எகிப்து: விடுதலை வேட்கையின் புரட்சி முழக்கம்!


வாழ்க்கையின் தேர்வின்படி

வாழ்ந்துவிட
மக்கள் துணிந்து விடுவார்களானால்
விதியால் என்ன செய்ய முடியும் -
வழிவிட்டு நிற்பதைத் தவிர ?
இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..
சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..
-அப் அல் காசிம் அல் ஷாபி (துனிசியாவின் இருபதாம் நூற்றாண்டுக் கவி) - எகிப்திய கிளர்ச்சியின்போது மக்கள் இசைத்த பாடல்களில் ஒன்று.
முப்பத்து மூன்று வயது ஹொஸாம் எல் ஹமாலவி,
கிட்டத்தட்ட இதே வயதுக் காலம் நிரம்பி வீழ்த்தப்பட்டிருக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் பிறந்து வளர்ந்திருக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்.  உலகைக் குலுக்கி இருக்கும் எகிப்து நாட்டின் 18 நாள் மக்கள் பேரெழுச்சியின் வெற்றிக் களிப்பில் இருக்கும் சுமார் எட்டுக் கோடி மக்கள் தொகையில் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கு இளைஞர்களாயிருக்கக் கூடும். அதிபர் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து வீழ்த்த வேண்டும் என்பது ஹமாலவி போன்ற பல்லாயிரக்கணக்கானோர்க்கு நீண்ட கால இதய தாகம்.

லஞ்சம், ஊழல், வேலையின்மை, உணவுப் பொருள் தட்டுப்பாடு, காட்டாட்சி....என பெருகிவந்து கொண்டிருந்த கொடுமைகளுக்கு எதிராகப் பல்லாண்டுகள் கனன்று கொண்டிருந்த நெருப்பு இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய போது, உலகின் மொத்த கவனமும் வரலாற்றுப் புகழ்மிக்க இந்த நாட்டின் பக்கம் திரும்பியது.  பிப்ரவரி 11 புனித வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மக்கள் ஓர் இறுதி நாள் போர்கோலம் பூண்டு  திரண்ட போது, கொடுங்கோல் ஆட்சி புரிந்துவந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவதாக துணை அதிபரை அறிவிக்கச் சொல்லிவிட்டுக் குடும்பத்தோடு செங்கடல் பகுதியின் உல்லாச விடுமுறை இல்லத்திற்கு ஓடிவிட்டிருந்தான். உற்சாக வெடி வாணங்கள் தலைநகர் கெய்ரோவின் உச்சியில் கலக்கிக் கொண்டிருந்தன. தஹிரிர் சதுக்கத்தில் லட்சோப லட்சம் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தனர்.


அதற்குச் சில நாட்கள் முன்னதாகத் தான் மற்றுமொரு அரபு நாடான துனிசியாவில் இதே மாதிரி இன்னொரு போக்கிரி சர்வாதிகாரியான பென் அலி வாரக்கணக்கில் தொடர்ந்து நடந்த மக்கள் எழுசிக்குமுன் தாக்குப் பிடிக்க முடியாமல் நாட்டை விட்டு ஓடினான்.  நாம் இங்கே தைப் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்த இந்த ஜனவரி 15 அன்று துனிசியா மக்கள் மேற்படியான அவர்களது பேரானந்தப் பொங்கலைக் கொண்டாடியது அருகில் இருந்த எகிப்து மக்களை அடுத்த பத்து நாளுக்குள் மேற்காசியாவின் அந்தப் பகுதியின் அரசியல் கூர் முனைக்குக் கொண்டு நிறுத்த மிகப் பெரும் உத்வேகத்தைத் தந்துவிட்டது. சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை....இது தான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏமன், ஜோர்டான், லிபியா என்று வட ஆப்ரிக்க - மேற்கு ஆசியா பிராந்தியத்து மக்களை 'இது பொறுப்பதில்லை....'என்று தத்தமது ஆட்சியாளர்க்கு எதிராகத் திரண்டெழ வைத்துக் கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

"எந்த நோக்கமற்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் ஏதாவது உயரிய நோக்கிற்காக உயிரை விடுவது மேல்" என்று எழுதியிருந்த மிகப் பெரிய பதாகைகளோடு ஆண்களும் பெண்களுமாக எகிப்து மக்கள் திரண்ட கெய்ரோ மாநகரின் அந்தச் சதுக்கத்தின் பெயரான தஹிரிர் என்பதற்குப் பொருளே விடுதலை என்பது தான்.

