“அப்பா, நீங்க ஃபெயிலா?”

training

எங்கள் வங்கியில் கடைநிலை ஊழியர்களிலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெறுகிறவர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் உண்டு. எழுத்துத் தேர்வில் பங்குபெறுகிறவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டிலும் கேள்விகள் இருக்கும். அவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை நேற்று எங்கள் சங்கம் மதுரையில் நடத்தியது. அதற்கான வகுப்புகளை நானும் நடத்தினேன்.

வந்திருந்தவர்கள் அனைவருமே நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். ஐம்பத்தைந்து வயதையொட்டி இரண்டு மூன்று பேர் இருந்தனர். பெரும்பாலும் பத்தாம் வகுப்புக்குக் கீழேதான் அவர்களின் கல்வித்தகுதி இருந்தது. ஆனல் இருபதிலிருந்து முப்பது வருட அனுபவம் பெற்றவர்கள். தொழிற்சங்க கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகளில் பார்த்த அந்த தோழர்கள் பவ்யமாக எதிரே உட்கார்ந்திருந்த காட்சி என்னவோ போலிருந்தது. எப்போதும் போல் இயல்பாக அவர்களை இருக்க வைக்க நான் எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலிக்கவில்லை. எனக்குப் பின்னால் இருந்தது கரும்பலகை.

Parts of speech, nouns, pronouns, verbs, tense, prepositions, articles  போன்றவைகளை மிக எளிதாகச் சொல்லிய போதும் அவர்கள் பரிதாபமாகவே விழித்துக்கொண்டு இருந்தார்கள். ‘திக்குத் தெரியாத காட்டில்’, ‘கண்ணைக் கட்டி காட்டில் விட்டது’ போன்ற உவமைகளுக்குப் பொருத்தமானவர்களாய் காட்சியளித்தார்கள். கிளைகளில் அவர்கள் அனைவருமே ஒரு கிளர்க்கின் அனைத்து வேலைகளையும் சர்வசாதாரணமாகச் செய்யக் கூடியவர்கள். அதுகுறித்து அவர்களை பரிசோதிப்பதை விடுத்து, ‘Raman and Lakshmanan is going to forest' என்ற வாக்கியத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கண்டுபிடிக்கச் சொல்வதன் முலம், என்ன இழவுத் தகுதியை எதிர்பார்க்கிறார்களோ? அர்த்தமற்ற, விவஸ்தையற்ற இந்தத் தேர்வுமுறையை துக்கி முதலில் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்.

காலை பத்து மணியிலிருந்து மாலை 6 மணி வரை சொல்லிக்கொடுத்தன் முலம் அவர்கள் கேள்விகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்திருந்தார்களே தவிர பதில்களை அறிந்திருக்கவில்லை. சோர்வும், எரிச்சலும் என்னை அப்பிக்கொண்டு இருந்தது. “இது மூனாவது முறை தோழர். எம்பையன் கேக்குறான் , அப்பா ஃபெயிலா என்று” என ஒரு தோழர் விடைபெறும்போது உடைந்துபோனார். “வாழ்க்கையில கிளர்க்கா ஒரு மரியாதையா ரிடையராகனும்னு ஆசப்பட்டா, இப்படி அவமானப்பட வேண்டியிருக்கு” என்றவரிடம் “இந்த தடவை கண்டிப்பா கிளர்க்காயிருவீங்க தோழர்” என சொல்லி வெளியே வந்தேன். டவுண் ஹால் ரோட்டில் மக்கள் அங்குமிங்குமாய் பாய்ந்துகொண்டு இருந்தனர். ஒரே நெரிசல்.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. முட்டாள் தனமான தேர்வுகள்.அரசுக்கு எடுத்து சொல்ல முடியாதா? தோழர்கள் இதற்கும் போராடலாமே.

  பதிலளிநீக்கு
 2. வங்கிப் பணிக்கு கணிதத் திறன் தேர்வை புரிந்து கொள்ள முடிகிறது.
  உங்கள் வங்கி தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு சேவை செய்யும் நிறுவனமல்லவா?
  அவ்வாறிருக்கையில் ஆங்கிலத் திறனின் தேவைதான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆங்கிலேயன் தன் தேவைக்கு வைத்திருந்த அளவுகோலை இன்னும் கட்டியழும் நம் வழக்கத்தை எதால் அடித்துக் கொள்வது? அப்படியே தேவையென்றாலும் வேண்டிய அடைப்பலகைகளை வைத்துக் கொண்டு தேவைக்கேற்ப மானே, தேனே போட்டுக் கொள்ளலாமே?

