இன்னும் எத்தனை மீனவர்களை பலி கொடுக்கப் போகிறார்கள்?



முந்தா நாள் இரவில் கலைஞர் டிவியில் சற்றுமுன் செய்தியாக  ‘கைதானவர்கள் விடுதலை’ என்று ஓடிக்கொண்டு இருந்தது.  தமிழக மீனவர்கள் 127 பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்களோ என கவனிக்க ஆரம்பித்தேன். பார்த்தால்,  தமிழக மீனவர்களுக்காக   களம் கண்ட கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை என்று பின்னால் வருகிறது.  கடிதம் எழுதி, ஆள் அனுப்பி, நேரில் வற்புறுத்தியும் இலங்கையின் அத்துமீறல் அடங்கவில்லையென்றான பிறகு,  பேருக்கு நடத்திய போராட்டத்தின் கதை   இப்படி சுபமாக  முடிந்திருந்தது. நேற்றைய தினகரனில் முதல் பக்கத்தில், “இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை!” என்று கொட்டை எழுத்துக்களில், மன்மோகன்சிங்கின் படம் போட்டு, செய்தி வெளியிட்டு, மங்களம் பாடியிருந்தார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில்,  நேற்று இலங்கைக் கடற்படையினர் பெட்ரோல்  குண்டு வீசி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மேலும் 21 மீனவர்களை சிறை பிடித்திருக்கிறது. முகமெல்லாம் சிதிலமடைந்து, ராஜா முகம்மது என்பவர் தீக்காயங்களோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சகலதரப்பினரிடமும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தினகரனில் முதல் பக்கச் செய்தி, “உலகக் கோப்பை கிரிக்கெட் கோலாகலமாய் தொடங்கியது” என்பதாக இருக்கிறது!  பற்றியெரியும் தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினையில் இவர்களின் அக்கறையும், கவலையும் இப்பேர்ப்பட்டது!

தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா வலியுறுத்திக்கொண்டும், எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கையினால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கிறது. வெற்று வார்த்தைகள் ஒருபுறமும், மனித உயிர்கள் இன்னொருபுறமும் விழுந்துகொண்டேயிருக்கின்றன. அடங்காத ஆத்திரமே இப்போது மிஞ்சுகிறது.  கோடி கோடியாய் ஊழல் செய்யவும், அதை மறைக்கவும், பிறகு சப்பைக்கட்டு கட்டவுமே நேரமற்றுப் போயிருக்கும்  ஒரு இழிவானக் கூட்டத்திடம் இந்த தேசம் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல், ஆட்சியைப்பற்றி மட்டுமே கவலைப்படும் இந்த ‘மக்களாட்சியில்’ நம்பிக்கை கொள்ள என்ன இருக்கிறது என யோசிக்க வேண்டியிருக்கிறது. ’பொறுத்தது போதும், பொங்கியெழு!” என்ற மனோகரா வசனங்களை தூக்கியெறிந்துவிட்டு, “இனி பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்திழந்தான், அண்ணன் கையை எரித்திடுவோம்” என்னும் பாரதியின் ஆவேசம் நமக்குள்ளிருந்து கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது!

அப்படித்தான் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கொதிப்படைந்து கடைவீதிகளில் மறியல் செய்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியரும்  அவர்களைச் சந்தித்து,  வழக்கம்போல் வாக்குறுதிகளைத் தந்துவிட்டு, ராஜா முகம்மதுவின் மனைவியிடம் ருபாய் ஐம்பதாயிரம் வழங்கியிருக்கிறார்கள்.  வெப்பத்தை அணைப்பதும், தணிப்பதுமே அரசின் வேலையாய் இருக்கிறது. தீர்வுகள் மட்டும் கண்ணுக்குத் தெரியாமலே இருக்கின்றன.

இப்போது நாகப்பட்டினத்திலும், இன்னும் பல மையங்களிலும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். பல்வேறுதரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள்  எழுந்தவண்ணம் இருக்கின்றன. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இலங்கையில் சிறைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின்  மீன்பிடி உரிமையை மீட்டுத்தரக் கோரியும், அட்டை சங்கு மீதான அரசின் தடையை நீக்கக் கோரியும்  பிப்ரவரி 22 அன்று டெல்லியில், நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக சி.ஐ.டி.யூ அறிவித்திருக்கிறது.

இந்தத் தீ மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரியட்டும். இத்தகைய போராட்டங்களே திர்வுகளை உருவாக்க முடியும்.  துனிசியாவில் ஒரு மனிதன்  தள்ளுவண்டியில் காய்கறி விற்றதை, லைசென்சு இல்லை என காவல்துறை அப்புறப்படுத்தியதை அடுத்து, அம்மனிதன் தன் மீது வைத்துக்கொண்ட தீ, இன்று தேசத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதி இருக்கிறது. இங்கே தொழிலாளிகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள்.  எப்போது இந்தியா  பற்றிக்கொள்ளும்?