உலகின் தொன்மை வாய்ந்த நாகரிகங்களில் நைல் நதி ஓடும் எகிப்து வரலாற்றுச் சிறப்பு மிக்கது.  பிரமிக்க வைக்கும் பிரமிடுகளும், கம்பீர ஸ்பிங்க்ஸ் உருவங்களும், இன்ன பிறவும் அலங்கரிக்கும் இந்த தேசத்தின் வரைபடம் வட ஆப்ப்ரிக்காவில் ஒரு காலும், சூயஸ் கால்வாய் கரையைக் கடந்து மேற்கு ஆசியாவில் ஒரு காலுமாக இருக்கிறது.  இரண்டு கண்டங்களில் கால் பாவி நிற்பதால் இவற்றின் இணைப்புப் பாலமாகவே அழைக்கப்படுவது.  

இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய உலக நிலைமைகளில் கூட்டுச் சேரா நாடுகளின் அணிவகுப்பு உருவானதில் எகிப்துக்குப் பெருமிதமிக்க பங்கு உண்டு. அப்போதைய அதிபர் கமால் அப்துல் நாசர் அதன் சிற்பி. அவரை அடுத்து வந்த அன்வர் சதாத் ஆட்சிக் காலத்தில் இராணுவப் பொறுப்பில் இருந்தவன் தான் ஹோஸ்னி முபாரக். சதாத் காலத்திலேயே மக்கள் பெருந்துயரங்களுக்கு ஆளாகி இருந்தனர்.  குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அதற்கு எதிராகப் போராடி, சிறையில் அடைக்கப் பட்டு பல இன்னல்களை எதிர்கொண்ட டாக்டர் நவால் எல் சதாவி என்ற போராளி சிறைக்குள் இருந்தபோது ஐப்ரோ பென்சிலைக் கொண்டு கழிப்பறை உபயோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த சன்னக் காகிதங்களில் எழுதி வெளியே கடத்திப் பின்னர் பிரசுரித்த நினைவுக் குறிப்புகளில் இருப்பதை பத்திரிகையாளர் கல்பனா ஷர்மா (ஹிந்து: ஞாயிறு சிறப்புப் பகுதி: பிப்ரவரி 5) விவரிப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

