"நான் ஏராளமான இலக்கியப் பரிசுகள் வாங்கிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப்பூச்சியைப் போல அற்பாயுள் படைத்த பரிசுகள். ஆனால் நான் சம்பாத்தியம் செய்த பரிசு மகத்தானது. அந்தப் பரிசை பலர் ஏளனம் செய்கிறார்கள். எனினும் அதை அவர்களால் அடைய முடியாது. கலைப்பணி வேள்வியாலும் சொந்தத் தேடுதலாலும் எழுத்து மணிகளைக் கோர்த்து ஜீவ கீதமிசைப்பதாலும் நான் மக்களின் கவிஞனாக உருவானேன். அதுதான் நான் பெற்ற மிகச் சிறப்பான அரும்பெரும் பரிசாகும். பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட என்னுடைய வெவ்வேறு காவியப் படைப்புகளை விட, என்னுடைய கவிதைகளின் மறுசீரமைப்பும் விரிவுரைகளும் உட்கொண்ட அனைத்து நூல்களையும் விட மகத்தானதும் இந்தப் பரிசே ஆகும். ஆம், எனக்குரிய பரிசு வாழ்க்கையின் சில நிமிடங்கள்தாம். அதாவது, ‘லோட்டாவின்’ பாதாளத்திலிருந்து நைட்ரேட் சுரங்கத்திலிருந்து அல்லது செம்புக் கம்பிக்கிடையிலிருந்து, அதுவுமில்லாவிட்டால் அசல் நரகத்திலிருந்தே முழங்காலில் ஊர்ந்தவாறு மேலே வந்து, விகாரமான முகமும், கலங்கிச் சிவந்த கண்களும், பம்பாஸின் வாடையுடன் ஒவ்வொருவராக உலோகத்தண்டு போன்ற கரங்களை நீட்டி, உங்களை எங்களுக்கு முன்னரே தெரியும் உடன்பிறப்பே, என்று கூறும் அரிய நிமிடங்கள்!”
பாப்லோ நெருடாவின் ஓளிபொருந்திய இந்த வார்த்தைகள் காலவெளியில் இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கின்றன. முற்றிலுமாக மக்களிடம் தன்னை கரைத்துக்கொள்கிற ஒரு கலைஞனின், எழுத்தாளனின் குரலில் இருக்கும் வேட்கை அசாதாரணமானது. அவனுக்குரிய அங்கீகாரத்தையும் , அடையாளத்தையும் பூவுலகின் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்திகளாலும் தந்துவிட முடியாது. அவன் அதையெல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ தாண்டிப் போய்க்கொண்டே இருப்பான்.
இது ஒரு அடிப்படையான விஷயம். ஒரு கலைஞைனுக்கும், எழுத்தாளனுக்கும் இந்த நேர்மையும், துணிவும் எப்போதும் வேண்டும். படைப்பை மட்டுமே முன்வைத்து இயங்குகிறவர்களுக்கும், தன் படைப்பின் மீது நம்பிக்கை உள்ளவருக்கும் மட்டுமே இது சாத்தியமாகும். சு.வெங்கடேசன் நிச்சயமாய் பாப்லோ நெரூடா இல்லை. ஆனால் ஒரு இடதுசாரி எழுத்தாளனாக தன்னை அறிவித்துக்கொள்கிற அவரிடம் இந்த நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். ஆனால் சாகித்திய அகாதமி விருது கிடைத்ததும், “இந்நாவலை ஆயிரம் பக்கம் அபத்தம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் காலம் இப்போது அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டது” என்று எஸ்.ராமகிருஷ்ணனை ‘ஜஸ்ட் லைக்’ தாண்ட முடியாமல் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். சாகித்திய அகாதமி விருதுதான் இறுதித் தீர்ப்பா?
சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது போன்றவையெல்லாம் இந்திய அரசின் விருதுகளே. முதலாளித்துவ சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கிற, அதிகாரவர்க்கத்தின் பார்வைகள் கொண்ட ஒரு அரசே இந்திய அரசு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உழைக்கும் மக்களுக்கு நிச்சயமாக எதிரான அரசு இது. லஞ்சத்திலும், ஊழலிலும் திளைக்கிற ஒரு அரசுதான் இது. இப்படிப்பட்ட ஒரு அரசின் கைகளில் இருந்து நீட்டப்படும் விருதுதான் தனக்கும், தன் எழுத்துக்கும் கிடைத்த உயர்ந்தபட்ச அங்கீகாரம் என இடதுசாரிக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் பெருமிதம் கொள்ள மாட்டார்கள், மார்தட்டிக்கொள்ள மாட்டார்கள். அவைகள் குறித்து பிரமைகளிலும், மயக்கங்களிலும் முழ்கிட மாட்டார்கள். அப்படி ஆகிறவர்கள் நிச்சயம் இடதுசாரி எழுத்தாளர்களாக இருக்க மாட்டார்கள்.
