ஊழலை ஒழித்து, சமூகத்தை சுத்தப்படுத்தும் படங்களை எடுக்கிற இயக்குனர் ஷங்கருக்கு இன்னொரு கதாநாயகர் கிடைத்துவிட்டார். அவரைப் பார்த்து, எல்லாம் வல்ல அரசே நடுநடுங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரைச் சுற்றி காமிராக்களைத் தூக்கியவாறு முண்டியடித்துக் கிடக்கின்றன ஊடகங்கள். இந்த தேசத்தின் 99 சதவீதம் மக்களுக்கு அவர் யார், அவர் என்ன செய்கிறார், அவரது கொள்கைகள் என்ன என்று தெரியாமல் இருக்கிறபோது, தேசத்தின் பிரதமர் முதற்கொண்டு இந்த யோகா குரு ராம்தேவைப் பார்த்து பதறுவது விசித்திரமாயிருக்கிறது.
இரண்டு நாள் யோகா பயிற்சி ஒன்றிற்காக மதுரைக்கு சென்று வந்தார் நண்பர் ராமு. பார்க்கிறவர்களிடமெல்லாம், அந்த அனுபவங்களை ‘ஆஹா, ஓஹோவென’ பேசிக்கொண்டேயிருந்தார். என்னிடமும் சொன்னார். நான் வழக்கம்போல் முதலில் ஆர்வம் காட்டவில்லை. நடத்திய குருவின் பெயர் எதோ ‘சத்குரு’ என்று சொன்னதாக ஞாபகம். ஆயிரம் ருபாய் கட்டணம் என்றபோது, அதிகமாகத் தெரிந்தது. கேட்டேன். “இதச் சொல்றீங்க. ஆயிரம் ருபாய் கொடுத்தாலும் நமக்கு பின்னால்தான் வரிசை. பத்தாயிரம் கொடுக்கிறவர்களுக்கு முன் வரிசை. எப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் வருவார்கள் தெரியுமா? ஒரே கார்களாய்த்தான் வெளியே நிற்கும்.” என்று நிறுத்தினார். பெரிய பெரிய போஸ்ட்ல இருக்குறவங்க, பிஸினஸ்மேன் எல்லாம் வருவார்கள். ஆனாலும் அவர்களுக்கு எந்த தனிப்பட்ட சலுகையும் கிடையாது. அவர்களும் எல்லோர் போலவும் தரையில்தான் உட்கார வேண்டும். தாமதமாக வந்தால் மொத்த மைதானத்தையும் இருமுறை சுற்றி வர வேண்டும். அங்கு டிஸிப்ளின்தான் முக்கியம். ...” இப்படி தனக்கே புல்லரித்துக்கொண்டு சொல்லிக்கொண்டேயிருந்தார்.
அப்படி என்ன சொல்லிக்கொடுப்பார்கள் என்று கேட்கிறபோது, பயிற்சிதான் என்றார். என்ன பயிற்சி என்றபோது, “அடுத்தமுறை நீங்களும் வாங்க. நேரில் பாருங்க. உடம்பும், மனசும் புதுசான மாதிரி இருக்கும். தொடர்ந்து அந்த பயிற்சிகளை விடாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் பலன் இருக்கும். எனக்கு இந்த முட்டு வலித்துக்கொண்டே இருந்தது ரொம்ப நாளாய். இப்போது ஒரு பிரச்சினையுமில்லை.” என்றார்.