சதாத் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னணியில் அமெரிக்காவின் ஆதரவுடன் இராணுவ அதிகாரத்தைக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஹோஸ்னி முபாரக் அடுத்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக எகிப்தை ஆட்டிப் படைத்ததன் குமுறல்களின் கூட்டு வெடிப்புதான் இப்போது மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட மக்கள் எழுச்சி.  இந்த ஆண்டு அக்டோபரில் முபாரக் பதவி இறங்கிக் கொண்டு அடுத்து நாட்டை ஆள அவனது மகன் கமால் தாயாரிப்பில் இருந்த நிலையில் தான் துனிசியாவின் வெற்றிக் களிப்பின் அடுத்த உற்சாகப் பகுதி எகிதில் அரங்கேறியிருக்கிறது.   தொடர்ந்து தொழிற்சாலைகளில் போராட்டங்கள், உரிமைகளுக்காகவும், அடிமட்டக் கூலிக்கு எதிராகவும் வேலை நிறுத்தங்கள், உணவுப் பொருள் விலையேற்றத்திற்கு எதிரான சிறு சிறு கலகங்கள், முபாரக்கின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டிற்கு எதிரான அரசியல் உணர்வுடனான உள் முரண்பாடுகள் எல்லாம் எப்போது கொதி நிலையை எட்டலாம் என்று தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நாம் சந்தித்த ஹொஸாம் எல் ஹமாலவி ஒரு துடிப்பான பத்திரிகையாளர்.  மாணவப் பருவத்திலேயே கொழுந்துவிட்டெரிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவரது அரசியல் பார்வையைச் செதுக்கத் தொடங்கியிருந்தது.  1998ல் அவரது தூண்டுதலால் அதற்குமுன் பல்லாண்டுகளாக பல்கலைக் கழக வளாகங்கள் காணத் தவறியிருந்த மாணவர் கலகத்தைச் சந்தித்தன. இராக்கில் அமெரிக்கா குண்டுவீச்சை நடத்துவதற்கு எதிராக அவர் திரட்டிய சில நூறு மாணவர்களுக்கும் அது புதிய அனுபவம்.  ஒரு கணம் அசந்துபோய் நின்றுவிட்டுப் பிறகு அவர்களை இரும்புப்பூண் போட்ட கழிகளால் புரட்டி எடுத்த காவல் துறைக்கும் அந்தக் கலகம் புதிய காட்சி.  பின்னர் உள்நாட்டில் ஓர் ஆங்கில நாளேட்டில் வேலைக்கான நேர்காணலில் அந்த வேலையெல்லாம் சும்மா ஒரு பக்கத்தில், தமது இலட்சியம் முபாரக் ஆட்சியை வீழ்த்துவது என்று அவர் சொன்னதைக் கேட்டு பத்திரிகை ஆசிரியர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். வேடிக்கையை நிறுத்திவிட்டு வேலைக்கு வா என்று வேலை போட்டும் கொடுத்திருக்கிறார். ஹமாலவியினது கனவு இத்தனை துலக்கமாக நிறைவேறியிருக்கிறது இப்போது.

துனிசியா எழுச்சி வெற்றி பெற்ற அடுத்த நாளே தொடங்கி முடிய எகிப்து கிளர்ச்சி ஒன்றும் அத்தனை திடீர் போராட்டம் அல்ல...அதன் விதைகள் பல்லாண்டுப் பெருந்துயரத்தின் வெறுப்புணர்வில், அடங்க மறுக்கும் உள் கொதிப்பில், முற்போக்கு சக்திகளின் உள்ளோட்ட கருத்துப் பரப்புதலின் ஆழ் நிலத்தில் ஊன்றப்பட்டிருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆண்டாண்டுகளாய் அடக்கிவைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் கலகம், டிசம்பர் 2006ல் தலைநகர் கெய்ரோவிற்கு வடக்கே மகல்லா நூற்பாலையில் பெரும் போராட்டமாக வெடித்ததைச் செய்தியாளராக அருகிருந்து பார்த்ததோடு அதற்கு ஆதரவும் திரட்டியவர் ஹமாலவி.  தங்களது சர்வதேச செய்தித் தொடர்பாளராக அவரை அந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் கொண்டாடியிருக்கின்றனர். மாணவர்கள், பல் துறை ஊழியர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், இலக்கியவாதிகள்.... எல்லாம் தற்போதைய வரலாற்றுப் போராட்டத்தில் அணிவகுத்ததற்கு இப்படியான சின்னஞ்சிறு உள் வரலாறுகள் உண்டு. துனிசியாவின் வெற்றிக் களிப்பின் தீப்பொறி சட்டென்று இங்கும் பெரிய தீயைப் பற்றவைத்துவிட்டது.

