாலாகர் லேவின் ‘மதகுரு’வை படிக்காமல் போயிருந்தால் என் வாசிப்பில் பாரதூரமான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது. வாசகனை நுட்பமானவனாக்குவதில் வேறு எந்த வடிவத்தையும்விட நாவலுக்கு பேராற்றல் உண்டு என எளிய வாசகன் என்ற முறையில் நான் உறுதியாக நம்புகிறேன்.
நிகழ்ந்து கொண்டிருப்பது இரண்டாயிரத்திற்கு பிறகான காலம் என வைத்துக் கொண்டு. இக்காலத்தில் தமிழில் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய நாவல்கள் குறித்த என்னுடைய அபிபராயத்தை சகவாசகனோடு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். கிட்டத் தட்ட பட்டியலிட்டால் நூறு நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் எதைப் பொருட்படுத்தி வாசிப்பது, விவாதிப்பது என்கிற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.
கா.நா.சுவும், வெங்கட்சாமிநாதனும் அக்கறையுடன், அழகியல் கூறுகளை நெஞ்சில் தாங்கி எனக் கூறிக் கொண்டு பட்டியலிட்டதிற்குள் உள்ள அரசியலை யாவரும் அறிவர். புறக்கணிப்பின் துக்கத்தைச் சுமந்தலைந்த எழுத்தாளர்களின் படைவரிசை நீளமானது. அதற்காக என்னுடைய முன்வைப்பில் அரசியலே இல்லை என்று நான் பொய்சொல்ல விரும்பவில்லை.
மறுக்கப்பட்டவர்களின் குரலைப் பதிவு செய்த நாவல்களை வாசகனின் பார்வைக்கு முன்வைக்கிறேன். எந்த முன்முடிவுகளுடனும் கட்டுரையை அணுக வேண்டாம். திறந்த மனதுடன் கட்டுரையைப் படியுங்கள். கட்டுரையில் கவனப்படுத்தப்பட்ட நாவலைத் தேடிப் படியுங்கள்.
வாசகனும், புத்தகங்களும் சந்தித்துக் கொள்ளும் புதிர் விளையாட்டின் கருவியான எழுத்தாளன் அப்போது சந்தோசம் கொள்வான். சந்தோசம் கொள்ளச் செய்யுங்கள் சகவாசகனான அவனை...
(இன்னும் கேட்கலாம்...)
மாதவராஜ் பக்கங்கள் - 26
இயக்குனர் மகேந்திரன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்திற்காக இரண்டு நாட்கள் சென்னை சென்று இன்றுதான் திரும்பினேன். பள்ளிக்கருணையில் புதுவீடு கட்டி குடியேறி இருக்கிறார் இப்போது அவர். அலமாரியில் அடுக்கிவைக்க ஏராளமான புத்தகங்கள் கட்டுக் கட்டாய் இருந்தன. எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கவிருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அண்மையில் வந்த சில படங்கள் தவிர எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். கருத்துக்களும் கொண்டிருக்கிறார். ஐந்துமணி நேரத்துக்கும் மேலே அவரோடு பேசியிருந்த நேரம் சுகமானதும், உற்சாகமானதுமாகும்.
தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் உத்தமபுத்திரன் படத்தின் இயக்குனர் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அதன் இயக்குனர் அழைத்திருந்தாராம். பெரும்பாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடும் இயல்பு கொண்ட மகேந்திரன், அந்த இயக்குனர் தன்னோடு பணிபுரிந்தவர் என்பதனால் பிரியம் காரணமாக சென்றிருந்தாராம். தொகுத்துப் பேசிய நடிகர் விவேக், மகேந்திரனையும், ஜெயகாந்தனையும் ஒப்பிட்டுப் பேசினாராம். இருவரும் அவரவர் துறையில் சிகரங்களை தொட்டிருந்தாலும் இருவருமே இப்போது அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்லி, “காற்று நாம் நினைத்த நேரத்தில் வராது. அதுவாக வீசும். நாம்தான் காத்திருக்க வேண்டும்” என்றாராம். டி.வி நிகழ்ச்சிகளில் விவேக் தொகுத்தளிக்கும் லட்சணத்தைப் பார்த்து, அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாதோ?