அதேவேளையில் இந்த விருதுகளை ஒரேயடியாக தட்டிக்கழிப்பதும், புறக்கணிப்பதும் சரியில்லை. இந்த அரசுகள் தங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை அல்லது நல்ல அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் முகமாக தவிர்க்க இயலாதபடிக்கு எப்போதாவது தகுதிவாய்ந்த படைப்புகளுக்கு விருதுகள் கொடுத்து கண்துடைப்பு செய்கின்றன. இதனை நோபல் பரிசிலிருந்து ராஜராஜன் விருதுவரை சுட்டிக்காட்டலாம். இந்த அரசியலை இடதுசாரி இயக்கங்கங்களும், அமைப்புகளும் உணர்ந்தே இருக்கின்றன. ஆனாலும் இந்த அழுகிப்போன அமைப்புக்குள்ளே இருந்துகொண்டுதான் அமைப்புக்கு எதிராக போராடவும் வேண்டியிருக்கிறது. எனவே இந்த விருதுகளையும் முற்போக்கு இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாக்கி, தங்கள் படைப்புகளை அதிகமாக மக்களிடம் கொண்டு செல்ல எத்தனிக்கின்றன. விருதைக் காட்டிலும் படைப்புக்கும், அரசைக் காட்டிலும் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதே நோக்கமாகவும், நடைமுறை தந்திரமாகவும் இருக்கிறது. சாகித்திய அகாதமி விருது பெற்றதையொட்டி தொடர்ந்து விழாக்கள் நடத்தப்படுவதை நான் இப்படித்தான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். “ஆனால் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த போது இப்படியெல்லாம் விழாக்கள் நடத்தவில்லையே ஏன்?” என்று பெத்தானியாபுரம் முருகானந்தம் கேட்கிற போது, ‘தவளையை விழுங்கிய பாம்பின் உப்பிய பகுதி தட்டுப்படுகிறதே எல்லோருக்குள்ளும்’ என்னும் சு.வெங்கடேசனின் கவிதை வரிகளே நினைவுக்கு வந்து பதில்சொல்ல முடியாமல் வழி மறிக்கின்றன.
சாகித்திய அகாதமி விருது வழங்கப்படும் போதெல்லாம் அதுகுறித்து சர்ச்சைகளும், சச்சரவுகளும் எழுந்துகொண்டே இருந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு பக்கம் அது. 1975ல் தண்டாயுதம் என்பவர் எழுதிய ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ எனும் நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் கிருஷ்ணன்நம்பி அதுகுறித்து எழுதியதை இப்போது படித்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. “தண்டாயுதபாணியின் த.த.இலக்கியம் படிக்க விரும்பி, ஒரு நண்பரிடம் இரவல் வாங்கி வந்தேன். (அடிக்கடி நான் எதாவது தவறுகள் செய்துகொண்டே இருக்கிறேன்) என் ஜாதகப்படி இப்போது டயம் சரியில்லை. டாக்டர் தண்டாயுதத்தின் ஜாதகம் ஜெகஜ்ஜோதி. சாகித்திய அகாதமி நடத்திய லாட்டரிக் குலுக்கலில் ஐயாயிரம் பரிசு பெற்றிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்”.
சாகித்திய அகாதமியின் விருது அறிவிப்பு இப்படி கடும் கிண்டலுக்கும், கேலிக்கும் அந்தக் காலத்தில் இருந்தே ஆளாகிக்கொண்டு இருக்கிறது. அதன் தேர்வுமுறையில் வெளிப்படைத் தன்மையும், தெளிவான வரையறைகளும் இல்லாததே இதற்கு காரணமாகிறது. அதன் உள்ளரசியல் குறித்து அவரவர்க்கான நிலைபாடுகளிலிருந்து கற்பிதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆத்திரங்களும், பகைமையும் சுமந்து அவை கனத்துப் போகின்றன. விமர்சனங்களுக்கு ஒரு உள்நோக்கம் கற்பிக்கிற மனோநிலை உருவாகி விடுகிறது. அகாதமி விருதுக்கான போட்டியில் எந்த நாவல்கள் எல்லாம் தகுதி பெற்றிருக்கின்றன, ஒவ்வொரு சுற்றுக்கும் எவையெல்லாம் முன்னேறியிருக்கின்றன, இறுதியாக ஏன் இந்த நாவல் விருது பெறுகிறது என்கிற குறிப்புகளும் முறையாகத் தெரிவிக்கப்படுமானால் தேவையற்ற சர்ச்சைகள் குறைய வாய்ப்புண்டு. அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும் அற்று திறந்த மனதோடு கருத்துக்கள் வெளிவரக்கூடும்.
