“ஆஹா வென..”



இந்தப் படத்தை பார்த்ததும் சட்டென்று உற்சாகம் பற்றிக் கொள்கிறது.  மக்களின் கோபம் எப்போதுமே  நரம்புகளில்தான் முதலில்  தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.  பயந்து, அடங்கி, மௌனமாய் சகித்து, துயரங்களைச் சுமந்து வாழ்ந்துகொண்டு இருக்கும் மக்கள் எப்போதாவது இப்படி நிமிர்ந்துவிடும்போது, ‘ஆஹாவென’ குதிக்க வைக்கிறது.  அதிகாரங்களையும், ஆதிக்கங்களையும்   உடைத்து நொறுக்கும் சக்தி மக்களிடம் இருக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு  சோற்றுப் பதம் இது. ஒருநாள் விடியும் என்னும் நம்பிக்கையை இங்ஙனம்  தக்க வைத்துக்கொண்டு காலத்தை எதிர்கொள்ள வைக்கிறது.

இந்தப் படம் ஒரு அடையாளம்தான். உலகம் முழுவதும் அங்கங்கு சமீபத்தில் தென்பட்ட அலைகளின் ஒரு குறியீடு போலவும் தோன்றுகிறது. தமிழக மீனவர்கள் தாக்குதல்களுக்கு எதிராக இங்கு இணையத்தில் எழுந்த சீற்றத்திலிருந்து  ஆரம்பித்து  சின்னதும்  பெரியதுமாய் எவ்வளவு காட்சிகள். இதோ, அருகில் உத்தப்புரத்தில்  ஆதிக்க சக்திகளையும், ஆட்சியாளர்களையும் மீறி, ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு தயாராகிச் சென்று கைதாகியிருக்கிற மூவாயிரம் சி.பி.எம் தோழர்களின் தலித் மக்களுக்கான போராட்டம்  ஒரு நம்பிக்கை.  ஜார்கண்டில் பழங்குடி மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக்சென் மீது அரசு ‘ராஜதுரோக’ குற்றம் சுமத்தி சிறையில்  அரசு அடைத்ததை எதிர்த்து வட மாநிலங்களிலும், லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களிலும் நடைபெற்று வருகிற பேரணிகளும், கண்டன முழக்கங்களும் இன்னொரு நம்பிக்கை. 

இப்படிச் சுற்றிப் பார்க்க பார்க்க, தொலை தூரங்களிலும் நெருப்பின் வெளிச்சம் உயரமாய்த் தெரிகிறது.  துனீசியா  நாட்டின் சாலையொன்றில்  காய்கறி விற்று தனது வயிற்றுப்பாட்டை நடத்தி வந்த பவுவாசிசி என்னும் இளைஞனை உரிமம் இன்றி காய்கறி விற்றதாகச் சொல்லி காய்கறிகளை காவல்துறை பறிமுதல் செய்தது. தனது உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அந்த இளைஞன் எதிர்ப்பைக் காட்டினான். அந்தத் தீ,   அந்த இளைஞன் வாழ்ந்து வந்த சிடி பவுஜத் என்னும் நகரத்தில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. மக்களின் சீற்றமாய் பரவி துனிசியா முழுவதும் பரவியது. அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த அந்நாட்டு ஆட்சியாளர்களின் சுரண்டல், ஊழல்களால் அவதிப்பட்டு வறுமையிலும், வேலையின்மையிலும் வெந்துகொண்டு இருந்த மக்கள் நெருப்பாய் உருக்கொண்டார்கள். இராணுவம் மக்களின் முன்னால் செயலற்றுப் போக, ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு ஓடினான். ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஓளிவிளக்காய் அந்தத் தீ  எரிந்துகொண்டு இருக்கிறது. இது பெரும் நம்பிக்கை!

அதற்குள் அரபு உலகத்தின் முக்கிய தேசமும்,  பெரும் வரலாறும் கொண்ட எகிப்திலும் இப்போது தீ பற்றிக்கொண்டு இருக்கிறது.   முப்பது ஆண்டுகளாய்  அமெரிக்கத் தயவோடும், வழிகாட்டுதலோடும் ஆட்சி நடத்தி  வரும் அந்நாட்டின் ஹோஸ்னி முபராக் அரசுக்கு எதிராக மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமெரிக்காவின் தாராளமயக் கொள்கைகளின் விளைவுகள் எகிப்தில் சாதாரண, அடித்தட்டு மக்களை வாழ்வின் விளிம்புக்கு தள்ளியிருக்கின்றன. அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறைகளையும்  மீறி  கெய்ரோவில் பத்து லட்சம் பேர் திரண்டிருக்கின்றனர். தங்கள் குறிவைத்து நின்ற இராணுவத்தினரிடம் அவர்கள்  “எகிப்தா, முபாரக்கா” என்று கணைகள் தொடுத்து நிலைகுலைய வைத்துள்ளனர். மக்களின் குரல்களில் எகிப்து இப்போது விழித்துக்கொண்டு இருக்கிறது. மாபெரும் நம்பிக்கை!

