எந்திரன்கள்


தினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். விருதுநகரில் நடந்த கலை இலக்கிய இரவொன்றில், ஒரு வீதி நாடகம் தயாரித்து மேடையேற்றினோம்.

ஒருவன் காலையில் எழும்புவதிலிருந்து காட்சிகள் ஆரம்பமாகும். பல் துலக்குவது, சலனமின்றி பேப்பர் படிப்பது, பாத்ரூம் செல்வது, சாப்பிடுவது, டிரெஸ் அணிவது, டிபன் பாக்ஸோடு புறப்படுவது, பஸ்ஸில் பயணம் செய்வது, டைப் அடித்துக்கொண்டே இருப்பது, சாப்பிடுவது, டைப் அடிப்பது, வீட்டுக்குப் புறப்படுவது, பஸ்ஸில் பயணம், வீட்டில் டிரெஸ் மாற்றி உட்கார்ந்து டி.வி பார்ப்பது, சாப்பிடுவது, படுப்பது என்று ஒரு மனிதனே மேடையில் அசைந்து கொண்டு இருப்பான். விளக்குகள் அணைந்து, மீண்டும் எரியும். திரும்பவும் பல்துலக்குவான். பேப்பர், பாத்ரூம், டிரெஸ், பஸ், டைப்ரைட்டிங் என அதே காட்சிகள் தொடரும். சிரித்துப் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.

விளக்குகள் அணைந்து மூன்றாம் நாள் ஆரம்பமாகி, அவன் மேடையில் பல் துலக்க ஆரம்பிக்கவும் பார்வையாளர்கள் பொறுமையிழந்து போனார்கள். அந்த மனிதன் டிபன் பாக்ஸோடு பஸ்ஸுக்காக மேடையில் காத்திருந்தபோது, ஆளாளுக்காய் கத்த ஆரம்பித்தனர். “நிறுத்துங்கடா, நாடகம் போடுறோம்னு கிண்டல் பண்றீங்களா” என கையை நீட்டிக்கொண்டு ஒருவர் வேகமாக எழுந்து மேடை நோக்கி வர ஆரம்பித்தார். அதுவரைக்கும் மேடையில் நடித்துகொண்டு இருந்தவன் சட்டென்று பார்வையாளர்களை நோக்கி வந்து, “ஆமாம், கிண்டல்தான் பண்றோம், என்ன செய்வீங்க” என தொண்டை வெடிக்கக் கத்துவான். பார்வையாளர்கள் சட்டென்று அமைதியாக, “நீங்களும் இப்படித்தானே இருக்கீங்க. உங்களோட தினசரி வாழ்க்கை இப்படித்தானே இருக்குது. யாரோ சாவி கொடுக்க, நீங்க இப்படித்தானே வந்து போய்க்கிட்டு இருக்கீங்க. ஏன், எப்படி, எதற்குன்னு கேள்விகள் உண்டா. சிந்தனைகள் உண்டா. பழையவற்றிலிருந்து புதுசாய் எப்போ மாறப் போறீங்க?” என்று பெருங்குரல் எழுப்பி மேடையிலிருந்து கீழிறங்குவான்.

‘மெஷின்’ என்னும் இந்த நாடகத்தில் திருப்பதி என்னும் நண்பர் நடித்திருந்தார். ஒலிகள் அனைத்தும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவை. அதற்கேற்ப அவர் நடை, பாவனைகள் அனைத்தும் மெஷின் போன்ற இயக்கத்திலிருக்கும். அதற்குத்தான் அவரை மாறி மாறி டிரில் வாங்கியிருந்தோம். அந்த நாடகத்திற்கு ‘எந்திரன்’என்ற பெயர் எவ்வளவு பொருத்தமானது என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