இப்படியான பின்னணியில்தான் காவல்கோட்டத்திற்கான விருதும், விழாக்களும் விவாதங்களாக உருவெடுத்திருக்கின்றன. பெத்தனியாபுரம் முருகானந்தத்தை இப்படி இணையத்தில் பதிவிடவும் வைத்திருக்கிறது. படைப்பை முன்னிறுத்தி பேச ஆரம்பித்து கரசேவைக்கு செங்கல் பூஜை நடத்தியவர், தனக்குப் போட்டியாக கருதுபவர்களை இயக்கத்தில் இருந்து ஒரங்கட்டியவர், எம்.பியாக நிற்பதற்கு இப்போதே திட்டமிடுபவர் என படைப்பாளி மீது காரமாக கொட்டித்தீர்க்க வைத்திருக்கிறது. அவையெல்லாம் இங்கு தேவையற்ற விவாதப்பொருள்கள். அதனை ஆராய்வது நமக்கு வேலையுமில்லை. அதேவேளையில், காவல் கோட்டம் என்ற நாவல் குறித்து, அதன் உள்ளடக்கம் குறித்து, அதன் அரசியல் குறித்து பெத்தானியபுரம் முருகானந்தம் சில விஷயங்களை முன்வைத்திருக்கிறார். அந்த நாவல் எழுதப்பட்ட விதத்தில் அடுத்தவரின் உழைப்பை சு.வெங்கடேசன் திருடியிருக்கிறார் என்று குற்றமும் சுமத்தியிருக்கிறார். அவையெல்லாம் விவாதிக்க வேண்டியவையே.
எழுத்தாளர் பொன்னீலனுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோது அப்போது எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராய் இருந்த அருணன் “சாகித்திய அகாதமி விருது பெற பொன்னீலன் தகுதியானவர்தான். அதனால்தான் அவர் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தோம். ஆனால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் ‘புதிய தரிசனங்கள்’ நாவல்தான் பிரச்சினைக்குரியது. மார்க்சியத்தின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.” என்று விமர்சனங்களை வைத்தார். அது ஒரு ஆரோக்கியமான உரையாடலாக இருந்தாலும், “கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த ஒருவருக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்ததைத் தாங்க முடியாமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் பொருமுகின்றனர் ” என்று சொல்லியவர்களும் உண்டு. இது மேற்கொண்டு விவாதங்கள் செய்ய தயாரில்லாமல், அடுத்தவரின் வாயடைத்து விடுகிற ஒரு மோசமான வித்தை. அதையே இப்போது நாமும் கையாளக்கூடாது.
விருது பெற்றதாலேயே ஒரு நாவல் விவாதங்களுக்கு அப்பாற்பட்டதாகிவிடாது.
(இன்னும் சொல்வேன்)
மிகப் பிரமாதம் தோழர். அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல பதிவு தான் ஆனால் நம் தோழர்கள் ஜனநாயகம் என்றால் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டு அமைதியாக, மெளனமாக இருப்பது என்று அர்த்தபடுத்தி வைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநம் தோழர்கள் பெத்தானியாபுரம் முருகானந்தத்தின் கடிதத்தை படிக்க காட்டிய ஆர்வமே அவர்களின் மனநிலையை பிரதிபலித்தது ஆனால் தங்களின் குரல் வழியே பேச பயப்படுகிறார்கள், எது அவர்களை தடுக்கிறது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினரை இந்து முன்னணியினர் தாக்கியது பற்றியும் இரண்டு முறை பின்னூட்டமிட்டு ஒரு முறை முகநூலில் பகிர்ந்தால் தான் எழுதுவீர்களா? அது சரி! நீங்களாவது எழுதுவீர்கள்! உங்கள் கட்சி அதைக்கூடச் செய்யாது!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு@பாலு சத்யா!
