பொய் மனிதனின் கதை - 8


“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்”

- அடால்ப் ஹிட்லர்

 

“விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது” என்று குஜராத் முதல் மந்திரியாய் இருந்த நரேந்திர மோடி 2011 மார்ச் 22ம் தேதி ஊடகங்களிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தார். “மக்களிடம் கேட்டறிந்தே அந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார். அதனை அவரது வலைத்தளத்திலும் பதிவு செய்தார். அதே நாளில் குஜராத்தில் பண்டிட் தீனதயாள் பல்கலை கழகத்தில் பேசும்போதும், “நான் ஊழலற்றவன் என அமெரிக்கா சொல்லி விட்டது.” என்று தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.

 

விஷயம் என்னவென்றால் விக்கிலீக்ஸிலிருந்து மைக்கேல் ஓவன் என்பவர் 2006ம் ஆண்டில் மோடியை சந்தித்து உரையாடியிருந்தார். குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட களங்கத்தால் மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்திருந்தது. அதையொட்டி மனித உரிமை மீறல் குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் மோடி குறித்த ரிப்போர்ட் ஒன்றை விக்கிலீக்ஸுக்கு ஓவன் அனுப்பி இருந்தார்.

 

2011 மார்ச் 22ம் தேதி வெளியான ஹிந்து நாளிதழில் அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. ”குஜராத்தின் பொது வாழ்க்கையில் ஊழலைக் குறைத்தவர் போன்ற பிம்பத்தை மோடி வெற்றிகரமாக கட்டமைத்திருந்தார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

அதைத்தான் அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்த நரேந்திர மோடி தன் இஷ்டத்திற்கு  திரித்துக் கொண்டார். அப்போது யாரும் அது பற்றி பேசியதாய்த்  தெரியவில்லை.  2013ம் ஆண்டில் பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மோடியின் விசுவாசிகளும், பிஜேபி தொண்டர்களும், இந்துத்துவ வெறியர்களும் மோடி குறித்து நாடெங்கிலும் பற்ற வைத்த கதைகளில் அதற்கு கை, கால், வாய் எல்லாம் முளைத்திருந்தது.

 

“அமெரிக்கா மோடியைக் கண்டு பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு மோடி ஊழல் செய்யாதவர் என்று தெரியும்.” என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சொன்னதாக டுவீட்டரில் செய்திகளைப் பரப்பி விட்டனர். மோடிக்கு அது குறித்தெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இருக்கவில்லை.

 

2002ம் ஆண்டிலிருந்து குஜராத் முதலமைச்சராக  இருந்த காலமெல்லாம் அவர் ஊழலற்றவர் என்ற பிம்பத்தை எப்படி கட்டமைத்திருந்தார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு மீதிக் கதையை தொடர்வோம்.

 

‘சுஜலாம் சுபலாம் யோஜனா’ என குடிநீர், விவசாயத்திற்கான நீர் வளத்தை விரிவுபடுத்தும் திட்டம் செப்டம்பர் 2004ம் ஆண்டு குஜராத்தில் கொண்டு வரப்பட்டது. திட்டங்களுக்கு பேர் வைப்பதில் எல்லாம் ஒரு குறையும் இருக்காது. டிசம்பர் 2005ற்குள் 4904 கிராமங்கள், 34 நகரங்களுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. அதற்கான மொத்தச் செலவு 458.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது.  ஒரு காண்டிராக்டருக்கு ஒரு காண்ட்ராக்டுதான் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

 

ஆனால் அந்த திட்டம் 2008ம் ஆண்டு வரையிலும் நிறைவேற்றப்படவே இல்லை. 911 கோடி ருபாய் செலவு செய்தும் 2524 கிராமங்கள், 19 நகரங்களில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.  விதிமுறைகளுக்கு எதிராக 106 காண்ட்ராக்டுகளை 16 காண்டிராக்டர்களுக்கு மொத்த மொத்தமாய் வழங்கி இருந்தது மோடியின் அரசு. வரையறுக்கப்பட்டதை விட அதிக நிதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (The Comptroller and Audit General of India – CAG) அறிக்கையில் அதில் நடந்த ஊழல்களும், முறைகேடுகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

