அந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது?


நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர் உமாமகேஸ்வரிக்கு வந்த பயமும், பதற்றமும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்று வந்திருக்கிறது. அதனை  எதிர்கொள்ள, தப்பிக்க அல்லது முறியடிக்க  கூடவே சிந்தனைகளும் முளைக்கின்றன.

“அந்தச் சிறுவன் ஒரு மனநல நோயாளி”,  “அவனைத் தூக்கில் போட வேண்டும்”,  “வளர்ப்பு சரியில்லை எனவே பெற்றோரையும் தண்டிக்க வேண்டும்”,  “சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்தான் இதுபோன்ற வன்செயல்களுக்கு வித்திடுகின்றன” இப்படியான கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

“யாரும் பெயில் கிடையாது என்னும் பெயரை சம்பாதிக்க  பள்ளிகள் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளே காரணம்”,   “ மார்க்குகளை மட்டுமே முக்கியமாகக் கருதும் இந்தக் கல்விமுறையே காரணம்”, “தொடர்ந்த  கட்டாயங்களால் ஏற்படும் மன அழுத்தம் இதுபோன்ற குற்றங்களுக்கு கொண்டு செல்கிறது” என நிதானமாக கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இவைகள் வெறும் உணர்ச்சிகளின் தரப்பிலிருந்தும் அல்லது  முற்றிலும் அறிவின் தரப்பிலிருந்தும் சமூகத்தின் முன்னே நடத்துகிற உரையாடல்களாகத் தெரிகின்றன.  தற்காலிகமான ஆனால் உடனடியான தீர்வுகளுக்கான அல்லது நிரந்தரத்தீர்வுகளுக்கான  வழிகளை ஆராய்வதாக இருக்கின்றன. இவைகள் யாவிலும் உண்மைகளின் கூறுகள் இருப்பினும், மனித மனங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருகிறது நாம். ஒரு கொலை, அதன் பின்னணி, கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர், ஆயுதம்,  சாட்சிகள் என்ற ரீதியில் இதனை ஒரு கேஸ் கட்டுக்குள் அலசிடமுடியாது. 

கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் மகள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்க்க  கஷ்டமாயிருந்தது. “எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. எல்லார்ட்டயும் அன்பா இருப்பாங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும்போது நமக்கும் தொண்டை அடைக்கிறது.  எப்பேர்ப்பட்ட இழப்பு அந்த குடும்பத்துக்கு. இனி அதை யாரால், எப்படி திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும்? அந்தக் கேவல்களை எப்படி நிறுத்த முடியும்?

“நான் தவறு செய்துவிட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் என் பெற்றோர்களையும் பார்க்க விரும்பவில்லை” என இர்ஃபான் அளித்துள்ள வாக்குமூலம், அவன் தன்னை உலகிலிருந்தே துண்டித்துக் கொள்ள முயல்பவனாகக் காட்டுகிறது. “அந்த டீச்சர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” எனச் சொல்வதில் அவன் அடையும் சித்திரவதை இருக்கிறது.

இப்படிப்பட்ட இர்ஃபான் கையில் கத்தியையும் அவனது சிந்தையில் தன் டீச்சரைக் கொல்ல வேண்டும் எனகிற வெறியை யார் திணித்தது? இரண்டுநாளாய் கத்தியை தனது புத்தக்கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு இருந்திருக்கிறான். தக்க தருணம் எதிர்பார்த்திருக்கிறான். ஒரு குத்து அல்ல. மாறி மாறி குத்தியிருக்கிறான். கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் குத்தியிருக்கிறான். அவ்வளவு ஆத்திரம் அவனுக்குள் எப்படி விதைக்கப்பட்டது? இதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் என் மனைவி செய்தியை படித்துவிட்டு, “இப்போல்லாம் பிள்ளைங்கள எதுவும் சொல்லவே பயமா இருக்கு. உடனே அழுது தள்ளிருவாங்க. நிப்பாட்டவே மாட்டாங்க.” எனச் சொல்லி வந்தவள், “ஆனா,  எல்லோரையும் பொதுவா சத்தம் போட்டா அமைதியா இருப்பாங்க. அல்லது சிரிக்கக்கூடச் செய்வாங்க” என்றாள்.  “அதே மாதிரி, தனியா அழைத்துப் போய் கடுமையாப் பேசினாலோ, புத்திமதி சொன்னாலோ கேட்டுக்குவாங்க. அழல்லாம் மாட்டாங்க. ஆனா அதுக்குல்லாம் எங்க நேரம்? ஒரு வகுப்பிலேயே நாப்பது ஐம்பது புள்ளைங்க இருக்காங்க” என்றும் சொன்னாள். இந்த இடம்தான் வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.

