காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1

su.ve

 

ஏற்கனவே  இந்த சுட்டி எனது இ-மெயிலுக்கு இரண்டு முறை  பகிரப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டும் இருந்தது. இப்போது  தீராத பக்கங்களிலும் “இது குறித்து நீங்கள் ஏன் பேசவோ, விவாதிக்கவோ மறுக்கிறீர்கள்?” என  nellaiconspiracy கேட்டிருக்கிறார். பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவரே ஒரு புனைவாகவும்  அல்லது அந்த கேள்வி எழுப்பிய நண்பரே  ஒரு போலியாகவும்  இருக்கக்கூடும். அப்பதிவில் உள்ள விஷயங்கள் வெறும் புனைவாக மட்டும் இருக்கவில்லை. அதில் உண்மைகளும், தனிப்பட்ட அனுபவங்களும், அனுமானங்களும்  கூடவே  இயக்கத்தை காயப்படுத்தும் சில முயற்சிகளும் இருப்பதாக உணர்கிறேன். அவ்வகையில், எனக்குத் தெரிந்த சில விஷயங்களை முதலிலிருந்து இங்கே பகிரத் தோன்றுகிறது.

 

காவல்கோட்டம் நாவல் வெளிவருவதற்கு முன்பே அதுகுறித்த தகவல்களும், அந்நாவல் அடியெடுத்து வைத்திருக்கும் புதிய களங்கள் குறித்தும் செய்திகள் வந்துகொண்டு இருந்தன. முக்கியமாக எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கொண்டாடி மகிழ்ந்தார். “இது சு.வெங்கடேசனின் வாழ்நாள் சாதனை” என்று பூரித்துப் போனார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கிய படைப்பாக இருக்கப் போகிறது என எதிர்பார்த்தது. வெளிவந்ததும் ஆரவாரத்தோடு வரவேற்றது. சில நாட்களில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அந்நாவலை“ஆயிரம் பக்க அபத்தம்’ என கடுமையாக விமர்சனம் செய்து அவரது இணையதளத்தில் எழுதினார். எதிர்ப்பு தெரிவித்தும், உடன்பாடு தெரிவித்தும் கருத்துக்கள் தமிழ் இணைய உலகில் கொட்டத் துவங்கின.

 

“என்ன இப்படி எழுதிவிட்டீர்கள் ?” என சிறு வருத்தத்துடன் தொலைபேசியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். “அந்த நாவல் அப்படித்தான் இருக்கிறது. நீங்களே படித்துப் பாருங்கள். பல ஆவணங்களை அப்படி அப்படியே தொகுத்துப் போட்டு இருக்கிறார்கள். களவு குறித்த பெருமிதங்களே மிஞ்சுகின்றன.” என்று ஆரம்பித்து நிறைய பேசினார்.  பரந்து விரிந்திருந்த அவரது வாசிப்பின் ஆழங்களை அப்போதும் உணர முடிந்தது. “சரி தோழர்,  இருக்கட்டும்.. ஆனால் உங்கள் விமர்சனத்தில் இப்படியொரு கடுமையான தொனி தேவையில்லையே” என்றேன்.  “இல்லை மாது, இப்படியொரு குறைபாடுகள் உள்ள நாவலை எழுதிவிட்டு அங்கங்கு பாராட்டுக்கூட்டங்கள் நடத்தி, இதுவரையிலான தமிழின் ஆகப்பெரும்  எழுத்தாளர்களையெல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’  சு.வெங்கடேசன் தாண்டிச் சென்றுவிட்டார் என்று மேடையில் பாராட்டுவதும் அதை எந்தவித மறுப்புமின்றி பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வதும் எப்படிச் சரி?” என்றார். எனக்கும் அது உறுத்தியது. ஆனாலும், “தோழர்! தமுஎகசவில் பல படைப்பாளிகள் இருந்தபோதிலும் நாவல்களை மிகச் சிலரே எழுதுகிறார்கள். அதிலொன்று மிகச் சிறப்பாக வெளிவந்திருப்பதைக் கொண்டாடுவதன் மூலம் மேலும் பல நாவல்கள் இப்படி வெளிவரும் என்பதுதானே இதன் நோக்கமாக இருக்க முடியும்?.  அதில் கூட குறைய வார்த்தைகள் வெளிப்பட்டு இருக்கலாம்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டு, “அதற்கான தகுதி நாவலுக்கு இல்லையே..” என்றார்.