“நீங்க நினைக்கிறது மாதிரி இல்லை” என்று நான் நினைத்துக்கொள்ளாததையெல்லாம் அவரே தத்து எடுத்துக்கொண்டு ராமு தொடர்ந்தார். “அவருக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிகிறது! உலகத்தில் நடக்கிற விஷயங்களையெல்லாம், மனிதர் அந்தந்த இடத்துக்குப் பொருத்தமா வகுப்பில் பேசுகிறார். சிரிக்கவே மாட்டார். நம்மையெல்லாம் சிரிக்க வைக்கிறார். இந்த அரசியல்வாதிகளைக் கடுமையா பிடித்துச் சாடுகிறார். நம்மைப் பிடித்த பிசாசுகள் என்று சொல்கிறார். எல்லா அநியாயங்களுக்கும் அவர்களே காரணமாயிருக்கின்றனர் என்கிறார். அவர்கள் திருந்தினால் நாடே திருந்தும் என்கிறார். சாமியார் மாதிரி இருக்கிறார், ஆனால் இவ்வளவு நாட்டு நடப்புகளைப் பேசுகிறாரே என ஆச்சரியமாக இருந்தது” என்றார். நான் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
இதுபோன்று பல நகரங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டு இருப்பதையும், அங்கங்கு இதுபோன்ற ‘சத்குரு’க்கள் கிளம்பியிருப்பதையும் சாதாரண மக்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கு பெரும்பாடாய் இருக்கிறது. நோய் நொடி என்று வந்தால், அருகிலிருக்கிற ஒரு டாக்டரைப் பார்த்து, ஊசி மருந்துகளை வாங்கிப் போட்டுக்கொண்டு, படுத்து எழுந்திரிக்கின்றனர். டீக்கடைகளில் பேப்பர் படித்து அரசியல் பேசி, போய்க்கொண்டு இருக்கின்றனர். நின்று நிதானமாய் இதையெல்லாம் அறிவதற்கு நேரமுமில்லை. வாழ்க்கையுமில்லை. அவர்களை அப்புறப்படுத்திய மைதானங்களில், ஆரோக்கியத்திற்காகவும், தனிமனித ஒழுக்கத்திற்காகவும் தாடிவாலாக்களான இந்த ரிஷிகளும், சத்குருக்களும் , ஆனந்தாக்களும் அவதரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராமுக்கள் வசியம் செய்யப்படுகின்றனர்.
இந்த ராமுக்கள் யார்? பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் அப்படியே கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் தெரு வழியே ஒடுகிறவர்கள். தனக்கு எல்லாம் தெரியும் என நம்புகிறவர்கள். அவரை விட ஒருத்தருக்கு ஒன்று தெரியும் என ஏற்றுக்கொண்டால், அவரை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடுகிறவர்கள். தனிமனிதர்கள் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என பகுத்தறியும் சிந்தனையற்று உறுதியாய் இருப்பவர்கள். எந்நேரமும் தன்னைப் பற்றியும், தன் வாழ்க்கைப் பற்றியும் நினைப்பவர்கள். அடுத்தவர்களின் குற்றங்களைக் கண்டு பொருமும் இவர்கள், தங்களிடமும் அதே கோளாறுகள் இருப்பதை அறியாதவர்கள். அதற்கான காரணங்களையும் ஆராயதவர்கள். மேல்தட்டு வாழ்வின் மீது மோகமும், ஏக்கமும் கொண்டவர்கள். கீழ்த்தட்டு மக்களின் மீது வலிய ஒரு இரக்கத்தைக் காட்டி பெருமிதமும், திருப்தியும் அடைவார்கள். இவர்களே சத்குருக்களின் பக்த கோடிகளாகி பரவசமாகின்றனர். ஆயிரம் ருபாய் கொடுத்து கடைகோடியில் இருக்க வேறு யார் கிடைப்பார்கள்?
அமைப்பின் மீது மக்களின் கவனமும் கோபமும் திரும்பாமல், தனிமனிதர்களின் மீது மட்டும் வைத்திருக்க உதவும் இதுபோன்ற சத்குருக்களை அரசும், ஊடகங்களும் பேணி வளர்க்கின்றன. பொதுவாழ்வில் குற்றங்களும், கறைகளும் படிந்து போயிருக்கும் பெரும்புள்ளிகள் தங்கள் முகங்களை மென்மையானதாய் காட்டிக்கொள்ள சத்குருக்களை அண்டுகிறார்கள். இவர் போன்றவர்களை பின்பற்றுவதாலேயே தாங்களும் தனிமனித ஒழுக்க ஸ்நானம் பெற்றுவிட்டதாய்க் கருதும் ராமு போன்ற பக்தகோடிகள் அவருக்காக கையுயர்த்தி நிற்கிறார்கள். சத்குருக்களின் பிம்பங்களை மெல்ல மெல்ல இந்த பெரும்புள்ளிகளும், ஊடகங்களும், ராமு போன்ற நண்பர்களும் சமூகத்திற்குள் செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். சத்குருக்கள் உயரத்திற்குச் செல்கிறார்கள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு புனிதர்களாகின்றனர்.‘தன் நாடு, தன் மக்கள்’ என்று இந்த சத்குருக்கள் ஒரு வட்டம், ஒரு மாவட்டம், ஒரு மாநிலம், ஒரு தேசம் என தங்கள் ஆளுகைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அங்கங்கு அவர்களது ஆசிரமங்களும், மடங்களும் ஏற்படுத்தப்பட்டு தொழில் அபிவிருத்தியடைந்து, அமோகமாய் நடக்கிறது. அதற்குத்தானே எல்லாக் கூத்துக்களும்!
