நமது பா.ராவின் மகள் திருமணம்!

maha 01 
maha 03 

நம் மக்கள்


001

010

பா.ரா, மணமக்கள், கடைசியாக இருப்பவர் கும்க்கி


012 

மணமக்களோடு அடியேன்


04 

சிவாஜி சங்கர் போட்டோ எடுக்கிறார், கும்க்கி, மணிஜீ, ராஜசுந்தராஜன்,நம்து பா.ரா, சரவனக்குமார்


002

அக்பர்


01

ராஜசுந்தரராஜன், நான், மணிஜீ


02

மணிஜீயும் மற்ற பதிவர்களும்


05

அகநாழிகை பொன்.வாசுதேவன்

06

ஜெரி ஈசானந்தா


Photo-0026
சரவணக்குமார்


07

காமராஜ், கும்க்கி


018

நமது பா.ரா

“சைக்கிள் ஹேண்டில் பாரில் கூடை சேரை மாட்டி, அதில் இருத்தி, மதர் தெரசா பள்ளிக்கு அழைத்துப் போன மகாதான் நினைவில் நிற்கிறாள். எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது.” தன் மகள் மகாலட்சுமியின் திருமணத்திற்கான அழைப்பை நம் பதிவர் பா.ரா சொல்ல ஆரம்பித்திருந்த இந்த வரிகளில் காலம், அன்பு, உறவு, வாழ்க்கை என்னும் பெரும் வார்த்தைகளெல்லாம் அலைவீசிக் கிடந்தன. எங்கோ இருக்கிற ஒரு முகம் காணா மனிதன் எப்படி இத்தனை எளிய முறையில் தன்னை அறிய வைக்கவும், அறிந்து தோளில் கை போடவும் கூடுகிறது! ‘பதிவர்’, ‘பா.ராஜாராம்’ என்று உச்சரிப்புகளெல்லாம் கூட மிகுந்த சம்பிரதாயமானவையாக உணர வைப்பதொன்றும் அத்தனை எளிதல்ல. எழுத்துக்களின் வழியே தன் அன்பையும், இதயத்தின் துடிப்பையும் காட்டிவிட பிரயத்தனப்படுபவர்களுக்கு சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது.

 

அதுதான் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு சிறுகிராமத்தில் நடந்த அவரது மகளின் திருமணத்திற்கு சென்னையிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும், கிருஷ்ணகிரியிலிருந்தும், மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும், சாத்தூரிலிருந்தும் பதிவுலக நண்பர்களை வரவழைத்திருக்கிறது.
“மாது மக்கா, மகா கல்யாணம். கண்டிப்பா வந்துரணும்” என்று உரிமையோடு போனிலும் அழைத்திருந்தார் பா.ரா. “அண்ணா, முதல் நாளே வந்துருங்க. சிவகங்கையில் ரூம் போட்டு வச்சிருக்கோம்” என இரண்டு நாட்களுக்கு முன்பே சிவகங்கை சென்று பா.ராவுடன் கூடமாட இருந்த பதிவர் சரவணக்குமார் அறிவித்து விட்டார். “தோழர்! பா.ரா மகள் திருமணத்திற்கு வரூவீங்கதானே” என கும்க்கி முந்தின நாள் பேசினார். போகவேண்டும் எனற ஆசையும், ஆவலும் இருந்த போதும் சில சிரமங்களும் இருந்தன. அதே செப்டம்பர் 21ம் தேதிதான் தேவகோட்டையில் எங்கள் சங்கத் தோழர் ஒருவர், அவரது புதுவீட்டில் பால் காய்ப்பதாக அழைத்திருந்தார். அதேநாளில்தான் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் மகளின் திருமணம் ராஜபாளையத்தில். வீட்டிற்கு வந்து பத்திரிகை வைத்திருந்தார். கல்லூரியிலிருந்து நான்கைந்து நாட்கள் லீவில் செப்டம்பர் 20ம்தேதி வந்திருந்த என் மகள் “என்னப்பா, இன்றுதான் வந்திருக்கிறேன். அதுக்குள்ளே கிளம்பணுமா” என்று செல்லமாய் சிணுங்கினாள். மௌனங்களாலும், சிறு புன்னகையாலும் கடந்தபடி கிளம்பினேன். முதல்நாள் காரைக்குடியில் தங்கி, விடிகாலையில் தேவகோட்டையில் சங்கத்தோழரின் புதுவீட்டிற்குச் சென்று, அப்படியே சிவகங்கை போய் பா.ராவின் மகள் திருமணத்தில் செல்வதென வரைபடம் வைத்திருந்தேன். மேலாண்மை பொன்னுச்சாமியை பிறகு பார்க்கும்போது சொல்லிக்கொள்ளலாம். மகளொன்றும் வருத்தப்பட மாட்டாள். பா.ராவின் முகம் பார்க்க வேண்டும் முதலில்.

