ஜெயமோகன் செய்யும் அரசியலும், சு.வெங்கடேசன் செய்யத் தவறிய அரசியலும் - 1

jeyamohan

ரு காட்சி, ஒரு சொல் போதும் ஜெயமோகனுக்கு. அதை வைத்து யாரைப் பற்றியும் அக்கு வேறாக ஆணி வேறாக அலசி விடுவார்.  மகா ஞானிதான். இது ஒன்றும் சாதாரணமாக வாய்த்துவிடவில்லை அவருக்கு. இந்திய, உலக தத்துவங்கள், வரலாறுகள், இலக்கியங்கள், ஆதியிலிருந்து கிடைத்த தகவல்கள் எல்லாவற்றையும் கரைத்துக் கரைத்து ஞானப்பாலாகக் குடித்தவர். அப்படியிருக்கும்போது  ‘குதிரையில் வந்தியத்தேவன் வருகிற காட்சியிலிருந்து’ எனது வரலாற்று நாவல் அறிவைப் பீற்றியிருக்கக் கூடாது. மகாகனம் பொருந்திய இலக்கிய பீட ஞானசிகாமணி ஜெயமோகன் அதை வைத்துக்கொண்டு பிடிபிடியென பிடித்து விட்டார். ‘மாதவராஜ் குழந்தையின் ஆரம்பக்கட்ட வாசிப்பில் இருக்கிறார்’, ‘மாதவராஜ் போன்ற எளிய வாசிப்பு கொண்டவர்’ என பொட்டில் அறைகிற மாதிரி சொல்லிவிட்டார். பாவம் கல்கி.  பொன்னியின் செல்வன் முதற்கொண்டு யாவுமே வரலாற்று நாவல்களே இல்லையென அவருக்கும் பலத்த அறை விழுந்திருக்கிறது.

 

சரிதான். ஒப்புக்கொள்கிறேன். ஜெயமோகன் ஒரு  நிறைகுடம். நான்  ஒரு குறைகுடம். ஜெயமோகன் ஒரு பண்டிதர். நான் ஒரு பாமரன். ஜெயமோகன் ஒரு மேதை. நான் ஒரு பேதை. ஜெயமோகனுக்கு இனி தெரிய வேண்டியது என எதுவுமில்லை. எனக்குத் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன.

 

அலுவலகப்பணி, தொழிற்சங்கப் பணி, இயக்கப்பணிகளின்  ஊடேதான் எழுதவோ, வாசிக்கவோ முடிகிறது.  என்னைப் போன்றுதான் ஓராயிரம் பேர்கள் எழுத்தாளர்கள் சங்கத்தில்  இருக்கிறார்கள். இயங்குகிறார்கள். வாசிக்கிறார்கள். எழுதுகிறார்கள். உரையாடுகிறார்கள். எல்லாம் அவரவர்களால் முடிந்த அளவில்தான். ஜெயமோகனுக்கு உடல், மூளை, ரத்த நாளம் எல்லாம் தகவல்களால் நிரம்பி வழிகிறது என்றால் எங்களுக்கு கனவு, இலட்சியம், நம்பிக்கைகளால் அவை உத்வேகம் பெறுகின்றன.  இது ஜெயமோகனுக்கு அற்பமாகவும், மடத்தனமாகவும் படுகிறது. எதற்கும் லாயக்கற்றவர்களாய், உருப்படியில்லாதவர்களாய் குறிப்பிட வைக்கிறது. காவல் கோட்டம் குறித்த சர்ச்சையின் ஊடே புகுந்து, ‘உடனே தோழர்களுக்கு பொறுக்கவில்லை’, ‘சு.வெங்கடேசனுக்கு இது வேண்டும்’ என சொல்லியபடி ஒட்டுமொத்த அமைப்பையே அறைகிறார்.  இதுதான் சமயம் என எழுத்தாளர் சங்கத்தின் இருக்கும் உறுப்பினர்கள் எல்லாம்  இலக்கியத்துக்காக என்ன கிழித்துவிட்டார்கள்  என சவால் விடுகிறார்.

 

