பாலபாரதி எம்.எல்.ஏவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு!


யாருமற்ற நள்ளிரவில், பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் கட்அவுட்களில் தலைவர்கள் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு விருந்தினர் மாளிகையின் குளியலறையில் கண்ட நெற்றிப் பொட்டில்  முகம் தெரியாத ஒரு பெண்ணின் கண்ணீர் தெரிகிறது. ஊழலை மறைக்க முடியாத ஒரு அரசியல் தலைவர், ‘கனிந்த பலாவின் வாசனை’ என கடிதம் எழுதுகிறார். எங்கோ குக்கிராமத்தில் பிறந்த தன்னை ஒன்றியமாக்கி, மாவட்டமாக்கி, மாபெரும் சபையில் உட்காரவைத்து அழகு பார்த்த  ‘குலதெய்வத்தை’ வழிபடுகிறார் தன் பெயரையும் ஊரையும் மறந்து போன ஒரு எம்.எல்.ஏ. வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டி பெறுவோர் பட்டியலில் கடவுள் பெயர் விடுபட்டு இருக்கிறது. வால்மார்ட் வந்தவுடன் தெருவில் கீரைக்காரி காணாமல் போகிறாள். அட்சய பாத்திரத்தில் பொய்களே சுரக்கின்றன. துரோகத்தின் நிறம் தெரியாமல் தடுமாறுகிறது உலகம். ஆலயம் நுழைந்த பெண்ணின் கருப்பையை உதைக்கின்றன இரும்புக் கால்கள். மரணத்தை ருசித்து தேனீர்கள் அருந்தப்படுகின்றன. பன்றிகள் சுதந்திரமாகவும், மனிதர்கள் முகமூடிகளோடும் நடமாடுகின்றனர். கால் மீது கால் போட்டு அமரும் பெண்ணை நோக்கி கற்கள் வீசப்படுகின்றன. அறை முழுவதும் நிரம்பியிருந்த மௌனத்தை மட்டும் அள்ளி வருகிறாள் தோழி. பீங்கான கழிப்பறைக்குள் ஓளிந்து விளையாடுகிறது பால்யம். இப்படியான சித்திரங்களை எழுப்பிவிடுகின்றன பாலபாரதியின் கவிதைகள்.


அவரது முதல் கவிதைத் தொகுப்பான  ‘சில பொய்களும் சில உண்மைகளும்’ படித்தபோதும் இதே சந்தோஷம் வந்தது. பொதுவுடமை இயக்கத்தின் ஒரு முன்னணி ஊழியராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கவிதை எழுதுவதற்கும்  பாலபாரதியால் நேரம் காண முடிந்திருக்கிறதே என்னும் சந்தோஷம்தான் இது. பல்வேறு பணிகளுக்கு இடையேயும் ‘கால் பதிக்க மனம் கூசுகிறது. தரையெங்கும் சிதறிக்கிடக்கிறது உன் சிரிப்பூ’ எனச் சொல்ல முடியும் கவிதை மனத்தை தக்க வைத்துகொள்ள முடிகிறதே இவரால் என்னும் சந்தோஷம்தான் இது. நம்மைச் சூழ்ந்திருக்கும் அல்லது நாம் எதிர்கொள்ளும் சமூக அவலங்களை தனக்குரியதாக பாவிக்க ஒரு உணர்வுபூர்வமான புரிதல் வேண்டும். கவிஞர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அது. அதைக் கண்டு கொண்ட சந்தோஷம்தான் இது.

 

இரண்டாவது கவிதைத் தொகுப்பும் அந்த சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது, பாலபாரதியின் கவிதைவெளி உயிர்ப்புள்ளதாய் இருப்பதால்தான். தன் அன்றாடப் பணிகளில் பாதிக்கிற காட்சிகளை தனக்குரிய பார்வையோடு பதிவு செய்கிறார் பாலபாரதி. ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்த சமகால வாழ்க்கை அதன் வேகத்தோடு நகர்ந்து செல்வதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கிறார். பயணங்கள், சட்டமன்ற நடவடிக்கைகள், முதலாளித்துவ அரசியலின் அருவருப்புகள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், ஊழல்கள், உடையும் உறவுகள், கல்வி என அவை விரிகின்றன. ‘மரம்தான் நான், மரமல்ல நான்’ என்னும்  வரிகளே அவரது கவிதைகளின் குறியீடுகளாய் தெரிகின்றன.

