நிலப் பிரவேசம்
தரையில் விழுந்ததும்
துள்ளியது
துடித்தது
காற்று வெளியில்
கடைசி மூச்சு விட்டு
அடங்கியது
நிலைகுத்திய கண்ணில்
அலையடித்துக் கிடந்தது
ஒரு கடல்
செதில்களில்
மின்னிக்கொண்டு இருந்தன
சில கனவுகள்
பூனைகள்
பூனைகளுக்கு எலியைப் பிடித்துச் சாப்பிட வேண்டும். அவைகளுக்கு எலியைப் பிடிக்க ஒரு யோசனைத் தோன்றியது. உள்ளே பார்த்தபோது வலை இல்லை. வெளியே போய் வலையைத் தேடிப்போகும்போது ஒரு புட்பால் கிரவுண்டைப் பார்த்தன. அவைகள் அங்கேயிருந்த கோல்வலையை கடித்துக் கிழித்து எடுத்தன. அந்த வலையை வாயில் கவ்விக்கொண்டு நடக்கும்போது ஒரு எலியைப் பார்த்தன. எலியை நோக்கி அவை வலையை வீசின. ஆனால் அவைகளே அந்த வலையில் சிக்கிக் கொண்டன.
(மாத்ருபூமி வாராந்திரப் பதிப்பு 1997 ஜூலை 20 வெளிவந்தது. அப்போது, இதை எழுதிய அபிமன்யுவிற்கு வயது எட்டு.)
ஒளி வீச வாழ்ந்திருக்கிறீர்கள் தோழர் டபிள்யூ.ஆர்.வி!
சன் டி.வியில், ‘போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் காணாமல் போன உ.ரா.வரதாரசனா?’ என்ற கேள்வியோடு ஞாயிற்றுக்கிழமை செய்தி வந்து கொண்டு இருந்தபோது நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்னும் துருக்கிய நாவல் என் கையில் இருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்த புத்தகத்தை அன்றைக்குத்தானா நான் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்! ஒன்றுபோல சில நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் வாழ்வில் குறுக்கிடுகிற அபூர்வத்தை ரசிக்கிற மனநிலை அப்போது இல்லை. “நான் இப்போது ஒரு பிரேதம் மட்டும்தான். கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் ஒரு உடல்” என்னும் நுண்ணோவியன் எஃபெண்டியின் வரிகளோடுதான் அந்த நாவல் ஆரம்பித்திருந்தது. இரண்டு அத்தியாயங்கள் வரை படித்து முடித்திருந்த நான், அதற்குப் பிறகு தொடர முடியவில்லை. நாற்பது நாட்களுக்கு முன்பு, “பார்ப்போம் தோழர்” என்று கைகுலுக்கி விடைபெற்ற தோழர் டபிள்யூ.ஆர்.வியா! தாங்க முடியாமல் வீட்டிற்கு வெளியே வந்து, கொஞ்ச தூரத்தில் தெரிந்த தண்டவாளப் பாதையை வெறித்துக் கொண்டு இருந்தேன். கண்களில் நீர்த்திரையிட்டது.
இந்த ஜனவரி 10ம் தேதி டபிள்யூ.ஆர்.வரதராஜன் அவர்களோடு விருதுநகர் பர்மா கடையில் மதிய உணவு சாப்பிட்டேன். ”இந்த ஓட்டலில் அயிரை மீன் குழம்பு நன்றாக இருக்கும்” என்றதும், ”அப்படியா, சாப்பிடுவோமே” என ஆசைப்பட்டார். ஓட்டலில் அயிரை மீன் குழம்பு தயார் செய்திருக்கவில்லை. வேறு சிலவற்றை வாங்கிச் சாப்பிட்டோம். மேஜையில் அருகே எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சோலைமாணிக்கமும், நேர் எதிரே, எப்போதும் அணிந்திருக்கிற அந்த முரட்டு கதராடையில் அவரும் உட்கார்ந்திருந்தோம். எங்கள் வங்கி நிர்வாகத்தை எதிர்த்து வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்துச் சங்கங்களின் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் ரத்தாகியிருந்தது. உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க முடியாததால் தலைமை தாங்குவதற்கு தோழர் டபிள்யூ.ஆர்.வி வந்திருந்தார். அவரோடு சாவகாசமாக உட்கார்ந்து பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம்.
23 ஆண்டுகளாக அவரது எழுத்து, பேச்சு, நடவடிக்கைகளால் ஏற்பட்ட மரியாதையினால் வந்த உணர்வாக இருக்கலாம். இந்த அமைப்பினை மாற்ற வேண்டும் என்னும் சிந்தனைகளாலான உருவமாக அவர் எனக்குத் தெரிந்ததால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம். மிக அருகாமையில் அவருடன் உட்கார்ந்து பேசுகிற பெருமை எனக்கு அப்போது இருந்தது உண்மை. ‘டபிள்யூ.ஆர்.விதானே இவர்?’ என்று குழந்தை மாதிரி ஆச்சரியப்பட்டது உண்மை. இன்றும் அதே ‘டபிள்யூ.ஆர்.விதானே இவர்?’என்ற கேள்வி வருகிறது அதிர்ச்சியுடன்.
1986ம் ஆண்டு ஒருநாள் காலை 5.30 மணிக்கு நானும், எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராயிருந்த பாரதி கிருஷ்ணகுமாரும் டபிள்யூ.ஆர்.வியைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றபோது எனக்கு இப்படியெல்லாம் பிரமிப்பு இருக்கவில்லை. கிருஷ்ணகுமாருக்கு இருந்தது. ”இந்த நேரத்தில் பார்க்க முடியாவிட்டால், பிறகு அவரைப் பார்க்க ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு பிஸியாக இருப்பார்” என்றார் அவர். கிருஷ்ணகுமாரோடு எனது சகவாசம் அப்போது நட்பு ரீதியாக இருந்ததே தவிர இயக்க ரீதியாக இருக்கவில்லை “இந்த நேரத்தில் மனுஷன் முழிச்சிருப்பாரா?” என்று மட்டும்தான் அப்போது. தோன்றியது. அவரது துணைவியார் எங்கள் அழைப்புக்கு வெளியே வந்தார்கள். கிருஷ்ணகுமார் “டபிள்யூ.ஆர்.வியைப் பாக்கணும். சாத்தூர்லயிருந்து வந்திருக்கோம்” என்றார். “நைட்டுல ஒன்றரை மணிக்கு மேலத்தான் வந்தாங்க.ம்... போய்ப் பாருங்க” என்றார்கள். மாடிப்படிகளில் ஏறும்போது அந்த ‘ம்’ வதைத்தது. மேலே உள்ள அறையில் டபிள்யூ.ஆர்.வி உட்கார்ந்து பேப்பர்களைப் படித்துக்கொண்டு இருந்தார். களைப்பற்ற, தெளிவான உற்சாகமாயிருந்தார். “வாங்க கிருஷ்ணகுமார், வாங்க தோழர்” என உட்காரச் சொன்னார். எல்லா தினசரிகளும் அவரது மேசையிலிருந்தன. சங்கத்தின் பிரச்சினையொன்றை கிருஷ்ணகுமார் பேசினார். டபிள்யூ.ஆர்.வி உன்னிப்பாகக் கேட்டு விவாதித்தார். இறுதியாக ”நிர்வாகத்திற்கு இப்படி ஒரு கடிதம் எழுதுவோம், பிறகு லேபர் கமிஷனரிடம் செல்வோம்” என்று அவரே கடிதமும் எழுதிக்கொடுத்தார். மாடியிலிருந்து இறங்கும்போது எனக்கு பிரமிப்பும், மதிப்பும் உருவாகி இருந்தது.
கிருஷ்ணகுமார் டபிள்யூ.ஆர்.வியைப் பற்றி நிறைய சொன்னார். ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தில் அவரது நடத்திய போராட்டங்கள் பற்றி, கூட பணிபுரிந்த விதவைப்பெண்ணை மறுமணம் செய்து கொண்டதையும், வங்கிப்பணியை விட்டுவிட்டு முழுக்க கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதையும், சி.ஐ.டி.யூவில் முக்கிய முன்னணித் தலைவராய் உருவாகிக்கொண்டு இருப்பதையும் தொடர்ந்த சிலதினங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு அரசியல் வகுப்பில் டபிள்யூ.ஆர்.வி ஆசிரியராக வந்திருந்து மூன்று மணிநேரத்துக்கு பாடம் எடுத்தார். கம்பீரமாகவும், கணீரென்றும் குரல் இருந்தது. கடினமானத் தலைப்பாக இருந்தாலும், அவற்றுக்கு ஊடே இலக்கிய நயங்களோடும் அவரால் புரியவைக்க முடிந்தது. எங்கள் சங்க மாநாட்டில் சிறப்புரையாற்ற சாத்தூருக்கு வந்தது, சென்னையில் எங்களுக்காக ரிசர்வ் வங்கி, நபார்டு அலுவலகங்களில் பேச்சுவார்த்தை நடத்த கூடவே வந்தது என மேலும் சில சந்திப்புகள் நடக்க, அவர் மீதான மரியாதை கூடிக்கொண்டே இருந்தது. எப்போதும் தீவீரமாக இயங்குகிற மனிதராகவே இருந்தார்.
சி.ஐ.டி.யூவின அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகி அவர் டெல்லியில் இருந்தபோது எங்கள் அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்திற்கும் பல நேரங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அந்த சமயங்களில் சங்கத்தின் பொதுச்செயலாளராக நான் சென்னையில், டெல்லியில், கல்கத்தாவில் நடந்த சில முக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். விவாதங்கள், முரண்பாடுகள் எல்லாவற்றுக்கும் பிறகு டபிள்யூ.ஆர்.வி அவற்றைத் தொகுத்து தெளிவான பாதைகள் அமைத்துக் கொடுப்பார். எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் புரிதலையும் ஒருமித்த உணர்வையும் ஏற்படுத்துவார். அவரையேப் பார்த்துக் கொண்டு இருப்பேன். முழுவதுமாக அந்தப் பிரச்சினைகளுக்குள் தன்னைக் கரைத்துக்கொண்டு அவரது குரல் ஒலித்துக்கொண்டு இருக்கும். மற்றவர்களெல்லாம் வேறு பாஷைகள் பேசுகிறவர்களாயிருக்க, அந்த சமயங்களில் என்னைப் பார்த்ததும், ஒரு நெருக்கமான புன்னகையோடு கைகளைப் பற்றி “எப்படியிருக்கீங்க மாதவராஜ்! Bank workers unity பத்திரிகையில் உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறேன். எழுதுவதை நிறுத்திராதீங்க” என்பார். அதெல்லாம் அபூர்வமானவை.
அவர் எழுதுவதை நிறுத்தியதில்லை. தொடர்ந்து அவரைப் படித்துக்கொண்டு இருந்தேன். கட்சியின் அறிக்கைகள், முக்கியப் பிரச்சினைகளில் தத்துவார்த்த நிலைபாடுகள், அவதூறுகளுக்கு பதில் என எழுதிக்கொண்டே இருந்தார். அவரது மெயில் லிஸ்டில் நானும் இருந்தேன். சுற்றுப்பயண விபரங்கள், கட்டுரைகள், விவாதங்கள் குறித்த கடிதங்கள் அவ்வப்போது வந்துகொண்டு இருந்தன. இந்த எழுத்துக்கள் என்ன விதமானவை. எங்கேயோ இருந்து எழுதும் மனிதரை நம் அருகில் எப்போதும் இருப்பவராக பாவிக்கவைத்து விடுகிறது. அப்படித்தான் இருந்தார் அவர். என்னைப் போலவே பல ஆயிரக்கணக்கான தோழர்களுக்கும் நெருக்கமானவராகத்தானே இருந்திருப்பார். இதுபோன்று அவரோடு பழகிய காலங்களையும், அனுபவங்களையும் அந்த தோழர்களும் சுமந்து கொண்டுதானே இருந்திருப்பார்கள்!
விருதுநகரில் அன்று நான்கு மணிநேரத்துக்கும் மேலே அவரோடு கூடவே இருக்க முடிந்த கணங்களை இந்த நேரத்தில் திரும்பத் திரும்ப வலிய இழுத்துப் பார்க்கிறேன். சமீபகாலமாக நிர்வாகங்கள் எப்படி கண்மூடித்தனமான தாக்குதல்களில் இறங்குகின்றன என்பதை விளக்கிப் பேசிக்கொண்டு இருந்த அவரது முகத்தில் சோர்வு இருந்ததாகப் படுகிறது. இடையிடையே அவரது கவனம் கலைந்து வேறெங்கோ நிலைத்தது போலவும் இருக்கிறது. சோலைமாணிக்கம் கூட “டபிள்யூ.ஆர்.வி எதோ ஒருமாதிரி இருந்தாரே” என்று பிறகு சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்ந்த பணிகள், பல்வேறு வகையான பிரச்சினைகளோடு இயங்குகிறவர்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகவா இருக்க முடியும் என்பதுதான் இயல்பான பதிலாக எனக்குத் தோன்றியது. இப்போது எல்லாவற்றுக்கும் வேறு அர்த்தங்கள் தெரிகின்றன.
அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி வேறு எதுவுமே இந்த 23 ஆண்டுகளில் அறிந்திருக்கவில்லை. அவருடைய மகள், மகன்கள் பற்றியெல்லாம் கூட இப்போதுதான் தெரிகிறது. அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்னும் பிரக்ஞையற்றுத்தான் இதுபோன்ற மனிதர்களை தொடர்ந்து காலாகாலமாய் நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். தான் சார்ந்த அமைப்பையே குடும்பமாக கருதி, சதா நேரமும் தோழர்களோடு இருந்து, இயக்கம் சார்ந்தே பேசிக்கொண்டு இருப்பவர்களை இப்படித்தான் பார்க்க வருகிறது. எனவேதான் பெரும் அதிர்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் காணாமல் போனது, அவர் பற்றிய மனைவியின் புகார், கட்சி நடவடிக்கை என்கிற செய்திகள் மூலம் தெளிவான அபிப்பிராயங்களுக்குச் சென்றுவிட முடியாது. அதிலிருக்கும் ஆதாரங்களைத் தோண்டித் துருவி எந்த முடிவுக்கும் வர முடியாது. சில புதிர் நிறைந்த உரையாடல்களாக அவை பொதுவெளியில் மிதந்து கொண்டே இருக்கும் இனி. ‘அவர் வீரரா, கோழையா’எனும் விவாதங்களும் பைத்தியக்கார சபைகளில் கலக்கும் இனி.
டபிள்யூ.ஆர்.வி நிலைகுலைந்து போயிருக்கிறார், தன்னுடைய உலகத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட மனிதராகியிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள எளிய மனித உணர்வுகளே போதுமானது. தேசம் பூராவும் அறியப்பட்ட ஒரு மனிதர், இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல துடிப்போடு செயலாற்றிய ஒரு தோழர், தன் வாழ்வின் அருமையான, பெரும்பாலான நாட்களை தன் தத்துவத்திற்காக செலவிட்ட ஜீவன், எப்போது தான் நிர்க்கதியானோம் என நினைத்தார் என்பது முக்கியமானது. இப்படியான சமயங்களில் ஆற்றுப்படுத்த, அரவணைக்க, ஆதரவோடு கரங்கொடுத்து நிற்க யாருமா அவருக்கு இல்லாமல் போனார்கள் என்பதுதான் கசப்பனாது, அதிர்ச்சியானது. எவ்வளவோ ஞானம் கொண்ட, அனுபவங்கள் என்னும் தழும்பேறிய, அற்புதமான டபிள்யூ.ஆர்.வியின் கடைசி நேர சிந்தனைகளும், துடிப்புகளும் என்னவாக இருந்திருக்கும் என்பது வலி நிறைந்தது.
‘என் பெயர் சிவப்பு’ என்னும் அந்த துருக்கிய நாவலில், நீரில் மூழ்கி இறந்து போன அந்த மனிதன் இப்படிச் சொல்கிறான் ஒரு இடத்தில்.
“நான் பிறப்பதற்கு முன்பு காலம் முடிவற்றதாக இருந்தது. இப்போது என் மரணத்திற்குப் பிறகு காலம் வற்றித் தீராததாக இருக்கிறது. இதனை இதற்கு முன்பாக நான் நினைத்துப் பார்த்ததில்லை. இருண்மையின் இரண்டு சாசுவதங்களுக்கு நடுவே ஓளிவீச வாழ்ந்திருக்கிறேன் நான்”.
உண்மைதான் தோழர் டபிள்யூ.ஆர்.வி!
என் கேள்விக்கு என்ன பதில்?
நாளை முதல் செல்போன்கள் அனைத்தும் செயலிழந்து போகின்றன என வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்?
செம்மொழி மாநாடு தேவையா?
இப்படியொரு தலைப்பில், ’புத்தகம் பேசுது’ பத்திரிகையின் ஆசிரியர் குழு ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இந்த மாநாடு அதன் உண்மையான அர்த்தத்தில் நடைபெறவேண்டுமானால், இந்த அரசு என்ன செய்ய வேண்டும் என சின்னதாய் ஒரு பட்டியல் போட்டு இருக்கிறது.