இந்த நாடகத்திற்கான இன்ஸ்பிரேஷன் புதுமைப்பித்தனின் ‘மெஷின் யுகம்’ சிறுகதை என்றும் சொல்லலாம். ஒரு ஓட்டலில் சர்வர் ஒருவர் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டு இருப்பார். ஆர்டர் செய்வதும், தட்டுகளாய்த் தூக்கி வருவதும், பில் வந்து கொடுப்பதுமான அவரது நடவடிக்கைகள் அனைத்தும் மெஷின் போல இருக்கும். ஆனால் ஒரு சிறுகணத்தில் அவர் மனிதனாகி, திரும்பவும் மெஷினாவார். இரண்டே பக்கங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சிறுகதை. அவருக்கும் ‘எந்திரன்’ என்ற பேர் ரொம்ப பொருத்தமானதாகவே இருக்கும்.

ஜெயகாந்தனின் ‘யந்திரம்’ சிறுகதையும் இங்கே குறிப்பிட வேண்டியதே. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆயாவாக வரும் முத்தம்மா, அந்த மழலைகளின் அற்புதம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆடு மாடுகளை மேய்ப்பது போல தினமும் கான்வெண்ட்டுக்கு அழைத்துச் செல்வார். ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையென அந்த வீட்டில் சொல்வார்கள். ‘குழந்தைக்கு என்ன’ என்று கூட விசாரிக்காமல் அடுத்த குழந்தையை அழைக்கச் செல்வார். எந்திரத்தனமான அவள், எந்திரமல்ல என்று சொல்ல வருவதுதான் கதை. ஜெயகாந்தனின் ‘டிரெடில்’கதையையும் இங்கே சேர்த்துக் கொள்ள முடியும். புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்’ சிறுகதையும் இந்த வகைதான். இன்னும் யார் யாரெல்லாம் இந்த ரீதியில் எழுதி இருக்கிறார்களெனத் தெரியவில்லை.

மனிதர்கள் ‘எந்திரன்களாகி’ வருவதைக் சுட்டிக்காட்டுவதும், அவர்களுக்குள் இருக்கிற மனிதர்களை காட்டுவதுமாக இந்தக் கதைகள் இருக்கின்றன. எந்திரன் படம் பார்க்கக் காட்டும் ஆர்வத்தில், கோடியில் ஒரு பங்காவது இந்தக்கதைகளைப் படிப்பதில் காட்டுவார்களானால் புண்ணியமாய்ப் போகும்.

 ‘காதலன்’ படத்துக்குப் பிறகு ஷங்கரின் படங்களை பார்க்க வேண்டியதில்லை எனத் தெரிந்து போனது. விக்ரமுக்காக ‘அந்நியன்’ பார்த்து வெறுப்பு மேலும் மண்டியது. அத்தோடு ‘ஷங்கர் படம் ஒரு போதும் விளங்காது’ என்று தீர்மானமானது. படம் பார்க்காவிட்டாலும், ‘சிவாஜி’படத்தை ஓடவைப்பதற்கு செய்த அழிச்சாட்டியங்களே அருவருப்பாய் இருந்தது. இப்போது எந்திரனுக்கு எல்லாம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. தியேட்டர்களுக்கு வெளியே நடக்கும் பைத்தியக்காரத்தனங்களும், வெறிக்கூச்சல்களும் பெருங்கொடுமையாய் இருக்கின்றன. இவையனைத்தும் இடைவிடாத, தாறுமாறான விளம்பரங்களால் ரசிக மண்டைகளுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை. அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் மிருகத்தனமாக ‘எந்திரன்’, ‘எந்திரன்’ என்னும் குரல்கள் வந்து முட்டி மோதுகின்றன. முடுக்கிவிடப்பட்ட எந்திரன்களாய் ரசிகக்கண்மனிகள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஊடகம், அரசியல் இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு மக்களின் மனங்களை எப்படியெல்லாம் தகவமைக்க முடிகிறது!