 

கவிதைகளில் பிரச்சாரம் இருக்கலாம், பிரச்சார நெடி இருக்கக் கூடாதுதான். சொற்கட்டுமானத்தில் இருக்கும் சிக்கனம் கவிதைகளுக்கு அடர்த்தியையும், வீரியத்தையும் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவைகள் ஒரு குறைகளாய் தெரியாத படிக்கு, இந்த கவிதைகளில் சாதாரண, எளிய மக்களின் வாழ்க்கையும், வலியும் நிறைந்திருக்கின்றன. மண்ணிலிருந்து எடுத்து, மண்ணின் துகள்களோடு நம்மிடம் பாலபாரதி பகிர்ந்திருப்பதாகவே அறிய முடிகிறது.

 

பாலபாரதியின் கவிதைகளில் ஆழமான படிமங்கள் இல்லை. ‘அட’ என வியக்கவைக்கும்  உருவகங்கள் இல்லை. பீடிகைகளும், பிரமாதமான பிம்பங்களும் இல்லை.  ஆனால் எளிமையான உண்மைகள் ஒவ்வொரு எழுத்திலும், வரியிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கவிதைகளின் வித்தைகள் என அறியப்படுபவையிலிருந்து விலகி அதனதன் இயல்பில் வார்த்தைகள் கோர்க்கப்பட்டு உயிர் பெற்றிருக்கின்றன. யாருக்கு கவிதை எழுதுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதில் பாலபாரதி தெளிவாய் இருக்கிறார். அதுதான் அவரது கவிதைகளில் பல இடங்களில் ‘ஆயுதம்’ என்னும் வார்த்தை அடிக்கடி வந்துகொண்டு இருக்கிறது போலும்.

 

“ உங்கள் விரல் அசைவிலேதான் உயிர் பெறுகிறது எனக்காக வைக்கப்பட்ட ஒலிவாங்கி” என சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை பேசுவதில் இருக்கும் தடைகளைச் சுட்டிக்காட்டுவதில் இந்த ஜனநாயகம் குறித்த கடும் விமர்சனங்கள் தொனிக்கின்றன. சகலத்தையும் தீர்மானிக்கிற இடத்தில் மக்கள் இருக்க வேண்டும் என நம்புகிற பாலபாரதி, மக்களிடமே  தனது கவிதைகள் மூலம் பேச முற்படுகிறார். அந்த வெப்பம் இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவற்றில் தணியாமல் இருக்கின்றன.

 

‘கவிதை மனதுக்கு ஒரு தனிமை வேண்டும். அதில் சஞ்சரிக்க வேண்டும். எழுதுகிறவனின் வெளியில் நிலவும் மௌனமே  அவனது கவிதைகளின் மொழியாக இருக்க வேண்டும்’ என்னும் நியதிகளை கேட்டு இருக்கிறேன். உணர்ந்தும் இருக்கிறேன். ரசனையையும், லயிப்பு மிகுந்த வாசிப்பு அனுபவத்தையும் அதுபோன்ற கவிதைகள் மீட்டிய போதிலும், கவிதைகள் விரிய வேண்டிய தளத்தையும், எல்லைகளையும் அவை சுருக்கி விடுகின்றன. பதிப்பகங்கள் இன்று கவிதைத்தொகுப்பை வெளியிடுவதில் தயக்கங்கள் காட்டுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. பாலபாரதியின் கவிதைகளுக்கு இந்த சிக்கல்கள் இல்லை. நெரிசல்களுக்கு இடையே, பெரும் சந்தடிகளுக்கு ஊடே,  மக்கள் திரளுக்கு நடுவே அவரது கவிதைகள் பிறந்திருக்கின்றன. பரந்துபட்ட மக்களிடம் செல்வதாய் நேரடியாய் இருக்கின்றன. அதற்குரிய சத்தத்தையும், சந்தத்தையும் கவிதைகளில் காண முடிகிறது.   ‘அறிவிப்புகள்’ என்று தொடங்கும் இத்தொகுப்பிலுள்ள முதல் கவிதையிலிருந்து இதனை உணரலாம்:

 

“ நகை அணிந்த பெண்கள்
ஜன்னல் ஓரம் உட்காராதீர்கள்.