மகம்மது அப்டெலஃப்தா என்கிற எகித்திய பத்திரிகையாளர் "துனீசியா, உனக்கு எங்கள் நன்றி" என்று எழுதிய கவித்துவமான உரைச் சித்திரம், துனீசியா எமக்கு எரிபொருள் ஊட்டியது, எமது எந்திரத்தைப் பற்ற வைத்தது, எமது இரத்தத்தைப் புதுப்பித்தது, எமது ஆர்ப்பாட்டங்களைச் சுற்றி வளைக்கத் திரண்ட பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளின் கண்களில் அச்சத்தை விதைத்தது, பென் அலியின் ஆட்சி அங்கே வீழ்ந்து கொண்டிருக்க இங்கே எமது நாட்டு தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிக் கொண்டிருந்த அதிகாரிகளை துனீசியா கிறங்கடித்தது, எமது ஆட்சியாளரை இங்கே எல்லாம் நன்றாயிருக்கிறது, நலத் திட்டங்கள் அமுல்படுத்தப்படும், லட்சக் கணக்கில் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கச் செய்யுமளவு நடுங்க வைத்தது... என்று நிலைமைகளின் தாக்கத்தை விளக்குகிறது.

ஆனால் முபாரக் இறுதிக் காட்சி வரை நம்பிக் கொண்டிருந்தார்.  தாம் நினைத்தபடி ஓய்வு பெறலாம், தமது மகனை ஆட்சிப் பொறுப்பில் கொண்டு வந்து நடலாம் என்று அமெரிக்காவின் ஆசியை எதிர் நோக்கிய பிரார்த்தனையில் இருந்தார்.  இங்கோ, வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை மக்கள் ஆட்சிக்கு எதிரான தீர்மானமான கலகமாக அனுசரித்துக் கொண்டிருந்தனர்.  அதனால் அமெரிக்க ஆட்சியாளர்களும் தங்களது திரைக்கதை வசனங்களை அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டிருந்தனர்.

அனுபவசாலியான பெரிய திருடன் கன்னம் வைக்கப் போன இடத்தில் சிக்கிக் கொண்டால் சின்ன திருடனைக் காட்டிக் கொடுத்து விட்டுத் தான் மட்டும் தப்பித்து ஓடுகிற வேலை மாதிரி கிட்டத்தட்ட நமது திரைப்படங்களில் வருவது போன்ற சாதுரியத்தை அமெரிக்கச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் உதவியோடு அதிபர் ஒபாமா வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அரபு மண்ணின் எண்ணெய் வளம் சிந்தாமல், சிதறாமல் தங்களை வந்தடைவதற்கும்,  பாலஸ்தீனர்களின் உரிமைப் போர் நடக்கும் மேற்கு காஜா பகுதியில் தங்களது செல்லப் பிள்ளையான இஸ்ரேல் செய்யும் அராஜக நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கும் மிகவும் வாய்ப்பான மண் அது என்று அமெரிக்காவிற்குத் தெரியும்....ஆகவேதான், ஜனநாயகம் தேவை என்ற 'டப்பிங்' குரலைத் தாங்களே கொடுத்துவிடுவது என்று பேசத் துவங்கியது அமெரிக்கா.  சவூதி அரேபியா உள்ளிட்டு அரபு நாடுகளின் எந்தப் பகுதியிலும் ஜனநாயகம் பற்றி பேசாத அமெரிக்கா இப்படி திடீரென்று ஜனநாயகத் துடிப்போடு புறப்பட்டதேன் என்று யாரும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தனக்கு சலாம் போட்டுத் தனது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதுதான் ஒரு நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின் அடையாளம் என்று அமெரிக்கா பல முறை தெளிவாக்கி இருக்கிறது. 