  பதிலளிநீக்கு
 3. நமது ஒவ்வொரு தோல்வியும் தான் நமது அடுத்த பாதைக்கு வெற்றி விதை போடுகிறது. # அனுபவம்.

  பாவம் அவர். :-(

  பதிலளிநீக்கு
 4. என் மகனும் வங்க்யில் பணி புரிபவர்தான், இதுபோல அனுபவங்களால் சோர்ந்து போவதுதான் மிச்சம்.

  பதிலளிநீக்கு
 5. //கிளைகளில் அவர்கள் அனைவருமே ஒரு கிளர்க்கின் அனைத்து வேலைகளையும் சர்வசாதாரணமாகச் செய்யக் கூடியவர்கள்//. குறைந்தது இருபது வருட சேவை முடித்தவர்களாக இருக்க வேண்டும் அவர்கள். எளிதாக தேர்வு என்ற ஒன்று இல்லாமலே அவர்களால் எழுத்தர் வேலையை திற்ம்பட செய்ய முடியும் என்று தெரிய வரும் வேளையில் இது போன்ற தேர்வுகள் தேவை இல்லை மாது.

  பதிலளிநீக்கு
 6. எதற்கு எழுத்து தேர்வு எல்லாம் ??? ஓரல் டெஸ்ட் போதாதா !!!
  படிக்கிற வயதை தாண்டி அனுபவ வயதுக்கு வந்து விட்டார்களே "
  பாலபோன நடைமுறை !!!

  பதிலளிநீக்கு
 7. சோமர்செட் மாம் அவர்களின் அற்புதமான சிறுகதை ஒன்று வெர்ஜெர்.
  தேவாலயத்தின் விசுவாசமிக்க ஊழியர் அவர். வெர்ஜெர் என்பது அவர் செய்யும் பணிக்கான பெயர். பெரிய மனிதர்கள் வழிபாட்டுக்கு வரும்போது அவரவர்க்குரிய இருக்கைகளை அவர்களை அமரச் செய்வது உள்ளிட்ட பணிகள் அவருடையது. நல்ல பெயர் அவருக்கு. லயித்த மனத்தோடு அன்றாடப் பொழுதின் ஊழியம் அவரது வயதை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்த போதும், விசனம் அதிகம் அறியாத வாழ்க்கை. காலம் அழகாய்ப் போய்க் கொண்டிருந்தது, கர்த்தர் அருளால்.

  ஆனால் காலம் எப்போதும் கருணை காட்டிக் கொண்டிருப்பதில்லை அல்லவா. சோதனையாக புதிய பாதிரியார் இந்த தேவாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று மாலையே இவரை அழைத்தபோது தமது சீருடைகளை மேசை அறையில் வழக்கம்போல மடித்து அழகாய் வைத்துக் கொண்டிருந்தவர் அவரது முன்னே போய் நின்றார்.

  "உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று நான் அறிகிறேன்...உண்மையா" - இது பாதிரி.
  "ஆமாங்கய்யா, நெசம் தான், ஆனா அது என் வேலக்கி ஒரு போதும் குறுக்கே வந்ததில்ல. என் டூட்டியெல்லாம் சவரமாச் செய்வேன். நம்ம பழைய ஐயருக்கு இது தெரியுங்கையா.. "- இது வெர்ஜெர்.
  "ப்ச் ப்ச்...அது பிரச்சனை இல்ல...இது மிகப் பெரிய மனுசங்க, பிரபுக்கள் வந்து போற சர்ச்.."
  "அவுக எல்லோருமே என்ன ரொம்ப நேசிப்பாக "
  "சரியாப் போச்சு. இது ஒத்து வராதுப்பா..என்ன பண்ற, ஒரு மூணு மாசம் எடுத்துக்க. நாலு எழுத்து எழுதப் படிக்க கத்துக்கிட்டு வந்திரு...இல்லாட்டி நீ வேற வேல தான் பாக்க வேண்டியிருக்கும்..."

