சீரியசான ஒரு கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.அல்லது முக்கியமான நபர் எதிரில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது பார்த்துத் தானா அது நடக்க வேண்டும். தில்லானா மோகனாம்பாள் 'சிக்கல் சண்முகசுந்தரம்' மாதிரி நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் அந்தக் காற்றுக்காவது தெரிந்திருக்க வேண்டாம். பந்து மாதிரி சுருட்டிக்கொண்டுவரும் காற்று உங்கள் வாய் வழியாக 'ஏவ்...வ்..' என்று ஒரு சத்தத்தோடு வெளியேறவும், நீங்கள் படாத பாடு பட்டு நெளிந்து குழைந்து சமாளிக்க வேண்டியதாகிறது. ஏப்பங்களின் கதை நமது வாழ்வில் எப்போது துவங்கியது என்று யோசித்துத்தான் பார்ப்போமே....
பாலருந்தும் பிஞ்சுக்குழந்தையாயிருக்கும்போதே இந்தக் காற்று வெளியேற்ற வேலை தொடங்கியிருக்கிறது. தாயிடமிருந்தோ, பாலாடை-கிண்டி-புட்டி போன்றவற்றிலிருந்தோ பாலை அருந்தும் குழந்தை காற்றையும் சேர்த்து உட்கொண்டுவிடுகிறது. எனவேதான், உள்ளே சென்ற காற்றைப் பக்குவமாக வெளியேற்ற வைக்கிற வேலையை நமது மரபார்ந்த வளர்ப்புமுறை கற்றுத் தந்திருக்கிறது. சொல்லப்போனால், விவரமறிந்த தாய்மார்கள் குழந்தையை மடியில் நீளவாக்கில் படுத்தமேனிக்கு வைத்துப் பாலூட்டுவதில்லை. தலைப்பாகத்தைச் சற்று உயர்த்திக் கையணைப்பாக வைத்துப் பிடித்துக் கொண்டு குழந்தையைப் பாலருந்த வைக்கிறபோது, காற்று அதிகம் உட்புக விடாமல் தேவையான அளவிற்குப் பாலை தீர உட்கொள்ளுகிறது குழந்தை.
இருந்தாலும் உடனே குழந்தையைப் படுக்கவிடாமல் தோளில் போட்டுச் செல்லமாகத் தட்டிக் கொடுக்கிறபோது, எப்படியும் உட்புகுந்த காற்று கூட ஓசைப்படாமல் (அல்லது சிறிய ஓசையோடு) வெளியேறிவிடுகிறது. அதற்குமுன் படுக்கவிட்டால், காற்றோடு சேர்த்து பாலையும் குழந்தை வெளியேற்றிவிடும் என்பது காலகாலமான அனுபவத்திலிருந்து புரிபட்டிருக்கிறது. இந்தமாதிரி காற்றையும் சேர்த்து உண்ணுகிற வேலை வளர்ந்தபிறகும் உண்டு. பேசிக்கொண்டு சாப்பிடாதே என்று யாராவது சொன்னால் கோபம் வரத்தான் செய்கிறது. ஆனால், அப்படி சாப்பிடுவதால் நேரும் இடைஞ்சல்களில் இந்த காற்று உள்ளே நுழைவதும் ஒன்று. சாப்பிடும்போது மட்டும்தான் என்றில்லை, பெரிய மூச்சாக சிலர் பழக்கதோஷமாகவோ, ஆயாசத்திலோ மூச்சு இழுத்துவிடும் நேரங்களிலும் காற்று தேவன் விஜயம் செய்கிறார். இப்படியான காற்று ஏப்பமாக வெளியேறித்தானே ஆக வேண்டியிருக்கிறது.
காற்று உற்பத்தியின் இரண்டாவது இடம், நாம் உண்ணும் உணவிலிருந்து வெளிப்படும் காற்று. ஒவ்வொரு வேளை உணவிலிருந்தும் சராசரியாக 4 லிட்டர் கரியமில வாயு வெளிப்படுகிறது. இது ரத்தத்தில் கலப்பதும், பின்னர் நுரையீரல் அறைக்குள் எட்டிப்பார்த்ததும் அங்கேயிருந்து சுவாசக் கூறுகளாக வெளியேற்றப்படுவதும் இயல்பான நடப்புகள். ஆனால், சிலருக்கு இந்த உற்பத்தி அளவு கூடுதலாக நேரலாம். அதுவும் சுவாசத்தில் வெளியேறிவிடலாம். அப்படி முடிந்தால் இரண்டாம் பேர் தெரியாமல் விஷயம் உள்ளேயே முடிந்துவிடுமே. அது வாய்க்காதவர்கள் என்ன செய்வது....அதேபோல், மேற்படி 4 லிட்டர் அளவையே சுவாசத்தில் கலக்க இயலாதவர்களும் இருக்கலாம்... இப்படியானவர்கள்தான் நாம் முதல் காட்சியில் சந்தித்தவரைப் போல் 'சபையில்' மாட்டிக் கொண்டு ஏப்பம் விட்டு மாட்டிக் கொள்பவர்கள். காற்றின் வெளியேற்றம் மேல்திசை நோக்கித்தான் என்றில்லை, சில நேரம் மனிதர்களை நாலுபேர் எதிரில் அசௌகரியப்படுத்தி கீழ்த்திசை நோக்கியும் வெளியேறுகிறது.