 

ஒருமுறை “வீரசுதந்திரம் வேண்டி....” எனும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து சாத்தூர் தமுஎகச சார்பில் வெளியிட்ட புத்தக தயாரிப்பு வேலையில் நான் இருந்தேன். ஆவணங்கள், தகவல்களை எல்லாம் எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர் போன்றோர் தர அவற்றைப் படித்து தொகுத்து எழுதிக்கொண்டு இருந்தேன். அதன் கையெழுத்துப் பிரதிகளை எடுத்து வாசித்துக்கொண்டு இருந்த எஸ்.ரா சில வாக்கியங்களை மாற்றி அமைத்தார். எழுத்துப் பிழைகளை சரிசெய்தார். பிறகு அந்த புத்தகம் வெளிவரும்போது, அந்த புத்தகத்திற்கு யார் யாரெல்லாம் பங்காற்றினார்களோ, அது மிகச் சிறியதாய் இருந்தால் கூட , அவர்களது பெயர்களைக் குறிப்பிட வேண்டும் என தமிழ்ச்செல்வன் சொன்னார். எஸ்.ராவிடம் கேட்க சிறு தயக்கம் இருந்தது. பிரபலமாகிவிட்ட அவர், அந்த நீண்ட லிஸ்ட்டில் அவர் பெயரைக் குறிப்பிட விரும்புவாரா என யோசித்தேன். ஆனால் அவர் எந்த ஈகோவும் இல்லாமல் சரியெனச் சொன்னார். அதுகுறித்து திருநெல்வேலியில் நடந்த கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். அப்படியொரு எஸ்.ராவின் சித்திரம் என்னிடமிருந்தது. எனவே எஸ்.ராவின் வார்த்தைகளில்  பொறாமையும், சிலர் சொல்வதுபோல் வயிற்றெரிச்சலும் எனக்குத் தெரியவில்லை. அவர் அப்போதே பல நாவல்கள், சிறுகதைகள் எழுதிவிட்டார். தமிழ் இலக்கிய உலகில் அதிகமான வாசகர்களைக் கொண்ட  எழுத்தாளராகவும்  உயர்ந்திருந்தார். அப்போதுதான்  நாவலை எழுதி இருக்கிற சு.வெங்கடேசன் மீது என்ன காழ்ப்புணர்ச்சி வந்துவிடப் போகிறது. 

 

எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதும்,  இது ஆரோக்கியமானதில்லை எனவும் புரிந்தது. தமிழ் இலக்கிய உலகில் படைப்பாளிகளை அரவணைத்து, அவர்கள் படைப்புகளில் மனித சமுகத்திற்கான வெளிச்சங்களைக் காட்டும் மகத்தான் பணிக்கு இது உதவாது . ஆரவாரங்களும், கொண்டாட்டங்களும் நமக்கு வெளியே இருப்பவர்களையும், நம் பக்கம் கொண்டு வருவதாக இருக்க வேண்டும். அருகில் இருப்பவர்களையும் விலக வைத்துவிடக் கூடாது. காவல்கோட்டத்திற்கு பரிசு கிடைத்ததும் என் மனதில் இந்த விஷயங்களே உறுத்த ஆரம்பித்தது. நம் தோழர்கள் சந்தோஷத்திலும், அதிகப்படியான உற்சாகத்திலும் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்கிற ஆதங்கமே தலை தூக்கியது. தமுஎகசவின் அறிக்கை அப்படி இல்லை.

 

தமிழில் சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது எல்லாம் பெறுவதற்கான தகுதி பலருக்கு இருந்தும், தன் முதல் நாவலுக்கு  நமது எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற தொனி அந்த அறிக்கையில் இல்லை. மாறாக,  “இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்”  என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை சுட்டிக்காட்டுவதாகத்தான்  சு.வெங்கடேசனுக்கு பாராட்டு தெரிவித்திருந்தேன். பிறகு தோழர்.தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசியிலும் இதனைத் தெரிவித்தேன். அவரும் என் வார்த்தைகளில் இருந்த நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் சில தோழர்களுக்கு இதில் வருத்தமும்  இருந்தது. ‘பரிசு பெறுகிற வேளையில் வாழ்த்தோடு முடித்துக்கொள்ள வேண்டியதுதானே இதையெல்லாம் சொல்ல வேண்டுமா?’ என கேட்டார்கள். அதுதானே இங்கு பிரச்சினையே!

