பொய் மனிதனின் கதை - 9


“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை.

வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும்.

தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்

தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள்.

மேலும் மேலும்  பொய்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்”

 

- கேத்தி பர்ன்ஹாம் மார்ட்டின்

 

“நாம் காரை ஒட்டிச் செல்கிறோம். அல்லது வேறொருவர் கார் ஒட்ட, நாம் பின்னிருக்கையில் அமர்ந்து செல்கிறோம். அப்போது ஒரு நாய்க்குட்டி குறுக்கே வந்து சக்கரத்தில் மாட்டிக் கொள்ள நேரிட்டால் நமக்கு வேதனையாய் இருக்குமா இருக்காதா? நானும் மனிதன்தான். எங்காவது கெட்டது நடக்கும்போது கவலை வரத்தான் செய்யும்”

 

குஜராத் கலவரங்களுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட மோடி, 2013ம் ஆண்டு சிறப்பு புலனாய்க் குழுவால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்பு வெளியிட்ட கருத்து. “கலவரங்களுக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?” என்று அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மோடி அளித்த பதில். மோடி கவலைதான் பட்டிருந்தார். வருத்தப்படும் தொனி கூட அவரது வார்த்தைகளில் இல்லை.

 

அப்படி கார்ச்சக்கரத்தில் மாட்டிக் கொள்லாமல் தப்பிப் பிழைத்த இரண்டு ‘நாய்க் குட்டிகளை’  17 வருடங்கள் கழித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் போய் சந்தித்தது.

 

குஜராத்தில் அகமதாபாத்தில் குப்பை கொட்டும் இடம் அருகே வசித்து வந்த முகமது ரஃபிக்கும், சேரிப்பகுதியில் வசித்து வந்த பூஜா ஜாதவும்தான் அவர்கள்.  இருவருமே 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் தப்பிப் பிழைத்த போது, ஒரு வயதுக் குழந்தைகள்.

 

2019ல் அவர்களுக்கு பதினெட்டு வயதாகி முதன் முறையாக ஓட்டுப் போட தகுதியான பிறகு, ராய்ட்டர்ஸ் நிறுவனம் இருவரையும் அருகருகே நிறுத்தி பேச வைத்தது.

 

“காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தோ, சுவாரசியமான கற்பனைக் கதைகளைக் கேட்டோ குழந்தைகள் வளருவார்கள். நாங்களோ இந்து முஸ்லீம் கலவரங்களைப்பற்றி கேட்டுத்தான் வளர்ந்தோம்” முகமது ரஃபீக் தனது செல்போனை நோண்டியபடி பேசினான். இழப்புகளும், வலியும் அவனது வார்த்தைகளில் தோய்ந்திருந்தன.

 

ஒரு மாத காலம் நீடித்த கலவரங்களின் போது நரோடா பாட்டியாவில் மட்டும் 800 முஸ்லீம்களும் 255 இந்துக்களும் கொல்லப்பட்டிருந்தனர். அங்குள்ள சேரிப்பகுதியில் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்தார் ரஃபீக்கின் தந்தை. மதவெறிக் கும்பல் அந்த கடைக்குத் தீ வைத்தது. தப்பி ஓடும்போது ரஃபிக்கின் தந்தை காலில் போலீஸின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உயிருக்குப் பயந்து நிவாரண முகாம்களில் தந்தையும் மகனும் தஞ்சமடைந்தனர். பின்னர் அகமதாபாத்தில் இருக்கும் மிகப் பெரிய குப்பைக் கொட்டும் இட த்திற்கு அருகில் வசித்து வந்தனர். “பிஜேபியின் மீது இருக்கும் ஆத்திரம் என் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது” என்றான்  ரஃபீக்.

 

2002ல் ரஃபீக் குடும்பம் கொடூரமாக விரட்டப்பட்ட இடத்திற்கு அடுத்த சந்திலிருந்து அப்போது தப்பித்த இன்னொரு ஒரு வயது குழந்தைதான் பூஜா ஜாதவ். அவளது பார்வை முற்றிலும் வேறாக இருந்தது.

