மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்!



இறுக்கக் கட்டியிருக்கும் அவரது மண்டைக்குள் இருப்பதில் கொஞ்சம் வெளிவந்திருக்கிறது. பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டு கள்ளமௌனம் சாதித்துக் கொண்டும், அவ்வப்போது, ‘எனக்குத் தெரியாது’, ‘விரைவில் சரி செய்யப்படும்’, ‘பரிசீலனை செய்கிறது அரசு’ என்று இரண்டொரு வார்த்தைகளால் முனகிக்கொண்டும் இருந்த இந்தியப் பிரதமர் நேற்று காலை 11 மணிக்கு , அவரது இல்லத்தில் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர்களுக்கு  பேட்டியளித்து இருக்கிறார்.

 
ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவகாரங்கள் தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லையென்றும், தனக்கும் அதற்கும் எப்போதும் சம்பந்தமில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.  சம்பந்தப்பட்ட முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு  தனது அரசு சித்தமாக இருப்பதை தெரிவித்திருக்கிறார். ஆ.ராசாவை திரும்பவும் அமைச்சராக்கியதற்கு கூட்டணி அரசுக்காக செய்துகொண்ட சமரசமே காரணம் என்றிருக்கிறார்.  தான் ஒன்றும் நொண்டி வாத்து அல்ல என மறுத்திருக்கிறார். சிறு சிறு தவறுகள் தன்னிடம் இருந்திருக்கலாம், ஆனால் மற்றவர்கள் சொல்வது போல குற்றவாளி அல்லவென்று சொல்லி சீசரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  தன் மீது எந்த களங்கமுமில்லை என்பதை அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் செய்துகொண்டு இருந்தன. ஆனால், அவரது முகம் கிழிந்து தொங்கியதையும், வார்த்தைகள் நாற்றமெடுத்ததையுமே பார்க்க முடிந்தது.

ஊழலும், விலைவாசி உயர்வும் நாட்டில் முன்னுக்கு வந்துள்ள இரு வேறு பிரச்சினைகள் என்று சொல்லிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழலைத் தடுக்க முடியாது எனவும் ஒருக் கட்டத்தில் சொல்கிறார்.  நான் மட்டுமல்ல, யார் வந்தாலும் இதுதான் கதி என்பதே அதன் அர்த்தமாயிருக்கிறது. சுனாமியைப் போல, புயலைப் போல அவையெல்லாம் இனி  இயற்கைச் சீற்றங்கள் என்னும் லேபிள்களில் அடங்கும் என்று சொல்லிவிட்டார். ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘அமெரிக்கப் பேரரசு’ புத்தகத்தின் பக்கங்களும், அதில் வந்த சில முகங்களுமே இந்த நேரத்தில் உள்ளுக்குள் ஓடுகிறது.

அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மானியங்களால் இந்த அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றதுதான்  இந்த ஊழலும் என்று  விளக்கம் அளிக்கிறார். அதாவது,  உணவுதானியம், உரம், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தையும்,  ஸ்பெக்ட்ரம் முறைகேட்டையும் ஒரு தராசில் நிறுத்திவைத்து தேசத்தின் முன்னே காட்டுகிறார். அதாவது,  2ஜீ அலைவரிசையை, தாங்கள் விருப்பப்பட்ட பெரும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததும்  மானியம் என்கிறார். என்ன  புத்தி இது?

மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. பிரதமர் மன்மோகனன்சிங்கிற்கு இப்போதும் நெருடலாகவும், உறுத்தலாகவும் இருப்பது, கோடி கோடியாய்  ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு,  அன்றாடங்காய்ச்சிகளுக்கு மானியமாய் கொடுப்பதன் மூலம் ஏற்படும் வருமான இழப்புத்தான். இந்த ஒரு ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட 1.76 லட்சம் கோடியைக்கொண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் இரண்டு முழு ஆண்டுகளுக்கு முழுமையான உணவு மானியம் வழங்க முடியும் என்கிறார் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி.

இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார நிபுணர்?
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார  மேதை?
பெரும் ஊழல்களால் தேசத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிற- பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்து  ஏழைகளின் வயிற்றில் அடிக்கிற-  ஒரு ஆபத்தான பொருளாதார அடியாள்!

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அற்புதம் மாதவ்...
    இன்னும் ஆழமான விஷயங்களோடும், மக்களைத் தாக்குகிற
    கொள்கை அம்பலப்படுத்துதலோடும், கல்வி-பொது சுகாதாரம் உள்ளிட்டு
    மறுக்கப்படும் நிதி, தவிர்க்கப்படும் முன்னுரிமை, தட்டிக் கழிக்கப்படும் பொறுப்பு
    என இந்தப் பதிவை இன்னும் கூடுதல்
    சமூக-பொருளாதார நிலவரங்களின் கலவரங்களின் பின்புலத்தில்
    கனப்படுத்தினாலும் நல்லது.

    பொருளாதார அடியாள்கள் கூட எப்போதாவது உண்மையைச் சொல்லிவிடக் கூடும்
    ஏகாதிபத்திய பொருளாதார நலனின் அடிமைகள்
    அதைவிடவும் ஆபத்தானவர்கள்

    மகாகவி பாஞ்சாலி சபதத்தில் விதுரனை துரியன் ஏசுவதாகக் கூறும் வார்த்தைகளை
    நினைத்துப் பாருங்கள்:

    ஐவருக்கு நெஞ்சும் - எங்கள்
    அரமனைக்கு வயிறும்
    தெய்வம் அன்று உனக்கே -
    விதுரா!
    செய்து விட்டதேயோ?”

    தேசத்தின் சொத்துக்களையும், இறையாண்மையையும் வேறெங்கோ
    இடம் பெயர்க்க நெஞ்சு துடித்திருக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு வயிறு மட்டும் இங்கே, சிந்தனை அங்கே!

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் எழுப்பியிருக்கிற கேள்விகள் நியாயமானவை!

    பதிலளிநீக்கு
  3. நீண்ட நாட்களுக்கு பின், ஒரு நல்ல பதிவு!!

    பதிலளிநீக்கு
  4. //அதாவது, உணவுதானியம், உரம், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தையும், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டையும் ஒரு தராசில் நிறுத்திவைத்து
    தேசத்தின் முன்னே காட்டுகிறார்//.

    //பொருளாதார அடியாள்கள் கூட எப்போதாவது உண்மையைச் சொல்லிவிடக் கூடும்
    ஏகாதிபத்திய பொருளாதார நலனின் அடிமைகள்
    அதைவிடவும் ஆபத்தானவர்கள்//.

    காமன் வெல்த் விளையாட்டில்
    உருட்டப்பட்ட 70 ஆயிரம் கோடியில் 780 கோடி ரூபாய்கள் தலித்துக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிலிருந்து கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு சோறு பதம் மட்டுமே. தமிழகத்தில் கலர் டி வி, ஒரு ரூபாய் அரிசியிலும் இந்தக்கொடுமைதான். சிறப்புக்கூறு திட்டத்தில் ஆதர்ஷ், 2ஜி, எஸ் பாண்டு, எல்லாமே அடக்கம்.ஏன் அடக்கமாக செயல்படுவதாகக்கூறப்படும் (!) அரசின் கேபிள் கார்ப்பொரேஷனிலும் நிலைமை இதுதான். ஜனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினரை வஞ்சிக்கும் பொருளாதார மேதைகள் நிரம்பிய நாடு இந்தியா.

    பதிலளிநீக்கு
  5. மிக சரியான கருத்து
    இதே தலைப்பில் ஒரு புத்தகம் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  6. கொடுக்காத ஒன்றை மானியம் என்ற மாய் மால வார்த்தை பயன்பாட்டை பொருளாதார மேதைகள் என்று
    சொல்லி திரிபவர்கள் மக்களை ஏமாற்றி கொள்ளை வரி வசூலித்து அதை மக்களுக்கே மானியமாக அளிப்பதாக ஒரு
    வித்தை காட்டி அனைவரையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மாறி மாறி ஏமாற்றி வருவது மிக சர்வ
    சாதாரணமாக நடக்கிறது. மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்ற கூத்துகளை பணம் கொடுத்து
    பார்க்கும் மாயை இல் இருந்து என்று விழித்து, சிந்தித்து செயல்படுகிறார்களோ
    அன்று தான் நம் நாட்டிற்கு விடிவு.
    பாலா

