மாதவராஜ் பக்கங்கள் - 33

bike

 

பரீட்சை பேப்பர் திருத்தச் செல்வதற்கு டீச்சர்கள் வேன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நேற்று காலை அம்முவை அழைத்துச் சென்றேன். வேனில் அவள் ஏறியதும் வண்டியைத் திருப்பினேன்.  மெயின் ரோட்டின் எதிரே இருந்த டீக்கடையில் நண்பர்கள் இருவர் உட்கார்ந்து கைகாட்டினார்கள். என்னோடு வங்கியில் பணிபுரிபவர்கள். சட்டென்று அவர்களை நோக்கி நேராக வண்டியைச் செலுத்தவும்  அந்த விபரீதம் நிகழ்ந்தது.

 

மெயின் ரோட்டில் மனைவி குழந்தைகளோடு வேகமாக வந்துகொண்டு இருந்த அந்த பைக்கை ஓட்டியவர் நிச்சயம் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டார்.  டீக்கடையில் உட்கார்ந்திருந்த நண்பர்களும் மற்றவர்களும் சத்தமாய் அலற ஆரம்பித்தார்கள். எதுவோ நிகழப் போகிறது  என நான் இடப்பக்கம் திரும்பியபோது  மிக அருகில்  அந்த பைக்கைப் பார்த்தேன். அடுத்தகணம் பெருஞ்சத்தத்தோடு மோதிக்கொண்டோம்.

 

எப்படி என்று தெரியவில்லை. எனது பைக் கொஞ்சம் தள்ளி விழுந்துகிடக்க நான் நின்று கொண்டு இருந்தேன். அவர்கள் மூவரும் ரோட்டின் இன்னொரு பக்கம் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் பைக்கின் வீல் சுற்றிக்கொண்டு இருந்தது.  எல்லோரும் ஓடி வந்தார்கள். அவர்களைத் தூக்கி விட்டார்கள். அவர், அவர் மனைவி, ஒரு சின்னப் பெண். எல்லோரும் எழுந்து நின்றார்கள். யாருக்கும் ஒன்றும் இல்லை. அவர் மனைவி அழ ஆரம்பித்தார்கள். அந்தச் சின்னப் பெண்ணும் அழுதாள். அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘பாத்துப் போக வேண்டாமா?’ என ஒருவர் என்னைப் பார்த்தார்.

 

திரும்பிப் பார்த்தேன். ரோட்டின் மறுபக்கம் வேனிலிருந்து அம்மு இறங்கி நின்று, பதற்றத்துடன் என்னைப் பார்த்தாள். “ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல..” என அவளிடம் சொன்னேன். ரோட்டைக் கடந்து என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். “ஒண்ணுமில்லம்மா, நீ போய்ட்டு வா” என அவளைத் திருப்பி அனுப்பினேன்.

 

அந்தப் பெண்மணி இன்னும் விசும்பிக்கொண்டு என்னைப் பார்த்தார்கள்.தவறு என்னுடையது.  பெரும் குற்ற மனப்பான்மையோடு எனது பைக்கை தூக்கி நிறுத்தினேன்.  அந்த பைக்கை ஓட்டிவந்தவர், அவரது மனைவியிடம், அடி பட்டிருக்கிறதா என விசாரித்துக்கொண்டு இருந்தார். நான் அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை.  நண்பர்கள் இருவரும், “நீங்க போங்க” என்றார்கள். நான் சென்றால்தான் அம்மு நிம்மதியாவாள் என்று தெரிந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.  அம்முவை பார்த்து புறப்படுவதாக கையசைத்துவிட்டுக்   கிளம்பினேன்.

 

வீட்டில் பைக்கை நிறுத்திய போதுதான், வண்டியின் முன்பாகம் இடது பக்கம் திரும்பியிருந்ததைப் பார்த்தேன்.  குழந்தைகள் இருவரும்  தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வீடு அமைதியாக இருந்தது. இடது கட்டை விரல், வாட்ச் கட்டியிருந்த பகுதி, முழங்காலில் லேசாய் வலி தெரிந்தது. சிராய்ப்புகள் இருந்தன. டிஞ்சர் போட்டுவிட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தேன். அந்த மூவரும் கீழே விழுந்து கிடந்ததும், அந்தப் பெண்கள் அழுததும் ஞாபகமாய் இருந்தது.