அப்படியான ஒரு பொம்மையாக முபாரக்கை இங்கே இருக்க விட்டு, அதற்காக ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கில் டாலர்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.  அரேபிய தேசிய வாதத்தை முன்னிறுத்தக் கூடாதென்பதற்காகவும், இஸ்ரேலின் திமிர்த்தனங்களுக்குத் துதி பாடவேண்டும் என்பதற்காகவும் மட்டுமே எகிப்து அரசுக்கு  80 பில்லியன் டாலர்கள் கொட்டிக் கொடுத்தது அமெரிக்கா.  அடுத்தடுத்த தலைமுறைகள் இத்தகைய அமெரிக்க அடிமைத்தனத்திற்கு எதிரான சிந்தனைகளோடு வளர்வதற்கும் முபாரக்கின் ஆட்சி உதவியிருக்கிறது.    ஆனால், இப்படி உருவெடுத்து வெடித்திருக்கிற எழுச்சி, இஸ்லாமிய மதவாதத்தின் குரலாக அல்ல, ஜனநாயக-சுதந்திர வேட்கையின் தெறிப்பாக வெளிப்பட்டிருப்பது தான் அற்புதமானது என்கிறார் மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது. (ஃ பிரண்ட்லைன் - பிப்ரவரி 12 - 25).  இஸ்லாமிய இளஞர்களை மதவெறியைத் தூண்டித் தான் திரட்ட முடியும் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருப்போரைக் குப்புறப் புரட்டிவிட்டது இந்த எழுச்சி என்கிறார் ரஷீதா பகத் (பிசினஸ் லைன் - பிப் 15).  அது மட்டுமல்ல, பெரிய அரசியல் சக்தி என்கிற வகையில் இஸ்லாமிய சகோதரத்துவம் என்கிற அமைப்பும் கூட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க மத ரீதியாக ஒருங்கிணைத்துக் கொள்ள முயற்சி எடுக்கமுடியவில்லை. இது இஸ்லாம் தொடர்பான பிரச்சனை அல்ல, ஜனநாயகத்துக்கான கிளர்ச்சி என்று அவர்களே அறிவிக்க வேண்டியிருந்தது.

இரவும் பகலுமாக, ஹோஸ்னி முபாரக் பதவி விலகும் வரை இடத்தை காலி செய்வதில்லை என்று தஹிரிர் சதுக்கத்தில் பாய் படுக்கை தலையணைகளோடு சென்று குடியேறியிருந்த போராளிகளைக் கலைக்க முபாரக் ஆதரவாளர் கும்பல் வந்து தாக்கியபோது, அச்சப்படுவதற்குப் பதிலாக அவர்களின் இலக்கு இன்னும் கெட்டிப் படுத்தப்பட்டு விட்டது.  இணையதள தொழில்நுட்பத்தின் வழியாக ஃபேஸ் புக், டுவிட்ட்டர்..போன்ற செய்திபகிர்வு சாத்தியங்களையெல்லாம் இளைய தலைமுறை அற்புதமாகப் பயன்படுத்தியது நூதனமான விஷயமாகும்.  தமது மக்களைத் திரட்டவும், உலக மக்களுக்கு இந்தப் போராட்டத் தீவிரத்தின் பரவசத்தைப் பரப்புவதும்...என வலைத் தளம் அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பெண்களின் ஈடுபாடும், பங்களிப்பும், தீரமும் இந்தக் கிளர்ச்சியின் இன்னொரு முக்கிய பரிமாணம். 'கடந்த காலங்களில் போராட்டங்களின் போது எங்களை பத்திரமாக விலகி இருக்கச் சொன்ன ஆண்கள், இந்த முறை எங்களையும் உள்ளடக்கிய போராட்டங்களாக அவற்றை முன்னெடுத்தது புதிய சரித்திரம்' என்கின்றனர் வீராங்கனைகள். சதுக்கத்தில் சக போராளி ஆண்களோடு எந்தப் பாலியல் தொல்லையோ, பிரச்சனையோ இன்றி சகஜமாமாக இரவுகளில் தங்கி போராடியதை அவர்கள் இன்று பெருமிதத்தோடு உலக இயக்கங்கள் முன் அனுபவமாக முன்வைக்கின்றனர்.