 

கலவரம் முடிந்த பிறகு, சேதமடைந்திருந்த தங்கள் வீட்டிற்கே திரும்ப வந்து வாழத் தொடங்கியது அவளது குடும்பம். பக்கத்து வீடுகளில் ஏற்கனவே வசித்து வந்த முஸ்லீம்களுக்கு பதிலாக வேறு முஸ்லீம்கள் இருந்தார்கள். ”எங்களுக்கு வேறு வழியில்லாமல் அங்கு மாட்டிக் கொண்டோம்.” என்றாள் பூஜா.

 

“மோடியின் வெற்றி என் அம்மாவுக்கு சந்தோஷமளித்தது. அம்மாவின் சந்தோஷம் எனக்கு சந்தோஷம் தந்தது. எனக்கு முஸ்லீம்கள் மீது வெறுப்பு இல்லை. ஆனால் மோடி பிடிக்கும்.” என்றாள்.

 

“பிஜேபி ஆட்சி செய்யும் போது,  பக்கத்தில் வசிக்கும் முஸ்லீம்களால் எங்களுக்கு தொந்தரவு வராது” என்று தொடர்ந்தாள். “முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடைவெளியும், எல்லையும் இருக்க வேண்டும்” என்பதே அவளது முடிவான கருத்தாக இருந்தது.

 

”மோடி முஸ்லீம்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் நாங்கள் எப்படி நாத்தம் பிடித்த குப்பையில் கிடந்து வாழ்கிறோம் என்பதை வந்து பார்த்திருப்பார். முஸ்லீம்களை அவமதிக்கும் அவரது செயலே எனது அரசியல் முடிவை தீர்மானித்தது” என்றான் ரஃபீக்.

 

முகமது ரஃபீக்கும், பூஜா ஜாதவ்வும்  குஜராத் கலவரங்களிலிருந்து உருவானவர்கள். இருவரின் வாழ்க்கை நிலைமையில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு குடும்பங்களும் அடுத்த வேளை உணவுக்கு அல்லல் பட்டன. இருவருமே படிக்கவில்லை. தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உழைத்தார்கள். ஒரு நிரந்தரமான வேலை, நல்ல காற்றோட்டமான சூழலில் வசிப்பிடம் வேண்டும் என்னும் கனவுகளைச் சமந்திருந்தார்கள்.

 

இருவரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக ஒட்டு போட இருந்தார்கள். அவர்களின் ஒட்டு யாருக்கு என்பதை அறிவதுதான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நோக்கம். பதினேழு வருடங்களும் அவர்களுக்குள் எப்படி உறைந்து போயிருந்தன என்பதை அழுத்தமாக உணர முடிந்தது.

 

தங்கள் அன்றாட வாழ்வின் பிரச்சினைகள், அவைகளுக்கான தீர்வுகள், அதையொட்டிய அரசியல் என்று அவர்களது சிந்தனைகள் விரியாமல், காயடிக்கப்பட்டிருந்தது. உள்ளுக்குள் அச்சம், வன்மம், பாதுகாப்பற்ற உணர்வு எல்லாம் நிறைந்திருந்தது. அவர்களை தனித்தனியாய் இரண்டு கூறுகளாக்கி,  இடையே காலம் கோடு கிழித்து வைத்திருந்தது. இதுதான் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் கதை.

 

ஷாஜஹான் பனோவும்  அப்படி தப்பிப் பிழைத்த இன்னொரு நாய்க்குட்டிதான். அவனும்  கடும் வெறுப்பில்தான் இருந்தான்.

 

2002ம் ஆண்டு சிறுவனான அவன் தன் அம்மாவோடு அகமதாபாத்தின் முக்கிய சந்தையில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த நாளில் கலவரம் வெடித்தது. பயத்தோடு அன்று இரவு முழுவதும் அந்த சந்தையிலேயே ஓளிந்திருந்தனர். அடுத்த நாள் நிவாரண முகாம்களுக்குச் சென்றனர். அங்கே தங்கள் உறவினர்களும், நண்பர்களும் என்ன ஆனார்களோ என பதற்றத்துடன் பல மூஸ்லீம்கள் காத்துக் கிடந்தனர்.