 

சிவகங்கையிலிருந்து, திருப்பத்தூர் செல்லும் வழியில் இருந்த சோழபுரம் எனும் அந்த சிறிய ஊரில் மணமகன் வீட்டில் திருமணம். மெயின் ரோட்டை ஓட்டியிருந்த கல்யாணப்பந்தலும், மணமகள் பேரில் ‘மகாலட்சுமி’ என்றிருந்ததும் ‘இங்குதான்’ என உறுதிகொள்ள வைத்தது. கும்க்கி என்னை அடையாளம் கண்டு வாசலுக்கு வந்து வரவேற்கவும், அகநாழிகை பொன்.வாசுதேவன், மணிஜி, ஜெரி ஈசானந்தா, சிவாஜி சங்கர், அக்பர் என ஒவ்வொருவராய் அருகில் வந்து பிரியத்தோடு அறிமுகம் செய்து கொண்டார்கள். பத்மா அவர்கள் வந்திருப்பதாய்ச் சொன்னார்கள். அவர்களிடம் சில வார்த்தைகள் பேசுவதற்குள் ராஜசுந்தரராஜன் அவர்களைப் பார்த்தேன். அருகில் போய்  அறிமுகம் செய்துகொண்டேன். இன்னும் சில நண்பர்கள் வந்து பேசினார்கள். கல்யாணப்பந்தலில் இருக்கும் இயல்பான சத்தங்களில் சரியாகக் கேட்க முடியவில்லை. திருமணம் முடிந்து, மணமக்கள் மேடையில் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு இருந்தனர். மதுரையிலிருந்து கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர், மதுரை சரவணன் ஆகியோர் வந்துவிட்டுச் சென்றதாய் சொன்னார்கள். கலகலப்புக்கும் பரபரப்புக்கும் மத்தியிலும் எனக்குத் தோன்றியது இதுதான். ‘இவர்களுக்கும் என்னைப் போலவே, அவரவர்க்கென்ற பணிகளும், சிரமங்களும் இருக்கத்தானே செய்திருக்கும். அவைகளையெல்லாம் விட்டுத்தானே இங்கு வந்து கூடி நிற்கின்றனர்’. இதற்கெல்லாம் ஆதாரசுருதியான முகம் காண ஆவலாயிருந்தேன்.

 

பட்டு வேட்டிச் சட்டையில் அங்குமிங்குமாய் இருந்த மனிதரிடம் சென்று கும்க்கி பேசினார். சட்டென்று திரும்பியவர், “மாது மக்கா” எனக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “ரொம்ப சந்தோஷம் மக்கா” என சிரித்தார். வாழ்வின் மெல்லிய இழைகளை, புதிர்களின் அழகை, கடந்த காலத்தின் வெளியை எல்லாம் எழுதி எழுதித் தந்திருந்த அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். லௌகீக வாழ்வை சுமந்த பறவையாய் படபடத்துக்கொண்டிருந்தார். தன் துணைவியாரை அறிமுகப்படுத்தினார். “வாங்க மக்கா” என மணமேடைக்கு அழைத்துச் சென்றார்.  மகாவிடம் “மாதவராஜ்” என கைகாட்டினார். முகமெல்லாம் மலர்ந்து “வாங்க” என சிரித்தாள். தன் உலகத்தை இந்த மனிதர் தன் குழந்தைக்கு எப்படி ஊட்டியிருக்கிறார் என்பதை அறிய அந்தச் சிறுகணமே போதும். மணமக்களை வாழ்த்தி இறங்கிய போது பெரும் நிறைவிலும் சந்தோஷத்திலும் திளைத்திருந்தேன்.