மெத்தப் பணிவோடு  ஒன்று சொல்லிக்கொள்கிறோம். இந்த அமைப்பிலிருந்தும் ஏராளமான படைப்புகள் வந்திருக்கின்றன. படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவரில் ஒருவர்தான் சு.வெங்கடேசனும். டி.செல்வராஜ், கு.சின்னப்பபாரதி, கே.முத்தையா, அருணன், எஸ்.ஏ.பெருமாள்,  மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன்,  உதயசங்கர், கந்தர்வன், இலட்சுமணப்பெருமாள், பிரளயன், ஆதவன் தீட்சண்யா, பவா.செல்லத்துரை, ஷாஜஹான், தேனீ சிரூடையான், காமுத்துரை என நீளும் வரிசையில்தான் சு.வெங்கடேசன் இருக்கிறார். கவியரங்கங்களில் பங்குபெற்றுக்கொண்டும், அவ்வப்போது கவிதை எழுதிக்கொண்டும் இருந்தவரை, ஈர்த்ததும், வார்த்ததும் எங்கள் அமைப்பே. இப்படியொரு நாவல் எழுத கனவு காண வைத்ததும், களம்  காட்டி நின்றதும்  எங்கள் எழுத்தாளர் சங்க அமைப்பே. அவரைக் கொண்டாடவும், விமர்சனம் செய்யவும்,  செம்மைப்படுத்தவும் அமைப்பும், தோழர்களும் கூடவே இருக்கிறார்கள். ஜெயமோகனின் வக்காலத்து ஒன்றும் அவருக்குத் தேவையில்லை. பண்டிதர்களின், இலக்கிய பீடங்களின் அருள்வாக்குகளுக்காக நாங்கள் இல்லை. எங்கள் இலக்கியமும், கலையும், வாழ்வும் மக்களுக்கானது.

காவல்கோட்டம் வந்த புதிதில் அதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தன. எஸ்.ராமகிருஷ்ணன் ஆயிரம் பக்கம் அபத்தம் என்றார். தோழர்கள் சொன்னார்கள். அவரது விமர்சனத்தை கொஞ்சம் வாசித்ததோடு நிறுத்திக்கொண்டேன்.  நாவலை அப்போது படிக்காததால் பெரிதாய் ஒன்றும் புரியவில்லை. அதிலிருந்த தொனி கடுமையானதாய் இருந்தது மட்டும் புரிந்தது. அதுகுறித்து எஸ்.ராமகிருஷ்னனிடம் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவுதான். நாவல் குறித்த சர்ச்சைகள் அங்கங்கே கேட்கத்தான் செய்தன. நான் ஆர்வம் காட்டவில்லை.

 

சாகித்திய அகாதமி பரிசு, சு.வெங்கடேசனுக்குக் கிடைத்தவுடன் அந்த பழைய சர்ச்சைகள் நினைவுக்கு வந்தன. நம்மக்கள் இதற்கு பெரிதாய் ஆரவாரிப்பது  அமைப்பின் மீது ஒருவித எரிச்சலை ஏற்படுத்துமே, கொஞ்சம் அடக்கியே வாசிப்பது   சரியாய் இருக்குமே என்று நினைத்தேன். மூத்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டி சு.வெங்கடேசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஏன் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு இதுபோல சொல்லவில்லை என ஜெயமோகன் இப்போது கேட்கிறார். கூடவே அவருடைய ஒரு கதையும் சரியில்லை என அவருக்கும் அறை  விடுகிறார்.

 

இலக்கியப் பரப்பில், மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்கள் குறித்து பெரிதாய் சர்ச்சைகள் எதுவும் வந்திருக்கவில்லை. தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிற ஒரு மூத்த எழுத்தாளராகவே அவரைப் பற்றிய ‘அபிப்பிராயம்’ இருந்தது. ஆனால் அமைப்பில் இருக்கும் பல தோழர்கள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தே வந்திருக்கிறார்கள். இதனை அவருக்கு  வாழ்த்து தெரிவித்த போதே பதிவு செய்திருக்கிறேன். விருது பெற்ற பிறகு அவரைப் பற்றிய கட்டுரையொன்றில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனும் பதிவு செய்திருக்கிறார்.  ஜெயமோகனுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் கிடைக்கவில்லை போலும்.

 

அடுத்ததாக,  ‘நாவல் வந்த போதே மாதவராஜ் இது போன்ற மேலான கருத்தை ஏன் தெரிவிக்கவில்லை’ என இன்னொரு கேள்வியும் எழுப்புகிறார் ஜெயமோகன்.  ஐயா, எத்தனை தடவைதான் சொல்வது இதற்கான பதிலை. அப்போது நான் நாவலைப் படிக்கவில்லை.  பெத்தானியாபுரம் முருகானந்தம் திரும்பத் திரும்ப  எழுப்பிய கேள்விகளே விருது மற்றும் விழாக்கள் பற்றி பேச வைத்தது. நாவலைப் படிக்க வைத்து விமர்சனம் செய்ய வைத்தது. மற்றபடி  ‘காவல்கோட்டமே  உழைப்புத் திருட்டு’ என்றும், ‘காவல் கோட்டத்திற்கான சாகித்திய அகாதமி விருது விலை பேசப்பட்டது’ போன்ற  எந்த குற்றச்சாட்டுக்களிலும் எனக்கு இன்றுவரை உடன்பாடில்லை. அதை மறுத்தே வந்திருக்கிறேன். இதையும் தங்கள் தகவல் கிடங்கில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

 