மாடியில், அவரது அறையில் சில ஓவியங்கள் இருந்தன. வண்ணங்களின் சிதறல்களும், சேர்க்கைகளும் காட்சியனுபவமாக மட்டுமல்லாமல் உணர்வுகளின் நடனம் போலிருந்தன. “யாருடைய ஒவியம் சார் இது?” என்று கேட்டதற்கு, மெல்லிய புன்னகையோடும் சின்ன கூச்சத்தோடும் “நாந்தான்” என்றார். அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வரைவதற்கான உபகரணங்கள் நிறைய புதிதாய் வாங்கி வைத்திருப்பதைக் காட்டினார். “படம் வரைவது பெரும் சுகமானது. நேரம் காலம் தெரியாமல் மூழ்கிப்போவேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவை உருப்பெறும் போது ஏற்படும் உணர்வுக்கும், சந்தோஷத்திற்கும் எதுவும் ஈடாகாது. அதுதான் கலையின் அழகு. எழுத்து, ஓவியம், சினிமா, நடனம், இசை போன்றவற்றில் இருக்கும் இன்பம் நிரந்தரமானது. அவைகளிலிருந்து திரும்பவும் அதே உணர்வுகளை புதுசாகப் பெற முடியும்” எனச் சொல்லிக்கொண்டே போனார். “படம் முடிந்தது என்று படுக்கப் போய்விடுவேன். அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் வர்ணம் கொடுக்கலாமோ எனத் தோன்றும். திரும்பவும் வந்து உட்கார்ந்து கொள்வேன்” என்றார். படைப்பின் சுவாரசியமே இதுதானே. அவரது ஓவியங்களில் சேகுவேராவும் இருந்தார்!
விடைபெறும்போது, அவர் இயக்கிய படங்களை சேகரிப்பது குறித்து பேச்சு வந்தது. தீராத பக்கங்களிலும் ஏற்கனவே எழுதியிருந்தேன். இணையத்தில் கிடைக்கும் அவரது சில படங்களுக்கான சுட்டிகளை ஒரு நண்பர் தந்திருந்தார். அவைகளின் குவாலிட்டி சரியில்லாமல் இருக்கிறது. டி.வி.டியாக கிடைத்தால் நல்லது. நண்பர்கள் தங்களிடம் இருந்தாலோ, அவைகளைப் பெறும் வழி தெரிந்தாலோ எனது இ-மெயிலுக்கு ( jothi.mraj@gmail.com ) தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். சிங்கப்பூரில் கொலம்பியா கேசட் செண்டரில் இருப்பதாக தெரிந்தவர் ஒருவர் இயக்குனர் மகேந்திரனிடம் சொன்னாராம். நண்பர்கள் யாரேனும் உதவிட முடியுமா?
| புதிய பதிவர்கள் அறிமுகம் - 39
|
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சாயங்காலம் நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். “அனல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி” பாட்டு கேட்டது. இசையில் பரவியிருந்த ஏக்கமும், பரவசமும், ஏகாந்தமும் கிறங்க வைத்தன. கண்கள் மூடி கேட்க வேண்டும் போலிருந்தது. பாட்டை அறுத்து, நண்பன் பேச ஆரம்பித்தான். வேகமாய் பேசிவிட்டு, “திரும்ப ஒருமுறை போன் செய்வேன். எடுக்காதே. அந்தப் பாட்டை நான் கேட்க வேண்டும்” என்றேன். அவனும் சிரித்துக்கொண்டே சம்மதித்தான். இரண்டு மூன்று முறை கேட்டேன். அந்தப் பாடலை அதற்கும் முன்பும் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது போல் உணரவில்லை. இரண்டு நாட்களாய் அந்தப் பாடலை அவ்வப்போது என் மோசமான குரலில் முணுமுணுக்க வேறு ஆரம்பித்தேன். என் மகள் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள். “இந்தப் பாட்டு நல்லாயிருக்குல்ல, எந்தப் படத்துல” என்று அவளிடம் கேட்டேன். “இது வந்து எவ்ளோ நாளாகுது தெரியுமாப்பா, திடீர்னு ஒருநா உங்களுக்கு நல்லாத் தோணிரும் போலுக்கு. நம்ம டிவியில இத தினந்தோறும் மாத்தி மாத்தி போட்டானே அப்பல்லாம் எங்கப்பா போனீங்க?” என்றாள். “சரி. இப்ப என்ன அதுக்கு. எந்தப் படத்துலன்னு கேட்டா சொல்லேன்” என்றேன். “அய்யோ, இது கூடத் தெரியாதா? வாரணமாயிரம்” என்றவள் “இப்போ வந்த பாட்டு எதாவது தெரிமா” என சிரித்துக்கொண்டே கேட்டாள். “அதை நீ கேள்” என்று அங்கிருந்து அகன்றேன். “ரொம்ப நாள் கழிச்சு நீங்க கேளுங்க” என்ற அவளது கிண்டல் என்னைத் துரத்தியது.