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வீட்டில் அமர்ந்து இப்படி பொட்டி தட்டி சூடேற்றிக் கொண்டிருந்தால் புரட்சி எப்படி நடக்கும்? களத்தில் இறங்கிப் போராடப்போவது யார்? எப்போது?

    பதிலளிநீக்கு
  2. கனிமொழி கைது... மீனவர் விடுதலைக்காகப் போராடிய தியாகத்திருவுளம்..

    ஆகவே வாக்காளப் பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை..

    பதிலளிநீக்கு
  3. 'அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்' எனும் நாஞ்சில் நாடனின் கட்டுரை நினைவுக்கு வருகிறது மாது அண்ணா.

    பதிலளிநீக்கு
  4. அகற்றப்பட வேண்டிய ஆட்சியாளர்கள் பட்டியலில் மக்கள் விரோத மன்மோகன்சிங்கிற்கு முக்கிய இடம் உண்டு. அவரையும் காங்கிரஸ் கட்சியையும் நாடு கடத்துவதற்கான நியாயங்கள் முழுமையாக உண்டு.

    போராட்டங்கள் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் இளைஞர் பட்டாளம்தான் முன் நின்றது.
    அது போன்ற நிலை இங்கு வருமா? இந்திய இளைஞர்கள்தான் பாழாய்ப்போன உலகக்கோப்பையை
    பார்க்க தொலைக்காட்சி முன் தவமிருக்கின்றார்களே!

    பதிலளிநீக்கு
  5. //கோட்டைப்பட்டியைச் சேர்ந்த//

    கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த

    பதிலளிநீக்கு
  6. தங்களுடைய இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் வளங்களை அழித்த இந்திய மீனவர்களை எந்தவொரு நியதியும் இல்லாமல் விடுதலை செய்தமை குறித்து தாம் அதிருப்தி அடைவதாக இலங்கை வட மாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ். தவரட்ணம் தெரிவித்தார். -செய்தி
    தமிழக மீனவர்களால் தொடர்ந்து இலங்கை மீனவர்கள் துன்பபடுவதை நீங்கள் அறிவீர்களா?

    பதிலளிநீக்கு
  7. வடக்கு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்டுள்ள இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் நூற்றுக்கணக்கில் வந்து தொழிலில் ஈடுபடுவதால், அந்தப் பகுதியில் மீன் வளங்களும் பவளப் பாறைகள் போன்ற கடல் வள கட்டமைப்புகளும் சிதைவடைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்
    http://www.bbc.co.uk/tamil/news/story/2011/02/110217_indianfishermen.shtml

    பதிலளிநீக்கு
  8. எனது மதிப்புக்குரிய நண்பர் கும்மி, நீங்கள் இது பற்றி(தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் படும் தொடர் துன்பம் பற்றி) தயவு செய்து கவனம் எடுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. @baleno

    பல பரிமாணங்களை உடைய இந்தப் பிரச்னையை ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற ஒற்றைப் பரிமாணத்திலேயே அலசுகின்றனர். மற்ற பரிமாணங்களை கவனத்தில் கொள்வதில்லை. நாம் தொடர்ச்சியாக மீனவர்களை சந்தித்து அனைத்து விஷயங்களையும் தொகுத்து வருகின்றோம்.

    கடந்த சில நாட்களாக இப்பிரச்னைக்கு அரசியல் முலாம் பூசப்பட்டு வருகின்றது. சில தமிழக மீனவர்களால், இலங்கை (அல்லது குறிப்பாக ஈழ) மீனவர்கள் பாதிக்கப்படுவது உண்மை. ஆனால், முழுப்பிரச்னையுமே அது மட்டுமே என்பது போல் சிலர் நிறுவ முயல்கின்றனர். (தமிழக மீனவர்களின் அந்த செயல்களுக்குக் கூட இங்கிருக்கும் அரசியல்வாதிகள்தான் முழுக்காரணம்)

    தற்பொழுது கைது செய்யப்பட்ட மீனவர் பிரச்னையும், இதுவரை கொல்லப்பட்ட மீனவர் பிரச்னையும் சற்றும் தொடர்பில்லாத, முழுதும் வேறுபட்ட பிரச்னைகள். அதனை இங்கு நான் அழுத்தமாக பதிவு செய்கின்றேன்.

    இதுவரை இப்பிரச்சனை தொடர்பாக நான் பார்த்த கட்டுரைகளில் சிறப்பானதாக தெஹல்காவின் கட்டுரை அமைந்துள்ளது. எந்தச் சார்புமின்றி, அனைத்து விஷயங்களையும் அலசியுள்ளது.

    தொடர்ச்சியாக பதிவுலகுக்கு வர நேரமில்லாச் சூழல். அதனால் விரிவாக பேச முடியவில்லை. முடிந்தால் ஓரிரு நாளில், இரண்டு பிரச்னைகளை பற்றியும் விளக்கமாக பதிவிடுகின்றேன். மற்ற விஷயங்களையும் பதிவிட முயற்சிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. நண்பர் கும்மி, உங்கள் பதிலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!