ஆழி சூழ் உலகு - ஜோ டி குருஸ்


மொழியின் மீது அக்கறையும், இலக்கியத்தின் மீது தீராத காதலும் கொண்டிருக்கிற வாசகனைத் தடுமாறச் செய்கிற விவாதங்கள் இலக்கியப்புலத்தில் அடிக்கடி நிகழ்வதுண்டு. யதார்த்த வாதம் முதலாளித்துவத்தின் வெளிப்பாட்டு முறை, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைப் படைப்பாக்கிட யதார்த்தவாதத்தில் சாத்தியமில்லை. ஏனென்றால் யதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்று உரைத்தார்கள்.

யதார்த்தவாதத்தின் எல்லா சாத்தியங்களையும் தமிழ்ப் படைப்பாளிகள் பயன்படுத்தியிருக்கவில்லை. யதார்த்த மொழி நடையில் சொல்லித் தீர்ப்பதற்கு ஒராயிரம் விஷயங்கள் இன்னும் படைப்பின் கையில் மிச்சமாக இருக்கிறது என்கிற உண்மையையும் கூட வாச கன் கண்டறிந்திட “ஆழிசூழ் உலகு” - என்கிற பரதவர்களின் வாழ்வியல் வரைபடம் உதவி செய்கிறது. நிலத்தின் விளிம்பில் கடலா, கடலின் விளிம்பில் நிலமா என்கிற மயக்கத்தை எல்லோருக்குள்ளும் கடல் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. கடலின் விஸ்தாரம், அதன் பிரம்மாண்டம், அது கலைத்துப் போட்ட வாழ்வின் அதிகணங்கள் என யாவற்றையும் உள் வாங்கிட எப்போதும் வாசகன் விரும்புகிறான். ஹெமிங்வே யின் ‘கடலும் கிழவனும்’ காலம் கடந்தும் வாசகனின் மனதில் பெரும் கிளர்ச் சியை ஏற்படுத்துவதற்குக் காரணம் வாசகன் அறிந்திட சாத்தியமில்லாத கடலுக்குள் நாவல் நிகழ்வது தான்.

நாவலின் பக்கமெல்லாம் பொங்கிப் பெருகி வருகின்ற விதவிதமான மீன் கள். அவை எப்படிப்பட்டவை தெரியுமா? ஓங்கல் மீன்களின் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மற்ற பகுதிகள் கரு நீலமாகவும் வழவழவென பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். முத லில் பார்ப்பவர்கள் மிரண்டு விடுவதுண்டு. போஸ்கோ எனும் மீனவனும் அப்படித்தான் ஒங்கலைப் பார்த்துப் பயம் கொள்கிறான். அப்போது தொம் மந்துரை எனும் தேர்ந்த கடலோடி அவனுக்குச் சொல்கிறான். “போஸ்கோ, பயப்புடாத. ஒங்கல்வ ரொம்ப நல்லதுவ. காந்திமாரி, சாதுவானதுவ. தோணியள்ல போற நம்ம ஆள்க தவறி கீழ வுழுந்திற்றான் வயின்னா இந்த ஒங்கல்வதாம் சுத்தி நின்னு சுறாப்பயல்வ கிட்ட வராம காப்பாத்துமாம்”. மீனுக்கும் பரதவர்களுக்குமான புரிதலும், கடலோடு இயைந்த அவர்களின் வாழ்வையும் அறிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது இந்த ஒரு துளி.
கடலின் விதவிதமான ரூபங்களை யும் கூட வாசகன் தொம்மந்துரையெனும் தேர்ந்த கடலோடியின் கண்களின் வழியாக கண்டடைகிறான். கருத்துப் பெருத்த வரிப்புலியன் தண்ணீருக்கு அடியில் மற்றொரு கருப்பும் அலைகிறது. அது என்ன தெரியுமா; “வரிப்புலியும் எப்பவும் ஜோடியாத்தாம் அலையும். இப்ப மாட்டிக்கிட்டது ஆணா, பெண்ணா தெரியலா”. “ஆணா இருக்கும் அது தாம் ஜோடியா நிக்கிற பொட்டகிட்ட பலத்த காட்டுறதுக்கு இந்த துள்ளு துள்ளுறாம்”. “சரிதாம் அண்ண, மரத்துகிட்ட சேர்ந்து வரும் போது பார்த்தமில்ல. அதுக்கு கீழேவே ஒரு கறுப்பு வந்துகிட்டேயிருக்கு”. “யாருக்குத் தெரியும், பரந்த கடல்ல ஜோடிய சுத்திக்கிட்டு இருந்திருப்பாவ, இப்ப நம்மாளு எதுலேயோ மாட்டிகிட்டான், நெனச்ச இடத்துக்கு போவ முடியல்லியே, முத்தங்கித்தம் குடுக்க முடியல்லியேன்னு சோகமா சுத்திக்கிட்டு இருக்குமாயிருக்கும்”. ஒரு படைப்பின் அதீதமான சாத்தியங்களையும் தேர்ந்த படைப்பாளியால் எட்டி விட முடியும் என்பதை தன்னுடைய முதல் நாவலில் நிரூபித்தவர் ஜோ. டி. குரூஸ்.

