கரசேவை, மசூதி இடிப்பு, அயோத்தி தீர்ப்பு…

sadhus celebrate1 
தீர்ப்பினைக் கொண்டாடும் சாதுக்கள்

"இருதரப்பும் சேர்ந்து வாழ்வதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது” என்கின்றனர் பலரும் அயோத்தி தீர்ப்பு குறித்து.  பி.ஜே.பி, சாதுக்கள், பஜ்ரங்கதள், வி.எச்.பி மிகுந்த உற்சாகத்தோடு தீர்ப்பை வரவேற்று கொண்டாடுகின்றனர். ‘ ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழி பிறந்துவிட்டது’ என்றும், ‘தேசீய ஒருமைப்பாட்டிற்கு புதிய அத்தியாயத்தை இந்த தீர்ப்பு எழுதியிருக்கிறது’ என்றும் அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டிருக்கின்றனர். "அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டப்படும்” என பிரவீன் தொகாடியா ஆனந்தக் கூச்சலிடுகிறார். காங்கிரஸ் கட்சி  புன்னகையோடு, “தீர்ப்பை இருதரப்பாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என சொல்லி  வருகிறது. மூஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்கின்றன.  தீர்ப்பின் உள்ளடக்கத்தையும், சாதக பாதகங்களையும் இந்தக் காட்சிகளும் செய்திகளும் சொல்கின்றன.

 

‘முப்பரிமாண தீர்ப்பு’ என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற தீர்ப்புகளை எழுதியிருக்கிற மாண்புமிகு நீதிபதிகள் மூவருமே ஒத்துப்போன கருத்தைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அகர்வால், ஷர்மா இருவரும் மசூதிக்கு முன்பாக அங்கு ராமர் கோவில் இருந்ததற்கான அடையாளம் இருந்ததாக சொல்கின்றனர். அதனை இடித்து மசூதி கட்டப்பட்டதாக முடிவுக்கு வருகின்றனர். நீதிபதி கானோ, மசூதிக்கு முன்பாக அங்கு ஏற்கனவே இடிந்த அல்லது சிதைந்த கட்டிட அடையாளங்களை அறிய முடிவதாகவும், கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் சொல்கின்றார். கான் மற்றும் அகர்வால் இருவரும் நிலத்தை மூன்றாக பிரித்து பங்கு வைக்கச் சொல்கின்றனர். ஷர்மா முழுவதையும் இந்துக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.  நீதிபதிகளின் வித்தியாசமான இந்த பார்வைகளில் இருந்த ‘மெஜாரிட்டிகளை’யெல்லாம் சேகரித்து பாபர் மசூதி - ராம ஜென்மபூமி விவகாரத்தின் தலையெழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

 

vhp bajrangdal celeb

தீர்ப்பினைக் கொண்டாடும் வி.ஹெச்.பியினர்

“தேவதைகள் தரையிறங்கி நடப்பதற்கு அஞ்சுமளவுக்கு, பிரச்சினைக்குரிய நிலத்தில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை எங்களால் முடிந்த அளவுக்கு நீக்க முயன்றிருக்கிறோம்” என்று தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி கான். பிரபஞ்சத்தின் அழிவு மற்றும் மறு ஆக்கம் குறித்த ரிக்வேதங்களின் சுலோகங்களை மேற்கோளிட்டு தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி அகர்வால். மொத்தம் நீளும் தீர்ப்பின் 6000 பக்கங்களில் இந்த அகர்வால் மட்டும் கிட்டத்தட்ட 5000 பக்கங்கள் எழுதியிருக்கிறார். இந்த பின்னணியில் வாசிக்கும்போது தீர்ப்பின் நிறம் தெளிவாகிறது. தீர்ப்பின் திசை இங்கிருந்து நகர ஆரம்பிக்கிறது.

