காலையில் வங்கிக்குச் செல்ல வெளியே வந்த போது கவனித்தேன். குருவியைப் போல பெரிதாய் இருக்கும் புனில் ஒன்று கேட் அருகே தரையில் அசையாமல் கிடந்தது. செத்துப் போய்விட்டதோ என்று சங்கடப்பட்டு அருகில் சென்றேன். உடலில் அசைவுகள் இருந்தன. தொட்டுப் பார்க்கவும் ‘க்கீ’ என சத்தமிட்டு அசைந்து துடித்தது. இடது பக்க இறக்கை உடலோடு ஒட்டிக்கொண்டிராமல் விரிந்திருந்தது. நான் அங்கேயே நின்றிருப்பதைப் பார்த்து அப்பா ‘என்ன’ என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள். “புனில் அடிபட்ட மாதிரி இருக்கு. கீழே கெடந்தா நாயாவது, பூனையாவது தூக்கிட்டுப் போயிரும்” என்று சொன்னேன். அப்பா அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இறக்கைகளை சடசடத்து, கத்தியது. அலகைப் பிளந்து பிளந்து பார்த்தது.
“நீ ஆபிஸுக்குப் போ. நா பாக்குறேன்.” என்றார்கள் அப்பா. தெருமுனை திரும்பும்போது பார்த்தேன், அப்பா அங்கேயே நின்றிருந்தார்கள். அப்பாவின் கையிலிருந்து புனில் பறந்து விடும் என்றுதான் தோன்றியது. அதிர்ச்சியில் இப்படி சில நேரம் விழுந்து கிடக்கும் குருவிகள், காக்கைகள் பிறகு மெல்ல சுதாரித்து, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பறந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். மெயின் ரோடு வந்ததும் கவனம் எல்லாம் வேறாகிவிட, சிந்தனைகளும் கிளை விட்டு பயணித்தன. சுத்தமாய் மறந்து விட்டேன்.
மதியம் திரும்பவும் வீட்டிற்குச் சென்று கேட்டைத் திறக்கவும், அதில் தொங்க விட்டிருக்கிற பால் பாக்கெட் கூடைக்குள்ளிருந்த புனில் கத்தியது. சோர்ந்து இருந்தது. விழித்துப் பார்த்த அந்தச் பொடிக் கண்களில் வலியும், சோகமும் வழிந்துகொண்டு இருந்தன. வதைபடும் அதன் சிறகுகளை வருடுவதற்காகத் தொட்டேன். சிலிர்த்துக் கத்தி விலக முயற்சித்து முடியாமல் கிடந்தது. அப்பா வெளியே வந்து, “மாது, அத யாரோ கவன்கல்லால் அடிச்சிருக்காங்க. ஒரு பக்கம் இறகு ஒடிஞ்சு போச்சு. ஒண்ணுஞ் செய்ய முடியாது. நாய் தூக்கிட்டுப் போகக் கூடாதுன்னு இந்தக் கூடையில வச்சிருக்கேன்” என்றார்கள். சாப்பிட மனம் வராமல் அங்கேயே நின்றிருந்தேன். மரணம் அந்த சிறு தேகத்தைப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கிக்கொண்டு இருந்தது.
எதிரே பெட்டிக்கடை வைத்திருக்கும் பாய் “என்ன ஸார்” என்று அருகில் வந்து பார்த்து, “பாவமாயிருக்கு” என்றார். கடைக்கு வந்த யாரோ ஒருவரும் அருகில் வந்து பார்த்து, “ரெயில்வே லைனுக்கு அந்தப் பக்கம் சின்னப் பசங்க யாராவது அடிச்சிருப்பாங்க. வலியோட பறந்து வந்துருக்கும். அப்புறம் முடியாம விழுந்துருக்கும். இன்னுங் கொஞ்ச நேரத்துலச் செத்துப் போயிரும். கண்ணுல்லாம் சொருக ஆரம்பிச்சுட்டு” என்று சாதாரணமாகச் சொல்லிக்கொண்டே, “பாய் வாங்க. ரெண்டு ஸிஸர் தாங்க” என்றார்.