ஆமந்துறையெனும் பரதவர்களின் கிராமத்தில் வாழ்ந்த தொம்மந்துரையெனும் மீனவனின் கொடி வழிக் கதைதான் “ஆழிசூழ் உலகு” என்ற போதும் கதைகள் யாவும் காலக்கிரமமாக வரிசை வரிசையாக அடுக்கித்தரப்படவில்லை. பரதவர்களின் குலப்பாடகனான ஜோ.டி.குரூஸ் அவரது ஞாபகங்களின் ஊடாகப் பயணித்து 1933ல் துவங்கி 1985 வரையிலுள்ள அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலான ஆமந்துறைக்கும், தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சிக்கும் உள்ள உறவு. இந்த ஊரின் காவல் தெய்வம் போல வாழ்ந்த காகுச்சாமியார் எனும் கிறிஸ்தவ பாதிரியின் பிரம்மாண்டமான ஆகிருதி. ஊருக்குள் நிலத்திலும் மனிதர்களுக்குள் நிகழும் மனவெழுச்சி, மாற்றங்கள், கோபங்கள், பாலியல் இச்சைகள், பாலியல் மீறல்கள் என யாவற்றையும் ஒரு குலமரபுப் பாடலின் நுட்பத்தோடு பதிவு செய்திருக்கிறார். கடலின் அலையைப் போல காலத் தின் பெருவெளிக்குள் முன்னும், பின்னுமாக அலைவுறுகிறது நாவல். அவற்றிற்குள் காட்சிப்படுவதெல்லாம் பரதவ மக்களின் தனித்த மனக்கிலேசங்களே என்பதை வாசகன் கண்டடைவான்.

பரதவர்களின் வாழ்விடமான கடல் நிலையாமையின் அடையாளம், விவசாயம், கால்நடை பராமரித்தல் போன்ற தமிழர்களின் நிலம் சார் தொழில்களில் இருக்கும் குறைந்தபட்ச நிச்சயம் கூட பரதவ மக்களின் குலத்தொழிலான மீன் பிடித்தலில் சாத்தியமில்லை. இந்த நிச்சயமின்மையே அவர்களின் குணநலன்களையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இயற்கை முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான பெருத்த நம்பிக்கையை புனித அந்தோணியாரை (அய்யா) தவிர வேறு எவரும் அளித்திடவில்லை. அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிற போதும், சுக்கு நூறாகச் சிதைகிற போதும் அய்யாவின் காலடியில் மண்டியிட்டுக் கதறிக்கடைத்தேறுகிறார் கள். “கண்ணீர்க் கடலில் தத்தளிப்பவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக இருக்கிறது மதம்”, என மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருப்பார். அதற்கான இலக்கிய சாட்சியை நாவலெங்கும் நாம் வாசித்தறிகிறோம்.

கிறிஸ்தவம் வந்தடைந்த செய்தியை நாவல் ஒரு புள்ளியில் சொல்லிச் செல்கிறது. நாயக்கர்களிடம் இருந்தும்., முகம்மதியர்களிடம் இருந் தும் எங்களைக் காப்பாற்றினால் நாங்கள் கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகிறோம் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று, போரில் எதிரிகளை வீழ்த்தியதற்கு காணிக்கையாக கிறிஸ்தவத்திற்குள் கரைந்தார்கள் என்றொரு வாய்மொழி வரலாறு இத்தென்பகுதி கடற்கரைக் கிராமங்களில் புனித சவேரியாரின் பெயரால் சொல்லப்பட்டு வருவதையும் நாவல் பதிவு செய்கிறது. கடற்கரைக் கிராமத்துக் கிறிஸ்தவ திருவிழாக்களையும் கூட நாவல் அழுத்தமாக அதன் அழகியலோடு பதிவு செய்துள்ளது. தேர்த்திருவிழாக்களில் ஊர்ந்து வரும் சப்பரங்களும், அவற்றில் வீற்றிருக்கும் புனித சவேரியார், அந்தோணியார், தேவமாதா ஆகியோரின் சொரூபங்களும் ஐரோப்பிய கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் புதிதானது.

