வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் லீவு. வேறு எந்த பிரபல படங்களும் ரிலீஸ் ஆகாது. ஒரு நகரில் இருக்கும் அனைத்து தியேட்டர்கள், அந்த தியேட்டரில் இருக்கும் அனைத்து ஸ்கிரீன்கள் எல்லாவற்றிலும் ஒரே படம்தான். யாரும் படம் பார்க்கும் முன்னால் இருக்கைகள் புக் ஆகிவிடும். அப்புறம் என்ன ஐநூறு கோடி, ஆயிரம் கோடி என உலகம் முழுவதும் அளக்க வேண்டியதுதானே. இந்த மெகா மோசடிக்கு சினிமா உலகம் வைத்திருக்கும் பெயர் ‘பான் இந்தியா”.
ஒரு பொருளைப் பற்றி ’ஆஹா’, ‘ஓஹோ’ என விளம்பரம் செய்து, மக்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு, பொருளின் தரத்தைப் பற்றி மக்கள் அறிந்து சுதாரிக்க கால அவகாசம் கொடுக்காமல் பணத்தை சுருட்டுகிறவர்களை ஊருக்குள் ஃபிராடு கம்பெனி, சீட்டிங் பார்ட்டி என்றுதானே அழைப்பார்கள்?
முதல்நாள், முதல் ஷோ படம் பார்த்து விட்டு வருகிறவர்கள் சிலர், மீண்டும் தாங்கள் ஏமாந்து போனதைச் சொல்ல முடியாமல், ‘ஒ.கே’, ‘பார்க்கலாம், ‘கடைசி பதினைந்து நிமிஷம் அட்டகாசம்’ என எதையாவது ஒப்புக்கு சொல்லி வைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அமைதியாகி விடுகிறார்கள்.
இந்த படங்கள் எல்லாம் இப்படித்தான் படுமொக்கையாக இருக்கும் என்பதை இன்னும் அறியாமல் அடுத்த பிரமோக்களைப் பார்த்து அடுத்த படத்துக்கு புக் செய்ய ஆயத்தமாகவே இருக்கிறார்கள். எதை எதிர்பார்க்கிறார்கள், எப்படி ஏமாறுகிறார்கள் என்று கூட அறியாத விந்தை மனிதர்கள்தாம் பெரும்பாலான நம்மக்கள். சீட்டிங் பார்ட்டிகளையும், ஃபிராடு கம்பெனிகளையும் ‘வாழ வைக்கும் தெய்வங்கள்’.
இதோ கூலி படத்தை படு மொக்கை என்று தெரிந்த நண்பர்கள் சொல்கிறார்கள். ‘புளு சட்டை மாறன்’ அதை உறுதி செய்து விட்டார். இப்படித்தான் ஆகும். கதையைப் பற்றி யோசிக்கவே யோசிக்காமல் – தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழி நடிகர்களையும் அள்ளி போட்டுக் கொண்டு - ஷூட்டிங் சென்றால் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது.
இதே கதியில் அண்மையில் வெளிவந்த - பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட - படங்கள் எல்லாம் வரிசை கட்டி வணிக ரீதியாக தோல்வியே கண்டு வருகின்றன. கலை ரீதியாக பார்த்தால் எப்போதுமே, இவை எதுவும் தேறாது என்பது வேறு கதை. இந்த பிரம்மாண்ட குப்பைகளுக்காக நடந்த பிரமோக்களையும், அதில் நடித்த ஹீரோக்கள் விட்ட உதார்களையும் நினைத்தால் குமட்டிக் கொண்டுதான் வருகிறது.
புதுசாக எதையும் சொல்லாமல், அரதப் பழசையே காசாக்கும் இந்த சீட்டிங் பிஸினஸில் பேர் பெற்ற இயக்குனர்களாக அட்லீ, லோகேஷ் போன்றவர்கள் முன்னால் இருக்கிறார்கள். பாவம் சங்கர், மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் தம் கட்டி முண்டியடித்துப் பார்த்து விழுந்து கிடக்கிறார்கள்.
ஒரு மொழியில் எடுத்த படம், அதன் கதையால், மனதை விட்டு நீங்காத காட்சியமைப்பால், மற்ற மொழிகளிலும் திரைக்கு வருமானால் அது ‘பான் இந்தியா’ படம். நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன்பிருந்தே அப்படி பல படங்கள் இங்கு வந்திருக்கின்றன. நாடு முழுவதும் பேசப்பட்டு இருக்கின்றன. இன்று அந்த ‘பான் இந்தியா’ உத்தியை தங்கள் வியாபாரத்துக்காக பயன்படுத்துவதில்தான் பிரபல சினிமாக்காரர்களின் மூளை 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது.
குறைந்த செலவில், நல்ல கதைகளோடு, மனதை விட்டு நீங்காத காட்சியமைப்புகளோடு அழுத்தமான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் தமிழில் வந்த ’மெட்ராஸ் மேட்னி’, மலையாளத்தில் வந்த ’ரோந்து’ படங்கள் நல்ல சினிமாவின் அடையாளங்களோடு இருந்தன. அந்தப் படங்கள்தாம் இன்னும் சில காலம் கழித்தும் பேசப்படும்.
கூலி போன்றவை நாளைக்கே நினைவில் இல்லாமல் போய்விடும். அற்ப ஆயுள் கொண்டவை அவை.
மிகச்சரியான விமர்சனம்
ReplyDelete