புதியவர்கள் அறிமுகம் பகுதி ஒரு மாதத்திற்கும் மேலாய் தீராத பக்கங்களில் வரவில்லை. இப்போது 12 பதிவர்கள் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். மொத்தமாய் ஒரே பதிவில் அறிமுகம் செய்வது அவ்வளவாக கவனம் பெறாமல் போகிறது. எனவே இனி வரும் பதிவுகளின் ஊடாகவே, புதிய பதிவர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்யலாமெனத் தோன்றுகிறது. இந்தப் பதிவிலிருந்து ஆரம்பிப்போம்.
உண்மையான எந்திரன்!
கவிதையோடும், காதலோடும் - எனவே களிப்போடும் கவலையோடும் தொடர்புடையதாக இருக்கிறது இந்த இதயம். எங்கேயோ தொலைத்துவிட்டேன், திருப்பிக் கொடு என்கிறான் காதலன். இதயம் போகுதே...என்று கரைகிறாள் காதலி. கம்பரோ, "இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்" என்று இதயங்கள் இடம் மாறிய கதையைச் சொல்கிறார். ஒரு கைப்பிடிக்குள் அடங்கிவிடும் என்று சொல்லப்படும் ஒரு சின்னஞ்சிறிய உறுப்பை இலக்கியம் என்ன பாடு படுத்துகிறது. உயிரின் இயக்கத்திற்காக அந்த இதயம் படும் பாடு கொஞ்ச நஞ்சமா..
மூளையின் செயல் பற்றிய விரிவான ஞானம் பெறுமுன், இதயத்தைத் தான் ஆராய்ச்சியாளர்கள் சிந்தனை பிறக்கும் இடமாக எண்ணியிருக்கக் கூடும். அதுதான் நமது பேச்சு வழக்கில் கூட, இன்னமும் நெஞ்சில் கைவைத்துச் சொல் என்று இடப்பக்கம் காட்டுவது, உள்ளம் - மனம் - எண்ணம் என்ற பதங்களை இதயத்தோடு பொருத்திப் புரிந்து கொள்வது எல்லாம் இருக்கிறது.
| மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம். டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து எஸ் வி வேணுகோபாலன் |
முதலில், இதயம் இடப் பக்கம் இல்லை. நடுப் பாகத்தில் சற்று இடப்பக்கம் எட்டுகிற மாதிரி அமைந்திருக்கிறது. நுரையீரலின் அன்பு அரவணைப்பில் துடித்துக் கொண்டிருக்கிறது இதயம் எனப்படும் இந்தச் சதைக் கோளம். இரத்த சுழற்சி இயக்ககத்தின் ஒரு மின் இயந்திரம் அது (எந்திரன் என்ற பெயரை உள்ளபடியே இதயத்திற்கே வைக்க வேண்டும்). உண்மைதான். மின் எந்திரமாக (மோட்டார்) இயங்குவதால் தான், இ.சி.ஜி போன்ற பரிசோதனைகளை நடத்தி இதயத்தின் இயக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
உடலின் நல வாரியத் தலைவரான இந்த இதயம், நுரையீரலின் உதவியோடு ஆக்சிஜனையும், செரிமான உறுப்புகளின் ஏற்பாடு மூலம் சத்துக்களையும் இரத்தத்தில் கலக்கச் செய்கிறது. மேல் அறை (ஆரிக்கிள்) மூலம் பெறும் இரத்தத்தைக் கீழ் அறை மூலம் (வெண்டிரிக்கிள்) வெளியேற்றுவது என இடமும் வலமுமாக இந்த மொத்த ஏற்பாட்டுக்காக நான்கு அறை கொண்ட வீட்டைக் கட்டிக் கொண்டு வலுவான சுவர்களையும், வால்வுகளையும் வைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக நடத்தி வருகிறது.