‘எந்திரனுக்கு கூட்டிட்டுப் போங்க’ என்று சில நாட்களாய் மகன் சொல்லிப்பார்த்து அடங்கிவிட்டான். சன். டிவியில் வரும் விளம்பரத்தை ஏக்கத்தோடு பார்க்கிறான். கல்லூரி படிக்கும் மகளோ  ‘எந்திரன் படம் சூப்பர் ஹிட்’ என்று வேண்டுமென்றே எஸ்.எம்.எஸ்களை ஃபார்வர்ட் செய்கிறாள். இன்றைய தலைமுறையும் இப்படி இருக்கின்றனரே என்று சங்கடப்பட்டேன். நேற்று தங்கை அம்பிகாவின் மகன் மனோதீப் போன் செய்தான். சென்னையில் பி.இ படித்துக்கொண்டு இருக்கும் ரஜினிகாந்த்தின் தீவீர ரசிகனான அவன் முதல்நாளே படம் பார்த்துவிட்டான். “நிறைய அனிமெஷன். புதுசா ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு செலவுன்னும் தெரியல. ரஜினிக்காகக்கூட பாக்கமுடியாது. வெளம்பரத்துலத்தான் ஓடும்” என்றான். அதுதான் தெரியுமே!

Comments

30 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. // “நிறைய அனிமெஷன். புதுசா ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு செலவுன்னும் தெரியல. ரஜினிக்காகக்கூட பாக்கமுடியாது. வெளம்பரத்துலத்தான் ஓடும்”//

    விளம்பரத்திலே மட்டுமல்ல திரை அரங்கிலும் ஓடும்.. நீங்களும் படம் பார்த்திட்டு விமர்சனம் எழுதினா நல்லா இருக்கும்

    ReplyDelete
  2. "எந்திரனுக்கு கூட்டிட்டுப் போங்க’ என்று சில நாட்களாய் மகன் சொல்லிப்பார்த்து அடங்கிவிட்டான். சன். டிவியில் வரும் விளம்பரத்தை ஏக்கத்தோடு பார்க்கிறான்."

    தயவு செஞ்சு கூட்டிட்டு போங்க. மற்றவர்கள் பார்த்துவிட்டு கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியை அவன் ஒத்த வயதினருடன் பகிர முடியாமல் ஒரு மன அழுத்தம் வந்து விடும். குழந்தைகள் மனதை குழந்தை உள்ளத்தோட தான் பார்க்கணும்.

    ReplyDelete
  3. நசரேயன்!
    ஓடட்டும்....


    சேது!
    நான் பார்க்காவிட்டாலும் நிச்சயம் என மகன் பார்ப்பான். பார்த்து ஒருநாள் தெளிவடைவான்!

    ReplyDelete
  4. முதல் பாதி அருமை... வேகம்.. காமெடி... வசனங்கள் கூர்மை...

    ReplyDelete
  5. சேது!
    நான் பார்க்காவிட்டாலும் நிச்சயம் என மகன் பார்ப்பான். பார்த்து ஒருநாள் தெளிவடைவான்!
    --
    ஏங்க சார் எந்திரன் பார்த்தா குத்தமா :)
    பொழுதுபோக்க சீரியஸா பாக்கறீங்களே சார்.. எல்லாருக்கும் வாழ்கையில் ரெப்ரஷ் செய்யறதுக்கு சில விசயங்கள் தேவையா இருக்கு.. அவ்வளவ்வுதான்...

    ReplyDelete
  6. அசோக்!
    அப்படியா... :-))))



    ராமசாமிக்கண்ணன்!
    பொழுது போக்குவதற்கு இன்னும் அவ்வளவு பஞ்சம் ஏற்படவில்லை. :-)))

    ReplyDelete
  7. நல்ல சிந்தனை மாதவராஜ்...

    ReplyDelete
  8. ரசினியின் ரசிக கண்மணிகளே..
    இதுவரை அம்பிகள்தான் சமூகத்தில் ஆகப்பெரும் கொடுமையை அனுபவிப்பது போலவும், அதற்கு எதிராக அவர்கள் போராட கிளம்பிவிட்டால் நடப்பதே வேறு..யதா யதா ஜி தர்மஸ்ய என்று கிளம்பிவிடுவார்கள் என்பது போல் படம் எடுக்கும் படைப்பாளிகளுக்கு...