 

சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதிகள் அகர்வாலும், ஷர்மாவும் தெரிவித்துள்ளனர். அகழ்வராய்ச்சியில் பாபர் மசூதிக்குக் கீழே அங்கு ஏற்கனவே இருந்த ஒன்றின் சிதிலங்களில் தூண்கள் போன்றவை இருப்பதாகவும், வர்ணப்பூச்சுக்கள் தெரிவதாகவும்,  பல விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்த சிதிலங்களில் தேவனகிரி எழுத்து வடிவம் தெரிவதாகவும் சொல்லப்பட்டது. அராபிய எழுத்துக்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்து அமைப்புகளோ, அப்போதே “ஆஹா, அது ராமர் கோவில்தான் என்றும், 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்” கும்மாளம் போட்டு பரப்பின. ஜைன மதத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு, அந்த சிதிலங்கள், தங்கள் மதத்தைச் சார்ந்தவை போலிருப்பதாகவும், எனவே தங்களுக்கு அந்த இடத்தில் உரிமையுண்டு என ஒரு மனு தாக்கல் செய்தனர். அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதற்கிடையில் அயோத்தியில் அகழ்வராய்ச்சி நடத்திய குழு, அகழ்வராய்ச்சியின் விதிகளை பின்பற்றவில்லை என பணிகளை நிறுத்தவும் நேரிட்டது. பல வரலாற்று ஆசிரியர்கள், அகழ்வராய்ச்சியின் அறிக்கை மீது ஏராளமான சந்தேகங்களை அடுக்கி இருந்தனர்.

 

bjb workers celebrate

தீர்ப்பினைக் கொண்டாடும் பி.ஜே.பியினர்

இத்தனை குழப்பங்களுக்கும் தெளிவற்றத் தன்மைகளுக்கும் மத்தியில் நீதிபதிகள் ஷர்மாவும், அகர்வாலும் திட்டவட்டமாக தங்களுக்குத் தேவையான சில அடையாளங்களை தேர்ந்தெடுத்து அது ராமர் கோவில்தான் என முடிவுக்கு வந்து தங்களது ‘நம்பிக்கை’யை நிலைநாட்டி இருக்கின்றனர். அகழ்வராய்ச்சியில் கட்டிட அமைப்பின் சிதிலங்கள் மட்டும் காணப்படவில்லை. மிருகங்களின் எலும்புக்கூடுகளும் காணப்பட்டு இருந்தன.  இதுகுறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ‘மிருகங்களை காணிக்கை செலுத்தும் வழக்கம் இந்துக்களிடம் இருந்ததற்கான’ ஆதாரங்களை பழம் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி அர்த்தம் சொல்லி இருக்கின்றனர் நீதிபதி அகர்வாலும், ஷர்மாவும். அவர்கள் இருவரும் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றனர்.

 

ஆக, அங்கு ஏற்கனவே ஒரு இந்துமதக் கோவில், அதுவும் ராமர் கோவில் இருந்த முடிவுக்கு கொண்டு வந்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கு அல்லது பணிக்கு தாவுகின்றனர். ‘கோயிலை இடித்துவிட்டு மசூதியைக்கட்டியது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது’ என்கின்றனர். இந்துமதம் மட்டுமல்ல  முஸ்லீம் மதக் கோட்பாடுகளும் அத்துப்பிடிதான் போலும். ஆனாலும் இந்த இடத்தில் யாரோ திருதிருவென விழிப்பது மாதிரி இருக்கிறது. கோவில் இடிக்கப்பட்டதா, யார் இடித்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும், சான்றுகளும் நிறுவப்படாமலே  ‘கோவில் இடிக்கப்பட்டது’ என்று போகிற போக்கில் சொல்லிக் கடந்து விடுகிறார்கள். இதற்கு மேற்கோள்காட்ட வேதங்களிலோ, உபநிடதங்களிலோ, பழம் இலக்கியங்களிலோ வார்த்தைகள் எதுவும் அகப்படவில்லை போலிருக்கிறது. அதற்கென்ன. கோவில் இருந்தது என்றாகி விட்டது. மசூதியே இல்லை என்றுமாகிவிட்டது.

