“கடந்த காலம் எனக்குள் இரண்டாவது இதயம் போல் துடித்துக்கொண்டு இருக்கிறது” என்பார் ஐரிஷ். எழுத்தாளர் ஜான் பால்வில்லே.
தீராத பக்கங்களில் பகிர்ந்திருந்த கடந்தகால அனுபவங்களை சரி செய்து, மேலும் சில அனுபவங்களோடு ‘இரண்டாம் இதயம்’ என்னும் புத்தகம் எழுதி இருந்தேன். அண்மையில் பாரதி புத்தகத்தால் வெளியிடப்பட்டிருந்தது.
அன்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், இந்த மாத ‘புத்தகம் பேசுது’ இதழில் எனது ‘இரண்டாம் இதயம்’ குறித்து அழகாய் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு எனது நன்றி.
வாசகர் இதயத் துடிப்பிலும் ஒலிப்பதாய்....
எஸ் வி வேணுகோபாலன்
—
எண்பதுகளில் செம்மலர் இதழில் கிடைத்தார் எனக்கு ஜா மாதவராஜ். அவரது 'மண் குடம்' சிறுகதை என்னைப் புரட்டிப் போட்டது. முகவரி கேட்டுப் பெற்று அவருக்கு என் உணர்வுகளைக் கடத்திய பிறகே ஆசுவாசம் கொள்ள முடிந்தது. அப்போது தெரிந்திருக்கவில்லை, பத்தாண்டுக் காலத்திற்குள், உற்ற தோழராக நெருக்கத்தில் பழகக் கிடைப்பார் என.
இப்போது, அவரது எழுத்துகள் வழியே அவரது இளமைக் காலம், கல்லூரிப் பொழுதுகள், அவரது கிராம வங்கிப்பணி, தொழிற்சங்கத்தில் மூழ்கிப் போன இலக்கிய முகம்..... எல்லாம் வாசிக்க வாசிக்க என் வாழ்க்கையின் சில கட்டங்களை அப்படியே திரும்பிப் பார்ப்பது போல் இருக்கிறது. அத்தனைக்கத்தனை அப்படியே என்று சொல்லி விட முடியாது தான், ஆனால், ஒப்பிட்டுக் கொள்ள எத்தனையோ...
வைப்பாற்றங்கரை அவருக்கு, பாலாற்றங்கரை எனக்கு. அவருக்கு, ஆச்சி வந்து படைக்கிறாள் கதை உலகம், எனக்கு என் பாட்டி.
பள்ளி நாடகத்தில், ஷேக்ஸ்பியரது புகழ் பெற்ற ஒதெல்லோ நாடகத்தின் டெஸ்டிமோனா வேடத்தில் ஸ்த்ரீ பார்ட் போட்டிருக்கிறார் மாதவராஜ்! அந்த அழகில் மயங்கி, காதலன் வேடம் போட்ட பையன் இவர் உதடுகளில் முத்தம் இட்டுவிடுகிறான், வெட்கம் பிடுங்கித் தின்ற கதையை இப்போது ரசித்து எழுதுகிறார் மாதவராஜ். எனக்கு என் ஸ்த்ரீ பார்ட் நினைவுக்கு வந்தது. காஞ்சிபுரம் பச்சையப்பன் நடு நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நாடகத்தில், ராணியின் தோழி ரஞ்சிதம் ஆக நான்! என்ன, சிரட்டைகள் பொருத்திக் கொண்டு பருவ மங்கை ஆகிப் போனார் அவர், என் கதை வேறு, மேக்கப் மேன் முதல் நாளே சொல்லி இருந்தும் கொட்டாங்கச்சிகள் இல்லாமல் போய் நின்று, அவரை தாஜா செய்து சமாளித்து நடித்து முடித்து வீடு திரும்புகையில் வழியில் பெட்டி கடைக்காரர் அளித்த வாழைப் பழங்கள் பரிசோடு வீடு திரும்பினேன்.
அம்புலி மாமாவின் விக்கிரமாதித்தன் வேதாளம், வாராந்தரி ராணி, தமிழ்வாணனின் சங்கர்லால், மாது, வாரம் தவறாமல், ஒரு பத்திரிகை விடாமல் சுஜாதா தொடர் கதைகள்.... அப்படியே என் இளம் பிராய வாசிப்பு உலகமாக விரிந்தது எனக்கு. தொழிற்சங்க வாழ்க்கை உள்பட பின்னரும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே வருகிறது, அவரது காலக் கண்ணாடியில் அப்படியே பிரதிபலிக்கும் என் சமகாலப் பயணமும்.
