லாவண்யா மரணம்: ஆபத்தின் அசைவுகள்


மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கான பின்னணி என்னவென்று இப்போது வெளிவந்திருக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் ‘மதமாற்ற நிர்ப்பந்தம்’ காரணமல்ல என்பது அம்பலமாகி இருக்கிறது. உண்மையை வெளிக்கொண்டு வருவதிலும், பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகளின் சதிகளை முறியடிப்பதிலும் துவக்கத்தில் இருந்தே முயற்சிகளை மேற்கொண்ட அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டுவோம், நன்றி தெரிவிப்போம். எனக்குத் தெரிய பத்திரிகையாளர் அருள் எழிலனுக்கு இருந்த தெளிவும், உறுதியும் முக்கியமானது. இந்த விஷயத்தில் அவரது பதிவுகளையும்,வீடியோக்களை தொடர்ந்து பின்பற்றி வந்தேன். 

கடந்த சில தினங்களில் நம் சமூகத்திற்குள் படபடத்துக்கொண்டிருந்த ஆபத்துக்களின் அசைவுகளை மெல்லிதாக உணர முடிந்தது. எப்போதும் அமைதியாகவும், நெருக்கமாகவும், சினேகமாகவும் ஏன் தனிப்பட்ட முறையில் பிரியமாகவும் இருக்கும் நண்பர்கள் சிலரை வேறு முகங்களோடும் குரல்களோடும் பார்க்க முடிந்தது. ”எல்லாவற்றையும் கோபம் கொண்டு பற்றி பேசுவீர்களே, லாவண்யாவுக்காக பேச மாட்டீர்களா?”, “லாவண்யாவை அந்த பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதுதானே அவளது உயிரைப் பறித்திருக்கிறது. அதை பற்றி எழுத மாட்டீர்களா?”, “உங்கள் மனிதாபிமானம், அநீதிக்கு எதிரான குரல் எல்லாம் இவ்வளவுதானா?’ என கோபம் கொண்டார்கள். 'அனிதாவுக்காக எவ்வளவு வேகமாய் பேசினாய். அஸிஃபாவுக்காக எவ்வளவு கோபம் கொண்டாய் ஏன் லாவண்யாவுக்காக பேச மறுக்கிறாய்?’ என்பதுதான் அவர்களிடம் தென்பட்டது. அவர்களிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவேயில்லை. கடும் அதிர்ச்சியாய் இருந்தது. 

இந்து மதமாக அறியப்படாதவர்கள் மீதான வெறுப்பும் துவேஷமும் இந்துமதமாக அறியப்பட்டவர்களிடம் அதிகமாக விதைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அப்படிப்பட்ட காரியம் அமைதியாகவும், அரூபமாகவும் நடந்திருக்கிறது. ’நாம்’, ‘மற்றவர்கள்’ (Others) என்னும் பேதத்தின் விஷம் செலுத்தப்பட்டு இருக்கிறது. அது அங்கங்கு உள்ளுக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறது. 

சாதாரண காலங்களில் அவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். எல்லோரோடும் இணக்கமாக இருக்கிறார்கள். தங்களுக்கான நேரம் வந்தவுடன் கோர முகத்தோடு வெளிப்படுகிறார்கள். அதுதான் ஆபத்தானது. 

லாவண்யாவின் மரணத்தில் அவர்கள் வேகமாக வெளிப்பட்டு, இப்போதைக்கு அடங்கி இருக்கலாம். அவர்கள் ஒரு சமூகப் பதற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வோம். 

உண்மைகளை வெளிக்கொண்டு வருவதும் அவைகளைப் பேசுவதும் மட்டும் நம் பொறுப்பு அல்ல. பொய்களை வீழ்த்தி அழிப்பதும் மிக முக்கிய பொறுப்பு. தவறான வதந்திகள் பரப்பி, சமூகப் பதற்றம் ஏற்படுத்த துணிந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அதில் உறுதியோடு செயல்பட வேண்டும். 
கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கடைசி வரை என்ன அம்பலமானது என்ன உண்மை வெளிப்பட்டது என்பதைச் சொல்லாமலேயே எல்லாருக்கும் நன்றி சொல்லி சமாளித்தீர் பார்த்திங்களா ஒரு வீடியோவை இரண்டு பகுதிகளாக போட்டால் உண்மை வெளிப்பட்டு விடும் சூப்பர். கம்மிகளை, திராவிடியன் ஸ்டாக்குகளை பாராட்டியே ஆகவேண்டும். பொய்யைக் கூட எதுகை மோனை போட்டு எத்துவாளித் தனம் செய்வதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லையப்பா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!