இன்றைய குழந்தைகள் பொதுவெளியில் தங்களுக்கு ஒரு தோல்வியோ, அவமானமோ நிகழ்ந்தால்  அதனைத்  தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தவறுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களோ அதுபோல  தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிடவும்  தயாராய் இருக்கிறார்கள்.காலகாலமாய் மனித மனத்தின் பொதுவான கூறுகள் இப்படி இருந்தாலும் இன்றைய குழந்தைகள் மிக தீவீரமாகவும், நுட்பமாகவும் இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். உலகில் அவர்கள் தங்களை மட்டுமே மிக அதிகமாக நேசிக்கிறார்கள்.  தங்கள் மீது காட்டும் இந்த அன்பை எப்படி உலகம் முழுமைக்கும் அவர்களை செலுத்த வைப்பது என்பதுதான் இன்றைய காலத்தி சவால். நிகழ்காலத்தின் கேள்வி. டீச்சர் உமா மகேஸ்வரியின் மரணம் இரத்தம் சிந்த சிந்த படுகொலையாக நிகழ்த்தப்பட்ட புள்ளி இதுவாகவும் தெரிகிறது.

ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும்,  “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு  வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். உமா மகேஸ்வரி அவர்களும் இப்போது ஒரு வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்திருக்கலாம். நானும், நேற்றைய பதிவுக்கு nellaiconspiracy என்னும் நண்பர் கேட்டிருந்ததற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.

யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

Comments

25 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. மாதவராஜ்,மார்க் மட்டுமே முக்கியம் என்று பெற்றோர்கள்,பள்ளிகள், சமுதாயம்,பாடத்திட்டங்கள் எல்லாம் நினைக்கும்வரை இந்த நிலை மாறாது,இன்னும் மோசமாக போக வாய்ப்புண்டு.மார்க்கை தவிர வேறு பல விஷயங்கள் உள்ளன என்று நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லியே தீரவேண்டிய காலம் வந்துவிட்டது.

    ReplyDelete
  3. எங்கள் ஊருக்கருகிலுள்ள ஒரு பள்ளியில், 100% தேர்ச்சி விகிதம் காட்டுமாறு கட்டாயப்படுத்தப் படுவதால், ஆசிரியர்கள் எளிதாகக் கேள்வித்தாள் அமைத்தல், கேள்விகளை முன்கூட்டியே வெளியிடுதல், விடைத்தாளில் சரியான விடைகளைத் தாங்களே எழுதி அதிக மதிப்பெண் இடுதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள்.

    மாணவர்களுக்கு மகிழ்ச்சி - அதிக மதிப்பெண்
    பெற்றோருக்கு மகிழ்ச்சி - அதிக மதிப்பெண், புத்திசாலிப் பிள்ளை, கொடுத்த காசுக்கு மதிப்பு
    ஆசிரியருக்கு மகிழ்ச்சி - தேர்ச்சி விகிதம், நிர்வாகத்தின் பாராட்டு, நிம்மதி
    பள்ளி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி - தேர்ச்சி விகிதம், நல்ல பெயர், நல்ல பணம்

    எத்தனை win-winனு?

    ReplyDelete
  4. " ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும், “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். "

    கொலை செய்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இர்பானுக்கு மட்டுமல்ல.

    சிறுவனை நியாயப்படுத்த ஆசிரியையை பழிப்பது போல முடித்திருப்பது சரியில்லை.