தென்குமரிக் கடற்கரையில் கோயில் கொண்டிருக்கும் கன்னியின் மீதான பரதவர்களின் நம்பிக்கை மகத்தானது. கடலையும், கடலுக்குள் மீன்பாடு அமைவதையும், பெரு வெள்ளம், ஆழிப் பேரலை இவற்றில் இருந்தும் தம்மைக் காக்கும் பெரும் சக்தியவள் என்கிற அவர்களின் நம்பிக்கையைக் கண்டறிந்ததால்தான் இங்கே கிறிஸ்த வத்தை பரப்பிட வந்த புனித சவேரியார், அவர்களுக்குள் மாதா வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் தவிர வேறு எங்கும் யேசுவின் தாயான மேரிமாதாவைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இல்லை. மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள், பரதவர்களின் தொல் சடங்குகள், குலமரபு, நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு அதன் வழியாகவே மதத்தையும், மத நிறுவனங்களையும் கட்டமைத்தனர் என்கிற சமூகவியல் ஆய்வினையும் நாவல் கொண்டிருக்கிறது.

தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் கலந்திருக்கிற கத்தோ லிக்க கிறிஸ்தவத் திருச்சபைகளின் மீதான விமர்சனத்தையும் நாவல் வைத்திடத் தவறவில்லை. கோயில் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கும் பரதவர்களின் வாழ்வை மேலேற்றுவதற்குப் பதிலாக திரு விழாக்கால காணிக்கையிலும் ஏலம் விடும் பொருட்களின் மூலமாக கிடைக் கும் பணத்தின் மீதும் மட்டுமே குறியாக இருக்கும் சாமியார்கள் பாலியல் மீறல்களை நிகழ்த்துவதையும் நாவல் தொட்டுச் செல்கிறது. இது மட்டுமல்லாது எல்லா மீனவக் கிராமங்களையும் ஊர்க்கட்சி, சாமியார் கட்சி என இரண் டாகப் பிரித்துப் போட்டு தனக்கு வேண்டியவர்களை மட்டும் நிர்வாகத் தில் வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்பவர்களையும் நாவல் படம் பிடித் துக் காட்டுகிறது. இந்த எளிய விமர்சனங்களை எல்லாம் அழித்து எழுதும் பேராற்றல் மிக்கவராக காகுச் சாமியார், நாவல் எங்கும் பிரம்மாண்ட ரூபம் கொள்கிறார்.

ஆமந்துறையெனும் மீனவ கிராமத்திற்கு பங்குத் தந்தையாக காகுச் சாமியார் வந்த நாள் முதல் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்கிறவராகவே வாழ்கிறார். புனித சவேரியாரின் மறு வடிவம் போலத்தான் நமக்குக் காட்சிப்படுத்தப்படுகிறார். அவரின் மீது கொண்ட பேரன்பினால்தான் நாவலாசிரியர், புத்தகத்தின் பிற்சேர்க்கையில் அவரின் முழுப் பக்க புகைப்படத்தை இணைத்துள்ளார். பலி பூசை நடத்தி விட்டு காணிக்கையை எண்ணிக் கணக்கிட்டு திருச்சபை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிற வெறும் மதப் பிரசங்கியல்ல காகுச் சாமியார் என்பதை நாவலெங்கும் நாம் கண்டுணர்கிறோம். தொம்மந்துரைக்கு விதவை மதினியைத் தாரமாக்குகிறார். விதவைத் திருமணத்தை ஆதரிக்கிறவராக மட்டும் அவரை நாம் பார்க்க முடியாது. அப்படியிருந்தால் காகுச் சாமியாரின் மரணம் நிகழ்ந்த போது ஆமந்துறையே திரண்டு போய் அவருக்கான மரியாதையைச் செய்திருக்காது. இறால் மீன் ஏற்றுமதிக்குள் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் நுட்பமான பங்கும் இருப்பதை அவர்களுடைய கடிதங்களை ஆய்வுக்குட்படுத்தினால் கண்டறிய முடியும். “ஆழிசூழ் உலகு” என்கிற இப்பெரும் படைப்பே கூட காகுச் சாமியார் சொல்கிற “நண் பர்களுக்காக உயிரை விடுறதை விட மேலான தியாகம் ஒன்றுமில்லை”ங்கிற இப்புள்ளியில் தான் சுழல்கிறது என்று நான் நினைக்கிறேன்.

