இந்த குறும்படம் முகநூலில் 77 ஆயிரம் பார்வைகளும், யூடியுபில்
37
ஆயிரம் பார்வைகளும் என மொத்தம் 1,14,000 பார்வைகளை
இதுவரை பெற்றிருக்கிறது.
AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நான் உருவாக்கிய குறும்படம் இது.
இதைப் பார்த்து விட்டு ”எப்படி சார் AI வீடியோக்கள் உருவாக்குவது?”. “என்ன AI Tool உபயோகிக்கிறீர்கள்?”, “ கொஞ்சம் டிப்ஸ் தரலாமா?” என சில நண்பர்கள் போனிலும் இன்பாக்ஸிலும் பேசினார்கள். போன் நம்பர் கேட்டுப் பேசினார்கள்.
முதலில் இரண்டு விஷயங்களை சொல்ல வேண்டும். இது யாரையும் தயக்கம் கொள்ளவோ, பின்வாங்கவோ
செய்து விடக் கூடாது என்று என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
முதலாவது, 1956லேயே AI தொழில்நுட்பம் குறித்த பிரயோகங்களும். தொடர்ந்து ஆய்வுகளும்,
முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டாலும், அது வளர்ந்து வளர்ந்து இன்று அசுரத்தனமாய் வியாபித்த
பிறகுதான் நாம் அதனைத் தொட்டுப் பார்த்திருக்கிறோம். அதில் நான் ரொம்ப ரொம்பச் சின்ன
ஒரு கத்துக்குட்டி.
இரண்டாவது, யோசிக்காமல் தைரியமாக பணத்தை செலவு செய்ய முன்வர வேண்டும். Prompt கொடுத்து
இமேஜ் உருவாக்குவதிலிருந்து, வீடியோவாக்குவது, ஆடியோக்களை உருவாக்குவது, வீடியோக்களாய்
எடிட் செய்வது என்று AI தொட்டதற்கெல்லாம் காசு கேட்டுக்கொண்டே இருக்கும். பெரிய ஓட்டலுக்குச்
சென்றால், மெயின் டிஷ் சாப்பாடு கொடுத்துவிட்டு, சைட் டிஷ் என ஒவ்வொரு வகைக்கும் ரேட்டை
வைத்து வசூலிப்பது போலத்தான். எந்த AI Toolம் Free, trial period என்று சொன்னாலும்
அதை வைத்துக் கொண்டு உங்களை எட்டிப் பார்க்க வைத்து, பிறகு ஒவ்வொரு டிஷ்ஷுக்குமான மெனுவைக்
காண்பிக்கும். மிரள வைக்கும்.
AI தொழில்நுட்பத்தில் முக்கியமானது Prompt. நீங்கள் இமேஜை உருவாக்க, வீடியோவை உருவாக்க, ஆடியோவை உருவாக்க முயற்சி செய்தாலும், AI உங்களிடம் Promptஐ கேட்கும். அதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. உங்கள் வீடியோவுக்கான முழு காட்சிகளும், அசைவுகளும் உங்கள் கற்பனையில் தெளிவாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு என்ன காட்சி வேண்டும், எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த கோணத்தில்,
யார் யாரை வைத்து, அவர்களின் தோற்றம், உடல்மொழி, என்னென்ன உடைகள் என சகலத்தையும் தீர்மானித்து,
AI கேட்கும் Promptஐ கொடுக்க வேண்டும். நிச்சயமாக நாம் நினைப்பதற்கு மாறாய் ஒன்றுதான்
வந்து சேரும். ஆனால் நீங்கள் பணம் செலுத்தி உங்கள் கணக்கில் வைத்து இருக்கும் AI
creditலிருந்து அந்த காட்சிக்குரிய AI credit காணாமல் போய்விடும். மலைக்கக் கூடாது.
அந்த காட்சியில் / வீடியோவில் / ஆடியோவில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்த
Promptஐ கொடுக்க வேண்டும். ஓரளவு சரியாய் வரலாம். ஆனால் பணம் போய்விட்டிருக்கும். அதில்
உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்த Promptஐ கொடுக்க வேண்டும். சரியாய் வரலாம். ஒன்றை
இந்த இடத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு காரியத்துக்காக மூன்று
முறை, நான்கு முறை செலவு செய்ய நேரிட்டலும், நீங்கள் Promptஐ எப்படி கொடுக்க வேண்டும்
என்று கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தவறுகளை
மறுபடி செய்யாமல் கவனம் கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் கற்பனை செய்யும் காட்சிகள் எல்லாவற்றையும் AI அனுமதித்து விடாது. தங்கள்
POLICYக்கு முரணானது என கார்டை காண்பித்துவிடும். அதிலும் சிறுவர்கள் குறித்த காட்சிகள்
என்றால் நம்மை சாகடித்து விடும். ‘வீடு என்ன ஸ்கூலா’ குறும்படத்தில் அந்த சிறுவன் தன்
தந்தையைத் தாண்டி சமயலறைக்குச் செல்லும் காட்சிக்கு மட்டும் எனக்கு முழுசாய் ஒருநாளும்,
பல நூறு ருபாய்களும் ஆயின. குழந்தை தலையைக் குனிகிறான் என்றால், ஏன், எதற்கு என பல
கேள்விகள். .கடைசியில் முடியாது என்றே சொல்லிவிட்டது. ஒரு வழியாய் அந்தக் காட்சியை
உருவாக்குவதற்குள் பெரும்பாடு பட்டேன்.
இதெல்லாம் கூட சாதாரணம்தான். ஒவ்வொரு காட்சியிலும் நமது கதாபாத்திரங்கள் ஒரே முகச்
சாயலுடனும், காட்சிக்குரிய பாவனையுடனும் காட்சியளிக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும்
promptக்கு கிடைக்கும் உருவத்திலிருந்து நீங்கள் அதற்குரிய promptஐ கற்றுக் கொள்ள வேண்டும்.
அதை மீண்டும் மீண்டும் விடாமல் கொடுக்க வேண்டும். இதில் தவறத் தவற காசு போய்க்கொண்டே
இருக்கும்.
அடுத்து மிகப் பெரிய சோதனை. லிப் மூவ்மெண்ட். அதற்கு சூத்திரம் எல்லாம் இல்லை. உங்கள்
அனுபவத்தாலேயே பெற வேண்டும்.
AI Tools?
இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாம் காசுதான். அங்குமிங்கும் முட்டி மோதி, நான்
உபயோகித்த AI Tools:
1. Gemini
2.ChatGPT
3.Wondershare Filmora
4.canva AI
5.ClipFly
6.Imagine art
இறுதியாகவும் இரண்டு விஷயங்கள்.
ஒன்று, நீச்சல் தெரியும் வரை தண்ணீரைப் பார்த்தால் பயமாய் இருக்கும்.
இரண்டாவது, பெரும் கொள்ளை. பணத்தை செலவு செய்ய துணிந்தவர்களும் அல்லது பணத்தை மதிக்காதவர்களும் கொஞ்சம் நீந்திப் பார்க்கலாம்.
வீடு என்ன ஸ்கூலா? - யூடியுபில்
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்