 

நேரமாக  ஆக காலில் இடது கட்டைவிரல் வலியெடுக்க, லேசாய் வீங்கியிருந்தது. பாதத்தை கீழே வைக்க முடியவில்லை. அம்மு போன் செய்து விசாரித்தாள். அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.  மூத்த மகள்  பிரீத்து எழுந்து, “என்னப்பா” என்றாள்.  “ஒண்ணுமில்லம்மா. லேசா” என்று அரைகுறையாய்ச் சொல்லி வங்கிக்குச் சென்றுவிட்டேன். போகிற  வழியில்  அந்த டீக்கடை இருந்தது. கடைக்காரர் தெரிந்தவர்தான். “அண்ணாச்சி, அவங்களுக்கு ஒண்ணுமில்லய” என்றேன். என்னைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே, “என்ன சார் அப்படி சட்டுன்னு திரும்பிட்டீங்க” என்றார். “ஆம்பிளையாளுக்கு ஒண்ணுமில்ல, பொம்பளயாளும் ஒண்ணுமில்லன்னுதான் சொன்னாங்க. வீட்டுக்குப் போனப்புறம்தான் தெரியும்” என்றார். கஷ்டமாக இருந்தது. “யார் அவங்க, தெரிமா” என்றேன். “தெரியல சார், பக்கத்து ஊராயிருக்கும்னு நெனைக்கேன்” என்றார்.  டீ ஆற்றிக்கொண்டு இருந்த மாஸ்டர், “நல்ல வேளை சார், நீங்க அப்படித் திரும்பவும் பைக் வந்துச்சு. ஒரு காரோ, லாரியோ வந்துருந்ததுன்னா. கவனமாயிருங்க” என்றார். தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன்.

 

நடக்க முடியவில்லை. ரொம்ப வலித்தது. பிரியா கார்த்திக்கு போன் செய்தேன். வந்தான். டாக்டரிடம் அழைத்துச் சென்றான். எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வன் அறம்தான் டாக்டர். “என்ன, இப்படி?” என சிரித்துக்கொண்டே பரிசோதித்தார். எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். இடது கட்டைவிரலில் ஒரு hairpoint  அளவுக்கு crack இருப்பது போலத் தெரிவதாகச் சொன்னார். சாயங்காலம்  “ஆர்த்தோ வருவார், பார்த்துக்கொள்ளலாம்” என  இரண்டு ஊசிகளிட்டு அனுப்பினார்.

 

ஆஸ்பத்திரிக்குள் ஒரு பெண்மணியும் அவளருகே ஒரு சின்னப் பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள்.  அந்த இருவரும் இல்லை. ஆனால் அவர்களைப் போலவே இருந்தார்கள்.  ‘ச்சே,  ஏன் அப்படி சட்டுன்னு திருப்பினேன்?’. வதைக்கிறது.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மாதவ்...

    எவ்வளவு சிரமம் இருக்கட்டும், ஒரு பயணம் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்துவிடுங்கள்.

    அவர்களால் உங்களைப் புறம் தள்ள முடியாது. அந்த நேரத்து வலியை உங்களது அன்பு வினவல் கொஞ்சம் ஆற்றும்.
    நிராகரிக்கப் பார்த்தாலும், நீங்கள் நீங்கிய பிறகும் நீங்கள் நின்ற அந்த இடத்தை அவர்களது மன்னிப்பான பார்வையால் தான் அவர்களால் கடக்க முடியும்.
    அடுத்த முறை வேறு யாரும் அதே போல் அவர்களை நோக்கியோ, வேறு யாராவது அப்படியான திடீர் குறுக்கீட்டைச் சந்திக்கும் இடத்தில் அவர்கள் இருக்கும் போதோ, உங்களது முதல் முகம் மறந்து திரும்ப எதிர்கொண்ட மனிதநேய முகமே அவர்களுக்குத் தட்டுப் படவேண்டும்.

    வீட்டிற்கு வரும் வரை நீங்களே உணராதிருந்த உங்களது காயங்களின் வலியையும் அது ஆற்றி விடக் கூடும்...

    அதற்காக, ஒரு பயணம் நீங்கள் அவர்கள் வீட்டிற்குச்...


    எஸ் வி வேணுகோபாலன்

    பின் குறிப்பு:

    நாம் வாகனத்தில் இருக்கும்போது மட்டுமல்ல, எழுதும் போது - பேசும் போது - நடக்கும் போது - ஏதோ பத்திரத்தில் உத்தரவில் கடிதத்தில் கையெழுத்திடும்போது- கூட இப்படித்தான் அடுத்தவர்களும் அருகே இருக்கின்றனர் என்பது சில வேளைகளில் வேறு முன்னுரிமையின் வேகத்தில் கவனத்திலிருந்து தப்பி விடுகிறது.