அரசின் ஆதரவுக் கையாட்படை தேசத்தின் உன்னத கலைச் செல்வங்கள் வைக்கப்பட்டிருக்கும் மியூசியத்தைச் சூறையாடச் சென்றபோது, சாதாரண மக்கள் மனிதச் சங்கிலியாகக் கை கோத்து அரணாக நின்று காத்ததை ஹிந்து நாளேட்டின் வாசகர்களின் ஆசிரியர் எஸ் விசுவநாதன் (பிப்ரவரி 14) பெருமிதத்தோடு சுட்டிக் காட்டுகிறார்.  தேசத்தின் பாதுகாப்பு யார் கையில் என்பதன் பிரதிபலிப்பு அது.

அமெரிக்க அரசின் சார்பாக உடனே எகிப்துக்குப் பறந்து சென்ற அதிகாரி நிலவரங்களை தங்கள் அரசுக்குச் சொல்லி இருக்க வேண்டும்.  ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதில் பின்வாங்கிய இராணுவம் எடுத்த நிலைக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும். துவக்கத்தில் கொல்லப்பட்ட 300 பேரின் படுகொலையும், சுதந்திர வேள்வியில் தாங்களாகத் தங்களை எரித்துக் கொண்டோரின் தியாகமும் இராணுவத்தின் போக்கை தீர்மானிப்பதில் பங்கு வகித்திருக்கலாம்.  இனியும் நீடிக்க முடியாது என்ற கட்டத்தில் முபாரக் ஓடிவிட்டார். ஆரம்பத்தில் சவாலுக்கு நின்றவர், அதற்காகவே பரவலான வெறுப்பை ஈட்டியிருக்கும் மக்கள் விரோதி சுலைமானை தமக்குத் துணையாக துணைத் தலைவராக நியமித்தவர் பிறகு அந்த சுலைமான் மூலம் அறிவிப்பு கொடுத்துவிட்டு பதவி விலகிச் சென்றுவிட்டார்.

பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த கதையின் அடுத்த அத்தியாயம் இப்போது இராணுவத்தின் கைக்குச் சென்றுவிட்டது.  அது ஜனநாயகத்தை நோக்கி நடை போட்டு வர வேண்டியது எதிர்காலத்தின் கையில் இருக்கிறது.  ஒரு ஜனநாயக ஆட்சி அரும்பவேண்டுமென்ற   மக்களின் விருப்பம் அத்தனை சீக்கிரம் நிறைவேறிவிட முடியாத சவால்கள் நிரம்பவே உண்டு.

புரட்சி முற்றுபெற்றுவிடவில்லை என்கிறார் ஹமாலவி. இன்னும் தொடரவேண்டியதிருக்கிறது...கிளர்ச்சிக்கு வந்த மத்திய தர அறிவுஜீவிகள் இந்தக் கட்டத்தோடு எல்லாவற்றிற்கும் ஆறு மாதம் ஓய்வு கொடுத்துவிட்டுத் தங்களது உயர் ஊதிய வேலையை நோக்கிச் சென்றுவிடலாம், ஆனால் குறைந்த ஊதியத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஆலைத் தொழிலாளி போராட்ட ஆயதத்தைக் கீழே போட முடியாது என்கிறார் அவர்.  தொடரும் வங்கி வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டங்கள் அதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

எகிப்து உள்ளிட்டு மத்திய கிழக்குப் பகுதியெங்கும் கிளர்ந்து பொங்கிக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி, உலகெங்கும் சுதந்திர வேட்கை கொண்டிருப்போரை வசீகரித்து ஈர்க்கிறது. புதிய தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தின் விளைவால் பாதிப்புறும் நாடுகளிலுள்ள மக்களை மாற்றுக் கொள்கைகளின் சாத்தியங்களை நோக்கிச் சிந்திக்க உசுப்புகிறது. அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும், ஆயுத பலமிக்க இராணுவத்திற்கும் எதிராக மிகச் சாதாரண மக்கள் ஒன்றுபட்டு உறுதியாக அணி திரண்டு நிற்கும்போது ஆட்சியாளர்களின் நாற்காலிகளை உடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கையைப் புதுபித்துத் தந்திருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் தன்மையை மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்திய மக்களுக்கு - அவர்களை அணிதிரட்ட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களுக்கு உத்வேகமும், புது இரத்தமும், செய்திகளும், பாடங்களும், நம்பிக்கையும் வழங்குகிறது இந்த வரலாற்றுத் தருணம்.