    இதுவரை சேரி மக்கள் தெரிந்ததில்லையே...
    முதலாளித்துவ பேயிடம் சிக்கி அல்லல்படும் உழைக்கும் மக்கள் தெரியவில்லையே..

    பொழுபோக்குவதற்கு என்ன சமூகத்திலிருக்கும் பிரச்சினைகளும் தீர்ந்து மக்கள் அத்தனை அமைதியாகவா இருக்கிறார்கள்....?

    இணையத்தில், அமர்ந்து எழுதும் பெரும்பாலானவர்களும் கண்டிப்பாக உழைக்கும் வர்க்கமாகத்தான் இருப்பீர்கள்....உங்கள் மீதான் சுரண்டல் கூட புரியாமல் இந்த மிகமோசமான முதலாளிகளை ஆதரித்து எழுதும்..உங்களை போன்ற அடிமைகளுக்கு நீங்கள் அடிமையென்றே தெரியாததுதான் அவர்களின் படம் ஓட விருப்பப்படும் உளவியல் வெற்றியாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  9. எந்திரன் படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. பெங்களூரில் இருப்பதாலும் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததாலும் பெரிய அளவில் படம் பற்றியான hype தெரியவில்லை.



    மனிதர்கள் எந்திரங்கள் போல மாறியிருப்பதாய் சொல்வதே எனக்கு பெரிய hype என தோன்றுகிறது. கிராமங்களில் விவசாயிகள் முதற்கொண்டு எல்லோருக்குமே ஒரு routine இருக்க தானே செய்கிறது? நம் முன்னோர்கள் காலத்தில் மட்டும் சாதாரண மக்களின் வாழ்கை வேறெப்படி வித்தியாசமாக இருந்திருக்கும் என்று எனக்கு சிந்தனை அகப்படவில்லை. தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

    ReplyDelete
  10. நண்பரே! படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை வெளியிட்டுயிருந்தால் பரவாயில்லை, இப்படத்தை மட்டம் தட்ட வேண்டும் நோக்கிலேயே எழுதியிருகிறீர்கள். இந்தப் படம் பிடிக்கவில்லை என்று ஏற்கனவே பல பதிவுகளில் எழுதியிருந்தீர்கள், மீண்டும் மீண்டும் ஏன் அதை எழுதி கொண்டிருகிறீர்கள் என்று புரியவில்லை. சன் டிவி படம் தயாரித்தது தான் தவறென்றால், அக்குழுமத்தின் அனைத்தும் ஊடகங்களையும் உங்களால் புறகணிக்க முடியுமா? உங்கள் வீட்டிலும் அதுதானே ஓடுகிறது, அதில் மட்டும் என்ன, சமுதாய சீர்திருத்தமா ஓடுகிறது. அப்படியெல்லாம் புறகணிக்க நினைத்தால் நீங்கள் பொதிகை மட்டுமே பார்க்க வேண்டும், முடியுமா?

    சிலர் சினிமாவை ஓர் அறிவு சார்ந்த கலையாகவே அனைவரும் அணுகுவதில்லை, பெரும்பாலனோர் பொழுதுபோக்கிற்கு தான் பார்கிறார்கள். எனக்கு அன்பே சிவமும் பிடிக்கும், அங்காடி தெருவும் பிடிக்கும் எந்திரனும் பிடித்தது. எந்திரன் ஒரு சிறந்த பொழுது போக்கு படம், நீங்கள் பார்க்காவிட்டால் பரவாயில்லை, உங்கள் மகன் அதை பார்ப்பதற்கு அனுமதியுங்கள், அவர் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார் என்பதயும் எழுதுங்கள்.

    அது சரி, இந்த நேரத்தில் இந்தப் பதிவு எதற்கு?