 

மண்டபங்களில் திருமணங்களைப் பார்த்து பார்த்து பழகிப்போயிருந்த இந்த நாளில், அந்தப் பந்தலும், “கல்யாண வளையோசை கேட்டு” என்னும் பழைய பாடலும், சூழ்ந்திருந்த கிராமத்து மக்களும் ஆசுவாசமாயிருந்தனர். சரவணக்குமார் வாசலில் உட்கார்ந்து மொய் எழுதிக்கொண்டு இருந்தார். மணிஜி, கும்க்கி, அக்பர், சிவாஜி சங்கர், பொன்.வாசுதேவன், ராஜசுந்தரராஜன் ஆகியோருடன் வெளியே சென்று பேசிக்கொண்டு இருந்தோம். கேலி, கிண்டல், சிரிப்பு என கடந்த பேச்சுக்களின் ஊடே பா.ரா வந்து போய்க்கொண்டே இருந்தார். பா.ராவின் கவிதைகள் ஆனந்தவிகடனில் வரத் துவங்கியது, அவரது முதல் கவிதைத் தொகுதி வந்தது குறித்தெல்லாம் பொன்.வாசுதேவன் பகிர்ந்து கொண்டிருந்தார். ஜெரி ஈசானந்தாவின் விருந்தோமபலை வியந்தும், உற்சாகப்படுத்தியும் பேசினார். காமராஜும் சாத்த்தூரிலிருந்து வந்துவிட்டிருந்தான். நேரம் போவதே தெரியாமல் இருந்தவர்களுக்கு மதிய உணவுக்கான அழைப்பு வந்தது. எனக்குப் பாயாசம் ரொம்பப் பிடித்திருந்தது. மனநிலையை உணவும் பிரதிபலிக்கத்தானே செய்கிறது.

 

பா.ராவும், மகாவும் உறவினர்களோடு பேசிக்கொண்டு இருந்தனர். பந்தலுக்கு வெளியே, ரோட்டுக்கு எதிர்புறம் விரிந்து கிடந்த புல்வெளியில் உட்கர்ந்து மறுபடியும் பேசிக்கொண்டு இருந்தோம். வெயில் இல்லை. சிறிது நேரத்தில் வேன் ஒன்றில் சிவகங்கை வந்து, நண்பர்கள் ஏற்கனவே தங்கியிருந்த ரூம்களுக்கு வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட அனைவரும் தூங்கிப் போயிருக்க, நானும் கும்க்கியும் பேசிக்கொண்டு இருந்தோம். இடையிடையே சரவணமாரும், சிவாஜி சங்கரும் வந்து பேசினர். அக்பர் விடைபெற்றுக்கொண்டார். பின் ஒவ்வொருவராக எழுந்து வந்து, ஊர் செல்லத் தயாராகினர். மணமகள் வீட்டிலிருந்து திரும்பவும், மணமகன் வீட்டிற்கு மகாவை அனுப்பி வைத்துவிட்டு பா.ரா வந்தார். சென்னை மக்கள் பொன்.வாசுதேவன், ராஜசுந்தரராஜன், மணிஜீ கிளம்பினர். அவர்களோடு லீவு முடிந்து சவுதிக்குச் செல்லத் தயாராக நின்றார் சரவணக்குமார். “அண்ணா, சந்திப்போம்” என அவர் சொன்னபோது வலித்தது. இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு சனிக்கிழமை சாத்தூருக்கு அவர் வந்து ஐந்தாறு மணி நேரத்துக்கும் மேலே என்னோடு பேசியிருந்ததெல்லாம் நிழலாடியது. அன்று நானும் அவரும் மழையில் நன்றாக நனைந்து போயிருந்தோம். “இனும எப்ப பாக்கலாம் தம்பி,” என்றேன். “அடுத்த வருஷம்ணே” எனச் சொல்லி நடந்துகொண்டிருந்தார். தொலை தேசங்களில் பணிபுரியும் இம்மனிதர்கள் எவற்றையெல்லாம் இங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள்...