எப்போது, எங்கு தேவையோ அங்கே அந்தப் பகுதிக்கு அதிகம் இரத்தம் பாய வைக்கிறது இதயம். குளிக்கிற நேரத்தில், தோல் பகுதிக்கு. சாப்பிட உட்கார்ந்தால் வயிற்றுப் பாகத்திற்கு. காலை நேரத்தில் சிறுநீரக இலாகாவிற்கு என தெளிவான அட்டவணை வைத்திருக்கிறது. (நாம் அந்த நேர அட்டவணையை இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்ளும் போது அதற்குண்டான அவஸ்தையையும் ஏற்றுக் கொள்கிறது பாவம்! ).
தாயின் வயிற்றில் கருவாக உதித்த மாத்திரத்திலேயே இதயம் துடிக்கத் தொடங்கிவிடுகிறது. மருத்துவரால் உள்ளே தோன்றியிருக்கும் உயிரின் துடிப்பை அழகாக அறிய முடியும். அந்தத் துடிப்பு உயிர் வாழும் காலம் வரையிலும் துடித்தபடி இருக்கிறது. மருத்துவர் ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்கிறபோது இதயத்தின் இயக்கம் பற்றி 90 - 95 சதவீதம் அறிந்து கொண்டுவிட முடியுமாம். இப்படியான இடைவிடாத துடிப்பு, ஓய்வற்ற உழைப்பு என்று சொல்லிக் கொண்டாலும், மேலறை இயங்கும் போது கீழறை ஒரு சொடுக்கு போடும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் துளித் துளியாய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு விடுகிறது. அப்படியே கீழரை இயங்கும் போது மேலறை ஓய்வெடுத்துக் கொள்கிறது.
இரத்த மண்டல சுழற்சிக்கான இரத்தக் குழாய்களின் பணியை இதயம் சரி பார்த்துக் கொள்கிறது. எங்காவது சிறு சிறு அடைப்பு ஏற்பட்டால், வேறு குழாய்களை உருவாக்கி இரத்த ஓட்டம் தடைபடாமல் இயங்க வைக்க இயற்கையான மாற்றுப் பாதை வேலையை (Natural By pass) நமது உடலே செய்து கொள்கிறது.
இதயத்தின் சீரான இயக்கத்திற்கு மிக எளிய விஷயங்களைக் கடைப்பிடித்தால் போதும்
உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்த சமாளிப்பு இவை பற்றிய அக்கறை கொண்டால் போதும், இதயமே நம்மைப் பார்த்து என் இதய தெய்வமே என்று கூப்பிட ஆரம்பித்து விடும்.
புரதம், மாவுப்பொருள், கொழுப்பு என எல்லா சத்துக்களையும் சரிவிகிதமாகக் கொண்ட உணவை இள வயதிலேயே பழக்கிக் கொள்ள வழிகாட்ட வேண்டும். இதில் எது அளவு மீறும் போதும், தேவையற்ற சிக்கல்களை பெற்றுக் கொள்கிறோம். அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவு, நீண்ட நாளுக்காகத் தயார்ப்படுத்தப்படும் டின் உணவு, செரிமானத்திற்கு ஊறு செய்யும் அடுமனை (பேக்கரி) அயிட்டங்கள்...போன்றவை உறுதியாகத் தவிர்க்கப்பட வேண்டும். குறைக்கவாவது வேண்டும். நல்ல காய்கறிகள், பழவகைகள், தயிர் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள் மேலும் நன்மை பயக்கத் தக்கவை.