  முடிந்தது. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. இந்த வயது போன காலத்தில் அவர் எங்கே படிக்க எழுத..மேற்கூரை இடிந்து அவரது தலையின் மீதே வந்திறங்கத் துடித்துக் கொண்டிருந்தது..வெளியே வருகிறார். யோசிக்கிறார்...உடைந்த உள்ளம். சரிந்த எதிர்காலம்.
  அவர் ஒன்றும் புகைப் பழக்கம், மது பழக்கம் இல்லாதவர் இல்லை என்றாலும், பொதுவாக அவற்றின் அருகில் செல்லாதவர். இன்று கை துரு துருக்க, ஒரு கடையில் போய் சிகரெட் கேட்கிறார். அங்கு அது கிடைப்பதில்லை. அங்கு மட்டுமல்ல, மூன்று மைல் நீள வீதியெங்கும் ஒரு கடையிலும் சிகரெட் விற்கப்படுவதில்லை என்பது அவருக்குள் வேறு கனவைப் பற்ற வைக்கிறது. தமது வெர்ஜெர் வேலையை அவரே துறந்து கிடைக்கும் காசுக்கு அந்தப் பெரிய வீதியில் சிகரெட் விற்கும் பெட்டிக் கடை ஒன்றை திறக்கிறார். மூன்று ஆண்டுகளில் நகரத்தில் புகையிலையின் பெரிய விநியோகஸ்தர் அவராக இருக்கிறார். கொள்ளை கொள்ளையாக கல்லா நிரம்பும் பணத்தை வங்கியில் போட்டால் பாதுகாப்புக்கு பாதுகாப்பு, வட்டிக்கு வட்டியும் என்று யாரோ சொல்கின்றனர்.

  வங்கிக்குச் செல்கிறார். மேலாளர் அறையில் பலத்த வரவேற்பு. அவர் ஏதேதோ திட்டங்களை விளக்குகிறார். குறைந்த வட்டியில் அரசு பத்திரங்கள். ரிஸ்க் நிறைந்த அதிக வட்டி கிடைக்கும் தனியார் முதலீடுகள் பற்றியெல்லாம் அவர் சொல்வதற்கு, நம்மால் எந்த பதிலும் சொல்வதில்லை. நீங்களா பாத்து நல்லது எதுவோ அதைச் செய்து கொடுங்கள் என்று மேலாளர் பொறுப்பில் விட்டு விடுகிறார்.

  நடைமுறைகள் எல்லாம் முடித்து விண்ணப்பப் படிவங்களில் கையெழுத்து போடக் கேட்கிறார் மேலாளர்.

  நம்மவரோ, "ஸ்டாம்ப் பேடு இல்லிங்களா அய்யா, ஒரு பெரட்டு பெரட்டி எடுத்திர்றேன்.."என்று இடது கை பெருவிரல் ரேகை போடத் தயாராகிறார்.
  அசந்துபோய்ப் பார்க்கும் வங்கி மேலாளர், "அடடா கையெழுத்து கூட போடத் தெரியாதா...இப்பவே இவ்வளோ சம்பாதிருச்சீங்களே ..ஒரு வேளை எழுதப் படிக்கத் தெரிஞ்சிருந்தா.." என்கிறார்.

  "தேவாலயத்தில் மணி அடித்துக் கொண்டிருந்திருப்பேன்..." என்கிறார் முன்னாள் வெர்ஜெர்.

  நமது கடைநிலை ஊழியர்களை நிர்வாகங்கள் அவமதிப்பது இந்தச் சிறுகதையைத் தான் எனக்கு நினைவுபடுத்தியது. பொதுத் துறை வங்கிகள் பலவற்றில், துப்புரவாளர்கள் சிலர் தமது சொந்த முயற்சியில் பட்டதாரியான பிறகும் உரிய பதவி உயர்வு கொள்கை இல்லை என்ற பெயரில் அவர்களை கிளைகளைப் பெருக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன நிர்வாகங்கள். கீழ்மட்ட நிலை ஊழியர்கள் பால் சமூக ரீதியான கொச்சையான பார்வை, மதிப்பீடு தொலையாத வரை இது தான் நீடிக்கும்..முற்போக்கான பார்வை உள்ள இடதுசாரி தொழிற்சங்கங்கள் இவற்றுக்கு எதிரான போராட்டத்தில் தான் இருக்கின்றன..

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 8. தேர்வுகள் எப்போதுமே எங்கும்மனிதனை அவர்களது திறமையை பி தல்லுவதாகவே இருக்கிறது தோழர்.இருவருகு இருக்கிற திறமையின் அடிப்படையில் தேர்ந்தெட்டுக்கிற முறௌதானே சரியாக இருக்க முடியும்?அதை விடுத்து இதுவும் மெக்காலே கல்வி முறையின் எஞ்சிய பகுதியே/

  பதிலளிநீக்கு
 9. இருபதிலிருந்து முப்பது வருட அனுபவம் பெற்றவர்கள். தொழிற்சங்க கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகளில் பார்த்த அந்த தோழர்கள் பவ்யமாக எதிரே உட்கார்ந்திருந்த காட்சி என்னவோ போலிருந்தது.