    ReplyDelete
  5. The murder reveled that the entire educational system has been converted into MARK ORIENTED SYSTEM and natural development of knowledge has no place to day...Since the student's out burst has no planned motive/enmity he may be pardoned considering his very young age and the students family has to pay huge compensation to the teacher's death..The sorrows of the teacher's family is really too big...The compensation is too small if compare with the loss..But what to do??No other way...some times exact solution is not possible...rarest case...

    ReplyDelete
  6. கோபம், வன்முறை எல்லாம் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இந்த சிறுவனின் கோபம் ரொம்ப நாளாக அடக்கி வைக்க பட்டிருக்க வேண்டும். பதின்ம வயது குழந்தைகளை அணுக, ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். மார்க் வாங்கவில்லை என்றால் தம் மக்களை மிகுந்த அவமானத்துக்கு உள்ளாக்கும் பெற்றோர் கண்டிக்கப்பட வேண்டியவர். நீங்க சொன்ன கடைசி பாரா பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியது. கொஞ்சம் கருணையான வார்த்தை, எந்த தீவிரவாதியையும் இலக வைக்கும். படிப்பு வரலை, அவன் என்ன பண்ணுவான்? அவனை தொடர்ந்து சமூகம் அவமனப்படுதிகொண்டே இருந்தால் அவன் சமூக விரோதியாய் தானே ஆக முடியும்?

    குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கும் இந்த கல்வி முறையிலிருந்து விடுதலையே கிடையாதா? .கவுன்செல்லிங் கொடுக்கப்பட வேண்டியது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் தான்!

    ReplyDelete
  7. வணக்கம்!
    முன்பெல்லாம் நான் படிக்கும் காலத்தில் நல்லொழுக்கப் பாடம் (Moral Class) என்று தனியே ஒரு வகுப்பு நடத்தினார்கள். மாதா, பிதா, குரு தெய்வம் என்றார்கள். நான் படித்த கிறிஸ்தவ பள்ளியில் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு ‘ஞான உபதேசம்” என்றும், என்னைப் போன்றவர்களுக்கு ”நல்லொழுக்கப் பாடம்” என்றும் நீதி போதனைகளை கற்பித்தார்கள். பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கம் இருந்தது. இப்போது அந்த நல்லொழுக்க வகுப்புகளை, குறிப்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நடத்துவதாகத் தெரியவில்லை. காசு பார்ப்பதையே குறிக்கோளாக வைத்து இருக்கிறார்கள். அப்புறம் இப்படியான வருத்தம் தரும் சம்பவங்கள். கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் மரணம் போன்று கொஞ்சநாள் பேசுவார்கள்.

    ReplyDelete
  8. தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் மீது திணிக்கப்படும் அடக்குமுறை தான் காரணம். தங்கள் பள்ளியை உயர்ந்தாக காட்ட முயல்வதின் பலன் இவ்வகையான கொலைகள். அரசு தமிழக தனியார் கல்விக்கூடங்களை அரசுடைமையாக்க வேண்டும். கல்வியில் எதற்குப் போட்டி? கற்றுக்கொடுக்க அல்லவா போட்டி வேண்டும்?

    ReplyDelete
  9. The revised change to Grade System from Marks scored will help the intention of Parents trying to push their wards to be First.Without considering CAPACITY & WISH of the Sons & Daughters the parents press for their studies.

    ReplyDelete
  10. A good article, sharing the same thoughts.. but difer from the way u concluded.

    "சிறுவனை நியாயப்படுத்த ஆசிரியையை பழிப்பது போல முடித்திருப்பது சரியில்லை"

    ReplyDelete
  11. தனியார் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கம் .மாநிலத்தில் முதல் மதிப்பெண் பள்ளி வர வேண்டும் .அதை வைத்து வருபவர்களிடம் அதிக பணம் பிடுங்க வேண்டும் என்ற வெறி .தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் இந்தி சமஸ்கிருதம் படிக்க வைக்கும் கொடுமை .தனியார் பள்ளிகளின் கெடுபிடி ,திரைப்படங்களின் வன்முறை ,இவைதான் அந்தச் சிறுவனை கொலைகாரன் ஆக்கியது

    ReplyDelete
  12. 2Rathnavel Natarajan!