 

இறுதியாக கும்க்கியும், காமராஜூம், நானும் கிளம்பத் தயாரானோம். “மக்கா, இருங்க மக்கா, பேசிக்கொண்டு இருப்போம் மக்கா” என பா.ரா விடமாட்டேன் என்றார். அவர்களிருவரும் தாங்கள் கண்டிப்பாய் போக வேண்டியிருப்பதைச் சொல்ல, நான் “இருக்கேன் மக்கா” என்றேன். கையைப் பிடித்துக்கொண்டார். அவரது கை அப்படி ஒரு மிருதுவாக இருந்தது. சொன்னேன். காமராஜையும், கும்க்கியையும் அனுப்பிவிட்டு, சில வேலைகள் இருப்பதாகவும், முடித்துவிட்டு வருவதாகவும் சென்றார் பா.ரா. தனியாகவும், அமைதியாகவும் போன அந்த அறையின் மூச்சை நான் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன். அன்றைய நாளின் ஒவ்வொரு கணமும் அசைந்தாடிக்கொண்டு இருந்தது. யார் இவர்கள், எங்கு சந்தித்தோம், என்ன உறவு, குரல் என்பது என்ன, எழுத்து என்பது என்ன, முகம் என்பது என்ன என்றெல்லாம் தோன்றிக்கொண்டு இருந்தது.

 

“என்ன மக்கா” என்று பா.ரா வந்தார். “நா கற்பன செஞ்சு வச்ச மக்கா நீங்க இல்ல, உங்க எழுத்தில் நான் வேறொருத்தரை வச்சிருந்தேன்” என்றார். இதேயேதான் எனக்கும் சொல்லத் தோன்றியது. நான் கறபனை செய்து வைத்த உருவம் அவரும் இல்லைதான். பேசிக்கொண்டே இருந்தோம். மகாவின் திருமணம், குடும்பச் சிரமங்கள், மகாவின் அன்பு என அவர் பேசப் பேச ஒரு கணத்தில் உணர்ந்தேன், நான் மனதில் வைத்திருந்த பா.ராவும் இவரும் ஒன்றுதான் என்பதை. எழுத்து, முகம் குறித்த மர்மங்கள் உடைந்து போயிருந்தது. நான்கைந்து நாட்களான வேலையும், தூக்கமும் அவர் கண்களில் தெரிந்தது. என் மீது வைத்திருந்த அன்பில் தன் களைப்பைத் துடைக்க சிரமப்பட்டார். “மக்கா, கடைசி பஸ்ஸில் கிளம்புறேன்” என சட்டென்று விடைபெற்றேன். “என்ன மக்கா” என்றார். “நல்லா ரெஸ்ட் எடுங்க. சந்திப்போம்.” என்றேன். பஸ் ஏற்றி அனுப்பி வைத்து டாடா சொல்லும் போது அந்த இருளில் பா.ராவின் உருவம் தெளிவாகத் தெரிந்தது.