    எல்லா விபத்துகளும் பதிவாகிவிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  2. எல்லா விபத்துக்களுமே நம்மை மீறி நிகழ்பவைதானே தோழர். அவர்களுக்கும் பெரிதாய் ஒன்றும் ஆகியிருக்காது.

    மனதை அலட்டிக்கொள்ளாதீர்கள்.உடம்பைக் கவனியுங்கள்.சீக்கிரமாய்க் ”கால்” ”முழுதா”கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. இயல்பாக நடக்ககூடியதுதான். சாலை கலாச்சாரம் இன்னமும் நம் பக்கங்களில் பரவலாகவில்லை. தவறு யார் பக்கமானாலும், விபத்து நிகழ்ந்துவிட்ட பின் இருவரும் அடிபட்டதா, எதும் உதவி தேவையா என விசாரித்துக்கொள்வது ஒரு அடிப்படை பண்பு. விரிசல் விழும் அளவோடு சென்றதே.. Disk Brake இல்லாத இரு சக்கர வாகனங்களை கட்டுபடுத்துவது மிகவும் கடினம். விரைவில் நலம்பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. இதுவும் கடந்து போகும்! உடலும் மனமும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. கவனமாக செல்லுங்கள் சார். நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
  6. Pl get well soon.

    Unfortunate you didn't talk to that family as per your blog.

    பதிலளிநீக்கு
  7. உடல் நலம் தேறியதும் அந்த குடும்பத்தை தேடிக் கண்டு பிடித்து, பார்த்துவிடுங்கள் மாது. இல்லாவிட்டால் உங்களை மாதிரி ஆட்களுக்கு வாழ்நாள் முழுக்க விண் விண் என வலித்துக் கொண்டுதான் இருக்கும். கால்வலி நாளை சரியாகிப் போகும்.

    வேணு சார் சரியாகச் சொல்லி இருக்கிறார்.

    get well soon மாது.

    பதிலளிநீக்கு
  8. இந்த மனநிலையிலிருந்து மீள அவர்களை சந்தித்து உறுதிசெய்துகொள்வதே சரியென எனக்கும் படுகிறது.. முயற்சி செய்யுங்கள்.. நீங்களும் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தற்சமயம் தொடர்ச்சியாக வாசிக்க இயலுவதில்லை. இன்று வந்தேன். இதை வாசித்ததும் ஒரு இனம் புரியாத பதட்டம் ஏற்பட்டது. அன்பானவர்கள், மென்மனம் படைத்தவர்கள், இயற்கையை உருகி உருகி ரசித்துக் கரைந்து போகிறவர்கள், இன்னொரு மனிதனின் வலிக்காகவும் அழுபவர்கள் என்பவர்களுக்கும் விபத்துகள் விதிவிலக்கு அளிப்பதில்லை.

    நீங்கள் வீட்டிற்குத் திரும்பியபோது குழந்தைகள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள் என்ற வரி மேலும் கலங்க வைக்கிறது. அவர்களை நினைத்தாகவேனும் நாம் நம் ஒழுங்கின்மைகளை கவனக்குறைவுகளைச் சரிசெய்யவேண்டும் என்று நான் வீட்டில் உரையாடுவதுண்டு. "ஊரையே நேசி" என்று எழுதுகிற ஒருவரிடம் அப்படியே செய்ய சிறிதளவேனும் விரும்புகிற இன்னொருத்தி இப்படிச் சொல்லிக்கொண்டிருப்பது
    எவ்வளவு சுயநலமானது என்பது புரியாமலில்லை. இருந்தாலும் சொல்லத் தோன்றியது.

    இச்சம்பவம் தந்த உங்களின் எல்லா வலிகளும் விரைந்து மறையட்டும்.

    பதிலளிநீக்கு
  10. சமயங்களில் அந்த நேரத்தில் ஒன்றும் தோன்றாமல் பின் வதைத்துக் கொண்டேயிருக்கும். சில சம்பவங்கள்.உங்களின் இந்த நினைவே அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்!

    பதிலளிநீக்கு
  11. வாகனத்தில் போகிறவர்கள் நமக்கு நன்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் கை தட்டி கூப்பிட்டு காலனிடம் காட்டிகொடுக்க கூடாதுங்க..அது சரி ரொம்ப வலிக்குதுங்களா..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!