ஆற்ற இயலாத பெருங்கோபம் தன்னுள் நீங்காது நிறைந்திருப்பதால் தான் ஜஸ்டின் வெட்டுண்டு கிடக்கிற போதும் அவனுடைய நெஞ்சாங் கூட்டிற்குள் மண்ணை அள்ளி நிறைக்கிறாள் வசந்தா. தன்னைத் தன் பிராயத்தில் துரத்தி துரத்தி வேட்டையாடியவன்; தன் தகப்பனைத் திட்டமிட்டு வெட்டிக் கொன்றவன் ஜஸ்டின். அவனை எப்படி எத்தனை நாளானா லும் மன்னிக்க முடியும் வசந்தாவால். விதவை மதினி அமலோற்பவத்தைத் திருமணம் செய்த பிறகு பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததா, தன் அண்ணனுக்குப் பிறந்ததா என்கிற குழப்பமின்றி அன்பைக் கொட்டி பிள்ளையை வளர்க்க தொம்மந்துரையால் மட்டுமே முடியும். ஊரையே செல்வச் செழிப்பாக்கிய மிக்கேல் பர்னாந்து இலங்கையில் மரணத்திற்கு பிறகு ஆமந்துறை வந்தடைந்த அவளின் மருமகளான சாராவிற்கு சூசையார் நிகழ்த்திய மிருக குரூரத்தை எண்ணி தனக்குள் வதைபட்டு, அவளின் மகளான சிலுவையை தன் நெஞ்சில் சுமந்து வளர்ப்பதென நாவல் விதவிதமான மனித உணர்வுகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

கடலும், காலமும் மரணமும் நிகழ்த்துகிற கொடூர விளையாட்டிற்கு பகடையாகிப் போன மனிதத்தொகுதியின் வாழ்க்கையை “ஆழிசூழ் உலகு” பரதவர்களின் மூன்று தலைமுறை வாழ்க்கையின் ஊடாக மனிதர்களின் அன்பு, கோபம், காமம், வக்கிரம், குரோதம் என சகலவற்றையும் படைப்பாக்கியிருக்கிறார் ஜோ.டி.குரூஸ். ஆமந்துறையெனும் கடல்புரத்து மனிதர்களின் வாழ்வதற்கான பெரும் யுத்தமே நாவல். பரதவ கிராமங்களுக்கிடையே மூளும் தீர்க்க முடியாத சண்டைகளுக் கும் வன்கொலைகளுக்கும் நாடார் -பரதவர்களுக்கும் இடையே மூளும் சண்டைகளுக்கும் அதிகாரம், பணம், குத்தகையே காரணமாக இன்று வரை நீடித்திருப்பதை நாவல் வரலாற்றிற்குச் சொல்லிச் செல்கிறது. யதார்த்தவாதம் செத்து விட்டதென கருத்துச் சொன்ன நுண் இலக்கிய வாதிகளின் கருத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திடக் காரணம் ஆழிசூழ் உலகு கட்டித் தந்திருக்கிற பரதவர்களின் சமூக வாழ்வியல் வரைபடம் மிக நேரடியான யதார்த்தமான மொழியில் பதிவு பெற்றிருப்பது தான்.
- ம.மணிமாறன்

Comments

1 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. தமிழின் மிக முக்கிய நாவல்களுள் ஒன்று “ஆழி சூழ் உலகு” மாதவ். பரதவர்களின் வாழ்க்கையை அவர்களின் வலியை வேதனையை அதையும் மீறி அவர்கள் அடைகிற தற்காலைக சந்தோசங்களை, அவர்களின் மீது வீசும் உப்பு வாசத்துடன் எழுதி இருக்கிறார். க்ரூஸ். 35 வயதிலேயே இத்தகையப் படைப்பை எழுத முடிந்திருப்பதற்குக் காரணம் அவர் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை அதன் ஈரத்தோடு பதிந்ததுதான்.

    தன்னை, தன் மக்களை நேசிக்கும் ஒரு எழுத்துக்காரனால்தான் பாசாங்கில்லாத இத்தகைய ஒன்றைப் படைக்க முடியும்.

    ReplyDelete

You can comment here