 

“இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்” எனச் சொன்ன பிறகுதான் அதில் உள்ள  தகவல் பிழை புரிந்தது. உடனே “எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக இளைய எழுத்தாளர்” திருத்தப்பட்டது. இந்த வயது, இளையவர் என்பதில் ஏன் அதிக அக்கறையும் அழுத்தமும் கொடுக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் சாகித்திய அகாதமி வாங்கும்போது, அவரது உயரம் எங்கே, சாதனைகள் எங்கே, படைப்புலகம் எங்கே? அவருக்கு அடுத்தபடியாக என ஒரு இடத்தைப் பிடிக்கும்போது இத்தனையும் நிழலாடியிருக்க வேண்டும். படைப்பை முன்னிறுத்துவதை விடவும் படைப்பாளியை முன்னிறுத்துவதால் வருகிற வினை இது.  காவல்கோட்டம் குறித்த சர்ச்சைகளின் அடிநாதமே இதுதான் என எனக்குத் தோன்றுகிறது.

 

பெத்தானியாபுரம் முருகானந்தமும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறார்.  மதுரையில் நடந்த சாகித்திய அகாதமி விருது பெற்றதற்கான பாராட்டு விழாவில் நண்பர் சு.வெங்கடேசனுக்கு தலையில் மலர்க்கீரீடமும், கையில் வீரவாளும் சூடப்பட்டது என்பது உண்மைதான். எவ்வளவோ விருதுகள் பெற்ற எழுத்தாளர் மைக்கேல் ஷோலக்கேவுக்கும் கவிஞர்  பாப்லோ நெரூடாவுக்கும் கூட இப்படியெல்லாம் அபூர்வமான கணங்கள்  நிகழ்ந்திருக்காது. சு.வெங்கடேசனை விட வயதில் குறைந்த ஒரே ஒருவராக தமிழில் இதே விருது வாங்கிய எழுத்தாளர் ஜெயகாந்தன் தலையில் மலர்க்கீரிடத்தையும் கையில் வீரவாளையும் கொடுக்கிற தைரியம்  யாருக்கு வரும்? அப்படியொரு ஆளுமையும், ஆகிருதியும் அவர் கொண்டு இருந்தார். நாம் கற்றுக்கொள்ளவும், முன்மாதிரியாகக் கொள்ளவும் எவ்வளவு இருக்கின்றன!

 

முதலில் இந்த விருதுகள் குறித்த தெளிவான அபிப்பிராயங்களும், மதிப்பீடுகளும் நமக்கு வேண்டும். அதுவும் ஒரு இடதுசாரி அமைப்புக்கு தெள்ளத் தெளிவாய் வேண்டும்.

(இன்னும் சொல்வேன்...)

காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 2

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அச்சம் தவிர்
    ரொத்திரம் கொள்
    கொடுமையை எதிர்த்து நில்
    செய்வது துணிந்து செய
    தீயோர்கு அஞ்சேல்
    நேர்பட பேசு
    நையப் புடை
    போர் தொழில் பழகு
    ரொத்திரம் பழகு

    முட்டாள்தனங்கள் பொதுவெளியில் கூச்சமில்லாமல் அரங்கேற்றப்படும் போழுது ஒரு இடதுசாரியாக அதனை ஒழுங்கு செய்யும் பொறப்பினை மாதவராஜ் செய்திருக்கிறார் என்றே கருதுகிறேன்.............

    நெல்லை சீமையில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள்.

    #நேற்று சென்னை விழாவில் இந்த விழாக்கள் இனி இன்னும் அதிகமாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது

    #இயக்குனர் வசந்தபாலன் “சாகிதய அகாதமி ரு.75 லட்சம் பரிசு வழங்க வேண்டும்” என் நேற்று அறிவித்திருக்கிறார் - ”ஏம்பா சாகிதய அகாதமிக்கு குடுத்த காச திரும்பி கேக்குறாரு போல இருக்கே” என அரங்கத்தில் நேற்றே பேசப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. எழுத வந்த பிறகு ஆண் என்ன பெண் என்ன...சித்தாள் பணியில் மட்டுமே சாத்யம் என்று ஜெயகாந்தன் சொல்லுவார்.
    எழுத்தை படியுங்கள்.
    துணிந்து விமர்சனத்தை வையுங்கள்.
    மற்றதை தவிருங்கள்.
    குழப்பமே வராது.

    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
  3. இதே விருது வாங்கிய எழுத்தாளர் ஜெயகாந்தன் தலையில் மலர்க்கீரிடத்தையும் கையில் வீரவாளையும் கொடுக்கிற தைரியம் யாருக்கு வரும்? அப்படியொரு ஆளுமையும், ஆகிருதியும் அவர் கொண்டு இருந்தார். நாம் கற்றுக்கொள்ளவும், முன்மாதிரியாகக் கொள்ளவும் எவ்வளவு இருக்கின்றன!

    அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. என்னே ஒரு விவாத விமர்சனம்..மாதவ் ஜயா.

    பதிலளிநீக்கு
  5. மாது...........
    இந்த சுட்டியை பலர் என் இ-மெயிலுக்கும் அனுப்பியிருக்கிறார்கள், அது தொடர்பான விசாரிப்புகளையும் பல இலக்கியவாதிகள், இயக்கவாதிகள் நடத்திய வண்ணம் இருக்கிறார்கள். இந்த கடிதம் வெறும் நுனிப்புல் அளவில் தான் திருப்பரங்குன்றத்து நிலைமைகளை விவரிக்கிறது, என் பெரும் சங்கடம் மனதுக்குள் இயக்கம் சார்ந்து மீதம் இருக்கும் மரியாதை காரணமாக எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.,

    பதிலளிநீக்கு
  6. எனது மின்னஞ்சலுக்கும் பெத்தானியபுரம் முருகானந்தம் என்பவரது விமர்சனக் கடிதம் அல்லது கட்டுரை வந்திருந்தது. முழுவதும் வாசித்தேன். குழப்பமாக இருந்தது.

    ”முதலில் இந்த விருதுகள் குறித்த தெளிவான அபிப்பிராயங்களும், மதிப்பீடுகளும் நமக்கு வேண்டும். அதுவும் ஒரு இடதுசாரி அமைப்புக்கு தெள்ளத் தெளிவாய் வேண்டும்.”

    என்ற உங்கள் நிலைப்பாடு உங்கள் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. முதலில் இந்த விருதுகள் குறித்த தெளிவான அபிப்பிராயங்களும், மதிப்பீடுகளும் நமக்கு வேண்டும். அதுவும் ஒரு இடதுசாரி அமைப்புக்கு தெள்ளத் தெளிவாய் வேண்டும். ஆரம்பித்து விட்டீர்கள். இந்த மாதிரி உறுதியான கருத்து சொல்பவர்கள் அந்த இயக்கத்தில் தொடர முடியாது.
    சில நேரங்களில் சில மனிதர்களுக்கு விருது அறிவிக்கப்பட்ட உடன், எனக்கு விருது வழங்கியதன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அப்போது இடது சாரி இயக்கத்தில் இல்லாத ஜெ கே சொன்னார். இந்த விருதே உலகத்தின் ஆகச் சிறந்த விருது என்று வெங்கடேசன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  8. @ nellaiconspiracy!

    நண்பரே,நான் யாருடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் எதிர்பார்த்து இவைகளை எழுதவில்லை.தாங்கள் சென்ற பதிவில் வந்து இதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் எனக் கேட்டு இருந்தீர்கள். எனவே எனக்குத் தெரிந்தவைகளை பேசியிருக்கிறேன். உங்கள் பாராட்டுக்களின் தொனி வேறுமாதிரியாக ஓலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. @பாண்டியன் ஜி!

    விமர்சனங்கள் வைப்பதில் நேர்மை இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  10. @ MuthuKrishnan!

    நான் திருப்பரங்குன்றத்து நிலைமைகளை, மதுரை நிலைமைகளைப் பார்க்கவில்லை. இந்த நாவல் குறித்த சர்ச்சைகளைப் மட்டுமே பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. @தமிழ்நதி!

    எப்படியிருக்கீங்க.

    உங்கள் வருகைக்கும், பார்வைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @சீனுமோகன்!

    // இந்த மாதிரி உறுதியான கருத்து சொல்பவர்கள் அந்த இயக்கத்தில் தொடர முடியாது.//

    இந்த கருத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆட்சேபிக்கவும் செய்கிறேன். அந்த இயக்கம்தான் இந்த கருத்துக்களை எனக்குள் உருவாக்கி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. மர்ம நாவல் எழுதும் அனைத்து தகுதியும் தமிழ்செல்வன் அவர்களுக்கு இருக்கிறது.

    //வெளியார் ஒருவர் // அந்த வெளியார் சு.வெ வுக்கு மிகவும் நெருக்கமானவர், அந்த வீரவாள் செய்யப்பட்டது முதல் அனைத்தும் சு.வெ வுக்கு முன்பே தெரியும், ஆனால் அந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டது அது எப்படிங்க வைக்க சொல்லிட்டு அப்படியே அது எல்லாம் பிடிக்காத மாதிரியே அப்படி பேசுறாரு மைக்க புடிச்சி என்று தான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!