    ReplyDelete
  11. ஒரு நாளில் உள்ள 24 நேரமும் நாம் ஒரே செயல்களை செய்ய முடியாது.மூன்று மணி நேரம் நமக்குப் பிடித்ததை பண்றதிலே தப்பு இல்லைன்னுதான் தோணுது.இந்தப் பதிவு எழுதின நேரத்தில படத்தைப் பார்த்திருந்தா உங்க மனசுல இலேசானாலும் ஆகியிருக்கும்:-)))

    ReplyDelete
  12. // “நிறைய அனிமெஷன். புதுசா ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு செலவுன்னும் தெரியல. ரஜினிக்காகக்கூட பாக்கமுடியாது. வெளம்பரத்துலத்தான் ஓடும்”//

    இதுதான் உண்மை. அதும் போக பால் அபிஷேகம்பண்ணுவது, மண்சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது,இன்னும் என்னன்னவல்லாமோ பண்ணுவதை ஊக்கப்படுத்தி (அது இவர்களே செட்டப் செய்வார்களோ என்னவோ?) விளம்பர படுத்துவது, இவையெல்லாம் பார்க்கும் போது கோபம் கொப்பளிக்கிறது. இவர்கள் சம்பாதிப்பதற்க்காக மக்களை ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.

    ReplyDelete
  13. குலாம்!
    நன்றி.


    மகிழ்நன்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.



    கோகுல் ராஜேஷ்!
    தங்களுக்குப் பிடித்திருப்பது என்பது உங்கள் பார்வையையும், ரசனையையும் சார்ந்தது. நன்று.

    பதிவில் சுட்டிகாட்டிய புதுமைப்பித்தனின் மெஷின் யுகம் படித்துப்பாருங்களேன். இன்னிம் கொஞ்சம் நாம் விரிவாகப் பேச முடியும்.

    ReplyDelete
  14. அண்ணாமலைச்சாமி!

    புதுமைப்பித்தனின் மெஷின் யுகம் தந்த சிந்தனைகளில் எழுத ஆரம்பித்த பதிவு, எந்திரனில் வந்து நின்றது.

    நான் படத்தைப் பற்றி எங்கும் பேசவில்லை. படம் எப்படி பேசப்படுகிறது என்பது குறித்துப் பேசி இருக்கிறேன். அதையும் படம் பார்த்துவிட்டுத்தான் பேச வேண்டுமா?

    தமிழில் எத்தனையோ எண்டர்டெய்னர் என்ற பேரில் தத்துப்பித்துப் படங்கள் வரத்தான் செய்கின்றன. அதுகுறித்தெல்லாம் நான் பேசுவதேயில்லை. அங்காடித்தெரு, வெண்ணிலா கபடிக்குழு போன்ற நல்ல படங்களை பற்றி மட்டுமே பேசுவேன். அது என் ரசனையும், பார்வையும், விருப்பமும் சார்ந்தது. ஆனால், எந்திரனுக்கு கொடுக்கப்படும், முக்கியத்துவத்தில், அதிகாரத்தின் அரசியலும், ரசிகமனதை சீரழிக்கும் வியாபாரத் தந்திரங்களும் மிதமிஞ்சி இருக்கின்றன. அப்படித்தான் எனக்குப் படுகிறது, புரிகிறது. எத்தனைப் படத்திற்கு ஒரு மாநில முதல்வர் வந்து, பாராட்டி பேசுகிறார்? இதையெல்லாம் குறித்து நான் நிச்சயம் யோசிப்பேன். பேசுவேன்.

    எந்திரன் பற்றி இது இரண்டாவது பதிவு. ஆனால் மீண்டும், மீண்டும் பேசத்தான் செய்வேன்.

    சினிமாவை பொழுதுபோக்காகவும் பார்க்க முடிகிற நீங்கள் பாக்கியவான். நான் அபாக்கியவானாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.


    மோகன்!
    இந்தப் பதிவே என்னை இலேசாக்கி விட்டிருக்கிறது.