துனிசியாவிலும், எகிப்திலும் கிளர்ச்சிக் காலத்தில் பாரம்பரிய இசையையும், புரட்சி கீதங்களையும்  இசைத்தபடி வீதிகளில் திரண்ட மக்கள் கோரியது விடுதலையை.. ஜனநாயகத்தை..சுதந்திரக் காற்றை.பஹ்ரைனில், துப்பாக்கிச் சூட்டைச் சந்தித்தும் போராட்டங்கள் தொடரும் லிபியாவில், ஜோர்டானில், இன்னும் போராட்டத்தின் அடுத்த கட்டங்களைத் தொடரும் துனிசியாவில்  ....ஜனநாயகத்தின் குரல்கள் எதிரொலித்தபடி மத்திய கிழக்கில் இருக்கும் அரபு நாடுகளின் வரலாறு இப்போது இந்த நூற்றாண்டில் புதிய வரலாறை எழுதத் தொடங்கி இருக்கிறது. உலகெங்கும் வாழும் மனிதகுல விடுதலையின் முகவரியைத் தேடி.....

-எஸ்.வி.வேணுகோபாலன்

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இதுபோல ஒரு மக்கள் எழுச்சி சர்வாதிகார ஆட்சி நடக்கும் ஏகாதிபத்திய நாடான சீனாவிலும் ஏற்படவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. \\\\\ஜனநாயகத்தின் குரல்கள் எதிரொலித்தபடி மத்திய கிழக்கில் இருக்கும் அரபு நாடுகளின் வரலாறு இப்போது இந்த நூற்றாண்டில் புதிய வரலாறை எழுதத் தொடங்கி இருக்கிறது. உலகெங்கும் வாழும் மனிதகுல விடுதலையின் முகவரியைத் தேடி..... /////

  மிக அருமையான விஷயம்!

  பதிலளிநீக்கு
 3. விரிவான அலசல் எஸ்.வி.வி.

  அன்று மாதவராஜிடமும் காமராஜிடமும் பேசிய போது நான் சொன்ன விஷயம் இதுதான்.

  மக்கள் எல்லோருக்குமே இப்போது இருக்கும் கட்டமைப்பிலிருந்து உடைத்துக்கொண்டு வெளிவர வலைதான் உதவப் போகிறது.

  இனி ஒரு புதிய சீர்கேடோ சுரண்டலோ ஊழலோ எதுவாயினும் ஊற்றுக்கண்ணுக்கு மிக அருகில் அது இருக்கும்.

  அதையும் நாம் நம் காலத்துக்குள் இடுகையாய் இட்டு களிப்போம்.

  இது நிச்சயம் நடக்கும்.

  அன்றைக்கு ஹமாலவியின் லட்சியத்தைக் கேட்டுச் சிரித்த பத்திரிகையாசிரியரை ஹமாலவி சொல்லாமல் யாருக்கும் தெரியாது.லட்சியத்தை எட்டிய ஹமாலவியை எகிப்து மறக்காது.

  அப்படித்தானே மாதவ்?

  பதிலளிநீக்கு
 4. 1. When Egypt revolts, Communists & Islamic fundamentalists rejoice... Americans murmer...

  2. When Iran revolts, Americans rejoice, Islamic fundamentalists hate and communists murmer..

  3. When Tibet or China revolts, Americans rejoice, communists hate & call as US conspiracy..

  So, the lust for liberation does not give a damn for capitalism or communism...

  பதிலளிநீக்கு
 5. hi,

  i added ur blog to google reader. Your feed shows essay upto jump break. i want fully essay feed.

  so, go to settings in your blog. click feed settings. enable feed to be shown fully.