பதிலளிநீக்குநன்றி.
@Nellai Xavier!
பதிலளிநீக்குநண்பரே, தாங்கள் காட்டிய சுட்டியை ஒட்டி ஒரு உரையாடல் எழுந்திருக்கிறது. பிறகென்ன? தோழர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் எனத் தெரியவில்லை.திரும்பவும் சொல்கிறேன்.இந்த நாவல் குறித்த சர்ச்சையத் தாண்டி, வேறு ஒரு குரல் உங்களிடமிருந்து ஓலிக்கிறது. அது சரியில்லை.
@மாநிலத்தமிழ்ச்சங்கம்!
பதிலளிநீக்குநான் பேசவில்லை. ஆனால் கட்சி மிகத் தெளிவாக கூடன்குளம், முல்லைப் பெரியாறு குறித்து தொடந்து பேசிக்கொண்டு இருக்கிறது. அதையெல்லாம் படிப்பதும், அறிவதும் உங்களுக்குக் கிடையாது போலும்.
அன்புள்ள தமிழ்ச்செல்வன்!
பதிலளிநீக்குதங்கள் பின்னூட்டம் மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது எனக்கும்.
பெத்தானியபுரம் முருகானந்தம் யாரென்பது எனக்கு முக்கியமல்ல. அதுகுறித்த தகவல்களுக்கு, ஆராய்ச்சிகளுக்கும் நான் போகவில்லை. அவர் எழுதிய விஷயங்கள் இணையம் முழுவதும் உலா வருகிறது. பலர் என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். பத்திரிகையாளர் ஞானி, கல்கி வார இதழில் அதுபற்றிக் குறிப்பிடுகிறார். அதுகுறித்துப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக உனர்ந்தேன். பொதுவாக தங்களைப் பற்றி சந்தேகங்களோ, குற்றச்சாட்டுகளோ அல்லது விமர்சனங்களோ வந்தால் அதில் உண்மை இருப்பின் ஒப்புக்கொள்ளவும், அதில் உள்நோக்கம் இருந்தால் அம்பலப்படுத்தவும், அதில் அவதூறுகள் இருந்தால் நிராகரிக்கிறோம் என்று பகிரங்கமாக சொல்கிற துணிவும் நேர்மையும் இடதுசாரிகளுக்கு மட்டுமே உண்டு. அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியப்படுத்துவது, புறக்கணிப்பது அல்லது இருட்டடிப்பு செய்வது முதலாளித்துவ தந்திரமாகவே இருக்கும். அந்த வகையில்தான் நான் அதுகுறித்து பேச வேண்டி நேர்ந்தது. இதை அங்கீகாரம் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் பேசியதால்தான் அதற்கு அங்கீகாரம் கிடைத்ததா?
விருது எப்படி வாங்கினார் போன்றவை அவரவர்க்கான அனுமானங்கள். அவதூறுகள். அதுகுறித்தெல்லாம் நான் பேசவில்லை. பொதுவாக இந்த நாவல் குறித்த சர்ச்சை ஆரம்பித்த இடத்திலிருந்து எனக்குத் தெரிந்தவைகளை நான் சொல்கிறேன். விருது குறித்த சில அபிப்பிராயங்களை முன்வைத்திருக்கிறேன். பெத்தானியாபுரம் முருகானந்தம் போன்றவர்களுக்கு பதில் சொல்வது என் நோக்கம் அல்ல. அவரது வலைப்பக்கத்தையும், மின்னஞ்சலையும் படித்த ஏராளமானவர்களுக்கு சில தெளிவு ஏற்படுத்தும் என்றுதான் நினைக்கிறேன்.
மேலாண்மை பொன்னுச்சாமிக்கு விழாக்கள் நடத்தப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு ‘நீங்களுமா?’ என்றிருக்கிறீர்கள். மேலாண்மைப் பொன்னுச்சாமி அவர்களுக்கும் சு.வெங்கடேசனைப்போல விழாக்கள் நடத்தப்பட்டதாக நான் இதற்குமுன் அறிய நேரவில்லை. அப்படியிருப்பின், என் கருத்துக்களை நான் திருத்திக் கொள்கிறேன்.