 

வீட்டிற்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தேன். தூங்கிக்கொண்டு இருந்த என் மகளைப் பார்த்தேன். காலம் எவ்வளவு வேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது. மகா நினைவுக்கு வந்தாள். பா.ரா நினைவுக்கு வந்தார். முகம் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார். “ரொம்ப நிறைவா இருக்கேன் மக்கா இன்றைக்கு, இனி மகாவின் வாழ்க்கைதான். அவ நல்லாயிருக்கணும். சந்தோஷமாயிருக்கணும்” என்று அவர் என்னோடு பேசிக்கொண்டு இருந்தார்.

 

சந்தோஷமாயிருப்பாள் மகா! நம் அனைவரின் அன்பிலும், வாழ்த்திலும் நிறைவாயிருப்பாள்.

 

*

திருமண நிகழ்வின் போட்டோக்களை கும்க்கியும், சிவாஜி சங்கரும் அனுப்பி வைத்திருந்தனர். அவர்களுக்கு நன்றி. கும்க்கி அந்த மெயிலில் இப்படிக் குறிப்பிட்டு இருந்தார்:

“எழுத்துக்கும், பேச்சுக்கும்,செயலுக்கும் எந்தவொரு துளி வித்தியாசமும் காணக்கிடைக்காத பா.ரா வின் அன்பிற்கு நன்றி சொல்வதில் உடன்பாடில்லை...ஈடாக என்ன செய்துவிட முடியும் என மலைப்பாக இருக்கிறது.

“வாடா மாப்ள., மகா கல்யாணத்துக்கு நேரத்தோட வந்துருடா. சாபிட்டியாடா., சரக்கு ஏதாச்சும் போடுறியா மாப்ள” என்று அவசரமாக பர்சை எடுக்கும் பாராவின் குரலும், “நீங்க சொல்லனுமா மாமா, விடியகாலையில மொத ஆளா நிப்பேன் மாமா எல்லாம் சாப்டாச்சு மாமா நீங்க ஆகவேண்டியத பாருங்க” என்று பதிலிருக்கும் சொந்தங்களின் குரலும் இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

அவசர நொடிகளில் தத்தமது காரியங்களுக்காக எதைக்குறித்தும் சிந்திக்க திராணியற்று ரிலே ரேஸ் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களையே பார்த்து பார்த்து அலுத்துப்போன என்னைப்போன்ற நபர்களுக்கு பார்க்கிற இடத்திலெல்லாம் அன்பால் நனைக்கிற பா.ரா போன்ற மனிதர்களால் நிரம்பியிருக்கிற ஊரில் ஏதேனுமொரு சொந்தமாக பிறக்காமல் போய்விட்டோமோ என ஏக்கமாகத்தான் இருக்கிறது.”

ஆம் கும்க்கி, பா.ரா போன்ற மனிதர்களால்தான் இப்படியான ஏக்கங்களைத் தரமுடியும்!

*

கருத்துகள்

47 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல பகிர்வு சார். மணவிழாவை நேரில் பார்த்தது போன்ற நிறைவை தந்தது இந்த பதிவு.. மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு
  2. திருமண நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தியும், நல்ல மனித நேயம் உடையவர்கள் என்பதையும் அழகாக படம் பிடித்து காட்டிவிடீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மணமக்களுக்கு வாழ்த்துகள்

    ***

    நல்ல கட்டுரை!

    கல்யாணத்துக்கு போனோம், சாப்பிட்டோம், பேசினோம் என்று வழமையான முறையில் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது!

    பதிலளிநீக்கு
  4. மண மக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    உங்களுக்கு, பதிவுலக நண்பர்களுக்கும், பா ரா விற்கும் மிகுந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. மகிழ்வான தருணங்களை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள்.. பா.ரா. அண்ணனுக்கும், தம்பதியினருக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. முதலில் மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.

    படிக்கும் போதே கூட வந்த ஒரு சந்தோசத்தை ஏற்படுத்திய ஒரு பதிவு. மிக்க சந்தோசம். அப்பிடியே போட்டோவில் இருப்பவர்கள் யார் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். முன்பின் அறியாதவர்களிடம் ஏற்படும் சினேஹம் சில சமயம் மெய்சிலிர்க்கச் செய்யும்.