தூங்குவதற்கு முன்னால்
ஜன்னலை இழுத்து மூடி விடுங்கள்

லேப்டாப், செல்போன்
விலை உயர்ந்த பொருட்களை
பெட்டியில் பூட்டி வையுங்கள்

மூடப்பட்ட பெட்டியை
இருக்கையோடு
இணைத்து வையுங்கள்

அறிமுகமற்றவர் தரும்
எந்த உணவுப் பண்டங்களையும்
உண்ணாதீர்கள்

இரயில் நிலைய ஒலிபெருக்கியில்
அறிவித்துக்கொண்டு இருந்தார்கள்

எல்லாவற்றையும் கவனமாகக்
கேட்டுக்கொண்டான் திருடன்!”

 

இதை வெறும் இரயில் நிலைய அறிவிப்புகளாய், ஒரு கிண்டலாய் மட்டும் கடந்துவிடாமல் இந்த அரசுகளின் திட்டங்கள், நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டால், கவிதையின் வீரியமும், வீச்சும் பிடிபடும். அரசின் அறிவிப்புகள் யாருக்கு என்பதும், பாலபாரதியின் அறிவிப்பு யாருக்கு என்பதும் தெரிய வரும். பாலபாரதியின் குரலில் இருக்கும் தனித்தன்மை இதுவே.

 

அரசியல், சமூகப் பிரச்சினைகளைத் தாண்டி, இந்தக் கவிதைகளில் பாலபாரதியின் இன்னொரு உருவமும் முகமும் இயல்பாக தென்படுகின்றன. நட்பின் துடிப்பாகவும், தூரத்து ஊர் நினைவுகளாகவும்  அவை உருவம் கொள்கின்றன.  பாலபாரதியின் கவிதைக்குரிய வேர்கள் பிடிபடுகின்றன. குழந்தையின் முகமாகவும், ஒரு பெண்ணின் முகமாகவும் காட்சியளிக்கின்றன. அதில் பெண்ணின் வலி மிக பிரத்யேகமானது. அதிர்ச்சியளிப்பது.

 

“எச்சிலூறிய குழந்தையின்
பிஞ்சுவிரல் எப்போதாவது
தோளில் விழுந்தால் கூட
ஆவேசத்துடன்
திரும்புகிறது பார்வை
பின் இருக்கை மிருகமோவென”

 

இப்படி ஒரு பஸ் பிரயாணத்தை கடக்கும் இதே பெண், இன்னொரு பிரயாணத்தில் குழந்தையாகிறாள்.

 

“அமராவதி ஆற்றை
கடந்து செல்கையில்
அம்மா கூறினாள்
இங்கே நடந்த
திருவிழா கூட்டத்தில்தான்
நீ காணாமல் போனாய்
மாரியின் அருளால்
மீண்டும் கிடைத்தாய்!

ஆளில்லாத ஆற்றங்கரையை
கண்ணால் தேடிய
குழந்தை கேட்டாள்
“என் பலூன்  மட்டும்
கிடைக்கவே இல்லையே அம்மா!”

 

என பல நல்ல கவிதைகளோடு வந்திருக்கும் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமான ஒரு இடத்தை பாலபாரதி தொட்டுச் சென்றிருக்கிறார். ‘தோற்றவனின் இரவு எப்படியிருக்கும்?’ என்கிற கேள்வியோடு ஆரம்பமாகும் அவரது விடியல் கவிதையைத்தான் சொல்கிறேன். தோற்றவர்கள் கண்கள் மூடுமா? தோற்றவர்களின் குருதி எப்படி துடிக்கும்? தோற்றவர்களின் இரவில் என்ன கனவு வரும்? அவர்களின் இருட்டு எது? வெளிச்சம் எது?  இப்படி நிறைய கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.தோற்றவர்கள் பக்கம் நிற்கும், தோற்றவர்களுக்காக குரல் எழுப்பும்,  தோற்றவர்களுக்காக போராடும் தோழர்.பாலபாரதி அந்தக் கவிதையை எழுத ஆரம்பித்து முடிக்காமல் விட்டு இருக்கிறார். அவரோ, அல்லது இதைப் படித்த எவரோ அதுகுறித்து நிச்சயம் எழுதுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. பாலபாரதியின் கவிதையின் வெற்றியும் வீச்சும்தான் அது.

 

சந்தோஷமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லத் தோன்றுகிறது.