ஆனால், நாவலைப் படித்த பிறகு மிக முக்கியமான விஷயம் ஒன்று எனக்கு  தட்டுப்பட்டது. அதுகுறித்த ஒரு  வெளிப்படையான உரையாடல் பொதுவெளியில் நடத்தப்பட வேண்டும் என விரும்பினேன். முழுக்க  முழுக்க படைப்பு சார்ந்த காரணம் மட்டுமே அதில் இருந்தது. மிகத் தந்திரமாக அவைகளை ஒதுக்கி தனிநபர் சார்ந்த பிரச்சினையாகவும், அமைப்பு  சார்ந்த பிரச்சினையாகவும் இதனை உருமாற்றும் வேலையில் தகவல்களின் நாயகர் ஜெயமோகன் தாயத்துகளை உருட்டிக்கொண்டு இருக்கிறார்.

 

நாவலின் உள்ளடக்கத்தையும் , உருவத்தையும் விவாதிப்போம் என்றவுடன் நண்பர் அரங்கசாமி, ஏற்கனவே ஜெயமோகன் இதுகுறித்து 5 பாகங்கள் எழுதியிருப்பதாகவும் அதைப் படித்துப் பாருங்கள் என்றார். படித்தேன். இன்னொரு நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனத்தையும் படியுங்கள் என்றார். படித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நாவலை அபத்தம் என்றே சொல்லி, அதற்கான வாதங்களை கடுமையாக அடுக்கிக்கொண்டே போகிறார். ஜெயமோகன் கோனார் நோட்ஸ் போல பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையென சொல்லிக்கொண்டே போகிறார். ஒரிடத்தில் ஒன்று சொல்கிறார். இன்னொரு இடத்தில் அதற்கு நேர்மாறாக சொல்கிறார். வளவளவென்று பேசும் பண்டித வியாதி அது. தன் கருத்துக்களே மேலானவை என்று அவரே சொல்லிக்கொள்கிறார்.

 

ஆச்சரியமளிக்கும் விதத்தில் சில கருத்துக்கள்  மூவருக்கும், சில கருத்துக்கள் எனக்கும் ஜெயமோகனுக்கும் ஒன்று போல அல்லது நெருங்கிய அர்த்தத்தில் இருந்தன. அட, எனக்கும் கூட காவல் கோட்டம் கொஞ்சம் பிடிபட்டு இருக்கிறது. இரும்புக்கடலைக்குள் சில அவிந்த கடலைகளும் இருந்திருக்கும் போலும்.


ஜெயமோகன்: நாம் ஒரு நாவலில் வாழ்வை பார்க்கிறோம். கூடவே வாழ்கிறோம். ஆனால் அந்த உச்சத்தில் நாமே நாவலாசிரியராகிறோம். அவன் எழுதாத இடங்களுக்குக்கூட நாம் பறந்து செல்லமுடியும். அத்தகைய உச்சம் இந்நாவலில் எங்குமே நிகழவில்லை.

 

எஸ்.ராமகிருஷ்ணன்: நாவலில் பழமையான மதுரை நகரின் முழுமையான தோற்றம் வரவேயில்லை. திருப்பரங்குன்றமும் மீனாட்சி கோவிலும் அதைச் சுற்றிய சாவடி தெருக்களும் நாயக்கர் மண்டபமும், புது மண்படமும் வருகின்றதேயன்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் பகலிரவுகள், அங்கு வந்து போன வணிகர்கள், ஊரின் செம்மையான பழஞ்சடங்குகள், விழாக்கள், குடியிருப்புகள், மின்சாரம் வந்து சேராத நாட்களில் பந்த வெளிச்சத்தில் பாதி இருளில் அவிழ்ந்த இரவுப் பொழுதுகள் எதுவும் நாவலில் தெளிவாக இல்லை.

 

மாதவராஜ்: பார்த்துப் பழகிய மதுரையை மையமாகக் கொண்ட காவல்கோட்டம் இதுபோன்ற அனுபவத்தை ஏற்படுத்தவில்லை.ஜெயமோகன்: படிப்படியாக விரிந்து வளரும் கொள்ளும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்பது இந்நாவலின் இன்னொரு பெரும் குறை. அழுத்தமான கதாபாத்திரங்கள் பல உள்ளன. மாயாண்டி பெரியாம்பிளை போல.

 

எஸ்.ராமகிருஷ்ணன்: நாவலைப் படித்து முடித்த பிறகு ஒவ்வொரு அத்தியாயத்திலும் வந்து போகும் பத்து பதினைந்து பெயர்கள், சம்பவங்கள் எதுவும் நினைவில் இருப்பதில்லை. எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். துண்டு துண்டான அத்தியாயங்கள்.

 

மாதவராஜ்: நாவலின் பெரும்பகுதி வரும் மாயாண்டிப் பெரியாம்பிள  என்னும் பேர் மட்டுமே நினைவில் இருக்கிறது. அவர் காணாமல் போய்விடுகிறார். இப்படி செதில் செதிலாக நாவலின் பக்கங்கள் முழு உருவமற்று பிய்ந்து கிடக்கின்றன.