    பதிலளிநீக்கு
  7. கொடுக்காத ஒன்றை மானியம் என்ற மாய் மால வார்த்தை பயன்பாட்டை பொருளாதார மேதைகள் என்று
    சொல்லி திரிபவர்கள் மக்களை ஏமாற்றி கொள்ளை வரி வசூலித்து அதை மக்களுக்கே மானியமாக அளிப்பதாக ஒரு
    வித்தை காட்டி அனைவரையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மாறி மாறி ஏமாற்றி வருவது மிக சர்வ
    சாதாரணமாக நடக்கிறது. மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்ற கூத்துகளை பணம் கொடுத்து
    பார்க்கும் மாயை இல் இருந்து என்று விழித்து, சிந்தித்து செயல்படுகிறார்களோ
    அன்று தான் நம் நாட்டிற்கு விடிவு.
    பாலா

    பதிலளிநீக்கு
  8. இனிய தோழர் திரு மாதவராஜ்,
    இந்திய தொலை காட்சி நிறுவன பிரதிநிதிகளின் கேள்விகள் மிகவும் சாரமற்ற, மேம்போக்கான கேள்விகளாக இருந்ததை கவனித்தீர்களா? இப்படி சப்பை கேள்விகள் கேட்டு அதற்கு மிகவும் மேம்போக்கான பதில்களை பெற்று மக்களுக்கு காட்ட வேண்டியதின் பின்னணி என்ன என்று சற்றேனும் யாரவது சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  9. /பொருளாதார அடியாள்கள் கூட எப்போதாவது உண்மையைச் சொல்லிவிடக் கூடும்
    ஏகாதிபத்திய பொருளாதார நலனின் அடிமைகள்
    அதைவிடவும் ஆபத்தானவர்கள்/

    மிக சரியான கருத்து

    பதிலளிநீக்கு
  10. மன்மோகன் சிங்கின் கையாலாகத்தனம் பரிதாபமாக அம்பலமாகியுள்ளது. ஒருபக்கம் ஏதோ ஒரு தடவையாவது பேருக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு மழுப்பி விடலாம் என்று பார்த்தால் வசமாகச் சிக்கிக் கொண்டது வெளி உலகிற்கு தெரிந்து விட்டது. -அதுவும் டிஜிட்டல் காமிராவின் கண்கள் டாக்டர் சிங்கின் உடல்மொழியை அப்படியே பதிவு செய்து மன்மோகனனின் உளவியலையும் ஊடுருவி விடுகிறது.கள்ளத்தனம் என்ற சொல்லாடல் மிகப்பொருத்தமே.-குமரகுருபரன்

    பதிலளிநீக்கு
  11. மாதவராஜ் , நல்லபதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. என் கொதிப்பும், என் ப‌திவாய்
    "ஒரு க‌ம்ப‌னியின் CEO, சில அதிகாரிக‌ளின் த‌வறுக‌ளை, அவர்க‌ள் க‌ம்ப‌னியின் ம‌ற்ற‌ கூட்டாளிக‌ளின் ஆட்க‌ள் ஆக‌வே என்னால் ஒன்றும் செய்ய‌ முடிய‌வில்லை. ஆனால் நான் நல்ல‌வ‌ன். க‌ம்ப‌னி திவால‌வ‌த‌ற்கு நான் பொறுப்பில்லை, கூட்டாளி த‌ரும‌ம் என்னைக் க‌ட்டுப் ப‌டுத்துகிற‌து என சொல்வ‌து போல் இருக்கிற‌து, பிர‌த‌ம‌ரின் கூட்ட‌ணி தர்ம‌ம் பேச்சு. என் பார்வை ச‌ரியா ம‌து சார்? முடிந்தால் ஒரு விசிட் வருங்க‌ள் .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!