 

இனி அடுத்த கட்டம் ஒன்றிருக்கிறது. சகிப்புத்தன்மையையும்,  தேசீய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியாக வேண்டும்.  அதற்கு வழி காட்டப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு பங்கு வைத்து கொடுக்க வேண்டும் என்கிறது தீர்ப்பு. கரசேவை, மசூதி இடிப்பினை அடுத்து அயோத்திப் பிரச்சினையின் அடுத்த அத்தியாயமாய் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது.  இதுவே கடைசி அத்தியாயமாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகின்றனர்.  கலைஞர் கருணாநிதியும், செல்வி.ஜெயலலிதா அவர்களும் கூட இவ்விஷயத்தில் இணக்கமான கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

 

muslims pray for peace

தீர்ப்பினையொட்டி அமைதி வேண்டி பிரார்த்திக்கும் முஸ்லீம் மக்கள்

முஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது என்று அறிவித்தவுடன்,  இந்துமகாசபையும் ‘முஸ்லீம்களுக்கு ஒரு பங்கு கூடக் கிடையாது’ என கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்லி இருக்கிறது. இருதரப்பினரையும் பா.ஜ.கவும், காங்கிரஸும் சமாதானப்படுத்தி, மேல்முறையிட்டிற்கு செல்லவிடாமல் தடுக்க முயற்சிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன என்பது இன்றைய செய்தி. பெரும்பான்மையின் அரசியல் இதோ ஆரம்பிக்கிறது.  இந்துமகாசபையை மேல்முறையீடு செல்லவிடாமல் சமாதானப்படுத்தி,  “நீயும் சமாதானமாகப் போ’ என முஸ்லீம் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படும். அதற்குப் பிறகும் தங்கள் உரிமையை நிலைநாட்ட முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றால்  அவர்கள் தேச ஒருமைப்பாட்டிற்கும், சகிப்புத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் என்பதாக பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படும். இந்து மனோபாவத்தில், முஸ்லீம் எதிர்ப்புணர்வும், வெறுப்பும் மேலும் வார்க்கப்படும்.  “என்ன இழவோ. பிரச்சினை முடிந்தால் சரி” என்று அமைதி விரும்புவர்களும் முஸ்லீம் சமூகத்தின் மீது அதிருப்தியடைவார்கள்.

 

தீர்ப்பில் சொல்லப்படுகிற யோசனையையே இருவரும் ஏற்றுக்கொள்ளட்டும். ராமர் கோவில் கட்டட்டும். மசூதியை கட்டட்டும். அல்லது இரண்டுமே கட்டாமல் போகட்டும். அதுவெல்லாம் பிரச்சினையல்ல. அங்கே ராமர் கோவில் இருந்தது என்றும் அது இடிக்கப்பட்டது என்றும், அதன் மீது மசூதி கட்டப்பட்டது என்றும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாய் இந்த தேசத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதுதான் பிரச்சினை.  நாளை ராமர் பாலத்துக்கும் இந்த தீர்ப்பே முன்மாதிரியாகலாம். சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட வேண்டியதுதான். தொடர்ந்து இந்துமதக் கடவுள்கள் ஒவ்வொன்றாய் ஆழங்களிலிருந்துக் கிளம்பி வந்து தேசத்தை உலுக்கிக்கொண்டே இருக்கும். அதுதான் பிரச்சினை. இதை சரிசெய்ய வேண்டியது இந்த தேசத்தின் பிரஜைகள் அனைவரின் கடமை. முஸ்லீம் மக்களுடையது மட்டும் அல்ல.

 

“மக்களின் நன்மைக்காக இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பது தவறு. தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நீதிமன்றங்கள் மூலம் அதைச் செய்து வருகின்றனர்”. இப்படி   ‘இந்திய சுயராஜ்ஜியம்’  என்னும் நூலில் சொல்லியிருப்பவர் மகாத்மா காந்தி. இன்று அவரது பிறந்த நாள்.  மனதில் இருத்துவோம்.

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. திரு.மாதவராஜ் அவர்களே...

  தீர்ப்பு மீது மிக ஆழமான அலசல், எதிர்கால முன்னறிவிப்பு என தாமதமாக தந்தாலும் சிறப்பான இடுகையாக அளித்துள்ளீர்கள். நன்றி.

  இதுதான் தீர்ப்பு... இப்படித்தான் இதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதாவது...
  இனிமேல் ஒரு இடம்/கட்டிடம் ஒருத்தருக்கு வேண்டும் என்றால், அதை "சட்டப்பூர்வாமாக அபகரிக்க" வேண்டுமானால், முதலில் ஏதாவது கதை சொல்ல வேண்டும் 'ராமரு பீமரு' என்று.