உணவின் தன்மை மட்டுமல்ல, உணவுக்கான நேரத்தில் ஓர் ஒழுங்கிசைவும் முக்கியம். நேரம் தவறாமல் உண்பது, ஒரேயடியாகப் பிளந்து கட்டாமல் எளிய அளவுகளில் சீரான இடைவெளியில் பிரித்து உண்பது, உறக்கத்திற்குப் போகும்போது சாப்பிட உட்காராமல் அதற்கு ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே உண்பது..ஆகியவையும் முக்கியம். பெரிதாகிக் கொண்டு போகும் வயிறு, இதயம் பார்க்க வேண்டிய வேலையின் பரப்பளவையும் பெருக்குகிறது. தொப்பையைப் பார்த்தால் எந்த இதயம் தான் நடுங்காது? ( காக்கிச் சட்டைக்கு இதயம் இல்லை என்று ஏன் எழுதுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா?).
அளவான தண்ணீர் உடலின் இயக்கத்திற்கு முக்கியம். தண்ணீர் தேவைக்கு மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும். இதயத்தின் கோரிக்கை இது.
பள்ளிக்கூடத்தில் ஆரம்ப நிலையில் செய்யும் டிரில் போலவாவது, ஓர் எளிய உடற்பயிற்சி மிக மிக இன்றியமையாதது. உட்கார்ந்து கொண்டே இருப்பவர் அல்லது படுத்துக் கொண்டே இருப்பவர் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெற இதயம் எத்தனை சிரமங்களோடு (பம்பிங் ) வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணரவேண்டும். உடல் அயராத வண்ணம், நடைப் பயிற்சி அன்றாடம் எடுப்பது மிகவும் நல்லாது. 'வாகன யோகம்' என்று ராசி பலன் போட்டிருந்தாலும், முடிந்தவரை நடக்கப் பார்ப்பது நல்லது. தொடர் மூளை உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், அவ்வப்பொழுது இடைவேளை எடுத்துக் கொண்டு காலார அங்கே இங்கே நடப்பது அவசியம்.
உணர்ச்சிகளின் பிரதிபலிப்பை நமது எந்திரன் வெளிப்படுத்துபவர் என்பது உங்களுக்கே தெரியுமல்லவா.. மகிழ்ச்சித் துள்ளல், அச்சத்தின் பிடி...போன்ற உணர்ச்சிகளை அவற்றின் தன்மைக்கேற்ப - இசையின் தாள லயத்திற்கேற்ப எழுந்து பொங்கி நெளிந்து சரிந்து அடங்குகிற சங்கீத ஊற்றைப் போலவே, இதயத்தின் துடிப்புகளும் அமையப்பெறும். ஓடிக் கொண்டிருப்பவருக்கும், அதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பவருக்கும் அப்போதே இ சி ஜி எடுத்துப் பார்த்தல் இது புரியும். எனவே தான், இ சி ஜி பரிசோதிக்கும் நுணுக்கம் அறிந்தவர்கள், நோயாளிகள் தம் எதிரே வந்து அமர்ந்துவுடன் பரிசோதிப்பதில்லை. சிறிது நேரம் பொறுத்துப் பரிசோதனை செய்து பார்க்கின்றனர்.
இரத்த அழுத்தம் மிகையாக அல்லது குறைவாக இருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டால் அததற்குரிய மருத்துவ வழிகாட்டுதலை இடைவிடாது கடைப்பிடிக்க வேண்டும். அதை நினைத்துக் கொண்டே கவலையில் நாட்களை நகர்த்த வேண்டியதில்லை. அதன் தன்மையை ஏற்றுக் கொண்டு அதனோடே மகிழ்வான வாழ்க்கையை நாம் வாழ முடியும்.
இரத்த சோகை (அனீமியா) என்பது, இரத்தத்தில் ஹீமோகுளோபின் போதுமான அளவிற்கு இல்லாது குறைந்துவிடுவதைக் குறிக்கும். அப்போது இரத்தம் நீர்த்துப் போயிருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஒரு வேலையைச் செய்வதற்கு உடலின் ஒரு பாகத்திற்குச் செலுத்த வேண்டிய இரத்தம் ஒன்றரை பங்கு இரண்டு பங்கு கூடுதலாகத் தேவைப்படும் என்று பொருள். அதற்காக இதயம் இன்னும் அதிக பளுவோடு வேலை செய்யவேண்டும் என்று பொருள். எனவே தான் உடல் சோர்வு ஏற்படுவதும், வெவ்வேறு பாதிப்புகள் தோன்றுவதும், பிரச்சனைகள் மேலும் மோசமாவதும் நிகழ்கின்றன.