இதுதான் காலம். இதுதான் வரலாறு. நம்மைச் சுற்றி நடக்கும் அத்தனை அநியாயங்களுக்கும் , அராஜகங்களுக்கும், நம்மைச் சுற்றியே  தீர்வுகளும் இருக்கின்றன.  ‘எதுவும் செய்ய முடியாது’, ‘இப்படியே இருக்க வேண்டியதுதான்’, ‘கலி முத்திட்டு’ என்று அவநம்பிக்கையும், வெறுமையும் கொண்டவர்கள்  இந்தக் காட்சிகள் சொல்லும் உண்மைகளைக்  கேட்கட்டும். வெங்காய விலையேறினால் என்ன, பெட்ரோல் விலை ஏறினால் என்ன, எத்தனை லட்சம் கோடி ஊழல் நடந்தால் என்ன என்று இருப்பவர்கள்,  உசுப்பி விடுகிற இந்தச்  செய்திகளை வாசிக்கட்டும். ஒரு காய்கறி விற்ற இளைஞன், அதோ மகாகவி  பாரதியின் ‘அக்கினிக் குஞ்சாய்’ ஒரு தேசத்தையே வெந்து தணிய வைத்துக்கொண்டு இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளட்டும்.  சிறு பொறி போதும்! அதுவரை, வெப்பத்தை  இழக்காமல் இருப்போம்! அடங்கிப் போகிறவர்கள் ஒருநாள் அத்து மீறுவார்கள். அது மகாகவின் “ஆஹாவென....”  எழும். 

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. // இதோ, அருகில் உத்தப்புரத்தில் ஆதிக்க சக்திகளையும், ஆட்சியாளர்களையும் மீறி, ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு தயாராகிச் சென்று கைதாகியிருக்கிற மூவாயிரம் சி.பி.எம் தோழர்களின் தலித் மக்களுக்கான போராட்டம் ஒரு நம்பிக்கை. //
    நம்பிக்கை உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தீண்டாமைக்கு எதிரான சிபிம்ன் போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    சாதிய ஒடுக்குமுறைகளை நடத்தும் அதை சுயநலத்துக்காக பாதுகாக்கும்
    தலைவர்கள் நிறைந்த கட்சிகளுடன் மாறி மாறி தேர்தல் உடன்பாடு கொள்வது
    எந்த அளவுக்கு இந்த போராட்டங்களுக்கு உதவும்? ஐக்கிய முன்னணி தந்திரத்தால்
    இந்த சாதிய வெறிபிடித்த தலைவர்கள் அல்லது அந்த கட்சிகளில் உள்ள உள்ளூர்
    தலைவர்களாவது மனம் மாற்றம் அடைந்துள்ளனரா?

    பதிலளிநீக்கு
  3. கொதிப்பு உயர்ந்து வரும்... நம்பிக்கைகள் விதைக்கிற காலம்தான் இது .. நாம் வெல்லுவோம்

    பதிலளிநீக்கு
  4. மாது!
    எட்டரைக்கோடிப்பேர் உள்ள நாகரீகத்தின் தொட்டில் எகிப்தில் பத்து லட்சம் பேர் திரண்டெழுந்து ஆட்சியிலிருப்பவரை அகற்ற கொண்ட ஆவேசம் நம்மைக்கொள்ளை கொள்ளுகிறது. சென் குப்தா கமிட்டியின் அறிக்கையில் உள்ள நமது இருபது ரூபா அன்றாடம் சம்பாதிக்கும் கூட்டம் திரண்டால்...நாடு உழைப்பவர் வசம் வந்து விடும்.

    பதிலளிநீக்கு
  5. //காய்கறி விற்ற இளைஞன், அதோ மகாகவி பாரதியின் ‘அக்கினிக் குஞ்சாய்’ ஒரு தேசத்தையே வெந்து தணிய வைத்துக்கொண்டு இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளட்டும்.//

    ஆஹா அருமையாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. //வெங்காய விலையேறினால் என்ன, பெட்ரோல் விலை ஏறினால் என்ன, எத்தனை லட்சம் கோடி ஊழல் நடந்தால் என்ன என்று இருப்பவர்கள், உசுப்பி விடுகிற இந்தச் செய்திகளை வாசிக்கட்டும். ஒரு காய்கறி விற்ற இளைஞன், அதோ மகாகவி பாரதியின் ‘அக்கினிக் குஞ்சாய்’ ஒரு தேசத்தையே வெந்து தணிய வைத்துக்கொண்டு இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளட்டும். சிறு பொறி போதும்! அதுவரை, வெப்பத்தை இழக்காமல் இருப்போம்! அடங்கிப் போகிறவர்கள் ஒருநாள் அத்து மீறுவார்கள்.//

    நம்பிக்கை உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. எகிப்தில் அரசு சீன அரசு போல் எதிர்ப்பாளர்களை ஒடுக்கவில்லை.தியனன்மான் சதுக்கத்தில் நடந்ததை நீங்கள் மறந்துவிட்டீர்களா.ஆஹாவென மக்கள் எழுச்சி சீனாவில் ஏற்பட்டால் நீங்கள் அதை எப்படி எழுதுவீர்கள் என்று தெரியாதா என்ன.சோவியத் யுனியன் வீழ்ந்த பின் எந்தெந்த நாடுகளில் எப்படி எழுச்சி ஏற்பட்டது,
    அதிகாரத்தில் இருந்தவர்கள் எங்கே போனார்கள் என்பதையும் நினைத்து
    பாருங்கள்.பெர்லின் சுவருக்கு என்னவாயிற்று, ஸ்டாலின்,லெனின்
    சிலைகள் உடைக்கப்படவில்லையா.
    அதுவும் யுகப்புரட்சி என்று ஒப்புக்கொள்வீர்களா.மே.வங்கத்தில் இடதுசாரி அரசு தேர்தல் மூலம் தூக்கி எறியப்படுபடும் போது, ஆகா யுகப்புரட்சி என்று நாங்கள் சொல்லுவோம், நீங்கள் ?.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!