 ஜெயமோகன்: இதற்கு வெளியே குடிமக்களான நாயக்கர்களின் அன்றாட வாழ்க்கைச் சித்திரங்கள் அனேகமாக இந்நாவலில் இல்லை. நாயக்கர்களின் குலங்களான கொல்லவாருகளும் கம்மவாருகளும் எப்படி புதிய மண்ணில் வேரூன்றினர் எப்படி ஆதிக்கத்தை அடைந்தனர் எப்படி தங்களுக்குள் உள்ள சாதி ஏற்றத்தாழ்வை தக்கவைத்துக்கொண்டனர் எதுவுமே இல்லை.

 

எஸ்.ராமகிருஷ்ணன்: கம்மவாருகளை விடவும் கொல்லவாருகளே வீரமானவர்கள். கம்மவார்கள் ஒன்றும் பெரிய வீரர்கள் இல்லை என்று ஜாதிஉட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர பெரிதாக நாயக்கர் வரலாற்றில் எந்த வெளிச்சத்தையும் நாவல் உருவாக்கி சாதித்துவிடவில்லை.

 

மாதவராஜ்:  நாயக்கர் காலத்தில் பெரும்பாலும் போர்வீரர்களாயிருந்தவர் கொல்லவாருகள். ‘இது தவறு, கம்மவாருகள்தாம் போர்வீரர்களாயிருந்தனர்’ எனவும் நாவலைப் படித்த சிலர் சொல்கிறார்கள். எந்த வாருகளோ, ஆனால் அவர்கள் களவுத்தொழிலில் ஈடுபடவில்லை. சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழவும் இல்லை. இந்த முரண்பாட்டை ஆராய்ந்திருந்தால் நாவலின் திசை வழியும், களவு குறித்த பார்வைகளும், வரலாற்றுத் தெளிவும் சாத்தியமாகி இருக்கலாம்.

 ஜெயமோகன்: நமக்கு இருவகை வரலாறுகள் உள்ளன. ஒன்று வாய்மொழி வரலாறு. தொன்மங்களும் வீரகதைகளும் அடங்கியது. இன்னொன்று நவீன காலத்தின் கால வரிசை வரலாறு. அட்டவணை வரலாறு என்றும் அதைக்கூறலாம். நமது பிரம்மாண்டமான தேசத்தின் வரலாறு நமக்கு உதிரித் தகவல்களாகவே இன்று வரை கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே சீரான ஒரு ஓட்டத்தில் வரலாற்றை விவரிப்பதென்பது இன்றுவரை நமது வரலாற்றாசிரியர்களுக்கே சாத்தியப்படவில்லை. நமது எல்லா வரலாறுகளும் துண்டுபட்ட சித்தரிப்புகளே. அதனால்தான் போலும் காவல் கோட்டமும் ஒரு இயல்பான, சகஜமான வரலாற்று பரிணாம சித்திரத்தை அளிக்கவில்லை.

 

எஸ்.ராமகிருஷ்ணன்: நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்தக் கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.

 

மாதவராஜ்: மிஷனரியின் ஆவணங்கள், ஆவணக்காப்பகங்களின் தரவுகள், மக்களின் நினைவுகளில் கொட்டிக்கிடந்ததை எல்லாம் சேகரித்து அவைகளுக்குள்ளிருந்து ஒரு பெருங்கதையைச் சொல்ல வருகிறபோது திணறியிருக்கிறார். சு.வெங்கடேசன் சொல்கிற பத்து ஆண்டு உழைப்பின் சோதனையான இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அதற்கென்ற மொழியும், தெளிவும் ஒன்றுபோல் அவருக்கு காவல் கோட்டத்தின் கடைசிப்பக்கம் வரை  கிடைக்கவில்லை.

 ஜெயமோகன்: வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே.

மாதவராஜ்: கதை சொல்கிறவர்கள், தங்கள் வார்த்தைகளின் மூலம் எல்லாவற்றுக்கும் உயிரூட்டி விடுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் ‘கன்னிநிலத்தின்’ கஸாக்குகள் ஸ்தெப்பி புல்வெளிகளுக்குள்ளிருந்து எதிரே வருகிறார்கள். படித்து முடிக்கும்போது ‘ஏழு தலைமுறை’யைச் சொல்லிக்கொண்டு வந்தவனும், ஆப்பிரிக்கக் கிராமத்தின் அந்த கறுப்பு மனிதனும் மட்டுமா ஒரேயாளாகிப்போகிறார்கள்? வாசிக்கிறவர்களும்தானே.