    ReplyDelete
  15. மைதீன்!
    //அதும் போக பால் அபிஷேகம்பண்ணுவது, மண்சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது,இன்னும் என்னன்னவல்லாமோ பண்ணுவதை //

    இதுவெல்லாம் கூட பொழுதுபோக்காகவும் அல்லது பொழுது போக்கிறகாகச் செய்கிற காரியமாகவும் அறியப்படும் போலும்

    ReplyDelete
  16. நம்பிக்கை (1)
    மிகுந்த, நீண்ட நம்பிக்கை அடிப்படையில் இன்று நம் "இந்திய" வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. போன வாரம் வரை காமன்வெல்த் விளையாட்டுகள் பற்றிய கொள்ளை, லஞ்சம், சுருட்டல், ஊழல் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் எல்லாம் ஐந்து நாட்களில் சரியாகிவிட்டது. (நான் நம்பிட்டேன் நீங்களும் நம்பிருங்க)

    எல்லோரும் மிகவும் பாராட்டும்படியாக கோலாகலமாக துவங்கிவிட்டது. எனவே மக்கள் எல்லோரும் பழையவற்றை மறந்து இந்தியாவின் பெருமைக்காக பாடுபட வேண்டும் என்ற கூற்றே ஒலித்து கொண்டே இருக்கிறது.

    நம்பிக்கை-(2)

    அயோத்தி விவகாரத்தை எடுத்து கொண்டால் இந்து மக்களின் நம்பிக்கை அடிப்படையில் இராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்று நீதிபதிகளே தீர்ப்பு வழங்கிவிட்டனர் (இவர்கள் நம்மூர்ல நாட்டாமைகளாக இருந்து நீதிபதிகளாகிவிட்டார்களோ). நீண்ட கால நம்பிக்கை மட்டும் இருந்தா போதும் உங்களால இந்த உலகத்தையே ஜெயிக்க முடியும்.

    நம்பிக்கை-(3)

    என் இனிய இரசிக பெருமக்களே, என் மகளின் திருமணத்திற்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் இட பற்றாக்குறை காரணத்தால் உங்களை அழைக்க முடியவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது. என்ன செய்ய சூழ்நிலை அப்படி. இரசிக பெருமக்களுக்கு கோபம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். உடனே என் இனிய இரசிக பெருமக்களே, உங்களுக்கு தனியாக விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்துவிடுங்கள். மணமக்களை அறிமுகப்படுத்திவிடலாம்.

    எதற்கு இப்படி முன்னால் ஒன்று பின்னால் ஒன்று சொல்ல வேண்டும் எல்லாம் நம்பிக்கை தான். எந்திரன் திரைக்கதை, வசனம், டைரக்ஷன், இசை, எடிட்டிங், நடனம், காஸ்ட்யூம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வெளியீடு கடைசியில் முழுப் படமும் வெளியிடப்பட்டுவிட்டது.

    நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். இரசிகன் வருவான் பட்டாசு போடுவான், பாலபிஷேகம் செய்வான். ஏனென்றால், ரஜினிகாந்த என்பவர் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். (எந்திரன் படத்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை)

    பகுத்தறிவற்று இதுபோன்ற நாகரீகம் அடைந்து என்ன பயன்?

    ஏன் இன்று நானும் கூட எந்திரன் படத்தை பார்க்காததால் இந்த சமுதாயத்தால் பைத்தியகாரனாக, குற்றவாளியாக, எதிரியாக தான் பார்க்கப்படுகிறேன். அதற்கெல்லாம் வருத்தப்பட்டால், கோபப்பட்டால் வாழ முடியுமா.

    மாதவராஜ் அண்ணா, நீங்கள் கோடியில் ஒருவருக்கு இந்த கட்டுரையை எழுதுகிறீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன்.

    ReplyDelete
  17. நல்ல சிந்தனை.

    unmaiyana vimarsanam anna...

    ReplyDelete
  18. பணம் பண்ணத் தெரிந்த விதைக்காரர்
    களிடம் நல்ல படத்தை எதிர்பார்ப்பது
    தவறுதான்.