 

“அவர்களும், அவர்களும்”

பாலபாரதி எம்.எல்.ஏ அவர்களின் கவிதைத் தொகுப்பு

உயர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி – 620001

பக்கங்கள்: 126

விலை: ரூ.100/-

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வணக்கம்! நலமா? வெகுநாட்களுக்குப்பின் வந்திருக்கிரீகள். பால பாரதியின் வரிகள் வீரியம் மிக்கவைதான் சந்தேகமேயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, அகலியன்.
      இனி அவ்வப்போது வர முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  2. ///சந்தோஷமாக இருக்கிறது என்பதை சொல்லத் தோன்றுகிறது.//

    I respect her. Thank you for sharing this news.

    பதிலளிநீக்கு
  3. ரொம்பவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது.
    நான் வாங்கிப் படித்துவிட்டு சந்தோஷப்பட நினைக்கிறேன்.
    சரியான கவிஞரை சரியாகச் செய்த அறிமுகத்திற்கு நன்றி.
    நிற்க.
    அது என்ன? நம் தலைவர்கள் போலத்தான் மாதுவும் இருக்கிறார் என்று சொல்ல என் மனம் ஏனோ இடம்தரவில்லை.
    ”சமீபத்தில் எழுதியவர்கள்” எனும் உங்கள் பட்டியலில் கூட நான் இல்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
    ஜெயகாந்தன் படைப்புகள் பற்றிய எனது விமர்சனத்தையாவது நீங்கள் படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
    http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் முத்து நிலவன்!
      எப்படியிருக்கீங்க.
      இப்போது முன்னைப்போல இணையப்பக்கம் அவ்வளவாக வரமுடியவில்லை. எனவே, பல அற்புதமான எழுத்துக்களை தவறவிட்டு வருகிறேன்.
      ‘சமீபத்தில் எழுதியவர்கள்’ எனும் பகுதியை ஒரு வருடத்துக்கும் முன்னால் உருவாக்கியது. அதற்குப் பிறகு, அதனை அப்டேட் செய்யவில்லை. தங்கள் வலைப்பக்கத்தை அதில் இணிக்க முயல்கிறேன்.

      நீக்கு
    2. தோழருக்கு,

      ஒரு புத்தக விமர்சனம் என்பது- நாமும் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டும் விதத்தில் இருப்பது சிறப்பு, அந்த வகையில் தங்கள் விமர்சனம் கவிதை தொகுப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை உருவாக்கியிருக்கிறது என்றால் மிகையல்ல

      தோழமையுடன்
      எஸ்.சம்பத்

      --

      நீக்கு
    3. தோழருக்கு,

      ஒரு புத்தக விமர்சனம் என்பது- நாமும் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டும் விதத்தில் இருப்பது சிறப்பு, அந்த வகையில் தங்கள் விமர்சனம் கவிதை தொகுப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை உருவாக்கியிருக்கிறது என்றால் மிகையல்ல

      தோழமையுடன்
      எஸ்.சம்பத்

      --

      நீக்கு
  4. After a long gap you came to blogging, welcome ! And write one at least once in a week.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், தோழரே, மீண்டும் இங்கு அடிக்கடி வர முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  6. பாலபரதியின் கவிதை தொகுப்பு குறித்த உங்கள் பகிர்வு அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  7. விழுந்து விழுந்து படித்த எனக்கு தொலைக்காட்சியில் வலைதளத்தில் விழுந்தபிறகு படிக்க நினைக்கவே முடியவில்லை. இவ்வளவு உழைக்கும் தோழர் கவிதை நூலும் சிறப்பாக எழுதி வெளியிடுவது பெருமையாக இருக்கிறது.இவர்களைப்போன்றவர்களைப்பற்றிப் பேசியே பொழுதைக்கழிக்கலாம்.இதுவும் நல்ல செயல்தானே

    பதிலளிநீக்கு
  8. கவிதைன்னா அதுல ஓர் அதிர்வு இருக்கணும், படிமம் இருக்கணும், இலக்கணம் இருக்கணும்ன்னு சொல்றது புரிபடாம இருக்கு. சாதாரணமாக மக்களுக்கு போய் சேரணுமுன்னு தெளிவா எழுதினா கசந்தா போகும். அப்படி நெனச்சிருந்தா, பாரதியின் புதுகவிதைகள் நமக்கு கெடைக்காமலே போயிருக்கும்.
    தோழரின் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!