இரண்டாம் இதயம், மாதவராஜ் தம் வாழ்க்கைப் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களைத் திரும்பிப் பார்த்த நினைவுகளின் தொகுப்பு போலத் தெரியலாம், ஆனால், சுற்றிலும் உள்ள உலகை நேசிக்கும் ஓர் எளிய தோழனது உணர்ச்சிச் சிதறல்களின் ஒலிப் பேழை போல் ஒலிக்கிறது அவரது எழுத்து. ஆம், உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் உள்ள எழுத்து வாசகரோடு பேசிக் கொண்டே நடக்கத் தானே செய்யும்!
என்னென்ன மாதிரியான மனிதர்களது கோட்டுச் சித்திரங்கள் விரிகின்றன இரண்டாம் இதயத்தில்........
தங்கள் சிற்றிதழ் பிரதிகளை அந்நாளைய டிரேடில் பதிப்புக்காக அச்சுக் கோத்த ஏசுவடியானை அவர் பிறிதோர் காலத்தில் தேநீர் கொண்டு வந்து வைக்கிற இடத்தில் பார்க்கவும், தன்னை மறந்த இவரிடம் தன்னை அவர் நினைவுபடுத்திக் கொண்டு, 'உங்கள் பத்திரிகையின் பழைய இதழ் பூராவும் பத்திரமா வச்சிருக்கேன் சார்' என்று நெகிழ வைக்கும் அவரது மொழி என்னைக் குமுற வைத்தது.
ஆர்க்குட் நண்பன், கதற வைக்கும் சோக அனுபவம். பாலு சார், நெகிழ வைத்து விட்ட துயரப் பெருங்கோப்பை. வரதராஜ பெருமாள் ஏற்கெனவே கேள்விப்பட்ட தோழரின் வாழ்க்கை என்றாலும் கலங்க வைத்தது. மேல் அடுக்குகளில் எத்தனை கோடிக்குப் பொறுப்பானவர்கள் பெரிய குற்றங்கள் இழைத்தாலும் தப்பிக்கிற வங்கி நிர்வாக அமைப்பில், கீழ் நிலையில் ஒரு தவறுக்காக வெளியேற நேர்ந்து, பல ஆண்டுகள் கழித்துக் கண்ணில் படுகையில், ' என்னத் தண்டிச்சு ஒழுக்கத்தைக் காப்பாத்திக்கட்டுமப்பா ' என்று சொல்லும் மெய்யப்பனின் உலர்ந்த மொழி இதயத்தை அறுப்பது.
தனுஷ்கோடி ராமசாமி அவர்களைப் பற்றிய அத்தியாயம் ஓர் அபார ஆவணப் படம். தம்மை மாப்பிள்ளையாகத் தடுத்தாட் கொண்ட மாமனார் ஜெயகாந்தன் அவர்களோடான தருணங்கள் ஈர நெஞ்சத்தின் அழியாக் கோடுகள்.
கவுகாத்தி ரயில் பயணத்தில் மூடிய கதவுக்கு வெளியே சூட் கேஸ் பற்றியபடி தொத்திப் போனது ஒரு திகில் நாடகம் எனில், நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை' தான், மாதவ் உள்ள மணல் பரப்பில் தொட்டு எழுதிய புதிய முற்போக்கு இலக்கிய பரிச்சயத்தின் ஆனா ஆவன்னா...
தன்னைப் பாடு என்ற கேட்ட மகனிடம்,'உங்கப்பா இப்படி ஒரு நாளும் கேட்டதில்ல' என்று அழும் அவரது தாயின் மனச் சுமை நூற்றாண்டுகளின் அழுத்தம் மிகுந்து வலிப்பது. தனது இளமைக் கால அலைக்கழிப்புகளை மோப்பம் பிடித்து விடும் தங்கை, அணில் அடித்து உரித்துப் பக்குவம் செய்து ஊட்டியதும், பிறகொரு பொழுதில் ஓட ஓட விரட்டி அடித்ததுமான அண்ணன், சென்னையில் தோற்றுத் திரும்பிய தந்தை, சித்தப்பா .... என்று விரியும் உறவுகளும், ஊரும், திரைப் படங்களும், பாடல்களும் என விரிகிறது நினைவின் மடிப்பு.
கொரோனா தனிமைப் படுத்தலில், ஒரே மூச்சில் வாசித்த இரண்டாம் இதயம், கடந்த காலம் பற்றிய அவரது துடிப்பாக அல்ல, இணையாக வாசகர் இதயமாகவும் துடிக்கத் தொடங்குவதை உணர முடிகிறது.
இரண்டாம் இதயம்
ஜா மாதவராஜ்
பாரதி புத்தகாலயம்
160 பக்கங்கள்.
விலை. ரூ 150/-