    பதிலளிநீக்கு
  7. சித்தப்பு பாராவின் மகள் மற்றும் மருமகனுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் மணமக்களுக்கு..

    பதிலளிநீக்கு
  9. நேர்ல பார்த்த உணர்வு..நன்றி பகிர்விற்கு..

    பதிலளிநீக்கு
  10. அழகா எழுதிருக்கீங்க சார் ..என்னை தெரியவில்லை என்று நினைத்தேன் ..அன்பில் மூழ்கிய நாள் தான் அது ...

    பதிலளிநீக்கு
  11. மாதவ் அண்ணாச்சி நலமா?உங்களைப்பாத்தது..பழகியது..இதற்கு முன் பார்த்திராத மற்ற நண்பர்கள் காமராஜ் அண்ணாச்சி,கும்கி,சிவாஜி,ராஜ சுந்தர் ராஜன்,தம்பி அக்பர்,வெற்றிவேல்,சரவணக்குமார்,பத்மா இப்படி எல்லோருடனும் பழக வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த மகாவின் திருமணம் வாழ்வில் மறக்கமுடியாத நாள்,நான் இன்னும் அந்த சந்தோஷ தருணங்களில் இருந்து இன்னும் மீளவில்லை.இனி...நாளும் அன்பில் தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  12. நேரில் கண்ட திருப்தி. மணமக்களுக்கு வாழ்த்துகள். பாரா வுக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பகிர்விற்கு நன்றி. மணம(க்)களுக்கு வாழ்த்துக்கள்.பாராவுக்கு அன்பு.

    பதிலளிநீக்கு
  14. இத்தனை பேர் கலந்து கொண்டு அதனை எழுத்திலும் காட்டிய மாது சாருக்கு நன்றி. மனதுக்கு நிறைவாய் இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. ம்ம்ம்...இந்த அன்பையெல்ல்லாம் சேர்த்துக் கொள்ள..சேமித்துக் கொள்ள உங்களுக்கெல்லாம் கொடுப்பினை!!!!பூங்கொத்து மணமக்களுக்கு!

    பதிலளிநீக்கு
  16. திருமணத்தில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது உங்கள் இடுகை. மணமக்களுக்கு எனது மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்! உங்கள் இடுகைக்கு நன்றி.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  17. ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள், ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா, பாரா அண்ணாவுக்கும் மணமக்களுக்கும் என் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. பகிர்வுக்கு நன்றி மாதவ்அண்ணாச்சி...

    பதிலளிநீக்கு
  19. பா.ரா. இதற்குமுன் வெளிப்பட்டுவிட்ட தன் 'இளமைக்கால கோட், டை படம்' தந்த தோற்றமே எல்லார் மனசிலும் இருக்கட்டும் என்றோ என்னவோ, தன் இப்போதையப் படத்தை யாரும் பதிவில் இடவேண்டாம் என்று உங்களிடம் சொல்ல மறந்துவிட்டாரா? ஆனால் இந்தப் படங்களிலும் அவர் நல்லாத்தான் இருக்கிறார்.

    இவ்வளவு விரைவாக விளக்கமாக உணர்வுநெருக்கமாகப் பதிவு போட்டது கண்டு மகிழ்ந்தேன்; பாராட்டுகிறேன்.

    (பின்னூட்டம் போட்டுவிட்டேன், அப்பாடா!)

    பதிலளிநீக்கு
  20. உணர்வு பெருக்கோடு படித்தேன்.

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. அன்பு மற்றும் உறவின் ஆழத்தை
    காண முடிந்தது.வலைப்பதிவர் உலகம்
    சில சமயம் நம் இனிய அடையாளங்களை படம் பிடித்துக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி.

    பா.ரா அவர்களின் பதிவை இதுவரை நான் படிக்கவில்லை.இனி படிக்கப்போகிறேன்.