காற்று தோன்ற மூன்றாவது சாத்தியம், வெவ்வேறு காரணங்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரை சமாச்சாரங்களினால் உண்டாவது. நமது உடல் என்ற தொழிற்சாலையினுள் எத்தனையோ வேதியல் வினைகள் நடக்கின்றன. நொதிச்செயல்களின்போது பாக்டீரியாக்களின் அளவுகளில் மாறுபாடு நேரலாம். அல்லது பல அழிக்கப்பட்டுவிடலாம். வேதியல் சமநிலைகளில் நிகழும் மாற்றங்களின்போதும் காற்று உற்பத்தி ஆகிறது.
சரிவிகித உணவு, குறைந்தபட்ச உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றோடு இயைந்து வாழும் வாழ்க்கையில் காற்றின் உபாதை பெரிய அளவிற்கு இருப்பதில்லை. அப்படியே சிலநேரங்களில் ஏப்பம் வந்தால், அதற்காகப் பெரிய குற்றவுணர்ச்சிக்கு ஆளாகவேண்டியதில்லை. சாதாரண ஏப்பங்களுக்கு மருத்துவத் தலையீடு தேடி அலைய வேண்டியதுமில்லை.
ஆனால், சிலர் ஏப்பம் வந்தால்தான் உணவு நிறைவின் அறிகுறி புலப்படும் உற்சாகம் கண்ணில் கரைபுரளும். அதற்காகவே, சிலர் சாப்பிட்டு முடித்ததும் 'ஒரு சோடா அடிச்சாத்தான்யா சரி வரும்' என்று பழக்கப்படுத்திக் கொள்கிறவர்களும் உண்டு. சோடாவிலிருந்து உள்ளே போன காற்று வெளியேறுகிறதோ, உள்ளேயிருந்து வருகிறதோ ஏப்பம் வந்தால் சரி என்று செல்லக் குழந்தையாட்டம் வயிற்றுப் பகுதியைத் தடவித் தடவி ஒரு கடமையாக அதைச் செய்து கொண்டிருப்பார்கள்.
ஏப்பம் வந்தால் சலிக்கவும் வேண்டாம். அதை ஒரு அன்றாட நடவடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கவும் வேண்டாம். தவிர்க்க முடிந்தால் தவிர்த்துவிடுவது அல்லது தானாக ஏற்பட்டால் அனுமதித்துவிடுவது என்று பழகலாம். பொதுவாகவே வெளியிடங்களில், பொதுவிடங்களில் ஏப்பங்கள் 'வாயடங்கிக் கிடக்கும்'. வீட்டில், வழக்கமாகப் புழங்குகிற இடங்களில்தான் சற்று சுதந்திரக் காற்று இப்படி மேலிருந்தோ, சமயங்களில் கீழிருந்தோ வெளியேறும். அந்தச் சங்கடத்தைத் தவிர இதற்காக உடல்நலக் கேடு எதுவும் இருப்பதாக உணரவேண்டியதில்லை. இயல்பான நடவடிக்கை என்று அடுத்த வேலையைப் பார்க்கலாம். வயது கூடக் கூட செரிமான சக்தி குறைவதாலும் கூட காற்று உற்பத்தி அதிகமாகலாம்.
சிலருக்கு உளவியல் ரீதியாகக் கவனத்தைக் கோரும் நடவடிக்கையாகக் கூட ஏப்பங்கள் வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அது பின்னர் நாளாவட்டத்தில் தவிர்க்கமுடியாத பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆசனவாய் வழியான காற்றின் விடுதலை விஷயமும் இப்படி உளவியல் ரீதியான சிக்கல்களின் காரணமாக இருக்கலாம்.
தொடர் பிரச்சனையாக, வலியோடும் எரிச்சலோடும் வேறு சில உடல்ரீதியான மாற்றங்களின் அறிகுறிகளும் தெரிய ஏப்பங்கள் வந்துகொண்டிருந்தாலன்றி, இதை ஒரு நோயாகவோ, சிக்கலாகவோ கருத வேண்டியதில்லை. பொதுவாக, செரிமான பிரச்சனை இருப்பதாக உணரும்போது antacid எடுத்துக் கொள்வதுகூட எரிச்சலைக் கூட்டத்தான் செய்கிறது என்று ஆய்வுகளும், அனுபவங்களும் சொல்கின்றன. உணவுப் பொருள்களில் எரிச்சலேற்படுத்தும் பதார்த்தங்களைத் தவிர்த்துவிட்டு உணவைத் தொடர்வது நல்லது. உருளையோ, முட்டைக்கோஸ் போன்றவையோ அதிக வாயுவை உற்பத்தி செய்பவை. அப்படியானவற்றைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல் தேவைப்படும்போது உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.