புனில் தனியாய் இருந்தது. தூக்கிக் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. என் ஸ்பரிசம் பட்டதும் முன்னைப் போல அது விலகவில்லை. தலையைச் சாய்த்து கண்ணை மூடிக்கிடந்தது. பறவை. காற்றில் அந்த பட்டுச் சிறகுகள் மிகவும் லேசாய் அசைந்துகொண்டுதான் இருந்தன இப்போதும்.
இதே போல்தான் நான் அதி காலையில் ஒரு நாள் வாக்கிங் போகும்போது ஒரு முத்துக்குயிலை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. நான் அதை பிடித்து அருகில் உள்ள ஒரு குடிநீர் குழாயிலிருந்து கொஞ்சம் நீரை அதன் வாயில் ஊற்றினேன். சிறிது நேரத்தில் அது என் கையிலிருந்த படியே இவ்வுலகைவிட்டே பறந்து என் அன்றய விடியலை சோகமாக்கி சென்றுவிட்டது.
பதிலளிநீக்குVery nice post. Wish the bird gets well soon. Is there any vet doctor in your area?
பதிலளிநீக்குசாதாரண நாளாக விடிந்து, தோற்றுப் போகிற நாளாக முடிந்து போய் விடும் மாது- ஒரு நாள்! அப்பா, பாய், அவர், இவர், எவர் இருந்தாலும் ஒன்னும் செய்ய இயலாமல் போய் விடும். 'ஏ மனமே, கடவுள் இஷ்டப் படியே எல்லாம் நடக்கும். அஞ்சாதே. சும்மா இரு' என ரமண மகரிஷி வார்த்தை ஆறுதல் தரும். கடவுள் என்றால் அந்த கடவுளா? இங்கு வார்த்தைதானோ கடவுள் மாது?
பதிலளிநீக்குசிலநாட்கள்ல இதுபோன்ற அடிபட்ட குருவிகளைக் கண்டு வருந்தியதுண்டு.. ஆனாலும் ஒண்ணும் செய்யமுடியாத சூழ்நிலை கடந்துவிடுவேன். ஆனால் அந்த வலி நம்முடனே ஒட்டிக்கொண்டு இரண்டொருநாள் ஆறாமலிருக்கும்... படிக்கும்போதே அந்த ரணம் தெரிகிறது. உங்களுக்கு இன்னும் இருக்கக்கூடும்.
பதிலளிநீக்குகவித்துவமான பதிவு. அருமை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇழப்பு எப்போது கொடுமை தான்.
பதிலளிநீக்குபலசமயங்களில் மரணம் நம்மை வெறும் சாட்சியாகவே இருந்து பார்க்க விட்டுவிடுகிறது, புதிரின் முன் முட்டாளென தலைகுனிந்து அழுகிறோம்.
பதிலளிநீக்குnanum maina ondrai ithu pola eduththu atipatta idaththil manjal vaithhu kappaattri vaiththirunthom.
பதிலளிநீக்குuyirkalidaththu kaattum anbukku oru salute sir... pakirvukku nanri. vaalththukkaL
பதிலளிநீக்குபுதிய முன்னேற்பாடுகள் குறித்து மின் அஞ்சல் வந்தது. மிக நன்றாக தேவையான மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும் இந்த தளத்திற்கு என் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குகவன் வைத்திருப்பவனின், தன்னநலத் திமிர்,
பதிலளிநீக்குபுனிலின் சிறகை முறிக்க, சிறுகச் சிறுக போனது
ஓருயிர்.
"கவனுக்கும், அதற்குமான தூரம்" என்பார்,
'கைகள் அள்ளிய நீர்' சுந்தர்ஜி.
மனதை பிசைந்த பதிவு.
சிலிர்க்கும் நிமிடங்கள்
பதிலளிநீக்குகடைசியில் என்னதான் நடந்தது
அந்த நிமிடங்களை எப்படிக் கடந்தீர்கள்
இந்தப்பதிவிற்கு கருத்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரே கேள்வி. நம்பிக்கையும் கூட, அனைவரும் சைவ உணவுப்பழக்கம் உள்ள மனிதர்கள் என்று. ஏனெனில் ஆடோ கோழியோ அறுபடுவதர்க்கு முன் துடிக்கும். அதை பார்க்க நேர்ந்தால் மனது மிகவும் வலிக்கும். தோழர் மாதவராஜ் இதனை பதிவில் வெளியிடுவார் என்ற மிகுந்த நம்பிக்கையுடன்
பதிலளிநீக்கு