    நன்றி,மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  22. அன்பின் மாதவராஜ்

    மிக அருமையான பதிவு.

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. மாது.....ஒரு ரிவைண்ட் செய்து பார்த்தது போல் இருந்தது...என் வாழ்நாளில் மறக்க முடியாத “விசேஷமான” சந்திப்பு அது...

    பதிலளிநீக்கு
  24. வணக்கமும் நன்றியும் தோழர்...
    இத்தனை உறவுகளை பெற்ற மகிழ்ச்சி என் வாழ்நாள் சந்தோசம்.
    கருவேல நிழலில் எத்தனை பறவைகள்..
    ராஜ சுந்தர் ராஜன் அய்யா, வாசு சார், யூத் மணிஜி, காமராஜ் அண்ணாச்சி,கும்கி அண்ணா, அக்பர் அண்ணா ,வெற்றிவேல் அண்ணா ,சரவணக்குமார் அண்ணா,ஜெரி அண்ணா, பத்மா அக்கா அனைவருக்கும் என் அன்பு..!

    பதிலளிநீக்கு
  25. அழகாக தொகுத்திருக்கிறீர்கள் தோழர்.

    'மக்கா' என்ற குரல் கேட்டு கிளம்பி வர ஆசையோடு இருந்தேன்.
    நண்பர்களை சந்திக்கலாமென்று.
    வேலை, இடையில் வெட்டி விட்டது.
    நல்ல வாய்ப்பை இழந்ததாகவே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரவில்லையென்றாலும் அனைத்தையும் கூடமாட நின்று பார்த்ததுபோல் உணர்ந்தேன்.

    மகா..மகா என்றுருகும் பா.ரா.,மகளை புகுந்தவீடு அனுப்பிவிட்டு என்ன கவிதையை எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. வாழ்க‌ ம‌ண‌ம‌க்க‌ள். ப‌ட‌ங்க‌ளுக்கும், ப‌திவும் திரும‌ண‌த்தை ஓர‌ள‌வு பார்த்த‌ நிறைவு.
    ப‌ங்காளில‌ ஒருத்த‌ர், குடும்ப‌ க‌ல்யாண‌த்துக்கு ந‌ம்ம‌ளை கூப்பிடாம‌ விட்டுட்டாரேன்னு கொஞ்ச‌ம் கோவ‌ந்தான், ஆன‌லும் இவ்வ‌ளவு கும்ப‌ல்ல‌ எவ்வ‌ள‌வு தான் ஞாப‌க‌ம் வைச்சிற முடியும்?

    பதிலளிநீக்கு
  28. ரொம்ம்ம்ம்ப அழகான பகிர்வு. நன்றி. கூடவே இருந்தது போல் இருந்தது.
    காலையிலேயே பார்த்து விட்டாலும் நிதானமான மனநிலையில் படிக்க வேண்டும் என்று தான் இவ்வளவு நேரமாகி விட்டது.

    // எனக்குப் பாயாசம் ரொம்பப் பிடித்திருந்தது. மனநிலையை உணவும் பிரதிபலிக்கத்தானே செய்கிறது// இது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. :)

    மணமக்களுக்கும் மக்காவுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  29. மணமக்களுக்கு இதய பூர்வமான
    வாழ்த்துக்கள்..பா.ரா.வும்..பா.ராவை, ஒட்டி நிற்கும் நண்பர் குழாம் அருமை..
    நன் மக்கள்.. நன் மக்களே ....
    நம் மக்களே..ஏதோ நம் இல்லத்தில் நடந்த திருமண குதூகலம் போன்ற உணர்வ்டன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  30. எப்டி உங்கள மிஸ் பண்ணேன்???

    பதிலளிநீக்கு
  31. மகாவிற்கு வாழ்த்துகள். . வந்து கலந்து கொண்ட உணர்வைத் தருகிறது - நீங்கள், காமராஜ் மற்றும் மணிஜி எழுதிய பதிவுகள்.
    கவிஞர், நீங்கள், மணிஜி எல்லாம் ரசித்து ஒன்றாய் நிற்பதைப் பார்பதற்கு சந்தோஷமாய் இருக்கிறது - அதை சாதித்த பா ரா வை என்ன சொல்ல?