இதுவரைக்கும், காவல்கோட்டம் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் யாவுமே தனிநபர் தாக்குதல் என்று தாங்கள் வந்திருக்கும் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது தோழரே! ‘ஒரு ஆரோக்கியமான சூழல் இலக்கிய உலகில் வரவே வராதா?’ என்னும் உங்கள் வார்த்தைகளையே உச்சரிக்கிறேன். நாம் இப்படிப் பார்க்கக்கூடாது என்பதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ஒற்றை வரியில் நிராகரிக்கக் கூடாது என்றுதான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நம்மீது விமர்சனங்கள் வைப்பவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை நாமும் கொள்ள வேண்டாம் என்பதுதான் என் குரலே. இங்குதான் தவறுகள் நடக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சு.வெ மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என்றுதான் அவரை விருதுநகர் மாநில மாநாட்டுக்கு அழைக்கவில்லையா? அந்த மண்ணின் மைந்தராக இருந்து, அப்போது தாகூர் விருது பெற்றிருந்த அவரை எழுத்தாளர் சங்கம் தனது மேடையில் அழைத்து கௌரவிக்காமல் போனதற்கு வேறென்ன காரணம்?
//அமைப்பைத் தாண்டியும் ஒரு நியாயவாதியாக இருக்க எனக்கும் ஆசைதான்.// இதற்கு என்ன அர்த்தம் என்று முதலில் விளங்கவில்லை. பிறகு விளங்குகிற அர்த்தம் நன்றாக இல்லை.
நான் காவல்கோட்டத்தை படித்துவிட்டேன் என்பதையும் அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த பதிவு நாவல்பற்றிய எனது பார்வைதான்.
அது என்ன.....‘எப்போதும் மாறாத அன்புடன்’....? ஏன் இப்படியெல்லாம் தமிழ்?
அன்புடன்
மாதவராஜ்
//Source material எல்லாம் இலக்கியமாகாது.அதைப் பயன்படுத்துவது திருட்டுமாகாது என்கிற எளிய உண்மை கூட உரைக்காத அளவுக்கு பெத்தானியாபுரக் கூட்டணியாருக்கு பகை உணர்வு முற்றிப்போயிருக்கிறது.//
பதிலளிநீக்குவரலாறு என்று ஒன்றை வியாபாரம் செய்யும் போது ஆதார நூலகளை குறிப்பிடுவது.
சமீபத்தில் வெளிவந்துள்ள அஞ்ஞாடி நாவலை யாராவது வாங்கி தோழர்களுக்கு அனுப்புங்கப்பா அதில் மிக முறையாக அவர் நாவலின் இறுதி பகுதியில் அவைகளை குறுப்பிட்டுள்ளார். இவர்கள் என்னதான் பத்தி பத்தியாக எழுதினாலும் இந்த படைப்பு நேர்மையாக உருவானதல்ல என்பதை மறைக்க இயலாது.
//காவல் கோட்டத்தை படித்து யாருமே(நீங்கள் உட்பட) எழுதவில்லை என்பதை நான் பார்க்கிறேன்//
பதிலளிநீக்குதமிழ்செல்சன் சார் அவர்களுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை.
வ.கிதா, வெங்கடாசலபதி அவர்களும் மிக அழுத்தமாக விமர்சனங்களை எழுதியிருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய படைப்பு சார்ந்த விமர்சனங்களுக்கு பதில் இல்லை.
அதை விட //Source material எல்லாம் இலக்கியமாகாது// இதன் அர்த்தம் என்ன, களவை நியாய படுதும் முயற்சி தவிர இது வேறு இல்லை.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினரை இந்து முன்னணியினர் தாக்கியது பற்றி// என்று நான் தெளிவாகக் குறிப்பிட்டும் //கட்சி மிகத் தெளிவாக கூடன்குளம், முல்லைப் பெரியாறு குறித்து தொடந்து பேசிக்கொண்டு இருக்கிறது. // என்று மிகத் திறமையாகத் திசை மாறி நியாயம் கற்பிப்பது போல் விடை கூறியிருக்கிறீர்கள். இந்து முன்னணியினர் தாக்கியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எதையும் நான் ஊடகங்களில் காண முடியவில்லை; செய்திகளில் கேட்கவும் இல்லை. இதைப்பற்றி உங்களுடைய மனச்சான்றே விடை சொல்லட்டும்.
பதிலளிநீக்குஅன்புள்ள மாது,
பதிலளிநீக்குஎன் வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
இதற்குமேல் ஒன்றும் எழுத விருப்பமில்லை.நாவலைப்படித்து எழுதப்போவதாகச் சொன்னது மகிழ்ச்சியளிக்கிறது.