அப்படியொரு ஒரு குருதான் ராம்தேவ் என்னும் யோகா குருவும். பெரிய பெரிய ஸ்டேடியங்களில் நடக்கும் அவரது பயிற்சிகளின் குறைந்த பட்சக் கட்டணம் ஐநூறு ருபாய் என்கிறார்கள். முதல் வரிசையில் பெரும்புள்ளிகளான கோடீஸ்வரர்களும், அமைச்சர்களும், ஊடக அதிபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்துகிற ஷோவைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம். டெல்லியில் இன்று ஆரம்பித்திருக்கும் அவரது உண்ணாவிரதத்திற்கு, இந்த பெரும்புள்ளிகள் எல்லாம் சேர்ந்து 18 கோடிக்கும் மேல் செலவழித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். வெறும் பணம். எப்படியும் ஊழலையொழித்து சாதாரண மக்களுக்கு சுகவாழ்வைக் கொண்டுவந்து விடுவது என இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இது ‘ஊழல் ஒழிப்பு சீசன்’ போலும். ஏற்கனவே அன்னா ஹசாரே என்பவர் உண்ணாவிரதம் இருந்து தேசத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுப் போயிருக்கிறார். மக்களிடம் இந்த கோஷம் எடுபடுகிறது என்பதையறிந்து அடுத்து ஒருவர் கிளம்பி வந்திருக்கிறார். கடந்த நான்கைந்து நாட்களாக ராம்தேவ்தான் முதற்பக்கச் செய்தி. ஊழலை ஒழிக்கப் போகிறேன், கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறேன்’ என்று உஜ்ஜையினிலிருந்து அந்த யோகா குரு தனி விமானத்தில் டெல்லி வந்ததிலிருந்து பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அவர் ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் மாறி மாறி அவர் கன்னத்தில் அறைந்தபோதெல்லாம் கூட அசையாமல் இருந்த கல்லுளிமங்கரான மன்மோகன் சிங்கிற்கே பதற்றம் பற்றிக்கொண்டது. அமைச்சர்களை உடனே அனுப்பி அவரிடம் பேசச் சொல்கிறார். ராம்தேவ் பிடிவாதம் பிடிக்கிறார். அரசுக்கு நெருக்கடி என்று சொல்லப்படுகிறது. என்னய்யா நெருக்கடி? அதுதான் புரியவில்லை.
சென்ற பிப்ரவரி மாதத்தில் விலைவாசி உயர்வினை எதிர்த்து இலட்சக்கணக்கில் இடதுசாரிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தினர். பெரும் மனிதத் திரளாகக் காட்சியளித்த அந்த கோலத்தை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் அமைச்சரவையை அவசரம் அவசரமாகக் கூட்டவில்லை. போலீஸ்களைக் குவித்து அடக்குமுறைதான் செய்தது அரசு. இப்போது அதே அரசு கையைப் பிசைகிறது. இந்திய முதலாளித்துவ அரசியல் இங்குதான் இருக்கிறது.
யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி நிபுணராக கருதப்படும் இந்த ராம்தேவ் ஹரித்துவாரில் நடத்தி வந்த திவ்ய யோகா பார்மஸியில் 2006ம் வருடம் ஒரு பிரச்சினை எழுந்தது நினைவிருக்கலாம். பனிரெண்டு மணி நேரத்துக்கும் மேலே வேலை பார்த்தும் ரூ.1200/- மட்டுமே ஊதியம் கொடுத்து வந்ததால், அங்குள்ள ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினர். அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டது பார்மஸி. அப்போது அந்த ஊழியர்கள் பல உண்மைகளை தெரிவித்தனர். தனது மருந்துகளை தயாரிப்பதற்கு மனிதக் கபாலங்களையும், மிருகங்களின் உடல் பாகங்களையும் ராம்தேவ் பயன்படுத்துகிறார் என்பது அதில் பிரதானமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான பிருந்தாகாரத் இதனை வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவித்தார். ராம்தேவின் பக்தகோடிகளும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும், வி.ஹெச்.பியினரும் பிருந்தாகாரத்தின் உருவ பொம்மைகளுக்கு தீவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிருந்தா காரத்தின் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தாமல் மன்மோகன் அரசு ராம்தேவிடம் அப்போதும் குழைவாகவே நடந்துகொண்டது.