    ReplyDelete
  19. i saw it.its very boring.no intellectual work.any way they gave some new plateform to tamil industry in the way of marketing.thats it

    ReplyDelete
  20. i saw it. its very boring.u r corrct sir.any way they opening some good marketing tactice to tamil industry.lets welcome.

    ReplyDelete
  21. என்னோட பின்னூட்டத்திலே கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்க்ரா ஒரு பீலிங் எனக்கு. உங்கள தவறா புரிந்ததற்கு மன்னிக்கவும். சில சமயம் தந்தை சொல்லும் நல்ல விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வளர வளரத் தான் தெரியும். நாம் பலரும் பல விதத்திலே ஏமாற்றப் படுகிறோம். ஆனால் அதை நீங்கள் முன்கூட்டியே வெளிபடுத்தியது எனக்கு தவறாகத் தோன்ற வில்லை. ஆனால் புரியாத உள்ளத்திடம் கொஞ்சம் கடுமையாக சொல்லிவிட்டேர்களோ என்ற ஐய்யப்பாடோடு தான் தெரிவித்தேன்.

    எனக்கு கூட ஒரு நல்ல பதிவை எந்திரனோட முடிச்சு போடாமலோ, ஏற்கனவே சொன்ன மாதிரி, சொந்த விஷயங்களை கொஞ்சம் பகிரங்கமாக பகிர்ந்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. அல்லது வேறு விதமாகச் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறன். 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்று அறிவோம். எந்திரனை அல்லது இந்திரனை எதிர்ப்பதால் மாதவராஜ் குறைந்துவிடப் போவதில்லை. You are not alone.

    Just wanted to give you a moral boost. People are different and will see them in different perspective. Nothing wrong to heed their views.

    ReplyDelete
  22. ஃபெலிக்ஸ்!
    ஆமாங்க. அவர்களின் நம்பிக்கைதான் இங்கு செல்லுபடியாகிறது. சாதாரண மக்களின் நம்பிக்கைகள் தகர்கின்றன, தகர்க்கப்படுகின்றன.இது அவர்களின் காலம்.

    உங்கள் பகிர்வில் நெருக்கத்தை உணர்ந்தேன். நன்றி.


    சே.குமார்!
    மிக்க நன்றி, தம்பி.



    விமலன்!
    இது விஞ்ஞானம். சமூக விஞ்ஞானம். இதைப் பேசினால்தான் பலருக்கும் கோபம் வருகிறது தோழனே!



    சிங்கம்!
    இதுபோன்ற மார்க்கெட்டிங்க் டெக்னிக்கை எப்படி வரவேற்க முடியும். மார்க்கெட்டின் பண்ண முடியாத நல்ல படங்களின் நிலைமை என்னவாகும்?


    சேது!
    நிச்சயமாய் நீங்கள் ஒன்றும் ஓவர் ரியாகட் செய்யவில்லை. நிஜமாகவே அக்கறை கொண்ட ஒரு பிரியமான மனிதரின் குரலாகவே இருந்தது. நான் இதுபோன்ற படங்கள் பார்ப்பதில்லை. வீட்டில் குழந்தைகள் டிவிடியிலோ, தியேட்டரிலோ பார்த்து விடுவார்கள். அப்படி ஏங்கவைத்துவிட மாட்டேன். சிவாஜிக்கும் இதுதான் நேர்ந்தது.

    நான் சொல்ல வந்தது, குழந்தை மனங்களில் எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறார்கள் என்பதையே.

    நீங்கள் எல்லாம் இருக்கும்போது, நான் எப்படித் தனித்து இருப்பேன்.

    நன்றி.

    ReplyDelete
  23. நீண்ட நாட்களுக்கு பிறகு அழைத்த நண்பன் எப்படி இருக்கணு ஒரு வார்த்தை கேட்கவில்லை, இந்திரன் பாத்திடியானு கேட்கிறான், இந்த ஜென்மங்களை என்ன செய்யிறது???

    ReplyDelete
  24. //Blogger மகிழ்நன் said...