இரத்த சோகை உருவாக வறுமை, சத்தான உணவு எடுத்துக் கொள்ளாமை, சரிவிகித உணவு உண்ணாமை இவற்றோடு உளச்சோர்வும் ஒரு காரணம். எலிகளுக்குத் தீனி போடும் பிரதமர்கள், வாடும் ஏழைகளுக்கு உணவு அளிக்காத செயற்கைப் பஞ்சத்தினாலும் போஷாக்கின்றி இரத்த சோகை உருவாகும். அதைத் தவிர்க்க வேண்டும். இரத்த சோகை நீங்க வாழ்விலும், சமூகத்திலும் அதற்குரிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
இரத்தச் சுழற்சி இயக்கத்தின் போக்கில் அடைப்பு ஏற்படுவது பற்றி ஒரு குறிப்பை ஏற்கெனவே பார்த்தோம். மெதுவாக உருவாகிற சிறு அடைப்புகள் இயல்பாகவே சரிசெய்யப்பட்டுவிடும். அடைப்புக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. கூடுதல் கொழுப்பு அவற்றில் ஒன்று. ஆனால், கொழுப்பை வைத்துத் தான் இதய நோய் வரும் என்று பல நிறுவனங்கள் அச்சத்தை பிரச்சாரம் செய்து, மக்களை மிரட்டுகின்றன. எடுத்துக் காட்டிற்கு, எந்தத் தாவர எண்ணெயிலும் கொலஸ்டிரால் எனப்படும் அந்த வகை கொழுப்பு கிடையாது. எண்ணெய் பெயரை வைத்துத் தான் வர்த்தகமே நடக்கிறது. எந்த எண்ணெயையும் மிதமிஞ்சிய வெப்பத்தில் சூடாக்கினால் மட்டுமே, அதில் கரைந்திருக்கும் கொழுப்புத் துளிகள் உடைந்து வெளிப்பட்டுப் பிரச்சனைகளைத் தருகின்றன. கூடுதல் கொழுப்பைத் தவிர்ப்பது அவசியமாகும்.
புகைப் பழக்கம் கூட அடைப்பை உருவாக்கும். தானே புகைத்தாலும் சரி, அடுத்தவர் புகைக்கும் போது அந்தப் புகையை பரோபகார உள்ளத்தோடோ, வேறு வழியின்றியோ சுவாசித்தாலும் சரி, அது இதயத்தை பாதிக்கும். படிப்படியாக விட்டு வெளியேறிவிடுவது நல்லது. ஆல்கஹாலும் அப்படித்தான். ஆல்கஹால் நேரடியாக இதயத் தசையை பாதிக்கிறது. 'இதயத்தைத் தொலைத்துவிட்டேன்...' என்று விரக்தியில் பாட்டிலைத் தொட்டால் நிஜமாகவே இதயத்தைத் தொலைத்த மாதிரிதான். புகையும், மதுவும் தங்கள் இதயத்துக்கு நெருக்கமானது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இதயத்துக்கு தீங்கானது என்று புரிந்து கொள்ளவேண்டும்.
உலகமய பண்பாடு இதயம் ஏற்க முடியாதது. நான், என் விஷயம், எனது வாழ்க்கை, எனது இருப்பு...என்று கூட்டுக்குள் சுருங்குகிற வேலையை உலகமயம் ஊக்குவிக்கிறது. அப்படியானவர்களுக்கு இதய பாதிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகம். ஒதுங்கிப் போகும் சிந்தனையை விட, சமூக வயமான எண்ணப் போக்கு இதயத்தை இதமாக்குகிறது என்கின்றனர் இதய வல்லுனர்கள். மன அழுத்தம், உளைச்சல் போன்றவை பொது வெளியில் கலந்து கூட்டாக முன்னேறும் உந்துதல் கொண்டவர்களாக மாறும் போது கரைந்து விடுகின்றன. மூடி இருக்கும் கதவுகளுக்கு இடையே புதிய வழிகள் திறக்கின்றன.
