ஆரியர்கள் வந்த பிறகே இந்திய நிலப்பரப்பு நாகரீகம் அடைந்ததாகவும் அதற்கு முன், இங்கே இருந்த மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்தது போலவும் கட்டுக்கதைகளை வரலாறென இங்கு காலம் காலமாக சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
வேதங்களே இந்திய நாகரீகத்தின் மூலங்களாகவும், வேத காலமே இந்திய வரலாற்றின் துவக்கமாகவும், ரிஷிகளின் வாயசைவில் காலமே அசைந்ததாகவும் இங்கு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. பூமியில் இதுவரை காண முடியாத சரஸ்வதி நதியை கற்பனையில் பெருக்கெடுக்கச் செய்து நம்ப வைக்கிறார்கள். இதிகாசங்களும், அதன் கற்பனை பாத்திரங்களையும் இங்கு தெய்வீக மயமாக்கி வைத்திருக்கிறார்கள்.
உண்மைகள் மண்மூடிப் போவதில்லை.
அகழ்வராய்ச்சிகள் வரலாற்றுப் பொய்களையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தி ஆதாரங்களை பூமிக்குள்ளிருந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. வேத காலத்துக்கும் 1500 ஆண்டுகள் முந்தைய சிந்துவெளி நாகரீகம் வெளிப்பட்டு கடந்த காலத்தின் மீது வெளிச்சக் கீற்றுகளை வீசியிருக்கிறது.
4500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் அது. ஒரே அளவிலான செங்கற்கள், தரக் கட்டுப்பாடுகள் கொண்ட வணிகத்தைச் சொல்லும் ஒரே அளவுள்ள எடைக்கற்கள், தாய் தெய்வ வழிபாடுகள், முத்திரைகளில் காணப்படும் எழுத்துக்கள் என முதிர்ச்சியடைந்த நகர நாகரீகம் அது.
அந்த நாகரீகம் எப்படி சிதைந்தது, அந்த மக்கள் என்ன ஆனார்கள், அவர்கள் பேசிய மொழி என்ன போன்ற கேள்விகள் எல்லாம் நூறு ஆண்டுகளாய் முழுமையான விடையில்லாமல் இருக்கிறது.
தேதிகள் அற்ற அந்த கடந்தகாலம் குறித்து அதற்குப் பின் வந்த வேதங்களில் பேச்சு மூச்சே இல்லை. ஆனால் அது குறித்த தடயங்கள் சங்கப் பாடல்களில் சிந்துவெளியின் நாடியை அறிய முடிகிறது.
வழிவழியாய் வந்த நம் தொன்மங்களின் உடல்மொழியில், அதாவது பண்பாட்டில் சிந்துவெளி நாகரீகம் தென்படுகிறது. தென்னிந்திய நிலப்பரப்புக்கும், சிந்துவெளிக்கும் இருக்கும் தொடர்புகள் புலப்படுகிறது. கீழடியும், ஆதிச்ச நல்லூரும், சங்கப் பாடல்களும் அவைகளை உறுதி செய்கின்றன.
நம் கடந்த காலம் பற்றிய அந்த குறிப்புகளை இன்றைய டிஜிட்டல் வடிவில் சொல்லத் தோன்றியது. மதிப்பிற்குரிய ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் வழிகாட்டுதலோடு யூடியுபில் Short-களாக வெளியிட்டு வருகிறேன்.
இதுவரை 8 shorts வெளியாகி இருக்கின்றன.
ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்!
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்