அன்னையர் தின நினைவாக…

Amma

 

ஒருமுறை ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அம்மாவை அழைத்து வரச் சென்றிருந்தேன். அம்மாவுக்கு அப்போது அறுபது வயதுக்கு மேலிருக்கும். ரெயில் பெட்டிகளில் தேடி, அம்மாவைப் பார்த்து, அருகில் சென்று, இறங்க ஆதரவாக கையை நீட்டினேன். இரண்டு பைகளை என் கையில் கொடுத்துவிட்டு அம்மா தானாகவே கம்பியைப் பிடித்துக்கொண்டு இறங்கினார்கள்.

“கையப் பிடிச்சுத்தான் எறங்கினா என்ன?” என்றேன்.

“எனக்கு எறங்க முடியுதுல்ல” என்றார்கள்.

சட்டென்று சிரிப்பும், சந்தோஷமும் வந்தது. இதுதான் அம்மா.

ஊர், உறவினர்கள் நலம் விசாரித்துக்கொண்டே  கூடவே நடந்து வந்தேன்.

கடைசி பிளாட்பாரத்திலிருந்து வெளியே செல்வதற்கு படிகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது. நான் முன் செல்ல, அம்மா பின்னால் வந்து கொண்டு இருந்தார்கள். எதோ யோசனையில் ஆழ்ந்து சில அடிகள் வைத்த என்னை,  “மாது” என்னும் அம்மாவின் குரல் பரிதாபத்துடன் அழைத்தது. பதற்றத்துடன் திரும்ப வைத்தது.

அம்மா படிகளில் கவிழ்ந்து கிடந்தார்கள்.  சட்டென்று  ஊன்றி எழும்ப முடியாமல், கைகள் இரண்டும் பரப்பிக் கிடந்தன. தலை  தூக்கி இருந்தது. கண்கள் மருண்டு என்னைப் பார்த்தன. அடிபட்ட பறவை போலிருந்தார்கள். அந்தக் கணமும், காட்சியும் வாழ்வு முழுவதும் மறக்காது.

ஓடிச்சென்று அம்மாவைத் தூக்கினேன். உட்கார வைத்தேன். அம்மாவின் உதட்டிலிருந்து லேசாய் இரத்தம் வழிந்தது.  கைக்குட்டையை எடுத்துத் துடைத்தேன். அம்மா எதுவும் பேசாமல் பெரிதாய் இழைத்துக்கொண்டு என்னைப் பார்த்தார்கள்.

“பாத்து வரக் கூடாது?”,  “அடி ஒண்ணும் பலமா இல்லய?”, “சார், நீங்க அவங்க பையனா? கையப் பிடிச்சுட்டு கூட்டி வரக்கூடாதா?” என சுற்றி கூடிய சிறுகூட்டம் பேச ஆரம்பித்தது. ஒருவர் அம்மாவுக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

துயரமும், அவமானமும் அலைக்கழித்தன. அம்மாவைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினேன். அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டு மௌனமாக வந்தார்கள். மெல்ல அந்தக் கை என்னை இறுக்கமாகப் பற்றியதை உணர்ந்தேன். அம்மாவைப் பார்த்தேன். கன்னங்களில் நீர்க்கோடுகள் வழிந்தபடி இருந்தன.

எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, கடுமையான காய்ச்சலில் படுத்திருந்த என் நெஞ்சை அம்மாவின் கைகள் தடவிவிட்டுக்கொண்டு இருந்தன. அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில் அப்போதும் பார்த்திருக்கிறேன். அம்மாவின் கன்னங்களில் இதுபோல நீர்க்கோடுகள்.

அம்மா!

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கலங்க வைத்தது...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மனம் கலங்கிப்போய் கிடக்கிறது அய்யா. அன்னைய்ர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மனம் கனத்துப் போனது!

    பதிலளிநீக்கு
  4. மனம் நெகிழ்ந்தது. அதுதான் அம்மா!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் தோழர் மாதவ்.....


    அம்மாவைக் குறித்த உங்களது ஒவ்வொரு பதிவுமே உருக்கம் மிகுந்தவை....அம்மாக்கள் எப்போதுமே வேறு ஒரு உறவால் ஈடு செய்யப்பட இயலாதவர்கள்....அம்மா என்பது மிக வித்தியாசமான ஓர் இரசாயன சேர்க்கை...அதன் குணம், சுவை, நிறம், ஸ்பரிசம் யாவுமே தனித்துவம் வாய்ந்தவை....மிக உயர்ந்த அன்பின் வண்ணம் தீட்டல் அம்மா.

    நான் எனது இரண்டாம் வயதில் தாயைப் பறிகொடுத்தேன்....ஆனால் சின்னம்மா என்ற வடிவில் எனது அம்மா எனக்கு மீட்டுருவாக்கம் ஆகிக் கிடைத்தார்....தனது சொந்தப் பிள்ளைகளைவிடவும் அதிக நேயத்தோடு என்னைக் கொண்டாடும் தாயுள்ளம் எனது சின்னம்மாவுடையது....

    தீக்கதிரில் வரும் எந்த பிரதியையும் கவிதை என்று மட்டுமே விவரிக்கக் கற்றிருக்கும் அவர், அம்பத்தூரில் இருந்து என்னை காலை நேரத்திலேயே அழைத்து, உன்னோட கவிதை பார்த்தேன்...எப்படி இப்படிஎல்லாமே எழுத முடியுது உனக்கு என்று கேட்கும் நேரம் இன்னொரு பிறப்பு தேவை என்று சொல்லத் தோன்றும்...

    டைம் மெஷின் பற்றிய அறிமுகத்தை எனது மகன் நந்தாவுக்கு (இப்போது வயது 13) மூன்று ஆண்டுகளுக்கு முன் சொல்லித் தந்தேன்....ஹெச் ஜி வெல்ஸ் புத்தகம் அவனது கையில் இருந்தது....சிறிது நேரம் பொறுத்து என்னிடம் வந்தான்...

    அப்பா நான் டைம் மெஷின்ல உட்கார்ந்தா எங்கே போக விரும்புவேன் சொல்லு என்றான் நந்தா..

    நீயே சொல்லு - இது நான்.

    உங்க அம்மா இருந்த அந்த வருஷத்திற்குப் போவேன்....ஒரு படம் எடுத்துப்பேன்....நீ அவங்களை எப்படி மிஸ் பண்றே அப்படின்னு அவங்களுக்குச் சொல்வேன்...அந்தப் படத்தை உன் கிட்டே கொண்டு வந்து கொடுப்பேன்...உன் கிட்ட தான் அவங்க படமே இல்லையே...அவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியாம எத்தனை இராத்திரி தவிச்சிருக்கேன் அப்படின்னு என் கிட்ட சொல்லி இருக்கியே என்றான் நந்தா...

    அப்படியே கண்ணீர் மல்க அவனைக் கட்டித் தழுவிக் கொண்டேன்....

    எனக்கு அவனே அப்போது அம்மாவாகக் காட்சி அளித்தான்....


    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமைத் தோழர் எஸ்.வி.வி!

      எப்போதுமே, என் பதிவுக்கு மேலும் அர்த்தங்களையும், அடர்த்தியையும் உங்கள் சிந்தனைகளும், எழுத்துக்களும் சேர்த்துவிடுகின்றன. தழுதழுத்துப் போனேன்.

      நீக்கு
  6. ஈரம் கசியும் பதிவு...
    அருமை...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!