மாதவராஜ் பக்கங்கள் - 26

mahendran 01யக்குனர் மகேந்திரன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்திற்காக இரண்டு நாட்கள் சென்னை சென்று இன்றுதான் திரும்பினேன். பள்ளிக்கருணையில் புதுவீடு கட்டி குடியேறி இருக்கிறார் இப்போது அவர். அலமாரியில் அடுக்கிவைக்க ஏராளமான புத்தகங்கள் கட்டுக் கட்டாய் இருந்தன. எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கவிருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அண்மையில் வந்த சில படங்கள் தவிர எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். கருத்துக்களும் கொண்டிருக்கிறார். ஐந்துமணி நேரத்துக்கும் மேலே அவரோடு பேசியிருந்த நேரம் சுகமானதும், உற்சாகமானதுமாகும்.

தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் உத்தமபுத்திரன் படத்தின் இயக்குனர் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அதன் இயக்குனர் அழைத்திருந்தாராம். பெரும்பாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடும் இயல்பு கொண்ட மகேந்திரன், அந்த இயக்குனர் தன்னோடு பணிபுரிந்தவர் என்பதனால் பிரியம் காரணமாக சென்றிருந்தாராம். தொகுத்துப் பேசிய நடிகர் விவேக், மகேந்திரனையும், ஜெயகாந்தனையும் ஒப்பிட்டுப் பேசினாராம். இருவரும் அவரவர் துறையில் சிகரங்களை தொட்டிருந்தாலும் இருவருமே இப்போது அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்லி, “காற்று நாம் நினைத்த நேரத்தில் வராது. அதுவாக வீசும். நாம்தான் காத்திருக்க வேண்டும்” என்றாராம். டி.வி நிகழ்ச்சிகளில் விவேக் தொகுத்தளிக்கும் லட்சணத்தைப் பார்த்து, அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாதோ?

மாடியில், அவரது அறையில் சில ஓவியங்கள் இருந்தன. வண்ணங்களின் சிதறல்களும், சேர்க்கைகளும் காட்சியனுபவமாக மட்டுமல்லாமல் உணர்வுகளின் நடனம் போலிருந்தன. “யாருடைய ஒவியம் சார் இது?” என்று கேட்டதற்கு, மெல்லிய புன்னகையோடும் சின்ன கூச்சத்தோடும் “நாந்தான்” என்றார். அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வரைவதற்கான உபகரணங்கள் நிறைய புதிதாய் வாங்கி வைத்திருப்பதைக் காட்டினார். “படம் வரைவது பெரும் சுகமானது. நேரம் காலம் தெரியாமல் மூழ்கிப்போவேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவை உருப்பெறும் போது ஏற்படும் உணர்வுக்கும், சந்தோஷத்திற்கும் எதுவும் ஈடாகாது. அதுதான் கலையின் அழகு. எழுத்து, ஓவியம், சினிமா, நடனம், இசை போன்றவற்றில் இருக்கும் இன்பம் நிரந்தரமானது. அவைகளிலிருந்து திரும்பவும் அதே உணர்வுகளை புதுசாகப் பெற முடியும்” எனச் சொல்லிக்கொண்டே போனார். “படம் முடிந்தது என்று படுக்கப் போய்விடுவேன். அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் வர்ணம் கொடுக்கலாமோ எனத் தோன்றும். திரும்பவும் வந்து உட்கார்ந்து கொள்வேன்” என்றார். படைப்பின் சுவாரசியமே இதுதானே. அவரது ஓவியங்களில் சேகுவேராவும் இருந்தார்!