* முதலில் அது குடும்ப மாநாடு அல்ல..... தமிழின் ஒட்டு மொத்த மக்களின் பெரும் குடும்ப மாநாடு எனும் நிலையை ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல், அறிவு காழ்ப்புணர்ச்சி இன்றி இடம்தந்து... மதிப்பளிக்க வேண்டும்.
* தமிழ் மொழியின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து மட்டங்களிலும் ‘தமிழ் கல்வி’ எனும் ஒப்பற்ற லட்சியத்தை அடைய அடுத்த பத்தாண்டு களுக்கான செயல்திட்டத்தை வரைந்திட மாநாட்டில் கல்வியாளர்களுக்கான ஒரு செயல் அரங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
* ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும்.
* இன்று ஒரு மொழியின் இருப்பு கணினி வழியான செயல்பாட்டில் தான் உள்ளது... இணையத்தை சீன தேசத்தையும், ஜப்பானையும் போல நாம் நமது தமிழிலேயே முழுவதும் பயன்படுத்த தகுதியான மொழிபெயர்ப்பு தமிழ் எழுத்து வகை (திளிழிஜி) இன்னமும் சர்ச்சையானதாகவே இருப்பது நல்லதல்ல. இந்த மாநாடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் இலக்கண எளிமைப்பாடு பற்றி ஆராய்வதும் அதன் ஒரு பகுதியாகும்.
* தமிழின் தொன்மையும் அதன் மொழிவளமும் வரலாறும் அனைவரும் அறிந்ததே. அதை இளைய தலை முறையினருக்கு எடுத்துச்செல்வது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாணவர் - குழந்தைகள் ஆகியோர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதோடு.... அதை அவர்களது தமிழ் புத்தக வாசிப்போடு இணைத்து புத்தக வாசிப்பையும் சேர்த்து வெளிப்படுத்த வேண்டும்.
வாடாத பக்கங்களின் இன்றைய பக்கம் படித்துவிட்டீர்களா?
உங்களுக்குப் பிடித்த பதிவையும், அதுகுறித்த கருத்துக்களையும் பகிர வாருங்கள்!!!
* அறிவியல் தமிழுக்கென்று ஓர் இதழ் தமிழில் இல்லை. அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரிக்க தனியே தமிழ் அறிவியல் ஆய்வு இதழை தோழர் சிங்காரவேலர்தான் முதலில் நடத்தினார் என்கிற வரலாற்று உண்மையை கருத்தில் கொண்டு, தமிழ் அறிவியலின் பிதாமகனான தோழர் சிங்காரவேலரை அறிவித்து அவர் வழியில் அறிவியல்தமிழ் ஆய்விதழ் உட்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான செயல் அறிக்கை தயாரித்து அதை அமல்படுத்த மாநாடு முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.
* நைஜீரியா போன்ற ஒரு சிறிய நாட்டில் ஒரு புத்தகம் வெளிவந்தால் 25 ஆயிரம் பிரதிகளை அரசு தனது நூலகங்களுக்கு வாங்கும் நிலை இருக்கிறது. நமது தமிழின் ‘வீடுதோறும் புத்தகம்’ எனும் நிலை உருவாக இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தது போல நல்ல தமிழ் நூல்கள் வழங்கும் ஒரு திட்டத்தை செம்மொழி மாநாடு முன்மொழிய வேண்டும்.
* பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நல்ல பல நூல்களை மொழி பெயர்த்து வளம் பெற ஒரு சரியான சுதந்திரமான அமைப்பை - சாகித்ய அகடாமியை முன்மாதிரியாக கொண்டு, ஆனால் அதன் பலவீனங்களை களைந்த அமைப்பாக - ஏற்படுத்தி தமிழை உலக அரங்கிற்கு உயர்த்தும் ஒரு செயல் திட்டம் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட வேண்டும்.
* தொலைக்காட்சி சினிமா உட்பட பிற ஊடகங்களை தமிழ் மண் சார்ந்த தகுதிகளோடு- கலாசார சீரழிவு நோய்களில்லாத சாதனங்களாக்கி அதே சமயம் தமிழ் கலையின் அங்கங்களை சாகடித்து விடாத - சுய கட்டுப்பாடு அமைப்பாக ஆக்கிட தகுந்த ஆலோசனைகளை வழங்கிடும் மாநாடாக அது அமைய வேண்டும்.
* இப்போது பலமாக தம்பட்டம் அடித்து பறைசாற்றிக் கொள்ளும் ‘வரலாற்று சிறப்பு மிக்க’ ‘உலக தலைநிமிர்வு’ போன்ற அம்சங்களை செம்மொழி மாநாடு பெறவேண்டுமென்றால் அது மந்திரிகள் மற்றும் அவர்களின் எடுபிடிகளின் மாநாடாக இல்லாமல், தமிழ் அறிஞர்களும், படைப்பாளிகளும் பெரு மக்கட்திரளும், எதிர்கால சந்ததியும் கைகுலுக்கும் சகல ஜனநாயக அம்சங்களும் பொருந்திய மாநாடாக நடத்தப்பட வேண்டும். தமிழ் மொழிக்கும் அதன் வாசக பெரு உலகிற்கும் எவ்வளவோ செய்யத் துடிக்கும் இந்த அரசு கட்டாயம் இவற்றைக் கருத்தில் கொள்ளும் என்று நம்புவோம்.
இப்படி அந்த தலையங்கம் முடிந்து விடுகிறது!
சரி, நீங்கள் சொல்லுங்கள்...
அரசு இதையெல்லாம் கருத்தில் கொள்ளுமா?
நாம் அப்படி நம்பலாமா?
(வாடாத பக்கங்கள் – 3 இப்போது (20.2.2010) பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வாருங்கள்)
பதிவர்கள், நண்பர்களுக்கு ஒரு அழைப்பு
நல்ல பதிவுகளை அடையாளம் காணவும், அறிமுகம் செய்யவும், அங்கீகரிக்கவும் ஒரு ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக்கவுமான வெளியாக வாடாத பக்கங்கள் மலர்ந்திருக்கின்றன.
முதல் நாளிலேயே பலர் ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்ததும், ஒரேநாளில் 29 நண்பர்கள் followers களாகி இருப்பதும் உற்சாகமளிக்கிறது.
அதன் இன்றைய பக்கத்தில் லேகா, பா.ராஜாராம், கும்க்கி, ஜோதி, தீபா, கபீஷ் ஆகியோர் தாங்கள் சமீபத்தில் படித்த சிறந்த பதிவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள். வாடாத பக்கங்கள்-2 சென்று வாசித்து உங்கள் அனுபவத்தையும் பகிந்துகொள்ளுங்களேன்.
வாடாத பக்கங்கள் தமிழ்மணத்தில் இணைக்கும் வரை இப்படியான தொந்தரவு இருக்கும். தாங்களும், தங்கள் நண்பர்களுக்கு இந்தப் புதிய முயற்சி குறித்து தெரிவியுங்களேன்…!
மன்னியுங்கள்.
வாடாத பக்கங்கள்- புதிய வலைப்பக்கம்!
நண்பர்களுக்கு வணக்கம்.
வலைப்பக்கங்களில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்குமான உரையாடல், அவரவர் வலைப்பக்கங்களில் மட்டுமே நிகழந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு பதிவரின், ஒரு பதிவைப்பற்றியதாக அந்தப் பின்னூட்டங்கள் இருக்கின்றன. பலசமயங்களில் அவை ஒப்புக்கோ அல்லது மேம்போக்காகவே இருப்பதையும் காண முடிகிறது. உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எழுதப்படும் பல முக்கியப் பதிவுகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவர்களது வலைப்பக்கங்கள் அடையாளமற்றுப் போகின்றன.
பதிவுகளைப் பற்றி, வலைப்பக்கங்களைப் பற்றி உரையாடும், ஓரளவுக்கு உயிரோட்டமுள்ள ஒரு பொதுவெளி வேண்டும் என யோசித்துக் கிடந்ததில் என் சிற்றறிவுக்கு எட்டியது இது. இங்கு யாரும் யாருக்கும் ஓட்டுகள் போட வேண்டியதில்லை. அவரவர்கள் படித்தது, அதில் பிடித்தது, புரிந்தது, புரியாதது என யாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். விவாதிக்கலாம். அப்படி ஒரு ஏற்பாட்டோடும், நோக்கத்தோடும்தான் இந்த வலைப்பக்கம் http://tamilblogreadings.blogspot.com இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘வாடாத பக்கங்களின்’ ஒவ்வொரு நாளின் பதிவிலும்-
வலைப்பக்கங்களில் முந்தின சில நாட்களில் படித்தது, அவைகள் குறித்த கருத்துக்களைத் தெரிவித்து அன்றைய உரையாடலை ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும். பதிவுகளில் வந்த நல்ல, ஆரோக்கியமான பின்னூட்டங்கள் பற்றியும்கூட அவர்கள் தெரிவிக்கலாம். மற்றவர்கள், அது குறித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். அல்லது தாங்கள் வாசித்ததையும், அதில் பிடித்தமானவைகளையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம். தாங்கள் எழுதிய பதிவுகளையும் குறிப்பிடலாம்.
இங்கு பதிவும், பின்னூட்டங்களும் சம மரியாதையும், அடையாளமும் கொண்டவை என்னும் புரிதல் வேண்டும்.
மொத்தத்தில்- நல்ல, முக்கியமான பதிவுகள் அடையாளம் காணப்படும். அவை வாடாத பக்கங்களாக நிலைக்கவும் செய்யும். ஒரு கருத்துக்கூடமாகவும் இருக்கும். ஒரு reference போலவும் இந்த வலைப்பூ உருப்பெறும்.
இந்த முயற்சியை மேலும் செழுமைப்படுத்தும், வளர்த்தெடுக்கும் சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன்.
இந்த வலைப்பூவுக்கு இன்னொரு Author ஆக வடகரைவேலன் அவர்கள் இருக்கச் சம்மதித்து உள்ளார். அவருக்கு நன்றி.
யாரும், தங்கள் விருப்பங்களைப் பதிவாக தெரிவிக்க முன்வராவிட்டால் நானே அக்காரியத்தைத் தொடர்ந்து செய்யக்கூடிய அபாயமும் உண்டு. அது ஆரோக்கியமாகவும் இருக்காது. அதைத் தவிர்ப்பது உங்கள் கையில்!
இந்த வலைப்பூவை வாடாமல் இருக்கச் செய்வதும் உங்கள் கையில்.
ஆரம்பிப்போம்…… வாடாத பக்கங்கள் !
(இதுகுறித்து மேலும் தெளிவான வரையறைகளுடன் வடகரைவேலன் அவர்கள் எழுதிய பதிவு இங்கே.. )
காற்றின் மொழி்!
சீரியசான ஒரு கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.அல்லது முக்கியமான நபர் எதிரில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது பார்த்துத் தானா அது நடக்க வேண்டும். தில்லானா மோகனாம்பாள் 'சிக்கல் சண்முகசுந்தரம்' மாதிரி நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் அந்தக் காற்றுக்காவது தெரிந்திருக்க வேண்டாம். பந்து மாதிரி சுருட்டிக்கொண்டுவரும் காற்று உங்கள் வாய் வழியாக 'ஏவ்...வ்..' என்று ஒரு சத்தத்தோடு வெளியேறவும், நீங்கள் படாத பாடு பட்டு நெளிந்து குழைந்து சமாளிக்க வேண்டியதாகிறது. ஏப்பங்களின் கதை நமது வாழ்வில் எப்போது துவங்கியது என்று யோசித்துத்தான் பார்ப்போமே....
பாலருந்தும் பிஞ்சுக்குழந்தையாயிருக்கும்போதே இந்தக் காற்று வெளியேற்ற வேலை தொடங்கியிருக்கிறது. தாயிடமிருந்தோ, பாலாடை-கிண்டி-புட்டி போன்றவற்றிலிருந்தோ பாலை அருந்தும் குழந்தை காற்றையும் சேர்த்து உட்கொண்டுவிடுகிறது. எனவேதான், உள்ளே சென்ற காற்றைப் பக்குவமாக வெளியேற்ற வைக்கிற வேலையை நமது மரபார்ந்த வளர்ப்புமுறை கற்றுத் தந்திருக்கிறது. சொல்லப்போனால், விவரமறிந்த தாய்மார்கள் குழந்தையை மடியில் நீளவாக்கில் படுத்தமேனிக்கு வைத்துப் பாலூட்டுவதில்லை. தலைப்பாகத்தைச் சற்று உயர்த்திக் கையணைப்பாக வைத்துப் பிடித்துக் கொண்டு குழந்தையைப் பாலருந்த வைக்கிறபோது, காற்று அதிகம் உட்புக விடாமல் தேவையான அளவிற்குப் பாலை தீர உட்கொள்ளுகிறது குழந்தை.
இருந்தாலும் உடனே குழந்தையைப் படுக்கவிடாமல் தோளில் போட்டுச் செல்லமாகத் தட்டிக் கொடுக்கிறபோது, எப்படியும் உட்புகுந்த காற்று கூட ஓசைப்படாமல் (அல்லது சிறிய ஓசையோடு) வெளியேறிவிடுகிறது. அதற்குமுன் படுக்கவிட்டால், காற்றோடு சேர்த்து பாலையும் குழந்தை வெளியேற்றிவிடும் என்பது காலகாலமான அனுபவத்திலிருந்து புரிபட்டிருக்கிறது. இந்தமாதிரி காற்றையும் சேர்த்து உண்ணுகிற வேலை வளர்ந்தபிறகும் உண்டு. பேசிக்கொண்டு சாப்பிடாதே என்று யாராவது சொன்னால் கோபம் வரத்தான் செய்கிறது. ஆனால், அப்படி சாப்பிடுவதால் நேரும் இடைஞ்சல்களில் இந்த காற்று உள்ளே நுழைவதும் ஒன்று. சாப்பிடும்போது மட்டும்தான் என்றில்லை, பெரிய மூச்சாக சிலர் பழக்கதோஷமாகவோ, ஆயாசத்திலோ மூச்சு இழுத்துவிடும் நேரங்களிலும் காற்று தேவன் விஜயம் செய்கிறார். இப்படியான காற்று ஏப்பமாக வெளியேறித்தானே ஆக வேண்டியிருக்கிறது.
காற்று உற்பத்தியின் இரண்டாவது இடம், நாம் உண்ணும் உணவிலிருந்து வெளிப்படும் காற்று. ஒவ்வொரு வேளை உணவிலிருந்தும் சராசரியாக 4 லிட்டர் கரியமில வாயு வெளிப்படுகிறது. இது ரத்தத்தில் கலப்பதும், பின்னர் நுரையீரல் அறைக்குள் எட்டிப்பார்த்ததும் அங்கேயிருந்து சுவாசக் கூறுகளாக வெளியேற்றப்படுவதும் இயல்பான நடப்புகள். ஆனால், சிலருக்கு இந்த உற்பத்தி அளவு கூடுதலாக நேரலாம். அதுவும் சுவாசத்தில் வெளியேறிவிடலாம். அப்படி முடிந்தால் இரண்டாம் பேர் தெரியாமல் விஷயம் உள்ளேயே முடிந்துவிடுமே. அது வாய்க்காதவர்கள் என்ன செய்வது....அதேபோல், மேற்படி 4 லிட்டர் அளவையே சுவாசத்தில் கலக்க இயலாதவர்களும் இருக்கலாம்... இப்படியானவர்கள்தான் நாம் முதல் காட்சியில் சந்தித்தவரைப் போல் 'சபையில்' மாட்டிக் கொண்டு ஏப்பம் விட்டு மாட்டிக் கொள்பவர்கள். காற்றின் வெளியேற்றம் மேல்திசை நோக்கித்தான் என்றில்லை, சில நேரம் மனிதர்களை நாலுபேர் எதிரில் அசௌகரியப்படுத்தி கீழ்த்திசை நோக்கியும் வெளியேறுகிறது.
காற்று தோன்ற மூன்றாவது சாத்தியம், வெவ்வேறு காரணங்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரை சமாச்சாரங்களினால் உண்டாவது. நமது உடல் என்ற தொழிற்சாலையினுள் எத்தனையோ வேதியல் வினைகள் நடக்கின்றன. நொதிச்செயல்களின்போது பாக்டீரியாக்களின் அளவுகளில் மாறுபாடு நேரலாம். அல்லது பல அழிக்கப்பட்டுவிடலாம். வேதியல் சமநிலைகளில் நிகழும் மாற்றங்களின்போதும் காற்று உற்பத்தி ஆகிறது.
சரிவிகித உணவு, குறைந்தபட்ச உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றோடு இயைந்து வாழும் வாழ்க்கையில் காற்றின் உபாதை பெரிய அளவிற்கு இருப்பதில்லை. அப்படியே சிலநேரங்களில் ஏப்பம் வந்தால், அதற்காகப் பெரிய குற்றவுணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை. சாதாரண ஏப்பங்களுக்கு மருத்துவத் தலையீடு தேடி அலைய வேண்டியதுமில்லை.