    நன்றி.

    @ vijayan!

    உண்மை. மார்க்கை வைத்து ஒரு மாணவனை மதிப்பது, அதுதான் ஒரு மாணவனின் அறிவையும் ஆற்றலையும் தீர்மானிப்பது என்றால் அது கல்வி முறையில் இருக்கும் ஊனமாகவே கருதுகிறேன்.

    @ வித்யாசாகரன் (Vidyasakaran)!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  13. @கபிலன்!

    தவறு நண்பரே. எல்லோரிடமும் உங்கள் அன்பும், கருணையும் செல்லுபடியாகாது.
    இர்ஃபான் ஒரு குழந்தை. அவனிடம் வேறு மாதிரி, பேசியிருந்தால், பழகியிருந்தால் இந்தக் கொடூரம் நடக்காமலிருந்திருக்குமே என்கிற ஆதங்கம்தான்.

    நான் யாரையும் பழிக்கவில்லை. இப்படி நடக்காமலிருக்க என்ன நடந்திருக்க வேண்டும் என யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  14. @vimalavidya !

    உங்கள் கருத்துக்கள் வழிகாட்டுபவை.


    @Swami!
    ஆமாம். நண்பரே. சக மனிதரிடம், அதுவும் ஒரு குழந்தையிடம் நாம் எவ்வளவு கவனமாகவும், அன்பாகவும் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

    அதை இழக்கும் நமது சூழல், வெளி உலகம் எல்லாமும் இந்தக் குற்றத்துக்கு உடந்தையே!

    @தி.தமிழ் இளங்கோ!

    சரிதான். காசு மட்டுமே இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

    ReplyDelete
  15. @கோவை எம் தங்கவேல்!
    //கல்வியில் எதற்குப் போட்டி? கற்றுக்கொடுக்க அல்லவா போட்டி வேண்டும்?//

    ஆஹா... எவ்வலவு அழகாகவும், அர்த்தபூர்வமாகவும் சொல்கிறீர்கள்!

    ReplyDelete
  16. @Veluran !

    ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையான திறமைகளும், ஆற்றல்களும் இருக்கின்றன. அதைக் கண்டுபிடித்து, ஊக்குவித்து, வழிகாட்டுவதே கல்வி முறையாக இருக்க வேண்டும்.நாம் ஒரு அளவுகோலை வைத்துக்கொண்டு, அதற்கேற்றாற்போல் நம் மாணவன் இருக்கிறானா என அளந்து பார்ப்பது, நமது மூடத்தனம்.


    @Karthi !

    இதற்கு பதில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.


    @eraeravi!

    ஆனால் அவன் மட்டுமே குற்றவாளி அல்ல. நீங்களும்,நானும் உள்ளடங்கிய இந்த அமைப்புத்தான் பிரதானமான குற்றவாளி.

    ReplyDelete
  17. சிறந்த பகிர்வு!

    ReplyDelete
  18. மாதவராஜ்,

    உங்கள் கருத்துக்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள், அதில் பிழையில்லை. ஆனால் ஒரு இளஞ்சிறார் குற்றவாளி என்னும் நிலையில் அவரது புகைப்படத்தினை வெளியிடக்கூடாது என்பது தார்மீக நிலை. நீங்கள் படத்துடன் கட்டுரை வெளியிட்டுள்ளீர்கள். படத்தினை நீக்கவும்.

    ReplyDelete
  19. அண்ணா, என்னோட கேள்வி - இன்றைய ஆசிரியர்களுக்கு சகிப்புத் தன்மையும், பொறுமையும் குறைந்து விட்டதா? இதனால் தான் மாணவர்களை அணுகும் முறைகளும் மாறிவிட்டதா? dont Reprimand in public அப்படிங்கற விசயமே மறந்து போச்சா?

    ReplyDelete
  20. @கவனப்பிரியன்!

    நன்றி.


    @வவ்வால்!

    படத்தினை நீக்கிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.


    வினோ!