  அப்புறம் அந்த கதை சார்ந்த ஏதாவது ஒரு 'பொருளை' இரவோடு இரவாக கொண்டுபோய் 'திருட்டுத்தனமாய்' அங்கே உள்ள கட்டிடத்தில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும்.

  பிறகு அதை வன்முறை அராஜக கரசேவை செய்து இடித்துவிடவேண்டும்.

  அப்புறம் தொல்லியல் துறை குழிதோண்டி ஆராய்ந்து பார்த்து 'இதற்கு முன் அந்த இடத்தில் ஏதோ கட்டிடம் இருந்தது' என்று அறிக்கை கொடுக்கும்.

  நீதிபதிகள் இடித்த கதையை, இடிக்கப்பட்ட கட்டிடத்தை , வன்முறையை அதை தொடர்ந்து நடந்த கலவரத்தை எல்லாவற்றையும் விட்டு விட்டு... அந்த இடத்தை மூனாபிரிச்சு... அட போங்கப்பா... நீங்களும் உங்க அநீதியும்...

  மொதல்ல அந்த அநீதிமன்றத்த இடிங்கப்பா. ஏன்னா நீதியை இடித்து தள்ளிவிட்டுத்தான் அந்த நீதி மன்றமே அங்கே கட்டப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு . பாபர் மசூதி இடித்த இடத்தில் கோவில் கட்டி கொள்வது கூட முஸ்லிம்களுக்கு பிரச்சனை இல்லை . இனியும் இது போல் இடிப்புகள் தொடரக்கூடாது என்பதே பயம் .
  இறைவனை வணங்க தன் கடவுள் பக்தியை காட்ட கோவில் மற்றும் மசூதி சர்ச் என்று எதையும் ஒன்றை இடித்து விட்டு அதன் மேல் இன்னொன்று கட்டுவதும்
  அடுத்த மதத்தினரை புண்படுத்துவதும் மட்டும் போதாது .உண்மையான இறை அடியான் அடுத்த உயிருக்கு கஷ்டம் கொடுக்காமல் நேர்மையாக வாழ்ந்தாலே போதும் .............
  இதெல்லாம் சுய ஆதாயத்திற்காக வேசமிடும் கடவுள் பக்தர்களின் நாடகம்தான் இந்த போலி பக்தி..

  பதிலளிநீக்கு
 3. 80 % வாழும் இந்துக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும் , சிறுபான்மையினராய் வாழும் இஸ்லாமியர்களும் ஏமாற்றப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு நியாயமானதே . இந்தியா போன்ற பழமையான வரலாறு கொண்ட நாட்டில் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் கூட முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பு எழுதப்பட்டிருப்பதுவும் நியாயமானதே.

  பதிலளிநீக்கு
 4. //இந்தியா போன்ற பழமையான வரலாறு கொண்ட நாட்டில் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் கூட முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பு எழுதப்பட்டிருப்பதுவும் நியாயமானதே//

  அப்ப ஏன் லெனின் சட்டங்கள்?

  பதிலளிநீக்கு
 5. நியாயமான, அருமையான இடுகை! வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 6. சர்ச்சை மிகுந்த வழக்கில் தீர்ப்பு சரியானதாகவே படுகிறது. தீர்ப்புக்கான காரணங்கள் நகைச்சுவையாக இருக்கிறது.

  பதிவு ஏற்றுகொள்ளும் படியாகவும் இருக்கிறது யோசிக்கவும் வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. இன்னும் பத்து பதினைஞ்சு வருசத்துக்குள்ள உச்ச நீதி மன்றமும் என்ன சொல்லப் போவுதுன்னு அடுத்த சந்ததியரும் தயாராகி நிப்பாங்க. அப்ப இன்னும் எவ்வளவு திரிபுகளை எதிர் நோக்கி இருப்பாங்க. இதிகாசக் கதை சொல்லற மாதிரி, சாமிக்கே நீதிபதிகள் சொன்னா தான் நிற்கிறதுக்கு இடம்னு சேத்து சொல்ல வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 8. ஆவணங்கள், ஆதாரங்கள் எதையும் கணக்கில் கொள்ளாத, ஆட்சியாளர்களின் விருப்பத்தை
  நிறைவேற்றும் விதத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒரு ஆலமரத்தடி பஞ்சாயத்து தீர்ப்பு.