 

குஜராத்தில் 2002ம் ஆண்டிற்கு பிறகான மோடி அரசின் நிர்வாகத்தின் லட்சணத்திற்கு ஒரு பதம் அது. ஆனாலும் “நான் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என 2007 டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மோடி தைரியமாக சவடால் விட்டார். மூலை முடுக்கெல்லாம் அந்த வாசகங்கள் நிரம்பிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

 

அரசு அலுவலகங்களில், கீழ்மட்ட அளவில் லஞ்சத்துக்கு எதிரான தீவீரமான கண்காணிப்புகள் இருப்பதாய் காட்டிக்கொண்டு, அங்கங்கு சில அதிகாரிகளை கைது செய்து ஊழலுக்கு எதிரான தனது வேகத்தைக் காட்டிக் கொண்டார். ஊழலுக்கு எதிரான பெரும் யுத்தத்தை அவர் தொடங்கி விட்டதாகவும், அதனை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டேன் என்றும் வாளை சுழற்றிக் கொண்டிருந்தார்.

 

மக்களின் பார்வைக்கு வராமல் உயர் மட்ட அளவிலான பெரும் ஊழல்கள் நடந்து கொண்டு இருந்தன. கார்ப்பரேட்களுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

 

தொழில் வளர்ச்சி என்ற பேரில்  டாட்டா, அதானி உட்பட பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்களை வழங்கியதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ருபாய்க்கு இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. பெரும் முறை கேடுகள் நடந்திருந்தன. ‘Corrupt Modi’  என்னும் ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊழலும் கதை கதையாய் சொல்லப்பட்டது.

 

 2007ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் துவங்கப்பட்ட Gift City (Gujarat International Finance Tech City)  திட்டம் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. 12.26 லட்சம் சதுர அடி நிலம் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2700 கோடி மதிப்புள்ள நிலத்தை, சதுர அடிக்கு ரூ.1/- என கணக்கிடப்பட்டு ‘Gift’ போல கொடுக்கப்பட்டது.

 

முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசு விமானங்களையோ, வணிக ரீதியான விமானங்களையோ ‘ஏழைத்தாயின் மகனான’ மோடி பயன்படுத்தவில்லை. உயர் தர வசதிகளுடன் கூடிய தனி விமானங்களையே பயன்படுத்தி வந்தார். அவைகள் எல்லாம் அவரால் சலுகைகள் வழங்கப்பட்ட பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவை. அதெல்லாம் ஊழல் கணக்கிலேயே இல்லை.

 

குஜராத் அரசின் இளம் வருமானத்துறை அதிகாரிகளுக்கான பணி நியமனத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றது. சர்ச்சைகள் எழுந்தன. சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திநகரில் கோச்சிங் செண்டர் நடத்தி வந்த கல்யாண்சிங் சம்பவத் என்பவர், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடம், வேலை பெற்றுத் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. விசாரணையில் அவர் பணம் பெற்றது தெரிய வந்தது.

 

அந்த கல்யாண்சிங் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், பிஜேபியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாயின.  “பிஜேபி கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பிஜேபி எப்படி பொறுப்பாக முடியும். கல்யாணசிங் பிஜேபியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை” என விஜய் ருபானி கை கழுவிக் கொண்டார். அந்த ருபானி பின்னாளில் குஜராத் முதலமைச்சரானார். அதுபோல இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.

 

சஹாரா குரூப் கம்பெனியிலிருந்து மோடியே 55 லட்சம் ருபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் கூட ஒரு செய்தி கசிந்து கொண்டிருந்தது.