    இதுதான், இப்படித்தான் என்று தீர்மானங்களுக்கு வந்துவிட முடியாது.ஆசிரியர்களுக்கு கடும் நெருக்கடிகளை கொடுப்பதற்கென்று எவ்வளவோ ஏற்பாடுகள் இருக்கின்றன. சகலத்திலும் காசையும், லாபத்தையும் பார்க்க வைக்கிற இந்த அமைப்புத்தான் முதல் குற்றவாளியென்பேன்.

    ReplyDelete
  21. ஒரு ஆசிரியை வீட்டிலும் பள்ளியிலும் தினமும் தொடர்ந்து வேலை செய்து வருவதால் ஏற்படும் மனப் பளுவை சுமை அதிகமாக இருக்கும் இடத்தில் இறக்கி வைப்பது சாத்தியமானது. அவ்வாறு அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

    மாணவர்களை ஆசிரியர்களுக்கு டீ காபி வாங்க அனுப்புவதும், வேறு சில சில்லறை வேலைகள் செய்ய அனுப்புவதும் நான் மாணவனாக இருந்த காலத்தில் நடந்தவை. உட்படாத சிறுவர்களை தண்டனைக்குள்ளாவது ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது சில மாணவர்கள் குளிர் காய்வதும் உண்டு. ஒரு ஆசிரியர் இன்னொருவரை பாதிப்பு ஏற்படுத்த உபயோகிப்பதும் உண்டு. இல்லா விட்டால் மாணவர்கள் தண்டனைக்குள்ளாவதும் உண்டு.

    வகுப்பில் மற்ற மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர்கள் கண்ணில் தவறுதலாகப் படும் மாணவன் அதிகமாக அதிக காலம் தண்டிக்கப் படுவது என் விஷயத்தில் நடந்தது. இரண்டு மாத காலம் தரையில் உட்கார நேர்ந்தது. நான் பயந்த சுபாவம் உள்ளதால் அமைதியாகி விட்டேன். அது மாதிரி ஏதாவது நடந்து விட்டதா.

    சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை மார்க் poda வில்லை என்றால் மிரட்டுவது உண்டு.

    அனுமானங்களுக்கு உட்படாமல் ஒரு குற்றமாக விசாரித்தால் உண்மை வரலாம். அதை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு மாற்றி அமைத்துக் கொள்ள ஆசிரியர் மாணவ சமுதாயம் தயாரா ?

    ReplyDelete
  22. மாதவராஜ்,

    வணக்கம், தங்கள் புரிதலுக்கு நன்றி! உங்கள் பதிவுகளை அதிகம் படித்தது இல்லை, ஆனால் படித்தவரை அனைத்தும் சிறப்பான ஆக்கங்களே , தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  23. இத்தருனத்தில் ஃபஹீமா ஜஹான் அவர்கள் எழுதிய பின் தங்கிய சிறுமியிடமிருந்து என்ற கவி முக்கியமானது.

    பின் தங்கிய சிறுமியிடமிருந்து...

    மேசைமீது உருண்டோடும் பென்சிலை
    "ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
    என்னுலகத்தைச் சரிசெய்தபின்
    எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
    எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
    உங்களால் முன்வைக்கப் படுகின்ற
    வினாக்களைச் செவியுற்று
    வெகுவாகக் குழம்புகிறேன்
    கரும்பலகையின் இருண்மைக்குள்
    கண்ணெறிந்து தோற்கிறேன்
    நான்,
    பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

    ஆசிரியரே..
    உங்கள் உயர்மட்ட
    அறிவு நிலைகளிலிருந்து
    கீழிறங்கி வந்து
    எனது இருக்கைதனில் அமருங்கள்
    தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
    தூர எறிந்துவிட்டுத்
    திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
    வழிகூட்டிச் செல்லுங்கள்
    வளராப் பிள்ளை நான்

    வகுப்பறையினுள்
    வந்து விழுந்த நட்சத்திரங்கள்
    உங்களைச் சூழவே இருப்பதனால்
    இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
    வீழ்வதேயில்லை
    உம் கிரணங்கள்

    எனது குறைபாடுகளை நீங்கள்
    முன்வைக்கும் வேளை
    தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
    வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
    ஏறமுனைகையில்
    படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
    எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
    புறந்தள்ளிவிட்டு
    எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
    பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்

    நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
    எப்படி உருவாக வேண்டுமென்றோ
    அல்லது
    உங்களைச் சுற்றிவரும்
    ஒரு பிரகாசமான தாரகையாக
    மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை

    கற்றுத் தாருங்களெனக்கு

    கொம்புகளும் விசிறிகளுமாகப்
    பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்
    பெருக்கலும் வகுத்தலுமாக
    இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள்
    வீற்றிருந்தவாறு
    தீராச் சிக்கல் தரும்
    எண்களுக்கும் மத்தியில்
    முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்

    எனக்கான கெளரவத்தையும்
    என் விழிகளுக்கான ஒளியையும்
    கண்டடைந்து கொள்ளவே
    ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்
    எனினும்
    முதுகின் பின்னால் கிடந்த இருளை
    என் முன்னே நடக்கவிட்டுப்
    பயனேதுமற்ற
    பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
    நிமிர முடியாப் பாதைகளினூடாகத்
    தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்

    நீங்களும் ஒரு தேரோட்டி தான்
    விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
    ஆனால்
    மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?

    என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
    தினமும் தண்டனை வழங்கும்
    சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின்
    மன்னித்துக் கொள்ளுங்கள்
    எப்போது மாறப்போகிறீர்கள் -
    நீங்களும் ஒரு ஆசிரியராக ?

    -----------
    2011.02.21
    (நன்றி:கலைமுகம் இதழ் 51)

    ReplyDelete
  24. // தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிட தயாராய் இருக்கிறார்கள்.//

    தண்டனை என்பது அவருடைய தவறை உணர்வதற்கு மட்டுமேயென்றி மற்றவர்களுக்கு அவர் குற்றவாளி என்று விளம்பரப்படுத்த அல்ல.

    நமது ஆசிரியர்கள் பள்ளிகளில் மட்டுமல்ல கல்லூரிகளிலும் கூட ஒரு முதிர்ச்சியடையாத மனோநிலையுடந்தான் செயல்படுகின்றனர். சர்க்கஸ் விலங்குகளை போல் மாணவர்களை நடத்தும் வரை இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் தொடர்வது தவிர்க்க முடியாது.

    இன்றைய தலைமுறைக்கு தன்மான வேகம் அதிகமாக இருக்கிறது அதை பக்குவமான் முறையில் நெறிப்படுத்த யாரும் இங்கில்லை. பல பேர் முன்னிலையில் ஒரு மாணவனின் மதிப்பெண்ணை சொல்லுதென்பது அவனுடைய அந்தரங்கத்தை விளம்பரப்ப்டுத்துவது போல். நான் மாணவனாக இருந்த போதே இதை கடுமையாக வெறுத்திருக்கிறேன். இந்த நாட்டில் பொறியல் மற்றும் மருத்துவம் படித்தால் நல்ல மாணவன் இல்லையென்றால் பொறுக்கி மற்றும் உருப்படாதது என்கிற லோகோ. என்னத்த சொல்ல...

    ReplyDelete
  25. இதில் சற்று கசப்பான ஒரு உண்மை என்னவென்றால் அந்த ஆசிரியை அந்த மாணவனை குறைந்த மதிப்பெண் வாங்குகிறான் என்று கண்டித்தது இந்தி மொழிப்பாடத்தில்..?நாங்கள் தெரியாமல் தான் கேட்கிறோம் அது என்ன வாழ்க்கைக்கு இன்றியமையாத பாடமா கணிதம் அறிவியல் போன்று
    இந்திதானே அது தமிழைதாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இந்தி எளிதில் வராது இந்த விவரத்தைச்சுற்றி இதுவரை யாரும் பேசவில்லை ஏனெனில் இந்திக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து இந்த மேல்தட்டுவர்க்க (பார்ப்பன)ஊடகங்கள் பேசிவந்தநாடகங்கள் அம்பலப்பட்டுவிடும் என்பதால்தான் இதுபற்றி அதிகமாக மூச்சுவிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்

    ReplyDelete

You can comment here