 ஜெயமோகன்: நாவல் மறவர்களிடம் திருட்டுக் கொடுக்கும் கோனார்கள், நாயக்கர்களின் பார்வையில் விரிந்திருக்கும் என்றால் கள்ளர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருப்பார்கள் என்ற வினா வாசகன் மனதில் எழாமலிருக்காது

 

மாதவராஜ்:  கள்ளர்கள் குறித்து பிற சமூகங்கள்என்ன கருத்து கொண்டு இருந்தனர் என்பது நாவலில் தெளிவாகச் சொல்லப்படவேயில்லை.


 

ஜெயமோகன்: இந்தப் புறவயப் பார்வையின் விளைவாக இருக்கலாம், இந்நாவலில் கவித்துவ உச்சம் என்பதே சாத்தியமாகவில்லை. இத்தனை பெரிய நாவலுக்கு இது மிகப்பெரிய குறையேயாகும். இத்தனை மானுட வாழ்க்கை கூறப்படும் இடத்தில் நாம் மானுட உச்சம் என்று கருதும் இடம், நெகிழ வைக்கும், மனம் விம்மச் செய்யும் இடம் எதுவும் நிகழவில்லை.

 

மாதவராஜ்: மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது நாவல் முழுக்கவும் உணர்வற்று கடக்க வைக்கும் ஒரு எழுத்தாக இருக்கிறது. ஆந்தையின் கண்களை வாசகனுக்கும் கொடுத்து விடுகிறார் சு.வெங்கடேசன். சோகம், வலி, சிரிப்பு, கோபம் என எதுவும் நமக்குள் பரவவில்லை.

 ஜெயமோகன்: ஆனால் கதாபாத்திரங்களின் அகத்திற்குள் செல்வதும் அந்த அகம் கொள்ளும் பரிணாம மாற்றத்தைச் சித்தரிப்பதும்தான் கதாபாத்திரங்களை பெரிதாக்குகிறது. அவர்களுடன் வாசகர்கள் நெருங்கும்படிச் செல்கிறது. அதாவது அவர்களை வாசகன் வெளியே பார்ப்பதில்லை; மாறாக உள்ளே நுழைந்தே பார்க்கிறான். இந்த அனுபவம் இந்நாவலில் விடுபடுகிறது. எல்லா கதாபாத்திரங்களையும் நாம் வாசகனாக நின்று பார்க்கிறோம், ஒரு கதாபாத்திரத்துடனும் சேர்ந்து வாழவில்லை. ஆகவேதான் ஒட்டுமொத்தமாக நாவல் முடியும்போது எந்த மனித முகமும் வலுவாக நிற்கவில்லை.

 

மாதவராஜ்: முழு இருளுக்குள் நடந்து செல்கிறவருக்கு முன்னும் பின்னும் இருளே அடைந்துகிடக்கும். கடக்கும் இடத்தில் தெரிவது கடந்தபின் தப்பிவிடும். அப்படித்தான் இருக்கிறது நாவல் குறித்த வாசிப்பனுபவமும். எவ்வளவோ சம்பவங்கள், பாத்திரங்கள்  என நிறைந்திருந்தும் நினைவில் இருட்டு மட்டுமே நிலைத்த மாதிரியிருக்கிறது.ஜெயமோகன்: ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நவாலில் மிக உத்வேகமான பகுதி என்பது இந்த இறுதிக்கட்டப் போர்தான். மிகவிரிவான தகவல்களுடன் செவ்வியல் யதார்த்தவாதத்திற்குரிய விரிவான காட்சிச் சித்தரிப்புடன் ஒரு ‘தல்ஸ்தோயிய யதார்த்தத்துடன்’ எழுதப்பட்டிருக்கும் இப்பகுதிதான் இந்நாவலின் மகுடம். தமிழ்ப் புனைவிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று என்பதை எந்த வாசகரும் உணர்ந்து கொள்ள இயலும்.

மாதவராஜ்: ஆழ்ந்து பார்க்கிறபோது, நாவலின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் நமக்குள் அப்படியே தங்கிவிடுகின்றன.ஜெயமோகன்: எவ்வளவு தேவையோ அவ்வளவே உரையாடலைக் கையாளும் நாவல் இது. தாதனூர் கள்ளர்களின் பேச்சுமொழி குறையில்லாமல் அமைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் இத்தகைய ஒரு பெருநாவல் கோருவது இன்னமும் வண்ணங்கள் கொண்ட உரையாடலை. தாதனூர்க்கள்ளர்களின் பேச்சுநடை அல்ல, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய தனித்த பேச்சுநடையை நாவல் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட தொழிற்களத்தில் உள்ளவர்கள் அதற்கே உரிய பேச்சுமொழி ஒன்றை மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அதன் தனித்தன்மைகள் பலவகையான சொலவடைகளாகவும், நகைச்சுவைகளாகவும் வெளிப்படும். அத்தகை அபூர்வமான உரையாடல்தருணங்கள் ஏதும் இதில் உருவாகவில்லை, விதிவிலக்கு பெண்கள் தானியம் இடிக்குமிடத்தில் பாலியல் கதைகளைப் பேசிக்கொள்ளும் தருணம் மட்டுமே.