 

ஒரு மாதம் கழித்தே அவர்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சிட்டிசன் நகரில் ஒரு சிறிய வீடு ஒதுக்கப்பட்து. முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று கட்டித் தந்த குடியிருப்புகள் அவை. இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள். ஒல்லியாய் காணப்படும் ஷாஜஹானுக்கு இப்போது 23 வயது. 

 

“இப்படி வசிக்க ஒரு இடமாவது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் நாங்கள் தினம் தினம் இந்தப் புகை, நாற்றம், குப்பைகளுக்குள் கிடந்து சாகிறோம். எந்த வசதியும் இல்லை. ஆனால் நாங்கள் வேறு எங்கே போக முடியும்?” வெறுத்துப் போய் பேசினான் ஷாஜஹான்.

 

2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் அவர்கள் தப்பிப் பிழைத்திருக்கலாம். ஆனால் கடுமையாய் அடிபட்டு காயங்களோடும், கொடூரமான நினைவுகளோடும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.

 

தாங்கள் கால காலமாய் வாழ்ந்த இடங்களை விட்டு இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் அகற்றப்பட்டிருந்தார்கள். வாழ்க்கை முற்றிலுமாக புரட்டிப் போடப்பட்டிருந்தது. அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாய் இருந்தார்கள்.

 

“பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு பெரிதாய் ஒன்றும் செய்யவே இல்லை.” என்றார் வழக்கறிஞர் ஷம்ஷத் பதான்.  முஸ்லீம் மக்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுத் தர போராடிக்கொண்டு இருந்தவர் அவர். “இன்றைக்கு இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் அடுத்தடுத்த கட்டிட குடியிருப்புகளில் வசிக்கும் காட்சியை பார்க்க முடியாது. பிரிக்கப்பட்ட நகரமாகி விட்டது. முஸ்லீம்கள் ’கெட்டோ’க்களில் வாழத் தள்ளப்பட்டு விட்டார்கள்” என்று மேலும் சொன்னார். (கெட்டோ என்பது சிறுபான்மையினர் மட்டுமே வசிக்கும் மோசமான பகுதி. ஜெர்மனியில்  ஹிட்லர் தலைமையிலான பாசிஸ்ட் அரசு நடத்திய இனப்படுகொலை காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கெட்டோக்களில் யூதர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தார்கள்.)

 

பதற்றம் நிறைந்த இடங்களில் முஸ்லீம்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் இடங்களை விற்பதை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, ‘The Distrubed Areas Act’ 1991ல் மதக்கலவரங்களை தடுக்கும் பொருட்டும், அமைதியை ஏற்படுத்தும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்தச் சட்டத்தில்  உள்ளூர் அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை கொடுத்து திருத்தம் செய்திருந்தார் மோடி. “அது அரசே முன்னின்று நடத்திய பிரிவினை” என்றார் பதான்.

 

“அதன் விளைவு, முஸ்லிம்கள் எல்லாம் இழிவான பகுதிகளில் மொத்தம் மொத்தமாய் ஒதுக்கப்பட்டனர். வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் எல்லாம் மாநிலத்தில் வேறு யாருக்காவது இருக்கலாம். நிச்சயமாக முஸ்லீம்களுக்கு இல்லை” என்று சொன்னார்.  2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகான  தொடர்கதை அவ்வளவு கொடுமையாய் இருந்தது.

 

அகமதாபாத்தில் இருக்கும் ஜுஹாபுரா பகுதியில் நான்கு லட்சம் முஸ்லீம்கள் வசித்து வந்தார்கள்.. ஏற்கனவே இருந்த முஸ்லீம்களோடு, கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் சேர்ந்திருந்தனர். அகமதாபாத்தில் இருக்கும் இந்துக்கள் ஜூஹாபுராவை ‘குட்டி பாகிஸ்தான்’ என்றே அழைக்கிறார்கள். அந்த இரண்டே இரண்டு வார்த்தைகள் மொத்த அவலத்தையும், ஆபத்தையும் சொன்னது.