ஆனால், சிலர் ஏப்பம் வந்தால்தான் உணவு நிறைவின் அறிகுறி புலப்படும் உற்சாகம் கண்ணில் கரைபுரளும். அதற்காகவே, சிலர் சாப்பிட்டு முடித்ததும் 'ஒரு சோடா அடிச்சாத்தான்யா சரி வரும்' என்று பழக்கப்படுத்திக் கொள்கிறவர்களும் உண்டு. சோடாவிலிருந்து உள்ளே போன காற்று வெளியேறுகிறதோ, உள்ளேயிருந்து வருகிறதோ ஏப்பம் வந்தால் சரி என்று செல்லக் குழந்தையாட்டம் வயிற்றுப் பகுதியைத் தடவித் தடவி ஒரு கடமையாக அதைச் செய்து கொண்டிருப்பார்கள்.
ஏப்பம் வந்தால் சலிக்கவும் வேண்டாம். அதை ஒரு அன்றாட நடவடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கவும் வேண்டாம். தவிர்க்க முடிந்தால் தவிர்த்துவிடுவது அல்லது தானாக ஏற்பட்டால் அனுமதித்துவிடுவது என்று பழகலாம். பொதுவாகவே வெளியிடங்களில், பொதுவிடங்களில் ஏப்பங்கள் 'வாயடங்கிக் கிடக்கும்'. வீட்டில், வழக்கமாகப் புழங்குகிற இடங்களில்தான் சற்று சுதந்திரக் காற்று இப்படி மேலிருந்தோ, சமயங்களில் கீழிருந்தோ வெளியேறும். அந்தச் சங்கடத்தைத் தவிர இதற்காக உடல்நலக் கேடு எதுவும் இருப்பதாக உணரவேண்டியதில்லை. இயல்பான நடவடிக்கை என்று அடுத்த வேலையைப் பார்க்கலாம். வயது கூடக் கூட செரிமான சக்தி குறைவதாலும் கூட காற்று உற்பத்தி அதிகமாகலாம்.
சிலருக்கு உளவியல் ரீதியாகக் கவனத்தைக் கோரும் நடவடிக்கையாகக் கூட ஏப்பங்கள் வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அது பின்னர் நாளாவட்டத்தில் தவிர்க்கமுடியாத பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆசனவாய் வழியான காற்றின் விடுதலை விஷயமும் இப்படி உளவியல் ரீதியான சிக்கல்களின் காரணமாக இருக்கலாம்.
தொடர் பிரச்சனையாக, வலியோடும் எரிச்சலோடும் வேறு சில உடல்ரீதியான மாற்றங்களின் அறிகுறிகளும் தெரிய ஏப்பங்கள் வந்துகொண்டிருந்தாலன்றி, இதை ஒரு நோயாகவோ, சிக்கலாகவோ கருத வேண்டியதில்லை. பொதுவாக, செரிமான பிரச்சனை இருப்பதாக உணரும்போது antacid எடுத்துக் கொள்வதுகூட எரிச்சலைக் கூட்டத்தான் செய்கிறது என்று ஆய்வுகளும், அனுபவங்களும் சொல்கின்றன. உணவுப் பொருள்களில் எரிச்சலேற்படுத்தும் பதார்த்தங்களைத் தவிர்த்துவிட்டு உணவைத் தொடர்வது நல்லது. உருளையோ, முட்டைக்கோஸ் போன்றவையோ அதிக வாயுவை உற்பத்தி செய்பவை. அப்படியானவற்றைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல் தேவைப்படும்போது உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.
இந்த ஏப்பத்திற்கு உருவகமாகக் கிடைத்திருக்கிற அந்தஸ்துதான் அதிகமானது. உழைப்பாளி கோரிக்கை வைத்தால் ஒப்பீடு செய்கிற வேறு துறை தொழிலாளி, உங்களுக்கென்னப்பா புளிச்சேப்பம், எங்களது பசியேப்பம் என்று கிண்டலடிக்கிறார்கள். உணவு நிரம்பவேண்டிய இடத்தில் சிக்கிக் கிடக்கிற காற்றின் வெளியேற்றம் பசியேப்பம். செரிமான இலாக்காவில் ஏற்படும் போராட்டத்தில் வெளியேறுவது புளிச்சேப்பம்.
சம்பள உயர்வுக்காகக் காத்திருக்கும் ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைவர்களைப் பார்த்து, 'மத்த இடங்களையெல்லாம் பாத்தீங்களா, அரியர்ஸ் எல்லாம் வாங்கி ஏப்பமே விட்டுட்டாங்க..நம்ம நிலைமை மட்டும் கேவலமா...' என்று கேட்பதுண்டு.
நம்முடைய உடலிலிருந்து ஏப்பங்கள் வருவதைத் தவிர்ப்பதும், தடுப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அது அத்தனை கவலைப்பட வேண்டிய விஷயமில்லை. ஆனால், பொதுத்துறை செல்வங்களையும், நாட்டு வளங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டு பகாசூர நிறுவனங்களுக்கு அப்படியே விலைபேசி விற்றுச் சாப்பிட்டு ஏப்பம் விடத் துடிப்பவர்களை அப்படி சும்மா விட்டுவிட முடியுமா....
- எழுதியவர்: எஸ்.வி.வேணுகோபாலன் - மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன், எம்.டி., (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து.
கருணாநிதி சிரித்தார்!
சப்ளை செய்த பையன் வந்து மொத்தம் எவ்வளவு ஆகியது என்று சொன்னான். நிமிர்ந்து அவனையேப் பார்த்து, “கணக்கைத் திரும்பச் சொல்லு” என்றான். அந்தப் பையன் சொன்னான். “பேப்பர் மாதிரி இருக்குற பிளாஸ்டிக் டம்ளருக்கு மூணு ருபாயா.... கோல்டு பிளேக் வெளியே மூனு ருபாய், இங்க நாலு ருபாயா. என்ன ஏமாத்துறீங்களா...அநியாயம் பண்றீங்களா...” கத்தினான். ”இங்க அப்படித்தான்... தர்றியா.. இல்லியா” என்றான் சப்ளை செய்தவன். “தரமுடியாது மயிரு. என்னடா செய்வே. ஒன் இஷ்டத்துக்கு விலய வச்சுக்குவே. நான் என்ன இளிச்ச வாயனா..” அவனும் சத்தம் போட்டான். நான்கைந்து பேர் அவனை நோக்கி இறுகின முகங்களோடு வந்து, சட்டைப்பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, நெட்டித் தள்ளி, இழுத்துக்கொண்டு போய் வெளியே விட்டனர். “வெளங்க மாட்டீங்க டாய்...! வெளங்க மாட்டீங்க..!” என்று நடந்தான்.
சாலை பிரகாசமாய் இருந்தது. அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டு போனான். அங்கும் அவன் ஒரு பொருட்டு இல்லைதான். போஸ்டர் ஒன்றில் கருணாநிதி சிரித்தபடி இருந்தார். பக்கத்தில் போனான். கும்பிட்டான். “தலைவா... நீ நல்லாயிருக்கணும். ஒன்னயப் போல உண்டா. நாங்க இருக்கோம் தலைவா ஒனக்கு.” என நெஞ்சில் அடித்துக்கொண்டான். “தலைவா...ஒன்னய யாரும் அசைக்க முடியாது. ” என்றான். அவன் சொன்னதைக் கேட்டது போல, உலகத் திருக்குறள் பேரவை சார்பில் நடந்த பாராட்டு விழாவிலிருந்த கருணாநிதி அந்த நேரம் சிரித்தார்.
*
ஆதலினால் காதல் செய்வீர்!
"நீங்கள் என்னை வெளியே கூட்டிச் செல்வதே இல்லை"
"என்ன இப்படிச் சொல்கிறாய். போன வாரம் சித்தப்பாப்பொண்ணு கல்யாணத்திற்குச் சென்றோமே"
அவளுக்கு தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்று ஏக்கம் இன்னும் தொடருகிறது. பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். ஆண் அதில் உள்ள வார்த்தைகளின் அகராதி அர்த்தம் பற்றியே யோசிக்கிறான். தன்னை பிரத்யேகமாக கவனித்து வெளிகளில் அழைத்துச் செல்ல அவன் முனைப்பில்லாமல் இருக்கிறான் என்பதுதான் அவள் சொல்ல நினைத்தது. இரண்டு பேரும் ஒரே மொழியில் பேசினாலும் அர்த்தம் வேறு வேறாக தொனிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருந்தவள் அவள் என்பதையும், வெளியே செல்வதற்கு தாகம் இருக்கும் என்பதும் ஆண்களுக்கு புரிவதில்லை. அவன் சதா காலமும் வெளியில் அலைந்து கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். மீண்டும் அவளோடு வெளியே செல்ல சலிப்பு வருகிறது. வீடுகளின் அகமும், புறமுமான இந்த இரு உலகங்களுக்குள் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டீக்கடை பெஞ்சுகளில் ஆண்கள் பேசுகிற விஷயங்களுக்கும், வீட்டுத்திண்ணைகளில் பெண்கள் பேசுகிற விஷயங்களுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.
பெண் யாருடனாவது அல்லது தன்னோடாவது பேசிக்கொண்டே இருக்கிறாள். யுகம் யுகமாய் தனிமையில் வெந்து வெந்து போயிருக்கும் அவள் தன்னை வெளிப்படுத்துவதற்கும், உலகத்தை கிரகித்துக் கொள்ளவும் பேசிக் கொண்டே இருக்கிறாள். சோர்வான சமயங்களில் தன்னையே உற்சாகப்படுத்திக் கொள்ள, கூண்டுக்குள் இருக்கும் மிருகங்களும், பறவைகளும் சத்தம் போடுவதைப் போல அவள் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆண்களுக்கு இந்தப் பேச்சுக்கள் அர்த்தமற்றதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கின்றன. அவன் மௌனமாக இருக்கிறான். வெளியுலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை யோசிக்கவும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அவனுக்கு வீட்டிற்குள் மௌனமே தேவைப்படுகிறது. ஆண் தன்னை சக்தி வாய்ந்தவனாகவும், இலட்சியங்கள் கொண்டவனாகவும் எப்போதும் கருதிக் கொள்கிறான். வீட்டைத் தாண்டியே அவன் அறிவு வேலை செய்கிறது. அவன் பெண்களிடம் தன்னுடைய பிரச்சினைகளை எப்போதாவதுதான் கூறுகிறான். பிரச்சினைகளை தன்னால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என சர்வ நிச்சயம் கொள்கிறான். பெண் புத்திமதி சொன்னால் தனக்கு இழுக்கு என்பது ஆண்களில் நரம்புகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பெண்கள் அன்பானவர்களாக, பொறுமையானவர்களாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அடுத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் கடமையாக இருக்கிறது. அதை அவள் செய்து கொண்டே இருக்கிறாள். உணவு என்பது ஆணுக்கு உடல் தேவையாக மட்டுமே இருக்க, பெண்ணுக்கோ அது உறவை பலப்படுத்துவதாகவும், பராமரிப்பதாகவும் இருக்கிறது. தோசைகளை சுட்டுக் கொண்டே இருக்கிறாள். சோறு பொங்கிக் கொண்டே இருக்கிறாள். இத்தனை செய்தாலும் ஆண் தன்னை கவனிப்பதில்லை என்பது அவளது வருத்தமாகவும், வேதனையாகவும் ஒலிக்கிறது. எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கும் தனக்கு எதுவும் தரப்படுவதில்லை என்னும் உணர்வு அவளுக்குள் ஓளிந்திருக்கிறது.
ஆணோ, பெண் தன்னை மாற்ற முயல்கிறாள் என்று குற்றஞ்சாட்டுகிறான். அவனுக்குள் கடந்த காலங்களின் பயம் இன்னும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அவள் விஸ்வரூபம் எடுத்து நின்ற போது ஆண் அடையாளமற்று இருந்தது அவனது மரபணுவில் அதிர்ச்சியாய் உறைந்திருக்கிறது. அவள் எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் தான் வீழ்த்தப்படும் தந்திரம் இருப்பதாகவே அவனுக்கு அசீரீரி ஒலிக்கிறது.
இதனாலேயே ஆண் தன்னிடம் பெண் நெருங்கி வரும்போது விலகுகிறான். ஆமை ஓட்டுக்குள் மறைவதைப்போல உள் இழுத்துக் கொள்கிறான். பெண் அவளாக எதையும், பாலியல் தேவையாக இருந்தாலும், முன் வைத்தால் ஆண் முகம் சுளிக்கிறான். குடும்பத்தில் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஆண் முன்மொழிபவனாகவும், பெண் வழிமொழிபவளாகவுமே இருக்க முடிகிறது அங்கு.
எல்லா வீடுகளும் ஆண்களின் வீடுகளாகவே இருக்கின்றன. இந்த சமூகத்தில் திருமணம் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது முழு ஆதிக்கம் செலுத்துவதற்கு உரிமையைத் தந்து விடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் மனதில் அன்புக்கு இடமிருப்பதிலை. தான் என்ன செய்தாலும் அதனை தாங்கிக்கொள்கிறவளாய் அவள் இருக்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்கு இருக்கிறது. அவளுக்கென்று சுயமான சிந்தனைகளும், செயல்களும் இல்லாமலே இருக்கின்றன. தவறி எதாவது இருந்தாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. காதலின் உணர்வுகளால் உந்தப்பெற்று அவள் எதாவது செய்தால் ரசிக்கப்படுவதில்லை. காதலித்த காலங்களை அவள் நினைவுபடுத்தினாலும் அவனுக்கு சுகமாய் இருப்பதில்லை. அவன் முற்றிலும் வேறொருவனாய் இருக்கிறான். "ஆண் சூரியனிலிருந்து வந்தவன். பெண் பூமியிலிருந்து வந்தவள். இருவரும் காதல் வயப்பட்டு உலவும் இடம் சந்திரனாக இருக்கிறது" என்று அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளுக்கு இப்போது அர்த்தம் இப்படியாகத்தான் தெரிகிறது. மனிதகுல வரலாறு உருவாக்கி வைத்திருக்கும் இந்த முரண்பாடுகளை அறியாமல், ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களை புரியாமல், காதலை பேசுவது என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும். நவீன காலத்தில், காதலின் பிரச்சினைகள் இங்குதான் வேர்கொண்டு இருக்கின்றன.
காதலிக்கும்போது தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்திற்குச் சம்பந்தமில்லாமல் இப்படி முரண்பாடுகளாய் இருப்பதை அறியும்போதுதான் அதிர்ச்சியடைகிறார்கள். பெண்களுக்கு, வில்லை ஒடித்து கை பிடித்த இராமராய் காட்சியளித்த ஆண்களே, திருமணத்திற்குப் பிறகு தூக்கிச் சென்ற இராவணர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆண்களுக்கோ சீதைகள் சூர்ப்பனகைகளாய்த் தெரிய மூக்கை அறுத்துக் கொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் இவை சின்னச் சின்ன எரிச்சல்களாகவும், தற்காலிக இடைவெளியாகவும் வெளிப்பட்டன. இன்று விவாகரத்துக்கு போகுமளவுக்கு வளர்ந்து விடுகிறது. அண்ணல் நோக்கியது, அவள் நோக்கியது எல்லாம் அக்கினிப் பிரவேசத்தில் பொசுங்கிப் போன கதைகளாகின்றன. பெண் தன்னை வெளிப்படுத்த துணிந்து விடுகிறாள். அது கலகமொழியாக வீடுகளிலிருந்து வருகின்றன. கல்லறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காவியக் காதல்களின் விழி பிதுங்குகின்றன. பிரமைகள் உடைபடுகின்றன.
கடந்த நூற்றாண்டு பெண்கள் தங்கள் அவலத்தை உணர ஆரம்பித்து அதை உடைத்தெறிய ஆரம்பித்த காலமாயிருக்கிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கம் ஏன் ஆணுக்கு மட்டும் இல்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டு முன்னுக்கு வருகிறது. நவீன தொழில் நுட்பமும், தொழில் மயமாக்கலும் பெண்களை வெளியே வரச் செய்திருக்கின்றன. குடும்பத்தின் உற்பத்திகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த பெண் இப்போது தானும் சமூக உற்பத்தியில் பங்கு பெறுகிறவளாக அங்கங்கு சில தடைகளை தாண்டியிருக்கிறாள். ஆண்களின் உலகம் இதனை எதிர்கொள்ள முடியாமல் எங்கே தனது காலம் அபகரிக்கப்படுமோ என அச்சம் கொள்கிறது. பெண்களின் உலகமோ எங்கே தனது காலம் இப்படியே கழிந்து விடுமோ என்று மீறலுக்கு தயாராகிறது. அதுதான் காதலிக்கும் போது இனிக்கிற காதல் சேர்ந்து வாழும் திருமணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிக்கிறது.
சமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.
இதிலிருந்துதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வு பூர்வமாக உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க வேண்டும்.
காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண் பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது. உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்கு புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை, சிறகுகள் மட்டும் போதும் என்பது போலத்தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது. இளமைப்பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும் போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப்பிழையாகி காணாமல் போய் விடுகிறது. "பதனீரை குடித்துவிட்டு பட்டையை தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்" என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.
இதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகிகளும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும் ஆண், பெண் உருவங்களை முன்நிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடுகிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.
பெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிடமிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது எல்லோரும் அழகானவர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள் அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்பமாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்து விட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.