 

மாதவராஜ்: நாவலின் உயிர்ப்புள்ள இடங்களென்றால், பிற்பகுதியில் வரும் உரையாடல்களே. அவ்வளவு இயல்பாக அந்த மண்ணையும் வாழ்வையும் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சிந்துகிற பழமொழிகளும், சொலவடைகளும் இந்த நாவலின் வசீகரமான பகுதிகள். எழுத்தாளனால் மனிதர்களுக்குள் இறங்கி அறிய முடிந்திருக்கிறது. பெண்கள் நம்முன் நடமாட ஆரம்பிக்கிறார்கள். அதிலும் உரலை இடித்துக்கொண்டு அவர்கள் பேசும் உரையாடல்கள்... அடேயப்பா!


ஜெயமோகன்: “எட்டுபேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக் கருப்பன் இறங்கியபோது கோட்டையே பிய்த்துக் கொண்டு வருவதுபோல் இருந்தது. அவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.” வெங்கடேசனின் புனைவுத்திறனும் மொழித்திறனும் உச்சம் கொள்ளும் இடம் இதுவே. இத்தெய்வங்கள் வாழும் இந்த அகயதார்த்தத்தில் தான் நம்முடைய நாட்டார்மரபின் எல்லா கதைகளும் வேரூன்றி நிற்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாதவரை நாம் நம் நாட்டார் பண்பாட்டின் கவித்துவத்திற்குள் செல்ல இயலாது. மாந்தீரிக யதார்த்தம், மீயதார்த்தம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆனால் அந்த புனைவு உத்திகளுக்கு நிகரான, நமது மண்ணுக்கே உரிய புனைவு உத்தி இது. இதன் தீவிரமான கவித்துவம் மூலமே இந்த மண்ணின் வரலாற்றை ஒருவர் கூறமுடியும். இங்கு வாழ்ந்து இறந்த தலைமுறைகளின் அக ஆழத்திற்குள் சொல்லமுடியும்.

 

மாதவராஜ்: மதுரைக் கோட்டை இடிக்கப்படுவதை சித்தரிக்க சு.வெங்கடேசன் கையாளும் புனைவு மொழி அதிர அதிர ஒலித்து  கற்களை விழ வைத்து, புழுதியை வெளியெங்கும் நிரப்பி விடுகிறது.  அந்த வீரியம் நாவலிலிருந்து தனித்தே ஒலிக்கிறது. புறாக்கள் மூலமும், பச்சை குத்துவது மூலமும் அதைச் சொல்லும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. நாவலோடு சேர்ந்தே காட்சிப்படுத்துகின்றன. அதுதான் முக்கியம் என எனக்குத் தோன்றுகிறது.

 எஸ்.ராமகிருஷ்ணன்: கற்பனையே இல்லாத வறட்டு விவரணைகளும், கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கபட்ட இருளைப் பற்றிய, நிசப்தம் பற்றிய, ஊரைப் பற்றிய, களவு, வேட்டை குறித்த வர்ணனைகளும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், தொடர்ந்து வெங்கடசனே நாவலில் நுழைந்து செய்யும் பிரசங்கங்களும் நாவலை மிகப் பலவீனமானதாக ஆக்குகின்றன.

 

மாதவராஜ்: எழுத்தாளர் கோணங்கியின் மொழியில் சம்பந்தமில்லாமல்  சிலாவரிசை போட்டு ‘இரவுகள் ஆலமரத்து விழுதுகளின் வழியாக இறங்கின’ என்றும், ‘இரவு சொக்கநாதரின் தேர்சிற்பங்களில் இருந்து வருகிறது’, ‘இரவு பாம்புப் புற்றுக்குள் இருந்து வருகிறது’,  ‘இரவுகளை பாயாய் சுருட்டிக்கொண்டு தாதனூர்க்காரர்கள் சென்றார்கள்’ என பக்கத்துக்கு பக்கம் எழுதும்போது  ‘கவிதை’, ‘கவிதை’ எனவா ஆர்ப்பரிக்க முடியும்?


எஸ்.ராமகிருஷ்ணன்: அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையைப் பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்து வருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.

 

மாதவராஜ்:  ஆழமாய் எழுந்த கேள்வி ஒன்றுண்டு. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, சமூகத்தின் பெருங்குற்றவாளிகள் போல சித்தரிக்கப்பட்ட மனிதர்களுக்குள் எப்படி இந்த ஜாதீய பெருமிதமும்,இறுக்கமும் அடர்ந்திருக்கிறது, இவர்கள் எப்படிசகமனிதர்களை சமமாக மதிக்காமல் இப்படி வெறி கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் அது.நாவலில் இவையெல்லாம் எங்கும் காணோம்.