மலர்ச்சியான முகம், குளிர்ச்சியான பார்வை, விருப்பமாக சத்தான உணவு, அழுத்தமற்ற மனது, தோழமை நேசமிக்க வாழ்க்கை, சமூக ரீதியான பொறுப்புணர்வு, உற்சாக உடற்பயிற்சி என இதயத்தை சீராக பராமரித்துக் கொள்ள முடியும்.
கைப்பிடி அளவு தான் இதயம் என்பது, நமது இதயத்தின் சீரான இயக்கம் நமது கையில் தான் இருக்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. வாழ்க்கையைக் காதலிப்பவர்கள், சமூகத்தை நேசிப்பவர்கள் மிகச் சாதாரண விஷயங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே காதல் இதயத்தை இலகுவாகப் பார்த்துக் கொண்டுவிட முடியும். பிப்ரவரி 14 எப்போது வரும் என்று காத்திருக்காமல், இதய கீதத்தை எப்போதும் பாடிக் கொண்டிருக்க முடியும்.....
சன் குழுமத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்களின் குரல்
நன்றி : தினமணி
ரசிக மனநிலையிலிருந்து பைத்திய மனநிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை சன் குழுமம் உசுப்பேற்றி விட்டுக்கொண்டு இருக்கிறது. தன் படம், வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முதலாளியின் இயல்பாக இருக்கும் வேட்கையும், வேகமும் இங்கே வெறியாக மாறிவிட்டது. சகல நியதிகளையும், மாண்புகளையும் கிழித்தெறியும் அதன் அகோரப்பசியை ‘வியாபார உத்தி’ என்று சொல்வதற்கும், பாராட்டுவற்கும் ஒரு கூட்டமே இருக்கிறது.
‘சினிமாதானே, ஏன் இவ்வளவு சீரியஸாகிறீர்கள்’ என்கிறார்கள். ‘பொழுதுபோக்குக்குத்தானே படம், அதுகுறித்து ஏன் கவலைப்படவேண்டும்’ என எதிர்க்குரல்கள் கேட்கின்றன. அதையேத்தான் நானும் கேட்கிறேன். “சினிமாதானே, அதற்கு ஏன் ஆயிரம் பாற்குடங்களும், மொட்டையடித்தல்களும், காவடித்தூக்கல்களும்” என்று.
மனதில் விமர்சனங்கள் இருப்பினும், ‘நமக்கேன் வம்பு’ என கையது கொண்டு வாயது பொத்தி பல அறிவுஜீவிகள் நிற்கிறார்கள். ‘தமிழ்க் கலாச்சார, பண்பாட்டு பாதுகாவலர்களும், போராளிகளும்’ இங்கே, தங்கள் இளைஞர்கள் உலகத்தின் முன்னே கேவலப்படுத்தப்படுவதையும், கேலிக்குரியவர்களாய் சித்தரிக்கப்படுவதையும் கண்டு பொங்காமல் எங்கே போய்விட்டார்கள் எனத் தெரியவில்லை.
அமைப்பு ரீதியாக ஒரு குரல் இப்போது வந்திருக்கிறது. எந்திரன் திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
| தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018 -----------------------------------------
மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
அருணன் ச.தமிழ்ச்செல்வன் |
சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் படைப்பாளிகளின் குரல் இது. இப்படியான குரல்கள் மேலும் தொடர்வதும், ஒன்று சேர்ந்து ஒலிப்பதும் காலத்தின் அவசியம்.
“எதிரி எந்த மூலைக்கெல்லாம் செல்கிறானோ, அங்கெல்லாம் நாமும் சென்று நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அவனது வீடுகளுக்கு, அவனது திரையரங்குகளுக்கும் செல்ல வேண்டும்” என்றார் புரட்சிக்காரன் சே. அவரைக் கையிலும் நெஞ்சிலும் ஏந்த வேண்டிய இளைஞர்கள் இங்கு அலகு குத்திக்கொண்டு வருகிறார்களே....
கவலையும், கோபமும் எப்படி வராமல் போகும்?