 

இந்துத்துவ அரசியலின் – மோடி ஆட்சியின் – நோக்கமும் பாதையும்  அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது.  இந்திய பாசிசத்தின் அடையாளமும், தடயமும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. மக்களை பிளவு படுத்தி, சிறுபான்மை மக்களை ஓரிடத்தில் ஒதுக்கி, பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு எதிராக காலமெல்லாம் திரட்டி தங்கள் அதிகாரத்தை கேள்வி கேட்பாரில்லாமல் நிறுவும் அராஜகத்தை குஜராத்தில் மோடி நிகழ்த்தி இருந்தார். மக்களை அவர்களின்  நிஜமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி அறிவு பூர்வமாக சிந்திக்க விடாமல், உணர்வுகளின் வலைகளில் வீழ்த்தி விட்டு, அவர்கள் மீது தங்கள் மிருகத்தனமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாசிச சாம்ராஜ்யத்தின் வேர்  குஜராத்தில் ஆழமாக இறங்கி இருந்தது. பாவம் பூஜா ஜாதவ் என்ன செய்வாள்?

 

குஜராத்தில் 2002ற்கு பிறகும் மதக் கலவரங்களும், பதற்றங்களும் நீடித்துக் கொண்டேதான் இருந்தன. வன்மத்தையும், பழிவாங்கும் இயல்புகளையும் விதைத்த நிலத்தில் வேறென்ன விளையும்?

 

தேசத்தில் நடந்த மதக் கலவரங்களின் சராசரியைக் காட்டிலும், குஜராத்தில் அதிகமாக நடந்து வந்தன என்றே புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. 2003ம் ஆண்டிலிருந்தே மதக் கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.

 

அதிலும் 2008ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பெரும் பதற்றத்தையும் சேதங்களையும் ஏற்படுத்தி இருந்தது. 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 56 மனிதர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயம் பட்டனர்.

 

ஆனால் மோடி குஜராத்தில் 2002ற்கு பிறகு கலவரங்களே நடக்கவில்லை என்றும், அமைதி நிலவுவதாகவும், வளர்ச்சி மட்டுமே ஒரே நோக்கமாகவும்  சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார்.  அவர் தனது சாம்ராஜ்ஜியத்தை குஜராத்திலிருந்து இந்தியாவுக்கு விரிவுபடுத்த ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தார்.

 

2013ம் ஆண்டு  நவம்பர் 30ம் தேதி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி டெல்லி ரமலான் மைதானத்தில் கூடியிருந்த முஸ்லீம் மக்களிடையே பேசினார். சிறுபான்மை மக்களிடையே திட்டமிட்டு முதன்முறையாக அவர் பேசிய கூட்டம் அது.

 

“கிரிக்கெட் மேட்சில், பட்டம் விடுவதில், இருசக்கர வாகனம் மோதியதில் உருவாகிய அற்ப காரணங்களுக்காக எல்லாம் மதக்கலவரங்கள் வெடித்த காலம் ஒன்று குஜராத்தில் இருந்தது. என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் மீண்டும் அப்படி கலவரங்கள் நடக்க விடவில்லை. எனது மாநிலம் இப்போது முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஜாதி, மதங்களைத் தாண்டி அனைவரும் சமமானவர்களாகவும் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.” 

 

இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பயங்கரமானவை என்பது உண்மையை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 

ஆதாரங்கள்:

 

* Polarised Politics: How two teenagers will vote after surviving 2002 Gujarat riots -  by Rupan Jain, Reuters, April 23, 2019

* Muslims still consigned to Gujarat’s slums 15 years after 2002 Riots - by Rina Chandran, Wire, July 25, 2017

* Gujarat not riot–free since 2002 : Here’s the Proof - First Post, April 07, 2014

* Meenakshi Lekhi’s Claim About ‘No Riots in Guj Post 2002’ is False -  The quint, Mar 17, 2020

* 2008 Ahmedabad Bombings - Wikipedia

* No Guilty feeling about Gujrat riots, says Modi - The Hindu, June 13, 2013

* No riot in Gujarat during 10 year rule, Modi says in delhi -  The Times of India, Dec 1, 2013கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!