இந்த ஏப்பத்திற்கு உருவகமாகக் கிடைத்திருக்கிற அந்தஸ்துதான் அதிகமானது. உழைப்பாளி கோரிக்கை வைத்தால் ஒப்பீடு செய்கிற வேறு துறை தொழிலாளி, உங்களுக்கென்னப்பா புளிச்சேப்பம், எங்களது பசியேப்பம் என்று கிண்டலடிக்கிறார்கள். உணவு நிரம்பவேண்டிய இடத்தில் சிக்கிக் கிடக்கிற காற்றின் வெளியேற்றம் பசியேப்பம். செரிமான இலாக்காவில் ஏற்படும் போராட்டத்தில் வெளியேறுவது புளிச்சேப்பம்.
சம்பள உயர்வுக்காகக் காத்திருக்கும் ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைவர்களைப் பார்த்து, 'மத்த இடங்களையெல்லாம் பாத்தீங்களா, அரியர்ஸ் எல்லாம் வாங்கி ஏப்பமே விட்டுட்டாங்க..நம்ம நிலைமை மட்டும் கேவலமா...' என்று கேட்பதுண்டு.
நம்முடைய உடலிலிருந்து ஏப்பங்கள் வருவதைத் தவிர்ப்பதும், தடுப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அது அத்தனை கவலைப்பட வேண்டிய விஷயமில்லை. ஆனால், பொதுத்துறை செல்வங்களையும், நாட்டு வளங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டு பகாசூர நிறுவனங்களுக்கு அப்படியே விலைபேசி விற்றுச் சாப்பிட்டு ஏப்பம் விடத் துடிப்பவர்களை அப்படி சும்மா விட்டுவிட முடியுமா....
- எழுதியவர்: எஸ்.வி.வேணுகோபாலன் - மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன், எம்.டி., (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து.
மிக நல்லதொரு பகிர்வு. நல்ல டிப்ஸும் கூட.
பதிலளிநீக்குஉள்நாட்டு வளங்களை உள் நாட்டு முதலாளிகளும் தொழிலாளிகளும் சரியாக பயன் படுத்தா விடில்/ பயன் படுத்த தெரியா விடில், வெளி நாட்டு முதலாளிகளுக்கு, தொழிலாளிகளுக்கு கொடுப்பதில் என்ன தவறு உள்ளது.
பதிலளிநீக்குஉதாரணம்:
உள் நாட்டில் இருந்த பொது தொலைபேசி அமைப்பு. மத்திய அரசின் தொலை தொடர்பு அமைச்சகமாக இருந்த போதும் சரி, பீ எஸ் என் எல் ஆஅக இருந்த போதும் சரி , மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடிய வில்லையே. இன்று வோடபோன், விர்ஜின் , சீமென்ஸ் , ஏர்டெல் நிறுவனங்கள் தானே சிறப்பாக சேவை செய்கின்றன.
மற்ற உதாரணங்கள்- தூர் தர்ஷன் ஒளியும் ஒளியும், இன்றைய மான் ஆட மயில் ஆட, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
தூர் தர்ஷனின் கிரிக்கெட் ஹிந்தி கமெண்ட்ரி இன்றைய ஈ எஸ் பீ என் இன் கிரிக்கெட் ஒளி பரப்பு.
அன்றைய டெலிராமா, சாலிடார் டி வி இன்றைய சாம்சங், எல் ஜி .
பயனுள்ள பகிர்வு. நன்றி
பதிலளிநீக்குஅன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குலாவண்யா சொன்னது போல நல்லதொரு பகிர்வு. தேவையானதும் கூட...
எப்படி இருக்கிறீர்கள் மாதவராஜ்?
அன்புடன்
ராகவன்
அன்பு மாதவ்
பதிலளிநீக்குவணக்கம். காற்றின் மொழி பதிவிற்கு வருகை தந்த அனைவரும் உடல் நலமும், உள்ள நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன். உயிரோடு, ராகவன், உழவன், குப்பன் யாஹூ ஆகியோருக்கு எனது நன்றி.
உள்நாட்டு வளங்களை அன்னியருக்கு விலை பேசி விற்பது தொடர்பாக குப்பன் யாஹூ என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். அப்பாவிகளோ, அறியாதவர்களோ அல்ல நமது கொள்கை வகுப்பாளர்கள். பொதுத் துறை பலவும் சக்கை போடு போட்டு லாபம் குவித்துக் கொண்டிருக்கின்றன. தாராளமய கொள்கையின் வழியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதும், தேச சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிதி ஏக போகங்களுக்கு விற்பதும் எந்த உயர்வான நோக்கத்தோடோ, தேச சேவையாகவோ செய்யபடுவதில்லை.
கோயில் பூசை செய்வோன் சிலையைக்
கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன், வீட்டை
வைத்திழத்தல் போலும்
என்று பாரதி சொன்னது இத்தகைய ஆசாமிகளைப் பற்றியது.
எஸ் வி வி
நல்ல பகிர்வு
பதிலளிநீக்கு