ஆக்கிரமிக்கும் மனதில் அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன. தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைபிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக்காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அன்பு விபரீதமானது. இதை 'பொஸஸிவ்' என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதாநேரமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்களே வராது, வரக்கூடாது என்பதெல்லாம் அதீத கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கியமானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும். காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதை விட்டு காதலை தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின் அர்த்தம் இருக்கிறது. கலீல் கிப்ரானின் இந்த கவிதை அதைச் சொல்கிறது. 'ஈருடல் ஓருயிர்', 'காற்று கூட நம்மிடையே நுழையாது' என்று காதல் பற்றி சொல்லப் பட்டு வந்த எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டு உண்மையாய் ஒலிக்கிறது.
ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.
உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.
அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.
சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.
உங்கள் இதயத்தை கொடுங்கள். ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.
சேர்ந்தே நில்லுங்கள். ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.
கடைசி வரிகள் மிக முக்கியமானதாய் இருக்கின்றன. காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும். ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும் போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டு தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும் படியாக காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.
காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.
ஆதலினால் காதல் செய்வீர்!
(இது ஒரு மீள் பதிவு. மேலும் காதல் குறித்த பதிவுகள் இங்கே)
தமிழ்மணத்தில் ஒரு சந்தேகம்!
இன்று நான் பதிவு செய்திருந்த-
இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்
என்னும் தலைப்பில் என்ன தவறு இருக்கிறதென்று தெரியவில்லை.
1) இந்தப் பதிவு தமிழ்மணத்தின் முகப்பில் தெரியவில்லை.
2) வாசகர் பரிந்துரைப் பகுதியில் பதிவின் தலைப்பு தெரியவில்லை. ஓட்டுக்கள் மட்டுமே தெரிந்தன.
3) மறுமொழிகள் பகுதியிலும் பதிவின் தலைப்பு தெரியவில்லை. மறுமொழிகளின் எண்ணிக்கை மட்டுமே தெரிகின்றன.
விபரமறிந்தவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். மீண்டும் ஒருமுறை இதுபோல நிகழாமல் இருப்பதற்காக!
இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்
ஆணுக்கும், பெண்ணுக்குமான பிரத்யேக ரகசியங்கள் காலம்பூராவும் புதைந்து கிடக்கும் வெளி அது. உடல் ரீதியான மர்மங்களில் கிறுகிறுத்து, கள்ளம் பிறக்கும் விழிகளைத் திறந்து வைத்து, தரையில் கால் பாவாத காலத்தை ஒவ்வொருவரின் பதின்மப்பருவமும் கொண்டு வருகின்றன. அதில் பித்துப் பிடித்துப் போகிறவர்களும் உண்டு. எச்சரிக்கையோடும், பயத்தோடும் நின்று நின்று போகிறவர்களும் உண்டு. இன்னதென்று அறியாமலேயே பாரங்களைச் சுமந்து ஓடிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. அனுபவித்தவை அல்லது அனுபவிக்க முடியாமல் போனவை நிலைபெற்று சுகமான அல்லது வலிநிறைந்த நினைவுகளாகின்றன. சூழல்களுக்கு பெரும்பங்கு இருக்கின்றன.
எல்லாவற்றையும் அப்படியேச் சொல்வதில் தடைகளையும், மனத்தடைகளையும் அமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. விதிக்கப்பட்ட புரிதல்களே அளவுகோல்களாக நின்று கொண்டு இருக்க அதன் உயரத்திற்கு எல்லோரும் தங்களை குறுக்கிக் கொள்ள அல்லது நிமிர்த்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வேறு அபிப்பிராயங்களுக்கு இழுத்துச் சென்று விடுமோ என்னும் தயக்கங்கள் முன்வருகின்றன. இதில் ஆண்கள் புனைவுகளோடும், வெளிப்படையாகவும் சொல்வதற்கு வசதியிருக்கிறது. அவைகளை சாகசமாகவும், தீரமாகவும், வலியாகவும் புரிந்துகொள்ள மனிதர்கள் பழக்கப்பட்டு இருக்கின்றனர். உள்ளாடையின் கறைகள் பற்றி ஒரு ஆணுக்கு எழுத சாத்தியமாகிறது. பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடம் அது. மோனிகாலிவின்ஸ்கியின் உள்ளாடைக் கறையை மோப்பம் பிடித்துக்கிடந்த உலகம்தானே இது.
விடுங்கள். பதின்மப்பருவத்து அனுபவங்கள் எல்லோருக்குமானதுதான். எல்லோரும் கடந்து சென்றவைதான். இந்தத் தெளிவோடு அந்தப் பருவத்தை மீள்வாசிப்பு செய்வோமானால், அவை அழகாகவேத் தோன்றக்கூடும். எனக்கு அப்படியானதை மட்டுமே நான் இங்கு சொல்லத் துணிகிறேன். இது என் அளவுகோல். என் ஜன்னல்.
அரசியலிலும், சினிமாவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தினூடே அதன் பிரக்ஞைகளற்று எனது பதின்மப்பருவம் நகர்ந்திருக்கிறது. நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று ஏற்பட்டது. காமராஜர் இறந்தார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார். இந்திரா காந்தி தவிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்களின் பெயர்களை மக்கள் உச்சரித்தார்கள். சினிமா புதுப்பரிணாமம் கொண்டது. பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல், ரஜினி, வைரமுத்து என ஒவ்வொருவராக கனவுகளோடும், கனவுகளை விதைத்தபடியும் வந்தனர். எல்லாம் அழகாகவும், புதிதாகவும் விரிந்த காலம்.
”எனக்கே உரிய தனிமுறையில் ஒருகாலத்தில் நான் இன்பத்தை சுவைத்த இடங்களை இப்போது நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்ட நாட்களில் இவ்விடங்களுக்கு மீண்டும் போய்வர ஆசைப்படுகிறேன். திரும்பப்பெற முடியாதபடி மறைந்து விட்ட கடந்த காலத்துக்கு எனது நிகழ்காலத்தை இசைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.”
பனிபொழியும் பீட்டர்ஸ்பர்க் நகரத்து வெண்ணிற இரவுகளை படித்திருக்கவில்லையென்றாலும் கூட, தஸ்தாவஸ்கியின் இதுபோன்ற ஒரு வரியையாவது என்னாலும் எழுதி இருக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேகக்கூட்டங்கள் தரையில் விழுந்து கிடப்பது போல உப்புக் குவியல்கள், காற்றில் எப்போதும் இருக்கும் லேசான கரிப்பு இவைகளோடு என் பதின்மப் பருவத்து நாட்கள் ஆறுமுகனேரியில் பத்திரமாய் இருக்கின்றன. இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி என வாழ்ந்த சிறுவீடும், குறுகலான தெருக்களும் இதிகாசங்களில் பார்த்தனவாய் தெரிகின்றன.
பூவரச மரங்களும், வேப்ப மரங்களும், வாடாச்சி மரங்களுமான தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாசல் தெளிக்கும் தாவணிப் பெண்ணை அளந்து செல்கிறேன். டைரியில் அண்ணன் எழுதிய கவிதைகளைப் படித்து, நானும் எழுதிப் பார்க்கிறேன். வெயில் தகதகக்கும் தருவைக்காட்டில் மதியச் சாப்பாட்டை மறந்து, விக்னேஷ்வரன் போட்ட பந்தை ஏறியடிக்க முயன்று, ஏமாந்து ஸ்டம்ப் அவுட்டாகிப் போகிறேன். மூங்கில் தட்டியடைத்த வராண்டாவில் உட்கார்ந்து ரஞ்சன் புல்புல்தாரா வாசிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். “பெரியவர்களுக்கு அப்படி வருமாம்” என நண்பர்கள் சொல்ல, மொட்டை மாடியின் இருட்டில் போய் முயற்சித்து முயற்சித்து தண்டுவடத்தில் சுண்டிய வலியில் விம்மியும், பயந்தும் அப்புறம் அடங்கியும் போகிறேன். நகைகளை ஒவ்வொன்றாய் எங்கள் படிப்புக்காக கனரா வங்கியில் வைத்துவிட்டு கவரிங் நகைகளோடு வலம் வரும் அம்மாவைத் திடுமென அணைத்து கண்கள் மல்க விலகுகிறேன். ஒருமுறை கணக்கில் நூறுமார்க் வாங்காமல் 98 வாங்கியதற்காக அழுகிறேன். முதன்முறையாக தனிப்பைனி (தனிப்பதனீர் அதாவது ‘கள்’) இரண்டு மூன்று சொக்குகள் அடித்துவிட்டு தலைக் கிறுகிறுத்து பனைமரத் திரட்டில் நின்று சத்தம் போட்டு சிரிக்கிறேன். வாரம் ஒருமுறையோ, இருமுறையோ முக்காணி ரைஸ்மில்லில் இருந்து அப்பா வரும் இரவில், அம்மாவைத் தவிர வீடே உட்கார்ந்து ரம்மி விளையாட, அம்மா நடுவில் வைக்கும் அச்சுமுறுக்கை வேகமாக ஆளுக்கு முதலில் எடுக்கிறேன். நூலகம் சென்று குமுதம், ஆனந்தவிகடன், கல்கியில் வரும் அத்தனை சுஜாதா தொடர்கதைகளைப் படிக்கிறேன். அதில் வரும் ஜெயராஜ் படங்களின் பெண்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே...”, “செந்துராப் பூவே செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே..”, “ஆனந்த ராகம் கேட்கும் காலம்” பாடல்களில் காற்றாக கரைகிறேன். இதுதான் பதின்மப்பருவத்தில் நான்.
ஒன்பதாம் வகுப்பு படிக்க உயர்நிலைப்பள்ளி காயல்பட்டினம் போகிற ரோட்டில் பேயன்விளையில் இருந்தது. முதன்முதலாய் கோஎஜுகேஷன். வகுப்பில் அடிவாங்கக் கூடாது, முட்டி போடக்கூடாது என்பதில் பையன்கள் கவனமாயிருப்பார்கள். அங்கு படித்ததில் ஒரு பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் நினைவில் இப்போது இல்லை. அந்தப் பெண்ணை என் நண்பன் ஒருவன் காதலிப்பதாய் சொல்லிக்கொண்டான். அப்போதுதான் படித்து முடித்து, ஒருமாதமோ இரண்டு மாதமோ டிரெயினிங்கிற்கு வந்த ஒரு இளம் வாத்தியார் மீது அவள் கிறங்கிப் போயிருந்ததைப் பார்த்தேன்.
இன்னொன்றும் நினைவிலிருக்கிறது. அம்மன்புரத்தில் இருந்து வந்த திடகாத்திரமான மாணவன் ஒருவனை ஒரு வாத்தியார் அடிக்க, பெண்கள் முன்னால் பட்ட அவமானம் தாங்காமல், அவரைக் கீழே தள்ளி நையப்புடைத்து விட்டான் அவன். பள்ளியை விட்டு அனுப்பப்பட்டாலும் எங்களுக்குள் காவியத் தலைவனாக கொஞ்சகாலம் இருந்தான்.
ஆரம்பத்தில் கபடி விளையாட்டில் மும்முரம். தெருவுக்குத் தெரு டீம்கள் இருக்கும். பெரியவர்கள் டீமும் இருக்கும். சிறியவர்கள் டீமும் இருக்கும். நானும், தம்பியும் எங்கள் தெருவின் சிறியவர்கள் டீமில் முக்கிய விளையாட்டுக்காரர்கள். பாடிப் போவதிலும், பிடிக்க வந்தால் குதித்து, லாவகமாக தப்பிப்பதிலும், பாடிவந்தவனை முட்டித் தூக்குவதிலும் என் தம்பி வல்லவன். எனக்கும், அவனுக்கும் அதுபற்றியே பேச்சு இருக்கும். கபடி விளையாட்டில் தொடர் போட்டி நடத்துவார்கள். பெரிய பெரிய டீமெல்லாம் வரும். அப்பா, அண்ணன்கள், நான், தம்பி எல்லோரும் பார்க்கப் போவோம். “தேக்கரு ஹம் திவானா ஹை...”, “சுராலியே கே தும் நே..” இந்திப் பாடல்களுக்கு நடுவில், “இன்னும் சிறிது நேரத்தில் கபடி விளையாட்டு ஆரம்பிக்கப்படும்” என அறிவிப்புகள் கொடுக்கப்படும். டியூப் லைட்டின் பிரகாசமான வெளிச்சங்களுக்கு மத்தியில் அம்பயர் வந்து விசில் ஊதும் சத்தத்திற்காக, கயிறுகள் கட்டி வைத்திருக்கும் முன் வரிசையில் காத்து இருப்போம்.
பத்தாம் வகுப்பில் சங்கரராம சுப்பிரமணியன், நரசிம்மன் என்னும் இரண்டு பேர் அறிமுகமானார்கள். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் அவர்களது தந்தைகள் முறையே சீப் எஞ்சினியராகவும், டாக்டராகவும் இருந்தனர். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசுவார்கள். வேறொரு உலகத்து மனிதர்கள் போல இருக்கும். பள்ளியில் அவர்களுக்குத் தனிமரியாதை. காலாண்டுத்தேர்வில் விஞ்ஞானம், வரலாறு, பூகோளம், ஆங்கிலம் எல்லாவற்றிலும் அவர்களே முதல், இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். தமிழில் நான் முதல் மதிப்பெண் வாங்கினேன். அதைப் பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இப்ராஹிம் சார் வந்தார். கணக்கில் நான் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தேன். அவர்கள் தொண்ணூற்று ஐந்தோ, தொண்ணூற்று ஆறோதான் எடுத்திருந்தார்கள். நம்ப முடியாமல் என் பேப்பர்களை வாங்கிப் பார்த்தார்கள்.அதிலிருந்து நான் அவர்களுக்கு போட்டியானேன். என்னையும் தங்களோடு பழகுவதற்கு லாயக்கானவன் போல நடத்தினார்கள். பிரியமான நண்பர்களுமாயினர். அவர்களது வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் முன்னறையில் இருந்தார். பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். “யார்” என்றேன். சங்கரராமனின் அப்பாவின் அப்பாவாம். அப்போதே கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்றார். என் தாத்தாவை, என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். இடைவெளி புரிந்தது. கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்.
பதினொன்று படித்து முடிக்கும் வரை கால்ச்சட்டைதான். முதன்முதலாய் கைலி கட்டிக்கொண்டு வாசலைத் தாண்டி தெருவில் கால்வைக்க கூச்சமாயிருந்தது. தெருக்களின் அக்காக்கள் “இந்தா பாருங்களேன் மாதுவ..பெரிய மனுஷனாய்ட்டான்” என்று சிரித்தார்கள். பெருமையும் இருந்தது. வெட்கமும் இருந்தது. நடக்கும்போது தென்னியது. மடித்துக் கட்டினாலும் நன்றாக இருக்காது. ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.
பதினாறு, பதினேழு வயசான பிறகும் மெலிதான கருப்பில் பூனைமுடிகளோடுதான் மீசை இருந்தது. தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னின்று ஓரிரவில் எதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா என்பது போல பார்த்து முகம் சுருங்கிப் போவேன். நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன். யாரோ சொன்னது கேட்டு இரவுகளில் படுக்கப் போவதற்கு முன் தேங்காய் என்ணெய் தேய்த்து தவமாய் தவமிருந்தேன். இருபது வயதுக்கப்புறமே மீசையென்று ஒன்றானது. (“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)
இரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான். அவன் புண்ணியத்தில் பல பட்சிகள், அணில்களை சாப்பிட்டு இருக்கிறேன். அவனோடு ரெயில்வே லைனைத் தாண்டி நாங்களெல்லாம் காட்டுக்குள் (வேலிக்கருவேல மரங்கள் நிறைந்த பகுதி) போவோம். சில நேரங்களில் ஏழு, எட்டு அணில்களை அடித்து விடுவான். வீட்டிற்கு வந்து அவனே உரித்து, இடித்து, உருண்டைகளாக்கி, பொரித்து தருவான். அவனிடம் எப்போதுமே ஒரு பயம் இருக்கும். ஒருதடவை எதோ கிண்டல் செய்துவிட்டேன் என்று என்னை அடிக்கத் துரத்தினான். அங்குமிங்கும் ஓடி, கடைசியில் மாடிக்கு ஓடினேன். துரத்தி வந்தான். செத்தோம் என்றிருந்தது. பக்கத்தில் வந்துவிட்டான். “அய்யோ” என கத்தி மாடியிலிருந்து குதித்து விட்டேன். கால்களில் லேசான அதிர்ச்சி. அப்படியே விழுந்துவிட்டேன். வேறொன்றுமாகவில்லை. கேள்விப்பட்டு ஓடிவந்த அம்மா “ஏ...பாவி, எம்புள்ளயக் கொன்னுப்புட்டியே..” எனக் கத்த, அண்ணன் விக்கித்துப் போனான். எழுந்து உட்கார்ந்த பிறகு வீடு மட்டுமல்ல, தெருவே சிரித்தது.
அம்மாவைப் பெற்ற தாத்தாவும், ஆச்சியும் ஆறுமுகனேரியில்தான் அடுத்த தெருவில்தான் இருந்தார்கள். நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். தாத்தா இறந்ததும், அந்தப் பெரிய வீட்டில் ஆச்சி தனியாய் இருந்தார்கள். இரவுகளில் துணைக்கு நான் படுக்கப்போவேன். வீட்டுத்திண்ணையில் ஆச்சியிடம் பழக்கம்விட மேலும் சில பாட்டிகள் வருவார்கள். ஊர்க்கதைகளைக் கேட்கலாம். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற பெரிய நாவல்களையெல்லாம் படித்தது அந்த நாட்களில்தான். படுத்திருந்த முற்றத்திலிருந்து பார்த்தால் வானம், நட்சத்திரங்கள் தெரியும் அப்போது.