விடைபெறும்போது, அவர் இயக்கிய படங்களை சேகரிப்பது குறித்து பேச்சு வந்தது. தீராத பக்கங்களிலும் ஏற்கனவே எழுதியிருந்தேன். இணையத்தில் கிடைக்கும் அவரது சில படங்களுக்கான சுட்டிகளை ஒரு நண்பர் தந்திருந்தார். அவைகளின் குவாலிட்டி சரியில்லாமல் இருக்கிறது. டி.வி.டியாக கிடைத்தால் நல்லது. நண்பர்கள் தங்களிடம் இருந்தாலோ, அவைகளைப் பெறும் வழி தெரிந்தாலோ எனது இ-மெயிலுக்கு ( jothi.mraj@gmail.com ) தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். சிங்கப்பூரில் கொலம்பியா கேசட் செண்டரில் இருப்பதாக தெரிந்தவர் ஒருவர் இயக்குனர் மகேந்திரனிடம் சொன்னாராம். நண்பர்கள் யாரேனும் உதவிட முடியுமா?

 புதிய பதிவர்கள்

அறிமுகம் - 39

junior reporter


ஜூனியர் ரிப்போர்ட்டர் என்னும் இந்த வலைப்பக்கத்தில் திரு.ராமானுஜம் என்பவர் எழுதி வருகிறார். இவர் ஜீ டிவியின் சப் எடிட்டர். கடந்த மூன்று மாதங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். உணவு தானியங்கள் வீணாவது, காமன்வெல்த், அயோத்தி, காஷ்மீர் என சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் தனது பார்வையை பகிர்ந்துகொள்கிறார். கோபமும், வேகமும் கொண்ட எழுத்துக்கள். கேள்விகளை எழுப்பும் குரல்.

 

ரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சாயங்காலம் நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். “அனல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி” பாட்டு கேட்டது. இசையில் பரவியிருந்த ஏக்கமும்,  பரவசமும், ஏகாந்தமும் கிறங்க வைத்தன. கண்கள் மூடி கேட்க வேண்டும் போலிருந்தது.  பாட்டை அறுத்து,  நண்பன் பேச ஆரம்பித்தான். வேகமாய் பேசிவிட்டு, “திரும்ப ஒருமுறை போன் செய்வேன். எடுக்காதே. அந்தப் பாட்டை நான் கேட்க வேண்டும்” என்றேன். அவனும் சிரித்துக்கொண்டே சம்மதித்தான். இரண்டு மூன்று முறை கேட்டேன். அந்தப் பாடலை அதற்கும் முன்பும் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது போல் உணரவில்லை. இரண்டு நாட்களாய் அந்தப் பாடலை அவ்வப்போது என் மோசமான குரலில் முணுமுணுக்க வேறு ஆரம்பித்தேன்.  என் மகள் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள். “இந்தப் பாட்டு நல்லாயிருக்குல்ல, எந்தப் படத்துல” என்று அவளிடம் கேட்டேன். “இது வந்து எவ்ளோ நாளாகுது தெரியுமாப்பா,  திடீர்னு ஒருநா உங்களுக்கு நல்லாத் தோணிரும் போலுக்கு. நம்ம டிவியில இத தினந்தோறும் மாத்தி மாத்தி போட்டானே அப்பல்லாம் எங்கப்பா போனீங்க?” என்றாள். “சரி. இப்ப என்ன அதுக்கு. எந்தப் படத்துலன்னு கேட்டா சொல்லேன்”  என்றேன். “அய்யோ, இது கூடத் தெரியாதா? வாரணமாயிரம்” என்றவள்  “இப்போ வந்த பாட்டு எதாவது தெரிமா” என சிரித்துக்கொண்டே கேட்டாள். “அதை நீ கேள்” என்று அங்கிருந்து அகன்றேன். “ரொம்ப நாள் கழிச்சு நீங்க கேளுங்க” என்ற அவளது கிண்டல் என்னைத் துரத்தியது.