ந்த கண்ணோட்டங்களோடு முரண்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. அவை முக்கியமானவை. எஸ்.ராமகிருஷ்ணன் அதை வைத்து அபத்த நாவல் என்கிறார். ஜெயமோகன் ‘நல்ல நாவல், ஆனால் மகத்தான நாவல் இல்லை’ என்கிறார். நான் ‘ஆதிக்க சக்திகளின் வரலாற்று நாவல்’ என்கிறேன். இதில் ஜெயமோகன் செய்யும் அரசியலும், சு.வெங்கடேசன் செய்யத் தவறிய அரசியலும் இருக்கிறது. அடுத்த பதிவில் அதை விவாதிப்போம்.

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஜெமோ எழுத்திற்காக உழைக்கும் அளவிற்கு நிகராக வேறு எந்த தமிழ் எழுத்தாளரும் சம காலத்தில் இல்லையே

  அதனால் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் போல அவரது கொடி மேலேறிப் பறக்கிறது, வாசகர்கள் மத்தியில்

  பதிலளிநீக்கு
 2. இவ்வளவு பெரிய விளக்கம் தேவையா? எனக்கு பொறுக்கவில்லை.
  இந்த இலக்கிய புடிங்கியின் வண்டவாளத்தை மாமல்லன்
  ஏற்கனவே கிழித்து விட்டார்.இன்னும் கிழிப்பதற்கு நிறைய பேர்
  வரிசையில் இருக்கிறார்கள்.கொஞ்சம் கூடுதலாக சொல்ல வேணுமென்றால்
  அவர் தன் டவுசரை காட்டி (கலட்டி அல்ல) நீண்ட நாளாயிற்று.

  பதிலளிநீக்கு
 3. ஜெமோ எழுதுவது எழுத்து என்று நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும், குருவு மண்டை தொடங்கி பல புதிய வார்த்தைகளை தமிழ் விமர்சன மொழிக்கு வழங்கியிருக்கிறார். முழுக்க முழுக்க குழப்பமான அபிப்ராயங்களை, ஒரே பத்தியில் முன்னுக்கு பின் முரனான கருத்துகளை கூறி வாசகர்களை குழப்புகிறார். கஞ்சா நெடி வீசும் ஹிந்து ஞான மரபு முழுக்க புகை மண்டலமாகவே உள்ளது.

  பின் தொடரும் நிழலில் குரலின் இரண்டாம அத்தியாயமாக இப்பொழுது இடதுசாரி எழுத்தாளர் அமைப்பை கொச்சைபடுத்த் துவங்கியுள்ளார்.

  பதிலளிநீக்கு
 4. ***அப்படியிருக்கும்போது ‘குதிரையில் வந்தியத்தேவன் வருகிற காட்சியிலிருந்து’ எனது வரலாற்று நாவல் அறிவைப் பீற்றியிருக்கக் கூடாது.**

  இந்தாளு ஜானகிராமனுக்கு நாவல் எழுத்தெரியாதுங்கிறதும், ஏதோ சரித்திர நாவல்னா என்ன எப்படியிருக்கனும்னு இவருதான் வரைமுறைகள் எல்லாம் எழுதும் அத்தாரிட்டி போல பிதற்றுவதும் (கல்கியின் எளிய நடையை குழந்தைகளுக்கு எழுதும் என்று சொல்லி) தாந்தான் பெரிய "புடுங்கி" என்பது போல வெட்கமே இல்லாமல் தன்னடக்கமே இல்லாமல் சொல்லிக்கிட்டு திரிகிறார்.

  வந்தியத்தேவனையும், அவன் குதிரையையும், கல்கியையும் இழுத்துட்டு வந்து மாதவராஜ் பத்தி விமர்சிப்பதுடன் தாந்தான் எல்லாருக்கும்மேல் என்று காட்டுகிற இந்தாளுடைய சின்னப்புத்திதான் எரிச்சலைக் கிளப்புது.

  எனக்கென்னவோ நீங்க இவ்ளோ பெரிய விளக்கம் கொடுக்கிறதெல்லாம் அந்தாளு பெரிய மேதைனு ஒத்துக்கிற மாதிரிதான் எனக்குத் தோனுது.

  One needs to be very careful dealing with him as he uses every chance to praise himself.

  He needs to be taught he is just a player in Tamil literature. Tamil would live WITHOUT him too. Even if we erase whatever he contributed so far to Tamil, it would not make a scratch to Tamil. I dont think he is ever going to learn that as he is kissing his own bottom ALWAYS!

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப தூரம் போயிட்டிருக்கு. கொஞ்சம் போரடிக்கிது இந்த விவாதங்கள்.