அன்புடன்
தமிழ்ச்செல்வன்
Nellai Xavier !
பதிலளிநீக்கு////Source material எல்லாம் இலக்கியமாகாது.அதைப் பயன்படுத்துவது திருட்டுமாகாது//
உண்மைதான்.
ஆனால் source material குறித்த தகவல்களை நிச்சயம் எவ்வளவு பெரிய பட்டியலாயிருந்தாலும், பின்னிணைப்பாக கொடுத்திருக்க வேண்டும். முக்கியமாக காவல்கோட்டத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். விளக்கமாக எனது நாவல் குறித்த விமர்சனத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
Janarthanan Shanmugan!
பதிலளிநீக்கு//வ.கிதா, வெங்கடாசலபதி அவர்களும் மிக அழுத்தமாக விமர்சனங்களை எழுதியிருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய படைப்பு சார்ந்த விமர்சனங்களுக்கு பதில் இல்லை.//
இதில் பதிலெல்லாம் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.விமர்சனங்கள் விமர்சனங்களாக இருந்தாலே போதுமானது.அவை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே.அதன் அளவில் மதிப்பளிப்பதுதான் நாகரீகம். அவரவர்களுக்கென்று பார்வையும், கருத்துக்களும் உண்டு, என்பதை ஒப்புக்கொண்டாலே போதும். ‘தனிமனித தாக்குதல்’ என மொத்தமாக விமர்சனங்கள் அடைக்கப்படுவதுதான் சரியல்ல.
மாநிலத்தமிழ்ச்சங்கம்!
பதிலளிநீக்குஇதுகுறித்த சி.பி.எம்மின் கண்டனத்தை தீக்கதிரில் படித்ததாக ஞாபகம்.நினைவிலிருந்துதான் சொல்கிறேன். ஆதாரங்கள் இருக்குமாவென பார்க்கிறேன். நிச்சயம் கண்டித்திருக்கும் என நம்பிக்கை இருக்கிறது.
அன்புள்ள தமிழ்!
பதிலளிநீக்குஐயோ, ஒரு பிரச்சினையுமில்லை தோழர். என்ன இதெல்லாம்...? :-)))))
உங்களுடைய மறுமொழி கண்டேன். இணையத்தில் தேடிய வரை தாங்கள் குறிப்பிடும் தீக்கதிரின் செய்தி தென்படவில்லை. உரிய இணைப்போ சான்றுகளோ இருந்தால் தெரியப்படுத்துங்கள். முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்த செய்தியைக் கீழே தங்களுடைய மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். கண்டு தவறாயின் உரிய தரவுகளுடன் திருத்திட வேண்டுகிறேன். //Thiru Yo//ஜெய்தாப்பூர் உலைக்காக இப்போதுதான் நில எடுப்பு தொடங்கி இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள், பிறமக்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த மாற்று வழியும் சொல்லப்படவில்லை. அதனால், ஜெய்தாப்பூர் அணுஉலைத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். கூடங்குளத்தைப் பொறுத்தவரையில், நிலஎடுப்பு முடிந்துவிட்டது. இங்கு அமையவுள்ள வி.வி.இ.ஆர். வகை உலை, ஐரோப்பாவில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.// - சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
பதிலளிநீக்குஇன்று, கூடங்குளத்தில் நிலம் கையகப்படுத்தியுள்ளது முடிவுற்றதை காரணமாக்குகிறது சிபிஎம் கட்சி. ஆனால் கூடங்குளம் அணு உலைகள் திட்டத்தை இந்திய அரசு அறிவித்த 1980களில் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ரசியாவின் ஒப்பந்தம் ஆனதால் அது குறித்த எந்த கேள்வியையும் சிபிஎம் எழுப்பவும் இல்லை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அது ஆராயவும் இல்லை. அப்போது உண்மையற்ற தகவல்களை பரப்பி அணு உலையை எதிர்த்த மக்கள் இயக்கங்களை குழப்புகிற வேலையில் சிபிஎம் அமைப்புகள் ஈடுப்பட்டன. ஐரோப்பாவில் பல நாடுகள் அணு உலையை கைவிட முடிவெடுத்துள்ள தகவல் இன்னமும் சிபிஎம் பொலிட்பீரோ தோழர்களுக்கு வந்து சேரவில்லை போல.
#புரட்டும் புரட்சியும்//