  பதிலளிநீக்கு
 6. 4 use of google reader

  http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html

  subscribe option in icon format

  http://subscribeoptioninimageformat.blogspot.com/2011/02/how-to-create-subscribe-option-in-image.html

  வணக்கம் சார்,

  நான் பிளாகில் எழுதுகிறவன் கிடையாது. நான் பிளாகுகளில் படிப்பவன் மட்டும். மேலே உள்ள இரண்டு கட்டுரைகளை மட்டும் பிளாகில் எழுத வேண்யது முக்கியம் என்று நினைத்து நான் அவற்றை எழுதியுள்ளேன். நீங்கள் உங்கள் google buzzல் இந்த இரு linkகுகளையும் தெரிவித்தால் பலரும் பயன் அடைவார்கள்.

  பதிலளிநீக்கு
 7. மக்களின் ந‌ல‌னை புற‌க்கணித்து, சுய‌ ந‌ல‌த்திற‌காய் நாட்டையும் அந்நிய‌ருக்கு அட‌கிவைத்து அந்த‌ குத்த‌கை ப‌ணத்தில் அல‌ங்கார‌ வாழ்க்கையும், அவ‌ல‌ட்ச‌ண அர‌சும் ந‌ட‌த்திய, ந‌ட‌த்துகிற‌, ஆப்பிரிக்க‌, அர‌பு தேச‌த் த‌ல‌வ‌ர்களுக்கு எதிரானது இந்த‌ எழுச்சி. ம‌க்க‌ள் விழித்து எழுகிறார்க‌ள். ந‌ம்மை க‌வ‌னித்துக் கொண்டும், க‌ண்காணித்துக் கொண்டும்தான் இருக்கிறார்க‌ள் என்ற‌ அதிர்வே, ஆள்ப‌வ‌ர்க‌ளின் அள‌வுக்க‌திக‌மான அநியாய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை கட்டுப் படுத்தும்.
  நாம் தேர்வு செய்கின்ற‌ அர‌சியல் பிர‌திநிதிக‌ள்தான் இந்த‌ மந்திரிக‌ளும், பிர‌த‌ம‌ரும் என்ற‌ எண்ண‌த்தை ம‌க்க‌ள் ம‌ற‌க்காதிருந்தால், மந்திரிக‌ள் நாட்டுக்காக உழைப்பார்க‌ள். ம‌க்க‌ள் அவ‌ர்க‌ளை க‌ட‌வுளாக‌ மாற்றி காலில் விழுந்து க‌ட‌வுள்க‌ளாக்கினால், அவ‌ர்க‌ள் குடும்ப‌ம் குட்டிக‌ளைத்தான் வாழ‌வைப்பார்க‌ள், ம‌க்க‌ள் குனியக் குனிய‌ முதுகில் ஏறுவ‌தும், நிமிர்ந்தால் ஓடிவிடுவ‌மான அர‌ச‌ர்க‌ளைப் ப‌ல‌முறை வ‌ர‌லாறு க‌ண்டிருக்கிற‌து. பாட‌மாக் வ‌ர‌லாறு ப‌டித்தாலும், வ‌ர‌லாற்றின் ப‌டிப்பிணையை நாம் ப‌டிக்க‌வில்லை என்ப‌து தான் இந்த‌ த‌லைகீழ் மாற்ற‌ங்க‌ளுக்கான அடிப்ப‌டை.

  பதிலளிநீக்கு
 8. நன்றி மாதவ்...

  வருகை புரிந்தோர்க்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோர்க்கும் நன்றியும், வாழ்த்துக்களும்..
  துனிசியாவை எகிப்தியர் வாழ்த்தியதைப் போன்றே, எகிப்துக்கு லிபிய மக்கள் தங்கள் பாணியில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கின்றனர், கர்னல் கடாஃபியையே வெளியேறச் சொல்லி நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு...
  சுதந்திரத்தின் மீதான காதலன்றி வேறென்ன உண்டு உயிர் ஜீவிப்பதற்கு..

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!