 

எந்த துறையையும் மோடி அரசு விடவில்லை. மீன்வளத்துறை அமைச்சராயிருந்த புருஷோத்தம் சோலங்கி டெண்டர் அறிவிக்காமல் முறைகேடாக லஞ்சம் பெற்று தனக்கு வேண்டியவர்களுக்கு  காண்ட்ராக்ட் விட்டதாக  இஷாக் மராடியா என்பவர் 2013, ஜனவரி 5ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 400 கோடிக்கு மேலாக ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீஸ் இதனை விசாரிக்கக் கூடாது எனவும், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் மூலமாக கேட்டுக் கொண்டார்.

 

ஆனாலும் காந்திநகர் காவல்துறையே அந்த குற்றச்சாட்டை விசாரித்து 2015ம் ஆண்டில் புருஷோத்தம் சோலங்கி மீது எந்த தவறும் இல்லையென அறிக்கை கொடுத்தது. உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது.  ஷோலங்கி மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

 

2018ம் ஆண்டில் தன் மீது நடக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என புருஷோத்தம் சோலங்கி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

 

2019 மே மாதம் வழக்கு தொடுத்த இஷாக் மராடியா மீது ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னை அச்சுறுத்தவும், பழிவாங்கவுமே அரசு நடவடிக்கை எடுப்பதாக இஷாக் தெரிவித்தார்.

 

அதே சோலங்கி மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாய் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் 2019ம் ஆண்டில் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. காவலாளி ஒருவரைக் கொல்ல முயன்றது மற்றும் பார்லர் ஊழியர் ஒருவரை அடித்தது போன்ற ரவுடித்தனங்களால் அவரது மகன் குஜராத் மாநிலமே அறிந்த பிரபலம். இந்த தகவல்களோடும் சேர்த்துப் பார்த்தால் மோடியின் குஜராத் அரசு எத்தகையது என்பது விளங்கும்.

 

திசை திருப்புவது, குற்றம் சுமத்துபவர்களை அச்சுறுத்துவது, குற்றம் நிரூபிக்கப்படாமல் போக வைப்பது என ஆட்சியில் இருந்த பிஜேபி தன் அதிகாரத்தை பிரயோகித்து உண்மைகளை விழுங்கியது.

 

மொத்தம் 17 முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய போது, “காங்கிரஸ் என்ன யோக்கியமா” எனவும், “குஜராத் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது” எனவும் முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன.

 

லோக் ஆயுக்தா சட்டத்தின் பிரகாரம் குஜராத் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பை செயல்பட விடாமல் வைத்திருந்த பெருமை மோடியைச் சேரும்.  முடிந்தவரை அதனை நீர்த்துப் போகச் செய்திருந்தார். அவர்தான் அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கடுமையாக்கப் போராடிய அன்னா ஹசாரேவை ஆதரிக்கவும் செய்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நேரில் பார்க்காத நமக்கு, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அகிம்சை வழியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது” என ட்வீட்டினார். தனது இணைய தளத்தில் எழுதவும் செய்தார்.

 

மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் வெளிவந்த ஊழல்களை எதிர்த்து நாடெங்கும்  எழும்பிய சத்தங்களில்  குஜராத்தில் நடந்த ஊழல்களுக்கு எதிரான குரல்கள் எல்லாம் அடிபட்டுப் போயின. நாடே அன்னா ஹசாரேவின் பஜனையில் மூழ்கிப் போனது.

 

ஊழலின் ஊற்றுக் கண்ணாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள், ஊழலை ஒழிப்பதற்கான வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்றார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கார்ப்பரேட்களே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும் நாடகமொன்று நாட்டு மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது. காங்கிரஸ், மன்மோகன்சிங் மீது மக்களின் கோபம் திரும்பியது. ஊழல் பேர்வழி மோடி கார்ப்பரேட்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக வலம் வந்தார்.

 

சரி, இப்போது தொடங்கிய கதைக்கு வருவோம்.

 

“மோடி ஊழலற்றவர் என்பதை அறிந்து அமெரிக்காவே பயப்படுகிறது” என்றாலும் யார் கேட்க போகிறார்கள்? அமெரிக்கா வந்து மறுக்கப் போகிறதா என்னும் மூர்க்கத்தனமான தெனாவெட்டில் வெளியிடப்பட்ட சங்கிகளின் ட்வீட்களுக்கு விக்கிலீக்ஸே பதில் அளித்தது.