ஊழல் செய்யும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் ராம்தேவ். இதுதான் பாசிச சிந்தனையின் ஊற்றுக்கண். தனிமனிதர்கள் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என்பது ஒரு தத்துவ ஹம்பக். ஹிட்லரும் இதுபோலவே பேசியிருக்கிறான். ஆர்.எஸ்.எஸ் மற்றும், வி.ஹெச்.பியினர் ராம்தேவை ஆதரிக்கும் காரணம் இங்கு தெளிவாகிறது. ஊழல் பற்றி வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு நாறிப் போன பா.ஜ.க இப்போது ராம்தேவின் பின்னால் அடைக்கலம் கொள்கிறது. தங்கள் கோஷங்கள், புனித வேஷங்கள் எல்லாம் காணாமல் போய் அரசியல் செல்வாக்கு இழந்து போன இவர்கள்தான் ராம்தேவ் என்னும் புறவாசல் வழியாக மீண்டும் பிரவேசிக்க எத்தனிக்கின்றனர். ஆனால் ஊழல்களில் எந்த மாற்றங்களும் ஏற்படாது. இது வலதுசாரி வியூகம்.
தூக்கிலிடவேண்டியது மனிதர்களை அல்ல. ஊழல் செய்வதற்கென்றே சகல அதிகாரமும், எல்லா வழிகளும், வழிவழியாய் முன்னுதாரணங்களும் கொண்டிருக்கிற இந்த அமைப்பைத்தான் முதலில் தூக்கியெறிய வேண்டும். மாற்றங்கள் படிப்படியாக உருவாகும். இது இடதுசாரி வியூகம்.
இடதுசாரிகளும், இடதுசாரி தொழிற்சங்கங்களும் ஊழலுக்கு எதிரான தீவிரமானப் பிரச்சாரத்தையும், தொடர்ச்சியானப் போராட்டங்களையும் முன்னெடுக்காத சமூகத்தில் இப்படித்தான் குருக்களும், ரிஷிகளும், ஆனந்தாக்களும் அலப்பறை செய்வார்கள் போலும்! அதோ உண்ணாவிரதப் பந்தல் ஆட்டமும் பாட்டமுமாய் இருக்கிறது, ஒரு அரசியல் விபரீதத்தை முன்வைத்து.
மாதவ்ஜி அவர்களே! பாபா மருத்துவமும் பார்க்கிறார். உலகத்தில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத "எட்ஸ்" நோய்க்கு மருந்து கொடுக்கிறார். மற்றொன்று ஆண் ஆணை தேடும் ஒறினச்சேர்க்கை . மருந்து வைத்திருக்கிறார். வேளிநாட்டில் நல்ல கிராக்கி. நெட்டில் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள். ---காஸ்யபன்
பதிலளிநீக்குபாபா ராம்தேவ் காசு வாங்குவது, அவர் விமானத்தில் போவது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆன போதிலும், அவரது கொள்கைகளில் சிலது நாம் தனித் தனியாக மட்டுமல்ல நமது தேசமே பின்பற்றினால் நல்லது. அவற்றில் முக்கியமானது, இயற்கை வழியில் விவசாயம், பழங்கள், கீரைகள், காய்கறிகள் உற்பத்தி, [பூச்சி மருந்துகள், உரங்களை ஒழிக்க வேண்டும், இவற்றால் மண் வளம் கெடுவதோடு, உடல் நலமும் கெடுகிறது, மேலும் இவை கேன்சர் போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் வரை கொண்டு செல்லத் தக்கவை.], தூய பால் உற்பத்தி, நமக்கு ஏற்ப்படும் நோய்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து, யோகா, மற்றும் காடு வளர்ப்பு, பசுமைப் புரட்சி. இவரது திட்டங்கள் அத்தனையும் செயல்படுத்தினால் எல்லா பஞ்சமும் தீர்க்கப் பட்டு ஒளிமயமான குடிமக்களை இந்தியா பெறும். தற்போது இருக்கும் நிலையில், இவரை வெறும் சாமியார் என்று ஒதுக்கித் தள்ள என்னால் முடியவில்லை. யார்தான் பூனைக்கு மணிகட்டுவது என்ற நேரத்தில் இப்படியாவது ஒருத்தர் இரண்டு பேர் முன்வந்துள்ளார்களே என்று சந்தோஷப் பட வேண்டியதுதான். இவரது போராட்டத்தால் பலன் இருக்குமா என்பதும் பெரிய கேள்விக் குறிதான். இவருக்கு என் இவ்வளவு முக்கியத்துவம் அரசு கொடுக்கிறது என்ற உங்கள் கேள்வியும் நியாயமானதே.
