ஒரு இந்திய ஆணின் மகளிர் தின வாழ்த்து மடல்!

agnipravesam

 

நேற்று- மகளிர்தினம் அன்று- இந்தக் கவிதையை தோழர்.எஸ்.வி.வேணுகோபாலன் மெயில் இட்டிருந்தார். புரையோடியிருக்கும் நம் சமூகத்தின் வேர்களை அடையாளம் காட்டுவது மட்டுமில்லாமல் நெத்தியடியாய் இருக்கிறது. காலவெளியில் ததும்பி நிற்கும் பெண்மக்களின் வலியைச் சொல்கிறது.

 

கவிதையை எழுதியவர் தோழர்.ராஜேஸ்வரன்.


 

பாரத ஆண்  மகனாய்

நானும் சொல்கிறேன்

மகளிர் தின வாழ்த்துக்கள்..

 

பூங்கொத்து கொடுத்து,

பன்னீர் தெளித்து,

நிலாவென்று புகழ்ந்து..

சக்தி என்று தாயும் நீ என்று

சரணம் பாடி...

நானும் சொல்கிறேன்

மகளிர் தின வாழ்த்துக்கள்...

 

உரத்தச் சத்தமிடும்

என் வாழ்த்து

கோஷத்தை மட்டும்

கவனி பெண்ணே...

.

நீ சக்தியாய் பிறந்தபோது

எரித்த சதா சிவம் வாழ்த்துகிறேன்...

கங்கையாய் பிறந்த போது

கவர்ந்து கொண்ட

கங்காதரன் வாழ்த்துகிறேன்...

தெய்வானையாய் பிறந்த போது

உனக்கு சகாயமாய்

சகக்களத்தி வள்ளியை

மணந்து  வந்த

வடிவேலன் வாழ்த்துகிறேன்...

சகுந்தலையாய் பிறந்தபோது

காதலித்து உன்னை மறந்து

உன் ஞாபகத் திறனை

உலகுக்கு சொன்ன

துஷ்யந்தன் வாழ்த்துகிறேன்....

அகலிகையாய் பிறந்தபோது..

உன் அழகை ஆராதித்து

அனுபவித்து உன்னை

பெருமை கொள்ளச் செய்த

இந்திரன் வாழ்த்துகிறேன்...

சந்திரமதியாய் பிறந்தபோது

சத்தியம் காக்க உன்னை

விற்று விவேகம் காட்டிய

அரிச்சந்திரன் வாழ்த்துகிறேன்...

சீதையாய் பிறந்தபோது

அடுத்தவர் மனம் நிறைய

உன்னை

அடுப்புக்கு கொடுத்த

ரகுராமன் வாழ்த்துகிறேன்...

குந்தியாய் பிறந்தபோது

நீ பூவாவதற்கு

முன்னரே உனக்குள்

கர்ணன் என்ற செடி விதைத்த

ரவி ராஜன் வாழ்த்துகிறேன்...

பாஞ்சாலியாய் பிறந்தபோது

பகடைக்காய்  போல

உன்னை வைத்து இழந்த

உத்தம புத்திரன்

உதிட்டிரன் வாழ்த்துகிறேன்...

பலர் கொண்ட சபையிலே

உன் சேலை தொட்டு இழுத்த

துச்சாதனன் வாழ்த்துகிறேன்...

துடிக்க வைத்த

துரியோதனன் வாழ்த்துகிறேன்...

நெஞ்சம் நிமிர்த்தி

வாழ்த்துகிறேன்...

 

மகளிர் தின வாழ்த்து...

எப்போதும்போல்

என் சொல்லில் பல்லிளித்து

சுற்றிக் கிடந்தால்

என் கண்ணே....

நிச்சயம் தருவேன்

அடுத்த மகளிர் தினமன்று

இதே போல் பூங்கொத்தும்...

புகழுரையும்...!!!

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. புராண இதிகாச நாயகர்கள், கடவுளர்கள், தற்காலத்திய ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்கிறோம். மகளிர் தின வாழ்த்து ஆண்கள் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் மாதவ்

  எத்தனையோ இதயங்கள் எட்டிப் பார்த்து ஏமாந்து திரும்பிக் கொண்டிருக்கும் உங்களது இந்த வலைப்பூவின் வெகுநாள் மவுனத்தை அண்மைக் காலத்தில் என்னை மிகவும் பாதித்த அற்புதமான கவிதை உடைத்துத் திறந்திருப்பது பெருமிதம் ஊட்டுகிறது...

  ராஜேஸ்வரன் ஓர் எளிய அன்பர்..ஆழமான கருத்தோட்டமும், வாழ்வியல் குறித்த தீர்க்கமான கேள்விகளும் நிறைந்த அருமையான படைப்பாளி.....அவருடன் சிறிது காலம் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் பணியாற்றி இருக்கிறேன்.....முப்பத்தேழு வயதுக்காரரான அவரது மின்னஞ்சல் முகவரியும் அலைபேசி என்னும் இங்கே பதிவு செய்கிறேன்....அவருக்கு எதிர்வினை அனுப்ப விரும்புவோர் அஞ்சலோ குறுஞ்செய்தியோ அனுப்பினால் மகிழ்வேன்...

  நன்றி எத்தனை சிறிய சொல், இப்படி பகிர்வதை விடாப்பிடியாய்ச் செய்யும் உங்களது செயல்பாட்டிற்கு...வாழ்த்துக்கள் மாதவ்.....

  ராஜேஸ்வரன்: 9677005196
  rajeswaranarumugam@gmail.com

  எஸ் வி வேணுகோபாலன்

  தோழர் ராஜேஸ்வரன் அவர்களுக்கு: பி எஸ் என் எல் தோழரான லதா அவர்கள் இன்று காலை மாதவ் வலைப்பூ பார்த்துவிட்டு உடனே அழைத்தார்......அருமையான அடுக்குகளில் , கண்ணகியை எப்படி விடப் போயிற்று என்று....எத்தனை நுட்பமான வாசிப்பு, எதிர்வினை....

  பதிலளிநீக்கு
 3. காலங்கள் தான் மாறியிருக்கிறது.. காட்சிகள் அப்படியேதானிருக்கிறது...மனம் நோகவைத்துக் கிடைக்கும் மலர்க்கொத்து..மகளிர் தின வாழ்த்து...

  பதிலளிநீக்கு
 4. காலங்கள் மாறியும் காட்சி மாறவில்லை

  பதிலளிநீக்கு
 5. மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லும் கவிதை அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!