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள மாதுவிற்கு, வணக்கம். ரொம்ப நாட்கள் கழித்து உங்களோட பதிவுகளப் பார்க்கிற பாக்கியம். எல்லா வங்கியிலும் இதே நிலை தான். எங்கள் ஸ்டேட் வங்கியில் நிலைமை இன்னும் மோசம். Scale 3 to 4 க்கு கேட்கப் படுகிற கேள்வி: “இந்தியாவில் எங்கும் பணி புரிவேர்களா?” Scale 2 to 3: ”Other Stateக்குப் போவேர்களா?” Scale 1 to 2: "Rural Serviceக்குப் போவீர்களா? Clerical to Officer: "Officer postingஐ கண்டிப்பாக ஏற்றுக் கொள்வீர்களா?” ஆனால் கடை நிலை ஊழியைலிருந்து எழுத்தர் தகுதி பெற
  “what is the difference between negative variance and negative growth?"
  "Who is our CDO?"
  "On which date ICICI is commissioned as bank?"
  "Describe Basel II"
  நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே என் தேர்வையெல்லாம் ஒத்தி வைக்கிறேன்னுப் பாட்டுப் பாடிட்டுப் போகிற துணை நிலை ஊழியர்களை நானும் வருத்தத்தோடு தேற்றி வருகிறேன் மாது.
  நாகநாதன், திருச்சி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் தோழர்.படித்ததும் நெஞ்சு நொறுங்கிப் போனது. அந்த தோழர்களின் மன இறுக்கம், தாழ்வு மனப்பானமைஅனைத்தையும் முழுமையாய் உள்வாங்கிக் கொள்ளமுடிந்தது.தங்கள் பக்கத்தில் பறவைபார்வையில் மேய்ந்து கொண்டிருந்த போது அப்பா பெயிலா எனறதைப் பார்த்ததும், ஆசிரியப் புத்தியில் உள்ளே நுழைந்தேன். என்னைப்பொடிப் பொடியாய் தகர்த்தது தங்கள் பதிவு. இந்த பாழாய் போன அரசுக்கு இவர்கள் மேல், தொழிற்சங்கத்தினர் மேல் என்ன காழ்ப்பு. இவர்கள் இந்த ஆங்கிலம் படித்து ஆங்கிலம் சொல்லித்தரப்போகிறார்களா? தோழர் நான் அறிவியல் துறை, இதில் மாணவ்ர்க்ளின் தேர்வுத்தாள் திருத்தும்போது, நீங்கள் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை,அறிவியல் சரியாக எழுதி இருந்தால் போதும் என்ற குறிப்பு எங்களுக்கு உண்டு.இது .கல்லூரியில். பள்ளியின் கதை வேறுஅவர்களின் பார்வையின் கோணம் வேறு. மாணவர்கள், அறிவியலிலேயே இலக்கணம், இலக்கியம் வேண்டாம் எனும் போது, இந்த அரசுக்கு என்ன வந்தது. நீங்கள் பேச்சு வார்த்தையின் போது, இந்த பதவி உயர்வு, தேர்வு போன்றவை குறித்து பேச வேண்டியதுதானே.. ச்ங்கத்தின் பலத்தின் மூலம் இதனை மாற்றலாமே தோழர். // இருபதிலிருந்து முப்பது வருட அனுபவம் பெற்றவர்கள். தொழிற்சங்க கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகளில் பார்த்த அந்த தோழர்கள் பவ்யமாக எதிரே உட்கார்ந்திருந்த காட்சி என்னவோ போலிருந்தது. எப்போதும் போல் இயல்பாக அவர்களை இருக்க வைக்க நான் எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலிக்கவில்லை. எனக்குப் பின்னால் இருந்தது கரும்பலகை.// தோழர்கள் தங்களை ஆசிரியராகப் பார்த்திருக்கின்றனர். என்ன கொடுமை இது, ஒரு தோழனுடன் இயல்பாக இருப்பதைப் பிடுங்கும் சூழல். கட்டாயம் இந்த தேர்வு முறையை மாற்றத்தான் வேண்டும். கணக்கு வழக்கு பார்ப்பவர்களுக்கு, எதற்கு மொழித்தேர்வும், பரிச்சய்மும். இதனை முடித்து ஆங்கிலத்தில் வெளுத்து கட்டப் போகிறார்களா>எதற்கு வெட்டி வேலை?முன் கை எடுங்கள் தோழர். இதற்கு ஒரு போராட்டம் செய்ய வேண்டியதுதானே.. வாழ்த்துகள் பதிவுக்கு.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!