    இணையத்தில், அமர்ந்து எழுதும் பெரும்பாலானவர்களும் கண்டிப்பாக உழைக்கும் வர்க்கமாகத்தான் இருப்பீர்கள்....உங்கள் மீதான் சுரண்டல் கூட புரியாமல் இந்த மிகமோசமான முதலாளிகளை ஆதரித்து எழுதும்..உங்களை போன்ற அடிமைகளுக்கு நீங்கள் அடிமையென்றே தெரியாததுதான் அவர்களின் படம் ஓட விருப்பப்படும் உளவியல் வெற்றியாகவும் இருக்கிறது.//

    100 % உண்மை.
    நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்தும் வேலை.
    அது எந்திரன் விசயத்தில் நன்றாகவே தெளிவாகிறது.
    தமிழா......
    இனியாவது வ்ழித்துகொள்.

    ReplyDelete
  25. படித்தவர்கள் எல்லாம் பகுத்தறிவுடன் யோசிப்பார்கள் என்று நினைப்பது மகா தப்பு.

    மாற்றம் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் பகுத்தறிவு கொண்டவன் சமுக அவலத்தை தட்டி கேட்பது அவனது தார்மீக பொறுப்பு.

    உங்களை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்

    ReplyDelete
  26. சிறுகதைகள் படித்தேன். எதார்த்தமான உண்மைகள்.

    கூறப்பட்டிருக்கும் உதாரணங்கள் majority பற்றிய கதைகள் அல்லவே, சில exceptions தானே. நானும் தினசரி hotel-களில் தான் உண்கிறேன். நான் பழகும் ஒரு bearer கூட இந்த கதையில் வருவது போன்றவர்கள் கிடையாது.

    நான் பொய் என்று சொல்லவில்லை hype என்று தான் சொன்னேன்.

    ReplyDelete
  27. neengal unga maganayum magalayum padathai paarka vidamal thadupathu sariyaga thonavilai.
    ungal kolkaigalai ungal kuzhandhai meethu thinika vendaam. avargalagave theriyum pothu maaratum. idhu ennudaya karuthu.

    ReplyDelete
  28. தோமா!
    அப்படி ஒரு நெருக்கடிக்குள் நம்மை தள்ளியிருக்கிறார்கள். இது எந்திரனுக்கு மட்டுமல்ல, பொதுவாகவே.


    இசைப்பிரியன்!
    சரியே. பகிர்வுக்கும், வருகைக்கும் நன்றி.


    itsmeena!
    ஆதரவுக்கு நன்றிங்க.


    கோகுல்!
    இதில் எங்கே மெஜாரிட்டி வந்தது?

    நம் எல்லோருக்குள்ளும், ஒரு யந்திரத்தனம் ஊடுருவிக்கொண்டு இருக்கிறது என்கிறேன். எப்போதுமில்லாத அளவுக்கு மனித உறவுகள் சிதைலமடைந்து கொண்டு இருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா உங்களுக்கு. இதனையும் hype என்றுதான் சொல்வீர்களா?

    ReplyDelete
  29. கலீல்!

    தயவு செய்து பின்னூட்டங்களையும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

    அப்படி இறுகிப்போன மனிதன் நான் இல்லை. அது என் குழந்தைகளுக்குத் தெரியும்.

    இதோ, இன்று என் மகள் எந்திரன் பார்த்துவிட்டு போன் செய்தாள். “தியேட்டரில் கூட்டத்தோடு பார்க்கும்போது இருந்த உணர்வு வெளியே வரும்போது இல்லை. ஒரு காட்சி கூட நினைவில் இருக்க மாட்டேங்குது” என்று சொல்லி சிரித்தாள்.

    ReplyDelete
  30. Thought of watching the film. But seeing the crowd and the ticket price made me to wait. Either the price will come down or a good quality video will be uploaded in web.

    All I guess is it is hollywood kind of animation movie dubbed in Tamil. I see no reason to pay so much for that.

    ReplyDelete

You can comment here