  இதற்கு போய் எவ்வளவு பில்ட் அப்?

  பதிலளிநீக்கு
 9. ஆளுக்கு ஒரு பங்கு பிரித்துக்கொடுத்தது இருக்கட்டும். அவர்கள் அந்த இடத்தில் மசூதியும்,ராமர் கோவிலும் ,கட்டி வழிபட ஆரம்பித்தால் ,அதன் பிறகு அங்கு நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்துப்பாருங்கள், நடுங்குகிறது.

  பதிலளிநீக்கு
 10. அயோத்தி: நடந்தது இதுதான்!

  இங்கே காண்க:

  http://arulgreen.blogspot.com/

  பதிலளிநீக்கு
 11. புராணத்தைநயும்,வரலாறையும் ஒன்று என
  நம்பவைக்கும் கொடுமை இங்குதான் .
  வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதை
  அழுத்தமாகவே பதியவைக்கிறார்கள்.கடவுள்
  நம்பிக்கைக்கும்,மனிதனுக்கும் வித்தியாசம்
  தெரியாத மக்களாக ஆக்கிவிட்டார்களே மக்களை.
  உங்கள் இடுகை மிக அருமையாக உள்ளது.
  சிந்திக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. அண்ணன் மாதவராஜ்! வழக்கம் போல தங்களின் கருத்தை அழகாக தெளிவாக பதிவிட்டு இருக்கிறீர்கள். அருமையான விளக்கங்கள். நன்றி!!

  பதிலளிநீக்கு
 13. நியாயமான தெளிவான கருத்துடன் கூடிய பதிவு.

  பதிலளிநீக்கு
 14. UFo!

  அராஜக கரசேவை செய்து, மசூதியை இடித்தது பற்றி 6000 பக்கத் தீர்ப்பில் ஒருவரி கூட இல்லையாம்.

  Nickyjohn!
  //உண்மையான இறை அடியான் அடுத்த உயிருக்கு கஷ்டம் கொடுக்காமல் நேர்மையாக வாழ்ந்தாலே போதும்//
  உண்மைதான்.


  லெனின்!
  முதலில் இந்துக்கள் என்றால் யார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமானால், இந்த நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு?


  கிருத்திகன்!
  சரியாக கேட்டீர்கள்.


  அருள்!
  படித்தேன் தங்கள் எண்ணங்களை. இப்படி வெளிப்படுத்துவதற்கே மனிதர்கள் வேண்டியிருக்கிறது. நன்றி.


  அஸ்மா!
  நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 15. கோகுல் ராஜேஷ்!
  தங்களைப் போன்ற இளைஞர்கள்தான் இந்த தேசத்தின் எதிர்காலம். யோசியுங்கள்.


  சேது!
  ஹா..ஹா... அதுவும் நடக்கும்.


  எஸ்.ராமன்!
  அரசாஙக்த்தின் பில்ட் அப். சாதாரணமா?


  மைதீன்!
  மனமிருந்தால் புளிய இலையில் கூட படுத்துறங்கலாம். அது வேறு. இங்கு இந்துத்துவாவின் அரசியல் மட்டும்தானே இருக்கிறது.


  கணேசன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.


  இப்படிக்கு நிஜாம்!
  ரொம்ப சந்தோஷம். நன்றி.


  அன்புடன் மலிக்கா!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. //அங்கே ராமர் கோவில் இருந்தது என்றும் அது இடிக்கப்பட்டது என்றும், அதன் மீது மசூதி கட்டப்பட்டது என்றும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாய் இந்த தேசத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதுதான் பிரச்சினை. // அயோத்தி பற்றிய தங்களுடைய பார்வையும் தீர்ப்பு பற்றிய அலசலும் மிக அருமை! அது சரி! சபரிமலை சோதி இயற்கையா? மனிதனால் உருவாக்கப்படுகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறது! கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் 'அது மக்களின் நம்பிக்கை! அதில் எல்லாம் கேள்வி கேட்கலாமா?' என்று கேட்டிருக்கிறார். நீங்களாவது அதைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்! ஏமாற்றம் தான்! ஒரு வேளை கேரளத் தோழர்கள் பாரதிய சனதாவுடன் கூட்டணி பேசிவருகிறார்களோ!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!