மிஸ்டு கால்பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகுதான்  செல்போனை பார்க்க முடிந்தது.  மிஸ்டு கால் ஒன்று இருந்தது.  நம்பர். யாரென்று தெரியவில்லை. அழைத்துப்  பார்க்கவும் மனமில்லை. சோர்வாக இருந்தது.

செல்போன் அழைத்தது. அந்த மிஸ்டு கால் நம்பர்தான்.  எடுத்து, “ஹலோ” என்றேன்.

“வசுமதி டீச்சரா”. எதோ மாணவியின் குரல் போல மெலிதாக ஒலித்தது.

“ஆமாம், நீ யாரும்மா?”

“.............”

“ஹலோ, யார் பேசுறதும்மா?”

“டீச்சர். நாந்தான்  திவ்யா.  ஞாபகம் இருக்கா டீச்சர்”

“திவ்யாவா......  எந்த திவ்யா..?”

“போன வருஷம் பிளஸ் டூ  உங்கக் கிட்ட படிச்சேன்ல,   எங்கையெழுத்து கூட ரொம்ப நல்லாயிருக்கும்னு அடிக்கடிச் சொல்வீங்களே, அந்த திவ்யா..”

ஞாபகத்துக்கு வந்தது. வகுப்பில் இரண்டாவது பெஞ்ச்சில் வலப்பக்கம் உட்கார்ந்திருந்த  அவள்,  எப்போதும்  அமைதியாக இருந்த  அவள்,  எதைச் சொன்னாலும் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த அவள்,  புத்திசாலிப் பெண் என பேரெடுத்த அவள், பள்ளியாண்டு விழாவில் அழகாக நடனமாடிய அவள்,  ‘டீச்சர், ‘டீச்சர்’ என சுற்றி சுற்றி வந்த அவள் என ஒவ்வொன்றாய் விரிய, ஆச்சரியத்துடன்  “ஏய்.... திவ்யா, நீயா! எப்படியிருக்கே? எங்கயிருக்கே?”

“.................”

“திவ்யா...”

“................”

“திவ்யா... என்னம்மா?

“சும்மாத்தான் போன் செஞ்சேன். டீச்சர் உங்க குரல  ஒருதடவ கேக்கணுமுன்னு தோணிச்சு.  வச்சுர்றேன்..”

வைத்துவிட்டாள்.  ஒன்றும் புரியவில்லை. ப்ளஸ் டூ பரீட்சைக்கு மூன்று மாதம் போல இருக்கும் போது படிப்பை நிறுத்தி விட்டாள் அவள். யாரோடோ ஓடிப்போய்விட்டாள் என்றார்கள். கருக்கலைப்பு செய்து கொண்டாள் என்றார்கள். இல்லை என்றார்கள். கல்யாணமாகி வெளியூருக்குச் சென்றுவிட்டாள் என்றார்கள். வகுப்பில் காலியான அவளது இடம் கொஞ்சநாள் உறுத்தி விட்டு, உதிர்ந்து போனது.  ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இப்போது எதற்கு போன் செய்தாள்? அவள் குரலும், பேசியதும் என்னவோ போலிருந்தது.

ஒருவித பதற்றத்துடன் அந்த நம்பருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!