கோடை வாசஸ்தலம் என்றால் சாயர்புரம் அருகில் உள்ள நடுவக்குறிச்சியில் உள்ள எங்கள் பெரியம்மா வீடுதான். புத்தகங்களின் வீடு அது. பெரியம்மா மகன் முருகேசன் அண்ணன் தமிழில் வெளிவரும் அத்தனை தின, வார, மாத இதழ்களுக்கும் சந்தா கட்டியிருப்பர்கள்.சுற்றி பூஞ்செடிகளும், மா, கொய்யா, பலா மரங்களும் அடர்ந்திருக்கும். லீவெல்லாம் அங்குதான். தமிழ்வாணன் எழுதிய ஆண் பெண் உறவுகளுக்கான புத்தகங்கள் ஒரு அலமாரியில் ரகசியமாக அடுக்கி வைக்கப்பப்ட்டு இருந்தன. எதையோத் தேடிக்கொண்டு இருக்கும்போது அவை கண்ணில் பட, யாருக்கும் தெரியாமல் இதயம் படபடவென அடிக்க படித்தேன். காய்ச்சல் அடித்த மாதிரி இருந்தது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை.
சரியாக பதினைந்து முடிந்து பதினாறாவது வயதில் உயர்நிலைப்பள்ளி முடித்து, P.U.C படிக்க, திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரிக்குச் சென்றேன். அங்குதான் B.B.Aவும் படித்தேன். போவதும், வருவதும் டிரெயினில்தான். சரியாக இருபத்தைந்து நிமிடங்களாகும். சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும். எல்லாவற்றையும் வேல்ராஜ் கெடுத்தான். முகமெல்லாம் பருக்கள் நிரம்பி கரடுமுரடாய் இருப்பான். எங்கு நான் அமர்ந்திருந்தாலும் பக்கத்தில் வந்து பாடாய் படுத்துவான். அணைப்பான். “டார்லிங்” என்பான். நான் திமிறி விலகினாலும் விடமாட்டான். “உன்னை ரேப் செய்றேன்” என்பான். கூடியிருந்து சிரிப்பார்கள். அசிங்கமாய் இருக்கும். சட்டையெல்லாம் கசங்கிப் போகும். சிலசமயம் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிடுவான். ச்சீய் என்று தள்ளிவிடுவேன். ஒருநாள் அவன் சட்டையைக் கிழித்து கோபம் கொள்ளவும் செய்தேன். அதற்கும் சிரித்தான். அவன் ஏறுகிற கம்பார்ட்மெண்ட்டைத் தவிர்க்க ஒவ்வொருநாளும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கும். “ஒன்னோட ஆளு அங்க இருக்கான்” என்று காட்டிக்கொடுக்கவும் சிலர் இருந்தார்கள். P.U.Cயிலேயே பெயிலாகிப் போனான். அப்பாடாவென்றிருந்தது. கல்லூரியெல்லாம் முடித்த பிறகு ஒருதடவை அவனை சந்தித்தேன். பெரிய ஆளாய் இருந்தான். அச்சாபீஸ் நடத்திக்கொண்டு இருந்தான். கல்யாணமெல்லாம் முடிந்திருந்தது. ரொம்ப பாசமாய் கையைப் பிடித்துக்கொண்டு “அவனா இவன்” என்பது போல பேசினான்.
மூத்த அண்ணன் B.B.A முடித்துவிட்டு துத்துக்குடியில் ஒரு ஆடிட்டரிடம் C.A படித்துக்கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டிகாரனாய் இருந்தாலும் எந்நேரமும் பத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பான். கவிதைகள் எழுதுவான். அதில் ஒரு கவிதை மறக்கமுடியாதது. வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. விஷயம் இப்படி இருக்கும்.
”நான் அந்த மாந்தோப்பில் தினந்தோறும் நடந்து செல்கிறேன். தாழ்வான கிளையில் பூவொன்று பிஞ்சு பிடித்திருப்பதைப் பார்த்திருந்தேன்.. காயாகும், கனியாகும் என காத்திருந்தேன். ஒருநாள் அதனைக் காணவில்லை. வெம்பிக் கீழே உதிர்ந்து கிடந்தது”
அதில் இருந்த காதல் கதை நானறிவேன். பின்னாளில் ‘அழகி’ படம் பார்த்தபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.
முதலில் பனைமட்டை, தென்னை மட்டைகளை செதுக்கி, ரப்பர் பாலில் விளையாடினோம். முருகேசன், விக்னேஷ்வரன், நான், என் தம்பி தான் வெறிகொண்டு நிற்போம். நாளாக, நாளாக என் அண்ணன்கள், அண்ணனின் சில நண்பர்கள், விளையாட்டிலேயே ஈடுபாடு இல்லாத ரஞ்சன் என ஒரு செட் சேர்ந்தோம். ராஜ் கிரிக்கெட் கிளப் என சொல்லிக்கொண்டோம். கிரிக்கெட் மட்டையும், கார்க் பாலும் வாங்கினோம். பேடு கிடையாது. பந்துகள் முழங்காலுக்குக் கீழே பட்டால் உயிரே போய்விடும். ஜெயசீலனுக்கு ஒருதடவை ‘அங்கேயே’ பட்டுத் துடித்து விழுந்தான். அப்புறம் குதிக்க வைத்து மூத்திரம் எல்லாம் போகச் சொன்ன பிறகு சரியானது. இப்படியான கடும் பயிற்சிகளுக்குப் பிறகு ஒருதடவை சங்கரராம சுப்பிரமணியனிடம் சவால் விட்டோம். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் உள்ள பையன்களுக்கும் எங்களுக்கும் போட்டி வைத்தோம். கம்பெனிக்குள் கிரிக்கெட்டுக்கு என்று கிரவுண்டு இருந்தது. சிலோனில் இருந்து வந்த ராயப்பன் என்கிறவர் அவர்களின் கோச்சாக இருந்தார். விளையாடுவதற்கென்று தேவையான அனைத்து உபகரணங்களும் இருந்தன. எங்களை எளிதில் வென்றுவிட்டார்கள். நாங்கள் போட்ட பந்தையெல்லாம் சங்கரராமன் நொறுக்கிவிட்டான். கடும் சோகத்தோடு திரும்பினோம். நாங்களாகவே ‘அப்படி அடிக்கணும்’, ‘இப்படி அடிக்கணும்’, ‘இதுதான் ஸ்கொயர் கட்’, ‘இப்படி லாஃப்ட் செய்யணும்’ என்று சொல்லிக்கொள்வோம். நேரம் காலம் இல்லாமல் விளையாடுவோம். இரண்டு மாதம் கழித்து அடுத்த போட்டி. தாரங்கதாராவை வீழ்த்தினோம். என் இரண்டாம் அண்ணன் ஒபனிங் பேட்ஸ்மேனாகப் போய் கடுமையாக டிஃபன்ஸ் செய்ய, என் தம்பி, நான், விக்னேஷ்வரன் அடுத்து அடுத்து விளாசிவிட்டோம். அதன்பிறகு என்னையும், விக்னேஷ்வரனையும் தாரங்கதாரா கிரிக்கெட் டீமீல் சேர்த்துக் கொண்டார்கள். பிராக்டிஸெல்லாம் கொடுத்தார்கள்.
முதலாமாண்டு படிக்கும்போது, இறுதியாண்டு படித்த ஒரு மாணவர் ஒருவர் கல்லூரியில் தனித்து தெரிவார். அவரது ஸ்டைலும், மேனரிசமும் பிடிக்கும். கிரிக்கெட், டேபிள் டென்னிஸெல்லாம் பிரமாதமாக விளையாடுவார். பிரமிப்பாய் இருக்கும். எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்போது “ஹலோ” என்று புன்னகை உதிர்த்து அவர் பாட்டுக்கு போவார். லைப்ரரியில் வைத்து நெருக்கமானார். இலக்கியம் பேசுவார். மிகுந்த மரியாதையோடு இருப்பேன். கல்லூரியில் விழா நடந்த நாளின் இரவில் அவரோடு ஹாஸ்டலுக்குச் சென்று தங்கினேன். காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது. எதுவும் பேசாமல் அங்கிருந்து வீட்டிற்கு வந்தேன். பிறகு என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார். நேர் எதிரே வந்தாலும் மௌனமாக கடந்து செல்வார். பாவமாக இருந்தது. ஆரோக்கியமான உறவுகளைச் சின்னச் சின்ன பலவீனங்கள் கொன்று விடுகின்றன.
வீட்டில் பணக்கஷ்டம். முக்காணியில் அப்பா குத்தகை எடுத்து நடத்தி வந்த ரைஸ்மில்லில் நிறைய பிரச்சினைகள். நிறைய கடன்கள் ஆகிவிட்டன. அப்பா எல்லாவற்றையும் அப்படியே பாதியில் விட்டு விட்டு சென்னைக்குச் சென்று விட்டார்கள். பி.யூ.சி முடித்திருந்த இரண்டாவது அண்ணன் ரைஸ்மில்லுக்குச் சென்று, நிர்வாகம் செய்து, கடன்களை அடைத்துக்கொண்டு இருந்தான்.
வீட்டுக்கு பக்கத்தில் நாங்கள் படித்த நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பழைய மாணவர்கள் என்னும் தோரணையில் நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தையெடுத்து...’ பாடல் ஒலித்த உற்சாகமான வேளையில் கூட்டத்திற்குள் அவளைப் பார்த்தேன். ஒல்லியாய் அழகாய் இருந்தாள். அவளும் பார்த்தாள். பிறகு காலைகளில் பஸ் நிறுத்தத்தில் நின்று அவள் பள்ளிக்குப் போவதைப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தனை கூட்டத்திலும் சட்டென ஒரு பார்வை தந்து போவாள். என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். நான் “நீ நின்ற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கும், நீ பார்த்த இடத்தில் பசுமை பூத்தொடுக்கும்” என கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் கூட பேசியது இல்லை. அவளது மாமன் பையன் ஒருநாள் சில பயல்களோடு அடிக்க வந்தான். அவன் கட்டிக்கிற போகிறவளாம். நான் ஒழுங்காய் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பின்னாட்களில் அவனை சென்னை அமைந்தகரையில் ஒரு ஒயின்ஷாப்பில் பார்த்தேன். அங்கே அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவளையும் பார்த்தேன் ஊரில். குழந்தையோடு பெரியவளாய் திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தாள்.
அண்ணன் B.B.A படித்தான் என்று நானும் படித்திருக்கக் கூடாது என நினைத்துக் கொள்வேன். எனக்கு விருப்பமான கணிதத்தையே தேர்வு செய்திருக்க வேண்டும்(எதைப்படித்தால் என்ன, படித்தவைகளுக்கு ஏற்பவா வேலை பார்க்கிறோம்!) . Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும். ஜன்னல் வழியே தூரத்துக் கடலைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். பிரபாகர் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டு இருப்பான். செஸ் விளையாடும் சுப்பிரமணிய ஆதித்தனுடனும், பாலசுப்பிரமணியனுடனும் நெருக்கமானேன். சாய்ங்காலங்களில் அடர்ந்த புங்கை மரங்களடியில் உட்கார்ந்து சுஜாதாவையும், பாலகுமாரனையும் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.
கல்லூரிக்குப் பின்னால் உள்ள கடற்கரையில் எங்கள் கல்லூரியின் கடைசி நாளன்று பைத்தியம் பிடித்துப் போனோம். பாடினோம். ஆடினோம். அழுதோம். இரவெல்லாம் கிடந்து விடிகாலையில் வீட்டிற்கு வந்தேன். பேதலித்துப் போனேன் சில நாட்கள்.
எல்லாம் சட்டென கலைந்து போனது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. Air forceல் வேலைக்குச் சேர்ந்து இராஜஸ்தான் போய்விட்டான் தம்பி. இரண்டாவது அண்ணனுக்கு தினத்தந்தியில் வேலை கிடைத்து கோயம்புத்தூர் சென்றிருந்தான். மூத்த அண்ணனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருந்தது. தங்கையோ தூத்துக்குடியில் பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தாள். வீடு வெறிச்சோடி இருந்தது. நண்பர்களும் பலர் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இரண்டு மூன்று வங்கித் தேர்வுகள் எழுதினேன். தெருக்களில் தனியனாய் நடந்து திரிந்தேன். புதுக்குளத்தில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. சாயங்காலத்தில் பச்சைச் சம்புகளில் தூக்கணாங்குருவிகள் அடைந்து கத்திக்கிடந்தன. சிகரெட் பிடிக்கப் பழகினேன். நூலகத்திலேயே கிடந்தேன். இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ படித்து இழப்பின் வேதனைகளை அனுபவித்தேன். சென்னையில் மாமா வீட்டில் தங்கியிருந்த அண்ணன் என்னை அழைத்தான். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் ஏஜண்ட்டாக சில மாதங்கள் இருந்தேன். பிடிக்கவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். தகராறில் மார்க்கெட்டிங் மேனேஜர் சட்டையைப் பிடித்து சுவரில் தள்ளிவிட்டு வந்தேன். பாண்டிச்சேரியில் சிங் ஒருத்தர் நடத்திய ஒயின்ஷாப்புகளுக்கு இரண்டு மூன்று வருடக்கணக்குகளை எழுதிக்கொடுக்க அண்ணன் அனுப்பி வைத்தான். பத்து நாட்கள் போல இருந்தேன். தண்ணியடிக்கப் பழகினேன். கே.கே.நகரில் வாடகை வீடு பார்த்து அம்மாவையும் ஊரிலிருந்து அழைத்து வந்து தங்கினோம். ராம் தியேட்டரில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது.
இந்தத் தொடருக்கு என்னை அழைத்த ராகவனுக்கு நன்றி. இபோது நான் அழைக்க விரும்புவது.... அவர்கள் விரும்பினால்..... சுரேஷ்கண்ணன், தமிழ்நதி, ரிஷபன் ஆகியோரை!
நீ இல்லாத நீ
ஒரு தவிர்த்தலின் நிமித்தம்
எட்டிப் போடுகிறாய் நடையை
உனது நடையற்ற நடை
காட்டிக் கொடுக்கிறது உன்னை
ஓர் அச்சத்தின் பாற்பட்டு
வேகப்படுத்துகிறாய் பேச்சை
உனது பேச்சற்ற பேச்சு
மாட்டி வைக்கிறது உன்னை
ஒரு பிடிவாதத்தின் உந்துதலில்
மறுத்து எறிகிறாய் கவிதையை
உனது மறுப்பற்ற மறுப்பு
காத்தளிக்கிறது உன்னை
- எஸ்.வி. வேணுகோபாலன்
அழகும், அர்த்தமும் கொண்ட சில தருணங்கள்
சென்ற வாரம் வரை நானும் நண்பர்களுடன் இந்த பிப்ரவரி 16ம் தேதி இராஜஸ்தான் செல்வதாகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். வீட்டில் அம்மு சம்மதித்து இருந்தாள். டிக்கெட்டும் ரிசர்வ் செய்தாகிவிட்டது. பிளஸ் டூ படிக்கும் என் மகள் பிரீத்து ‘நீங்க போக வேண்டாம்ப்பா” என்று கேட்டுக்கொண்டாள். அவளுக்கு மார்ச் 1ம் தேதி முதல் தேர்வு ஆரம்பிக்கிறது. இராஜஸ்தான் சென்றால், நான் பிப்ரவரி 27ம் தேதிதான் திரும்ப முடியும். எங்கள் அகில இந்திய சங்க மாநாடு மூன்று நாட்கள் சிகாரில் நடைபெறுகிறது. ஜெய்ப்பூர் போன்ற முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் என திட்டமிடப்பட்டு இருந்தது.
நானும் வீட்டில் இருக்க வேண்டும் என மகளுக்குத் தோன்றியது ஏன் என இப்போதும் பிடிபடாமல் இருக்கிறது. அவளிடம் கேட்கவுமில்லை. அவளது படிப்பில் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொண்டவனாக என்னைச் சொல்ல முடியாது. படிப்பதும், அதிக மதிப்பெண் எடுப்பதும் முக்கியமென எப்போதாவது அவளிடம் பேசுவேன். அவ்வளவுதான். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போது நான் சிலநாட்கள் வெளியூர் சென்று வந்தால், உடனே என்னிடம் வரமாட்டாள். முகம் திருப்பிக்கொள்வாள். வாரி அணைத்துக்கொண்டால், கண்கலங்குவாள். ஆச்சரியமாயிருக்கும். இப்போதெல்லாம் அப்படியில்லை. அவளது பிரியங்களை, செல்லங்களை, வம்புகளையெல்லாம் அம்மாவிடம்தான் மொத்தமாய்க் காட்டுகிறாள். எதற்கும் என்னைத் தேடுகிறவளாக இருப்பதில்லை. அவளுக்குள் எங்கோ அந்த கைக்குழந்தை இன்னும் இருப்பதாக புரிந்து சந்தோஷம் கொள்கிறேன். அவள் பேச்சைத் தட்டாமல் இருப்பதே அவளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இந்த தேர்வு முடிந்ததும் உயர் படிப்பு, வேலை, திருமணம் எனவாகி, இனி அவள் இந்த வீட்டில் இருக்கும் நாட்களையெல்லாம் எதிர்பார்த்து எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். எனவே மறுப்பேதும் சொல்லாமல் பயணத்தை ரத்து செய்துவிட்டேன். இதையெல்லாம் தோழன் காமராஜ் புரிந்துகொண்டாலும் அவனுக்குள் வருத்தமிருப்பதை உணர்கிறேன். நானில்லாமல் இப்படி அகில இந்திய மாநாடுகளுக்கு அவன் சென்றதில்லை.