பதிலளிநீக்குமிக அருமையான படைப்பு. என்று தான் நம் மக்கள் புரிந்துகொள்வார்கள் உழல்க்காக போறடிகின்ர உன்மையான இயக்கம் எது என்று.. . ? தோழர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அருப்பனித எதனை தலைவர்களை இதே உடகங்கள் தான் மறைத்தன.
பதிலளிநீக்குபாபா மாதிரியான வேஷதாரிகளின் நடிப்பைதான் நம்புவார்கள்.
உங்கள் படைப்பு அனைத்திலும் ஒரு தாகம் உள்ளது .......
நட்புடன்
பாலகிருஷ்ணன்
(சமயநல்லூர்)
ஆஸ்திரேலியா
Nice post.
பதிலளிநீக்குஜெயதேவ் அவர்களே! மன்சாட்டொவை எதிர்த்து பாபா போராட மட்டார். அணு உலையை எதிர்த்து போராடமாட்டார்.ஆற்றுநீரை பாட்டிலில் அடைத்து விற்கும் பெப்சியை எதிர்க்கமாட்டார்.எதிர்த்தாலும் ஊடகங்கள் அவருக்கு ஆதரவு அளிக்காது. இந்திய முதலாளிகள் வளர்ந்து விட்டார்கள். பாபாக்களும் ஆச்சாரியர்களும் அவர்கள் சொல்வதைத்தான் பெசவேண்டும்.செயல்படுத்தவேண்டும்.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.
பதிலளிநீக்கு//இடதுசாரிகளும், இடதுசாரி தொழிற்சங்கங்களும் ஊழலுக்கு எதிரான தீவிரமானப் பிரச்சாரத்தையும், தொடர்ச்சியானப் போராட்டங்களையும் முன்னெடுக்காத சமூகத்தில் இப்படித்தான் குருக்களும், ரிஷிகளும், ஆனந்தாக்களும் அலப்பறை செய்வார்கள்// இது தான் உண்மை
பதிலளிநீக்குஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் மனிதர்கள் மற்றும் மிருகங்களின் கபாலங்கள் பயன்படுத்துவதுண்டு.பெரும்பாலும் மன நோய்களுக்கு இவற்றைக் கொடுப்பார்கள்.சித்த மருத்துவர்கள் யாரிடமாவது கேட்டால் சொல்வார்கள்.அரசு சித்த மருந்து கழகமே இவற்றைச் செய்து விற்கிறது அண்ட பற்பம்,பேரண்ட பற்பம் என்று இவற்றைச் சொல்வார்கள்.அதே போல் வெள்ளாடு போன்ற மிருகங்களின் ஈரல் போன்ற உறுப்புகளும் மருத்துவத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது.மலைப் பாம்பு கூட பயன்படுத்துவதுண்டு !ஆகவே இதற்கு குற்றம் சாடுவதேன்றால் அந்த மருத்துவ முறைகளைத் தான் நீங்கள் குற்றம் சாட்டவேண்டும்.ராம் தேவை அல்ல.
பதிலளிநீக்குgood post
பதிலளிநீக்குkeep it up.
lets f**k these babas.............
WHICH IS barbaric act? Ramdev arrest or killing of four farmers in firing in patna. Definitely killing of farmers in firing. but media give least important to farmers killing than this guru arrest. This shows class interest of media .
பதிலளிநீக்குஅன்பு மாதவ்
பதிலளிநீக்குபாபா ராம்தேவ் குறித்த இரண்டு பதிவுகளையும் வாசித்தேன். தினமணி இதழின் தலையங்கத்தையும், டெக்கான் கிரானிக்கல் ஏட்டின் குரலையும் பார்த்தேன், கேட்டேன். அரசின் நடவடிக்கையைக் கண்டித்தாலும், இரண்டு பத்திரிகைகளுமே ராம் தேவ் குறித்து எந்தச் சான்றிதழும் தரவில்லை,அவரது சந்தர்ப்பவாத நுழைவைச் சாடவும் செய்துள்ளன. உங்களது குரலும் முக்கிய செய்திகளைச் சொல்கிறது....