 

“மோடி ஊழலற்றவர் என விக்கிலீக்ஸின் எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்றும் “மோடியின் ஆதரவாளர்கள் தவறான செய்திகளை உக்கிரமாக பரப்புகிறார்கள்” என்றும், “நரேந்திர மோடியின் பிஜேபி தவறான செய்திகளை பரப்புகிறது. அசாஞ்சே ஒருபோதும் மோடி ஊழலற்றவர் எனச் சொல்லவில்லை” என்றும் அடுத்தடுத்து டுவீட்டரில் விக்கிலீக்ஸில் மறுப்புகளை தெரிவித்தது.

 

ஒன்றிரண்டு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், “இந்தியாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.”, “மோடி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறார்” “பிரதம வேட்பளரான  அவருக்கு இது பின்னடைவு” என்றெல்லாம் பேசினார்கள். எழுதினார்கள்.

 

சகலத்தையும் உதிர்த்த பிஜேபிக்கும், மோடிக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. “அமெரிக்காவின் சர்டிபிகேட் ஒன்றும் மோடிக்குத் தேவையில்லை.” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவர்களே களத்தில் இறங்கினார்கள்.

 

“மோடி ஊழல் கறை படியாதவர்” என்று தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

 

“இந்த தேசம் தான் என் குடும்பம். தனிப்பட்ட முறையில் எனக்கென்று குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?”  என மோடி நாட்டு மக்களிடம்  தன்னைப் புனிதராகக் காட்டிக் கொண்டார்.

 

அவருக்கு குடும்பம் இருக்கிறது. இந்திய கார்ப்பரேட்கள்தான் அவரது குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசமான பிரதம சேவகன் அவர். நாடு, மக்கள் எல்லாம் பிறகுதான். 

 

56 இஞ்ச் மார்பைத் திறந்து பார்த்தால் அங்கே அம்பானியும், அதானியும், டாடாவும் காட்சியளிக்கக் கூடும்.

 

 

ஆதாரங்கள்:

 

* I am glad that America admits Modi is incorruptible: Hon’ble CM -  Narendara Modi websidte

* Modi supporters aggressively pushed fake Assange Endorsement - Published in Outlook on 17th Mar 2014

* Narendra Modi’s incorruptibility: What WikiLeaks cable actually said - Ashish Mehta in GovernanceNow on Mar 20, 2014

* Sujalam gets CAG rap - Written by Kapildev, DNA dated Feb 20, 2009

* Kalyan sinh Champawat on remand for allegedly duping Talati job applicants - Desh Gujarat, Feb 18, 2014

* Big Corporates got govt land cheap: CAG - Indian Express, Gandhi Nagar dated Apr 03, 2013

* Rs 400 crore Fisheries scam: Gujarat HC rejects  plea filed by BJP Minister - Ahmedanbad Mirror, Nov 05, 2021

* 17 Scams that Narendra Modi does not want Lok Ayukta to probe - DNA, Aug 27, 2011

* Anna-led movement reinforces confidence in non-violence – Narendra Modi - The Economic Times, Aug 28,  2011

* Wikileaks never said Modi was incorruptible - Counter view dated Mar 18, 2014

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இந்த கட்டுரை உங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு சுய இன்ப பதிவாக மட்டுமே உள்ளது. எந்த உண்மையும் இல்லை. ஒரு குறுகிய வட்டம் வேண்டுமானால் மகிழும். வெகுஜனம் எந்த ரியாக்ஷனும் காட்டப் போவது இல்லை. மோடி என்கிற ஆளுமை வளர்ந்து கொண்டே தான் போகிறது. அது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் வகையிலேயே உள்ளது. அது குறைய போவதும் இல்லை, உங்கள் அரிப்பு தீரப் போவதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. சுய இன்பக் கதைகள் என வேண்டுமானால் பொருத்தமாக பெயர் வைக்கலாம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!