எந்த பழி பாவத்துக்கும் அஞ்சாத காங்கிரஸ்

thee_1st2(1)

காங்கிரஸ் என்னும் இந்தக் கட்சிதான் நமது  நாட்டை ஆள்கிறது என்னும் உண்மை அவமானத்தைத் தருகிறது. வெள்ளையும் சுள்ளையுமாய் வந்து இந்த கனவான்கள்தான்  தேசீயக் கொடியை ஏற்றி, கம்பீரமாகப் பேசுகிறார்கள் என்பது ஆத்திரத்தைப் பற்ற வைக்கிறது. ஆட்சிக்காகவும், அதிகாரத்துக்காகவும் எதையும் செய்வார்கள் அவர்கள் என்பது இதோ, ஒரு பயங்கர சதியாக வெளிவந்திருக்கிறது. மேற்குவங்கத்தில் தொடர்ந்து இடதுசாரி முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்ததும், அதன் முதல்வராக ஜோதிபாசு இருந்ததையும் சகித்துக்கொள்ள முடியாத காங்கிரஸின் வெறி அம்பலப்பட்டு இருக்கிறது.  கம்யூனிஸ பயங்கரத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கும் பேரில், பிரிட்டனின் உளவுத்துறையும், இந்திய உளவுத்துறையும் சேர்ந்து சர்வதேச கூலிகளின் மூலமாக  சர்வசாதாரணமாக இதை நிகழ்த்தியிருக்கின்றன. 15 வருடங்களுக்குப் பிறகு, அந்தச் சதிகாரர்கள் இப்போது எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

1995 டிசம்பர் 18ம் தேதி நள்ளிரவில், மே.வங்கத்தின்  புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன்னணி அரசுக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறையில் இறக்குமதி செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்று குவித்து வருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதையேச் சாக்காக வைத்து, மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது அப்போது மத்தியிலிருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலிருந்த காங்கிரஸின் திட்டமாய் இருந்திருக்கிறது. ஏற்கனவே 1988ல்,  ராஜீவ் காந்தி பிரதமராய் இருக்கும்போது இது போலக் காரணம் காட்டி, சி.பி.எம் ஆட்சிப்பொறுப்பிலிருந்த  திரிபுராவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது. இவையெல்லாவற்றையும், கிம் டேவி என்னும் அந்த சர்வதேசக் கூலிப்படைத் தலைவனே சொல்கிறான்.


விமானத்தின் மூலம் வந்து ஆயுதங்களைப் போட்டது, அதற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பு,பிறகு தப்பிச் சென்றது, நாடறிந்த ஒரு எம்.பியின் காரில் பாதுகாவலர்களின் துணையோடு சென்றது என எல்லாவற்றையும் கிம்டேவி சொல்கிறான்.  (ஆங்கிலத்தில் படிக்க: http://pragoti.org/node/4379 ) கத்தோலிக்கத் திருச்சபைகளுக்காகவும், ஆனந்த  மார்க்கத்திற்க்காகவும் அவன் சேவை செய்ததாகவும் குறிப்பிடுகிறான். இந்த வழக்கில் தற்போது இந்தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என்றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு  காரியத்திற்காக சிலர் தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம்டேவி, இந்தப்பின்னணியிலேயே உண்மைகளை வெளியிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறான். புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் அவன்  கூறியுள்ளான்.  இதுபோல், மே.வங்கத்தில் இடது முன்னணி அரசுக்கு எதிராக  அமெரிகிக்கத் தூதரகம் மம்தாவுக்காகவும்,  காங்கிரஸுக்காகவும் பணியாற்றுவதை சமீபத்தில்  விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த தேசத்தில் ஒரு மாநிலத்தில் இடதுசாரி அரசு ஆட்சி நடத்துவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரு சர்வதேச சதிக்கு திட்டமிடப்படுகிறது.  சத்தியாக்கிரகத் தோன்றல்களான காங்கிரஸ் பேர்வழிகள் அந்தச் சதிக்காக எதையும் செய்யத் தயாரகிறார்கள்.  எந்த பழி பாவத்துக்கும்  அஞ்சாத இவர்கள்தாம் சுதந்திரம், ஜனநாயகம், தேசப்பற்று குறித்து எல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள்.

இவ்வளவு நடந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவரோ, பிரதமரோ  இதுகுறித்து வாயைத் திறக்காமல் இருக்கிறார்கள்.  ஆனால், பாறை போன்ற இந்த மௌனம், அவர்களின் இறுக்கத்தையும், இதயமற்ற அரசியலையும் சொல்கிறது.

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. காங்ரஸின் கபட நாடகம் உலகம் அறிந்தது, ஆனால் கிம் டெவி சொல்வதுபோல் ஏழை எளிய மக்களை கம்யுனிசம் என்ற பெயரில் கொடுமை படுத்திய மே.வங்க அரசும், அங்கு தொடர்ந்து 30 ஆண்டுகளாக தலித் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமையை ஓர் நடுநிலையாளரான நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்துகொள்ள முடியுமா? கம்யுனிச சிந்தாந்தம் என்றபெயரில், முதலாலிதுவ எதிற்ப்பு என்றபெயரில் பூர்ஷ்வாக்களாக வாழும் மே.வங்க கம்யூனிஸ்டுகளுக்கு வக்காளத்து வாங்கவேண்டுமானால், நீங்கள் மனித உரிமை பற்றி தெறியாவர் அல்லது மனித உரிமையை ஆதறிக்காதவர் என்றே பொருள்.

  அப்ரகாம் லிங்கன்

  பதிலளிநீக்கு
 2. சகோ.
  நீங்கள் கொடுத்த தளத்தில் அவன் ,
  மே. வங்கத்தில் மக்கள் நலமோடு வாழவில்லை என்றும் கொடுமை படுத்தபடுவதாகவும் அவன் கூறுகிறானே . வேறு நாட்டுகாரன் நம் நாட்டரசை குறித்து கருத்து தெரிவிக்கிறான் . ஒரு வகையில் பாதிக்கவும் பட்டிருக்கிறான். அவன் செய்தது தவறு. முழுக்க தவறு இதில் அரசு உடனிருந்தாலும் தவறு. ஆனால் இதனை மனித உரிமை குறித்த பார்வையில் ஆராயாமல் இடது சாரிகளிடம் இருந்து சாதாரண ஆட்சியை பறிக்க இவ்வளவு செய்கிறார்கள் பாருங்கள் என்பது சிறிது வித்தியாசமாக தோன்றுகிறது. இடது சாரிகள் மே. வங்கத்தை முன்னுதாரண மாநிலமாக மாற்றியதாக எந்த செய்தியும் நான் படிக்கவில்லை எங்கும்.

  பதிலளிநீக்கு
 3. திரு, முகப்பு அவர்களே,

  இடதுச்சாரிகள் எப்படி ஏழைகளை கொடுமைப்படுத்தினார்கள் என்பதை விளக்கினால் விவாதத்திற்கு நன்றாக யிருக்கும். நிலமில்லா கூலியாக இருந்தவரையெல்லாம் சிறுவிவசாயி யாக சுயமரியாதிஅயுடன் வாழச்செய்தவர்கள் இடதுசாரிகள்.

  பதிலளிநீக்கு
 4. Indian gov run by carporate, the leftist to prevent their exploitative plan in WB. So the cong. try to eliminate left gov. In WB. So what we do?. I think the feature of Indian people in the hands of Naxalite.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!