டெல்லி, கல்கத்தா பலமுறை சென்றிருக்கிறேன். ஆனாலும் நண்பர்கள் பலரோடு ரெயில் பயணம் செய்வது அலாதியானது. காற்று முகத்தில் அடிக்கும் சுகமானது. உரையாடல்களின் வெளி நெருக்கமானதாகவும், அந்நியோன்யமானதாகவும் இருக்கும். வயது, லௌகீக வாழ்வின் இறுக்கம் எல்லாம் விலகி சிறகுகள் முளைக்கும். எதோ ஒரு பிளாட்பாரத்தில் இறங்கி, முகம் தெரியாத மனிதர்களுடன் கலந்து சென்று, வாழைப்பழங்கள் வாங்கிக்கொண்டு, நம் பெட்டி பார்த்து ஏறுவது போன்ற கணங்கள் இப்படியான பிரயாணங்களின் பிரத்யேக அடையாளங்கள்.
முதன் முதலாக இதுபோன்ற பிப்ரவரி மாதத்தில் 1986ம் ஆண்டு ஒரு அகில இந்திய மாநாட்டிற்கு கட்டாக் சென்ற ரெயில் இன்னமும் எனக்குள் நிற்காமல் ஒடிக்கொண்டு இருக்கிறது.
‘அக்கினிக்குஞ்சு’ என்று வெளிவந்த எங்கள் சங்கப் பத்திரிகையில் தொட்டிலில் இருக்கும் குழந்தையின் பிஞ்சுக்கரங்களில் ஸ்பேனர் ஒன்றிருப்பதாக வரைந்து 'Baba black sheep, Have you any tool?, Yes sir Yes sir, To make you a fool' என்று குழந்தைத் தொழிலாளருக்கு எதிராக ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தேன். அதைப் பார்த்துப் பாராட்டிய எங்கள் சங்கப் பொதுச்செயலாளர் தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் (இப்போது ‘ராமையாவின் குடிசை’ மற்றும் ‘என்று தணியும்’ போன்ற ஆவணப்படங்களை இயக்கியவர்)அகில இந்திய மாநாட்டு அரங்கில் வைக்க, தமிழ்நாட்டிலிருந்து இதுபோல கார்ட்டூன்கள் வரைந்து கொண்டு சென்றால் என்ன என்றார். உற்சாகமாய் தலையசைத்தேன். அன்று சாயங்காலமே மதுரைக்கு அழைத்துச் சென்று போர்டுகள், பிரஷ், பெயிண்ட் என நான் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்தார். அவருடைய அறையில் தங்கி வரைய ஆரம்பித்தேன்.
அருகில் உட்கார்ந்து என்ன கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை கிருஷ்ணகுமார் விவரிப்பார். அமெரிக்காவின் அத்துமீறல்களைச் சொல்வார். அப்போது லிபியாவைப்பார்த்து ஏகாதிபத்தியம் உறுமிக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் பெண் பிரதமர் தாட்சர் அதற்கு உடந்தையென்பார். உமர்முக்தாரைப்பற்றிச் சொல்வார். ராஜீவ்காந்தியின் நவோதயாப்பள்ளி பற்றி பேசுவார். இரவுகளில் பஜாருக்குச் சென்று வாழைப்பழங்களும், டீயும், சிகரெட்டும் வாங்கி வந்து தருவார். நான் வரைந்து கொண்டேயிருப்பேன். அருகில் காமராஜ் அவன் பங்குக்கு வர்ணம் தீட்டுவான். வரைந்த படங்களுக்கு எழுத்துக்கள் சேர்ப்பான். கம்ப்யூட்டரின் கால்களுக்கு அடியில் நசுங்கிக்கிடக்கும் மனிதர்களை வரைந்து 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்று தலைப்பிட்டு ஒரு கார்ட்டூன், உடல் முழுவதும் நீலம்பாரித்த தாயிடம் பால் குடிக்கும் குழந்தையும் தூரத்து கருப்பு இருட்டில் போபாலின் விஷவாய் கசியும் யூனியன் கார்பைட்டுமாய் ஒரு படம், பீரங்கியின் வாயிலிருந்து புறாக்கள் பறந்து செல்ல சிகப்பு எழுத்துக்களில் ‘we war for peace' என்னும் லெனின் வாசகம் கொண்ட படம் என நிறைந்தன. தகித்துக் கொண்டிருந்த சாத்தூரின் வெப்பம் அந்த இரவுகளில் எங்கள் மீது படிந்துகொண்டு இருந்தது. இரண்டு நாட்களில் மேலும் இரண்டு தோழர்கள் படம் வரைய சேர்ந்து கொண்டார்கள். கிருஷ்ணகுமாரின் அறை எங்கள் வண்ணங்களால் குழைந்து போனது. தரையெல்லாம் சிகப்பு, பச்சை, மஞ்சள் வண்ணச் சிதறல்கள். ஐந்து நாட்களில் நாற்பது படங்களுக்கு மேல் வரைந்து முடித்திருந்தோம். அவைகளை கவனமாக சேர்த்து பெரிய பாலிதீன் பைகளில் மடிக்காமல் வைத்து கட்டி, அதை கட்டாக் வரை பாதுகாப்பாக கொண்டு வர ஒரு தோழரையும் கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் வல்லபாயிடம் சென்று பயணத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்படும் மருந்துகளை வாங்கி வந்தார்.
சாத்தூரிலிருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இரவு ரெயில் பெட்டிகளின் மங்கலான வெளிச்சத்தில் அசைந்தபடி இருந்தது. மதுரையில் மேலும் தோழர்கள் சேர்ந்துகொள்ள ரெயில் பாட ஆரம்பித்தது. ஆட்டமும், கைதட்டல்களுமாய் சென்னையின் காலை வந்தது. கிருஷ்ணகுமாரிடமும் காமராஜிடமும் சொல்லிவிட்டு ஹிக்கின்பாதம்ஸில் காத்திருந்தேன். காயிதே மில்லத்திலிருந்து கொஞ்சநேரம் கழித்து அம்மு வந்தாள். சந்தடியும், சத்தமும் மிக்க மவுண்ட் ரோட்டில் பேசித்திரிந்தோம். வள்ளுவர் கோட்டம் போய் அவளது டிபன்பாக்ஸில் இருந்து மதிய உணவை பகிர்ந்துகொண்டோம். சாயங்காலம் அவளிடம் விடைபெற்று தோழர்களோடு வந்து சேர்ந்து கொண்டேன். டி.ஆர்.இ.யூ தோழர்கள் மூலம் ஒரு காரேஜ் பிடித்து அதில் பேனர்களை கட்டியிருந்தார்கள். சங்கரலிங்கம் "என்ன மாப்பிள்ள...மவுண்ட் ரோட்டுல ஒரு பொண்ணோட உன்னப் பாத்தேனே" என்றார். "வேற யாரையாவது பாத்திருப்பீங்க "என்று சொல்லிவிட்டு ரெயில் புறப்படும் முன்னாலேயே மேல் பர்த்தில் போய் படுத்துக்கொண்டேன். யாரும் கலைக்காத தனிமை அப்போது வேண்டியிருந்தது. முந்தைய நாளின் உற்சாகமில்லை. எதையோ இழந்தது போலிருந்தது.
காலை விடிந்தபிறகும் எல்லோரோடும் முழுமையாக கலந்துகொள்ள முடியாமல் ஒரு அவஸ்தையிருந்தது. வயல்வெளிகளும், கிராமங்களும், மலைகளும், நதிகளும், கட்டிடங்களால் நிறைந்த நகரங்களெல்லாம் இரண்டு பக்கமும் பின்னோக்கிச் செல்ல நாங்கள் ஒருநாள் முழுக்க பயணமாகிக்கொண்டு இருந்தோம். பைத்ரானி நதியின் மீது சென்ற அடுத்தநாள் விடியாத காலையில் தோழர்கள் இறங்கத் தயாரனார்கள். கட்டாக் ஸ்டேஷன் நெருங்கிய போது குளிரெல்லாம் விறைத்துப் போக "AIRRBEA ஜிந்தாபாத்” என்று கோஷம் உஷ்ணத்தோடு எழும்பியது. வரவேற்க நின்றிருந்த ஒரிசா தோழர்களும் கோஷங்கள் எழுப்ப குரல்களின் சங்கமிப்பில் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றோம்.
பர்பாத்தி ஸ்டேடியத்தில்தான் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் தங்கினோம். முன்பின் தெரியாத, வேறு வேறு மாநிலத்திலிருந்து வந்த தோழர்கள் நேருக்கு நேர் சந்திக்கிற போதெல்லாம் "AIRRBEA ஜிந்தாபாத்” என்று சொல்லிக்கொண்டார்கள். வரிசையாக வைக்கப்பட்டு இருந்த கார்ட்டூன்களைப் பார்த்தபடி தோழர்கள் நின்ற காட்சியில் பெரும் சந்தோஷமும், திருப்தியும் இருந்தது. பிரதிநிதிகள் மாநாட்டில் பெரும்பாலும் இந்தியிலேயே பேசினார்கள். எல்லோரும் "வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தை பெற்றே தீருவது" என்று ஆவேசமாகப் பேசினார்கள். கடுகு எண்ணெயில் தயாரித்திருந்த உணவு வகைகள், பரிமாறியவர்கள் காட்டிய புன்சிரிப்பில்தான் உள்ளுக்குள் இறங்கின. அன்று இரவு அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகுமார் மேடையருகே சென்று எதோ சொன்னார். ஒரு அறிவிப்பாளர் “தோழர் மாதவராஜ் மேடைக்கு வந்து ஆடுமாறு அழைக்கிறோம்” என ஆங்கிலத்தில் சொல்ல, எங்களோடு வந்திருந்தவர்கள் ஆரவாரித்தனர். நடுக்கமாயிருந்தது. காமராஜ் தள்ளிவிட்டான். ஒரு தோழர் குளிருக்கு காதை மறைத்து கட்டியிருந்த மப்ளரை உருவி, இடுப்பில் கட்டிக்கொண்டு மேடையில் ஆட ஆரம்பித்தேன். கைதட்டல்களும், விசில்களும் பறந்தன. பஞ்சாபில் இருந்து வந்திருந்த சீக்கியத் தோழர்களில் இருவர் கையைத் தூக்கிக்கொண்டு வந்து சேர்ந்துகொள்ள களை கட்டியது.
அடுத்தநாள் அகில இந்திய சங்கத் தலைவர் தோழர் அசிஸ்சென் பேசினார். லேசாய் கரகரத்த அந்த குரல் மாநாட்டு அரங்கம் முழுவதையும் பற்றிக் கொண்டது.
"1930களில் இம்பீரியல் பேங்க்கில், அதாவது இப்போதைய ஸ்டேட் பேங்க்கில் சங்கம் உருவாக்குவதற்கான ரகசிய வேலைகள் நடைபெற்று வந்தன. அந்த காரியத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் டைப்பிஸ்ட் ஒருவர். நிர்வாகம் அவரை அழைத்து ஒரே சமயத்தில் இரண்டு உத்தரவுகளை கொடுத்து, அவருக்கு விருப்பமான ஒன்றை மட்டும் டைப் அடிக்கச் சொன்னது. ஒன்று அந்த டைப்பிஸ்ட்டின் பிரமோஷன் ஆர்டர். இன்னொன்று டிஸ்மிஸ் ஆர்டர். டைப்பிஸ்ட்டுக்கு புரிந்தது. சங்கம் ஆரம்பிப்பதை நிறுத்திவிட்டால் அவர் தனது பிரமோஷன் ஆர்டரை அடித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்மிஸ் ஆர்டரை அடித்துக் கொள்ளலாம்.
அந்த டைப்பிஸ்ட் டைப் செய்தார்... அவரது டிஸ்மிஸ் ஆர்டரை! ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அந்த மனிதர் வாழ்க்கையில் பிற்பாடு மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளானார். துணிகள் தைத்து தெருத்தெருவாய் விற்றார். ஸ்வெட்டர் விற்றார். இப்படி எத்தனை எத்தனையோ.... சிறுவேலைகள், தொழில்கள் செய்து வாழ்க்கை முழுவதும் துயரங்கள் மட்டுமே சந்தித்தார். ஆனாலும் ஒருநாள்கூட தான் செய்தது தவறு என்று எண்ணி வருத்தப்படவில்லை. அந்த மனிதர்தான் எனது தந்தை என்பது இங்கே முக்கியமான விஷயமில்லை. அவரைப் போன்றவர்கள் கஷ்டப்பட்டதால்தான் இன்றுள்ளவர்கள் ஓரளவுக்காவது வளர்ந்திருக்கிறோம். தியாகங்களும் சோதனைகளும் நிறைந்த போராட்டமே நல்ல வாழ்க்கைக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது. அதுபோல நாமும் பிரச்சினைகளை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்"
முன்வரிசையில் உட்கார்ந்திருந்த தோழர்கள் எழுந்து "ஜிந்தாபாத் ஜிந்தாபாத் ”AIRRBEA ஜிந்தாபாத்.... ஜிந்தாபாத் ஜிந்தாபாத் காம்ரேட் அசிஸ்சென் ஜிந்தாபாத்" என்று நரம்பெல்லாம் உஷ்ணமாக கோஷம் போட்டனர். அன்று இரவு உணவுக்குச் சென்ற போது, அந்த ஹாலின் முன்வரிசையில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த தோழரிடம் பேசிக்கொண்டே சப்பாத்தியை கடித்துக் கொண்டிருந்த தோழர் அசிஸ்சென்னை பார்த்தேன். சாதாரணமாக காட்சியளித்த அந்த மனிதருக்குள் ஒரு அசாதாரணமான உறுதி இருந்தது.
இரண்டு நாட்கள் மாநாடு நடந்து முடிந்த பிறகு, நந்தன்கானா, சூரியக்கடவுள் கோவில் என சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வந்தோம். அங்கும் கோஷங்கள் எழுப்பி ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ரெயிவே ஸ்டேஷனில் "தேரே மேரே பீச்சுமே ஹெய்ஸா ஹேயே பந்தன் " என்று காமராஜ் உருகிப் பாடிய போது அங்குள்ளவர்கள் சுற்றிநின்று ரசித்துக் கைதட்டினார்கள். அங்கும் "AIRRBEA ஜிந்தாபாத்” என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். மூன்றாம்நாள் இரவில் திரும்பினோம். பர்பாத்தி ஸ்டேடியத்தை விட்டு வெளியே வரும் போது எதுவும் சொல்லத் தோன்றாமல், மனதெல்லாம் இளகிப் போயிருந்தது. இனி இந்த மனிதர்களை எப்போது சந்திக்கப் போகிறோம் என்று ஏக்கமாய் வந்தது. பைத்ரானி நதியை கடக்கிறபோது உற்சாகமாகவும் இருந்தது. தவிப்பாகவும் இருந்தது. ஒரே இடத்தில் தங்கி, பழகி, சிரித்து, உரையாடிய தருணங்கள் மனதிற்குள் நிரம்பி ததும்புகின்றன. மொழி தெரியாத, முன்பின் தெரியாத இடமாயிருந்தாலும், மனிதர்களாயிருந்தாலும் எல்லோரோடும் சேர்ந்து இருக்கிற வாழ்க்கை, கொஞ்ச காலமாயிருந்தாலும் அர்த்தமுள்ளதாய் விடுகிறது.
தோழர்கள் இராஜஸ்தான் சென்று திரும்பி வருவார்கள். அனுபவங்களை காமராஜிடம் கேட்க ஆவலாய் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் என் மகள் சொன்னாள்: “எனக்கு எக்ஸாம் முடிஞ்சப் பிறகு நாம எல்லாரும் ஜாலியா ஒரு டிரிப் போவோம்ப்பா” . உற்சாகமாய் தலையாட்டினேன் அதற்கும் .
சொல்லித் தெரிவதில்லை - 3
அவன் கண்விழித்தான். அவள் எழுந்துபோய்விட்டிருந்தாள். படுக்கையில் சில பூக்கள் இருந்தன. குண்டு குண்டாயிருந்த அந்த அத்தை நேற்றிரவு இங்கே செண்ட்டை அடித்து, “இப்போ உள்ள போங்க மாப்பிள்ளை..” என கண்ணடித்து அனுப்பிவைத்தபோது இருந்த கிறங்க வைக்கும் வாசம் அறை முழுக்க இன்னும் இருந்தது. அய்யோ, அந்த அத்தை அவனைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. “நிறைய சாப்பிட்டு தூங்கிறாதீங்க மாப்பிள்ளை...”, “கொஞ்சம் கடலைமிட்டாய் சாப்பிடுங்க மாப்பிள்ளை. இன்னிக்கு நல்லது..” இப்படியே கலாய்த்திருந்தார்கள். பெண்ணின் சித்தியா, பக்கத்து விட்டு அக்காவா என்று சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. நேற்றிரவு என்ன நடந்தது என்பதையெல்லாம் அவள் இப்போது அந்த அத்தையிடம் சொல்லியிருப்பாளோ என்றிருந்தது. வெளியேச் செல்ல கூச்சப்பட்டான்.