 

புதியவர்கள் அறிமுகம் பகுதி ஒரு மாதத்திற்கும் மேலாய் தீராத பக்கங்களில் வரவில்லை. இப்போது 12 பதிவர்கள் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். மொத்தமாய் ஒரே பதிவில் அறிமுகம் செய்வது அவ்வளவாக கவனம் பெறாமல் போகிறது. எனவே இனி வரும் பதிவுகளின் ஊடாகவே, புதிய பதிவர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்யலாமெனத் தோன்றுகிறது. இந்தப் பதிவிலிருந்து  ஆரம்பிப்போம்.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ரொம்ப சுவாரசியமான இடுகை. விவேக்கின் பேச்சு, மகேந்திரன் ஓவியங்கள், 'அனல் மேலே' பாட்டை ரசித்த விதம், அதற்கு ப்ரீதுவின் கிண்டல் ;-) எல்லாமே ரொம்ப ரசிக்கும்படி இருந்தது. புதிய பதிவர் அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. 'அனல் மேலே' பாடல், நானும் கொஞ்ச நாள் கழித்துதான் கேட்டேன் மாதவ்ஜி. கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்கள் பாடியது. நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.

    கொஞ்ச நாள் முன்பு நீங்கள் காதலைப் பற்றி எழுதிய பதிவொன்றுக்கு காஷ்யபன் அவர்கள் பெரியார் காதலைப் பற்றி சொன்னதை படிக்கச் சொல்லி இருந்தார். பெரியார் எழுதிய ஒரு கட்டுரை - http://www.shobasakthi.com/shobasakthi/?p=22

    பதிலளிநீக்கு
  3. ஆஹா நல்ல ரசனைக்கரிய பதிவு.. அத சரி எந்தப்பயல் தமிழ் மணத்தி்ல் இப்படி ஒரு வாக்கிட்டவன்...

    பதிலளிநீக்கு
  4. பதிவை மிகவும் ரசித்தேன்.

    மகேந்திரனுடனான அனுபவங்கள் சுவரஸ்யமாக இருந்தது.

    விவேக் என்ன செய்வார். இப்படி தொகுத்தளிக்கவேண்டும் என்று கூறியிருந்தால்...

    விவேக் அப்துல்கலாமுடன் ஒரு பேட்டி எடுத்திருப்பார்.. மிக நேர்த்தியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. கொலம்பியா கேசட் செண்டரை பற்றி விசாரிக்கிறேன். பிராமிஸ் இல்லை.

    பதிலளிநீக்கு
  6. இயக்குநர் திரு.மகேந்திரன் அவர்களுடனான உங்கள் தொடர்பும் அது குறித்த பதிவும் அருமை அண்ணா....
    புதியவர்கள் அறிமுகமும்... நீங்க ரசித்த பாடலும் அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. மகேந்திரன் பற்றிய பகிர்வு அருமை.
    மகேந்திரன், பாரதிராஜா, பாலு மகேந்திரா , மணி ரத்னம் காலங்களிலேயே செய்ய வேண்டிய ஒரு பணி, உதவி இயக்குனர்களை கொடுமை படுத்துதல் (மன ரீதியாக) என்ற நிகழ்வை தடுக்க வழி செய்தல்.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அழகாக தொகுத்திருக்கிறீர்கள் மாதவ் ஜீ!

    மகேந்திரன் - இயக்குனர் எனத் தெரியும். ஓவியர் என்பது இப்பத்தான் தெரியும். ஆவணப்படம் எப்போது வெளிவரும்?

    சுதா ரகுநாதன். ம்ம் நல்ல தேர்வு தான்.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. திரு.மாதவராஜ்... கொலம்பியா கேசட் சென்டர் பற்றி விசாரித்தேன்... அப்படி ஒன்று இருப்பதாக யாரும் அறியவில்லை. கடையின் பெயர் சரிதானா என்று மேலும் ஒருமுறை உறுதிப்படுத்த முடியுமா? "முள்ளும் மலரும்" படத் தகடு இங்கே பரவலாகக் கிடைக்கிறது.மற்ற படங்களுக்கு சிலரிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!