மாதவராஜ் பக்கங்கள் - 39

solitude

 

ம்சி சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு எப்போது வரும்.” என்று தொடர்ந்து பவா செல்லத்துரையோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.  இந்த முறை வம்சி தரப்பில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வரவிருந்த மொத்தம் இருபது புத்தகங்களில் இரு புத்தகங்கள் மட்டுமே கொண்டு வர முடிந்ததாகவும், பிரிண்டிங் பிரஸ்ஸில் எல்லாம் தேங்கிவிட்டதாகவும் வம்சி சார்பில் பவா வருத்தத்தோடு நிலைமையை விளக்கிக்கொண்டு இருந்தார். புத்தகக்கண்காட்சியையொட்டி, மொத்தமாய் புத்தகங்கள் அச்சடிக்க வருவதால் இப்படியொரு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக, “இன்னும் சில தினங்களில் புத்தகம் வந்துவிடும்” என்று பவா சொன்னார். “புத்தக வெளியீடும், பரிசளிப்பு விழாவும்  எங்கு நடத்துவது, எப்போது நடத்துவது?” என்று அடுத்த உரையாடல் ஆரம்பித்தது. வரும் பிப்ரவரி மாதம் 25ம் தேதி, மதுரையில் வைத்து நடத்துவது என்று முடிவாகியிருக்கிறது. இடம், நேரம், பங்கு பெறுவோர் குறித்து ஓரிரு தினங்களில் இறுதி செய்து அறிவித்துவிடலாம் எனவும் தெரிவித்தார்.

 

மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக நண்பர்கள் தொடர்பு கொண்டு விசாரித்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கும் இதையே சொல்லிக்கொள்கிறேன். அறிவித்தபடி சென்னை புத்தகக்கண்காட்சிக்கு புத்தகம் கொண்டு வர இயலாமைக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.  மேற்கொண்டு விபரங்கள் தெரிந்துகொள்ள bavachelladurai@gmail.com மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 

லைப்பக்கம் வந்தே ரொம்ப நாளாகிவிட்டது. பல்வேறு வேலைகள். ஆனாலும்,  “கூடங்குளம் அணு உலை பற்றி ஏன் நீங்கள் எழுதவில்லை?”,  “முல்லைப் பெரியாறு விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?” என்று விடாமல் சில நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். நாட்டில் என் கருத்தையும் முக்கியமாகக் கருதி தெரிந்துகொள்ள விரும்பும் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை! Smile

 

போன வாரம் காரைக்குடி அருகே எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்தின் மகள் திருமணம் நடந்தது. கல்கத்தாவிலிருந்து அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.திலிப்குமார் முகர்ஜி வந்திருந்தார். மதிய உணவருந்தும்போது அவர் அருகே நான் உட்கார்ந்திருந்தேன். விதவிதமான கூட்டு வகைகளும், பலகாரங்களும் வைத்தனர்.  தோழர்.முகர்ஜி எதையும் தொடாமல்  அதிசயம் போல பார்த்துக்கொண்டு இருந்தார்.  ஜாக்கிரதையாக பருப்பு சாதத்தை மட்டும் கொஞ்சமாய் எடுத்து ருசி பார்த்தார்.  அவருக்குச் சொல்லித்தர எனக்கும் தெரியவில்லை. நானும் ஒவ்வொன்றாக பரிசோதித்துக் கொண்டுதானிருந்தேன். எது என்னது என்று தெரியவில்லை. எல்லாம் சுவையாக இருந்தன. வேட்டியை மடித்துக் கட்டி பரபரப்பாக அங்குமிங்கும் பரிமாறிக்கொண்டு இருந்த ஒருவர் எங்கள் அருகே வந்தார். மெல்ல என்னிடம்,   “இந்த ஐயாவுக்கு எந்த ஊரு?” என்றார். சொன்னேன். சட்டென ஒரு பலகாரத்தை காண்பித்து “சார் திஸ் இஸ் லைக் அல்வா. சுவீட்” என ஒன்றைக் காண்பித்தார்.   “திஸ் அயிட்டம் ப்ரிஞ்சால் ரோஸ்ட். வெரி டேஸ்ட்” என சுட்டினார். “யூ லைக் வெஜிடபிள்  பிரியாணி?” எனக் கேட்டார். தூரத்தில் நின்றிருந்த ஒருவனைப் பார்த்து  “ரெண்டு டம்ளர் பாயாசம்” எனக் கத்தினார் . சாப்பிட்டு முடிப்பதற்குள் ஒரு பத்து தடவையாவது தோழர்.முகர்ஜியை வந்து  வந்து கவனித்துக் கொண்டார்.  முகர்ஜியும் “நைஸ், நைஸ்” என்று சொல்லி அந்த மனிதரிடம் மிகுந்த சினேகமாகிப் போனார். மொழியைத் தாண்டிய மனித  உறவின் ருசி அது.

 

மீபத்தில் எங்கள் வங்கியிலிருந்து ரிடையரான ஒரு மேலாளர், கிளைக்கு வந்து ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு சாத்தூர்தான் சொந்த ஊர். பார்த்ததும் அவரை உள்ளே அழைத்து பேசிக்கொண்டு இருந்தோம்.  இடையிடையே “கஸ்டமரைக் கவனியுங்க. நான் இங்க உட்கார்ந்திருக்கேன்” என்று சொல்லிக் கொண்டார். நேரம் காலம் இல்லாமல் வங்கியே கதியென்று இருந்தவர். முகம் எதையோ இழந்தது போலிருந்தது.  மதியமானதும் கிளம்பினார். போகும்போது எங்கள் கிளை மேலாளரிடம், “சார் தினமும் ஒரு இரண்டு மணிநேரம் இப்படி வந்து ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமா. வீட்டில் நேரமே போக மாட்டேங்குது” என்றார்.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அலுவலகத்துக்கு வெளியே ஒரு உலகம் இருக்கு, அதை நேசிப்பது சுவாசிப்பது மிகவும் அவசியம். சனி ஞாயிறு அலுவலகத்தைத் தவிர மற்ற வற்றில் ஈடுபாடு செலுத்துவது நன்றாக இருக்கும்.

    நாமும் எப்போதும் இணையத்திலேயே இருக்கோம். வெளி உலகத்தை சுவாசிப்பது குறையாமல் பார்த்து கொள்வது எனக்கு மற்றும் எல்லோருக்கும் பிற்காலத்தில் உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. “சார் தினமும் ஒரு இரண்டு மணிநேரம் இப்படி வந்து ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமா. வீட்டில் நேரமே போக மாட்டேங்குது”

    மனதை நெகிழ வைக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தொழிற்சங்க வேலைகளில் இருக்கும் பல தோழர்கள் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை தெரிந்து கொள்வதுடன் நில்லாமல் தமிழ் மற்றும் உலக இலக்கியங்களைப் படிக்கவும் பரிந்துரைக்கவும் வேண்டும். அலுவலகத்துக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது; உலகமும் இருக்கிறது என்ற உண்மையை அவருக்கு புரியச் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!