சிறிது நேரத்தில் அவளே வந்தாள். முகத்தைப் பார்க்க அவனுக்கு முடியவில்லை. காபியை வைத்துவிட்டு, கொஞ்சம் தயங்கி நின்ற மாதிரியிருந்தது, சட்டென்று பொங்கி வந்த சிரிப்பை அடக்கி, வாயைப் பொத்திக்கொண்டு வேகமாகச் சென்றாள். படபடவென்று ஆனான். “என்ன, மாப்பிள்ள இன்னும் தூங்குறாரா..” என்று அத்தையின் குரலும், “இல்ல முழிச்சுட்டாங்க’ என்று அவள் சொல்வதும் லேசாய் காதில் கேட்டது.
அவன் வெளியே வந்தபோது சரியாக அந்த அத்தைதான் எதிரே சில பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். “ஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவராயிருப்பீங்கன்னு நெனைக்கலய மாப்பிள்ள...” என்று போகிற போக்கில் சொன்னார்கள். குத்தியது என்றாலும் அதற்குள்ளாகவா எல்லாவற்றையும் அவள் சொல்லியிருப்பாள் எனவும் பட்டது. அத்தையை தவிர்ப்பது என்று உறுதி செய்துகொண்டான். குழந்தைகளுடன் பேசுவது, அவர்களுடன் விளையாடுவது என்றிருந்தான். “மாப்பிள்ள குழந்தைங்க கூடவே இருந்து குழந்தையாகவே ஆயிராதீங்க. கொஞ்சம் எங்கள மாரி பெரியவங்கக் கிட்டயும் பேசுங்க, பழகுங்க..” என்றார்கள் அத்தை வலிய வந்து. எப்போது இந்த வீட்டை விட்டுத் தங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றிருந்தது அவனுக்கு.
மதியம் சாப்பிட்டு முடித்ததும், வெத்திலையை கொண்டு அவன் முன் வைத்துவிட்டு “இந்த ஆடு, மாடு, கோழிக்குத் தெரிறது கூட உங்களுக்குத் தெரியலயா” என்று வேறு அத்தை கேட்டார்கள். அவமானமாய் இருந்தது. அவள் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள் என்பது புரிந்தது. அவளை அழைத்து, “இதையெல்லாமா சொல்வார்கள்....” என்று முறைப்பாக சொல்ல நினைத்து முணுமுணுத்து முடித்தான்.
சாயங்காலத்திலிருந்து அத்தையின் அட்டகாசங்கள் அதிகமாயின. இப்போது அவனைப் பார்க்கும் போதெல்லாம் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே” என்று பாட ஆரம்பித்தார்கள். அய்யோ, அய்யோ என்றிருந்தது அவனுக்கு. வீட்டிலும் சிலர், “என்ன இந்தப் பாட்டையே திரும்பத் திரும்ப பாடுறீங்க..” என்று கேட்டார்கள். அத்தை சிரித்துக் கொண்டு அவனைப் பார்த்தார்கள்.
அவளுக்கோ தனது மனிதனை பார்க்க பாவமாயிருந்தது. ஆனாலும் ரசித்தாள். எப்படியும் அவனே ஞானம் பெற்றுவிடுவான் என்பதையும் அந்த அத்தையே அவளிடம் சொல்லி இருந்தார்கள்.
சினிமா என்னும் மொழி
உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும்போது லேசாய் தலை சுற்றுவதையும், உள்ளங்காலில் குறுகுறுக்கும் அதிர்ச்சியையும் உணர முடிந்த மனிதர்களுக்கு ஒரு காட்சியை இங்கு நினைவுபடுத்துகிறேன். அல்லது அறிமுகப்படுத்துகிறேன்.
பாலத்திலிருந்து நீட்டி வைக்கப்பட்டு இருக்கும் அந்தப் பலகையின் மீது இரண்டு பூட்ஸ் கால்கள் தெரிகின்றன. அதற்கு வெகு கீழே ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்கோ சில பறவைகளின் சத்தம் கேட்கிறது.
கதிகலக்கத்தை தந்தபடி, இப்படியொரு கோணத்திலான காட்சி திடுமென ஞாபகத்தில் வந்து செல்கிறது. படம் பார்த்தால் அல்லது பார்த்திருந்தால் அந்த பூட்ஸ்களுக்குரிய மனிதன், கால்களும், கைகளும் கட்டி வைக்கப் பட்டு நிற்பவன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தூக்குக் கயிற்றின் முடிச்சு அவனது கழுத்தை நெறிக்கத் தயாராக இருப்பது தெரிந்திருக்கும். அவன் நின்று கொண்டு இருக்கும் பலகையின் இன்னொரு முனையை, இராணுவ உடைக்காரன் ஒருவன் அழுத்திக் கொண்டு இருப்பதும் ஏற்கனவே தெரிந்திருக்கும். அவன் அதை தளர்த்தினால் பலகையின் இன்னொரு முனை விழும் என்பதும், அதில் நின்றுகொண்டு இருக்கும் மனிதன் சரிந்த கழுத்தோடு அந்தரத்தில் ஆற்றுக்கு மேலே தொங்கிக்கொண்டு இருக்கப் போகிறான் என்பதும் புரிந்திருக்கும்.
கண்களை அவன் இறுக்க மூடுகிறான். மரணத்தின் கணங்கள் பேசத் துவங்குகின்றன பார்வையாளனுக்குள். ஒரு மரத்தினடியிலிருந்து அன்பு ததும்ப ஒரு பெண் கைகள் நீட்டி எதிர்வருகிறாள். அவளுக்குப் பின்னால் புல் விரிந்த தோட்டத்தில் ஒரு சிறுமி ஊஞ்சலாட, ஒரு சிறுவன் ஓடிக்கொண்டு இருக்கிறான். திரும்பவும் அவன் கண்கள் திறக்கின்றன. வாட்சின் டிக் டிக் சத்தம் பெரிதாக நிசப்தத்தில் கேட்கிறது. கண்ணீர்க் கோடுகள் நீள்கின்றன. சினிமா என்னும் மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட கதையொன்று இப்படியாக அந்த வனாந்தரத்தில் நிகழ்கிறது.
An Occurance at owl Greek bridge என்னும் குறும்படத்தில் வருகிற ஒரு காட்சிதான் மேலே குறிப்பிட்டது. இன்றும் மிக முக்கியமான படமாக மதிக்கப்படுகிறது. சினிமா குறித்து தீவீரமாகப் பேசப்படும் போதெல்லாம் இந்தப் படமும் நினைவுகூறப்படுகிறது. சினிமா குறித்த பட்டறைகள், வகுப்புகளிலெல்லாம் இந்தப் படம் நிச்சயம் முதல் நாளிலேயே திரையிட்டுக் காண்பிக்கப்படுகிறது. குறும்படத்திற்கான இலக்கணம் போல இருப்பதாக முக்கியமான பலர் முன்வைக்கிறார்கள்.
அம்புரோஸ் பியர்ஸ் என்னும் ஆங்கில எழுத்தாளரின் புகழ்பெற்ற கதை இது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற சம்பவமாக சொல்லப்படுகிறது. ஒற்றனென கைதுசெய்யப்பட்ட பெய்ட்டன் ஃபர்க்கார் என்பவரை தூக்கில் போடும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. 1939ல் சார்ல்ஸ் விடோர் என்பவரது இயக்கத்திலும், 1959ல் ஹிட்சாக் தயாரிப்பிலும் இருமுறை திரைப்படமாக்கப்பட்டிருந்தாலும் 1962ல் இந்தப் படம் ராபர்ட் என்ரிகோ என்னும் பிரெஞ்சு இயக்குனரிடமிருந்து வெளியானபோதுதான் அனைவரின் கவனத்தையும், பாராட்டுதல்களையும் பெற்றது. ஏராளமான விருதுகளையும் பெற்றது. எழுதப்பட்ட கதையைக் காட்டிலும் சிறப்பாக வந்திருப்பதாக மதிக்கப்படுகிறது.
மரணத்தின் வாயிலில் நிற்கிற, ஆரம்பத்தில் சொன்ன காட்சியை விடவும் அழுத்தமான, அதிர்வுகள் அளிக்கக் கூடிய எத்தனையோவற்றை இதுவரை சினிமாக்களில் பார்த்திருக்கலாம். தப்பித்து ஆற்றில் நீச்சலடிப்பவனைச் சுற்றி நின்று துப்பாக்கியால் சுடும் காட்சிகளை பார்த்திருக்கலாம். எங்கோ ஆற்றின் கரையில் ஒதுங்கி, மயங்கி, டுயட் பாடி, பிறகு எழுந்திரிக்கும் நாயகர்களை பார்த்திருக்கலாம். காடுகளுக்குள் மூச்சிரைக்க ஓடுவதையும் பார்த்திருக்கலாம். அவையெல்லாமே நம் நினைவுகளில் வாழ்வதில்லை. வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் கழிந்துதான் போயிருக்கின்றன. இந்தப் படம் வாழ்க்கை முழுவதும் உங்கள் கூடவே வரும்.
அப்படியென்னதான் என்று நினைப்பவர்கள், இங்கே முதலில் படம் பாருங்கள். பிறகு பேசுவோம்.
இந்தப் படத்தையும் பாருங்கள், விமர்சனம் செய்யுங்கள்!
திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் பதிவுலகப் பெருமக்களுக்கு தனி ஆர்வமும், சிரத்தையும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதைப் படிப்பவர்களுக்கும் அப்படியே. சினிமாவுக்கென்று மக்கள் தம் சிந்தனையில் தனி இடம் ஒதுக்கி, தனி கவனம் செலுத்துகிறார்கள். அவர்களை கொஞ்சம் இந்தப்பக்கமும் பாருங்கள் என்று இப்போது அழைக்கிறேன்.
நேற்று ஒரு குறும்படம் பார்த்தேன். எடுத்தவர் ரவிக்குமார். திருப்பூர்க்காரர். துறுதுறு இளைஞர். என் நண்பர். பதிவரும் கூட.
கிடைத்த வாய்ப்பு வசதியில் இப்படி ஒரு படம் எடுப்பது முக்கியமான விஷயம்தான். காமிரா கோணம், எடிட்டிங் எல்லாமே உறுத்தாமல் இருக்கிறது. இசைதான் ஒட்டவில்லை. என்றாலும் பரவாயில்லை. இன்னும் ரவிக்குமாருக்கு சினிமா மொழி கூடிவர வேண்டியிருக்கிறது. எனினும், கண்ணாமூச்சி என்னும் 17 நிமிடங்களே ஒடும் இந்தப் படம், வாழ்வின் நுட்பமான விஷயத்தைச் சொல்லியபடி நகர்கிறது. தாத்தா நமக்குள் நிறகிறார்.
பல, பிரபல, தமிழ்ச்சினிமாக்களை விட அருமையாக இருக்கிறது.
இப்படியொரு நல்ல முயற்சிக்காகவும், இவ்விதமான கதைகளைச் சொல்ல வேண்டுமென்கிற துடிப்பிற்காகவும் ரவிக்குமாரை கைதட்டி வரவேற்கிறேன்.
நீங்களும் பாருங்களேன். விமர்சனம் செய்யுங்களேன்! அதைவிட வேறென்ன ரவிக்குமாருக்கு வேண்டும்....!
புத்தரைப் பார்த்தேன்!
போதி மரத்தடியைச் சுற்றி சுற்றி வந்தேன். ஒரு இலையைக் கூட தரையில் காண முடியவில்லை. காற்றில் உதிரும் இலைகளுக்கென்று பலர் காத்திருந்தார்கள். அவர்களுடன் போட்டி போடவும் ஒருமாதிரி இருந்தது. இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து ஒரு இலையைக் கூட கொண்டு போகாமல் திரும்பவும் மனமில்லை. யாரும் பார்க்காத நேரத்தில் லேசாக குதித்து சில இலைகளைப் பறித்துவிடத் தோன்றியது. அதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அங்குமிங்கும் சிலர் கண்காணித்துக்கொண்டும் இருந்தனர். உள்ளே சென்று தடாகத்து மீன்களுக்கு பொரி போட்டு மீண்டும் வந்தேன். என் அருகே சருகான இலை ஒன்று விழுந்தது. மீன்களின் கிருபை என்றெண்ணி, எடுத்து நிமிரும்போது, தானும் எத்தனித்து அருகே வந்த வயதான மனிதர் என் முகத்தைப் பார்த்தார். கண்கள் கெஞ்சின. எடுத்ததை அவரிடம் கொடுத்துவிட்டு அண்ணாந்து போதிமரத்தைப் பார்த்தேன். கரைபுரண்டோடிய காலவெள்ளத்திற்குள்ளிருந்த புத்தர் இலைகளின் ஊடே கதிர்களாய் தெரிந்தார்.
இலக்கியம் வார்த்தைகளில் இல்லை
90களில் தமிழகத்தில் அறிவுஜீவிகள் பலர் ஒரு காரியத்தில் தங்களை இணைத்துக்கொண்டு ஒரு மகத்தான கனவை கண்டனர். அதன் பேர் அறிவொளி இயக்கம். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என ஒரு பெரும் பட்டாளம் கிராமங்களை நோக்கிச் சென்றிருந்தார்கள்.
‘எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்’ என்பதுதான் அந்த இயக்கத்தின் ஆன்னாவும், ஆவன்னாவும். அனைவரும் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும் என்கிற நோக்கம் தாண்டி, மக்களிடம் இந்த அமைப்பு குறித்த மாற்று சிந்தனைகளை உருவாக்க யத்தனைத்தார்கள். எதிர்பாராத விழிப்புணர்வு தோன்றுவதை விரும்பாத அரசு அந்த இயக்கத்தின் வேகத்தை மட்டுப்படுத்தியது. பிறகு நிறுத்தியும் கொண்டது. அரசின் உதவியின்றி இயக்கத்தைத் தொடரும் முயற்சிகளும் மெல்ல மெல்ல கரைந்து போயின. அங்கங்கு அதற்கான அடையாளங்களும், பெரும் அனுபவமும் மிஞ்சின. அறிவொளி இயக்கம் குறித்து, பிறிதொரு சமயம் விரிவாக விவாதிக்கலாம். இங்கு ஒரு அனுபவத்தை மட்டும் பகிர்ந்துகொள்வோம்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சகோதரர் வெங்கடாசலம்தான் சாத்தூர் பகுதியில் அறிவொளி இயக்கத்தின் பொறுப்பாளராய் இருந்தார். அவருடைய அலுவலகத்தில்தான் பெரும்பாலான சமயங்களில் நானும், காமராஜும் இருப்போம். பாடலும் தாளமுமாய் கழிந்த ஒரு உற்சாகமான பொழுதில் ‘கண்ணாடி’ என்ற தலைப்புக் கொடுத்து நான்கைந்து வரியில், அங்கிருந்த கிராமத்து மக்களை கவிதைகள் எழுதச் சொன்னோம். தங்களுக்குத் தோன்றியதை எழுதினார்கள். அதில் கவிதை போலிருந்த மூன்றினை விழுது என்னும் பத்திரிகையில் பிரசுரிக்கவும் செய்தோம்.
(1)
ஏய்! கண்ணாடி
என் முகத்தின் அசிங்கத்தையெல்லாம் காண்பிக்கிறாய்
அதனால் நீ எனக்கு நண்பன்
(2)
கண்ணாடியே
எல்லோர் முகத்தையும் நீ பார்க்கிறாய்
உன் முகத்தை எப்படி பார்ப்பாய்?
(3)
கண்ணாடியில்தான்
என் முகம் தெரிகிறது
வாழ்க்கையில்
என் முகம் தெரியவில்லை
இந்தக் கவிதைகளில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தன. வரிகளும் அது பாட்டுக்கு நீண்டு போயிருந்தன. சரி செய்திருந்தோம். இவைகளை வடிவப்படுத்தினால் இன்னும் அழகு பெறும் என நினைக்கிறேன்.
இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது. சாதாரண மக்களிடம் பெரும் சுரங்கம் போல இருக்கிறது.... கவனிப்பாரற்று!
அப்போது பைத்தியங்களே திருடுவார்கள்
அவன் தலைமையலுவலகத்தில் வேலை பார்த்து வரும் தற்காலிக கடைநில ஊழியன். இரண்டு வாரம் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி நிர்வாகம் அவ்னை வீட்டுக்கு அனுப்பி விட்டது. விஷயத்தை அறிந்தவுடன் பொதுமேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எங்கள் சங்கத்தின் செயற்குழு முடிவு செய்தது.