    உங்கள் கருத்து வேறுபாடுகளையும் இந்த பிரியத்தோடு கடுஞ்சொற்களை குறைத்துக் கொண்டு உரையாட வேண்டும் என்பதே என் போன்ற பலரின் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  32. என்னால் வர முடியாது போயி விட்டது. ஆனால் மகாவிடமும் அண்ணாவிடமும் பேசிக் கொண்டேன் கொஞ்சம் ஆதங்கம் தணிக்க. எல்லோர்க்கும் எல்லாமும் வாய்ப்பதில்லை. வந்திருந்தா எல்லோரையும் பார்த்திருக்கலாம். ஆனால் அண்ணாவை பார்த்தாச்சு. ஆரை மணி நேரமானாலும் பேசியாச்சு. எனக்கும் அவ்வளவு தான் கொடுப்பினை என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  33. நெகிழ்வாக இருக்கிறது. உங்களையும் மற்றவர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. பா.ராஜாராமின் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டதையும் பெருமையாக உணர்கிறேன். நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு
  34. மாது சார்,

    எல்லோர் சொல்வதையும் எழுதுவதையும் பார்க்கும் போது பாரா வை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது.

    மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.

    பகிர்ந்தமைக்கு நன்றி மாது சார்.

    பதிலளிநீக்கு
  35. மணமக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  36. பா.ரா. சித்தப்புவின் இல்ல திருமணத்திற்கு நேரில் வந்தது போல் இருந்தது அண்ணா உங்கள் படைப்பு. நம் சொந்தங்கள் எல்லாம் ஓரிடத்தில் ரொம்ப சந்தோஷமான தருணங்களை நீங்கள் அனுபவித்ததை நாங்கள் உங்கள் எழுத்தில் அனுபவித்தோம். போட்டோக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  37. நெகிழ்வான தருணங்களை அற்புதமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கிறீர்கள் மாது அண்ணா. இனி எப்போது சந்திப்போம் என ஏக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  38. மிக மிக நெகிழ்வாயிருந்தது மாதவ் ஜீ! மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  39. தொலைதூரத்தில் இருப்பதால் இப்படி பதிவுகளைப் படித்து ஆறுதல் கொள்ள வேண்டிய நிலை. வழமை போல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் மாதவ். மணமக்களுக்கு வாழ்த்துகளும், ராஜாவுக்கு அன்பும்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  40. உயரமாகவே நின்னு பழகிப் போச்சு மாது உங்களுக்கு. நேரிலும், எழுத்திலும்.

    அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது எனக்கு.

    எழுத்திலும், நேரிலும்!

    நன்றி மாது!

    // மணிஜீ...... said...

    மாது.....ஒரு ரிவைண்ட் செய்து பார்த்தது போல் இருந்தது...என் வாழ்நாளில் மறக்க முடியாத “விசேஷமான” சந்திப்பு அது...//


    மணிஜியிடமிருந்து இந்த "மாது" விளிப்பு, எவ்வளவு அழகாய், நெகிழ்வாய் இருக்கிறது!

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜாராமா! :-)

    என்ன... நர்சிம்மும் வந்திருக்கலாம்.இன்னும் சந்தோசமாய், நிறைவாய் இருந்திருக்கும்... இல்லையா மாது?.

    வாழ்த்திய நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும் மக்கள்ஸ்!

    பதிலளிநீக்கு
  41. வாசன்ஜி,

    மன்னியுங்கள்.

    இப்படி நிறையப் பேரை மிஸ் பண்ணிவிட்டேன். எல்லோருமே மன்னிக்கணும் மக்களே.

    சூழல் அப்படியாக இருந்தது, மக்கா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!