  பரிசு பெற்ற ஒருத்தர் இந்த விவாதங்களில் எப்பிடி ஈடுபடுகிறாரோ தெரியவில்லை. அவர் பெற்ற பரிசுக்கு கடுமையான விமர்சனங்களால் அலங்கரிப்பது, அதுவும் அந்தப் பரிசு பெறாத மூவர் மற்றும் பலர் அந்த நூலுக்குத்/நாவலுக்குத் தகுதி இருக்கான்னு ஆராய்வது பொறாமையில் தான் முடியுதான்னு இருக்கு. மூவரும் நீங்கள் சொல்லும் விமர்சனங்களை தங்கள் நாவல்/பதிவுகளில் உட்கொண்டு ஒரு திறமையான தகுதியான படைப்பை அளித்தால் தமிழ் வாசகர் உலகத்துக்கு ஒரு மணிமாலை கிடைக்கலாம். அதற்கு சாகித்ய அகாடெமி யை விட உலக அளவில் திறம்பட ஒரு பரிசு கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. கொஞ்சம் நேரம் முன் ஒரு பின்னூட்டம் போட்டேன். இப்போ அது எதுக்கு தேவையில்லாம ஒரு நண்பர் பதிவுல இப்பிடி ஒன்னு போடணும்ன்னு கஷ்டமா இருக்கு. மனித மனம் நிமிஷத்துக்கு மாறுது. :-)

  பதிலளிநீக்கு
 7. 'என்னுடைய எல்லாக் கருத்துக்களும் மேலானவையே, கொஞ்சம் படித்துப் பாருங்கள்'

  இதை விட கேவலமாக தன் எழுத்தை எவறும் உலகில் விற்றதில்லை.

  பதிலளிநீக்கு
 8. பக்கங்கள் 36, 37, 39, 47, 89,140,152, 213, 215, 218, 229, 246, 256, 259, 314, 279 பக்கங்களில் சரித்திர பாட புத்தகங்கள் உடபட பல புத்தகங்களில் இருந்து கட்டிங் பேஸ்டிங் வேலைகள் செய்து நிரப்பட்டுள்ளன. இந்த கட் அண்டு பேஸ்டு அரசியல் பற்றி ஏன் தமிழ் சூழலில் யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள், மாது உட்பட.....

  பதிலளிநீக்கு
 9. ஜெயமோகன் அரசியல் இப்போது எல்லோருக்கும் புாிந்திருக்கும் என நினைக்கிறேன். அவா் நினைத்த இடத்திற்கு இந்த விவாதத்தை
  மிக சாமா்த்தியமாக நகா்த்திவந்து சோ்த்துவிட்டாா். சும்மா ஆடாது ஜெயமோகன் குடும்பி. இவா் நோக்கில் கல்கி உள்ளிட்டோா் குழந்தை எழுத்தாளா்களாக உள்ளபோது
  சு.வெ. மட்டும் எப்படி பாராட்டும் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒரு சுமாரான வரலாற்று நாவலை படைத்து இவரது பாராட்டை பெற்றவராகிறாா்
  என்று இப்போதுஅனைவருக்கும் புாிந்திருக்கும். இவா் ஒருவனைத் திட்டினாலும் - பாராட்டினாலும் அதில் ஒரு விசமம் இருக்கும்.
  ,உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒரே நச்சு. இனிமேல் இடதுசாாிகள் யாரும் ஜெயமோகனை விமா்சித்தால் அது ஜெயமோகனை விமா்சிப்பதாகாது மாறாக அது சு..வெ வை விமா்சிப்பதாகும். இதுதான் அடுத்தவன் கையை வைத்து இன்னொருவன் கண்ணை குத்துவது.
  சு.வெ.-யின் குல்மால் வேளைகலெல்லாம் த.மு.எ.க.சவிலும் சி.பி.எம்-லும் வேண்டுமானால் எடுபடலாம் ஜெயமோகனிடம் அது முடியாது.
  போலீசிடம் சிக்கிய சராய வியாபாாி மாதிாி சு.வெ. ஜெ.மோ-விடம் மாட்டியுள்ளாா். இனி இவராக நினைத்தால்கூட திருந்தமுடியாது ஜெ.மோ விடமாட்டாா்.

  பதிலளிநீக்கு
 10. Very amusing to see how these writers throw mud against each other. There is nothing great in winning 'Sahitya Academy' because those books find their places in government libraries and not in the mass mind.I do respect writers and their struggles. But I find a vast gap between them and people.They should speak the language of the people. Mr.JM seems to be determined that no one should comprehend his writings. Mr.Vasantha Balan made them popular but unfortunately he has degraded the Tamil people in 'Aravaan'. Depicting the travails of the poor is not people's literature. It should show the values in them. I am not touching on the exploitation of young minds' preoccupation with sex. Of course one can see quite a few young minds trying to achieve something and if they get encouragement they will not resort to cheap tactics to become rich.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!