காரணத்தை கேள்விப்பட்டதும் அந்தக் கடைநிலை ஊழியன் மீது முதலில் கோபம்தான் வந்தது. ஸ்டேஷனரி டிபார்ட்மெண்டிலிருந்து கம்ப்யூட்டர் பிரிண்டிங் பேப்பர் பண்டல் இரண்டை திருடிவிட்டானாம். அவனிடம் நாங்கள் அதட்டிக் கேட்ட போது ஒத்துக் கொண்டான். வங்கியின் பேர் இருக்கும் பகுதியை வெட்டி எடுத்து விட்டு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் செய்யும் நோட்டுப் புத்தகங்களாக பைண்டிங் செய்து கொடுத்திருக்கிறான்.
எந்த முகத்தோடு பொது மேலாளரிடம் போய் பேசுவது என்று தெரியவில்லை. ஒழுக்கம் கெட்டுப் போவதற்கும், ஊழியர்கள் தரம் தாழ்ந்து போவதற்கும் தொழிற்சங்கங்கள் இது போன்ற காரியங்களை ஆதரித்து கொடி பிடிப்பதுதான் காரணம் என்று எல்லா நிர்வாகங்களும் எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இப்படிப்பட்டவர்களுக்காக முயற்சிகள் எடுப்பதால் சங்கத்திற்கும் அவப்பெயர் வருகிறது என்று ஊழியர்கள் தரப்பிலும் நேர்மையானவர்கள் விமர்சனம் வைக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அடியில் அவனுடைய் முகம் பரிதாபமாக தெரிகிறது. அது மெய்யப்பனின் முகமாக மாறி என்னமோ செய்கிறது.
மெய்யப்பனும் இந்த வங்கியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து வந்தவர்தான். ஆனால் பணிநிரந்தரம் செய்யப்பட்டவர். கடைநிலை ஊழியர் போல தெரிய மாட்டார். எப்போதும் இன் பண்ணி, ஷூ போட்டு படு பந்தாவாக இருப்பார். இதே மிடுக்கோடு கல்யாணமும் செய்து அவரது சொந்த ஊர்ப்பக்கம் மாறுதல் வாங்கிச் சென்று விட்டார். ஒரு சனிக்கிழமை சாயங்காலம் சங்க அலுவலகத்தின் வாசலில் வந்து நின்றார். கையில் சஸ்பென்ஷன் ஆர்டர். ஒரு அறுநூறு ருபாய்க்காக நகைக்கடன் கார்டில் மேனேஜர் மாதிரி கையெழுத்துப் போட்டிருப்பதாக குற்றப்பத்திரிகை. வாழ்வின் பயமில்லாமல் சிரித்துக் கொள்ள அவரால் முடிந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு "கேஸ் முடிய எவ்வளவு நாளாகும்" என கேட்டார்.
அப்படி இப்படி என்று எல்லாம் முடிய இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. விசாரணைக் காலங்களிலும் திடமாகவே இருந்தார். சவரம் செய்து திருநீறு பூசிய கோலத்தில் திவ்யமாகவே இருந்தார். கொஞ்ச நாளில் சிகரெட் பிடிப்பதை விட்டிருந்தார். இரண்டாவது குழந்தை பிறந்ததை முன்னிட்டு என்று அவரால் சொல்லிக் கொள்ள முடிந்தது. சாட்சிகள் ஒன்றும் அவருக்கு எதிராக இல்லை. மேனேஜர் போல அவர் போட்டிருந்த கையெழுத்தை யார் வேண்டுமானாலும் போட்டிருக்கலாம். வழக்கு ஜோடிக்கப்பட்டிருந்த முறையிலும் கோளாறுகள் இருந்தன. நேரடியாக குற்றம் நிருபீக்கப்படவில்லை. நிர்வாகம் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. மிகத் தெளிவாக வங்கியிலிருந்து நீக்குவதாக ஒரு பக்கத் தாளில் சொல்லிவிட்டது.
"அடுத்து என்ன செய்யலாம்" என நடுக்கத்தோடு கேட்டார். அன்றுதான் மெய்யப்பன் முகமே கலைந்து போனது. "இல்லை...இந்த நிர்வாகங்கள் இப்படித்தான். நாம் கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயிக்கலாம்" என்றெல்லாம் நம்பிக்கையளிக்கப்பட்டது. அவர் முன் நின்றிருந்தவர்களையெல்லாம் பரிதாபமாக பார்த்தார். வழக்குக்குத் தேவையான பேப்பர்களை தயார் செய்யும் போதும், வக்கீலை சென்னை சென்று பார்க்கும் போதும், இரண்டு தடவை மெய்யப்பனை பார்க்க முடிந்தது. இயல்பாகக் கூட குடும்பம், குழந்தைகளைப் பற்றி விசாரிக்க முடியாத அளவுக்கு மௌனம் ஒன்று தயங்க வைக்கும். மூத்தப் பையன் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு போக பை ஒன்றை பர்மா பஜாரில் கடுமையாக பேரம் பேசி வாங்கி, பாசத்தோடு நெஞ்சில் அணைத்து வைத்துக் கொண்டார். அன்று வழியனுப்பும் போது அவரை பஸ்ஸில்
பார்த்ததுதான்.
இன்னொரு கேஸ் சம்பந்தமாக வக்கீலைப் பார்க்கச் சென்ற போது மெய்யப்பன வரவில்லையென்றும், வழக்கை நடத்த அவர் கையெழுத்து போட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அவரைப் பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் ஊரைக் காலி செய்து போய்விட்டதாக சொன்னார்கள். தற்போதைய விலாசமும் தெரியவில்லை.
அதற்குப் பிறகு அவரைப் பார்த்தது சில வருடங்களுக்குப் பிறகுதான். பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட்டில் தெருவில் நின்று கூவிக் கொண்டிருந்தார். "எதையெடுத்தாலும் ரெண்டு ருபா....ரெண்டு ருபா.."
அதிர்ச்சியாய் இருந்தது. அருகில் சென்று தோளில் கைவைத்ததும் ஒரு கணம் உற்றுப்பார்த்தார். சந்தோஷத்தை மீறிய அவமானம் அவர் முகத்தில் தெரிந்தது. சட்டென சமாளித்தபடி, "ஏ..வாப்பா..." என்றார். பக்கத்துக் கடையில் டீ சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டேன். பீடி பற்றவைத்துக் கொண்டார். "பையன் என்ன படிக்கிறான்" கேட்ட போது "அஞ்சு" என்றார். வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவருக்குள் ஒடிக்கொண்டிருந்தது. கண்கள் கலங்குவதை அப்படியொரு பாவனையில் மறைக்க முயற்சித்தார். 'வழக்கை நடத்தியிருக்கலாம்' என்று மெல்லச் சொன்ன போது "ஆமாம்...நடத்தி..." என்று அழுதார். "இல்ல கேஸ் நமக்குச் சாதகமாகவும் வாய்ப்பிருக்கு" சொன்னவுடன் லேசாய் சிரித்தார். "அவங்க என்னத் தண்டிச்சு ஒழுக்கத்தக் காப்பாத்திக்கிடட்டுமப்பா. விடு" என்றார். அதற்கு மேல் அவரோடு பேச முடியவில்லை.
அந்த வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பு ஒழுக்கமாக தன்னை காட்டிக் கொள்வதற்கு ஒரு பலிபீடம் வைத்திருக்கிறது. அதில் மெய்யப்பன்களின் தலைகளே உருளுகின்றன. ஒழுக்கத்தின் காவலர்கள் அந்தத் தலைகளை கோர்த்து மாலையாக்கி போட்டுக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர். அமைப்பையும், ஒழுக்கத்தையும் காலில் போட்டு மிதிப்பவர்கள் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் காமிராக்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள். சிரிக்கிறார்கள். கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும் அவர்களுக்கு இங்கே மகிமை இருக்கிறது. நாட்டையே கபளிகரம் செய்தாலும் மரியாதை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டையும் தாண்டிய செல்வாக்கு இருக்கிறது. நடத்தை விதிகள் என்பது இங்கே கீழே உள்ளவர்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்டிருக்கின்றன. அரசன், தெய்வம், நீதி எல்லாம் சாமானியர்கள் அஞ்சுவதற்காகவும், பூஜிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.
சாதாரண, எளிய மனிதர்கள் தவறு செய்யவும், ஒழுக்கம் தவறவும் இந்த வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறது. கஷ்டங்ளைக் கொடுக்கிறது. ஆனாலும் அரிச்சந்திரனாய் இருக்க வேண்டும் என போதிக்கிறது. பலியிடப்பட்ட மெய்யப்பன்களை சாட்சியாக வைத்து ஒழுக்கத்தை பறைசாற்றிக் கொள்கிறது. ஒழுக்கம் கெட்டவர்களே ஒழுக்கத்தைப் பற்றி சத்தம் போட்டு பேசுகிறார்கள். ஒழுக்கமும் எல்லோருக்கும் சமமானதுதான் என்னும் பிரக்ஞையற்ற மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒழுக்கம் என்பது கீழிலிருந்து மேல் செல்வது அல்ல. மேலிருந்துதான் கீழே வரவேண்டும்.
இந்த கம்ப்யூட்டர் பேப்பர்களை இந்தக் கடைநிலை ஊழியர்தான் எடுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே எடுத்திருந்தாலும், அந்த அளவுக்கு அவனுக்கு என்ன நெருக்கடி என அவன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிற மனது யாரிடம் இருக்கிறது? இரக்கமும், கருணையும் ஒழுக்கமற்றவர்களுக்கே இல்லாமல் போகும் போது நமக்கென்ன...?
எந்த தயக்கமுமில்லாமல் பொது மேலாளரின் அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்த நுழைந்தோம்.
இப்படி நான் எழுதியவுடன், ஒரு தொழிற்சங்கத் தலைவருக்கு இருக்கக்கூடிய புரிதலை சமூகம் முழுமைக்குமாக விரிவுபடுத்தி பார்த்திட முடியாது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். தனிநபர்கள் திருந்தாமல் சமூகம் எப்படி திருந்தும் எனவும் ஒருவர் கேட்டுவிட்டு, ஒழுக்க மீறலை உங்களைப் போன்றவர்களே ஆதரிக்கலாமா’ என நெருங்கிய நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார்.
முதலில் ஒரு ஒழுக்க மீறலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன்வைத்ததாக நான் கருதவில்லை. இந்த அமைப்பு ஒழுக்கத்தை எப்படி பார்க்கிறது, அதற்கு என்ன மரியாதை கொடுக்கிறது என்னும் கேள்விகளை மட்டுமே முன்வைத்திருந்தேன். இங்கே ஒழுக்க மீறலையே வாழ்க்கையாகயும், ஒழுக்கமாகவும் வைத்திருப்பவர்களை குறிப்பிடவில்லை. எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறியவர்களை ஆதரவோடு பார்க்க வேண்டியிருக்கிறது என்றுதான் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த அமைப்பின் அவலட்சண முகத்தின் மீது வெளிச்சம் காட்டுவது மட்டுமே அதில் முக்கியமானதாக இருந்தது. ஒழுக்கம் குறித்தும், ஒழுக்கமீறல் குறித்தும் பேசவில்லை. இப்போது அவைகளை பற்றியும் பேசுவது நமது பார்வையையும், சிந்தனைகளையும் மேலும் தெளிவாக்கும் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு காலத்திலும் ஒரு சமூக அமைப்பை ஆளுகின்ற கருத்துக்கள் அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்று அனைத்தின் மீதும் படரும் அதன் மூளையின் உன்மத்தம் பிடித்த செல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனது வர்க்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்களுடைய ஆயுதங்களாக்கும் பணியை செய்துகொண்டே இருக்கிறது. மக்களை வெல்வதற்கும், அவர்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமான தேவை அந்த ஆளும் அமைப்புக்கு இருக்கிறது. அதில் மிக நுட்பமாகவும், அரூபமாகவும், வலிமை மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது கலாச்சாரம். இந்த கலாச்சாரம்தான் இந்த அமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான சம்மதத்தையும், ஒப்புதலையும் மக்களிடமிருந்தே பெற்றுவிடுகிற சாமர்த்தியம் கொண்டதாய் இருக்கிறது.
கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும். மாதச்சம்பளக்காரர்களிடம் கெடுபிடி காட்டும். சங்கராச்சாரியாருக்கு சிறைக்குள் சகல பணிவிடைகளும் செய்யும். பங்குச் சந்தையை ஆட்டுவிக்கும் பணமுதலைகளிடம் நிதியமைச்சர் மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தி சலுகைகள் அறிவிப்பார். வருங்கால வைப்புநிதிக்கு வட்டியை உயர்த்த பத்து தடவை தொழிற்சங்கங்கள் நிதியமைச்சகத்தின் வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது.
கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மரியாதை தாராளமாய் கிடைக்கிறது. பத்தாயிரம் ருபாய் பயிர்க்கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் ஜப்தி நடக்கிறது. அடுக்கிக்கொண்டே போகலாம். நாளொரு நியாயமும், பொழுதொரு தர்மமுமாக நீதிதேவதையின் வாள் சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த பிரஜையும் ஒழுக்க மீறல்களிலிருந்து தப்பித்துவிடாதபடிக்கு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம் வர்க்கச்சார்புடைய ஒழுக்க நெறிகளும், ஒழுக்க மீறல்களும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் எல்லாக் காலத்துக்கும் எல்லா வர்க்கத்துக்கும் பொதுவான சில ஒழுக்கங்கள் இருப்பதாகவும் அவைகளே சமூகத்தை இயங்க வைப்பதாகவும் புரிந்துகொள்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக திருடாமல் இருப்பது குறித்து அப்படிப்பட்ட கருத்து இருக்க முடியுமா? சமூகத்தின் காரணிகளை தனிநபர்கள் மீது நாம் சுமத்திப் பார்த்திட முடியாது. சமூகத்தின் ஒழுக்கத்தை தனிநபர் ஒழுக்கத்தோடு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.
இந்த அமைப்பு மனிதர்களை மேலும் மேலும் சுரண்டுகிறது. அதேவேளை தேவைகளையும் நிர்ப்பந்தங்களையும் தந்து கொண்டே இருக்கிறது. மயானக்கரை வரைக்கும் அரிச்சந்திரர்களை விரட்டி விரட்டிப் பார்க்கிறது. நேர்வழியில் எதிர்த்து போராடுகிற மனோபலமற்றவர்கள் எப்படியாவது இந்த ஓட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குறுக்கு வழி தேடுகிறார்கள். சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாகிறார்கள். இதுவும் அமைப்பின் ஏற்பாடே. அந்த மனிதர்களின் போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. சிறு தேங்காய்த்துண்டுக்காக எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட அவர்கள் மீது பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா. அந்த மனிதர்களை திருத்துவதா அல்லது தண்டிப்பதா?.
பலீவனமான அந்த மனிதர்களை ஆதரவற்றவர்களாக, அனாதைகளாக நாமும் புறக்கணித்துவிட முடியாது. சமூக அக்கறை மனிதாபிமானத்தோடு வெளிப்படும்போதுதான் புதிய பரிணாமம் பெறுகிறது. அந்த மனிதர்களுக்காக நாம் பேசுவதும், இந்த பலிகள் ஏன் நடக்கின்றன என்பதை விவாதிப்பதும் பாவிகளை இரட்சிப்பது ஆகாது. இதயமற்ற ஒழுக்கத்தின் பலிபீடங்களை உலகுக்கு காட்டும்போது மக்கள் தங்கள் நிபந்தனையற்ற ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிப்பார்கள். எதொவொரு நேரத்தில், எதொவொரு நெருக்கடியில் ஒழுக்கம் மீறியவர்களை எப்போதும் ஒழுக்கம் மீறிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக நாம் பிரயோகிக்கிறோம். ஒழுக்கத்தை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விதிக்க முடியாது. கூடாது என்பதுதான் நமது பார்வை. அதனால் மேலும் மேலும் ஒழுக்க மீறல்கள் பரவத்தான் செய்யும்.
ஒழுக்கம் என்பது வலியுறுத்துவது மட்டும் ஆகாது. ஒருவழிச் சாலையும் ஆகாது. ஒரு பகுதியினர் விதிகளை கடைப்பிடிக்க ஒரு சிலர் கடைப்பிடிக்காமல் போனாலும் விபத்துக்கள் நேர்ந்துகொண்டுதான் இருக்கும். இங்கு எல்லா தினப்பத்திரிக்கைகளின் எழுத்துக்களிலும் ஒழுக்க மீறல் குறித்த செய்திகளே கொலைகளாகவும், கொள்ளைகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றன. இத்தனை சட்டங்களும், தண்டனைகளும் இருந்தும் ஏன் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இந்த அமைப்பு எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கான அளவுகோல்களே அவை.
அடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும். வேர்களின் வியாதி பார்க்காமல் இலைகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து எந்த மரத்தையும் காப்பாற்ற முடியாது. ஒழுக்கம் என்பது அமைப்பின் தன்மைகளை பொறுத்து மனிதர்களுக்கு தன்னியல்பாக வரக் கூடியது. எதை மாற்ற வேண்டும் என்பதை முதலில் தீர்மானிப்போம். தனியுடமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, திருடுவதற்கான சகல காரணங்களும் அற்ற ஒரு சமூகத்தில் பைத்தியக்காரர்களே எப்போதாவது திருடுவார்கள் என்று மாமேதை மார்க்ஸ் சொன்னதுதான் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது.
(இது ஒரு மீள் பதிவு)