ஊழல் சேற்றில் திமிரோடு புதைந்து புதைந்து களியாட்டத்தில் இருக்கும் அரசை எந்த விஷயத்தில் மடக்கலாம் என்று காத்திருக்கும் வலதுசாரி அரசியல் சக்திகளின் ஓர் ஏவுகணை தான் ராம்தேவ். அவர் அடித்த ஒரு பல்டியைத் தான் ஊடகங்கள் காட்டின. அது உடலால் செய்து காட்டியது. பெரிய வீர சூர பிரதாபம் பேசிவிட்டு ஓசைப் படாமல் பெண்ணுடைக்குள் மாறி அங்கிருந்து ஓட யத்தனித்தது தமது பக்த கோடிகளுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கை. அவர்களைக் காவல் துறையிடம் காட்டிக் கொடுத்துவிட்டுத் தமது பொன்னுடலை மட்டும் பாதுகாத்துக் கொள்ளத் தலைப்பட்ட இந்த மகா யோக்கிய சிகாமணி, உண்ணாவிரதத்திற்கே இறங்கி இருக்கக் கூடாது. நட்டாற்றில் விடத் தயங்காத இவரது உன்னத மேதா விலாசத்தை இரக்கத்தைத் தூண்டும் விதமாகப் பரப்பும் ஊடகங்களின் உள் நோக்கம் அசிங்கமாயிருக்கிறது.
அரசோ, எந்த வெட்கமும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு லட்சம் விவசாயிகளின் தற்கொலை பற்றி எந்தச் சிறு அதிர்வும் இவர்களது உடலில் ஏற்படுவதில்லை. தொழிலாளி வர்க்கம் போராடும் போது லத்திகளைச் சுழற்ற யோசிப்பதில்லை. பாபாவைப் பேரம் பேசி வாயடக்கப் பார்த்தது. அவர் இவர்களைத் தூக்கிச் சாப்பிடும் பெரிய திட்டத்தோடு ராம் லீலா மைத்தனத்தில் கடை விரிக்கவும், தந்து அதிகாரப் பிரம்பை மிக இலேசாக வீசியே அவரை ஹரித் துவாரம் வரை விரட்டியடித்துவிட்டது.
ஊழல் இவர்களுக்குப் பொருட்டல்ல. அது ஏன் அம்பலம் ஆனது என்பது தான் புகைச்சல். அப்புறம் இந்த அமைப்பின் மீதே சந்தேகம் வந்துவிட்டால்...? மக்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டால்...? எனவே, இதற்குள்ளேயே இதற்கு மருந்து இருக்கிறது, தீர்வு இருக்கிறது என்று காட்டும் முதலாளித்துவ உள் சாகச நடவடிக்கையின் சின்ன பிரதிபலிப்பு தான் இந்த ஊழல் எதிர்ப்பு கோஷங்களின் உட்கரு.
ராம்தேவ் அத்தியாயம் முடியாது. அது ஹசாரே வகையாறாக்களின் முனையிலிருந்தும் தொடரும். தாராளமயக் கொள்கைகளின் அராஜக பக்க விளைவு தான் பெருகும் ஊழல் என்பதை மேற்படி நாடகக் காட்சிகளின் எந்தப் பாத்திரமும் பேசாது. பேசவே பேசாது. அது மட்டுமல்ல, உண்மையான போர்க்களத்தில் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் பக்கம் கவனம் செல்லக் கூடாது என்று எழுப்பப்படும் விசேஷ மேடைகள், பந்தல்கள், ஆர்ப்பாட்டக் காட்சிகளில் ஒன்று தான் காமிரா முன் தோன்றி மறைந்திருப்பது. ஆட்களைத் தான் விரட்டி அடிக்கிறது ஆளும் கூட்டணி. அதுவும் தமது விதிகளை மீறிய ஆட்டம் ஆடியதற்காக..
பந்தல்களைப் பராமரிப்பது அவர்களது வர்க்கக் கடமை.
எஸ் வி வேணுகோபாலன்
மிகவும் சரியான கணிப்பு.போலி பாபாக்களை நம்பியே மோசம் போய் கொண்டிருக்கிறது இந்த நாடு.சமூகம் நாறிக்கிடக்கையில் நாடு எப்படி மனம் வீசும்.
பதிலளிநீக்குஊழல் பெறுகிவருவதன் காரணம் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் பெருகிவருவதுதான். புரிந்துகொண்டு இருப்பீர்கள்.
பூபதி